திங்கள், 28 ஜூலை, 2008

பாடம்16 தலையாகு எதுகை!

இக்கிழமைக்கான ஈற்றடியைப் பாடத்தின் இறுதியில் (கீழே) காண்க!

பொதுவாய் வெண்பாவின் அடிதோறும் முதற்சொல்லின் முதலெழுத்தாம் மோனைக்கு அடுத்த எழுத்தாகிய எதுகை அமைந்தால் போதும் என்பது விதி. மோனை எதுகை என்பது செய்யுளின் நயத்திற்காகச் செய்யப்படுவது. அந்நயத்தை மேலும் மெருகேற்ற தலையாகெதுகை பயன்படுகிறது.

அடிதோறும் முதற்சொல்லின் முதலெழுத்தைத் தவிர பின்வரும் அனைத்து எழுத்துகளும் ஒன்றிவருவதைத் தலையாகு எதுகைஎன்பர். இத்தலையாகு எதுகை செய்யுளின் நயத்தை மென்மேலும் இனிமையாக்கும்.

பொதுவாக மொழிவளமும் ஆளுமையும் தலையாகு எதுகை அமைப்பதற்கு இன்றியமையாததாகிறது. ஆகையால் தலையாகு எதுகை அமைப்பதில் அதிக கவனம் தேவை.

காட்டு:-

சட்டம் இயற்றிச் சதுராடி வேற்றுமொழிக்
கொட்டம் அடக்கத்தான் கூறுகிறேன் -திட்டம்
வகுக்கத்தான் வேண்டும் வளர்தமிழின் மாண்பைப்
தொகுக்கத்தான் வேண்டும் தொடர்ந்து! -அகரம்.அமுதா

இவ்வெண்பாவை நன்கு கவனிக்கவும். முதலடியின் முதற்சீரும் இரண்டாமடியின் முதற்கடைச் சீர்கள் முதலெழுத்தொழிய ஏனைய எழுத்துகள் ஒன்றிவந்தமை காண்க. மேலும் மூன்றாமடியின் முதற்சீரும் நான்காமடியின் முதற்சீரும் அஃதேபோல் ஒன்றிவந்தமை காண்க.

குறிப்பு:-

இவ்வெண்பாவின் மூன்றாம் நான்காம் அடிகளை நன்கு கவனிக்கவும். மூன்றாம் நான்காம் அடிகளின் முதற்சீர்கள் மட்டுமல்லாது அதற்கடுத்த சீர்களும் ஒன்றிவந்துள்ளது அல்லவா? அப்படி வருதல் செய்யுளுக்கு மேலும் சிறப்புச் சேர்க்கும்.

மதுக்கடைகள் மூடி வளம்சேர் தமிழ
முதுக்கடைகள் செய்ய முனைவீர் -புதுக்கடையால்
தாழும் பிறமொழிகள் தங்கத் தமிழ்நாட்டில்
வாழும் தமிழ்மொழியும் வந்து! -அகரம்.அமுதா

இவ்வெண்பாவில் அடிதோறும் தலையாகெதுகை நன்கமைந்தமை காண்க.

சொன்முன் னெழுத்தொழிய ஏனை எழுத்தெலாம்
நன்கொத்து நின்று நடந்தால் அதனைத்
தலையா(கு) எதுகையெனச் சாற்று! -அகரம்.அமுதா

இக்கிழமைக்கான ஈற்றடிக்குத் தலையாகு எதுகையை ஓரிடத்திலாவது அமைக்க முயலுக.

இக்கிழமைக்கான ஈற்றடி:- உழவின்றி உய்யா(து) உலகு!

