திங்கள், 22 செப்டம்பர், 2008

பாடம் 23 உயர்வு நவிற்சியணி!

கவிஞன் தான் கூறப்புகும் கருத்தை மிகைப்படுத்தி உயர்த்திக் கூறுவதே உயர்வு நவிற்சியணியாகும்.

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்!

பசியோடிருப்பவனுக்கு கூழ் இன்சுவை கூட்டுவதுதான். ஆயினும் அக்கூழுள் தன் சிறுகுழந்தையின் பிஞ்சுவிரல்கள் பட்டவுடன் அதன்சுவை அமிழ்தைவிடக் கூடிவிடுகிறது எனக் கூறுவது தான் கூறவந்த கருத்தின் முகாமையை விளக்குவதற்காக கவிஞன் மிகைப்படுத்துவதாகும். கூழின் சுவையை உள்ளது உள்ளபடி கூறாமல் அமிழ்தைவிட உயர்ந்த சுவைமிக்கது எனக் கூறுவது உயர்வு நவிற்சி அணியாகும்.


குழலினிதி யாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்!

இசைக்கு மயங்காதோர் யாருமிலர். ஆயினும் வள்ளுவர் ஈன்றசேயின் முகாமையையும் சிறப்பையும் எடுத்துரைக்க அதன் குரல் குழல் யாழைவிட இனியது என்கிறார்.

செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்ற லரிது!

நாம் ஒருவர்க்கு உதவிசெய்யாதபோதும் நமக்குத் தேவைப்படுங்கால் நாம் அழைக்காமல் தானாய்வந்து உதவி செய்பவரின் உதவி சிறந்ததுதான். அவ்வுதவியின் தன்மையை உயர்த்திக் கூற நினைத்த வள்ளுவர் வையகத்தை வழங்கினாலும் ஏன் வானகத்தையே வழங்கினாலும் அவ்வுதவிக்கு ஈடாகாது என்கிறார்.

கற்றதுகைம் மண்ணளவு கல்லா துலகளவென்(று)
உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் -மெத்த
வெறும்பந் தயங்கூற வேண்டாம் புலவீர்!
எறும்புந்தன் கையாலெண் சாண்!

கல்வியின் சிறப்பை யாவரும் உணரவேண்டும் என்பதற்காக இதுவரை நாம் கற்றுமுடித்திருப்பது கையளவு. கற்காமல் விட்டிருப்பது உலகளவு என உயர்த்திக் கூறப்பட்டிருப்பதால் இப்பாடல் உயர்வு நவிற்சியணியாகும். (எறும்பும் தன்கையால் எண்சான் என்ற உவமை எவ்வுயிரும் அதனதன் கைகளால் எண்சாண் உயரம்தான் என்பதை உணர்த்த எடுத்துக்காட்டப் பட்டிருப்பதால் இவ்வீற்றடி எடுத்துக்காட்டு உவமையணியாகும்.)

ஆக உள்ளது உள்ளபடி உரையாமல் மிகைப்படுத்திக் கூறுவனயாவும் உயர்வு நவிற்சியணியாகும்.

இக்கிழமைக்கான ஈற்றடி:- "சோம்புவதால் உய்வுண்டோ சொல்!"

அகரம்.அமுதா

12 கருத்துகள்:

  1. சும்மா இருந்திட்டால் சோறு வருமாநீ
    கம்மாக் கரையில் கடிதுழை - நம்மபூமி
    சொம்பு நிறையுமாறு சொர்ணரி தந்திடுவாள்
    சோம்புவதால் உய்வுண்டா சொல்?

    ஈரத்தில் ஓர்விறகாய்ச் சும்மாயி ருந்தவன்மேல்
    பாரமாய்ப் பாய்ந்தவள் கேட்டாள் - "விரகத்தில்
    காம்பும் கனியும்! கசங்காப் படுக்கையில்
    சோம்புவதால் உய்வுண்டா சொல்?

    - இன்பகவி.

    (ஹூம்! என்ன மாதிரி லைன் குடுத்தா, இது என்ன மாதிரி எழுதுது பாரேன்..! இதெல்லாம் தேறற கேஸா..? - மனசாட்சி.)

    இது ச்சும்மானாச்சுக்கு...

