திங்கள், 29 செப்டம்பர், 2008

பாடம் 24 உவமையணி!

உவமை உருபுகள்:- போல, புரைய, ஒப்ப, உறழ, மான, கடுப்ப, இயைய, ஏய்ப்ப, நேர, நிகர, அன்ன, இன்ன போன்றவை உவமை உருபுகளாகும்.

உவமானத்திற்கம் உவமேயத்திற்கும் இடையே போல என்ற பொருள் தரும் உவமை உருபுகள் வெளிப்படையாக வருவது உவமையணியாகும்.

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு!

உவமை:-

சுடுவதால் பொன்னானது மிகுதியான ஒளிசிந்தும்.

உவமேயம்:-

துன்பம் என்ற நெருப்பு சுடுவதனால் அறிவொளி மிகுந்து காணப்படும். இதில் போல என்ற உவமை உருபு வெளிப்படை.

கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று!

உவமானம்:-

கூட்டாடும் அவைக்கு மக்கள் கூட்டம் நிறையும். கூத்தாட்டம் முடிந்தால் வற்றிவிடும்.

உவமேயம்:-

செல்வத்தின் நிலையும் அப்படியே. அற்று என்ற உவமையுருபு வெளிப்படை.
வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்வைத்தூறு போலக் கெடும்!
போல என்ற உவமை உருபு வெளிப்படையானது காண்க.

ஒருவர் உடலில் ஒருவர் ஒடுங்கி
இருவரெனும் தோற்றம் இன்றிப் -பொருவங்
கனற்கேயும் வேலானும் காரிகையும் சேர்ந்தார்
புனற்கே புனல்கலந்தாற் போன்று!

வெள்ள நீரில் மேலும் வெள்ளநீர் சேர்ந்தால் இரண்டிற்கும் எவ்வாறு வேறுபாடு காணமுடியாதோ அதுபொல இருவரும் ஒருவரில் ஒருவர் இணைந்தனர். இப்பாடலில் போன்று என்ற உருபு வெளிப்படையானதால் உவமையணியாம்.

இக்கிழமைக்கான ஈற்றடி:- மந்திரத்தால் மாங்காய் விழும்!

அகரம்.அமுதா

திங்கள், 22 செப்டம்பர், 2008

பாடம் 23 உயர்வு நவிற்சியணி!

கவிஞன் தான் கூறப்புகும் கருத்தை மிகைப்படுத்தி உயர்த்திக் கூறுவதே உயர்வு நவிற்சியணியாகும்.

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்!

பசியோடிருப்பவனுக்கு கூழ் இன்சுவை கூட்டுவதுதான். ஆயினும் அக்கூழுள் தன் சிறுகுழந்தையின் பிஞ்சுவிரல்கள் பட்டவுடன் அதன்சுவை அமிழ்தைவிடக் கூடிவிடுகிறது எனக் கூறுவது தான் கூறவந்த கருத்தின் முகாமையை விளக்குவதற்காக கவிஞன் மிகைப்படுத்துவதாகும். கூழின் சுவையை உள்ளது உள்ளபடி கூறாமல் அமிழ்தைவிட உயர்ந்த சுவைமிக்கது எனக் கூறுவது உயர்வு நவிற்சி அணியாகும்.


குழலினிதி யாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்!

இசைக்கு மயங்காதோர் யாருமிலர். ஆயினும் வள்ளுவர் ஈன்றசேயின் முகாமையையும் சிறப்பையும் எடுத்துரைக்க அதன் குரல் குழல் யாழைவிட இனியது என்கிறார்.

செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்ற லரிது!

நாம் ஒருவர்க்கு உதவிசெய்யாதபோதும் நமக்குத் தேவைப்படுங்கால் நாம் அழைக்காமல் தானாய்வந்து உதவி செய்பவரின் உதவி சிறந்ததுதான். அவ்வுதவியின் தன்மையை உயர்த்திக் கூற நினைத்த வள்ளுவர் வையகத்தை வழங்கினாலும் ஏன் வானகத்தையே வழங்கினாலும் அவ்வுதவிக்கு ஈடாகாது என்கிறார்.

கற்றதுகைம் மண்ணளவு கல்லா துலகளவென்(று)
உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் -மெத்த
வெறும்பந் தயங்கூற வேண்டாம் புலவீர்!
எறும்புந்தன் கையாலெண் சாண்!

கல்வியின் சிறப்பை யாவரும் உணரவேண்டும் என்பதற்காக இதுவரை நாம் கற்றுமுடித்திருப்பது கையளவு. கற்காமல் விட்டிருப்பது உலகளவு என உயர்த்திக் கூறப்பட்டிருப்பதால் இப்பாடல் உயர்வு நவிற்சியணியாகும். (எறும்பும் தன்கையால் எண்சான் என்ற உவமை எவ்வுயிரும் அதனதன் கைகளால் எண்சாண் உயரம்தான் என்பதை உணர்த்த எடுத்துக்காட்டப் பட்டிருப்பதால் இவ்வீற்றடி எடுத்துக்காட்டு உவமையணியாகும்.)

