திங்கள், 8 பிப்ரவரி, 2010

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்-1

தமிழில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என நான்குவகைப் பாக்கள் உள்ளன என்று முன்பே அறிந்துள்ளோம்.

இந் நான்குவகைப் பாக்களுக்கும் பாவினங்கள் உண்டு.

எடுத்துக்காட்டாக, ஆசிரியப்பாவின் பாவினங்கள் ஆசிரியத் தாழிசை, ஆசிரியத் துறை, ஆசிரிய மண்டிலம் என்பன ஆகும்.

எல்லாவகைப் பாவினங்களையும் ஒப்பிடுகையில், அதிகமாக எழுதப்படுவன ஆசிரிய மண்டிலங்களே ஆகும்.

ஆசிரிய மண்டிலம், ஆசிரிய விருத்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஆறு சீர்களும் அதற்கும் மேலான சீர்களும் பெற்றுவரும் அடி, கழிநெடிலடி என்று நாம் முன்பே அறிந்திருக்கிறோம்.

கழிநெடிலடி நான்கு அளவொத்து வருவது ஆசிரிய மண்டிலமாகும்.

ஆசிரிய மண்டிலங்களை ஒவ்வொன்றாக எழுதப் பழகுவோம்.

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம் -1.

1. ஓர் அடியில் (மூன்று + மூன்று) ஆறு சீர்கள் வரவேண்டும்.

2. நான்கு அடிகளும் ஓர் எதுகை பெற்றிருக்க வேண்டும்.

3.முதல் சீர் நான்காம் சீரில் மோனை அமைவது சிறப்பு.

4. ஓர் அடியை மூன்று மூன்றுச் சீராக மடித்தெழுதுவது மரபு.

5.நான்கு அடிகளும் அளவொத்து மா + மா + காய், மா+ மா+ காய் என்ற சீரமைப்பைக் கொண்டு வரவேண்டும்.

6. தளை பற்றிக் கருத்துச் செலுத்துதல் வேண்டா.

7. ஈற்றெழுத்து எதுவும் வரலாம்.

ஆசிரிய மண்டிலம் எழுதுதல் மிகவும் எளிதாகும்.

இனி, எடுத்துக்காட்டுப் பாடல் :


வெய்யிற் கேற்ற நிழலுண்டு
..........வீசும் தென்றல் காற்றுண்டு
கையிற் கம்பன் கவியுண்டு
..........கலசம் நிறைய மதுவுண்டு
தெய்வ கீதம் பலவுண்டு
..........தெரிந்து பாட நீயுண்டு
வையம் தருமிவ் வனமன்றி
..........வாழும் சொர்க்கம் வேறுண்டா?

இது, கவிமணி எழுதிய உமர்கய்யாம் பாடல்.

இப் பாடலின் முதல் அடி,

வெய்யிற் கேற்ற நிழலுண்டு (தேமா+தேமா+புளிமாங்காய்) என்றும்
வீசும் தென்றல் காற்றுண்டு (தேமா+தேமா+தேமாங்காய்) என்றும் இரண்டு அரை அடிகளாய் எழுதப்பட்டுள்ளதைக் காணலாம்.

இவ்வாறே, அடுத்த மூன்று அடிகளிலும், முதலிரண்டு சீர்களும் மாச்சீராகவும் (தேமா அல்லது புளிமா) மூன்றாம் சீர் காய்ச்சீராகவும் ( நான்கு வகைக் காய்ச்சீர்களுள் ஒன்று) வருவதைக் காணலாம்.

முதல் அரை அடி எழுதிவிட்டீர்களானால் அதை வைத்தே பாடலை எழுதி முடித்து விடலாம்.

கன்னற் சாறே, கனியமுதே!
கருத்தில் இனிக்கும் தமிழமுதே!
என்னை மகிழ்ச்சிக் கடலாழ்த்த
இனிய மகளாய் வந்தவளே!
உன்னின் அறிவும் வளர்த்திடுவாய்!
ஒழுக்கம் அறங்கள் போற்றிடுவாய்!
இன்னா கொடுமை இவ்வுலகில்
இல்லா தாக்க எழுவாயே!