அகரம்.அமுதா

18 கருத்துகள்:

 1. கஸ்டமாக் கீது ஈற்றடி. கொஞ்சம் சுலுவா வோணும்.  பழங்களும் பச்சைக்காய் கறிகளும் இன்றி
  கிழங்குகள் திண்றிடும் காலம் வருமோ
  இழந்திடல் இன்றி இனிதாய்நாம் வாழ
  உழவின்றி உய்யா துலகு


  ஹையா ஒப்பேத்திட்டேன். வாத்தியார் வந்து மார்க் போட்டாத் தெரியும் என்னா தப்புன்னு

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் ஜீவ்ஸ்! கடினம் என நினைத்திருந்தால் காந்தியால் இந்தியாவுக்கு விடுதலை பெற்றுத்தந்திருக்க முடியுமா?

  முயற்சியும் ஊக்கமும்தான் இப்பொழுது தேவை. ஊக்கம் நான் தருகிறேன். முயற்சியை நீங்கள் செய்யுங்கள். வெண்பா அருமை. சொற்சுவை பொருட்சுவை ஒருங்கே அமைந்துள்ளது. வாழ்த்துகள்.

  குறிப்பு:-

  கறிகளும் இன்றிக் கிழங்குகள் திண்றிடும் -என ஒற்று மிக வேண்டும்.

  பலவாய்த் தொழில்வளங்கள் பல்கிப் பெருகும்
  நிலையால் பசிப்பிணியும் நீங்கிடுமோ? நாடி
  உழுது நடும்நாற்றே ஊர்பசியைத் தீர்க்கும்;
  உழவின்றி உய்யா துலகு!

  பதிலளிநீக்கு
 3. ///பலவாய்த் தொழில்வளங்கள் பல்கிப் பெருகும்
  நிலையால் பசிப்பிணியும் நீங்கிடுமோ? நாடி
  உழுது நடும்நாற்றே ஊர்பசியைத் தீர்க்கும்;
  உழவின்றி உய்யா துலகு!///

  முதலிரண்டு அடிகளின் கருத்தினை யூகித்து வைத்திருந்தாலும் வார்த்தையில் வடிக்கத் தெரியவில்லை. ஆனாலும் இறுதி இரண்டு வரிகளை கிறுக்கி விட்டேன்.

  "கழனியில் காலூன்றி செய்கின்ற தொழிலான
  உழவின்றி உய்யாது உலகு"

  பதிலளிநீக்கு
 4. என் உள்ளத்தில் தோன்றியதைக்
  கிறுக்கியுள்ளேன்
  தளையோ,தவறோ இருப்பின்
  திருத்தவும்

  இயற்கையின் வரங்களாய் இலைகள் இருக்கையில்
  செயற்கை உரங்கள் இடின்,மண்ணை
  குழவின்றி செய்திடும்- சற்றே சிந்திங்கள்
  உழவின்றி உய்யா துலகு.

  ----------------------------

  பயிர்கள் இல்லையெனில் பாரினில் வாழும்
  உயிர்கள் அல்லல் படும்- படைப்பின்
  விழுவும் பொய்யா வண்ணம் செய்வோம்
  உழவின்றி உய்யா துலகு

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் தியாகராஜன்! இறுதி இரண்டு வரிகளைக் கிறுக்கிவிட்டீர்களா? கெட்டதுபோங்கள். எத்தனை அருமையான குறள்வெண்பா செய்திருக்கிறீர்கள் தெரியுமா?

  இச்சித்துத் தீந்தமிழில் இன்குறட்பா செய்தளித்தீர்
  மெச்சினோம் உம்மை மிக!

  பாடல் உணர்த்தும் பொருள் அருமையாக இருக்கிறது. தளை தட்டுகிறது அவ்வளவே. தாங்கள் உரைக்கவந்த பொருள் மாறாமலும் தளைதட்டாமலும் செய்துவிடுகிறேன்.

  "கழனியில் காலூன்றிச் செய்யுந் தொழிலாம்
  உழவின்றி உய்யாது உலகு"

  இப்பொழுது பார்த்தீர்களா தியாகராஜன்! தளையும் தட்டவில்லை. தாங்கள் உணர்த்தவந்த பொருளும் சிதையவில்லை. வாழ்த்துகள்.