ஆக உள்ளது உள்ளபடி உரையாமல் மிகைப்படுத்திக் கூறுவனயாவும் உயர்வு நவிற்சியணியாகும்.

இக்கிழமைக்கான ஈற்றடி:- "சோம்புவதால் உய்வுண்டோ சொல்!"

அகரம்.அமுதா

திங்கள், 15 செப்டம்பர், 2008

பாடம் 22 இயல்பு நவிற்சியணி!

ஓர் மங்கைக்கு சிறப்பு சேர்ப்பது அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு போன்ற குணங்கள் என்பர் ஆன்றோர். அதுவே அழகுமாகும். அவ்வழகை மென்மேலும் மெருகேற்றுவது அகத்தூய்மையும் புறத்தூய்மையும் ஆடை அணிகலன்களுமாகும். அதுபோல மரபுப்பாக்களுக்கு பெருமையும் சிறப்பும் சேர்ப்பன இலக்கண அமைப்பும் அழகிய வடிவமுமாகும். அவ்வழகை மென்மேலும் மெருகேற்ற நம்முன்னோர்கள் மரபுப்பா என்ற மங்கைக்கு அணிகளைப் பூட்டி அழகுபார்த்தனர். அவ்வழகைத்தான் அணியிலக்கணம் என்கிறோம்.

ஓர் பெண்ணிற்கு பொட்டு பூ போன்ற அணிகலன்கள் எத்துணை முகாமையோ அத்துணை முகாமையானது பாக்களுக்கு அணிஇலக்கணம். பெண் அணியும் அணிகளின் வகைகளைத் தெரிந்துகொண்டோமானால் அவற்றை எங்கெங்கு அணிய வேண்டும் என்பதும் தெரிந்து விடும். எடுத்துக்காட்டிற்கு மூக்கணி. இதை மூக்கணி என்று அறிவோமானால் அதை எங்கணிவது என்பதும் தெரிந்துவிடும். அதுபோல் பாக்களுள் கையாளப்படும் அணிவகைகளைத் தெரிந்துகொண்டோமானால் அவற்றைக் நம்கருத்தாழத்திற்கேற்ப தேவைக்கேற்ப கையாளத் தெரிந்தவர்களாகி விடுவோம்.

ஓர் கவிஞனை சிறந்த இலக்கியவாதி என இனம்காட்டுவது அவன் கருத்துகளைக் கையாளும் முறையே. அக்கருத்தைச் செறிவூட்டுவது அணியாகும். ஆக நாம் நம் கருத்துகளை அனைவரும் விரும்பும் விதமாக எடுத்துரைப்பதற்கு அணிவகைகளை ஆழமாகக் கற்பது முகாமையாகிறது.

அணிவகைகள் மொத்தம் முப்பத்தைந்து வகைப்படும். அவற்றுள்:- 1.இயல்பு நவிற்சியணி 2.உயர்வு நவிற்சியணி 3.உவமையணி 4.எடுத்துக்காட்டு உவமையணி 5.இல்பொருள் உவமையணி 6.உருவகஅணி 7.ஏகதேச உருவகஅணி 8.சொற்பொருட் பின்வரு நிலையணி 9.தற்குறிப் பேற்றணி 10.பிறிதுமொழிதலணி 11.வேற்றுமையணி 12.வேற்றுப்பொருள் வைப்பணி 13.வஞ்சப்புகழ்ச்சியணி 14.நிரல்நிறையணி 15.மடக்கணி 16.இரட்டுற மொழிதலணி. 17.எதிர்நிலை உவமையணி. 18.ஐய அணி. 19.ஒருபொருள் வேற்றுமையணி.

இயல்பு நவிற்சியணி:-நாம் கூறவரும் கருத்தை எவ்வகை உவமை ஏற்றியும் உரைக்காமல் மிகைப்படுத்தாமல் உள்ளது உள்ளவாறே உரைப்பது உயர்வு நவிற்சியணி யாகும்.

காட்டு:-

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல(து)
அன்றே மறப்பது நன்று!

ஒருவர் நமக்கு செய்த உதவிக்கு நாம் என்றும் நன்றியுடன் நன்றிமறவாதிருக்கிறோம். நன்றிதனை மறப்பது நன்றல்ல என்பதை உணர்த்த வந்த வள்ளுவர் எவ்வுவமையையும் பயன்படுத்தாது உள்ளதை உள்ளவாரே உரைத்திருக்கிறார். உரைக்கவந்த கருத்தை உள்ளது உள்ளவாரே உரைத்துள்ளமையால் இப்பாடல் இயல்பு நவிற்சியணியாகிறது.

