புதன், 16 செப்டம்பர், 2009

இணைக்குறள் ஆசிரியப்பா

இணைக்குறள் ஆசிரியப்பாவில் ஆசிரியப்பாவின் பொது இலக்கணங்கள் அமைந்திருக்கும்.

அவற்றுடன், முதல் அடியும் ஈற்றடியும் நாற்சீரடிகளாய் இருக்க, இடையில் உள்ள அடிகளில் பல இருசீரடிகளாகவும் முச்சீரடிகளாகவும் வரும்.
(இயல்பாக, நாற்சீரடிகளும் இடம்பெறும்)

நெற்களம் என்றா நினைத்துப் பார்க்கிறீர்
நெற்களம் அன்றிது நெடுஞ்சாலை.
எங்கள் ஊரார் இங்கேதான்
வைக்கோல் உலர்த்துவார்;
அறுத்த கதிர்களைப்
பரப்பிப் போடுவார்;
ஓடும் ஊர்திகள் உதிர்த்துப் போடும்;
ஓடிப்போய் மீண்டும் உதறிப் போடுவார்.
துள்ளும் துகள்சில
விழுவதும் எழுவதும் என்றும்
வாடிக்கை என்பதால் வருந்துவ திலரே!
- புதுவை அரங்க. நடராசனார்.

புதுப்பா போல் உள்ளதா?

அமைதி சான்ற அறிஞரும் அருமையான பாவலருமாகிய பேராசிரியர்
ம.இலெ.தங்கப்பா அவர்கள் இவ்வாறு கூறுகிறார்:

“தமிழ் யாப்பு வடிவங்களுக்குள் நின்று விடுதலையாகக் கருத்துரைக்க முடியவில்லை என்று கூறுபவர்கட்கு, அப்படி விடுதலையோடு கருத்து உணர்த்த இணைக்குறள் ஆசிரியப்பா இடம் கொடுக்க வல்லது.”

இன்னொரு இணைக்குறள் ஆசிரியப்பா:

இவர்தான் இவ்வலை உரிமையர் சிறப்புறப்
பாடல் பயிற்றுநர்
ஈடாரு மில்லா இனியர்
பண்புறை பாவலர்
தண்ணிய உரையினர்
சிங்கப் பூரில் தங்கி உழைக்குநர்
எங்குசென் றாலும் இன்றமிழ் ஏத்துநர்
ஆமாம்! இவரே அகரம் அமுதா!
தாமறி தமிழைத் தருநர் பிறர்க்கே! – த.ந.

இப்போது எளிதாக இணைக்குறள் ஆசிரியப்பா எழுதலாமே!22 கருத்துகள்:

 1. ஐயா, தங்களின் எடுத்துக்காட்டுப் பாடல் மிகச் சிறப்பு. உண்மை, உண்மை. இணைக்குறள் மிக இனிமையாகவே உள்ளது. முயன்று பாவுடன் வருகிறேன்.

  பதிலளிநீக்கு
 2. நன்றி.

  உங்கள் பாடலை எதிர்பார்க்கின்றோம்.

  பதிலளிநீக்கு
 3. 'நிலைமண்டில ஆசிரியப்பா' இடுகையில் வசந்த குமார் அவர்கள் கூறியது:
  /படிப்பவர்களோடு சேர்ந்து நானும் இவற்றை எண்ணி வியக்கின்றேன். ஒரு நல்ல படைப்பு நம்மைப் பயன்படுத்தி, தன்னை எழுதிக் கொள்கின்றது என்ற என் அபிப்ராயத்தை இப்பாடலும் உறுதிப்படுத்துகின்றது/.

  அய்யா: நானும் பல முறை இப்படி எண்ணியதுண்டு. பல கலைத்துறைகளில் உள்ள ஆக்குனர்கள் பலருக்கும் இப்படித்தான் தோன்றுமோ என்று கூட எண்ணியதுண்டு!
  இதோ, இதே கருத்தை வைத்து தமிழநம்பி அய்யா அவர்களின் புதிய பாடமான இணைக்குறள் ஆசிரியப்பாவில் ஒரு முயற்சி:

