வெள்ளி, 25 செப்டம்பர், 2009

அடிமறி மண்டில ஆசிரியப்பா

அடிமறிமண்டில ஆசிரியப்பாவின் இலக்கணம் :

ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் யாவும் பொருந்தி இருக்க வேண்டும்.
அடிதோறும் நான்கு சீர்கள் அமைந்திருக்க வேண்டும்.
முதல், நடு, இறுதி என்ற எந்த அடியையும் எங்கு அமைத்துப் பாடினாலும் ஓசையும் பொருளும் சிதையாமல் இருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டுப் பாடல்கள் :

அழுக்கா றுடையவன் அழிவதோ உறுதியே

ஒழுக்க முடையான் உயர்வ துறுதியே

வழுக்கலில் ஊன்றுகோல் சான்றோர் வாய்ச்சொலே

விழிப்புடன் வாழ்பவன் வேண்டிய தடைவனே. - புலவர் அரங்க. நடராசனார்.


சூரல் பம்பிய சிறுகான் யாறே

சூரர மகளிர் ஆரணங் கினரே

வாரலை யெனினே யானஞ் சுவலே

சாரல் நாட நீவர லாறே. - யாப். காரிகை எடுத்துக்காட்டுப் பாடல்.


அன்பருள் உணர்வே ஆளுக உலகே

இன்பம் பிறர்துயர் இலாதே நீக்கலே

என்றும் நாடுக இனியநற் புகழே

நின்று பெயர்சொலும் நேர்மை உண்மையே. - த.ந.இனி, அடிமறி மண்டில ஆசிரியப்பா எழுதலாமே.

21 கருத்துகள்:

 1. அரசியல் ஆசை அராஜக மாச்சே
  பொருளியல் பற்றாக் குறைகூட லாச்சே
  அறிவியல் ஆபத்து ஆதாய மாச்சே
  துறவியல் திருடர் திருப்பணி யாச்சே
  இறைவனுக் கிருதயம் இல்லாமற் போச்சே!

  பதிலளிநீக்கு
 2. பாவுக் கடித்தளம் பழந்தமிழ்ப் பண்பே
  நாவுக் கியலிசை நலந்தருஞ் சொல்லே
  கோவுக் கணிகலன் குறையிலாக் குடியே
  தாவும் தமிழிசை தீஞ்சுவைத் தேனே

  பதிலளிநீக்கு
 3. இன்றியமை யாது இளமையிற் கல்வியே
  மென்பொருள் ஈட்ட மயங்குவாள் மனைவியே
  சென்றிடும் செல்வம் செலவிடச் செல்வரே
  குன்றிடாச் செல்வம் குன்றுறும் குமரனே!

  பதிலளிநீக்கு
 4. அருமை ஆசிரியர்களே: சென்ற மறுமொழியிலுள்ள பாவில் இரண்டாஞ்சீரில் பிழையுள்ளது, பிழை நீக்கியுள்ளேன்:

  இன்றியமை யாதது இளமையிற் கல்வியே
  மென்பொருள் தேட மயங்குவாள் மனைவியே
  சென்றிடும் செல்வம் செலவிடச் செல்வரே
  குன்றிடாச் செல்வம் குன்றுறும் குமரனே!


  'மென்பொருள் தேட' - மென்மையாக (அதாவது, அதிரடியும், 'பொருள் சேர்க்க வேண்டும்' என்ற வெறியுடனும் இல்லாமல் அவளுக்கும் உரிய நேரத்தை ஒதுக்கி அவளையும் மகிழ்வித்தபடி) பொருளைத் தேட, எந்த மனைவிதான் மயங்காமாட்டாள்?

  மூன்றாமடி நான்காம் சீர் 'செல்வரே' மக்கட்செல்வத்தைக் குறிக்கும்.

  பதிலளிநீக்கு
 5. அவனடியாரின் பாடல்கள் அனைத்தும் அருமை. படித்து வியந்தேன். முதற்பாடல் ஆறு அடிகள் வருகின்றனவே! நான்கு நான்கு அடிகளே வரும். ஆறடிகள் வரலாமா? தமிழநம்பி அவர்கள் விளக்குவாராக....

