திங்கள், 15 செப்டம்பர், 2008

பாடம் 22 இயல்பு நவிற்சியணி!

ஓர் மங்கைக்கு சிறப்பு சேர்ப்பது அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு போன்ற குணங்கள் என்பர் ஆன்றோர். அதுவே அழகுமாகும். அவ்வழகை மென்மேலும் மெருகேற்றுவது அகத்தூய்மையும் புறத்தூய்மையும் ஆடை அணிகலன்களுமாகும். அதுபோல மரபுப்பாக்களுக்கு பெருமையும் சிறப்பும் சேர்ப்பன இலக்கண அமைப்பும் அழகிய வடிவமுமாகும். அவ்வழகை மென்மேலும் மெருகேற்ற நம்முன்னோர்கள் மரபுப்பா என்ற மங்கைக்கு அணிகளைப் பூட்டி அழகுபார்த்தனர். அவ்வழகைத்தான் அணியிலக்கணம் என்கிறோம்.

ஓர் பெண்ணிற்கு பொட்டு பூ போன்ற அணிகலன்கள் எத்துணை முகாமையோ அத்துணை முகாமையானது பாக்களுக்கு அணிஇலக்கணம். பெண் அணியும் அணிகளின் வகைகளைத் தெரிந்துகொண்டோமானால் அவற்றை எங்கெங்கு அணிய வேண்டும் என்பதும் தெரிந்து விடும். எடுத்துக்காட்டிற்கு மூக்கணி. இதை மூக்கணி என்று அறிவோமானால் அதை எங்கணிவது என்பதும் தெரிந்துவிடும். அதுபோல் பாக்களுள் கையாளப்படும் அணிவகைகளைத் தெரிந்துகொண்டோமானால் அவற்றைக் நம்கருத்தாழத்திற்கேற்ப தேவைக்கேற்ப கையாளத் தெரிந்தவர்களாகி விடுவோம்.

ஓர் கவிஞனை சிறந்த இலக்கியவாதி என இனம்காட்டுவது அவன் கருத்துகளைக் கையாளும் முறையே. அக்கருத்தைச் செறிவூட்டுவது அணியாகும். ஆக நாம் நம் கருத்துகளை அனைவரும் விரும்பும் விதமாக எடுத்துரைப்பதற்கு அணிவகைகளை ஆழமாகக் கற்பது முகாமையாகிறது.

அணிவகைகள் மொத்தம் முப்பத்தைந்து வகைப்படும். அவற்றுள்:- 1.இயல்பு நவிற்சியணி 2.உயர்வு நவிற்சியணி 3.உவமையணி 4.எடுத்துக்காட்டு உவமையணி 5.இல்பொருள் உவமையணி 6.உருவகஅணி 7.ஏகதேச உருவகஅணி 8.சொற்பொருட் பின்வரு நிலையணி 9.தற்குறிப் பேற்றணி 10.பிறிதுமொழிதலணி 11.வேற்றுமையணி 12.வேற்றுப்பொருள் வைப்பணி 13.வஞ்சப்புகழ்ச்சியணி 14.நிரல்நிறையணி 15.மடக்கணி 16.இரட்டுற மொழிதலணி. 17.எதிர்நிலை உவமையணி. 18.ஐய அணி. 19.ஒருபொருள் வேற்றுமையணி.

இயல்பு நவிற்சியணி:-நாம் கூறவரும் கருத்தை எவ்வகை உவமை ஏற்றியும் உரைக்காமல் மிகைப்படுத்தாமல் உள்ளது உள்ளவாறே உரைப்பது உயர்வு நவிற்சியணி யாகும்.

காட்டு:-

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல(து)
அன்றே மறப்பது நன்று!

ஒருவர் நமக்கு செய்த உதவிக்கு நாம் என்றும் நன்றியுடன் நன்றிமறவாதிருக்கிறோம். நன்றிதனை மறப்பது நன்றல்ல என்பதை உணர்த்த வந்த வள்ளுவர் எவ்வுவமையையும் பயன்படுத்தாது உள்ளதை உள்ளவாரே உரைத்திருக்கிறார். உரைக்கவந்த கருத்தை உள்ளது உள்ளவாரே உரைத்துள்ளமையால் இப்பாடல் இயல்பு நவிற்சியணியாகிறது.

