சனி, 5 செப்டம்பர், 2009

கண்ணோரம் கண்ணீர்க் கடல்!

(தமிழநம்பி அய்யா அவர்கள் அடுத்த பாடம் வழங்க காலமாதலால் இடையே ஓர் ஈற்றடி வழங்கப் படுகிறது.)

இக்கிழமைக்கான ஈற்றடி:- கண்ணோரம் கண்ணீர்க் கடல்!

அகரம் அமுதா

15 கருத்துகள்:

  1. கண்ணோரம் கண்ணீர்க் கடல்

    எந்தமிழ்த் தாயழவே ஈழத்தி லெம்சுற்றம்
    வெந்தே எரிகின்ற வேதனையை; - நந்தமிழர்
    மண்ணிற் புதைகின்ற மாகொலையை கண்டென்றன்
    கண்ணோரம் கண்ணீர்க் கடல்


    யாரவர்கள்? நம்மினத்தார்! ஏதுமற்ற ஏதிலியாய்,
    வேரறுந்த நீள்மரமாய், வீழ்கையிலே; - சீர்த்திமிகு
    பண்ணார் தமிழணங்கும் பற்றி யெரிகையிலே
    கண்ணோரம் கண்ணீர்க் கடல்!


    ஏனின் னுந்தாமத மென்றேங்கி நிற்காமல்
    கூனிக் குறுகித்தான் குந்தாமல் - ஆனையென
    விண்ணதிர வீறுகொண்டே மீண்டெழுந்தா லீங்கேது
    கண்ணோரம் கண்ணீர்க் கடல்?

    --------------------
    இராஜ.தியாகராஜன்
    www.pudhucherry.com

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் அய்யா! தியாகராஜன் அவர்களே! தங்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது. வெண்பாக்கள் ஒவ்வொன்றும் அருமை. ஈழத்தைக் கருத்திற்கொண்டே இவ்வீற்றடியை அமைத்தேன். அஃதை நன்கு பயன்படுத்தி அழகிய வெண்பாக்கள் அளித்துள்ளீர்கள். நன்றிகள். மீண்டும் வருக. மேலான ஆதரவைத் தருக. நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. மடிக்கிடந்து கையெடுத்து மார்பணைத்த தன்மகனை
    படிக்கவென்று பள்ளியிலே விட்டுவிட்டு வாசலிலே
    கண்வைத்து காத்திருக்கும் கற்றறிந்த பெற்றவளின்
    கண்ணோரம் கண்ணீர்க் கடல்.

    பதிலளிநீக்கு
  4. ஒரு ஆசிரியப்பா.

    தங்கும் தண்ணீர் தாகம் தீர்க்காது,
    எங்கும் வளமுற இருகரை தன்னில்
    பாயும் ஆறோ பருகத் தருமே
    ஈயும் கடலில் இரண்டறக் கலந்தும்
    மீண்டும் மழையாய் எங்கும் பொழிந்தே!
    யாண்டும் அதுபோல் பணமும் கொடுக்கும்
    நேராய் பெற்றதை நிறைவோ(டு) ஈந்திட
    பாராய் நெஞ்சினில் பெருகும் நிம்மதி
    தேராய் என்றும் தருவதே மேலாம்
    ஈயாப் பொருளோ இருந்தே அழியும்
    பேயாய் மனதில் பயமும் வளரும்
    தாராய் என்றும் தங்கிடும் அமைதியென்[று]
    ஊராய்ச் சென்றே உள்ளம் உருக
    இறைவனைத் தொழுதிடல் வேண்டா
    இரப்பவர்க் கென்றும் ஈவர் தாமே!

    பதிலளிநீக்கு
  5. அன்புள்ள அமுதன் அவர்கட்கு,
    இராஜ.தியாகராஜன் வணக்கம்.

    உங்களை நான் இணை-உரிமையாளனாய் இருக்கும் சந்தவசந்தம் குழுவில் பார்ப்பதுண்டு. பணிநெருக்கம் கரணீயமாக அதிகம் எழுத முடிவதில்லை. ஒரு ஐயம் - எங்களின் கலைமாமணி, சந்தப்பாமணி அரங்க நடராசன் பாக்களைக் காட்டாக இப்பூவில் காண்கிறேன். எழுதுவது நீங்களா?

    பதிலளிநீக்கு
  6. உயர்திரு உமா அவர்களுக்கு! தங்கள் இரு பாக்களும் அருமை. நிறைய பணிகளுக்கிடையில் தாங்கள் விடாது பாக்கள் புனைவது மகிழ்ச்சியைத் தருகிறது. வாழ்த்துக்கள்.