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக!

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவ தென்ப திழுக்கு!

வையகம் பகலிழப்ப வானம் ஒளியிழப்ப
பொய்கையும் நீள்கழியும் புள்ளிழப்ப -பையவே
செவ்வாய் அன்றில் துணையிழப்பச் சென்றடைந்தான்
வெவ்வாய் விரிகதிரோன் வெற்பு!

கதிர்சாயுங்கால் பாரில் பகல்வேளை நீங்கி இரவு பிறப்பதும் வானம் ஒளியிழந்து இருள்சூழ்வதும் குளங்களிலும் மற்ற நீர்நிலைகளிலும் இரைதேடும் பறவைகள் அவற்றை நீங்கித்தன் கூட்டையடைவதும் இயல்புதானே. ஆக கதிர்மறையும் மாலைப்பொழுதை அப்படியே உள்ளது உள்ளவாறே படம்பிடித்தாற்போல் காட்டியுள்ளமையால் இப்பாடல் இயல்பு நவிற்சியணியாகும்.

கூறப்புகுங் கருத்தை எவற்றோடும் ஒப்புமைப் படுத்தாமல் இயல்பாக நவில்வது இயல்பு நவிற்சியாகும்.

இயல்பு நவிற்சியணியைப் பயன்படுத்தி இக்கிழமைக்கான ஈற்றடிக்கு வேண்பா எழுத அழைக்கிறேன்.

இக்கிழமைக்கான ஈற்றடி:- "தீயிற் கொடியதோ தீ!"

அகரம்.அமுதா

திங்கள், 8 செப்டம்பர், 2008

பாடம் 21!

மூவாயிரம் நான்காயிரம் ஆண்டுகளாகக் கோலோச்சி வந்த மரபுக் கவிதை வடிவிற்கு இருபதாம் நூற்றாண்டு ஓர் மாபெரும் பின்னடைவை ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது. புதுக்கவிதை வடிவும் அதற்குப் பின்வந்த நவீன, பின்நவீன வடிவங்களும் மரபின் சல்லிவேர்களை செற்கள்போல் அரித்தன என்றால் அது மிகையாகாது.

இச்சிக்கல்களிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டு எதிர்நீச்சலிட்டு முன்னேற மரபு தன்நோக்கையும் போக்கையும் மாற்றிப் புதுப்பொலிவுடன் வலம்வந்து கொண்டிருப்பதும் கண்கூடு.

இருபதாம் நூற்றாண்டில் மரபுக் கவிதை பெரும் பின்னடைவைக் கண்டதெனினும் மரபுவடிவான வெண்பாவிற்குச் சிறிதும் பின்னடைவில்லை என்றே கூறலாம். கரணியம் அதன் வடிவ அமைப்பும் எதையும் எளிதிற் பொட்டிலடித்தாற்போல் கூறும் துணிவுமிக்க ஆற்றலும்தான்.

இருபதாம் நூற்றாண்டில் புதுமைப் பித்தர்கள் தோன்றிப் புதுக்கவிதைக்குக் கொடிபிடிக்குங்கால் வெண்பா ஓசைபடாமல் தன்போக்கையும் நோக்கையும் மாற்றிக்கொண்டு பேச்சிவழக்குச் சொற்களைக் கொண்டு, "கருத்து, உணர்ச்சி, கற்பனை, அழகியவடிவம்" என்ற இலக்கியத்திற்குத் தேவையான நான்கு அணிகளையும் களைந்துவிட்டு எளியமுறையில் மிகமிக எளியமுறையில் தளைகள்மட்டும் மாறாமல் தன்னைப் புதுப்பித்துக்கொண்டது.

இவ்வெளியமுறை வெண்பாக்களை முதன்முதலில் கையாண்டவர் புதுமைப்பித்தன் எனலாம்.

பண்ணாத ரௌசெல்லாம் பண்ணிவெச்சி இன்னிக்குக்
கண்ணால முன்னா கசக்குதா -அண்ணாத்தே
ஆத்தாவந் தாலுன்னை அடுப்பில் முறிச்சிவெப்பா
போயோன் தொலைஞ்சிபோ யேன்!

இவரைத் தொடர்ந்து வெகுசிலரே இவ்வெளியமுறை வெண்பாக்களைச் செய்திருக்கிறார்கள். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் ஆகாசம்பட்டு சேசாசலம்.

தோணிக்குக் கீழ தொளையா இருப்பதிலும்
பானைக்குக் கீழ இருப்பதிலும் - நாணயமா
புல்லாங் குழல்துளையா என்னை இருக்கவிடேன்
எல்லாமும் வல்லஇறை வா!

