செவ்வாய், 17 ஜூன், 2008

பாடம்9 வெண்பா ஓர் அறிமுகம்!


ஓசை:-

பழம் புலவர்கள் ஓசை வேறுபாடு கொண்டே பா வேறுபாடு கண்டனர். செப்பலோசை அகவலோசை துள்ளலோசை தூங்கலோசை என செய்யுலோசை நான்கு வகைப் படும்.

வெண்பாவில் பயின்றுவரும் ஓசை செப்பலோசை. இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை ஆகிய இருதளைகளாலும் அமையப்பெருவது செப்பலோசையாகும்.

செப்பலோசை -இருவர் உரையாடல் போன்ற ஓசை!

வெண்பாவும் அதன் இனமும்:-

1-குறள்வெண்பா -இரண்டு அடிகளைக்கொண்டது.
2-சிந்தியல் வெண்பா -மூன்று அடிகளைக்கொண்டது.
3-அளவியல் வெண்பா -நான்கு அடிகளைக்கொண்டது.
4-பஃறொடை வெண்பா -5அடியிலிருந்து 12அடிகளைக்கொண்டது.
5-கலிவெண்பா -12அடிகளுக்கு மேற்பட்ட அடிகளைக்கொண்டது.

-என வெண்பா 5 வகைப்படும்.

ஓரடி முக்கால் குறள்வெண் பாவே
ஈரடி முக்கால் சிந்தியல் வெண்பா
மூவடி முக்கால் அளவியல் வெண்பா
பலவடி முக்கால் பஃறொடை வெண்பா
பஃறொடை மிக்கது கலிவெண் பாவே!

-தொல்காப்பியம்!

வெண்பா எழுதும் போது கவனிக்கவேண்டியவை:-

வெண்பாவில் இயற்சீர் நான்கும் (தேமா புளிமா கருவிளம் கூவிளம்) வெண்சீர் நான்கும் (தேமாங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் கூவிளங்காய்) மட்டும் வரும்.

ஈற்றடி சிந்தடியாகவும் (மூன்று சீர்கள் கொண்டது சிந்தடி) மற்ற அடிகள் அளவடிகளாகவும் (நான்கு சீர்கள் கொண்டது அளவடி) வரவேண்டும்.

வெண்பாவின் அளவடிகளில் பொழிப்ப மோனை வரவேண்டும். சிறுபான்மை ஒரூஉ மோனையும் வரலாம். சிந்தடியாகிய ஈற்றடியிலும் பொழிப்பு மோனை வரவேண்டும்.

ஈற்றடியின் இறுதிச்சீர் நாள் மலர் காசு பிறப்பு இவற்றிலொன்றைப் பெற்று முடிதல் வேண்டும்.

குறிப்பு:-

நாம் அடுத்தடுத்த பாடத்தில் 5வகை வெண்பாக்களைப் பற்றியும் தனித்தனியாக அறிய விருக்கிறோம். ஆகையால் கண்ணில் படும் வெண்பாக்களையெல்லாம் இதுவரை நாம் கற்ற இலக்கணத்தின் படி இருக்கிறதா? என்பதை உற்று நோக்குக! ஐயமிருப்பின் கேள்விகளைக் கேட்கத் தயங்காதீர்கள்.

நாளும் ஓர் வெண்பா வீதம் மனனம் செய்வீர்களே யானால் வெண்பா எழுதுவது மிக இலகுவாகி விடும்.

பொருட்செறிவுமிக்க அழகிய வெண்பா தருகிறேன். முடிந்தவரை படித்து மனனம் செய்யவும்.
மனனவெண்பா!

அறம்தகளி; ஆன்ற பொருள்திரி; இன்பு
சிறந்தநெய்; செஞ்சொல்தீ; தண்டு -குறும்பாவா
வள்ளுவனார் ஏற்றினார் வையத்து வாழ்வார்கள்
உள்ளிருள் நீக்கும் விளக்கு! -நப்பாலனார்.