    ==== ===== =======


    உயர்திரு இராஜ. தியாகராஜன் அவருகளுக்கு....

    மதிப்பிற்குறிய அய்யா, பாவலர். தமிழநம்பி அவர்களே அப்பாடல்களைப் பாடங்களுடன் இணைத்து வழங்கி வருகிறார். தமிழநம்பி அய்யா அவர்களைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள் எனக்கருதுகிறேன். நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  7. கனவுகளையெல்லாம் அழிக்கும் தற்காலப் பொருளாதார நிலையைக் குறித்த பாடல் இது:

    விண்தொட்ட வீட்டில் வெளிநாட்டு வூர்தியில்
    விண்ணுயர ஆசை வெறுங்கனவாய்க் - கண்ணினுள்
    புண்ணாகிப் போகும் பொருளாதா ரச்சரிவில்
    கண்ணோரம் கண்ணீர்க் கடல்.

    பதிலளிநீக்கு
  8. ஆலிலையில் கண்ணன் மிதக்கப் போகும், ஃப்ளாஷ் பேக், flashback (அவதாரம்), முடிவடையப் போகும் கட்டம்.
    தோழன் உத்தவனுக்கு கண்ணனைப் பிரியப் போகும் துயர் தொண்டையை அடைக்கிறது.
    கண்களில் கடல் போல் தாரை தாரையாக கண்ணீர். "கண்ணா, கவலைப்படாதே, உன் ஆலிலை மிதக்க ஆழிநீர் இதோ உத்தவன் கண்ணீர்க் கடல்" என்கிறது இந்தப்பா:

    ஆழிநீர் தேடியே ஆலிலையோ டலையாதீர்
    தோழனாம் உத்தவன் துக்கத்தில் - ஆழவே
    விண்ணேகும் கண்ணனுமைக் காணாம லேயவன்
    கண்ணோரம் கண்ணீர்க் கடல்.

    பதிலளிநீக்கு
  9. அவனடியாரின் இருபாக்களும் அருமை. அருமை. மேலும் முதற்பா இக்காலத்தினுடைய பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட அழகிய வெண்பா. வாழ்த்துக்கள்.


    ////விண்தொட்ட வீட்டில் வெளிநாட்டு வூர்தியில்/////

    புணர்ச்சியைச் சரிபார்க்கவும். "வெளிநாட்டு ஊர்தியில்" - புணர்கிறபோது, "வெளிநாட் டூர்தியில்" என்றாகி, மாமுன் நேர் வந்துவிடுகிறது. மாமுன் நிரைவரவேண்டும்.



    ////ஆழிநீர் தேடியே ஆலிலையோ டலையாதீர்/////


    "ஆலிலை யோடலையாய்" - என்றால் தளைக்குச் சரியாக இருக்கும்.

    "ஆலிலையோ டலையாதீர்" - என்றெழுதும் போது காய்முன் நிரைவந்துவிடுகிறது. கவனிக்கவும்.

    பதிலளிநீக்கு
  10. அ.அ. ஐயா,
    வணக்கம்.
    உங்களுக்கு விடுத்த இரண்டு மின்னஞ்சல்களும் உங்களுக்கு வழங்க இயலவில்லை என்ற அறிவிப்போடு திரும்ப வருகின்றது.

    அன்பு கூர்ந்து நீங்கள் எனக்கு ஓர் மின்னஞ்சல் விடுத்தால், விடையாக அதிலேயே செய்தியை அனுப்ப இயலும்.

    முன்பும் இந்தச் சிக்கல் இருந்தது. சரியாகி விட்டதாக
    நினைத்தேன். மறுபடியும் சிக்கலா!

    பதிலளிநீக்கு
  11. அமுதா அவர்களே: புனைவதில் கவனம் தேவை என்று நினைவுபடுத்துவதற்கு நன்றி.

    /"வெளிநாட்டு ஊர்தியில்" - புணர்கிறபோது, "வெளிநாட் டூர்தியில்" என்றாகி, மாமுன் நேர் வந்துவிடுகிறது. மாமுன் நிரைவரவேண்டும்./

    முதலில் 'வெளிநாட்டு வாகனம்' என்று போட்டேன், பின் 'வாகனம்' வடமொழிச் சொல் ஆதலால் 'வெளிநாட்டு ஊர்தி' என்று இட்டு தளையைக் கோட்டை விட்டேன். 'வெளிநாட்டி னூர்தியில்' (வெளிநாட்டின் + ஊர்தியில்) என்றிட்டால் சரியாகுமா ?