    ஆத்துதண்ணி அய்ரமீனு அத்தமவ அள்ளிவந்து
    சோத்துமேல சூடாச் செவச்செவன்னு - ஊத்திவிட்டா!
    மென்னுதின்னு கிட்டபோயி முத்தம்வைக் கப்பார்த்தா
    பொண்ணுதடே துள்ளுதுமீ னாட்டம்!

    (எனக்கே வெக்கமா இருக்குதுங்கோ!!!)

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் வசந்த்! ஒற்றுப்பிழைகளைக் கவனத்திற் கொள்ளவும்.

    ஆத்துத்தண்ணீர் -இடையில் ஒற்றுமிகும். ஒற்றுமிகுந்துவரின் நாலசைச் சீராகித் "தேமாந்தண்பூ" ஆகிவிடும். வெண்பாவில் நாலசைச்சீர் வரா. ஆதலால் ஆத்துநீர் என்றே எழுதலாம்.

    கிட்டப்பொயி -இவ்விடமும் ஒற்றுமிகும். ஒற்றுமிகின் இச்சீர் தேமாங்கனியாகிவிடும். வெண்பாவில் கனிச்சீர் வரா. ஆதாரால் கிட்டப்போய் என்றே எழுதலாம்.

    === === === === === === === === ===

    உங்கள் மூன்றாம் கவிதையின் இறுதிச் சீரெடுத்து முதலாக்கித் தொடங்குகிறேன்.

    மீனாட்டம் தேனுதட்டை மெல்ல சுவைபார்த்து
    கானாட்டம் பூத்தக் கதலியிடை -நானாட
    கன்னி பரிதவித்தாள் காமன் கணைதொடுத்தான்
    என்னதான் செய்வேன் இனி!

    === === === === === === === === ===

    நம்மபூமி,நிறையுமாறு,ஆத்துமேல -போன்ற சொற்கள் வெண்பாவின் ஒசையைக் கெடுப்பது போலுள்ளது. வெண்பாவில் கருவிளங்காய் கூவிளங்காய் போன்றவை நிச்சயம் வரலாம். கருவிளாங்காய் கூவிளாங்காய் போன்றவை வரலாம். ஆனால் ஒசையைக் கெடுத்துவிடும் என்பர். இதுபற்றி இங்கு விவாதிக்க வேண்டாம். அடுத்த இடுகையில் விரிவாக விளக்க மளிக்கிறேன்.

    === === === === === === === === ===

    முதல் வெண்பாவில் முன்றாம் நான்காம் அடிகளில் மோனை ஒற்றுமை இல்லை. சொம்பு சோம்பு சொ-குறில் சோ-நெடில் கவனிக்க.

    === === === === === === === === ===

    சொர்ணரி?

    இரண்டாம் மூன்றாம் வெண்பாக்கள் சுவைக்கத்தக்க அருமையாய் (சொகம்ம்ம்ம்ம்ம்மா) அமைந்திருக்கிறது. வாழ்த்துகள். நிறைய மாற்றம் தெரிகிறது. இப்பொழுது பெரிய அளவில் தேரிவருகிறீர்கள். சொற்கள் சரளமாக வந்து விழுகிறது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. சித்தெறும்பாய் ஊர்ந்து சிறுதொழிலும் செய்யாமல்
    மெத்தெனவே வீற்றிருந்தால் மேன்மையுண்டோ? -நித்தநித்தம்
    தேம்புவதால் இன்பம் திறன்டிடுமொ? வாழ்வினிலே
    சோம்புவதால் உய்வுண்டோ சொல்!

    அகரம்.அமுதா

    பதிலளிநீக்கு
  4. விளக்கங்கள் மற்றும் ஐயங்கள் ::

    அ. கிராமப் பாடலாக எழுத முயன்றாலும், இலக்கண பூர்வமாக எழுத்துத் தமிழில் தான் எழுத வேண்டுமா? "ஆத்துல தண்ணி தொறந்து விட்டாச்சு" என்று தானே சொல்கிறோம். "ஆத்துல நீர் தொறந்து விட்டாச்சு" என்று சொல்லுவதில்லை அல்லவா?

    எனவே தெளிவுபடுத்துங்கள். வெண்பாக்கள் எப்போதும் எழுத்துத் தமிழில் தான் எழுதப்பட வேண்டுமா? பேச்சுத் தமிழில் எழுதும் முறைகள் என்ன?

