திங்கள், 18 ஆகஸ்ட், 2008

பாடம்19 அசைச்சீர்!

பொதுவாக வெண்பாவின் ஈற்றடியின் இறுதிச்சீர் நாள்மலர் காசு பிறப்பு என்னும் நான்குள் ஒன்றைப்பெற்று இறும். இதுவே வகுப்புமுறையாகும்(விதி).

காட்டு:-

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
அங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்
அங்கண் உலகளித்த லான்!

லான் -நாள்

கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப்
பிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் -மணங்கொண்டீண்
டுண்டுண்டுண் டென்னும் உணர்வினாற் சாற்றுமே
டொண்டொண்டொண் ணென்னும் பறை!

பறை -மலர்

கன்னின்றான் எந்தை கணவன் களப்பட்டான்
முன்னின்று மொய்யவிந்தார் என்னையர் -பின்னின்று
கைபோய்க் கணைஉதைப்பக் காவலன் மேலோடி
எய்போல் கிடந்தானென் ஏறு!

ஏறு -காசு

அள்ளற் பழனத் தரக்காம்பல் வாயவிழ
வெள்ளந்தீப் பட்ட தெனவெரீஇப் -புள்ளினம்தம்
கைச்சிறகாற் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ
நச்சிலைவேற் கோக்கோதை நாடு!

நாடு -காசு

கழலெடுத்து வாய்மடித்துக் கண்சுழன்று மாற்றார்
அழலெடுத்த சிந்தையராய் அஞ்சத் -தழலெடுத்த
போராழி ஏந்தினான் பொன்மலர்ச் சேவடியை
ஓராழி நெஞ்சே! உவந்து!

உவந்து -பிறப்பு

ஆனால் இவ்விதியை மீறும் விதமாக ஈற்றடியின் ஈற்றுச்சீரில் தனிக்குறிலை நேரசையாக சீராக்கிப் புதுமைசெய்தனர்.

காட்டு:-

கையொத்து நேர்கூப்பு க!
பூப்பெய்தேன் என்னவியப் பு!
கல்லாற்சொற் றேறலொழி க!
குக்கலிச்சிக் குங்கலைச்சிக் கு!

இவ்வீற்றடிகள் அனைத்தையும் நோக்குக. தனி குறில் ஈற்றுச்சீராகி நாள்வாய்பாடெடுத்தமை.

பிற்காலத்தில் இன்னோர் வழக்கமும் மேலோங்கத்துவங்கியது. அது:- காசு பிறப்பு வாய்பாட்டைத் தேமா புளிமாபோல் (உகரப் புனர்ச்சியை நீக்கி) கொள்வது.

சின்னஞ் சிறுவயதில் தேர்ந்த உணர்வினுக்கே
என்னபொருள் என்றேநான் இன்றுணர்ந்தேன் -அந்நாளில்
முத்தென்று சொல்லுதிர்த்த மோகக் கவிதையெழில்
சித்திரத்தாள் பாராமல் சென்றாள்! -கண்ணதாசன்

வெண்பாவிதிப்படி சென்று என்றே முடிக்கவேண்டும். சென்று எனமுடிக்கப்படின் பொருள் முற்றுப்பெறாது என்பதால் சென்றாள் எனமுடிக்கப்பட்டமை காண்க.

பல்லாண்டு நீர்வாழப் பண்பார்ந்த பைந்தமிழின்
சொல்லாண்டு பாடுகிறேன் தூயவரே! -இல்லாண்டு
செய்யும் தொழிலாண்டு சேரும் புகழாண்டு
வையத்துள் வாழ்வாங்கு வாழ்க! -அகரம்.அமுதா

வாழ் அல்லது வாழ்வு என இறவேண்டும் என்பதே விதி. தமிழர்தம் பண்புப்படி வாழ்க என்று வாழ்த்துவதே மரபாகும். தன்னைவிடச் சிறியவரையும் வாழ்த்தும் போழ்து வாழ்க என்பரேயன்றி வாழ் என்று வாழ்த்தும் மரபு தமிழரிடமில்லை. ஆதலால் வெண்பாவின் விதி (பண்பாடு கரணியமாக) தளர்த்தப்பட்டிருக்கிறது.

