செவ்வாய், 14 ஜூலை, 2009

சொல்லிலக்கணம் - I

நம் வலைப்பதிவுக்கு வெண்பா எழுத வந்தவர்கள் சிலருடைய வெண்பாக்கள் அவர்கள் எழுதியபடி தளை சரியாக இருந்தும் பிழை திருத்தப்பட்டதற்குக் காரணம் அவைகளில் புணர்ச்சி சரியாக அமையாதது தான்.

அதனால் நீங்கள் இப்பொழுது முதலில் கற்றுக் கொள்ள வேண்டியது புணர்ச்சி விதிகளே. புணர்ச்சி விதிகளைக் கற்றுக் கொள்வதற்கு முன் சொல்லிலக்கணத்தைக் கற்றுக் கொண்டால் சில புணர்ச்சி விதிகளைப் புரிந்து கொள்வது சுலபமாக இருக்கும். இவைகள் பொதுவாக பலருக்கும் தெரிந்திருக்கக் கூடும். ஆனால் இவைகளைக் கற்றுக் கொண்ட பிறகே புணர்ச்சி விதிகளைக் கற்றுக் கொள்வது நலம். அதனால் நாம் முதலில் சொல்லிலக்கணத்தைப் பார்ப்போம்.

1. திணை
 • மக்களைக் குறிப்பது உயர்திணை - எ. டு. அவன், தேவி, அவள், கண்ணன்.
 • மக்களைத் தவிர்த்து மற்றவைகளைக் குறிப்பது அஃறிணை.

2. பால் (Gender)
 • ஆணைக் குறிப்பது ஆண்பால். - அவன்
 • பெண்ணைக் குறிப்பது பெண்பால். - அவள்
 • ஒருவன், ஒருத்திக்கு மேற்பட்டவர்களைக் குறிப்பது பலர்பால். - அவர்கள்
 • அஃறிணையில் ஒரு பொருளைக் குறிப்பது ஒன்றன்பால். - அது, மரம்
 • அஃறிணையில் பல பொருட்களைக் குறிப்பது பலவின்பால். - மரங்கள்
3. எண்
 • ஒன்றைக் குறிப்பது ஒருமை (singular) - வீடு
 • ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்களைக் குறிப்பது பன்மை (Plural) - வீடுகள்

4. இடம்
 • பேசுபவனைக் குறிப்பது தன்மை (First person) - நான்
 • பேசுபவனக்கு எதிரில் உள்ளவரைக் குறிப்பது முன்னிலை (Second person) - நீ, நீங்கள்.
 • இவ்விருவரையும் தவிர்த்த மற்றவர்களைக் குறிப்பது படர்க்கை (Third person) - அவர்கள்.
5. காலம்
 • நிகழ்காலம் (Present tense) - வருகிறான்
 • இறந்த காலம் (Past tense) - வந்தான்
 • எதிர்காலம் (Future tense) - வருவான்

6.
பெயர்ச்சொல் (Noun)
 • பொருட்களைக் குறிப்பது பொருட்பெயர் - தேர், கதவு.
 • இடத்தைக் குறிப்பது இடப்பெயர் - சென்னை.
 • காலத்தைக் குறிப்பது காலப்பெயர் - சித்திரை, இரவு.
 • முழுப் பொருளின் ஒரு பகுதியைக் குறிப்பது சினைப்பெயர்- வால், கை.
 • பண்பினைக் குறிப்பது பண்புப்பெயர் அல்லது குணப்பெயர் - செம்மை, நீளம்.
 • தொழிலின் பெயரைக் குறிப்பது தொழிற் பெயர்- பெறுதல், கெடுதல், கொள்ளுதல், இடர்ப்படுதல்.

7.
முதனிலைத் தொழிற் பெயர்
 • தொழிற் பெயர் முழுமையாக வராமல் பகுதி மட்டும் நின்று பொருள் தருவது முதனிலைத் தொழிற் பெயர் - பெறு, கெடு, கொள், இடர்ப்படு.
8. முதனிலை திரிந்த தொழிற் பெயர்
 • தொழிற்பெயரின் முதனிலை திரிந்து வேறு சொல்லாகி அதே தொழிற்பெயரின்பொருளைத் தருவது முதனிலை திரிந்த தொழிற் பெயர் - பேறு, கேடு, கோள், இடர்ப்பாடு.

9.
வினையாலணையும் பெயர்
 • ஒரு வினைச்சொல் வினையையும் வினையைச் செய்பவனையும் குறித்துபெயர்ச்சொல்லாக வருவது வினையாலணையும்பெயர் - விடுத்தோன், படித்தோன்.

10.
வினைச்சொல் (Verb)
 • ஒரு செயலையும் அந்த செயலின் காலத்தையும் குறிப்பது வினைச்சொல் - படித்தான்.

11.
பெயரெச்சம் (Adjective)
 • பெயரைக் கொண்டு முடியும் எச்சம் பெயரச்சம் - நட்ட நடவு, பார்த்த பார்வை.(எச்சம் என்பது முடிவு பெறாத ஒரு சொல் - நட்ட, பார்த்த.)