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக!

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவ தென்ப திழுக்கு!

வையகம் பகலிழப்ப வானம் ஒளியிழப்ப
பொய்கையும் நீள்கழியும் புள்ளிழப்ப -பையவே
செவ்வாய் அன்றில் துணையிழப்பச் சென்றடைந்தான்
வெவ்வாய் விரிகதிரோன் வெற்பு!

கதிர்சாயுங்கால் பாரில் பகல்வேளை நீங்கி இரவு பிறப்பதும் வானம் ஒளியிழந்து இருள்சூழ்வதும் குளங்களிலும் மற்ற நீர்நிலைகளிலும் இரைதேடும் பறவைகள் அவற்றை நீங்கித்தன் கூட்டையடைவதும் இயல்புதானே. ஆக கதிர்மறையும் மாலைப்பொழுதை அப்படியே உள்ளது உள்ளவாறே படம்பிடித்தாற்போல் காட்டியுள்ளமையால் இப்பாடல் இயல்பு நவிற்சியணியாகும்.

கூறப்புகுங் கருத்தை எவற்றோடும் ஒப்புமைப் படுத்தாமல் இயல்பாக நவில்வது இயல்பு நவிற்சியாகும்.

இயல்பு நவிற்சியணியைப் பயன்படுத்தி இக்கிழமைக்கான ஈற்றடிக்கு வேண்பா எழுத அழைக்கிறேன்.

இக்கிழமைக்கான ஈற்றடி:- "தீயிற் கொடியதோ தீ!"

அகரம்.அமுதா

21 கருத்துகள்:

 1. மாலைகோர்க்க கூடையொடு சோலைதேடிச் சென்றநாட்சில்
  மாலைவேளை, கண்ணன் மறைந்து நல் - வேலையென்று
  வாயிற்முத் தங்கொடுத்தான். வாட்டுகின்ற என்விரகத்
  தீயிற் கொடியதோ தீ!

  யமுனைநதித் தீரத்தில் யெளவனப்போ தில்நான்
  அமுதெனக்கு ழல்நாதம் கேட்டேன் - குமுதந்தான்
  சாயுங்கா லக்குளிர்ச் சந்திர வெண்ணொளித்
  தீயிற் கொடியதோ தீ!

  பதிலளிநீக்கு
 2. மனத்தை மிதித்து மறுபடியும் சேராமல்
  குணத்தைக் கெடுக்கும், குதிக்கும் -சினத்தோடு
  வாயிற் புறப்படும் வார்த்தை நெருப்பென்னும்
  தீயிற் கொடியதோ தீ?

  பதிலளிநீக்கு
 3. அருமை அருமை வசந்த் அவர்களின் வெண்பாவைப் படித்தவுடன் எனக்கு விரகத் தீபற்றிக் கொண்டது. வசந்த் அவர்களின் இருவெண்பாக்களும் கண்ணனை நோக்கி ஆண்டாள் பாடியதுபோல் இருக்கிறது. அருமை. வாழ்த்துகள்.

  விடமாட்டேன் அவர்கள் புதுவரவாயினும் மரபிற்குப் பழையவர் போலிருக்கிறது. சினத்தால் எழும் தீச்சொற்களை மிக அழகாகத் தீயென உவமித்து அழகிய வெண்பா வார்த்தளித்துள்ளார். பொதுவாக உவமேயத்திற்கு உவமேயத்தையே உவமையாக உரைப்பது வழக்கமல்ல. ஆதலால், "வார்த்தை நெருப்பெனும் தீயிற் கொடியது" என்பதைக் காட்டிலும், "வார்த்தைக் கணையெனும் தீயிற் கொடியது" என்றிருந்தால் நன்றாயிருக்கும் என்பது என் கருத்து.

  "விடமாட்டேன்" அவர்களுக்கு ஓர் வேண்டுகோள். தங்கள் பெயரென்ன? அருள்கூர்ந்து அடுத்தமுறை வெண்பா வடிக்கும் போது பெயரையும் குறிப்பிடவும் . நன்றி வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. http://blogintamil.blogspot.com/2008/09/blog-post_17.html

  ஒரு எட்டு இதைப் பார்க்கவும்...

