மூவாயிரம் நான்காயிரம் ஆண்டுகளாகக் கோலோச்சி வந்த மரபுக் கவிதை வடிவிற்கு இருபதாம் நூற்றாண்டு ஓர் மாபெரும் பின்னடைவை ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது. புதுக்கவிதை வடிவும் அதற்குப் பின்வந்த நவீன, பின்நவீன வடிவங்களும் மரபின் சல்லிவேர்களை செற்கள்போல் அரித்தன என்றால் அது மிகையாகாது.
இச்சிக்கல்களிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டு எதிர்நீச்சலிட்டு முன்னேற மரபு தன்நோக்கையும் போக்கையும் மாற்றிப் புதுப்பொலிவுடன் வலம்வந்து கொண்டிருப்பதும் கண்கூடு.
இருபதாம் நூற்றாண்டில் மரபுக் கவிதை பெரும் பின்னடைவைக் கண்டதெனினும் மரபுவடிவான வெண்பாவிற்குச் சிறிதும் பின்னடைவில்லை என்றே கூறலாம். கரணியம் அதன் வடிவ அமைப்பும் எதையும் எளிதிற் பொட்டிலடித்தாற்போல் கூறும் துணிவுமிக்க ஆற்றலும்தான்.
இருபதாம் நூற்றாண்டில் புதுமைப் பித்தர்கள் தோன்றிப் புதுக்கவிதைக்குக் கொடிபிடிக்குங்கால் வெண்பா ஓசைபடாமல் தன்போக்கையும் நோக்கையும் மாற்றிக்கொண்டு பேச்சிவழக்குச் சொற்களைக் கொண்டு, "கருத்து, உணர்ச்சி, கற்பனை, அழகியவடிவம்" என்ற இலக்கியத்திற்குத் தேவையான நான்கு அணிகளையும் களைந்துவிட்டு எளியமுறையில் மிகமிக எளியமுறையில் தளைகள்மட்டும் மாறாமல் தன்னைப் புதுப்பித்துக்கொண்டது.
இவ்வெளியமுறை வெண்பாக்களை முதன்முதலில் கையாண்டவர் புதுமைப்பித்தன் எனலாம்.
பண்ணாத ரௌசெல்லாம் பண்ணிவெச்சி இன்னிக்குக்
கண்ணால முன்னா கசக்குதா -அண்ணாத்தே
ஆத்தாவந் தாலுன்னை அடுப்பில் முறிச்சிவெப்பா
போயோன் தொலைஞ்சிபோ யேன்!
இவரைத் தொடர்ந்து வெகுசிலரே இவ்வெளியமுறை வெண்பாக்களைச் செய்திருக்கிறார்கள். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் ஆகாசம்பட்டு சேசாசலம்.
தோணிக்குக் கீழ தொளையா இருப்பதிலும்
பானைக்குக் கீழ இருப்பதிலும் - நாணயமா
புல்லாங் குழல்துளையா என்னை இருக்கவிடேன்
எல்லாமும் வல்லஇறை வா!
சேசாசலம் அவர்கள் தன் வெண்பாத்திறத்தால் மிகமிக எளிய நிகழ்வுகளையும் வெண்பாவாக்கியுள்ளார். காலைக்கடன் கழிப்பது பற்றிக்கூட பாடியுள்ளார் என்றால் பாருங்களேன்.
பாதையோரம் பட்ட பகலில் பழுத்தபழம்
வீதியில ராவுல பொம்பளைங்க! - நாதியில்லா
ஒத்தயடிப் பாதையில ஒக்காரும் வாண்டுக
மத்ததுக தோப்பு தொரவு!
தாமிரக் காசுகளைத் தண்டவாளத் தில்வெச்சி
நாம பதுங்க ரயில்நசுக்கும் - ராமய்யா!
கால ரயிலோட நாமெல்லாங் காசானோம்
வாலிபம்போய் ஆச்சே வயசு!
அவரைத்தொடர்ந்து தஞ்சை இனியனும் எளியவழக்குச்சொல் வெண்பாக்களைப் புனைந்துள்ளார்.
பங்கலா கார்கனவில் பட்டினிகள் போக்கிடலாம்
மங்கலான ஆடைபோதும் வாழ்ந்திடலாம் - அங்கங்கே
சிங்கிய டிக்கின்ற செந்தமிழா! படித்து
சிங்கார சென்னைவந்து சேர்!
ஏரிகளே சென்னை இருதயங்கள் நீர்சப்ளை
லாரிகளே செங்குருதி நாளங்கள் -நீரின்றிப்
பூண்டி புயலேரி பொய்த்துவிட்டால் ஆலயத்தில்
ஆண்டவன் கூட அழுக்கு!
