வெள்ளி, 10 ஜூலை, 2009

சொல்லே மிகவும் சுடும்!

இக்கிழமைக்கான ஈற்றடி - சொல்லே மிகவும் சுடும்!

அகரம் அமுதா

21 கருத்துகள்:

 1. சுட்டெரிக்கும் சூரியனைக் காட்டிலும் ,தினமிங்கே
  வாட்டி வதக்கும் வறுமையைக் காட்டிலும்
  நல்லிதயம் அற்றோரின் அம்பாய்த் துளைத்திடும்
  சொல்லே மிகவும் சுடும்.

  பதிலளிநீக்கு
 2. சில தினங்களாகவே கருத்துரைக்க
  முடியாமல் இருந்தது தாங்களின் வலைப்பதிவில். காரணம் புரியவில்லை.இன்று தான்
  முடிந்தது

  அன்புடன்
  திகழ்

  பதிலளிநீக்கு
 3. வெண்பா அருமை வாழ்த்துக்கள். பின்னூட்டம் இடமுடியாமைக்கு என்ன காரணம் எனத்தெரியவில்லை. சரிபார்க்கிறேன். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. கல்லே மனதாய்க் கனிவாய்க் கரும்பினியச்
  சொல்லே தவிர்த்து சுடுந்தீயோ வாளோக்கூர்
  வேல்தானோ கொல்வில்லோ என்றஞ்சக் கண்ணால்சொல்
  சொல்லே மிகவும் சுடும்.

  [தலைவன் மேல் தலைவிக்கு ஏனோ கோபம். அதனால் அவனைப் புறக்கணித்து வாய்ச் சொல் தவிர்க்கிறாள். ஆனாலும் கண்ணால் தன் கோபத்தைக்காட்ட, தலைவன் கூற்று.]

  பதிலளிநீக்கு
 5. வாழ்த்துக்கள் உமா அவர்களே!பாவருமை. ஒற்றுக்கள் மிகுந்துள்ளன, அவ்வளவே!

  கல்லே மனதாய்க் கனிவாய்க் கரும்பினிய
  சொல்லே தவிர்த்து சுடுந்தீயோ வாளோ,கூர்
  வேல்தானோ கொல்வில்லோ என்றஞ்சக் கண்ணால்சொல்
  சொல்லே மிகவும் சுடும்.

  பதிலளிநீக்கு
 6. நானும்...! நானும்..!!

  தீதேநான் செய்தது! திட்டிவிட்டுப் போ!நீயென்
  மீதேபி ழைசொன்னால் ஏற்கிறேன். - ஏதேனும்
  சொல்லாமல் நீவுதிர்த்துச் செல்லும் மவுனமெனும்
  சொல்லே மிகவும் சுடும்.

  பதிலளிநீக்கு
 7. அருமை வசந்த் அவர்களே!

  இரண்டாம் அடியின் முதல் மற்றும் இரண்டாம் சீரை தனித்தனிச் சொல்லாகவே எழுதலாம் தளைதட்டாது.

  ///மீதே பிழைசொன்னால்///

  நானும் நானுமென நன்றே நவின்றிட்டீர்
  தேனைப் பழிக்குமொரு தீம்பாவை; -வானும்
  வளர்மதியும் வைகரையும் வந்து வணங்கும்
  தளர்வறியாச் செந்தமிழைத் தாங்கு!

  பதிலளிநீக்கு
 8. அன்பு அகரம் அமுதா...

  சரிதான். நான் அதைச் சரிபார்க்காமல் ஆர்வத்தில் பிழையைப் பிரித்து விட்டேன். நல்ல வேளை பிழையாகவில்லை..! :)

  பதிலளிநீக்கு
 9. நம்மினத்தைக் காப்பரென நம்பி இருந்தோம்!
  தம்மின் நலங்கள் தவிர்த்திடார் - நம்மிடம்
  புல்லரைக் கோவ முறுத்தாதீ ரென்றுரைத்த
  சோல்லே மிகவும் சுடும்.

  பதிலளிநீக்கு
 10. சவுக்கடியார் வெண்பா உண்மையாகவே சவுக்கடிதான். வாழ்க சவுக்கடியாரே! உம்மைப்போன்றோரைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன். தொடர்ந்து ஆதரவு நல்குமாறு வேண்டுகிறேன்.

  குறிப்பு-
  தங்களைப்பற்றி அறியத்தரலாமே!

