வியாழன், 26 மார்ச், 2009

முடியடி!

வெண்பாக்களைப் பலவாராக வகைபிரித்து எழுதித் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்துபவர்கள் உண்டு. வெண்பாவிற்குள் புதிய புதிய நுணுக்கங்களைக் கையாள போந்தாரும் உண்டு. அந்த வகையில் இப்பாடத்தில் முடியடி பற்றிப் பார்ப்போம்.

அதென்ன முடியடி?

தலையில் சூடும் மகுடத்தை முடி என்கிறோம் அல்லவா. அதுபோல பாதத்தை அடி என்கிறோம் அல்லவா. மேலாக அமைந்திருப்பது முடி. இறுதியாக அமைந்திருப்பது அடி அதாவது பாதம்.

இங்கே, வெண்பாவின் தலைச்சொல்லாகிய முடியும் ஈற்றுச் சீராகிய அடியும் ஒன்றி நிற்பது முடியடி எனப்படும்.


அதாவது வெண்பாவின் துவக்கச் சொல்லைகிய முதற்சொல்லையே இறுதிச் சொல்லாகவும் (ஈற்றுச் சீராக)கொண்டு முடிப்பதற்குப் பெயர் முடிஅடி என்பர்.

காட்டு:-

பிடியாய் முனையைப் பிடிப்பரோ? வாளின்
பிடியாந் தமிழைப் பிடி!
அகரம்.அமுதா

இக்குறள்வெண்பாவை உற்று நோக்குக. குறளின் துவக்க அசையாகிய "பிடி" எனும் அசையே ஈற்றடியன் ஈற்றுச்சீராகப் பெற்றமையால் இக்குறள் "முடிஅடி" வகையாகும்.

மலரென்னும் மேனி வயலைநான் மேய
மலர்ந்திட்டாள் வாடா மலர்!


முடியும்; முயன்றால் முடியும்; முயன்றே
முடியோ டடியை முடி!


இக்கிழமைக்கான ஈற்றடி:- கூட்டணி யாருடனோ கூறு!


அகரம் அமுதா

10 கருத்துகள்:

 1. கழகங்கள் செய்யும் கலகத்தால் இங்கும்
  குழப்பங்கள் வேண்டாம் தமிழ்க்கொஞ்சும் பாவலர்நாம்
  நாட்டர சைமறந்து பாட்டரசு செய்வோம்உன்
  கூட்டணி யாருடன் கூறு

  -இராஜகுரு

  பதிலளிநீக்கு
 2. கூட்டணி யாருடனோ கூறென் றியம்பினீர்
  ஏற்றென் கருத்தை இயம்புகிறேன் -பாட்டரசன்
  மேலாணை ஈழப் புலிகளுடனே யன்றிக்
  கூட்டணி யாருடனோ கூறு?

  பதிலளிநீக்கு
 3. கூறுவோர் கூறிடவும் மாறுவோர் மாறிடவும்
  சேருவோர் யாரெனக் கேட்டேனே - பெருமைமிகு
  நாட்டினிலே நாற்பது கட்சிகள் !! உந்தன்
  கூட்டணி யாருடனோ கூறு!

  முடியடி முயற்சி எப்படி? :)))

  பதிலளிநீக்கு
 4. இவ்வெண்பாவை மிக அருமையாகப் படைத்துள்ளீர்கள். வாழ்த்துகள். ஒரே ஒரு இடத்தில் மட்டும் தளைதட்டுகிறது மாற்றினால் நலம்.

  கூறுவோர் கூறிடவும் மாறுவோர் மாறிடவும்
  சேருவோர் யாரெனக் கேட்டேன் பெருமைமிகு
  நாட்டினிலே நாற்பது கட்சிகள் !! உன்றன்
  கூட்டணி யாருடனோ கூறு!

  பதிலளிநீக்கு
 5. திருத்தத்திற்கு நன்றி அமுதா.... உங்கள் ஊக்கமே எழுதத் தூண்டுகிறது. பணிச்சுமை காரணமாக முயற்சியைத் தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்தேன் :(

  பதிலளிநீக்கு
 6. கூறு விலைசெய்வார் கொள்கையெலாம் ஒத்ததே
  சேறு தலைபெய்யும் செய்கையும் - மாறுதலைக்
  கேட்டவரும் பின்னாளில் ஏமாற்ற துச்சருள்
  கூட்டணி யாருடனோ கூறு.

  பதிலளிநீக்கு
 7. முயற்சியைக் கைவிட்டுவிடாதீர்கள். வாழ்த்துகள். தாங்கள் சிங்கையில் தானே இருக்கிறீர்கள்!? அடுத்த பதிவர் சந்திப்பிற்கு வரவும். சந்திப்போம்.

  பதிலளிநீக்கு
 8. ////கூறு விலைசெய்வார் கொள்கையெலாம் ஒத்ததே
  சேறு தலைபெய்யும் செய்கையும் - மாறுதலைக்
  கேட்டவரும் பின்னாளில் ஏமாற்ற துச்சருள்
  கூட்டணி யாருடனோ கூறு.////

  பிளந்து கட்டியிருக்கிறீர்கள் நண்பரே. தாங்கள் யாரோ? அறிய விவரங்களைத் தாருங்களேன்.

  பதிலளிநீக்கு
 9. சின்னத்தி ரைசினிமா சீரழிக்கும் சூது
  கணமழிக்கும் தீப்பழக்கம் போதை புகையிவை
  தன்னில் மனம்துலக்கும் புத்தகத்தோ டன்றிகற்றோர்
  கூட்டனி யாருடனோ கூறு.

  பதிலளிநீக்கு
 10. ஆஃகா! அருமை. அருமை.

  ////சின்னத்தி ரைசினிமா சீரழிக்கும் சூது
  கணமழிக்கும் தீப்பழக்கம் போதை புகையிவை
  தன்னில் மனம்துலக்கும் புத்தகத்தோ டன்றிகற்றோர்
  கூட்டனி யாருடனோ கூறு.///

  தங்கள் வெண்பாவைக் குறை கூறுவதற்கில்லை. ஆயினும் சினிமா என்ற ஆங்கிலச்சொல் வந்திருப்பதுதான் மனதிற்கு ஒப்பவில்லை. ஆகையால் தங்களது பாடலைத் தங்களைக் கேட்காமலேயே மாற்றியமைத்தமைக்கு மன்னித்து அருளவேண்டுமாறு வேண்டுகிறேன்.

  சின்னத் திரையும் பெருந்திரையும் சூதுபுகை
  உன்னுமது தீப்பழக்கம் ஓம்பாது -மன்னுமுயர்
  ஏட்டால் மனங்துலங்கப் பெற்றவர்க்(கு) ஏடன்றிக்
  கூட்டணி யாருடனோ கூறு!

  இப்படி மாற்றியமைத்தால் தாங்கள் கூறவந்த பொருளுஞ் சிதையாது நேரிசை வெண்பாவாகவும் நற்றமியாலும் அமையப் பெறும் என்பதாலேயே மாற்றியமைத்தேன். குறையிருப்பின்தயங்காது சுட்டவும்.

  பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com