சனி, 7 ஜூன், 2008

பாடம்6 தொடை!


அடிகளை ஒன்றோடொன்று தொடுப்பது தொடைஎனப்படும். இரண்டடிகளிலே யன்றி ஓரடியிலுள்ள சீர்களிலும் இத்தொடை வரும்.

செய்யுலின் ஓசைக்கும் இனிமைக்கும் சிறப்புக்கும் இத்தொடை இன்றியமையாததாகிறது.

அத்தொடை முதற்றொடை உறழ்ச்சித்தொடை என் இருவகைப்படும்.
அடிகளில் வருவது முதற்றொடை ஓரடிகளிலுள்ள சீர்களில் வருவது உறழ்ச்சித் தொடை.

முதற்றொடை ஐந்து வகைப்படும்.

அவை:-
1-மோனைத்தொடை
2-எதுகைத்தொடை
3-முரண்தொடை
4-இழைபுத்தொடை
5-அளபெடைத்தொடை

மோனை யெதுகை முரணியை யளபெடை
எனுமிவை யைந்தும் முதற்றொடை யாமே! -என்பது தொல்காப்பியம்.

1-மோமைத்தொடை

இரண்டு அடிகளின் முதற்சீரின் முதலெழுத்து அல்லது ஓரடியிலுள்ள சீர்களின் முதலெழுத்து ஒன்றே வருவது மோனை எனப்படும்.

முதலெழுத் தொன்றுதல் மோனையாகும் -தொல்காப்பியம்

குறிப்பு:-

அடிகளில் வரும்மோனை அடிமோனை எனப்படும். ஓரடியிலுள்ள சீர்களில் வரும் மோனை சீர்மோனை எனப்படும்.

அடிமோனை:-

டித்தேன் அடடாவோ! பாக்களொவ் வொன்றுமொரு
டித்தேன் எனச்சொல்வேன் பண்பாய் -அடிநான்கில்
சீரேழும் ஒன்றும்பின் சீரேழும் ஒன்றிவர
நூரேழில் மூன்றில்லா நூல்! ---அகரம்.அமுதா

இவ்வெண்பாவில் முதலடியின் முதலெழுத்தாகிய -வும் இரண்டாமடியின் முதல்எழுத்தாகிய -வும் ஒன்றி வருவதால் (ஒன்றிவருதல்-ஓரெழுத்தாதல்) இது அடிமோனை எனப்படும்.

சீர்மோனை:-

ரும்புவி யாங்கும் ருமிலக்கி யத்தில்
திருக்குறட்போ லுண்டோ திரு? ---அகரம்.அமுதா

இக்குறள் வெண்பாவில் வந்துள்ள இஇ ஓரடியிலும் திதி ஓரடியிலும் வந்தமையால் இவை சீர் மோனை எனப்படும்.

2-எதுகைத்தொடை:-

இரண்டாமெழுத்தொன்றுதல் எதுகையாமே! -தொல்காப்பியம்.

அடிதோறும் இரண்டாமெழுத்து ஒன்றிவருவது எதுகை எனப்படும்.

வாட்டி வதைத்து மனத்தின்கண் வீற்றிருந்(து)
ட்டிப் படைத்தே அறிவழிக்கும் -கூட்டினையே
நோயிற் பெருமளவு நோகடிக்கும் வெஞ்சினத்
தீயிற் கொடியதோ தீ? ---அகரம்.அமுதா

இவ்வெண்பாவின் முதலிரண்டு அடிகளின் முதற்சீலரில் இரண்டாமெழுத்து ' ட்' என்றே வந்திருத்தல் எதுகை.மூன்றாம்நான்காம் அடிகளின் முதற்சீர்களின் இரண்டாமெழுத்தும் 'யி' ஒன்றிவந்து அவையும் எதுகையானது காண்க.

3-முரண்தொடை:-

முரணத் தொடுத்தல் முரண்தொடை யாமே –தொல்காப்பியம்

முரணுதல் -மாறுபடுதல். மாறுபட்ட சொற்கள் வருதல் முரண்தொடை எனப்படும்.

விண்தேடும் வள்ளுவனார் வேட்ட குறள்முடியை
மண்தேடும் தாளின் அடி! ---அகரம்.அமுதா

இக்குறள் வெண்பாவில் விண்xமண் என்பது முரண்தொடையாகும்.