12.
வினையெச்சம் (Adverb)
 • வினையைக் கொண்டு முடியும் எச்சம் வினையெச்சம் - வந்து போனான், நடந்துவந்தான்.
-------------------------------------------------------------------------------------------------

தொடர்ந்து ஈற்றடியே தந்து கொண்டிருக்காமல் கொஞ்சம் புதுமைகள் புகுத்துவோம் என்றார் அகரம். அமுதா. அதனால் இந்த முறை ஈற்றடிக்கு பதிலாக வெண்பாவிற்கான கருப்பொருளை மட்டும் தருகிறேன்.

இக்கிழமைக்கான கருப்பொருள் - "வானம்" அல்லது "மேகங்கள்"

கவிதைக்கு பொய் அழகு என்பதும் உண்மை தானே. வானத்தையும் பல வித கற்பனைகளுக்குள் கொண்டு வரலாம்.

எ. டு.

வெண்ணிலவின் பிம்பத்தைத் தொட்டுவிட்ட மோகத்தால்
அந்நிலவின் மேனியையும் தொட்டுவிடும் பித்தமுற்று
நீலக் கடல்விரித்த நீளலைக ளேவானிற்
கோலமுகிற் கூட்டமெனக் காண்.
-இராஜகுரு


இராஜகுரு

35 கருத்துகள்:

 1. //அவைகளில்//
  "அவைகளில்" சரியா ? "அவற்றில்" என்றுதான் அறிந்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. ஆஹா, எனது ஒற்றுப் பிழைகளைச் சரி பார்க்க இப்பொழுதுதான் நற்றமிழ் இலக்கணப் புத்தகம் ஒன்று வாங்கினேன்.சில வருடங்கள் முன் இதற்காகவே M.A.தமிழ் பயின்றேன்.உடல் நலமின்மைக்காரண்மாய் தேர்ச்சி பெறமுடிந்தாலும் இலக்கணம் மனதில் பதியவில்லை. பல வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு வாய்ப்பு. கற்றலின் கேட்டலே நன்று. கற்றவர் கூறக்கேட்டால் உள்ளத்தில் பதியும். மிக்க நன்றி. இன்று மட்டுமல்லாமல் வருங்காலத்திலும் பலருக்கும் பயன் படும். நன்றியும், வாழ்த்துக்களும்.

  பதிலளிநீக்கு
 3. ஈற்றடிக்குப் பதில் கருப்பொருள் தருவது மிகச் சிறப்பான மாற்றம்.

  ஆர்வத்தை தூண்டுவதாய் உள்ளது.
  வெண்பாவோடு வருகிறேன்.

  பதிலளிநீக்கு
 4. இராஜகுரு! அழகாக பாலராஜன் கீதா அவர்கள் மடக்கிவிட்டார்கள். 'கள்' விகுதி பன்மையல்லவா! அதுபோல் அவை என்பதும் பன்மையே, ஆதலால் பன்மையைக் குறிப்பிடும் போது மேலும் ஒரு பன்மை தேவையற்றது. ஆதலால் அவை என்றோ, அவற்றை என்றோ குறிப்பதே நலம். வாழ்க! நீங்கள். சொல்லிலக்கணம் கட்டுரையைப் படித்து மகிழ்ந்தேன், வியந்தேன்.

  பதிலளிநீக்கு
 5. வெண்பா அருமை இராஜகுரு அவர்களே! அழகாக நேர்த்தியாக எழுதியுள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
 6. ///////ஈற்றடிக்குப் பதில் கருப்பொருள் தருவது மிகச் சிறப்பான மாற்றம்.

  ஆர்வத்தை தூண்டுவதாய் உள்ளது.
  வெண்பாவோடு வருகிறேன்.////////

  வாருங்கள்! சீரியவாய் வன்னமிகு* வெண்பாக்கள்
  தாருங்கள்! மென்மேல் தமிழுக்குச் -சேருங்கள்
  நீள்புகழை வானுலவு நீர்முகிலாய்ச் மெல்லோதி*
  வாள்நுதலாய்! வாஞ்சையுடன் வந்து!

  வன்னம் -அழகு, மெல்லோதி -மென்மையான கூந்தல், வாள்நுதல் -ஒளிபோருந்திய நெற்றி,அல்லது வாள்போல் கூரிய, வளைந்த நெற்றி.

  மெல்லோதி வாணுதலாய்! ---மென்மையான கூந்தலையுடைய ஒளிபொருந்திய நெற்றியை உடையவளே!

  குறிப்பு -

  வாள் + நுதல் = இவற்றைப் புணர்ந்தால் வாணுதல் எனவரும். ஆக மேலுள்ள வெண்பாவை இன்னிசை வெண்பா எனக்கொள்க.