    விண்தொட்ட வீட்டில் வெளிநாட்டி னூர்தியில்
    விண்ணுயர ஆசை வெறுங்கனவாய்க் - கண்ணினுள்
    புண்ணாகிப் போகும் பொருளாதா ரச்சரிவில்
    கண்ணோரம் கண்ணீர்க் கடல்.


    /"ஆலிலையோ டலையாதீர்" - என்றெழுதும் போது காய்முன் நிரைவந்துவிடுகிறது./

    உத்தவனின் உணர்ச்சியின் வேகத்தை குறைக்காது, கருத்தும் ஈற்றடியும் மாறாமல், மோனை, எதுகைகளும் (அவ்வளவாக) அடிபடாமல் தளைப் பிழையையும் நீக்கி செய்யுளை மாற்றுவதற்குள் திணறி விட்டேன் ...

    ஆழிநீர் ஆகிடும் ஆலிலை அண்ணலின்
    தோழனாம் உத்தவன் துன்பத்தில் - ஆழவே
    விண்ணேகும் கண்ணனை விட்டுப் பிரிவதனால்
    கண்ணோரம் கண்ணீர்க் கடல்.


    'ஆலிலை அண்ணலின்' - ஆலிலைமேல் மிதக்கும் கண்ணபிரானின்

    'துக்கத்தில்' என்பதை 'துன்பத்தில்' என மாற்றிவிட்டேன், 'துக்கம்' வடமொழிச் சொல் அல்லவா?

    அமுதாசான் அவர்களுடைய ஆய்வுப்பார்வைக்கும், உன்னிப்பான திருத்தங்களுக்கும் மிக மிக நன்றி.

    /மேலும் முதற்பா இக்காலத்தினுடைய பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட அழகிய வெண்பா./

    இறையுணர்வு பாக்களைவிட, கலையுணர்வு, தமிழுணர்வு, தற்கால நிகழ்வுகளைக் குறித்த பாக்கள் தங்கள் மனதுக்கு ஏற்புடையது என்று தோன்றுகிறது, சரிதானே ?

    பதிலளிநீக்கு
  12. அருமை. அருமை. வாழ்க! அவனடியாரே! இருபாக்களையும் செழுமைப்படுத்தி அழகுசேர்த்துவிட்டீர். வாழ்க.


    /////இறையுணர்வு பாக்களைவிட, கலையுணர்வு, தமிழுணர்வு, தற்கால நிகழ்வுகளைக் குறித்த பாக்கள் தங்கள் மனதுக்கு ஏற்புடையது என்று தோன்றுகிறது, சரிதானே ?/////


    அப்படியெல்லாம் இல்லை. தவறாகக் கருத வேண்டா. பொதுவாக இறைவன், அல்லது புராணம் பற்றிப் பாடும்போது செய்திகள் அனைத்தும் பழையதே! ஆராய்ந்து பார்த்தால் நமக்குமுன்னோர் யாரேனும் அக்கருத்தை முன்பே கையாண்டிருப்பர். அத்தோடு பலவும் தெரிந்த செய்தியாகவே இருப்பதால் அத்தோடு மனம் ஒன்றுவதைக்காட்டிலும் இக்கால நிகழ்வுகளுக்கு எழுதும் போது, பொருள் புதிது, கற்பனைபுதிது, அனுகும் முறை புதிது என்பதனால் மனம் அவற்றோடு எளிதில் ஒன்றிவிடுகிறது. மற்றபடி நான் இறைமறுப்பாளன் அல்ல.

    பதிலளிநீக்கு
  13. மண்ணிதில் வாழ்வோர் அனைவரும் போற்றிடக்
    கண்ணிமை போல எனைக்காத்தாய் - உண்மையில்
    பெண்ணாய்ப் பிறந்ததன் அர்த்தம் புரியவைத்தாய்க்
    கண்ணோரம் கண்ணீர்க் கடல்

    விவேக்பாரதி

    பதிலளிநீக்கு
  14. பெண்ணின் உணர்வுகளை அழகுறப் படம்பிடித்துக்காட்டியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  15. விண்ணிலே வீசுகின்ற தென்றலைப் போன்றஎன்
    கண்ணவளே! காதலியே! உன்னையென் – கண்ணுக்குள்
    கண்ணாகக் காத்திடுவேன் என்னைநம்பு இன்னும்ஏன்
    கண்ணோரம் கண்ணீர்க் கடல்!

    - வ.க.கன்னியப்பன்

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com