  பதிலளிநீக்கு
 5. தோன்றப் புசித்திடார் தாண்ட வழியிலார்
  ஈன்ற வலிதினங் கொள்வார் - சான்றென
  வாயில் அரிசி வயிற்றிற்தீ யிடும்பசித்
  தீயிற் கொடியதோ தீ?

  பதிலளிநீக்கு
 6. அவசரமாய்ப் பதிவிட்டமைக்கு வருந்துகின்றேன் நண்பரே!

  திருத்தி இதை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்

  தோன்றப் புசித்திடார் தாண்ட வழியிலார்
  ஈன்ற வலிதினங் கொண்டிறப்பார் - ஊன்நோக
  வாயில் அரிசி வயிற்றுத்தீ வைப்பசித்
  தீயிற் கொடியதோ தீ?

  பதிலளிநீக்கு
 7. வயிற்றுப் பசிபற்றி அழகிய வெண்பா வார்த்துள்ளீர்கள். வாழ்த்துகள் ரத்தினகிரியார் அவர்களே!

  பதிலளிநீக்கு
 8. வாட்டி வதைத்து மனத்தின்கண் வீற்றிருந்(து)
  ஆட்டிப் படைத்தே அறிவழிக்கும் -கூட்டினையே
  நோயிற் பெருமளவு நோகடிக்கும் வெஞ்சினத்
  தீயிற் கொடியதோ தீ!

  அகரம்.அமுதா

  பதிலளிநீக்கு
 9. உணவுண்ணத் தோன்றா உடுப்பணிய எண்ணா
  கனவிலுங் கூடலின்பங் கவ்வும் - தினமிரா
  பாயிற் படுத்திளைக்கப் பற்றும் பசலைநோய்த்
  தீயிற் கொடியதோ தீ!

  - இன்பகவி.(!!)

  "கலங்காதே வைதேகி! காற்றுமகன் கோபம்
  நிலம்முழுதும் ஏற்றும் நெருப்பால், இலங்கையின்
  கோஇல் எரிகிறது! கொள்அமைதி சீதைநீ
  தீஇல் கொடி!...அதோ தீ...!"

  பதிலளிநீக்கு
 10. உயர்த்திடக் கேட்டார் உழைத்தார்தம் கொத்து
  நயந்தார் எளியோரை நள்ளிற் கயவராய்
  ஏய்த்துப் பிழைத்தவர் எய்திட்ட வெண்மணித்
  தீயிற் கொடியதோ தீ!

  கொத்து - விளைபொருளாகப் பெறும் கூலி
  நள் - இரவு

  வெண்மணி கொடுமை குறித்த தோழர் நல்லகண்ணுவின் கட்டுரை இங்கே

  பதிலளிநீக்கு
 11. ////"தீஇல் கொடி!...அதோ தீ...!"////

  இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். செம்மொழி பிரிமொழியாய்ப் போட்டுக் கலக்கியிருக்கிறீர்கள். அருமை. அருமை. அருமை. வாழ்த்துகள் வசந்த் அவர்களே! இதோ போல் முன்போர்முறை இட்டஅடி நோகும் இவட்கு! ஈற்றடிக்கும் வேறுபாடுடைய வெண்பா எதிர்பார்த்தேன். யாரும் எழுதவில்லை. அந்த குறை இப்பொழுது இவ்வீற்றடியில் தீர்ந்தது. வாழ்த்துகள்.

  ===== ====== ====== ===== ====== ======

  முகவை அவர்களே! வெண்மணியில் நடந்த கொடிய எரிப்பை அழகிய வெண்பாவாக்கி அருளியுள்ளீர்கள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 12. அன்பு முகவை மைந்தன்...

  ஒரு சிறு சந்தேகம். தங்களது வெண்பாவில், 'நள் = இரவு' என்று சொல்லி இருக்கிறீர்கள். பின் எதற்காக நாம் 'நள்ளிரவு' என்ற பதத்தை உபயோகிக்கின்றோம்? தயவித்து தெளிவுபடுத்துக.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 13. அன்பு அகரம்.அமுதா...