அகரம்.அமுதா

14 கருத்துகள்:

 1. //அறம்தகளி; ஆன்ற பொருள்திரி...//
  அறம், பொருள், இன்பமெனும் முக்கூர் சூலம்தனை

  தரித்த ஈசன் இவர்தானோ!
  ஐயம்:
  ஏற்றினார் - நேர்/நிரை : விளம்

  என்றல்லவா நினைத்தேன்?

  பதிலளிநீக்கு
 2. ////ஐயம்:
  ஏற்றினார் - நேர்/நிரை : விளம்

  என்றல்லவா நினைத்தேன்?////


  வள்/ளுவ/னார் -நேர்/நிரை/நேர் கூ/விளங்/காய் =காய்முன் நேர்வர வேண்டுமல்லவா?

  ஏற்/றினார் -நேர்/நிரை =கூவிளம் -காய்முன் நேர்வந்து கூவிளமானது பார்த்தீர்களா?

  இப்பொழுது விளமுன் நேர்வர வேண்டுமல்லவா?

  வை/யத்/து -நேர் நேர் நேர் =தேமாங்காய் ஆனது கண்டீரா?

  பதிலளிநீக்கு
 3. //வை/யத்/து -நேர் நேர் நேர் =தேமாங்காய் ஆனது கண்டீரா?//
  இங்கேதான் கோட்டை விட்டேன்!
  வை - நெடில் அல்லவே?
  வையத்/து என்றல்லாவா நினைத்தேன்...

  பதிலளிநீக்கு
 4. ஐகாரமோ ஒளகாரமோ சொல்லின் முதலில் வந்தால் நெடிலேபோல் கொள்ளவேண்டும். இடையிலும் கடையிலும் வரின் குறிலேபோல் கொள்ளப்படவேண்டும் என்பது விதி! ஆகையால் தான்:-
  வையத்துள் எனும் சொல் வையத்/துள் -நிரைநேர் என்று வராமல் வை/யத்/துள் -நேர்நேர்நேர் என்றானது.

  கை/யையெ/டு -இச்சொல்லில் பாருங்கள் கை-ஐகாரம் சொல்லின் முதலில் வந்தமையால் நெடிலாகக் கொள்ளப்பட்டு நேர் ஆனது. யை-சொல்லின் இடையில் வருவதால் குறிலாகி யெ-வையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு நிரையசையானது. இப்பொழுது புரிகிறதா?

  பதிலளிநீக்கு
 5. //ஐகாரமோ ஒளகாரமோ சொல்லின் முதலில் வந்தால் நெடிலேபோல் கொள்ளவேண்டும்.//
  ஆகா, புதிதா ஒரு விதி சொல்லிட்டீங்களே, குறித்துக் கொள்கிறேன். :-)

  பதிலளிநீக்கு
 6. ஜீவா! பாடம்3-ஐ நன்றாகப் படிங்க. ஐகாரக்குறுக்கம் ஒளகாரக்குறுக்கம் பற்றி அதில் தெளிவான விளக்கங்களைக் கொடுத்துள்ளேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 7. ராட, ஆமாம், மூன்றாம் பாடத்தில் இது இருக்கு, நான் தான் கவனிக்கவில்லை, மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு
 8. அருமையான உரையாடல்! இது குறுகும் போது அருமையான உரயாடல்னு தான் குறுகும். அசை பிரிக்கும் பொழுது ஐகரத்தின் முன் குறில் வந்தால் மட்டுமே குறுகும்னு படிச்ச நினைவு.

  தெளிவு படுத்த முடியுமா?

  பதிலளிநீக்கு
 9. ////அருமையான உரையாடல்! இது குறுகும் போது அருமையான உரயாடல்னு தான் குறுகும். அசை பிரிக்கும் பொழுது ஐகரத்தின் முன் குறில் வந்தால் மட்டுமே குறுகும்னு படிச்ச நினைவு.

  தெளிவு படுத்த முடியுமா?////

  இதில் தாங்கள் ஐயுறவே தேவையில்லை. ஐகாரம் சொல்லின் இடையில் வரும் போது அவ்வைகாரத்தின் முன் நெடில் வந்தால் நெடில் தனியசையாகிவிடும் என்பது வெள்ளிடை மலை.