  பதிலளிநீக்கு
 7. இனிமை உங்கள் வெண்பா. உங்கள் ஊக்கத்தால் சற்றே எழுதப்பழகினாலும் இன்னும் சொற்றிறனைக்கூட்டி சிறப்பாக எழுத அகராதி பயன் படும் என நினைக்கிறேன். தயைக்கூர்ந்து எந்த பதிப்பகத்தின் அகராதி வாங்கலாம் என கூறவும். [தொல்லைக் கொடுப்பதற்கு மன்னிக்கவும்]

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் உமா! இன்று பற்பல பதிப்பகங்கள் அகரமுதலி வெளியிடுகின்றன. என்னிடம் உள்ளது எம்.ஜி.இராமச்சந்திரன் முதலமைச்சராக இருந்த போது தமிழக அரசால் வெளியிடப்பட்ட தமிழ்-தமிழ் அகரமுதலி. நானறிந்தவரை மற்றவற்றை விட இது நன்றாகவும் பல தமிழ்ச்சொற்களை உள்ளடக்கியதாகவும் உள்ளது. இருப்பினும் தமிழறிஞர் தேவநேய பாவாணர் அவர்களால் தொகுக்கப்பட்டு நிறைவடையாத அகரமுதலியே முதலானதாகும்.. முடிந்தவரை நல்ல தமிழறிஞர்களால் தொகுத்து வெளியிடப்பட்ட அகரமுதலியை வாங்கிப்படிக்கவும்.

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் உமா! இன்று பற்பல பதிப்பகங்கள் அகரமுதலி வெளியிடுகின்றன. என்னிடம் உள்ளது எம்.ஜி.இராமச்சந்திரன் முதலமைச்சராக இருந்த போது தமிழக அரசால் வெளியிடப்பட்ட தமிழ்-தமிழ் அகரமுதலி. நானறிந்தவரை மற்றவற்றை விட இது நன்றாகவும் பல தமிழ்ச்சொற்களை உள்ளடக்கியதாகவும் உள்ளது. இருப்பினும் தமிழறிஞர் தேவநேய பாவாணர் அவர்களால் தொகுக்கப்பட்டு நிறைவடையாத அகரமுதலியே முதலானதாகும்.. முடிந்தவரை நல்ல தமிழறிஞர்களால் தொகுத்து வெளியிடப்பட்ட அகரமுதலியை வாங்கிப்படிக்கவும்.

  பதிலளிநீக்கு
 10. கருப்பொருள் கொடுத்து எழுதச் சொல்லுதல் எந்த விதத்திலும் புதுமையாக எனக்குத் தோன்றவில்லை. ஈற்றடி கொடுத்தது போதும் என்றால், மூன்றாம் அடி கொடுக்கலாம். கருப்பொருள் மட்டும் கொடுப்பது மிகவும் எளிமையாகவும், போதுமான சவால் அற்றும் இருப்பதாகப் படுகின்றது.

  வான வெண்பா ::

  தீராத நீலச்சூள்! தீயாத சோதிக்கல்!
  தூராத மேகப்பால்! தூரத்தின் - வாராத
  விண்மீன்கள்! பூப்பொறி மின்னும் புதுவர்ணம்
  கண்நிறையக் காட்டிடும் வான்!

  பதிலளிநீக்கு
 11. கருத்தமேகம் வாராமல் வெங்கதி ரால்தரை
  வெடித்து நிலமும்பா ழாகக் கரைப்படிந்த
  மூடமிலேச் சன்போல் கொடுக்க மனமின்றி
  வான மிருக்கே வரண்டு.

  சென்னையில் இப்படித்தாங்க இருக்கு வானம். சிங்கையில் மழையாமே கொஞ்சம் இப்படி அனுப்பக்கூடாதா?நாங்களும் ஈரப்பசையோடு பா எழுதலாமே!

  பதிலளிநீக்கு
 12. தளை தட்டுவதால் சிறு மாற்றம்.

  கருத்தமேகம் வாராமல் வெங்கதிரா லிங்கே
  வெடித்து நிலமும்பா ழாகக் கரைப்படிந்த
  மூடமிலேச் சன்போல் கொடுக்க மனமின்றி
  வான மிருக்கே வரண்டு.

  பதிலளிநீக்கு
 13. /////கருப்பொருள் கொடுத்து எழுதச் சொல்லுதல் எந்த விதத்திலும் புதுமையாக எனக்குத் தோன்றவில்லை. ஈற்றடி கொடுத்தது போதும் என்றால், மூன்றாம் அடி கொடுக்கலாம். /////

  இக்கருத்தை ஏற்கிறோம் வசந்த அவர்களே! ஈற்றடி தவிர்த்துப் பலவிதங்களில் வெண்பா எழுதத்தூண்டும் முயற்சிகள் உள்ளன. இனிவரும் இடுகைகளில் ஒவ்வொன்றாகக் காண்போம்.  நண்பாநீ நன்குரைத்த நான்கு வரிகளுடை
  வெண்பா பழச்சாறாம் வேறில்லை -பண்பாய்
  தொகுத்த முறையினில் தோய்வில் எனினும்
  பகுத்துத் தமிழ்செய்யப் பார்!  வண்ணம் என்கிற தமிழ்ச்சொல்லே வடமொழியில் வர்ணம் என வழங்கப் படுகிறது. ஆக, புதுவண்ணம் என எழுத வேண்டுகிறேன்.

  ////தூரத்தின் - வாராத
  விண்மீன்கள்!////

  மேலுள்ள வரியை வேறுமாதிரி மாற்றியமைத்தால் நலமாக இருக்கும் எனக்கருதுகிறேன்.

  பதிலளிநீக்கு
 14. உமா அவர்களுக்கு! கருத்தமேகம் -எனும்போது ஓசை நீல்கிறது. ஆக -கருத்தமுகில் என மாற்ற வேண்டுகிறேன்.