  மிக்க நன்றிகள் தங்கள் வாழ்த்துகளுக்கு...!

  இன்பகவி தனது வெண்பாவைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்று என்னிடம் வருத்தப்படுகிறார். அவர் எழுதிய வெண்பாவைப் பற்றியும் ஒரு வார்த்தை 'நன்று' அல்லது 'நன்றன்று' என்று சொன்னால் தான் ஆச்சு என்று அடம் பிடிக்கிறார். ஒரே பிடிவாதம்...!

  நன்றி.

  பதிலளிநீக்கு
 14. எனக்கும் கொத்து நள் ஆகிய இரு சொற்களின் போருள்களிலும் ஐயம் ஏற்பட்டது வசந்த் அவர்களே! இப்பொழுது நான் பணியிடத்தில் இருப்பதால் வீடு சென்றவடன் அகரமுதலியைப் பார்த்துவிட்டு முகவையிடம் ஐயமெழுப்பலாம் என்றிருந்தேன். நீங்கள் முந்திக்கொண்டீர்கள். முகவை அவர்கள் என்ன பதில் தருக்கிறார் என்று பார்ப்போம்.

  ==== ==== ==== ==== ==== ==== ==== ====

  "இன்பகவி"யின் வேண்பாவைப் படித்துவிட்டு கற்குடத்தில் நீந்தும் தும்பியானேன். மயக்கம் தெளியவில்லை. வெண்பா நன்று நன்று. இருப்பினும் ஒரு ஐயம். உணவுண்ணத்தோன்றாது. சரி! உடுத்தத் தோன்றா. அதுவும் சரி! கனவிலும் கூடலின்பமே மேல்நிற்கும். அதுவும் சரி! "தினவிரா" என்று குறிப்பிட்டுள்ளாரே 'இன்பகவி' அதெப்படி? காமத்தினவு கரணியமாகத்தானே இத்தனைத் தொல்லைகளும்?

  பதிலளிநீக்கு
 15. அன்பு அகரம்.அமுதா...

  மிக்க நன்றிகள்.

  அ. அவ்வார்த்தை 'தினவிரா' இல்லைங்க. 'தினமிரா'. தினம் இரா. தினம் இரவு. இரவில் பாயில் படுக்கையில்... என்று வெண்பா செல்கிறது.

  -இன்பகவி.

  சில சந்தேகங்கள்.

  அ. பொதுவாக செய்யுள் எழுதுகையில் சந்திகள் சரியாக எழுதுவது முக்கியமா அல்லது படிப்பவர்களுக்கு எளிமையாக எழுதுதல் முக்கியமா? உதாரணமாக இன்பகவியின் வெண்பாவில், இரண்டாம் அடியான 'கனவிலுங் கூடலின்பங் கவ்வும்'என்ற அடியை 'கனவிலும் கூடலின்பம் கவ்வும்' என்றும் தளை தட்டாமல் எழுதலாம். எனில் எப்படி எழுத வேண்டும்? தெளிவுபடுத்தவும்.

  ஆ. தங்களது கருத்தில் 'கற்குடம்' என்று பயன்படுத்தி இருக்கிறீர்கள். இதனை 'கல் குடம்' என்றும் 'கள் குடம்' என்றும் கொள்ளலாம் அல்லவா? தாங்கள் இரண்டாம் பொருளில் தான் இயற்றியுள்ளீர்கள் என்பதை எப்படி உடனே குழப்பமின்றி தெரிந்து கொள்வது? சிலேடை எழுதப் பயன்படும் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 16. மன்னிக்கவும். கவனக்குறைவாகப் படித்திருக்கிறேன். 'கனவிலுங் கூடலின்பங் கவ்வும்- அக்காலத்தில் இப்படித்தான் எழுதுவார்கள். ஆனால் தற்காலத்தில் 'கனவிலும் கூடலின்பம் கவ்வும்' இப்படியே எழுதலாம் தவறில்லை. புணர்ச்சிசெய்து எழுதினாலும் அல்லது விரித்து எழுதினாலும் ஒற்றுகளைப் பொருத்தவரை தளைதட்டாது. குற்றியலுகரம் குற்றியலிகரம் போன்ற இடங்களில்தான் தளை தட்டும். வெண்பாவை எழுதும் போது புணர்ச்சிவிகுதிகளை நன்கு கவனித்து தளைதட்டாமல் எழுதிவிட்டு பின்பு இடுகையில் இடும்போது விரித்து எழுதினால் நலம். காட்டு:-

  நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல(து)
  அன்றே மறப்பது நன்று!