இம்முறையில் நானும் பல முயற்சிகளைச் செய்துபார்த்துள்ளேன்.
ஹோம்வொர்க்கைச் செய்து முடித்தவுடன் ஓடிப்போய்
கேம்ஆட டி.விரிமோட் கேட்டாக்கா -வீம்போட
சீரியல் பார்க்கணுண்ணு சீறுகிறாள் என்மம்மி
போரடிக்குதே வாழ்க்கை போ!
குட்டைப்பா வாடை கொழுத்த தொடைகாட்ட
வட்டணிந்த மார்பின் வளங்காட்டி -வட்டுடைகீழ்
ஆதார மில்லா அரும்பாகம் காட்டுமவள்
சேதார மில்லா சிலை!
வீட்டைவைத் தேனும் விதைநெல்லை வித்தேனும்
காட்டைவைத் தேனும் கடஞ்சொல்லி -ஏட்டில்கை
நாட்டைவைத் தேனும் வெளிநாடு போயென்றன்
பாட்டைக் குறைப்பதற்குப் பார்!
எம்.ஏ படிச்சதற்(கு) ஏற்றவேலை வேண்டுமென்று
சும்மாத் திரிந்தால் சுகப்படுமா? -பம்மாத்துக்
காட்டாமல் கைக்குக் கிடைத்தவேலை பார்த்தால்தான்
வீட்டில் கிடைக்கும் மதிப்பு!
நேர்பிடித்து ‘கீவில்’ நிதமுமே நிண்ணாலும்
நீர்வருமோ கார்ப்பரே ஷன்குழாயில்? -பார்த்தாக்கா
காத்துவரும்; காத்தோட சத்த(ம்)வரும் நீர்க்குமிழி
பூத்துவரும் பாத்துட்டு போ!
வாராத நீர்க்கு வரிசையிலே நிண்ணுப்பா(ள்);
தேராத வார்த்தைகளால் திட்டிப்பா(ள்); -நேராய்
அடிச்சிப்பா(ள்); மண்டை உடைச்சிப்பா(ள்); சிண்டைப்
பிடிச்சிப்பா(ள்) கொத்தாகப் பிய்த்து!
இப்படிப் பலமுயற்சிகள். அனைத்தையும் காண விரும்புவோர் எனது தமிங்கிலிஷ்.காம் -இல் காணலாம்.
மேலும் சிற்சிலர் இம்முறையில் வெண்பாக்கள் செய்துள்ளனர். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சுசாதா அவர்கள் தம் கற்றதும் பெற்றதும் தொடரில் குறிப்பிட்டு எழுதியும் வந்துள்ளார்.
நீங்களும் இவைபோன்ற வற்றை முயன்று பார்க்கலாம். சிறப்பாக வருபவற்றை மறுமொழியில் இடவும்.
இவ்வாரத்திற்கான ஈற்றடி:- "அச்சமடம் நாணம் பயிற்பு!"
அகரம்.அமுதா
வீரஞானம் தீரம் உறுதி புருடர்க்கு
பதிலளிநீக்குஆரமாகும் வெற்றி யவர்க்கெனில் - ஓரத்தில்
துச்சமாகும் (தூ)தாயவள் வெற்றிக் குணங்களோ
அச்சமடம் நாணம் பயிற்பு.
இரத்தின கிரியவர்களே மிக அருமை. ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்க வேண்டிய அடிப்படைத் தகுதிகளை அழகாக வெண்பாவாக்கியுள்ளீர்கள். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபுருடர்க்(கு)+ ஆரமாகும்= தளை தட்டுகிறது கவனிக்கவும்.
அடடா! சுட்டிக்காட்டியமைக்கு நன்றி நண்பரே. இது சரியாகுமா?
பதிலளிநீக்குவீரஞானம் தீரம் உறுதி புருடர்க்கோ
ஆரமாகும் வெற்றி யவர்க்கெனில் - ஓரத்தில்
துச்சமாகும் (தூ)தாயவள் வெற்றிக் குணங்களோ
அச்சமடம் நாணம் பயிற்பு.
வீரஞானம் தீரம் உறுதி புருடர்க்கோ
பதிலளிநீக்குஆரமாகும் வெற்றி குணங்களாம் - ஓரத்தில்
துச்சமாகும் (தூ)தாயவள் வெற்றிக் குணங்களோ
அச்சமடம் நாணம் பயிற்பு.
என்றிருந்தால் பொருத்தமாய் இருக்கும் என்று நினைக்கின்றேன் நண்பரே.