குறிப்பு:-

மேல் கீழ்வெண்மை கருமைநீளம் குட்டை -இப்படி எதிர்மறையாக வரும் சொற்கள் முரண்தொடை எனப்படும்.

4-இழைபுத்தொடை:-

குறிப்பு:-இழைபுத்தொடை நமது வெண்பாவில் இடம்பெறாது என்ற காரணத்தால் இழைபுத்தொடைக்கான பாடம் தவிர்க்கப் படுகிறது.

5-அளபெடைத்தொடை:-

அளபெடுத் தொன்றுதல் அளபெடைத் தொடையே! -தொல்காப்பியம்

கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்! ---திருக்குறள்

'கடாஅ, படாஅ' என்று அளபெடுத்ததால் இது அளபெடைத்தொடையாகும்.

குறிப்பு:-

செய்யுளின் ஓசை நயத்துக்காகவும் தளை தட்டாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் ஓர் சீரில் வருகிற நெடில் எழுத்தை அந்நெடில் தோன்றுவதற்குக் காரணமான உயிர்நெடிலின் இனமான குறிலை அந்நெடிலோடு இணைத்துக்கொள்வது அளபெடையாகும். அளபெடுக்கும்போது நெடில் மட்டுமே அளபெடுத்து வரும். குறில் அளபெடுக்காது.

எ.காட்டு:-

கடா -இச்சொல்லின் நெடிலெழுத்தாகிய 'டா' தோன்றக்காரணடான உயிரெழுத்து ஆ. ஆவின் குறில் அ அல்லவா? இக்குறிலை 'டா' வென்னும் நெடிலுக்குப் பின் சேர்த்துக்கொள்வது அளபெடை எனப்படும். கடாஅ என்று வந்தமை காண்க.

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை
ஆஅது மென்னு மலர்! -திருக்குறள்

இக்குறளில் ஓதல் எனும் சொல் அளபெடுத்து ஓஒதல் என வந்தமை காண்க.

ஓதல் வேண்டும் என்றுவந்தால் வெண்பா விதிப்படி தளை தட்டும் அல்லவா? ஆகையால் அளபெடுத்தமை அறிக.

அகரம்.அமுதா

4 கருத்துகள்:

 1. அளபடையை புதிதாக அறிந்துகொண்டேன். இப்படியொரு வசதி இருக்கா, நல்லது. விரைவில் முயற்சிக்கிறேன்!

  முதல் எழுத்து ஒன்றல் - மோனை
  (முதல்:மோனை)
  இரண்டாம் எழுத்து ஒன்றல் - எதுகை

  இது நினைவில் வைத்துக் கொள்ள உதவும் குறிப்பாக உள்ளது.

  வினாவொன்றும் எழுகிறது:
  எந்த இடத்தில் எந்த தொடையைப் பயன்படுத்தலாமெனும் விதி(அ)வகை ஏதேனும் உண்டோ?

  பதிலளிநீக்கு
 2. நிச்சயம் உண்டு. நமது அடுத்த பாடம் தொடைச் சிறப்பைப் பற்றியது. அதில் தங்களது கேள்விக்குப் பதில் கிடைக்கும்!

  பதிலளிநீக்கு
 3. எதுகைத் தொடை பற்றி இன்னொரு வினா:
  மனம்/குணம் : இது எதுகை ஆகாதல்லவா?

  பதிலளிநீக்கு
 4. முற்காலத்தில் இம்முறை கிடையாது. ஆனால் தற்காலத்தில் நம் கவிஞர்கள் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள்.

  "ன-ண ற-ர ழ-ல" ஆக இம்மூன்று முறையும் தற்காலத்தில் பயன்பாட்டில் உள்ளது.

  நீங்கள் இவ்வகையைப் பயன்படுத்த நினைப்பின் "ண-ன ற-ர" இவ்விரண்டையும் பயன்படுத்தலாம்.

  இன்னும் இதுமூன்று பாடங்களுக்குப் பின் வெண்பாவிலுள்ள நுணுக்கங்கள் பற்றி சிறிய சறிய பாடமாகக் கொடுப்பேன் அவற்றில் இதெல்லாம் வரும்.

  இருப்பினும் தங்களுக்கு ஏற்படும் ஐயங்களைக் கேட்கத் தயங்காதீர்கள். ஏனென்றால் நீங்கள் வினாக்களைத் தொடுக்கின்ற போதுதான் அவை என் நினைவிற்கு வரும். நன்றி.

  பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com