  புணருகின்ற இடம் படிப்பவருக்குத் தெரியவேண்டும் என்பதற்காக ( ) அடைப்புக் குறியிட்டுக் காட்டிவிட்டால் இலக்கணம் அறியாதார் கூட இவ்விடத்தில் இருசொற்களும் புணருகிறது எனப் புரிந்து கொள்வர்.

  கற்குடம் என நான் எழுதியது தவறு. கட்குடம் என்றே எழுதியிருக்க வேண்டும். அப்பொழுது தான் கள்குடம் என்று பொருள் படும். கற்குடம் என்று தவறாக எழுதியதால் அதன் பொருள் கல்குடமாகிவிட்டது. ண்ள் இவ்விரண்டு ஒற்றுகளும் வருஞ்சீரின் வல்லின எழுத்தோடு புணரும்போது ட் -ஆகத்திரியும் என்பது விதி. அதுபோல் ன்ல் இவையிரண்டும் ற்- ஆகத்திரியும்.

  பதிலளிநீக்கு
 17. ஐயம் தீர்ப்பது நானல்ல சென்னைப் பல்கலைக்கழக அகராதி.

  http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/

  நள் என்பது நடு என்ற பொருளில் பெரும்பான்மையாகவும், இரவு என்னும் பொருளில் சில இடங்களிலும் பயன்படுத்தப் பட்டுள்ளது.

  நத்தம் என்ற சொல்லும் உண்டு. கம்பனை எடுத்துக் காட்டியது அகராதி. பிடித்துக் கொண்டேன் :-)

  அங்கேயே தான் கொத்து என்ற சொல்லும் கிடைத்தது.

  தவறிருந்தால் அன்புகூர்ந்து சுட்டுவீராக.

  பதிலளிநீக்கு
 18. எதை எடுத்து எதை விடுவது எனத் தெரியவில்லை. அற்புதமான பாடல்களாக வடிக்கிறீர்கள். இலக்கண உரையாடல்களும் சிறப்பு.

  வசந்த வரவுகள் இன்பக்கவி யாவும்
  அசத்த அசருவதில் லை.

  அமுதா, வரும் பாடல்களைப் பார்த்தால் புலவர் மாநாடாக களை கட்டுகிறது. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 19. பண்டிதர் முன் சிறு புல்லென அறிந்தே என் பா'வை முன் வைக்கிறேன்.இவை என் முதலடி, உங்கள் சுவடு பற்றி நானும் முன்னேற வாழ்த்துங்கள்.

  நெஞ்சை இருளாக்கி நேர்மை யழித்துநல்லோர்
  அஞ்சும் பகைவளர்த்து நம்மையேகொல் வஞ்சகத்தின்
  வாயிற்சேர் பேரா சைபொறாமை கோபமெனுந்
  தீயிற் கொடியதோ தீ.

  பதிலளிநீக்கு
 20. மனிதனுக்கு இருக்கக் கூடாத குணங்களை மிக அழகாக வெண்பாவிரித்துச் சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். வாழ்த்துகள் அக்கா!

  பதிலளிநீக்கு
 21. இயல்பு நவிற்சியணி

  இருவிகற்ப நேரிசை வெண்பா

  பங்காளிச் சண்டையில் பாசமற்றுப் போனதால்
  எங்கெங்கு பார்த்தாலும் ஏளனமாய்ப் - பொங்கியே
  காயம் அளித்துமிகக் காய்ச்சிடும் ஆணவச்சொற்
  தீயிற் கொடியதோ தீ?

  வ.க.கன்னியப்பன்

  பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com