ஞாயிறு, 8 ஜூன், 2008

பாடம்7 தொடைச் சிறப்பு!

1-மோனைத்தொடை:-

முதலெழுத்து ஒன்றி வருதலாகிய மோனைக்கு முதலெழுத்து வந்த எழுத்தே வருதலன்றி இனவெழுத்தும் வரும். இதை இனமோனை அல்லது கிளைமோனை என்பர்.

இனவெழுத்துகள்:-

1-உயிர்:-
அஆஐஒள -ஓரினம்
இஈஎஏ -ஓரினம்
உஊஒஓ -ஓரினம்

2-மெய்:-
ஞ்-ந் -ஓரினம்
ம்-வ் -ஓரினம்
த்-ச் -ஓரினம்

அகரமோ டாகாரம் ஐகாரம் ஒளகான்
இகரமோ டீகா ர(ம்)எஏ –உகரமோ
டூகா ர(ம்)ஒஓ ஞநமவ தச்சகரம்
தோகாய் கிளையெழுத்தாச் சொல்!

இவ்வெண்பாவை நன்கு மனனம் செய்யவும்.

மொழிக்கு முதலில் மெய்யெழுத்து வராதல்லவா? ஆகையால் மேற்கூறிய மெய்களை (ஞ்ந்ம்வ்த்ச்) உயிர்மெய்களாகக் கொள்ளவும்.ஞநமவதச -என்னும் ஆறு எழுத்துக்களல்லாத மற்ற மெய்கள் அதற்கதுவேதான் வரவேண்டும்.மெய்யெழுத்துக்கள் இனமாக வருவதோடு அம்மெய்யெழுத்துக்களின் மேல் ஏறிய உயிர்களும் அஆஐஒள –என இனமாகவே வரவேண்டும். மாறி வரக்கூடாது.

எ.காட்டு:-

மிழ்க்குடியைப் பாரறியத் க்க வழிகண்(டு)
மிழ்தினிய முப்பால் ளித்தார் –நமதினிய
தேன்தமிழ்ச் சொல்லெடுத்து செய்யுள் பலசெய்து
வான்புகழ் வள்ளுவரை வாழ்த்து! ---அகரம்.அமுதா

இவ்வெண்பாவின் மூன்றாமடியில் தே-என்ற மோனைக்கு செ-என்ற இனமோனை வந்தமை காண்க. மற்றவரிகளில் அதற்கதுவே வந்தமையும் காண்க.

ரச்சில் ன்றி ழலுதலால்; கொண்டபொருள்
கூரச்சால் தாக்கிக் குலைத்தலால்; -பாரப்பா!
சாட்டைக்கே சுற்றுதலால் சாய்ந்தாடும் பம்பரம்
காட்டுமரச் செக்கின்நேர் காண்! ---அகரம்.அமுதா

இவ்வெண்பாவில் முதல் ஓரடியைத் தவிர மற்ற மூன்றடிகளும் அதற்கதுவே மோனையாக வந்தமை காண்க.முதல்வரியில் ஓஊஉ-என இனமோனைகள் அமைந்தமை காண்க.இரண்டாமடியில் கூ-என்ற மோனைக்கு கு-குறில் மோனையாக அமைதலும் காண்க.

ஒன்றிருப்பின் ஒன்றிரா ஒற்றுமையால்; உற்றவர்க்கே
நன்றாய்ப் பெருமைபல நல்குதலால்; -என்றும்
மனிதர் ஒருசிலர்க்கே வாய்க்கும் வகையால்
தனம்குணம்ஒன் றென்றால் தகும்! ---அகரம்.அமுதா

இவ்வெண்பாவின் முதலடியில் ஒஒஒஉ எனமோனை(உ-இனமோனை) எடுத்தமை காண்க.

இரண்டாமடியில் 'நந' மூன்றாமடியில் 'மவா' நான்காமடியில் 'தத'-என மோனை எடுத்தமை காண்க.