  எகாட்டு:-

  பாமாலை -பா /மா /லை- நேர் /நேர் /நேர் மா நெடிலான காரணத்தால் "லை" இங்கே தனியசையானது காண்க.

  இவ்விடத்தில் "லை"-தனியசையானாலும்கூட சொல்லின் கடையில் வதுவதால் அதைக் குறிலாகவே கொள்ளல் வேண்டும்.

  "வானை பிறைவாழ்த்தும் வல்லமை தா!தமிழே!
  ஆனமட்டும் முத்தமிழ் ஆசானை -நானுவந்தே
  நற்கவி தீட்டுவதால் நற்றமிழே! உன்றனிரு
  பொற்கழல் போற்றல் புகழ்!"

  இவ்வெண்பாவில் பாருங்கள்.

  "வானை" என்று தொடங்கும் முதல் அடிக்கு எதுகையாக "ஆன" என வந்துள்ளமை காண்க.

  "னை"-சொல்லின் இடையில் வந்து குறிலான காரணத்தால் தான் "ன"-எதுகையாக அமையமுடிந்தது.

  பதிலளிநீக்கு
 10. //வெண்பாவில் பயின்றுவரும் ஓசை செப்பலோசை.//
  செப்பலோசை என்றால் என்ன?
  எப்படிப்பட்ட ஓசை செப்பலோசை? எடுத்துக் காட்டுக்களுடன் கொஞ்சம் விளக்கவும். (வரும் பாடங்களில் வருகிறதோ?)

  பதிலளிநீக்கு
 11. செப்பலோசை என்பது இரண்டுபேர் பேசிக்கொள்வது போன்ற ஓசை. அதாவது ஒருவர் இன்னொருவரிடம் செப்புதலால் செப்பலோசை என்னும் பெயர் பெற்றது.

  பொற்றா மரையே! புகழ்நிலவே! பூம்பணியே!
  கற்றார் தமைவிரும்பும் காதலியே! -நற்றமிழே!
  சீராளும் பாவிலுனைச் செய்யா திருப்பின்நான்
  வேரை மறந்த விழுது!

  இப்பாடலைக் கவனித்தீர்களா? தமிழிடம் நான் பேசுவது போல் இருக்கிறதல்லவா? இதுதான் செப்பலோசை!

  பதிலளிநீக்கு
 12. ஒருவர் இன்னொருவரை விளிப்பது போல் இருப்பதாலா? ஓசையில் மட்டுமா, பொருளிலா, இரண்டில் ஏதேனும் ஒன்றிலும் இருந்தாலும் போதுமா?

  தாமரையே, நிலவெ, நதியே, நீரா, தாடகமே
  என்று வருதல் செப்பலோசையா?
  தாமரை, நிலவு, நதி, நீர், தடாகம் என்று வந்தாலும் சரியா?

  எல்லா வெண்பாக்களிலும் இந்த விளித்தல் ஓசை இல்லையே?
  பின் ஏன் வெண்பா என்றாலே செப்பலோசை எனக்கொள்கிறோம்?
  (நான் ஓசையை மட்டும் கவனிப்பதால் இந்தக் கேள்வி எழுகிறது!)

  பதிலளிநீக்கு
 13. தன்னிலையும் முன்னிலையும் பேசிக்கொள்வது போன்று அமைந்தது செப்பலோசை. நீங்கள் எந்த வெண்பாவை எடுத்துக்கொண்டு உற்று நோக்கினும் ஒருவர் மற்றவர்க்குச் செப்புவதுபோலவே அமைந்திருக்கும். ஆதலால் அது செப்பலோசை என்னும் பேர்பெற்றது.

  காட்டு:-

  பாத்தென்றல் என்னாசான் பஞ்சடிகள் போற்றியென்
  பாத்திறத்தைக் காட்டுகிறேன் பாவலர்முன் -மூத்த
  மொழியென்ற பேர்விளங்கும் முத்தமிழே தாயே
  குழவி எனையெடுத்துக் கொஞ்சு!

  செப்பலோசையை மீறினால் நிச்சயம் தளைதட்டும்.

  பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com