  பதிலளிநீக்கு
 6. **********
  அரசியல் ஆசை அராஜக மாச்சே
  பொருளியல் பற்றாக் குறைகூட லாச்சே
  அறிவியல் ஆபத்து ஆதாய மாச்சே
  துறவியல் திருடர் திருப்பணி யாச்சே
  இறைவனுக் கிருதயம் இல்லாமற் போச்சே!
  ***************
  ஐயா,
  அடிமறிமண்டில ஆசிரியப்பா சரி.
  அயற்சொற்கள் தவிர்த்து எழுதின் தமிழ்ப்பாட்டின் மதிப்பு கூடும்.

  *****************
  பாவுக் கடித்தளம் பழந்தமிழ்ப் பண்பே
  நாவுக் கியலிசை நலந்தருஞ் சொல்லே
  கோவுக் கணிகலன் குறையிலாக் குடியே
  தாவும் தமிழிசை தீஞ்சுவைத் தேனே
  ******************
  அருமை!
  ********************
  இன்றியமை யாதது இளமையிற் கல்வியே
  மென்பொருள் ஈட்ட மயங்குவாள் மனைவியே
  சென்றிடும் செல்வம் செலவிடச் செல்வரே
  குன்றிடாச் செல்வம் குன்றுறும் குமரனே!
  ***************
  ஐயா,
  உங்கள் கருத்துப்படி,
  "மென்மை வழியீட்ட மெச்சுவள் மனைவியே"
  என்று இருக்கலாமே.
  பாடல் நன்றாக உள்ளது.

  அடிமறி மண்டில ஆசிரியம் மூன்றும் நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 7. அகரம் அமுதா ஐயா,
  அடிமறி மண்டில ஆசிரியப்பாவிற்கு அடி வரையறை ஏதும் கூறப் படவில்லை.
  ஆசிரியப்பாவின் பொது இலக்கணப்படி,
  ஆயிரம் அடிகளும் அதற்கு மேலும் கூட வரலாம்.

  பதிலளிநீக்கு
 8. எதையோ தேடப்போய் இந்த ”வெண்பா வடிப்பது எப்படி” என்ற வலைத்தளத்தில் நுழைந்துவிட்டேன். நுழைந்த நாளிலிருந்து இந்த வெண்பாப் பைத்தியம் எனக்கு பிடித்தாலும் பிடித்தது, மன நிம்மதியை அடியோடு இழந்து தவிக்கிறேன். ஐயகோ, ஆண்டவா, இந்த வலைத்தளத்தை ஏன் என் கண்ணில் படவைத்தாய்?
  வாழ்வின் பெரும்பகுதியை பயனற்ற முறையில் போக்கிவிட்டேனே. பள்ளிக்காலங்களில் தமிழ் இலக்கணம் என்றாலே கசக்குமே, ஆனால் இந்த வலைத்தளத்தைப் பார்த்த பின்னர் அதுவும் இனிக்கின்றதே.
  ஐயா, தமிழிலக்கணம் இப்போதுதான் ஆர்வத்தோடு பயில ஆரம்பிக்கும் நானும் வெண்பா எழுத முடியுமா?

  அன்புடன்
  கி விசுவநாதன்

  பதிலளிநீக்கு
 9. இல்லாள் தன்னால் இல்லறம் சிறக்குமே!
  நல்லாட் சியினால் நாடுயர்ந் திடுமே!
  நல்லதோர் விதையே மரமா கிடுமே!
  நல்லெணம் மட்டுமே நமைவளர்த் திடுமே!

  ஒரு மரம் நன்றாக வளர விதையே காரணியம்,
  அதுபோல் ஒரு குடும்பம் சிறக்க மனைவி விதைபோலாகிறாள்,
  ஒரு நாடுயர நல்லாட்சி விதையாகிறது,
  ஒரு தனிமனிதன் உயர அவன் நல்லெண்ணம் காரணியமாகிறது.

  [சரியாக வந்திருக்கிறதா எனத்தெரியவில்லை, இருந்தாலும் என் முயற்சி தங்கள் பார்வைக்கு. அடி மாற்றினாலும் ஓசை மாறாதது போல் தான் எனக்குப் படுகிறது. அருள் கூர்ந்து பிழைதிருத்தவும்.]

  மன்னிக்கவும் இரு நாட்களுக்குப் பிறகே வர இயலும்.

  பதிலளிநீக்கு
 10. அகரம் அமுதா/தமிழநம்பி அய்யன்மீர்: வாழ்த்துகளுக்கு நன்றி.