குறிப்பு:-

யா-என்கிற ஓரெழுத்து மட்டும் பல இனவெழுத்துக்களோடு சோடிசேரும். யா-வின் இனவெழுத்துக்கள் அஆஐஒள இஈஎஏஒ ஆகிய உயிர் எழுத்துக்களோடு மட்டுமே இனவெழுத்தாக யா-வரும்.

யானையோடு வீழ்ந்தான் அவன். இவ்வடியில் யா-அ என இனமோனை அமைதல் காண்க.

2-எதுகைத்தொடை:-

எதுகைக்கு மெய்யெழுத்து வந்ததே வரவேண்டும். உயிர்மெய்யெழுத்தாயின் வேறு உயிரெழுத்துக்கள் புணர்ந்த உயிர்மெய்கள் வரலாம். இனவெழுத்துத் தான் வரவேண்டும் என்பதில்லை. ஆனால் நெடிலுக்கு நெடிலும் குறிலுக்குக் குறிலும் தான் வரவேண்டும்.

காத்தின் மாற்றமேற் கத்தக்க தென்பதனால்
ஞாத்தை யாள்கணினி நற்பயன்மேல் -மாலுற்றே
காணின் கணினியைக் கையாளும் வாணியவள்
வீணை வருடும் விரல்! ---அகரம்.அமுதா

இவ்வெண்பாவை நன்கு கவனிக்கவும்.முதல் இரண்டடியின் முதல் சீர்களில் எதுகை ல,ல எனவருவதும் இரண்டாமடியின் நான்காம் சீரில் லு என்று வேற்று உயிர்ப்புணர்ச்சியோடு கூடி எதுகையாக வந்தமை காண்க.

மூன்றாம் நான்காம் அடிகளின் முதல் சீர்களில் எதுகை ணி,ணை என வந்தமை காண்க. ண் என்ற மெய் மாறாமலும் ண்-ஓடு புணரும் உயிர் மட்டுமே மாறியும் வந்துள்ளது.

சொற்சிலம்பம் ஆடத் துணிந்தேன் புடம்போட்டப்
பொற்சிலம்பம் போன்றவளே பூத்துவா! -மற்சிலம்பம்
ஆடிப் பகைவளர்க்கும் ஆசை எனக்கில்லை
பாடித் தமிழ்வளர்ப்பேன் பார்! ---அகரம்.அமுதா

இவ்வெண்பாவைக் கவனிக்கவும்:-

முதல் இரண்டடியில் ற்-எதுகையாகவும் மூன்றாம் நான்காம் அடிகளில் டி-எதுகையாகவும் வந்தமை. இப்படி அதற்கதே வருதல் சாலச் சிறப்பு.

எழுமீற்றுச் சீர்க்கே எழிலார்ப்பா தன்னைப்
பழுதின்றிப் பாடுகிற பண்போ -டொழுக்க
விழுப்பத்தில் தேர்ந்து விளங்கும்நம் வெண்பாக்
குழுமத்தில் வந்து குதி! ---அகரம்.அமுதா

இவ்வெண்பாவில் எல்லா எதுகைகளும் ழு-வாக வந்தமை காண்க.

3-உறழ்ச்சித் தொடை:-

இரண்டடிகளில் மோனை முதலிய தொடைகள் வருதல்- முதற்றொடையாகும். ஓரடியில் உள்ள சீர்களில் மோனை முதலிய தொடைகள் வருதல் உறழ்ச்சித்தொடையாகும்.

இவ்வுறழ்ச்சித்தொடையை அளவடியிலேயே கொள்ளவேண்டும். அளவடி -நான்குசீர்களைக்கொண்டது.

முதற்றொடை:-அடிகளின் முதற்சீரில் மோனை முதலியன வருவது.1-அடிமோனை 2-அடியெதுகை 3-அடிமுரண் 4-அடியிழைபு 5-அடியளபெடை என்பன.

குறிப்பு:-அடிமோனையும் இழைபுத்தொடையும் நாம் காணும் வெண்பாவிற்குத் தேவையற்றது என்பதை நினைவிற் கொள்க.