- இது த.ந.வின் பாடல்.


எழுதத் தொடங்குங்கள்.

எந்த ஐயம் எழுந்தாலும் எத்தனை முறையும் தயங்காது கேளுங்கள்.

விடையளிக்கக் காத்திருக்கிறோம்.

31 கருத்துகள்:

 1. எண்ணில் தெளிவை ஏற்றிடுவாய்
  இதழில் புன்னகை ஊற்றிடுவாய்
  கண்ணில் ஒளியைக் கூட்டிடுவாய்
  கனிவைப் பேச்சில் நாட்டிடுவாய்
  விண்ணில் புகழ்க்கொடி ஊன்றிடுவாய்
  விரும்பி உழைக்கப் போந்திடுவாய்
  பெண்ணை மதிக்கப் பழகிடுவாய்
  பெரும்பழிக் கஞ்சி ஒதுங்கிடுவாய்!

  பதிலளிநீக்கு
 2. மெல்ல விரலைப் பிடித்திழுத்து
  முத்தம் முழுதாய்ப் பதித்தெடுத்து
  அல்லி இடையை அணைத்திறுக்கி
  ஆறா மதுவை அகப்புகுத்தி
  வெள்ளம் எனும்படி வேர்வைவர
  வெப்பம் பகரும் கனிமாரைக்
  கள்ளென எண்ணிக் கரம்தடவக்
  காசுகள் கேட்பான் மணமகனாம்.

  ***

  கன்னல் + சாறே = கன்னட்சாறேவா அல்லது கன்னற்சாறேவா..?

  பதிலளிநீக்கு
 3. மெல்ல விரலைப் பிடித்திழுத்து
  முத்தம் முழுதாய்ப் பதித்தெடுத்து
  அல்லி இடையை அணைத்திறுக்கி
  ஆறா மதுவை அகப்புகுத்தி
  வெள்ளம் எனும்படி வேர்வைவர
  வெப்பம் பகரும் கனிமாரைக்
  கள்ளென எண்ணிக் கரம்தடவக்
  காசுகள் கேட்பான் மணமகனாம்.

  ***

  கன்னல் + சாறே = கன்னட்சாறேவா அல்லது கன்னற்சாறேவா..?

  பதிலளிநீக்கு
 4. கன்னற்சாறு என்பதே சரியான முறையாகும்.

  இறுதி வரியை இப்படி மாற்றினால் நன்றாக இருக்கும் எனக்கருதுகிறேன்.

  காசுகள் கேட்போன் மணமகனா?

  பாடல் நன்று. வாழ்க வசந்த் அவர்களே!

  பதிலளிநீக்கு
 5. மேலே வழங்கியுள்ள அறுசீர் மண்டிலத்தோடு மேலுமொன்றைச் சேர்த்து வழங்குகிறேன்.

  எண்ணில் தெளிவை ஏற்றிடுவாய்
  ___இதழில் புன்னகை ஊற்றிடுவாய்
  கண்ணில் ஒளியைக் கூட்டிடுவாய்
  ___கனிவைப் பேச்சில் நாட்டிடுவாய்
  விண்ணில் புகழை ஊன்றிடுவாய்
  ___விரும்பி உழைக்கப் போந்திடுவாய்
  பெண்ணை மதிக்கப் பழகிடுவாய்
  ___பெரும்பழிக் கஞ்சி ஒதுங்கிடுவாய்!

  தாயை மதிக்கப் பழகிடுவாய்
  ___தமிழைப் பேணத் தளைப்படுவாய்
  ஏழை எளியோர்க் குதவிடுவாய்
  ___எளிமை வாழ்வு நடத்திடுவாய்
  கூழைக் குடித்து வாழ்ந்திடினும்
  ___குறிக்கோள் அடைய முனைந்திடுவாய்
  ஊழை வெல்லும் உரன்படைப்பாய்
  ___ஊராய் போற்ற வாழ்வாயே!

  பதிலளிநீக்கு
 6. வெள்ளொத் தாழிசையும், அறுசீர் மண்டிலப் பாவும் அறிந்தேன். மிக்க நன்றி. முயன்று பாவுடன் வருகிறேன்.