  பெறர்க்கறிய பேற்றைப் பெற்றாலும் பெரியோர்
  சிறப்பெதுவும் கொள்ளார் சிறிதேனும் ; தம்மை
  சிறாரென் றழைப்பார் ; சுடர்விடுவார் ;
  புறாவினைப் போல்மனம் வெளுத்திருப்பார் ;
  சிறுகதை யென்றோர் கருத்தரித்து
  அருங்கவி மகவினைப் பெற்றெடுப்பார் ;
  'கருவின் உரிமை கருத்தனுக்கே ,
  கருவியே நானெ'னக் கருதிடுவார்
  இலையுதிர் காலத்தில் இசைபடித் தேபல
  கலையுதிர்ப் பாரெனில் காற்றினிலே
  வசந்தத்தின் வாசமும் வீசிடு மேநம்
  வசந்தனில் வாராத மனத்தினையும்
  கவர்ந்திழுத் தேகட்டிப் பிணைத்திடுமே
  அவர்புகழ் நாம்பாட அவரோதம்
  படைப்பை 'பிறர்போல் படித்தேன்
  கிடைத்தது பரிமாணம் பலதெ'ன் றுரைத்தாரே !

  பதிலளிநீக்கு
 4. இன்றுளது நாளை இல்லா தாகும்
  வண்டிச் சக்கரமாய்
  வாழ்கைச் சுழலும்
  வீழ்ச்சியும் எழுச்சியும் என்றும் தொடரும்
  மாறும் யாவும்
  மனிதர் வாழ்வினில்
  வறியர் செல்வர், செல்வர்
  வறியர் ஆவர்,
  அறிவாய் செல்வம் நிற்காது நிலைத்தே.

  பதிலளிநீக்கு
 5. **********************
  பெறற்கரிய பேற்றைப் பெற்றாலும் பெரியோர்
  சிறப்பெதுவும் கொள்ளார் சிறிதேனும் ; தம்மை
  சிறாரென் றழைப்பார் ; சுடர்விடுவார் ;
  புறாவினைப் போல்மனம் வெளுத்திருப்பார் ;
  சிறுகதை யென்றோர் கருத்தரித்து
  அருங்கவி மகவினைப் பெற்றெடுப்பார் ;
  'கருவின் உரிமை கருத்தனுக்கே ,
  கருவியே நானெ'னக் கருதிடுவார்
  இலையுதிர் காலத்தில் இசைபடித் தேபல
  கலையுதிர்ப் பாரெனில் காற்றினிலே
  வசந்தத்தின் வாசமும் வீசிடு மேநம்
  வசந்தனில் வாராத மனத்தினையும்
  கவர்ந்திழுத் தேகட்டிப் பிணைத்திடுமே
  அவர்புகழ் நாம்பாட அவரோதம்
  படைப்பைப் 'பிறர்போல் படித்தேன்
  கிடைத்தது பரிமாணம் பலதெ'ன் றுரைத்தாரே !
  ******************************
  அவனடிமை ஐயா,
  முதன்முதலாக நீங்கள் எழுதிய இணைக்குறள் ஆசிரியப்பா சிறப்பாக உள்ளது.
  முதல் அடியில் சிறு திருத்தம் செய்துள்ளதைப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
  நன்றி ஐயா.
  இன்னொன்று...
  இப் பாவில், அளவடிகள் தவிர சிந்தடியாக மட்டுமே சில அடிகள் உள்ளன. எனவே நீங்கள் குறளடியும் சிந்தடியும் கலந்து வருமாறு இன்னொரு இணைக்குறள் ஆசிரியம் எழுதுமாறு அன்பு உரிமையோடு கேட்டுக் கொள்கின்றேன்.

  ஆனால், குறளடியும் சிந்தடியும் கலந்து வந்தால்தான் இணைக்குறள் ஆசிரியப்பா எனபதில்லை.

  முதலடிக்கும் ஈற்றடிக்கும் இடையில் சிந்தடி மட்டுமோ அல்லது குறளடி மட்டுமோ வந்தாலும், குறளடி சிந்தடி இரண்டும் கலந்து வந்தாலும் இணைக்குறள் ஆசிரியப்பா என்பதில் ஐயமில்லை.
  மீண்டும் நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 6. பாரதி தாசன்:

  புரட்சி புலவன் பாரதி தாசன்
  பரந்த உலகினில்
  பொருட்களை எல்லாம்
  பொதுவாய் வைத்திடும்
  புதுமைச் சொன்னான்..
  உழைப்பின் பலனெலாம்
  உழைப்பவர் தமக்கே உரிமையாம் என்பதை
  உரக்கச் சொன்னான்...
  நன்றாம் அவன்நமை நாடச் சொல்லும்
  ஒன்றாய் உளஞ்சேர்
  காதல் திருமணம்,
  கைம்பெண் மறுமணம்,
  மண்ணில் மாந்த ரெல்லாம்
  ஒன்றெனும் சமத்துவம், சகோத ரத்துவம்..
  இன்னும் நம்மிடை இருக்கும்
  மூடப் பழக்கம்
  மிதிக்கச் சொன்னான்,
  பகுத்தறி வாலதைப் போக்கச் சொன்னான்..
  பெண்ணைச் சமமாய் மதித்திட
  கண்ணாய்த் தமிழைக் காத்திட
  கருத்தில் நேர்மை
  கருணை கண்ணியம் கலந்தே தந்தான்
  விருந்தாய் அருந்தமிழ்..
  அறிந்தே நாமதைச்
  சுவைப்போம், மகிழ்வோம், நற்றமிழ்
  சுவைப்போல் அவன்புகழ் வாழ்க! வளர்கவே!

  பதிலளிநீக்கு
 7. //நீங்கள் குறளடியும் சிந்தடியும் கலந்து வருமாறு இன்னொரு இணைக்குறள் ஆசிரியம் எழுதுமாறு அன்பு உரிமையோடு கேட்டுக் கொள்கின்றேன்.//

  தமிழநம்பி அய்யா: தங்களின் பணிவு கலந்த பாங்கும், அன்பும், அமுதாவின் அடக்கமும், ஆர்வமும் மென்மேலும் கவிஞர்களை உருவாக்கட்டும் என்று சொல்லி அன்னையர் விழாவையொட்டி ஒரு இணைக்குறள் ஆசிரியப்பா இதோ:

  துப்புரவாய் தமோகுணத்* தீதகற்றும் துர்கா
  நப்புணரும் நன்மைகள் நலந்தரும்
  இப்பிறப்பிற்(கு) இலக்குமி
  துப்பறிய தூய்மனத்தில்
  பற்றறுக்கும் பிரமன் மனைவி
  நற்றாள் நண்ணி
  ஈரே ழிரவில் இவரை
  வேறேதும் எண்ணாமல் வணங்க
  ஒப்பிலா ஓர்சக்தி ஓங்கும்
  முப்பெரும் தேவியர் முழுமுதற் பொருளே.


  'நப்புணரும்' - நம்மைச் சேரும்

  'துப்பறிய தூய்மனத்தில் பற்றறுக்கும்' என்பதை
  "'இந்த வாழ்க்கை என்பது என்ன?' என்றும், 'நாம் யார்?' என்றும், 'எதற்கு வந்தோம்?' என்றும் அடிப்படை கேள்விகளைக் கேட்க, 'மாறுபாடுகள் நிறைந்த இவ்வுடல்வுயிருலகத்தில் மாறாத பொருள் என்ன?'" என்று தூயமனத்தின் உள்ளில் துப்புத் துலக்க வேண்டி (உலகவிடயங்களில் உள்ள) பற்றை அறுக்கும்"
  என்று கொள்ளலாம்.

  *'தமோகுணத்' திற்கு தமிழ்ச்சொல் தெரியவில்லை

  பதிலளிநீக்கு
 8. அன்பு அவனடிமை...

  என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நன்றிகள். இப்படியொரு வாழ்த்தைப் பெற்றுத் தந்த தமிழுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 9. //முதல் அடியில் சிறு திருத்தம் செய்துள்ளதைப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்//

  தமிழநம்பி அய்யா. திருத்தத்திற்கு நன்றி. முதற்சீரில் /ர்/ஐ 'ற்'ஆகத் திருத்தியும், /'க்'/ ஒற்றை நீக்கியும் சரி செய்துள்ளீர்கள். மிக்க நன்றி.

  ஈற்றுச் சீர் ('உரைத்தாரே' என்று) காய்ச்சீராக கொடுத்ததால் நடை தொய்வடைந்ததோ என்று ஒரு எண்ணம்.

  அதனால் ஈற்றுச்சீரையும், ஈற்றடிக்கு முன் உள்ள சில அடிகளையும் சிறிது மாற்றி, பொருள் போகாமல் அளிக்க முயன்றுள்ளேன். அப்படியே குறளடி ஒன்றும் சேர்ந்துள்ளது.