  //கரைப்படிந்த - (அல்ல அல்ல) கரைபடிந்த ///  ////கருத்தமுகம் வாராமல் வெங்கதிரா லிங்கே
  வெடித்து நிலமும்பா ழாகக் கரைபடிந்த
  மூடமிலேச் சன்போல் கொடுக்க மனமின்றி
  வான மிருக்கே வரண்டு.////  அழைத்தால் வருமோ அருந்தமிழர்க் குத்தீங்
  கிழைத்தல் தகுமோ இழையாய்! -பிழைத்தார்
  வடவர் அதனால் மழைவாரா தங்கே!
  கிடந்தூர்க அன்றாடங் கெட்டு!


  இழையாய் -நூண்ணிழை போன்றவளே!  தமிழ்நாடும் இந்தியாவின் ஒருபகுதிதான் என்பதனால் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் இனி மழைவளம் இல்லை எனுங்கருத்தில் எழுந்தது.

  பதிலளிநீக்கு
 15. அன்பு அகரம் அமுதா...

  அ. வர்ணத்தின் மூலம் புரிந்து கொண்டேன். இனி வண்ணம் சொல்கிறேன்.

  ஆ. 'தூரத்தின் - வாராத விண்மீன்கள்!' - இதில் ஓர் அறிவியல் கருத்து உள்ளது. நாம் இரவில் விண்மீன்களைப் பார்ப்பதே அவற்றிலிருந்து வரும் ஒளி நம்மை வந்தடைவதாலேயே! எனவே இன்று நாம் பார்க்கும் அத்தனை விண்மீகளும் இன்று உயிருடன் இருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. அவை என்றோ வெடித்துச் சிதறி, வெள்ளைக் குள்ளர் ஆகியிருக்கலாம். ஆனால் அவற்றில் இருந்து எப்போதோ கிளம்பிய ஒளி இப்போது தான் நம்மை எட்டியிருப்பதால், நாம் அவற்றைக் காண முடிகின்றது.

  எனவே வெகு வெகுதூரத்தில் இருக்கும் விண்மீன்களிலிருந்து கிளம்பிய ஒளி இன்னும் நம்மை வந்து அடையாத காரணத்தால், நம்மைப் பொறுத்தவரை அவை நம் கட்புலனுக்கு வாராத விண்மீன்கள் தானே!

  அதைத் தான் குறிப்பிட்டுள்ளேன். எப்பூடி...?

  பதிலளிநீக்கு
 16. அன்பு அகரம் அமுதா...

  பொதுவாக ஒரு கருத்தைக் கூறி வெண்பா எழுதுவது வேண்டாமே! சங்க காலத்தில் சாத்தியமில்லாத நிகழ்ச்சிகளை வெண்பா மூலம் பாட முயல்வது, வெண்பாவின் சமகாலத் திறமையை வெளியுலகிற்குக் காட்ட உதவும் என்று நினைக்கிறேன்.

  சுவற்றில் சிறுநீர் கழித்தல், வங்கியில் நம் டோக்கனுக்காக வரிசையில் காத்திருத்தல், முதல் விமானப் பயணம், ஹோம் வொர்க் செய்யாத நாளில் அந்த பாட ஆசிரியர் விடுப்பு எடுத்திருக்க வேண்டும் என்று வேண்டும் பள்ளிச் சிறுமி, அதிகாலை ஜாகிங்கின் போது காணும் கார் கண்ணாடியில் பனிப் பூக்கள், அன் ரிசர்வ்ட் கம்பார்ச்மெண்ட் கக்கூஸில் எட்டாத சங்கிலி டம்ளர், கோர்ட்டில் வாய்தா மேல் வாய்தாவாக இழுக்கும் வழக்கு, ஜூன் 12க்கு காத்திருக்கும் டெல்டா விவசாயி, ப்ராம்ப்டிங்க் பார்த்து விமான விபத்து நியூஸ் வாசிக்கும் ஆன்ட்டியின் பட்டுப் புடவை, தற்காலிகமாக செயலிழந்து பல்லிளிக்கும் ஏ.டி.எம். தரும் எரிச்சல், ஓபன் சோர்ஸ், 5.1 சரவுண்ட் ஒலி, ஹீரோவுக்கு பதிலாக பல்டி அடிக்கும் டூப்....

  எழுதுவதற்காக விஷயங்களுக்கா பஞ்சம்..? ஏன் திரும்பித் திரும்பி வானம், மேகம், காதல் என்று பழைய பாத்திரத்தை உருட்டிக் கொண்டிருக்க வேண்டும்? (இராஜகுரு மன்னிக்க!) பாரி மகளிரின் 'அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவிலை' விடவா பிரிவின் கரிய துயரை நம்மால் கூர்மையாகச் சொல்ல முடியும்?

  ஓர் ஆரம்பமாக நானே துவக்கி வைக்கிறேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள். இதைப்பற்றி எழுத வேண்டும் என்று யோசிக்கும் போதே அழகான ஒரு வெண்பா உருவாகி, முதல் அமைப்பிலேயே தளைதட்டாமல் வந்தது, ஆச்சரியமே! எல்லாம் உங்களிடம் பாடம் கற்ற பலன்.

  இங்கிதம் இன்றி இயற்கை அழைத்திட
  லுங்கியை தூக்கிச் சுவற்றிலே - அங்கிங்கே
  கோடுபோட்டு ஒண்ணுக் கடித்திட்டால், வல்லரசு
  நாடு மணக்குமா சொல்.