நச்சென் இயற்றி நயமுடன்வெண் பாவளித்தீர்
பதிலளிநீக்குமெச்சினோம் உம்மை மிக!
காற்றோட்ட மேலாடை கவ்விய கீழாடை
பதிலளிநீக்குநேற்றுகண்ட மங்கைநல்லா ளைக்கேட்டேன் - "நற்றமிழின்
எச்சமீதி ஏதேனும்?" "ஏனில்லை?", சிந்தித்து
"அச்சமடம் நாணம் பயிர்ப்பு".
காற்றோட்ட மேலாடை கவ்விய கீழாடை
பதிலளிநீக்குநேற்றுகண்ட மங்கைநல்லா ளைக்கேட்டேன் - "நற்றமிழின்
எச்சமீதி ஏதேனும்?" "ஏனில்லை?"இ சிந்தித்து
"அச்சமடம் நாணம் பயிர்ப்பு".
நல்ல துவக்கம் நண்பர் வசந்தகுமார் அவர்களே! இறுதியில் பொருள் முற்றுபெறாமல் உள்ளது. சற்றே மாற்றியமைத்தால் நன்றாக இருக்கும் எனக்கருதுகிறேன்.
காற்றோட்ட மேலாடை கவ்விய கீழாடை
நேற்றுகண்ட மங்கைநல்லா ளைக்கேட்டேன் - "நற்றமிழர்
எச்சமெதும் உண்டோதான்?" "உண்"டென்று சிந்திநின்றாள்
அச்சமடம் நாணம் பயிர்ப்பு!
அகரம்.அமுதா
பாலாடை மேனிகாட்டி நாகரிகம் ஈதென்று
பதிலளிநீக்குகாலாடை யேயணியும் பாவை அறிவாளோ?
கச்சணிந்து நாகரிக வாழ்வறியா ளேயறிவாள்
அச்சமடம் நாணம் பயிற்பு
-இராஜகுரு
பாநயம் கண்டு வியக்கிறேன். அருமை. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅன்பு அகரம்.அமுதா...
பதிலளிநீக்குபொருள் முற்றுப்பெற்று உள்ளதாகவே கருதுகிறேன். நவீனத் தமிழச்சியிடம் ஏதேனும் தமிழரின் பண்பாட்டுக் கூறுகள் மிச்சமுள்ளதா என்று கேட்க, அவள் சிந்தித்து, அச்சமடம் நாணம் பயிர்ப்பு என்கிறாள். இங்கு 'சிந்தித்து' என்பதில் தான் விஷயமே உள்ளது! தமிழர் பண்பாட்டுக் கூறுகளை மறந்து விட்டோம் என்பதையே அந்த 'சிந்தித்து' கூறுகிறது.
வாக்கியம் என்னைப் பொறுத்தவரை முடிந்து விடக் கூடாது. அதை படிப்பவர்களே முடித்துக் கொள்ள வேண்டும் என்பதே எனது படைப்புகளில் நான் முயல்வது!
தங்களது மாற்றமும் மிக நன்றாகவே உள்ளது.
மற்றொன்று ::
காதலியே காலையில்தான் கைப்பிடித்தோம் மேடைதனில்
ஆதலினால் ஆதுரமாய் அன்பிலணை - போதவிலை
இச்சமயம் இன்பத்தில் இச்இச்தா நீமற
அச்சமடம் நாணம் பயிர்ப்பு!
ஹா! ஹா! இந்த இரவு வேளைக்கு ஏற்ற வெண்பாதான் வாழ்த்துகள் வசந்த் அவர்களே. அருமை. ஓர் வெண்பாவுக்குள் சிறுகதை சொல்லிவிடும் ஆற்றல் மிதமிஞ்சியிருக்கிறது தங்களிடம்.
பதிலளிநீக்கு/////பொருள் முற்றுப்பெற்று உள்ளதாகவே கருதுகிறேன். நவீனத் தமிழச்சியிடம் ஏதேனும் தமிழரின் பண்பாட்டுக் கூறுகள் மிச்சமுள்ளதா என்று கேட்கஇ அவள் சிந்தித்துஇ அச்சமடம் நாணம் பயிர்ப்பு என்கிறாள். இங்கு 'சிந்தித்து' என்பதில் தான் விஷயமே உள்ளது! தமிழர் பண்பாட்டுக் கூறுகளை மறந்து விட்டோம் என்பதையே அந்த 'சிந்தித்து' கூறுகிறது.////
சரி. என் கவனக்குறைவாக இருக்கலாம். நான் மீண்டும் கவனிக்கிறேன். நன்றி வாழ்த்துகள்
அகரம்.அமுதா