  செய்யுளை வசந்த் அவர்களின் இடுகைக்கு மறுமொழியாக இட்டாலும், பொதுவான பொருளாகவும் இருக்கவேண்டும் என்றும் விரும்பினேன். அப்படியே வந்துள்ளது என்றும் நினைக்கிறேன். சரியா ?

  தங்கள் கருத்தை தயை செய்து சொல்லுங்கள். நன்றி.

  வசந்தகுமார் அவர்களே. தங்களின் மேலான கருத்தையும் இடுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

  பெறற்கறிய பேற்றைப் பெற்றாலும் பெரியோர்
  சிறப்பெதுவும் கொள்ளார் சிறிதேனும் ; தம்மை
  சிறாரென் றழைப்பார் ; சுடர்விடுவார் ;
  புறாவினைப் போல்மனம் வெளுத்திருப்பார் ;
  சிறுகதை யென்றோர் கருத்தரித்து
  அருங்கவி மகவினைப் பெற்றெடுப்பார் ;
  'கருவின் உரிமை கருத்தனுக்கே ,
  கருவியே நானெ'னக் கருதிடுவார்
  இலையுதிர் காலத்தில் இசைபடித் தேபல
  கலையுதிர்ப் பாரெனில் காற்றினிலே
  வசந்தத்தின் வாசமும் வீசிடு மேநம்
  வசந்தனில் வாராத மனத்தினையும்
  கவர்ந்திழுத் தேகட்டிப் பிணைத்திடுமே
  அவர்புகழ் நாம்பாட அவரோதன்
  படைப்பைப் 'பிறர்போல் பார்த்துப்
  படித்திட்டேன் நானும்,
  புரிந்தது புதிதாய், பரிமாணங் கள்பல
  அறிந்தேன், அவன்செயல் தெரிந்ததெ'ன் றாரே!

  பதிலளிநீக்கு
 10. அன்பு தமிழநம்பி ஆசிரியரே:
  உங்கள் (இவர்தான் இவ்வலை உரிமையர்) காட்டுச் செய்யுளையும், புதுவையாரின் (நெற்களம் என்றா நினைத்துப் பார்க்கிறீர்) காட்டுச் செய்யுளையும், மறுமொழிகளில் (நான் உள்பட) அன்பர்கள் இட்டுள்ள பாக்களையும் படிக்கும்போது இணைக்குறள் ஆசிரியப்பாவில் ஒரு ஐயம்:
  குறளடி சிந்தடிகளின் இரண்டு/மூன்று சீர்களும் தாமாகவே ஒரு பொருளைத் தருவது போல அமைக்கவேண்டுமா ?
  மேலே கூறியுள்ள உங்கள் செய்யுளில் உள்ள ஒவ்வொரு அடியும் (காட்டுக்கு:
  /தண்ணிய உரையினர்
  சிங்கப் பூரில் தங்கி உழைக்குநர்/) முழுப்பொருளைத் தந்தாலும், புதுவையார் பாவில் (காட்டு:
  /அறுத்த கதிர்களைப்
  பரப்பிப் போடுவார்;/) அப்படி இல்லையே, இதற்கு ஏதாவது விதிகள் உண்டா ?

  பதிலளிநீக்கு
 11. **********************
  இன்றுளது நாளை இல்லா தாகும்
  வண்டிச் சக்கரமாய்
  வாழ்கைச் சுழலும்
  வீழ்ச்சியும் எழுச்சியும் என்றும் தொடரும்
  மாறும் யாவும்
  மாந்தர் வாழ்வினில்!
  வறியர் செல்வர், செல்வர்
  வறியர் ஆவர்,
  அறிவாய் செல்வம் நிற்காது நிலைத்தே.
  **************************
  நல்ல பாடல்.
  பாராட்டுக்குரியது!