  சுவற்றிலே ? சுவரிலே ? எது சரி?

  பதிலளிநீக்கு
 17. மேலுள்ள தங்கள் கருத்துக்களை ஏற்கிறேன் அய்யா! அருமை. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 18. /////இங்கிதம் இன்றி இயற்கை அழைத்திட
  லுங்கியை தூக்கிச் சுவற்றிலே - அங்கிங்கே
  கோடுபோட்டு ஒண்ணுக் கடித்திட்டால், வல்லரசு
  நாடு மணக்குமா சொல்.

  சுவற்றிலே ? சுவரிலே ? எது சரி?/////

  சுவற்றிலே என்பதைக் காட்டிலும் சுவற்றினில் என மாற்றவும்.. ஏகாரத்தைத் தவிர்ப்பது நல்லது.

  இவ்வெண்பாவுடன் இணைத்துள்ள அனைத்துக்கருத்துக்களிலும் எனக்கும் உடன்பாடு உண்டு. வேறுபலமாதிரி முன்பே எண்ணிப்பார்த்து தமிங்கிலிஷ்டாட் காமில் நிறைய எழுதியும் உள்ளேன். என்ன சிக்கலேன்றால் இதைப்போல் நவீனமாகத்தரும்போது ஆங்கிலக்கலப்பு அதிகம் நிகழ வாய்ப்புள்ளது. குறிப்பாகத்தாங்கள் ஆங்கிலக்கலப்பை குறைத்தெழுத வேணும் என்பதே எனது வேண்டுகோள்.

  அடுத்த இடுகையைத் தங்களுக்கு நிறைவளிப்பதுபோல் நானே தரமுயல்கிறேன். கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 19. பாலராஜன்கீதா அவர்களுக்கு,

  பிழையைச் சுட்டியமைக்கு நன்றி.
  "அவற்றில்" என்பதே சரி.

  பதிலளிநீக்கு
 20. இரா. வசந்த குமார் அவர்களுக்கு,

  புதுமை என்றால் உலக வழக்கங்களுக்கெல்லாம் புதுமை என்று பொருள் அல்ல.
  நமது வலைப்பதிவிற்கு இது புதுமை.

  வானம், மேகம் என்று நாம் பழைய பத்திரத்தை உருட்டவில்லை. இது கொஞ்சம் புதிய பாத்திரம்தான். சிலருக்கு சவாலானதும் கூட.

  நான் வானத்தைப் பற்றிய விளக்கத்தை கவிதையாக்கச் சொல்லவில்லை. வானத்தை ஒரு புதிய கற்பனைக்குள் கொண்டுவரச் சொன்னேன்.

  என்னுடைய வெண்பாவைப் பாருங்கள்.
  மேலும், கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய "முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ? முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ?" என்ற திரைப்பட பாடலை அறிந்திருப்பீர்கள்.

  இந்தப் பாடல்களில் எல்லாம் "வானத்தின் தன்மைகள் விளக்கப்படவில்லை".
  ஆனால் வானம் ஒரு புதிய கற்பனைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

  இவ்வாறு வெண்பா எழுதுங்கள் என்பதற்காகத் தான்
  "கவிதைக்கு பொய் அழகு என்பதும் உண்மை தானே. வானத்தையும் பல வித கற்பனைகளுக்குள் கொண்டு வரலாம்." என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

  தாங்கள் எழுதிய வெண்பா வானத்தைப் பற்றிய விளக்கம். அதில் சொல்லும்படியான கற்பனைகள் எதுவும் இல்லை. மற்றபடி தங்கள் வெண்பா அருமை.

  "வர்ணம்" என்ற சொல் தான் சிறிய பிழை. முன்பே ஒரு முறை என்னுடைய வலைப்பதிவில் நான் எழுதிய "வன்னம்" என்ற சொல்லின் பொருள் அறியாமல் அதை தவறு என்றீர்கள். இப்பொழுது "வர்ணம்" என்னும் சொல்லால் பிழை.

  தங்களிடம் அகரமுதலி இருந்தால் அதைப் பயன்படுத்துங்கள்.

  பதிலளிநீக்கு
 21. //வானம், மேகம் என்று நாம் பழைய பத்திரத்தை உருட்டவில்லை. இது கொஞ்சம் புதிய பாத்திரம்தான். சிலருக்கு சவாலானதும் கூட.

  நான் வானத்தைப் பற்றிய விளக்கத்தை கவிதையாக்கச் சொல்லவில்லை. வானத்தை ஒரு புதிய கற்பனைக்குள் கொண்டுவரச் சொன்னேன். //


  புதிதாய் எழுதும் எங்களுக்கெல்லாம் கருப் பொருளோ , ஈற்றடியோ எல்லாமே புதிய முயற்சிதான். நிறைய எழுத முடிகிறது. நன்றி.