இக்கிழமைக்கான ஈற்றடி:- உள்ளிருள் நீக்கும் ஒளி!

அகரம்.அமுதா

17 கருத்துகள்:

  1. கள்ளமிலா நெஞ்சமும் கள்ளுண்டு ஆடிடவே
    பள்ளியிலும் பள்ளியிலும் பாடவரும் - துள்ளுதமிழ்
    தெள்ளுதமிழ் வள்ளுவன் நற்குறட் பாநலமே
    உள்ளிருள் நீக்கும் ஒளி!

    பள்ளி - கல்விநிலையம், படுக்கையறை. ;)

    பதிலளிநீக்கு
  2. அழகிய வெண்பாவை அளித்தமைக்கு வாழ்த்துகள் தோழரே! முதலடியில் மூன்றாம் நான்காம் சீர்களின் இடையில் தளைதட்டுவதைக் கவனித்தீரா?

    கள்ளுண்டு ஆடிடவே
    புணர்ந்தால் கள்ளுண் டாடிடவே என்றாகி வெண்டளை சிதைவுறும். ஆகவேஇப்படி மாற்றியமைக்கலாம் என நினைக்கிறேன். தங்களின் ஒப்புதலோடு:-

    கள்ளமிலா நெஞ்சமும் கள்ளுண்டே ஆடிடப்
    பள்ளியிலும் பள்ளியிலும் பாடவரும் - துள்ளுதமிழ்
    தெள்ளுதமிழ் வள்ளுவன் நற்குறட் பாநலமே
    உள்ளிருள் நீக்கும் ஒளி!

    பதிலளிநீக்கு
  3. தகுந்த முறையில் மாற்றியமைத்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  4. மிக்க நன்றி கிரி! ஈற்றடிக்கு வெண்பா எழுதலாம் தானே!?

    பதிலளிநீக்கு
  5. மந்திரம் கோடி மழைபோல் பொழிந்தாலும்
    எந்திரம் கீழில்லா எச்சிலையும் -உந்திவரும்
    வெள்ளிக் கதிராற்றல் வீசா திருமுறைகள்
    உள்ளிருள் நீக்கும் ஒளி!

    பாத்தென்றல். முருகடியான்

    பதிலளிநீக்கு
  6. மாட்டை வழிநடத்த மாழை மரவேலி
    போட்டுப் பொறியடக்கும் பூமாந்தா! -வீட்டுநிலை
    உள்ளித் திரிவீர் உணர்ந்தறிய வள்ளலுரை*
    உள்ளிருள் நீக்கும் ஒளி!

    வள்ளல்* -வள்ளலார்

    பாத்தென்றல்.முருகடியான்

    பதிலளிநீக்கு
  7. புள்ளி மயிலேறி அள்ளி யருள்தரும்
    வள்ளிக் கணவன் வசீகரனைக் கொள்ளியெனக்
    கொள்ளத்தான் காண்பேனோ பூத்திருக்கும் தாமரையில்
    உள்ளிருள் நீக்கும் ஒளி.

    பதிலளிநீக்கு
  8. நல்ல முன்னேற்றம் ஜிவா! கலக்குங்க!

    அடிதோய் இருளை அகற்றா விளக்கைக்
    கடிதேற்றி வைப்பதனால் கங்குல் -மடிந்திடுமோ?
    நள்ளிருள் நீக்கவரும் ஞாயிறாம் தீங்குறளே
    உள்ளிருள் நீக்கும் ஒளி!

    அகரம்.அமுதா

    பதிலளிநீக்கு
  9. மந்திரங் கோடி மழைபோல் பொழிந்தாலும்
    எந்திரம் கீழில்லா எச்சிலையும் -உந்திவரும்
    வெள்ளிக் கதிராற்றல் வீசா; திருமுறைகள்
    உள்ளிருள் நீக்கும் ஒளி!