  ************
  பாரதி தாசன்:

  புரட்சிப் புலவன் பாரதி தாசன்
  பரந்த உலகினில்
  பொருட்களை எல்லாம்
  பொதுவாய் வைத்திடும்
  புதுமை சொன்னான்..
  உழைப்பின் பலனெலாம்
  உழைப்பவர் தமக்கே உரிமையாம் என்பதை
  உரக்கச் சொன்னான்...
  நன்றாம் அவன்நமை நாடச் சொல்லும்
  ஒன்றாய் உளஞ்சேர்
  காதல் திருமணம்,
  கைம்பெண் மறுமணம்,
  மண்ணில் மாந்த ரெல்லாம்
  ஒன்றெனும் சமத்துவம், சகோத ரத்துவம்..
  இன்னும் நம்மிடை இருக்கும்
  மூடப் பழக்கம்
  மிதிக்கச் சொன்னான்,
  பகுத்தறி வாலதைப் போக்கச் சொன்னான்..
  பெண்ணைச் சமமாய் மதித்திட
  கண்ணாய்த் தமிழைக் காத்திட
  கருத்தில் நேர்மை
  கருணை கண்ணியம் கலந்தே தந்தான்
  விருந்தாய் அருந்தமிழ்..
  அறிந்தே நாமதைச்
  சுவைப்போம், மகிழ்வோம், நற்றமிழ்
  சுவைப்போல் அவன்புகழ் வாழ்க! வளர்கவே!
  *********************
  பாவேந்தர்க்குச் சிறப்பான பாராட்டு!

  பதிலளிநீக்கு
 12. ******************
  துப்புரவாய் தமோகுணத்* தீதகற்றும் துர்கா
  நப்புணரும் நன்மைகள் நலந்தரும்
  இப்பிறப்பிற்(கு) இலக்குமி
  துப்பறிய தூய்மனத்தில்
  பற்றறுக்கும் பிரமன் மனைவி
  நற்றாள் நண்ணி
  ஈரே ழிரவில் இவரை
  வேறேதும் எண்ணாமல் வணங்க
  ஒப்பிலா ஓர்சக்தி ஓங்கும்
  முப்பெரும் தேவியர் முழுமுதற் பொருளே.
  ********************

  தமோகுணம் = முக்குணக் காரணி (காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக் குணங்களுக்கும் காரணமாயிருப்பது) - என்று அயற்சொல் அகராதி கூறுகின்றது.

  அவனடிமை ஐயா,
  சொன்னவாறு குறளடி சிந்தடியோடு மெய்யறிவியல் பாடல் எழுதியுள்ளீர்கள்!

  நல்ல இணைக்குறள் ஆசிரியப்பா.

  கொஞ்சம் எளிமைப்படுத்தின் எல்லார்க்கும் எளிதில் விளங்கும்!
  நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 13. தமிழநம்பி அய்யா: உங்கள் வாழ்த்துக்கு நன்றிகள். என்னுடைய இரண்டு மறுமொழிகள் இன்னும் இடவில்லையே. ஏதேனும் தடையுள்ளதா ? ஒன்று வசந்த் வாழ்த்துப் பாடலை சரி செய்து அனுப்பியது, இன்னொன்று இணைக்குறள் ஆசிரியத்தில் ஐயம்.

  /கொஞ்சம் எளிமைப்படுத்தின் எல்லார்க்கும் எளிதில் விளங்கும்!/ - எழுதிவிட்டால் போகிறது... :-)

  பதிலளிநீக்கு
 14. இதோ, அன்றாட வாழ்க்கைப் புலம்பலின் ஒரு பகுதி:

  சோலை

  காலையின் கனவு கலையும் குழம்பி*
  நாளின் கனவைத் துவக்கும்
  வாளை வார்த்தையில் வீசும் துணைவி
  காளியின் 'கனிவான' கைதட்டி யெழுப்ப
  வாளியில் வென்னீர் வெதுவாய் வருடும்
  தோலை உறித்திடும் வெய்யில்
  சாலையில் சுடுஞ்சொல்+
  ஆலை, அலுவலகம் சென்று
  வேலை செய்ய வயிற்றுச் சோறு
  நாளை நிலைத்திடு மோயிது? நடுக்கம்!
  வேலன் விரித்த வலையே வாழ்க்கை
  சோலையென் றெண்ணி சிக்கிக் கொண்டாரே !


  * 'குழம்பி'யை குடிக்கும் 'காப்பி' யாகவும், 'குழப்பமடைந்து' என்றும் கொள்ளலாம்
  + சாலையில் சுடுஞ்சொல் - போக்குவரத்து நெரிசலலில், அவசர கதியில் செல்கையில் ஒருவருக்கொருவர் பரிபாமாறிக்கொள்ளும் (road rage எனப்படும்) 'அன்பு வார்த்தைகளை'த்தான் சொல்கிறேன்

  பதிலளிநீக்கு
 15. சிலிர்
  ---------

  எளிதாய் எழுந்திடும் எண்ணங்கள் என்றும்
  களிப்பாய் கருவாக,
  வெளிவரும் வார்த்தைத் துளிகளில்
  குளித்துச் சிலிர்ப்பார் குருவியைப் போலே!