  பதிலளிநீக்கு
 22. //அழைத்தால் வருமோ அருந்தமிழர்க் குத்தீங்
  கிழைத்தல் தகுமோ இழையாய்! -பிழைத்தார்
  வடவர் அதனால் மழைவாரா தங்கே!
  கிடந்தூர்க அன்றாடங் கெட்டு!//

  ஓர்தாலி போனதற் கூர்தாலி கொண்டது
  ஒவ்வாதென் றாயுண்மை,ஆயின் ஒருவரால்
  மற்றவர் துன்புறலா மோ,புவியில் நல்லார்
  ஒருவர் உள்ரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும்
  என்றதோர் கூற்றை மறந்து மனமுடைக்கும்
  சொல்லால் சுடுதல் தகுமோ! பிழையிங்கு
  ஒருபுறம் பாவம் மறுபுறமோ? தாய்வாட
  மைந்தன் மகிழ்வதுவோ மண்ணுலகில், மாமழை
  வேண்டும் மனிதம் செழிக்க,மன தாலும்
  வசைச்சொல் வேண்டாம் விலக்கு.

  பதிலளிநீக்கு
 23. அருமை அருமை உமா அவர்களே. அருமையான கவிதை.

  பதிலளிநீக்கு
 24. "கொண்டது ஒவ்வாதென்" என்ற இரு சீர்களும் புணர்ந்தால் "கொண்ட தொவ்வாதென்" என்றாகும். அதனால் அங்கு மட்டும் தளை தட்டுகிறது.

  பதிலளிநீக்கு
 25. /////ஓர்தாலி போனதற்(கு) ஊர்தாலி கொண்டதும்
  ஒவ்வாதென் றாயுண்மை; ஆயின் ஒருவரால்
  மற்றவர் துன்புறலா மோ‘புவியில் நல்லார்
  ஒருவர் உளரேல் அவர்பொருட்டெல் லார்க்குமழை’
  என்றவோர் கூற்றை மறந்து மனமுடைக்கும்
  சொல்லால் சுடுதல் தகுமோ? பிழையிங்கே
  ஒருபுறம் பாவம் மறுபுறமோ? தாய்வாட
  மைந்தன் மகிழ்வதுவோ? மண்ணுலகில் மாமழை
  வேண்டும் மனிதம் செழிக்கமன தாலும்
  வசைச்சொற்கள் வேண்டாம் விலக்கு!/////
  பகலில் நிலவினைப் பார்ப்பரி தற்றால்*
  வெகுளி* மிகுதியால் மெய்யறிவு கெட்டேன்;
  செறிந்த கவிபுனைந்து சேயிழையே! நன்றாய்
  அறைந்தீர் இளையோன் அதுகொண்டேன்; வன்சொல்
  விலக்கென்றீர் தோழீ! விரைந்தேற்றேன்; இன்சொல்
  இலக்கன்றோ யார்க்கும்?! இதனை யுணராது
  யாரோ சிலபேர் இழைத்த இடுக்கண்ணுக்(கு)
  ஊரே பொருப்பென்(று) உரைத்தேன் இதுதவறே;
  ‘நாயாற் கடியுற்றார் நாடியந் நாயைத்தன்
  வாயாற் கடித்த வழக்கில்லை’ என்னுங்கால்
  எய்தோர் இனிதிருக்க அம்பதனை நோதல்போல்
  வைதேன் வசைச்சொல்லால் வையத்து மக்களை;
  ஆள்வோர் பிழைத்தால் அருங்குடிகள் என்செய்வார்?
  ஆள்வோரை விட்டிங்(கு) அடுத்தவரை நொந்தேனே!
  அய்யோ! பிழைசெய்தேன் அம்மா! வெகுளியால்
  மெய்யறிவு கெட்டேன்; விரை*தங்கு செய்யமலர்
  மீதமர் மாதே! விளம்பக்கேள்! தோழனிவன்
  நாத்தழும் பேற்றி நவின்றவுரை தீய்த்ததற்கு
  மன்னிக்க வேண்டுகிறேன் மாமழையாய்க் கண்ணீரை
  அன்புடையுன் தாளுக்(கு) அணிசெய்தேன் அன்றீன்ற
  தாயைப் பழிப்பதுவும் தாய்மண்ணைச் சாடுவதும்
  தீயிற் கொடியதோர் செய்கை எனத்தேர்ந்தேன்
  பெய்கமழை யே!நான் பிறந்தநந் நாடுவளம்
  எய்யப் புயலே* எழு!

  பார்ப்பரிது அற்றால் -பார்ப்பதற்கு அரிது போல (ஆல் -ஓரசை); வெகுளி -கோபம்; விரை -மணம்; புயல் -முகில்.

  பதிலளிநீக்கு
 26. அன்பு அகரம்.அமுதா...

  அ. இனிமேல் குறைந்தபட்சம் இந்த வெண்பா பதிவிலாவது ஆங்கிலக் கலப்பில்லாமல் எழுத முயல்கிறேன்.

  அன்பு இராஜகுரு...

  தங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்.

  எனக்கு இப்போதைக்கு அகரமுதலி உபயோகிக்கும் எண்ணம் இல்லை. வார்த்தைகள் எனக்கு தீர்ந்து விட்டால் பிறகு அகரமுதலி வாங்குவது பற்றி யோசிக்கிறேன்.

  வானம் போன்றவை மனிதன் தோன்றிய காலத்துக்கு மிக முன்னிருந்தே இருந்து வருகின்றன. அவற்றைப் பற்றியே மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டிருப்பது கால மாற்றங்களை வரும் தலைமுறைகளுக்கு காட்டாது.