  பதிலளிநீக்கு
 7. நானும் நேரம் கிடைக்கும்பொழுது எழுத முயல்கின்றேன்.

  மீண்டும் அனைவரையும் வலைப்பதிவில் காண்பதில் மிக்க மகிழ்ச்சி

  அன்புடன்
  திகழ்

  பதிலளிநீக்கு
 8. வருக! வருக! உமா மற்றும் திகழ் அவர்களே! அழகிய பாக்களைத் தருக!

  பதிலளிநீக்கு
 9. இரா. வசந்தகுமார், திகழ், உமா மூவரையும் வருக, வருக என வரவேற்கின்றேன்.

  அறுசிர் மண்டிலப் பா - 1 எழுதுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

  அவனடிமை ஐயாவும் பிறரும் விரைவில் வருவர் என்று நம்புகின்றேன்.

  இரா. வசந்தகுமார் பாடலை நன்றாகக் கருத்தாழத்துடன் எழுதியிருக்கிறார். அவருக்குப் பாராட்டைத் தெரிவிக்கின்றேன்.

  அன்பன்,
  த.ந.

  பதிலளிநீக்கு
 10. அந்த நாளில் ஆர்த்தெழுந்தே

  .....அடிமை விலங்கு ஒடித்திடவே

  முந்தி முனைந்து முழங்கியவர்

  .....முழுதும் மாறி இரண்டகராய்ச்

  சொந்தப் பதவி குடும்பநலம்

  .....சொத்து சேர்த்தல் இவற்றிற்கே

  இந்த இனத்தை ஈழத்தில்

  .....எரித்துப் பொசுக்கத் துணைபோனார்!

  பதிலளிநீக்கு
 11. அருமை அருமை சிக்கிமுக்கியாரே! மிக உணர்வு,உணர்ச்சி மிக்க அறுசீர் மண்டிலம். எத்தனை இடிந்துரைத்தாலும் திருந்தும் நாய்களா அவை?

  பதிலளிநீக்கு
 12. இந்த தேமா, புளிமா விவரங்கள் இருக்கில்ல... அதுல நான் வீக்.

  எப்ப பார்த்தாலும் குழப்பிட்டு இருக்குது.
  கொஞ்சம் தெளிவா சொல்லித்தர முடியுமா?
  அல்லது என் மெயில் ஐடிக்கு சின்ன மெசேஜ்.

  egjira@gmail.com

  கொடுமை என்னன்னா, நானும் தமிழ் இலக்கியம் படிச்சவன்?!

  பதிலளிநீக்கு
 13. தமிழிலக்கியம் படித்தவரா இப்படிக் கேட்பது? சரி. இவ்வலையின் துவக்க கால இடுகைகளைப் படிக்குமாறு வேண்டுகிறேன். தங்களின் அத்தனை ஐயங்களுக்கும் விடைகிடைக்கும்.

  பதிலளிநீக்கு
 14. பாடும் குயிலின் அழகெல்லாம்
  பாரீர் அதனின் குரலினிலே
  வாடும் மலரும் ஓர்நாளில்
  வாசம் அதனை மாற்றிடுமோ?
  ஏடும் அழகாம் வெண்தாளில்
  எழுதி கருத்தை விளக்கிடவே
  நாடும் மனதில் அழகெல்லாம்
  நன்மை தன்னில் காண்பீரே!

  கண்ணங் கரிய காக்கையினம்
  கூடி வாழும் தன்மையிலே
  எண்ணஞ் சிறக்க எடுத்தியம்பும்
  ஏற்றுக் கொள்வீர் ஒற்றுமையை
  கண்ணில் வீழும் மண்துகளை
  கைகள் சென்று துடைப்பதுபோல்
  மண்ணில் உயிர்கள் படுந்துன்பம்
  மாற்றும் மனதைக் கொள்வோமே

  பதிலளிநீக்கு
 15. ஆஃகா! ஆஃகா! அருமை. அருமை. மிகச்சிறந்த மண்டிலம் உமா அவர்களே வாழ்க... வாழ்க...