  //அயற்சொற்கள் தவிர்த்து எழுதின் தமிழ்ப்பாட்டின் மதிப்பு கூடும். //
  முயல்கிறேன்; வலையில் அயற்சொல்-தமிழ்ச்சொல் அகராதி ஏதும் உளதா ?

  //"மென்மை வழியீட்ட மெச்சுவள் மனைவியே" என்று இருக்கலாமே.//
  மிக நன்றாக இருக்கிறது.
  'மென்பொருள்' என்றால் கணினி software சார்ந்த பணி என்றும், அத்துறையில் இக்காலத்தில் உள்ள ஒரு பெரும்பற்றும் மறைமுகமாக புலப்படுவதால் அதையே உபயோகித்தேன்.

  இப்பா ஒரு சொற்பொழிவில் ஆங்கிலத்தில் கூறப்பட்ட கருத்தை நினைவு கூர்ந்து எழுதியது:
  when young learn
  with wife earn
  with kids burn &
  with grand kids turn (inwards)

  பதிலளிநீக்கு
 11. அடிமறி மண்டிலம் அடிக்கடி அருமை
  பொடியடி இணைக்குறள் படித்திட இனிமை
  அடிநாற் சீர்நிலை மண்டிலம் சீர்மை
  அடியீற் றியல்குறுகும் நேரிசை நன்மை
  வடிவிலா சிரியம் விலையிலா வளமை!

  பதிலளிநீக்கு
 12. ஆசிரியப்பாவில் மூழ்கடித்த பாட இடுகைகளால் வெண்பா எழுதி சிறிது காலமாகிறது. ஆகவே, ஆசான்களை கேட்க வேண்டிய கேள்வியை வெண்பாவாகவே கொடுப்போம்:

  ஆசிரியப் பாவகைகள் அன்போ டளித்தபே
  ராசிரியப் பெருந்தகைப் பாவலர் - பேசுமப்
  பாவினம் மூன்றென் றுரைத்தார்* அகரமவை
  யாவையும் ஈவாரோ யின்று?


  * //ஆசிரியப்பாவின் இனம் மூன்று வகைப்படும். அவை:-

  1.ஆசிரியத்தாழிசை
  2.ஆசிரியத்துறை
  3.ஆசிரிய விருத்தம்//

  பதிலளிநீக்கு
 13. இதுவரை வந்த பாடங்களை இங்கே தொகுத்திருக்கிறேன். பிழையேதும் இருந்தால் திருத்தவும்,
  நன்றிகள்!

  பதிலளிநீக்கு
 14. விசு ஐயா,
  வருக, வணக்கம்.

  ***இலக்கணம் என்றாலே கசக்குமே, ஆனால் இந்த வலைத்தளத்தைப் பார்த்த பின்னர் அதுவும் இனிக்கின்றதே.
  ஐயா, தமிழிலக்கணம் இப்போதுதான்ஆர்வத்தோடு பயில ஆரம்பிக்கும் நானும் வெண்பா எழுத முடியுமா?***

  கண்டிப்பாக முடியும்.
  அறைகூவலாகவே சொல்கிறேன்.
  நீங்கள் நன்றாக வெண்பாவும் ஏனைய மரபு பாக்களும் எழுத முடியும்.
  தவறின்றி எழுதும் ஆற்றல் இருக்கிறது.
  சில அடிப்படைகளைத் தெரிந்து கொண்டால் போதும்.
  நீங்கள் நன்றாக எழுதுவீர்கள்.
  முயலுங்கள், உதவுவதற்குக் காத்திருக்கிறோம்.
  முயற்சி திருவினை யாக்கும்!

  பதிலளிநீக்கு
 15. *************
  இல்லாள் தன்னால் இல்லறம் சிறக்குமே!
  நல்லாட் சியினால் நாடுயர்ந் திடுமே!
  நல்லதோர் விதையே மரமா கிடுமே!
  நல்லெணம் மட்டுமே நமைவளர்த் திடுமே!
  ********************

  சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள்.
  பாராட்டு!

  (காரணம் என்றே எழுதுங்கள், அது சரியான தமிழ்ச்சொல் வடிவம் என்பதே மொழியியல் ஆய்வறிஞர் முடிவாக உள்ளது)
  நன்றி.

  பதிலளிநீக்கு
 16. *********************
  ஜீவா (Jeeva Venkataraman) கூறியது...
  இதுவரை வந்த பாடங்களை இங்கே தொகுத்திருக்கிறேன். பிழையேதும் இருந்தால் திருத்தவும்,
  நன்றிகள்!
  *************************
  அங்கேயே கருத்துரை அளித்துள்ளேன்.

