திங்கள், 26 ஜூலை, 2010

வஞ்சி மண்டிலம்! 1

ஒவ்வோரடியிலும் மூன்று சீர்கள் இருக்க வேண்டும்.

இவ்வாறு நான்கடிகள் அமைந்தது ஒரு பாடல். நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.

ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தால் முடிதல் வேண்டும் என்பது கட்டாயமில்லை. அமைந்தால் நன்று.

இவ்வாறு அமைந்துள்ள பாடலை வஞ்சி மண்டிலம் என்று வழங்குவர். ஒவ்வோரடியிலும் மூன்று சீர்கள் இருக்கும் என்று பொதுப்படக் கூறினாலும் சீரமைப்பால் வஞ்சிமண்டிலம் பலவகையாகப் பிரிக்கலாம். அவற்றுள் ஒருவகை-


தேமா + தேமா + கூவிளம் என்ற வாய்பாட்டால் இயன்றது.

அன்பு கொண்டு வாழ்வதால்
துன்பம் நீங்கி உய்யலாம்
இன்பம் உண்டு மண்ணினில்
என்றும் இஃதோர் உண்மையே!

6 கருத்துகள்:

  1. கண்ணை மூடி பூவென
    சின்னப் பிள்ளை தூங்கிட
    அன்னை நெஞ்சம் தானுறும்
    இன்பம் கோடி யாகுமே!

    அள்ளி வைத்த பிள்ளையும்
    துள்ளி ஓடி மானென
    பள்ளிச் சொல்லும் போதிலே
    உள்ளம் கொள்ளைப் போகுமே!

    வாழ்வில் வெற்றி வந்துறும்
    போழ்தில் தாயின் பேரிடர்
    சூழ்ந்த காலம் தேய்வுற
    ஆழ்ந்த இன்பம் தோன்றுமே!

    தன்னை ஈந்து அன்புடன்
    அன்னைத் தந்த வாழ்விலே
    பின்னை பிள்ளைத் தானுமே
    அன்பு காட்டல் வேண்டுமே!

    பதிலளிநீக்கு
  2. ஆகா..அருமையான பாடல்!

    பிள்ளை தன்னைப் பாடியே
    உள்ளம் செய்வார் தீந்தமிழ்
    அள்ள வெல்வோம் காலனை
    வெள்ள மோனப் பாட்டிலே!

    சிந்து வைகை காவிரி
    சிந்தி ஓடும் புன்னகை
    மாந்தி செல்லக் காதுகள்
    தந்த நம்கோ வாழிய!

    யாழும் பாழாய்த் தோன்றிடும்
    வாழும் பூக்கள் பேசிட
    வேழம் போன்ற மேகமும்
    ஆழ நீரைப் பெய்யுமே!

    நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  3. உமா மற்றும் அண்ணாமலையாரிம் பாக்கள் அருமை. அருமை. வாழ்க

    பதிலளிநீக்கு
  4. நல்லு மாவின் நற்பொருள்
    துள்ளும் பாவில் துய்த்திடு
    தெள்ள முதத் தேனினை
    கொள்ளண் ணாம லையிடம்.

    பதிலளிநீக்கு
  5. உன்னுள் என்னுள் உள்ளது
    என்றும் எங்கும் ஏற்பது
    கந்தன் கையில் காப்பது
    விந்தை சக்தி வேலது

    நீநான் என்று ஓடிட
    வீணாய் வீழும் வாழ்க்கையும்
    நானார் என்று நாடிட
    தானா முண்மை தென்படும்.

    பதிலளிநீக்கு
  6. அவனடியாரின் 'நான் யார்' என அறியமுற்படும் பா அருமை.

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com