    மாட்டை வழிநடத்த மாழை மரவேலி
    போட்டுப் பொறியடக்கும் பூமாந்தா! -வீட்டுநிலை
    உள்ளித் திரிவீர் உணர்ந்தறிய வள்ளலுரை*
    உள்ளிருள் நீக்கும் ஒளி!

    வள்ளல்* -வள்ளலார்

    பாத்தென்றல்.முருகடியான்

    பதிலளிநீக்கு
  10. பட்டைத் திருநாமம் பட்டுப்பொன் னாடைகளால்
    முட்டும் மதியிருட்டு முற்றழியா! -கொட்டிவைத்த
    பல்லா யிரம்பாட்டுப் பாலைத் தருந்தமிழே
    உள்ளிருள் நீக்கும் ஒளி!

    காரிருளை நீக்கக் கதிரும் பனிநிலவும்
    வேரிருளை வெல்ல விழும்மழையும் -ஆறறிவால்
    நெல்லிப் பழமுண்டு நீடுய்யத் தேன்தமிழே
    உள்ளிருள் நீக்கும் ஒளி!

    பாத்தென்றல்.முருகடியான்

    பதிலளிநீக்கு
  11. அனைத்தும் அருமையான வெண்பாக்கள்.

    பதிலளிநீக்கு
  12. அல்வழி நீக்கும் அறிவுசால் நல்வழியும்
    இல்வழி வீடருளும் இன்குறளும் -சொல்வழி
    தொல்லை பலநீக்குந் தொன்னூலாம் நாலடியும்
    உள்ளிருள் நீக்கும் ஒளி!

    அகரம்.அமுதா

    பதிலளிநீக்கு
  13. ஆஹா அற்புதம் அனைத்தும் அருமை.
    எனக்குத்தான் எழுத்தெரியவில்லை.
    கவிஞர் ரத்தினகிரியார், வெண்பாபுலி அமுதா, பாத்தென்றலார் அனைவரின் படைப்புகளும் மிகச் சிறப்பாக உள்ளன.
    ஒரு வேண்டுகோள்:
    கீழ்க்காணும் கருத்தைக் கொண்ட வெண்பாக்களை நீங்கள் அனைவரும் தத்தமது பாணியில் படைத்தளிக்க வேண்டுகிறேன் (கருத்து ஏஎற்புடையதாக இருந்தால்!).

    1) தந்தையாரின் பொன்சொல்லே உள்ளிருளை நீக்கும் ஒளி.
    2)ஆழ்வார்கள் அருளிச் செய்த பாசுரங்களே உள்ளிருளை நீக்கும் ஒளி.

    பதிலளிநீக்கு
  14. தன்னை வருத்தித் தவங்கிடந்து பெற்றெடுத்த
    உன்னை மடிசுமந்(து) ஓம்பிவளா் -தந்தையவா்
    சொல்லுக் கிணையுண்டோ? தொல்லுலகில் வேறுண்டோ
    உள்ளிருள் நீக்கும் ஒளி?

    வருக! நண்பா் தியாகராஜன் அவா்களே தங்களின் ஓா் விருப்பத்தை நான் நிறைவேற்றி விட்டேன், மற்றொன்றை நண்பா் இரத்தினகிரி நிறைவேற்றுவார் என எதி பார்க்கிறேன் நன்றி

    பதிலளிநீக்கு
  15. மிக்க மகிழ்வை உணர்கிறேன் அமுதா அவர்களே.
    கவிஞர் இருவரின் படைப்புகளை எதிர்பார்த்து,
    தியாகராஜன்.

    பதிலளிநீக்கு
  16. நிச்சயம் படைப்புகள் வெளிவரும். சில காலம் பொருத்துக் கொள்ளுங்கள் தோழரே!

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com