  பதிலளிநீக்கு
 16. ஒரு நிலைமண்டில ஆசிரியம்:

  தந்தை
  ------------

  கொல்லாதே என்றான் கொல்கிறோம் - பொய்யினைச்
  சொல்லாதே என்றான் சொல்கிறோம் - பிறர்க்கு
  உதவிடு என்றான் உதைக்கிறோம் - உணர்வை
  மதித்திடு என்றான் மிதிக்கிறோம் - பிறகேன்
  சுதந்திரம் என்றால் சுடுவோம் அவனையே !

  பதிலளிநீக்கு
 17. /கொஞ்சம் எளிமைப்படுத்தின் எல்லார்க்கும் எளிதில் விளங்கும்!/

  நவராத்திரி அன்னையின் விழா. ஒரு அன்னையே பல நேரங்களில், அன்பையும், கண்டிப்பையும், ஆதரவையும், அறிவையும் முறையாக புகட்டி தன் மகவை சீரும் சிறப்புமடைய வளர்ப்பதுபோல, இறையன்னையும் பல வழிகளில் தம் மக்களை செப்பனிட்டு கரை சேர்க்கிறாள்.

  நம் உள்ளத்தில் இருக்கும் தமோ (சோம்பேறித்தன) / அசுர (பிறரைத் துன்புறுத்தும்) குண மாசுகளை கண்டிப்பாக இருந்து மாய்க்கும் (துர்கா எனப்படும்) மலைமகளை முதல் மூன்று நாட்கள் வணங்குகிறோம்.

  அடுத்த மூன்று நாட்கள் நமக்கு நல்ல குணங்களையும், பற்றாகுறை இல்லா வாழ்க்கையையும் வழங்கி மனத்தை சமநிலையில் வைக்கும் அலைமகளாம் இலக்குமியை வணங்குகிறோம்.

  இப்படி அமைதியான, பக்குவப்பட்ட மனத்தில் மெய்யறிவை ஊட்டும் பிரமன் மனைவி (கலைமகளாம்) சரஸ்வதியை கடைசி மூன்று தினங்களில் வணங்குகிறோம்.

  பத்தாம் நாள் விசயதசமி (வெற்றிப்பத்து) அன்று குணங்களையும், மனத்தையும் கடந்த ஒரு சக்தியால் ஈர்க்கப்பட்டு நாமே அவ்விறையன்னையுடன் ஒன்றிவிடுகிறோம்.

  இதுதான் நவராத்திரியின் உட்கருத்து.

  இதையே செய்யுளில் சொல்ல முயன்றேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 18. அன்புள்ளங்கள் பொறுத்தாற்றுக.

  ஏதோ தொழினுட்பச் சிக்கலால் அல்லது தவறான இயக்கத்தால் ஓர் ஆறு மடல்கள் - அண்மையாக நீங்கள் விடுத்த மறுமொழிகள்- எனக்குக் கிடைக்காமலிருந்தன.

  மனோ ஐயாவின் மடலைப் பார்த்தே செய்தி அறிந்தேன். பிறகு
  அகரம் அமுதா ஐயாவிடம் பேசினேன்.

  அவர் சரிசெய்த பின்னர் இப்போதுதான் கிடைத்துள்ளன.

  காலந்தாழ்ந்தமைக்குப் பொறுத்தாற்ற வேண்டுகிறேன்.
  அன்பன்,
  த.ந.

  பதிலளிநீக்கு
 19. ****குறளடி சிந்தடிகளின் இரண்டு/மூன்று சீர்களும் தாமாகவே ஒரு பொருளைத் தருவது போல அமைக்கவேண்டுமா ? ****

  தேவையில்லை.
  அவ்வாறு கட்டுப்பாடு எதுவும் இல்லை.