  இலக்கியத்தின் முக்கிய பணி என்ன? எழுதப்பட்டும் காலகட்டத்தில் நிகழும் சம்பவங்களைப் பதிவு செய்து வைப்பது தான் என்று நினைக்கிறேன். அதுவும் அறிவியலின் அசுர வேகப் பாய்ச்சலில் தினம் தினம் மாறிக் கொண்டே இருக்கும் போது, அவற்றையெல்லாம் பதிவு செய்யாமல், வானம், பூமி என்றே மீண்டும் மீண்டும் பாடிக் கொண்டிருப்பது வெகு அவசரமாக இளைய தலைமுறையிடமிருந்து வெண்பாவை விலக்கி விடும். ஐம்பது வருடம் கழித்து நீங்களும் நானும் தான் மறுபடியும் ஓட்டை ஓசோன் விழுந்த வானத்தையும், சாயக்கழிவு நிரம்பிய ஆறுகளையும் பாடிக் கொண்டிருக்க வேண்டியது தான், அப்போதும் நீங்கள் கற்பனையான வர்ணனைகளைத் துழாவிக் கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

  அறிவியல், உணர்ச்சிகளுக்குத் துளியும் இடம் கொடுப்பதில்லை. எனவே கொஞ்சம் அறிவியலைச் சொல்ல வந்த அந்த வான வெண்பாவில் சொல்லும்படியான கற்பனைகள் இல்லை என்று நீங்கள் சொல்வதை எண்ணி வருந்துகிறேன். எழுதிய படைப்பாளியே அவன் படைப்பை விளக்க வேண்டி வருவது மிகவும் சோதனையான ஒன்று. நான் விளக்கப் போவதில்லை.

  நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 27. திரு.இராச குரு,திரு.வசந்த குமார் இருவருக்கும்,

  //இலக்கியத்தின் முக்கிய பணி என்ன? எழுதப்பட்டும் காலகட்டத்தில் நிகழும் சம்பவங்களைப் பதிவு செய்து வைப்பது தான் என்று நினைக்கிறேன். அதுவும் அறிவியலின் அசுர வேகப் பாய்ச்சலில் தினம் தினம் மாறிக் கொண்டே இருக்கும் போது, அவற்றையெல்லாம் பதிவு செய்யாமல், வானம், பூமி என்றே மீண்டும் மீண்டும் பாடிக் கொண்டிருப்பது வெகு அவசரமாக இளைய தலைமுறையிடமிருந்து வெண்பாவை விலக்கி விடும். ஐம்பது வருடம் கழித்து நீங்களும் நானும் தான் மறுபடியும் ஓட்டை ஓசோன் விழுந்த வானத்தையும், சாயக்கழிவு நிரம்பிய ஆறுகளையும் பாடிக் கொண்டிருக்க வேண்டியது தான்,//

  இது வசந்த குமார் அவர்களின் கருத்து,உண்மைதான்.

  //நான் வானத்தைப் பற்றிய விளக்கத்தை கவிதையாக்கச் சொல்லவில்லை. வானத்தை ஒரு புதிய கற்பனைக்குள் கொண்டுவரச் சொன்னேன். //
  இது இராச குருவின் கருத்து .

  இரண்டிலும் ஒரு ஒற்றுமை இருப்பதைக்காணலாம்.

  ஓசோன் விழுந்த வானத்தையும், சாயக்கழிவு நிரம்பிய ஆறுகளையும் பாடிக் கொண்டிருக்க வேண்டியது தான்,//
  இதுவும்வானத்தை இன்றய சூழலில் பார்ப்பதுதானே.

  வசந்த குமாரின் பட்டியல் மிகச் சிறப்பானதும்,சிந்திக்கக்கூடியதுமாகும்.

  எனக்கு நீங்கள் இருவரும் வானமும் கடலுமாகத் தெரிகிறீர்கள்.கடற்கரையிலிருந்துப் பார்த்தால் வானமும் கடலாகத்தெரிகிற்து,மேலிருந்துப் பார்த்தால் நீலக்கடலும் வானம் போல் இருக்கிறது.

  இருவர்கருத்திலும் உண்மையும் , பொருட்செறிவும் இருக்கிறது.

  சொற்போர் சற்றே தவிர்போமே. அடுத்த தலைப்புக்காக காத்திருக்கிறோம்.

  அன்புடன் உமா.

  பதிலளிநீக்கு
 28. திரு.வசந்த குமார், வணக்கம்,

  //தீராத நீலச்சூள்! தீயாத சோதிக்கல்!
  தூராத மேகப்பால்! தூரத்தின் - வாராத
  விண்மீன்கள்! பூப்பொறி மின்னும் புதுவர்ணம்
  கண்நிறையக் காட்டிடும் வான்!

  வாராத
  விண்மீன்கள்! விளக்கம் மிக அருமை. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 29. //அருமை அருமை உமா அவர்களே. அருமையான கவிதை//

  வாழ்த்துக்கு நன்றி, ஆசிரியரிடமிருந்து முதன் முதலாய் வாழ்த்து பெற்று விட்டேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 30. அகரமுதலி என்பது சொற்கள் தீர்ந்தவர்கள் புதிய சொற்கள் தேடுவதற்காக உருவாக்கப்பட்டதல்ல. சொற்களின் பொருள் அறியாதவர்கள் பொருளை அறிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டது.