சேசாசலம் அவர்கள் தன் வெண்பாத்திறத்தால் மிகமிக எளிய நிகழ்வுகளையும் வெண்பாவாக்கியுள்ளார். காலைக்கடன் கழிப்பது பற்றிக்கூட பாடியுள்ளார் என்றால் பாருங்களேன்.

பாதையோரம் பட்ட பகலில் பழுத்தபழம்
வீதியில ராவுல பொம்பளைங்க! - நாதியில்லா
ஒத்தயடிப் பாதையில ஒக்காரும் வாண்டுக
மத்ததுக தோப்பு தொரவு!

தாமிரக் காசுகளைத் தண்டவாளத் தில்வெச்சி
நாம பதுங்க ரயில்நசுக்கும் - ராமய்யா!
கால ரயிலோட நாமெல்லாங் காசானோம்
வாலிபம்போய் ஆச்சே வயசு!

அவரைத்தொடர்ந்து தஞ்சை இனியனும் எளியவழக்குச்சொல் வெண்பாக்களைப் புனைந்துள்ளார்.

பங்கலா கார்கனவில் பட்டினிகள் போக்கிடலாம்
மங்கலான ஆடைபோதும் வாழ்ந்திடலாம் - அங்கங்கே
சிங்கிய டிக்கின்ற செந்தமிழா! படித்து
சிங்கார சென்னைவந்து சேர்!

ஏரிகளே சென்னை இருதயங்கள் நீர்சப்ளை
லாரிகளே செங்குருதி நாளங்கள் -நீரின்றிப்
பூண்டி புயலேரி பொய்த்துவிட்டால் ஆலயத்தில்
ஆண்டவன் கூட அழுக்கு!

இம்முறையில் நானும் பல முயற்சிகளைச் செய்துபார்த்துள்ளேன்.

ஹோம்வொர்க்கைச் செய்து முடித்தவுடன் ஓடிப்போய்
கேம்ஆட டி.விரிமோட் கேட்டாக்கா -வீம்போட
சீரியல் பார்க்கணுண்ணு சீறுகிறாள் என்மம்மி
போரடிக்குதே வாழ்க்கை போ!

குட்டைப்பா வாடை கொழுத்த தொடைகாட்ட
வட்டணிந்த மார்பின் வளங்காட்டி -வட்டுடைகீழ்
ஆதார மில்லா அரும்பாகம் காட்டுமவள்
சேதார மில்லா சிலை!

வீட்டைவைத் தேனும் விதைநெல்லை வித்தேனும்
காட்டைவைத் தேனும் கடஞ்சொல்லி -ஏட்டில்கை
நாட்டைவைத் தேனும் வெளிநாடு போயென்றன்
பாட்டைக் குறைப்பதற்குப் பார்!

எம்.ஏ படிச்சதற்(கு) ஏற்றவேலை வேண்டுமென்று
சும்மாத் திரிந்தால் சுகப்படுமா? -பம்மாத்துக்
காட்டாமல் கைக்குக் கிடைத்தவேலை பார்த்தால்தான்
வீட்டில் கிடைக்கும் மதிப்பு!

நேர்பிடித்து ‘கீவில்’ நிதமுமே நிண்ணாலும்
நீர்வருமோ கார்ப்பரே ஷன்குழாயில்? -பார்த்தாக்கா
காத்துவரும்; காத்தோட சத்த(ம்)வரும் நீர்க்குமிழி
பூத்துவரும் பாத்துட்டு போ!

வாராத நீர்க்கு வரிசையிலே நிண்ணுப்பா(ள்);
தேராத வார்த்தைகளால் திட்டிப்பா(ள்); -நேராய்
அடிச்சிப்பா(ள்); மண்டை உடைச்சிப்பா(ள்); சிண்டைப்
பிடிச்சிப்பா(ள்) கொத்தாகப் பிய்த்து!

இப்படிப் பலமுயற்சிகள். அனைத்தையும் காண விரும்புவோர் எனது தமிங்கிலிஷ்.காம் -இல் காணலாம்.

மேலும் சிற்சிலர் இம்முறையில் வெண்பாக்கள் செய்துள்ளனர். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சுசாதா அவர்கள் தம் கற்றதும் பெற்றதும் தொடரில் குறிப்பிட்டு எழுதியும் வந்துள்ளார்.

நீங்களும் இவைபோன்ற வற்றை முயன்று பார்க்கலாம். சிறப்பாக வருபவற்றை மறுமொழியில் இடவும்.

இவ்வாரத்திற்கான ஈற்றடி:- "அச்சமடம் நாணம் பயிற்பு!"

அகரம்.அமுதா