  ===== ===== ===== ===== ===== ===== ===== ===== ===== =====

  நம் இழைக்குப் புதியவராம் திமிழ்மிளிர் அவர்களை வருக வருக வருக என வரவேற்கிறேன்.

  தங்களின் முயற்சியைப் பாராட்டுகிறேன். வாழ்த்துகள். அதென்ன சிந்திங்கள்? சிந்தியுங்கள் என்பதைத்தான் அப்படி எழுதியுள்ளீரா?

  முதல்பாடலில் அதிக இடங்களில் தளைதட்டுகிறது. இரண்டாம் பாடல் நன்று.

  பயிர்கள் இல்லையெனில் பாரினில் வாழும்
  உயிர்கள் அல்லல் படும்

  இவ்விருவரிகள் தளைதட்டவில்லை. அத்தோடு வெண்பாவின் ஈற்றுச் சீரில்வரவேண்டிய நாள்மலர் காசுபிறப்பு வாய்பாடில் ஒன்றாம் மலர் வாய்பாடெடுத்து முடிவதால் இது குறள்வெண்பாவாகும்.

  அளவியல் வெண்பாவின் இடையில் நாள் மலர் வாய்பாடு வரக்கூடா. இறுதியில் மட்டுமே வரவேண்டும். ஆனால் காசு பிறப்பு இவ்விரு வாய்பாடும் வரலாம். இவ்விரண்டும் வெண்பாவின் இடையில் வந்தால் தேமா புளிமாவாகக் கொள்ளப்படும்.

  வாழ்த்துகள். மீண்டும் முயலுங்கள்.

  பதிலளிநீக்கு
 6. வணிகப் பெருக்கம் வலிமை மிகுந்த
  அணுவின் துணையாலு மாகும் -கணைகள்
  எழுகின்ற காலம் இதுவென்ற போதும்
  உழவின்றி உய்யா துலகு!

  குண்டுகளால் மக்கள் குருதிக் குளம்நீந்தும்
  மண்டுகளால் வையம் மகிழ்ந்திடுமா? -என்றும்
  மழையின்றிப் புல்லும் மலரா ததைப்போல்
  உழவின்றி உய்யா துலகு!

  பாத்தென்றல் முருகடியான்.

  பதிலளிநீக்கு
 7. மாரி பொழிந்திட; மன்னன் குடிநடத்த;
  வாரி வழங்குகையார் வந்தீய; -ஊரில்
  இழவின்றி யாவரும் ஏற்றமுற் றாலும்
  உழவின்றி உய்யா துலகு!

  இழவு -வறுமை கேடு

  அகரம்.அமுதா

  பதிலளிநீக்கு
 8. பாம்பைப் பிடித்துப் படராலங் கொம்பேறித்
  தேம்பித்தன் வால்பார்த்துத் தேர்வின்றிக் -கூம்பி
  விழும்வாலி போன்று விளையும் அறிவியலும்
  உழவின்றி உய்யா துலகு!

  பனித்தேர் செதுக்கிப் பகல்முன் இழுப்பார்
  அணித்தேர்த் தமிழை அழிப்பார் -கணித்த
  முழவின்றி ஓசை முறையின்றிப் பாட்டுய்யா
  துழவின்றி உய்யா துலகு!

  பாத்தென்றல் முருகடியான்.

  பதிலளிநீக்கு
 9. வாழ வகையாய் வயலழித்து நாடாக்கிப்
  பாழும் தொழில்பலவாப் பல்கிடினும் -கூழும்
  பழஞ்சோறும் இன்றிப் பசிநீங்கா தென்றும்
  உழவின்றி உய்யா துலகு!

  சோலைகளைச் சாலைகளாய்த் தோற்றுவித்துப் பாலைகளை*
  வேலைத் தளம்செய்யும் வீணர்களால் -நாளை
  பழனம்* அழிந்துப் பயிர்செய் தொழிலாம்
  உழவின்றி உய்யா துலகு!