  ******************
  சோலை

  காலையின் கனவு கலையும் குளம்பி
  நாளின் கனவைத் துவக்கும்
  வாளை வார்த்தையில் வீசும் துணைவி
  காளியின் 'கனிவான' கைதட்டி யெழுப்ப
  வாளியில் வெந்நீர் வெதுவாய் வருடும்
  தோலை உரித்திடும் வெய்யில்
  சாலையில் சுடுஞ்சொல்
  ஆலை, அலுவலகம் சென்று
  வேலை செய்ய வயிற்றுச் சோறு
  நாளை நிலைத்திடு மோயிது? நடுக்கம்!
  வேலன் விரித்த வலையே வாழ்க்கை
  சோலையென் றெண்ணி சிக்கிக் கொண்டாரே !
  *********************
  ஐயா,
  குளம்பி என்பதே சரி.
  'காபி'க்கொட்டை குளம்பு வடிவிலிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இலத்ததீனத்தில் குளம்புக்கு வழங்கும் சொல்லை அடிப்படையாக வைத்தே அதைக் 'காபி' என்றனர்.

  அந்தக் கருத்தின் அடிப்படையில் பாவாணர் 'குளம்பி' என்று பெயர்த்துத் தந்தார்.

  எனவே, குளம்பி என்பதே சரியாகும்.
  பாட்டு நன்றாக உள்ளது.

  ****************
  எளிதாய் எழுந்திடும் எண்ணங்கள் என்றும்
  களிப்பாய் கருவாக,
  வெளிவரும் சொற்களின் துளிகளில்
  குளித்துச் சிலிர்ப்பார் குருவியைப் போலே!
  **********************
  அருமை.

  ******************
  கொல்லாதே என்றான் கொல்கிறோம் பொய்யினைச்
  சொல்லாதே என்றான் சொல்கிறோம் பிறர்க்கு
  உதவிடு என்றான் உதைக்கிறோம்
  உணர்வை
  மதித்திடு என்றான் மிதிக்கிறோம்
  பிறகேன்
  சுதந்திரம் என்றால் சுடுவோம் அவனையே !
  ***************************
  நிலைமண்டில ஆசிரியப்பா நன்றாக உள்ளது.
  இடையில் கோடுகள் தேவையில்லை.
  நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 20. ******************
  பெறற்கரிய பேற்றைப் பெற்றாலும் பெரியோர்
  சிறப்பெதுவும் கொள்ளார் சிறிதேனும் ; தம்மை
  சிறாரென் றழைப்பார் ; சுடர்விடுவார் ;
  புறாவினைப் போல்மனம் வெளுத்திருப்பார் ;
  சிறுகதை யென்றோர் கருத்தரித்து
  அருங்கவி மகவினைப் பெற்றெடுப்பார் ;
  'கருவின் உரிமை கருத்தனுக்கே ,
  கருவியே நானெ'னக் கருதிடுவார்
  இலையுதிர் காலத்தில் இசைபடித் தேபல
  கலையுதிர்ப் பாரெனில் காற்றினிலே
  வசந்தத்தின் வாசமும் வீசிடு மேநம்
  வசந்தனில் வாராத மனத்தினையும்
  கவர்ந்திழுத் தேகட்டிப் பிணைத்திடுமே
  அவர்புகழ் நாம்பாட அவரோதன்
  படைப்பைப் 'பிறர்போல் பார்த்துப்
  படித்திட்டேன் நானும்,
  புரிந்தது புதிதாய், பரிமாணங் கள்பல
  அறிந்தேன், அவன்செயல் தெரிந்ததென் றாரே!
  ***************************
  உங்கள் திருத்தங்களுக்குப் பின், பாடல் இன்னும் நன்றாக வந்துள்ளது.

  முதற்சொல் 'பெறற்கரிய' என்றிருக்க வேண்டுமென்றே குறித்திருந்தேன்.

  அடுத்தடுத்த உங்கள் ஆசிரியப் பாக்களில் காய்ச்சீர்கள் குறைந்துள்ளமை சிறப்பே!

  நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 21. இணைக்குறள் ஆசிரியப்பாவில் எல்லோரும் அருமையான பாக்களை வழங்கியுள்ளீர்கள். வாழ்க வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன். மேலும் பாடத்தில் எனக்கோர் பாவெழுதி என்னை நாணச்செய்துவிட்டார். அவருக்கென் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மற்றும், அவனடியார் மற்றும் உமா அவர்களின் பாக்கள் அருமை அருமை. வாழ்க.

  பதிலளிநீக்கு
 22. தமிழநம்பி அவர்களே:
  திருத்தங்களுக்கும், ஊக்குவிப்பதற்கும் நன்றிகள் பல.

  பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com