  //வானம் போன்றவை மனிதன் தோன்றிய காலத்துக்கு மிக முன்னிருந்தே இருந்து வருகின்றன. அவற்றைப் பற்றியே மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டிருப்பது கால மாற்றங்களை வரும் தலைமுறைகளுக்கு காட்டாது.//

  கருத்தை ஏற்கிறேன்.

  //இலக்கியத்தின் முக்கிய பணி என்ன? எழுதப்பட்டும் காலகட்டத்தில் நிகழும் சம்பவங்களைப் பதிவு செய்து வைப்பது தான் என்று நினைக்கிறேன்.//

  இலக்கியம் என்பது கவிதைகள் மட்டுமல்ல. கதை, கட்டுரை, புதினம் என்பன போன்றவும் அதில் அடங்கும். ஒவ்வொன்றிற்கும் தனிச் சிறப்புள்ளது. அறிவியல் கருத்துகளுக்கு விளக்கங்கள் தேவைதான். ஆனால் அதற்கு கவிதைகள் சரியான தேர்வல்ல.

  குறுகிய காலத்தில் உலகளவில் அதிகம் விற்ற நூல் Harry Potter ஒரு கற்பனைக் கதை. இது கற்பனையின் வெற்றி. அதில் அறிவியலின் சாயலே இல்லை.

  அறிவியல் என்பது நிலை இல்லாதது. இன்று பேசப்படும் அறிவியல் தத்துவம் நாளையே கூட மாற்றிப் பேசப்படலாம்.

  முதலில் உலகம் தட்டை என்றார்கள். பிறகு உருண்டை என்றார்கள். பலராலும் ஏற்கப்பட்ட நியூட்டனின் Theory of Gravitation-னை தவறு என்று நிறுபித்தது ஐன்ஸ்டீனின் Theory of Relativity. அணுவின் வடிவத்தை (Atomic Theory) விளக்க முன்வைத்த பல தத்துவங்கள் முதலில் ஏற்கப்பட்டும் பிறகு மறுக்கப்பட்டும் உள்ளது.

  நீங்கள் வருந்த வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் கவிதை எனக்கு புரிந்து தான் இருக்கிறது. நீங்கள் பாடிய "தூரத்தின் - வாராத விண்மீன்கள்!" என்ற அறிவியல் கருத்தை தவறு என்று காட்டும் புதிய கருத்து வராது என்பது நிச்சயமற்றது. கற்பனைகள் அப்படியல்ல.

  வானம் சிவப்பதை "வானமகள் நாணுகிறாள். வேறு உடை பூணுகிறாள்......." என்று கற்பனையாய்ப் பாடாமல் அதற்கான அறிவியல் காரணத்தை பாடியிருந்தால் வைரமுத்துவின் முதல் பாடலுக்கு அத்தனை வரவேற்ப்பு இருந்திருக்காது. இது கற்பனையின் வெற்றி.

  இத்தகைய காரணங்களால் தான் அறிவியலை மையப்படுத்தி எழுதப்பட்டு "பெரிதும் வரவேற்க்கப்பட்ட" கவிதைகள் எதுவும் இல்லை.

  தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன். ஆனால் இங்கு அல்ல. எனக்கு மின்மடல் அனுப்புங்கள்.

  பதிலளிநீக்கு
 31. உமா அவர்களுக்கு,

  நான் முதலில் மறுமொழி இடுவதாய் இல்லை. ஆனால் கற்பவருக்கு தவறான கருத்து முடிவாகிவிடக் கூடாது என்பதற்காகவே மறுமொழி இட்டேன். இனி இதை தொடர்வது சரியில்லை தான். தங்கள் கருத்துக்கு உடன்படுகிறேன்.

  பதிலளிநீக்கு
 32. ............
  பெய்கமழை யே!நான் பிறந்தநந் நாடுவளம்
  எய்யப் புயலே* எழு!//

  சேய்செய் சிறுபிழை தாய்மறந் தாளிங்கே,
  செந்தமிழ்த் தாயின் தவப்புதல்வா,உன்னினிய
  நற்றமிழ் பாவால் நலம்கண்டா ளன்னை
  வரமாய் பொழிந்தாள் மழை.

  பதிலளிநீக்கு
 33. அமுதா.வலைச் சரத்தில் உங்களிடமிருந்து இப்படி பாராட்டைப் பெற்றது எனக்கு மிக மிக மகிழ்ச்சியே. நான் சிறிதேனும் எழுதுகிறேன் என்றால் அது தங்களால் தான். மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 34. ///// உமா கூறியது...
  அமுதா.வலைச் சரத்தில் உங்களிடமிருந்து இப்படி பாராட்டைப் பெற்றது எனக்கு மிக மிக மகிழ்ச்சியே. நான் சிறிதேனும் எழுதுகிறேன் என்றால் அது தங்களால் தான். மிக்க நன்றி.//////


  என்னால் என்பதைவிடத் தங்களின் ஈடுபாடும் விடா முயற்சியுமே இத்துணை விரைவாகத் தங்கை வெண்பாப்பாட காரணமாயிருந்திருக்கிறது. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com