  பாலை* -பயிர்த்தொழில் முடிந்தபின் தரிசாய்க் கிடக்கும் நிலம்
  பழனம்* -வயல்

  அகரம்.அமுதா

  பதிலளிநீக்கு
 10. ///இச்சித்துத் தீந்தமிழில் இன்குறட்பா செய்தளித்தீர்
  மெச்சினோம் உம்மை மிக!///
  நன்றிகள் கோடி.

  எதையோ பிடிக்க எதுவோ வந்ததென சொல்வார்கள்.அதுபோலாக்கி விட்டேன்.

  ஆனாலும் ஊக்கப் படுத்திய உங்களுக்கு நன்றிகள்.தொடர்ந்து முயற்சிக்கிறேன் அமுதா(சுதாகர்)

  பாசமுடன்,
  தியாகராஜன்

  பதிலளிநீக்கு
 11. படைக்கலன் செய்வார் பனிநிலாச் செய்வார்
  உடைகலன் கப்பலுடன் ஊர்தி -படைப்பார்
  பழுதின்றி எந்தப் பணிசெய்த யார்க்கும்
  உழவின்றி உய்யா துலகு!

  உலகப் பெருந்தேர் உருள உதவி
  விலக்க முடியாத வேராய் -கலகக்
  குழுவும் உணவுண்ணக் கைகாட்டும் அச்சாம்
  உழவின்றி உய்யா துலகு!

  பாத்தென்றல் முருகடியான்.

  பதிலளிநீக்கு
 12. கொஞ்சமும் நீரைக் கொடார்கரு நாடகத்தார்;
  தஞ்சைநிலம் எல்லாம் தரிசாகிப் -பஞ்சம்
  எழுந்தாடக் கண்டபின்னும் ஏமாந் திருந்தால்
  உழவின்றி உய்யா துலகு!

  பற்றாக் குறையென்றே பஞ்சப்பண் பாடுகிறார்;
  முற்றாக நீரை முடக்குகிறார்; -அற்றார்
  புழங்கவும்* நீர்வழங்கார் போக்கால் வயல்காய்ந்
  துழவின்றி உய்யா துலகு!

  வழங்கும் மனமின்றி வைத்ததனைக் காத்துப்
  புழங்கும்* வகையறியாப் புல்லர் -முழக்கம்
  பழுதன்றி வேறில்லை பாரதமே! காண்பாய்
  உழவின்றி உய்யா துலகு!

  வியலாய்* முகில்வழங்கும் நீரை வழங்க
  வியலா தெனமறுப்பார் வீணர் -வயற்குக்
  கொழுநீரும்* இன்றேல் கொழுவூண்றிக் கீறும்
  உழவின்றி உய்யா துலகு!

  புழங்குதல்* -கையாளுதல்
  வியல்* -மிகுதி
  கொழுநீர்* -பெருகும் நீர்

  அகரம் அமுதா

  பதிலளிநீக்கு
 13. /வாழ்த்துகள். மீண்டும் முயலுங்கள்./

  நன்றிங்க

  பதிலளிநீக்கு
 14. நிலையில் மனிதர் நிலைத்து வளர்ந்து

  உலையில் உணவை சமைத்து இலையில்

  விழுந்திட, ஏனோ மறந்தார் எனினும்

  உழவின்றி உய்யா துலகு.

  பதிலளிநீக்கு
 15. இயந்திரங்கள் வந்துமிங் கேயுரங்க ளிட்டுந்தம்
  வயமிருந்த தேசெல்ல லேதுமோ? - ஓய்ந்த
  பழகிய மாடுசர்வை வற்கஞ்சிக் கூறும்
  உழவின்றி உய்யா(து) உலகு.

  பதிலளிநீக்கு
 16. விழைவின்றி நம்முள் விளையாது ஆற்றல்
  மொழியின்றி காண்போமா முன்னேற்றப் பாதை
  இழிவென்று எள்ளாதே எப்போதும் போற்றும்
  உழவின்றி உய்யா(து) உலகு

  ஆர்.கஸ்தூரிரங்கன்
  ஓசூர்

  பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com