    ஆ. நன்றாக உள்ளது. கானாட்டம்னா என்ன..?
    //பூத்தக் கதலியிடை

    கதலி..? காதலியா..? காதலி எனில் தளை பிரச்னை பண்ணுகிறதே..?

    இ.
    /*கருவிளங்காய் கூவிளங்காய் போன்றவை நிச்சயம் வரலாம். கருவிளாங்காய் கூவிளாங்காய் போன்றவை வரலாம். ஆனால் ஒசையைக் கெடுத்துவிடும் என்பர்.
    */

    கருவிளங்காய்க்கும் கருவிளாங்காய்க்கும் வித்தியாசம் என்ன? அடுத்த பதிவுக்கு ஆர்வமாய்க் காத்திருக்கிறோம்.

    ஈ. எதுகை ஒற்றுமை எடுத்துக் கொள்ளக் கூடாதா..? ;-)

    உ. அப்பாடா! கடைசியா வாழ்த்திட்டீங்க. ரொம்ப நன்றி ஐயா...! ;-)) இன்பகவி சார்பிலும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  5. சொர்ணரி = சொர்ணம் போன்ற அரி. அரி என்றால் அரிசி என்றொரு பொருள் எப்போதோ படித்த ஞாபகம். (உயர்வு நவிற்சியணி!)

    தங்களது சித்தெறும்பு வெண்பாவும் சும்மா சுறுசுறுன்னு இருக்கு. டைப் அடிச்சதற்குப் பின் ஒரு தபா ஸ்பெல் செக் செய்யலாமே...!

    //திறன்டிடுமொ

    திறண்டிடுமொ

    பதிலளிநீக்கு
  6. /////அ. கிராமப் பாடலாக எழுத முயன்றாலும், இலக்கண பூர்வமாக எழுத்துத் தமிழில் தான் எழுத வேண்டுமா? "ஆத்துல தண்ணி தொறந்து விட்டாச்சு" என்று தானே சொல்கிறோம். "ஆத்துல நீர் தொறந்து விட்டாச்சு" என்று சொல்லுவதில்லை அல்லவா?/////

    எழுத்துத் தமிழில் தான் எழுதவேண்டும் என்பதில்லை. ஆனால் தளைதட்டாமல் இருக்க வேண்டும் அல்லவா? ஆத்துல தண்ணி தொரந்து விட்டாச்சி என்பது பேச்சு வழக்குத்தான். அதையே வெண்பாவில் தளைகளுக்குட்பட்டு எழுதும் போது கொஞ்சம் வளைந்து கொடுப்பதில் தப்பில்லை. விதிப்படி வெண்பாவில் இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை ஆகிய இருதளைகளே வரவேண்டுமாதலால் அதற்குட்பட்டு எழுதுவதே முறை. நமது 21-வது பாடத்தை நன்கு கவனிக்கவும். அப்பாடத்தில் வழங்கியுள்ள அனைத்து வெண்பாக்களும் பேச்சுவழக்குத் தமிழால் செய்யப்பட்டதுதான். இலக்கணத்திற்குட்பட்டிருப்பதைக் காண்க!

    ==== ==== ==== ==== ==== ====

    /////ஆ.கானாட்டம்னா என்ன..?
    //பூத்தக் கதலியிடை

    கதலி..? காதலியா..? காதலி எனில் தளை பிரச்னை பண்ணுகிறதே..?/////

    மீனாட்டம் என்றால் மீன்போன்ற என்று பொருள்கொள்கிறீர்கள் அல்லவா? அதுபோல் கானாட்டம் என்றால் கான்போன்ற என்று பொருள். கான் - காடு!

    கதலி என்றால் வாழை என்று பொருள். கதலி என்பது உவமை. அங்கே உவமேயமாகிய தொடை மறைந்துள்ளது. அவ்வரியின் போருள்- "காடுபோன்று பூத்துக் குளுங்கும் வாழை போன்ற தொடைகளுக்கிடையே" என்று பொருள்.

    ==== ==== ==== ==== ==== ====

    வினா இ-க்கானவிடை அடுத்த இடுகையில்....