  பதிலளிநீக்கு
 11. /நம்மினத்தைக் காப்பரென நம்பி இருந்தோம்!
  தம்மின் நலங்கள் தவிர்த்திடார் - நம்மிடம்
  புல்லரைக் கோவ முறுத்தாதீ ரென்றுரைத்த
  சோல்லே மிகவும் சுடும்./

  உண்மை தான்
  இதை விட வேறு என்ன
  உள்ளத்தைச் சுடும்

  பதிலளிநீக்கு
 12. ஆஹா ஆஹா அற்புதம்

  அனைத்து கவிகளும்

  கவிஞர்களின் வரிகளும்

  வாழ்த்துக்கள்

  திகழ்மிளிராரே

  உமா

  வசந்தகுமார்

  சவுக்கடி

  அகரம் அமுதா

  பதிலளிநீக்கு
 13. உமா கூறியது...

  கல்லே மனதாய்க் கனிவாய்க் கரும்பினியச்
  சொல்லே தவிர்த்து சுடுந்தீயோ வாளோக்கூர்
  வேல்தானோ கொல்வில்லோ என்றஞ்சக் கண்ணால்சொல்
  சொல்லே மிகவும் சுடும்.

  [தலைவன் மேல் தலைவிக்கு ஏனோ கோபம். அதனால் அவனைப் புறக்கணித்து வாய்ச் சொல் தவிர்க்கிறாள். ஆனாலும் கண்ணால் தன் கோபத்தைக்காட்ட, தலைவன் கூற்று.]


  விளக்கவுரை கூறி எங்களை போன்றவர்களுக்கு புரிய வைத்தமைக்கு நன்றி உமா

  பதிலளிநீக்கு
 14. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் சக்தி. நீங்களும் வெண்பாக்கள் எழுத முயலலாமே!

  பதிலளிநீக்கு
 15. கல்மேலே கல்வைத்து வீடுகளைக் கட்டுதற்கு
  நல்லோரைத் துன்புறுத்தும் மாக்களைக் - கொல்லவே
  வில்லும்கூர் வாளுமே தேவையில் லை!நல்ல
  சொல்லே மிகவும் சுடும்

  விவேக்பாரதி

  பதிலளிநீக்கு
 16. உயிர்ப்பலி தேவையற்றவை. அதை அழகுறச் சொல்லியுள்ளீர்கள் நன்று

  பதிலளிநீக்கு
 17. கண்ணே! கனியமுதே! கற்கண்டே! காதலியே!
  விண்ணில் ஒளிவீசும் வெண்மதியே! – எண்ணமெலாம்
  பால்நிலவாய் பார்க்கும்நீ ஊடலோடு பேசினால்உன்
  சொல்லே மிகவும் சுடும்!

  - வ.க.கன்னியப்பன்

  பதிலளிநீக்கு
 18. அழகிய வெண்பா. ஈற்றியலடியின் முதற்சீர் மோனை நெடிலாகவும், ஈற்றடியின் முதற்சீர் மோனை குறிலாகவும் அமைந்துள்ளது. இது பெரிய தவறில்லை ஆயினும் தவிர்த்தல் நலம் எனக்கருதுகின்றேன்.

  தங்கள் அனுமதியுடன் சிறு மாற்றம் அளிக்கலாம் எனக்கருதுகிறேன்....

  கண்ணே! கனியமுதே! கற்கண்டே! காதலியே!
  விண்ணில் ஒளிவீசும் வெண்மதியே -எண்ணமெலாம்
  பல்கிப் பெருகும்நீ ஊடலோ டுரைக்கின்ற
  சொல்லே மிகவும் சுடும்!

  பதிலளிநீக்கு
 19. அன்புள்ள அமுதன்,

  சரியாகச் சுட்டிக் காட்டினீர்கள்!

  ஊ/டலோ/ டுரைக்/கின்ற - விளமுன் நிரையசை வருகின்றதே! ஊடலோடு பேசினால்உன் என்று வரலாமா?

  கண்ணே! கனியமுதே! கற்கண்டே! காதலியே!
  விண்ணில் ஒளிவீசும் வெண்மதியே -எண்ணமெலாம்
  பல்கிப் பெருகும்நீ ஊடலோடு பேசினால்உன்
  சொல்லே மிகவும் சுடும்!

  இப்படி அமைக்கலாமா?

  பதிலளிநீக்கு
 20. ஆம் ஆம் அதுதான் சரி. தவறுசெய்துவிட்டேன். தாங்கள் இறுதியாக இட்டதே மிகச்சரி. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com