  ////கண்ணில் வீழும் மண்துகளை
  கைகள் சென்று துடைப்பதுபோல்
  மண்ணில் உயிர்கள் படுமுறுகண்
  மாற்றும் மனதைக் கொள்வோமே////

  மிக அழகிய, ஆழமான கருத்தை எளிமையாக எடுத்தியம்பியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 16. அருமை
  உமா அவர்களே

  நானும் சில நாள்களுக்குள் எழுதி விடுகிறேன்.

  அன்புடன்
  திகழ்

  பதிலளிநீக்கு
 17. .....அடிமை விலங்கு ஒடித்திடவே

  முந்தி முனைந்து முழங்கியவர்

  .....முழுதும் மாறி இரண்டகராய்ச்

  சொந்தப் பதவி குடும்பநலம்

  .....சொத்து சேர்த்தல் இவற்றிற்கே

  இந்த இனத்தை ஈழத்தில்

  .....எரித்துப் பொசுக்கத் துணைபோனார்!

  சிக்கிமிக்கியாரின் பாடல் சிறப்பாக உள்ளது. பாராட்டு.

  பதிலளிநீக்கு
 18. பாடும் குயிலின் அழகெல்லாம்
  பாரீர் அதனின் குரலினிலே
  வாடும் மலரும் ஓர்நாளில்
  வாசம் அதனை மாற்றிடுமோ?
  ஏடும் அழகாம் வெண்தாளில்
  எழுதி கருத்தை விளக்கிடவே
  நாடும் மனதில் அழகெல்லாம்
  நன்மை தன்னில் காண்பீரே!

  கண்ணங் கரிய காக்கையினம்
  கூடி வாழும் தன்மையிலே
  எண்ணஞ் சிறக்க எடுத்தியம்பும்
  ஏற்றுக் கொள்வீர் ஒற்றுமையை
  கண்ணில் வீழும் மண்துகளை
  கைகள் சென்று துடைப்பதுபோல்
  மண்ணில் உயிர்கள் படுந்துன்பம்
  மாற்றும் மனதைக் கொள்வோமே

  இரண்டு அறுசீர் மண்டிலங்களும் அருமை.

  'மனத்தில்' என்பதே செப்ப வடிவம்; மனதில் என்பதைத் திருத்திவிடுக.
  'கன்னங்கரிய' எனத் திருத்துக.
  இரண்டு கருத்தாழமுள்ள பாடல்களை எழுதியதற்குப் பாராட்டு.

  பதிலளிநீக்கு
 19. திரு. அமுதா. கருத்துரைகள் எனக்கு சரியாக தெரிவதில்லையே ஏன்?. பாதி பக்கத்தின் கீழும் மீதி பக்கத்தின் மேல் பகுதியில் வலதுபுறமுமாக தெரிகின்றது. நேற்று தங்களின் கருத்தை பார்க்க முடிந்தது இன்று கருமையான பகுதியில் பெயரும் நாளும் மட்டுமே பார்க்க இயலுகிறது. எழுத்தின் நிறத்தை மாற்றிவிட்டீர்களா? வெண்ணிறப் பகுதியில் படிப்பது எளிதாக இருக்கிறது. கருமையான பின்புறத்தில் தெளிவாகத் தெரியும் படி மஞ்சள் போன்ற நிறத்தைக் கொடுக்கவும்.
  மன்னிக்கவும். நன்றி.

  பதிலளிநீக்கு
 20. திரு. தமிழநம்பிக்கு என் வணக்கம். தங்களின் கருத்தை என்னால் படிக்க இயலவில்லை. சரியானதும் குறையிருப்பின் திருத்திக்கொள்கிறேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 21. தற்பொழுது தெளிவாகத் தெரிகிறதா? தெரியபடுத்தவும்.

  பதிலளிநீக்கு
 22. ஆலைக் கழிவை மாசகற்றா(து)
  ஆறாய்ப் பாய விடுவதனால்
  நாளும் நிலத்தின் தூய்மைகெடும்
  நன்னீர் நஞ்சாய் மாறிவிடும்
  நீளும் இந்த நிலையகல
  நிலம்நீர் காற்றின் மாசகல
  ஆலைக் கழிவைத் தூய்மைசெய்(து)
  அழிவைத் தடுப்போம் வாரீரே!