    ==== ==== ==== ==== ==== ====

    /////ஈ. எதுகை ஒற்றுமை எடுத்துக் கொள்ளக் கூடாதா..?/////

    எதுகையை எடுத்துக்கொள்ளும் முன் அடிதோறும் முதல் எழுத்து குறிலுக்குக் குறிலும் நெடிலுக்கு நெடிலும் கட்டாயம். அவை பொருந்திவரின் பிறகே எதுகையைப் பார்ப்பர்.

    ==== ==== ==== ==== ==== ====

    வினா தொடுத்த வசந்திற்கும் இன்பகவிக்கும் ஒருங்கே என் வாழ்த்துகள்.

    ==== ==== ==== ==== ==== ====
    ==== ==== ==== ==== ==== ====

    புணர்ச்சி விதிகளை நன்கு கவனித்து எழுத வேண்டும். சொர்ணம் அரி -இவற்றைப் புணருகையில் "ம்" சைலண்டாகிவிடும். சொர்ணவரி எனப்புணரும். அல்லது சொர்ணம் அரி -சொர்ணமரி என எழுதினாலும் பிழையில்லை. புணர்ச்சி விதிப்படி சொர்ணவரி என்பதே சரி!

    மேலும் சொர்ணவரி - சொர்ணம் போன்ற அரி! இதில் போன்ற என்ற உவமை உருபு தொகை நிலை.

    ==== ==== ==== ==== ==== ====

    /////தங்களது சித்தெறும்பு வெண்பாவும் சும்மா சுறுசுறுன்னு இருக்கு. டைப் அடிச்சதற்குப் பின் ஒரு தபா ஸ்பெல் செக் செய்யலாமே...! /////

    நான் தெரிந்தே செய்யும் மாபெரும் பிழை எழுதி முடித்தவுடன் மீண்டும் படித்துத்திருத்தம் செய்யாமை. அதுவே பெரும் பகுதி எழுத்துப்பிழைக்குக் கரணியம். ( ஆமா! எவன்யா தமிழக் கண்டுபுடிச்சான். றர ணன ளல இப்டி ரெண்டுரெண்டு எழுத்தா இருந்தா எழுத்துப்பிழை வராம என்ன செய்யும்.)

    பதிலளிநீக்கு
  7. அன்பு அகரம்.அமுதா...

    மத்ததயெல்லாம் விடுங்க. உங்க வெண்பாக்கு வருவோம்.

    /*மீனாட்டம் தேனுதட்டை மெல்ல சுவைபார்த்து
    கானாட்டம் பூத்தக் கதலியிடை -நானாட
    கன்னி பரிதவித்தாள் காமன் கணைதொடுத்தான்
    என்னதான் செய்வேன் இனி!
    */

    ஏங்க, நானாங்க இன்பக்கவி..? நீங்க பேரின்பக்கவியா இருப்பீங்க போலிருக்கே!! கதலியோட அர்த்தம் புரிஞ்சு படிச்சப்புறம் எனக்கு ஒரே வெக்க வெக்கமா ஆகிடுச்சுங்க..!

    பதிலளிநீக்கு
  8. சோம்புவதால் உய்வுண்டா சொல்? என்னும் ஈற்றடிக்கு -

    பாயதில் புன்னகைப் பாங்குடன் பள்ளிகொள்
    மாயவனாய்த் தூங்கி மகிழ்ந்திட்டுச் - சேயவன்நீ
    தேம்புவதால் தொய்வுண்டாம்; மெய்முயற்சி கொள்ளாது
    சோம்புவதால் உய்வுண்டா சொல்?

    பாயதில் தானும் படுத்துக் கொண்டு தன்னை மஹாவிஷ்ணுவாய் நினைப்பது உயர்வு நவிற்சி அணியில் சேருமா?! :)

    பதிலளிநீக்கு
  9. வருக! இரத்தின கிரியாரே! வெண்பா அருமை. அருமை.

    இலக்கண விதிப்படி நாம் மற்றவரை அளவிற்கதிகமாக உயர்த்தி வாழ்த்து பாடுவதையே உயர்வு நவிற்சி என்பர். தன்னைத்தானே உயர்த்திக்கருதுவது உயர்வு நவிற்சியாகுமா என்பது தெரியவில்லை. ஆயினும் தங்களின் இவ்வெண்பா இயல்பு நவிற்சியணியில் அடுங்கும் எனக்கருதுகிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் அன்பு வசந்த் அவர்களே! எது நல்லா இருக்கு?????

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com