உறழ்ச்சித்தொடை:-

1இணை 2பொழிப்பு 3ஒரூவு 4கூழை 5மேற்கெதுவாய் 6கீழ்க்கெதுவாய் 7முற்று 8கடையிணை 9கடைக்கூழை 10இடைப்புணர் 11பின் -எனப் பதினொரு வகைப்படும்.

எ.காட்டு:- மோனை:-

உறழ்ச்சித்தொடை ஓரடியிலுள்ள நான்கு சீர்களில் மட்டுமே பார்க்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்க.

1-இணைமோன -(1-2)முதல் இரண்டு சீர்களில் மோனை எடுத்து வருவது (சீர்-சொல்)

2-பொழிப்புமோனை -(1-3)முதல் மற்றும் மூன்றாம் சீர்களில் மோனை
அமைவது. (பொதுவாக வெண்பாவில் பொழிப்பு மோனையைப் பயன் படுத்தியே பாடப்படுகின்றன என்பதைக் கண்டறிக)

3-ஒரூவுமோனை -(1-4) முதல் மற்றும் நான்காம் சீர் மோனை எடுத்தல்.

4-கூழைமோனை -(1-2-3) முதல் மூன்று சீர்களில் மோனை வருவது.

5-மேற்கெதுவாய் மோனை -(1-3-4) இரண்டாம்சீர் ஒழிந்த ஏனைய மூன்று சீர்களிலும் மோனை அமைவது.

6-கீழ்க்கெதுவாய் -(1-2-4) மூன்றாம் சீர் ஒழிந்த ஏனைய சீர்களிலும் மோனை அமைவது.

7-முற்றுமோனை -(1-2-3-4) நான்கு சீர்களிலும் மோனை அமைந்து வருவது.

8-கடையிணை மோனை -(3-4) மூன்றாம் நான்காம் சீர்களில் மோனை அமைவது.

9-கடைக்கூழைமோனை -(2-3-4) முதற்சீரொந்த ஏனை மூன்றுசீர்களில் மோனை வருவது.

10-இடைப்புணர்மோனை -(2-3) இரண்டாம் மூன்றாம் சீர்களில் மோனை அமைவது.

11-பின்மோனை –(2-4) இரண்டாம் நான்காம் சீர்களில் மோனை அமைவது.

குறிப்பு:-
இவ்வாறே ஏனை எதுகை முதலிய நான்கு தொடைகட்குங் கண்டுகொள்க.

முதலிரு சீரிணை முதலிருந் தொன்றிரண்
டிடையீடு பொழிப்பொரூஉ ஈறிலி கூழை
முதலீ றயலில மேல்கீழ்க் கெதுவாய்
முழுவது முற்றே கடையிரு சீரிணை
கடைமூன்று கூழை இடையிரண் டிடைப்புணர்
இரண்டும் நான்கும் பின்னெனப் படுமே!

இப்பாடலை நன்றாக மனனம் செய்க.

குறிப்பு:-

வெண்பாவைப் பொருத்த வரை பெரும்பாலும் மோனையிலேயே இத்தொடை அமையப்பெறும். சிறுபான்மையாக எதுகை வரும்.

புத்துரதன் புத்திரனின் சத்துருவின் மித்திரனின்
பத்தினியின் கால்வாங்கித் தேய்.

இக் குறட்பாவில் த் முற்றெதுகையாக வந்தமை காண்க. ஓரடியில் எதுகை பெற்றுவருவதை யாரும் அதிகம் பாடுவதில்லை. மோனை அமையாத விடத்து எதுகையமையச் செய்வார்கள்.

அடிபோ டுதலால்; அடிதோறும் நன்றாய்த்
துடிப்போடே சந்தநயம் தோன்றும் -படியாகும்
பண்பதால்; கோல்கொளும் பாங்கதால்; கோற்சிலம்பர்
பண்பாடும் பாவலர்நேர் பார்! -அகரம்.அமுதா

இவ்வெண்பாவின் முதலடியில் டி-என்ற எதுகை பொழிப்பெதுகையாக வந்தமை காண்க.