  பதிலளிநீக்கு
 23. திரு.தமிழநம்பி அவர்களுக்கு நன்றி. மனத்தில், கன்னங்கரிய , திருத்திக்கொள்கிறேன்.மிக்க நன்றி.

  திகழ் அவர்களுக்கும் நன்றி.

  திரு அமுதா அவர்களுக்கு நன்றி. இப்பொழுது சரியாகத் தெரிகிறது. ஆயினும் உமா சொன்னது…,தமிழநம்பி சொன்னது…திகழ் சொன்னது… என்பன தெரிவதுபோல் தங்கள் கருத்துகளிலும், திரு.சிக்கிமுக்கியார் கருத்துகளிலும் பெயர் தெரியவில்லை. அருகில் சென்றால் சற்றே தெரிகிறது. கருத்துத்துரைகள் தெளிவாக உள்ளன. நன்றி.

  பதிலளிநீக்கு
 24. அன்பு தமிழநம்பி ஐயா...

  மிக்க நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 25. தலைவன் என்று சொல்கின்ற
  ...தடியன் இங்கே பலருண்டு
  கலைஞன் என்னும் கவசத்தைப்
  ...புனைந்து வேலை செய்வதுண்டு
  வலையில் வீழ்ந்த மீன்களாய்ப்போல்
  ...மக்கள் இன்னும் இருக்கையிலே
  இல்லை என்று ஆயிற்று
  ...விடியல் மட்டும் தமிழனுக்கு

  பதிலளிநீக்கு
 26. திகழ் சொன்னது…
  தலைவன் என்று சொல்கின்ற
  ...தடியன் இங்கே பலருண்டு
  கலைஞன் என்னும் கவசத்தைப்
  ...புனைந்து வேலை செய்வதுண்டு
  வலையில் வீழ்ந்த மீன்களைப்போல்
  ...மக்கள் இன்னும் இருக்கையிலே
  இலையென் றன்றோ ஆயிற்று
  ...விடியல் மட்டும் தமிழனுக்கு

  மா+மா+காய் சரியாக அமைந்து வந்துள்ளது திகழ்.
  (சிறு திருத்தம் காண்க)

  பாராட்டு.

  போகப் போக, கொஞ்சம் கொஞ்சமாக மோனை அமைப்பில் கவனம் செலுத்துங்கள்.

  எழுத எழுத எளிதாக இருக்கும்.
  தொடர்ந்து எழுதுங்கள்.
  விரைவாக எழுத வேண்டுமென்பதில்லை.

  பதிலளிநீக்கு
 27. பாராட்டு.

  போகப் போக, கொஞ்சம் கொஞ்சமாக மோனை அமைப்பில் கவனம் செலுத்துங்கள்.

  எழுத எழுத எளிதாக இருக்கும்.
  தொடர்ந்து எழுதுங்கள்.
  விரைவாக எழுத வேண்டுமென்பதில்லை.


  //நன்றி அய்யா

  கண்டிப்பாக

  பதிலளிநீக்கு
 28. திட்டம் தீட்டி விளைந்ததென்ன
  ...கொள்ளைக் கூட்ட‌ம் ப‌துக்கையிலே
  சட்டம் போட்டுத் தடுத்த‌தென்ன‌
  ...சாதிக் கூட்ட‌ம் இருக்கையிலே
  ஆட்ட‌ம் போட்டு அடைந்த‌தென்ன‌
  ...ஆடி அட‌ங்கும் வாழ்க்கையிலே
  தோட்ட‌ம் அமைத்துக் கண்ட‌தென்ன‌
  ...ம‌ர‌த்தை வெட்டும் ம‌னித‌ராலே

  பதிலளிநீக்கு
 29. நன்றாக எழுதியிருக்கிறீர்கள், திகழ்.

  சரியாக அமைந்திருக்கிறது.

  பாராட்டு.

  தொடர்ந்து எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
 30. திகழ் அவர்களின் பாடல் அருமை. வாழ்க.

  பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com