  பதிலளிநீக்கு
 17. அவனடிமை ஐயா,
  விளக்கம் தந்ததற்கு நன்றி.
  **************
  அடிமறி மண்டிலம் அடிக்கடி அருமை
  பொடியடி இணைக்குறள் படித்திட இனிமை
  அடிநாற் சீர்நிலை மண்டிலம் சீர்மை
  அடியீற் றியல்குறுகும் நேரிசை நன்மை
  வடிவிலா சிரியம் விலையிலா வளமை!
  ********************
  ஐயா,
  மூன்றாம் அடி,
  "அடிகுறு கீற்றயல் நேரிசை... "
  என்று இருக்கலாமா?

  ஆசிரியப்பா எழுதுவது விளையாட்டாகவே கைவரப் பெற்று விட்டீர்கள்.

  ******************
  ஆசிரியப் பாவகைகள் அன்போ டளித்தபே
  ராசிரியப் பெருந்தகைப் பாவலர் - பேசுமப்
  பாவினம் மூன்றென் றுரைத்தார்* அகரமவை
  யாவையும் ஈவாரோ யின்று
  ********************
  ஐயா,
  வினா வெண்பா அருமை.
  விடை இதோ :

  ஆசிரியம் கற்றோம்! அதனினங்கள் பற்றியும்
  மாசறவே கூற மனமுண்டு! - வீசொளியர்
  வெண்பா அமுதா விரைந்தோர் நிலையுற்றே
  எண்ணம் உரைக்கட்டும் ஏழ்ந்து.

  நன்றி ஐயா.

  October 18, 2009 11:57 AM

  பதிலளிநீக்கு
 18. //
  ஐயா,
  மூன்றாம் அடி,
  "அடிகுறு கீற்றயல் நேரிசை... "
  என்று இருக்கலாமா?
  //

  ஆஃகா! ஆஃகா! ஆசிரிய(ர்)ம்னா ஆசிரிய(ர்)ம் தான் !

  அடிமறி மண்டிலம் அடிக்கடி அருமை
  பொடியடி இணைக்குறள் படித்திட இனிமை
  அடிநாற் சீர்நிலை மண்டிலஞ் சீர்மை
  அடிகுறு கீற்றியல் நேரிசை நன்மை
  வடிவிலா சிரியம் விலையிலா வளமை!


  மாற்றிவிட்டேன் தமிழநம்பி ஆசான் அவர்களே!

  பதிலளிநீக்கு
 19. //ஆசிரியம் கற்றோம்! அதனினங்கள் பற்றியும்
  மாசறவே கூற மனமுண்டு! - வீசொளியர்
  வெண்பா அமுதா விரைந்தோர் நிலையுற்றே
  எண்ணம் உரைக்கட்டும் ஏழ்ந்து.//

  மறுமொழிக்கு நன்றி. ஆமாம் எழுந்து வரட்டும். இறைவனை வேண்டிக்கொள்வோம்:

  அமுதனென் றொருவா சிரியரிங் குண்டு
  தமிழநம் பியெனும் தமிழாசா னுண்டு
  மரபுப்பா மகிழ்வுடனே மாந்துவோரு முண்டு
  இறைவாநீ இவர்வலையில் இணைந்திடவே அருள்வாய் !

  பதிலளிநீக்கு
 20. ஐயா,
  வணக்கம்.
  அகரம் அமுதா தொடர்பு கொண்டார்.
  இம்மாத இறுதியில் இணையத் தொடர்பு பெற்றுவிடுவதாகவும் வழக்கம்போல் இவ் வலைப்பதிவில் நாம் செயற்படலாம் என்றும் தெரிவித்தார்.
  விரைவில் அவருக்கு இணையத் தொடர்பு கிடைக்கும் என்று எதிர்பார்ப்போம்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 21. //விரைவில் அவருக்கு இணையத் தொடர்பு கிடைக்கும் என்று எதிர்பார்ப்போம்.//

  செய்திக்கு நன்றி தமிழநம்பி அய்யா அவர்களே.

  ஆகா அருமை அகரம் வருவார்
  பாகாய் பலபா பருகத் தருவார்
  வேகா வெயிலில் குளிர்காய் வதுபோல்
  வாகா யெமக்கு வெண்பா அருள்வார்!

  பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com