குறிப்பு:-வெண்பாவில் மோனையைப் பொருத்த வரை உறழ்ச்சி மோனை இன்றியமையாதது. எதுகை அடியெதுகை எடுத்து வருதல் நலம்.

அகரம்.அமுதா

8 கருத்துகள்:

  1. ////எதுகைக்கு மெய்யெழுத்து வந்ததே வரவேண்டும்//
    காணின் கணினியைக் கையாளும் வாணியவள்
    வீணை வருடும் விரல்!
    'வீணை'க்கப்புறம் மெய் இல்லையே?

    பதிலளிநீக்கு
  2. ஆகா, உறழ்ச்சித் தொடை படிக்கும் போது, முன்பு நான் எழுப்பிய வினாக்களுக்கு விடை இருப்பதை அறிந்து கொண்டேன். முந்திரிக்கணைகளை பொறுத்தருளவும்!

    பதிலளிநீக்கு
  3. உறழ்ச்சித் தொடை: இது தனி வைகையான தொடை என்றில்லாமல், எல்லா வகைத் தொடைகளும் இதில் ஒரு வகையென அடங்கும் எனக் கொள்ளலாமா?

    பதிலளிநீக்கு
  4. நல்ல வினா! எதுகை என்பதென்ன? இரண்டாம் எழுத்து ஒன்றி வருவதல்லவா? காணின் என்பதில் உள்ள இரண்டாம் எழுத்தாகிய ணி-க்கு விணை என்பதிலுள்ள ணை- எதுகையாக அமைகிறது. மூன்றாமெழுத்து ஒன்றி வர வேண்டிய அவசியமில்லை. ஆயினும் தாங்கள் அற்புதமான வினாவைத் தொடுத்திருக்கிறீர்கள். மூன்றாம் நான்காம் எழுத்துக்கள் ஒன்றி வருவதை விகர்ப்பம் என்பர். இந்த விகர்ப்பத்தைப் பற்றியெல்லாம் நமது பாடத்தில் (வெண்பா இலக்கணத்தை ஓரலவிற்குப் படித்துக் கொண்ட பிறகு ) கண்டிப்பாகக் காணலாம். அதுவரை சற்றே பொறுக்கவும் தோழரே! தங்கள் ஆர்வம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. உறழ்ச்சித் தொடை: இது தனி வைகையான தொடை என்றில்லாமல், எல்லா வகைத் தொடைகளும் இதில் ஒரு வகையென அடங்கும் எனக் கொள்ளலாமா?

    ஆம்!

    பதிலளிநீக்கு
  6. பாராட்டத்தக்க முயற்சி! கீழ்க்காணும் பிழைகளை நீக்கின் சிறப்புறும்.

    ஊண்றி
    குளைத்தலால்
    கூரச்சாற் தாக்கி
    ஒன்றிறா
    ண்-னொடு
    பாடகிற
    -த.ந.

    பதிலளிநீக்கு
  7. மன்னிக்கவும் தமிழநம்பியவர்களே! எத்துணைக்கவனமாக இருப்பினும் பிழைநேர்ந்து விடுகிறது. தங்கள் வருகைக்கென் நன்றிகளை உரித்தாக்குகிறேன். தொடர்ந்து வருக. ஆதரவு தருக.

    பதிலளிநீக்கு
  8. எதையோ தேடபோ யி இங்கவந்து மாட்டிகிட்டே
    எடுத்து குடிக்க செம்புதண்ணி னு நெனச்சபுட்டே- இது
    ஆறுயில்ல ஆழினு புரிஞ்சுக் கிட்டே
    பேகலானு போகும் பொது
    உணர்ந்தத செல்லுங்கள் வரிஒன்னு
    பாத்ததால
    உணர்ந் துட்டே நல் லாஉணர்ந்துடே
    இது
    ஆழியில்ல எனக்கு அணு னு
    - அனைவரும் நன்றி

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com