திங்கள், 21 ஜூலை, 2008

பாடம்15 எதுகை!

இக்கிழமைக்கான ஈற்றடியைப் பாடஇறுதியில் (கீழே) காணலாம்.

பொதுவாக வெண்பாவில் இரண்டடிக்கு ஒரு எதுகையிட்டு எழுதுவது வழக்கம். ஆற்றல் மிக்கவர்கள் வெண்பாவின் அடிதோறும் ஒரே எதுகையைக் கையாண்டு முடிப்பதும் உண்டு. எதுகையைக்கையாண்டு எழுதுவதால் பாடல் இன்னிசையோடு விளங்குவதால் எதுகையைச் சிறப்பிக்க ஓரெதுகை வெண்பா(ஒரு விகர்ப்ப வெண்பா) ஈரெதுகை வெண்பா (இருவிகர்ப்ப வெண்பா) என்றும் வகைப்பிரித்து வழங்குவர்.

1-ஓருறழ்ச்சி வெண்பா (ஒரு விகர்ப்ப வெண்பா), (உறழ்ச்சி -வேறுபாடு)

வெண்பாவில் வரும் அடிகள் முழுவதும் ஒரே அடியெதுகையைக் கொண்டு முடியுமானால் அதை ஓருறழ்ச்சி(ஒருவிகர்ப்ப) வெண்பா என்றழைப்பர்.

காட்டு:-

பூக்காடு நேர்தமிழைப் போற்றிப்பாத் தென்றல்செய்
பாக்காடு தான்காடு மற்றெல்லாம் -சாக்காடு;
சீக்காடு; முட்காடு; தீக்காடு; முக்காடு;
நோக்காடு மற்றரைவேக் காடு! -அகரம்.அமுதா

இவ்வெண்பாவை நன்கு நோக்குக. அடிதோறும் அமைந்துள்ள எதுகை க்-என்ற ஒரே எழுத்தை எதுகையாகக் கொண்டமைந்தமையால் இவ்வெண்பா ஓரெதுகை(ஒருவிகர்ப்ப) வெண்பா எனப்படும்.

தரும்வெண்பா தன்னில் தனிச்சீர் முதலாய்
இரு(ம்)அடிகள் ஒத்த எதுகை -பெறின்அஃதை
ஓருறழ்ச்சி என்றே உணர்! -அகரம்.அமுதா

குறிப்பு:-

தரும்வெண்பா தன்னில் தனிச்சீர் முதலாய் - நேரிசை வெண்பாவில் மட்டுமே தனிச்சீரையும் சேர்த்து ஒருறழ்ச்சியா, ஈருறழ்ச்சியா என்பதைக் கணக்கிடவேண்டும். இன்னிசை வெண்பாவெனில் அடிதோறும் வரும் எதுகைகளை மட்டும் மனதில் கொண்டு ஒருறழ்ச்சியா ஈருறழ்ச்சியா எனக் கண்டால் போதும்.

2-ஈருறழ்ச்சி வெண்பா (இருவிகர்ப்ப வெண்பா)

இரண்டடிக்கு ஓரெதுகை என்ற விகிதத்தில் வெவ்வேறு எதுகைகளைக் கொண்டுவருவது ஈருறழ்ச்சி வெண்பா எனப்படும்.

பெண்டகை யாட்றன் பிறங்கும் அழகையெல்லாம்
கொண்டகையாற் றொட்டுக் குதுகளித்தேன்! -கொண்டலைப்போற்
கூத்தாடும் நுன்னிடையில் கூத்தாடக் கட்டில்மேல்
பூத்தாடிற் றின்பம் புலர்ந்து! -அகரம்.அமுதா

இவ்வெண்பாவை நன்கு கவனிக்கவும். முதல் இரண்டடியில் ண் -எதுகையாகவும் அடுத்த இரண்டடிகளுக்கு த் -எதுகையாகவும் வந்தமையால் இவ்வெண்பா ஈருறழ்ச்சி வெண்பா எனப்படும்.

குறிப்பு:-

ஈருறழ்ச்சி வெண்பா என்பது சிந்தியல் அளவியல் (நேரிசை, இன்னிசை) வெண்பாக்களுக்கு மட்டுமே பொருந்தும். பஃறொடை மற்றும் கலிவெண்பாக்களில் இரண்டிரண்டு அடிகளுக்கு ஓருறழ்ச்சி வருமானால் அதை பல உறழ்ச்சி (பலவிகர்ப்பம்) என்பதே சரியாகும்.

வருமடிகள் நான்காய் வளரும்வெண் பாவில்
இருவடிகட் கோரெதுகை ஏற்று -வரின்அஃதை
ஈருறழ்ச்சி என்றே இயம்பு! -அகரம்.அமுதா

ஈற்றடி வழங்கும் நேரம்:-

திரு முகவை மைந்தன் இராம்குமார் அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கையில் அவர் சொன்னார்:- கற்பனைத் திறத்தையும் புலமைத்திறத்தையும் காட்டுவதற்காக ஈற்றடி வழங்குவதை விட்டுவிட்டு அன்றாடம் நாட்டில் நடந்தேறும் முகன்மை நிகழ்வுகளை வெண்பாவாக்கும் விதமாக ஈற்றடி வழங்கலாம் அல்லவா? என்றார்.

அவர் கூற்று எனக்கும் சரிஎன்றே பட்டது. நீங்களே ஒரு நிகழ்வைச் சொல்லுங்களேன் என்றேன்.

அணுவாற்றல் ஒப்பந்தம் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. அதற்கேற்றாற்போல் ஈற்றடி வழங்கலாமே என்றார்.

ஈற்றடி உண்டேல் இயம்பு! என்றேன் நான். அவர் நல்கிய ஈற்றடிகள் இதோ:-

அணுவாற்றல் வேண்டாம் அகற்று!

அணுவாற்றல் வேண்டும் அறி!

நாம் இவ்விடம் இரண்டு ஈற்றடிகளைப் பதிவு செய்கிறோம். அமெரிக்காவுடன் அணுஒப்பந்தம் நல்லதே எனக்கருதுபவர்கள், ''அணுவாற்றல் வேண்டும் அறி!'' என்ற ஈற்றடிக்கும் வேண்டாம் எனக்கருதுபவர்கள், ''அணுவாற்றல் வேண்டாம் அகற்று'' என்ற ஈற்றடிகளுக்கும் வெண்பா வடிக்க வாரீர் வாரீர் என வரவேற்கிறேன்.

அகரம்.அமுதா

17 கருத்துகள்:

 1. பாசமிகு அமுதா!வணக்கம்.
  தங்கள் வெண்பா அருமையாக உள்ளது.
  அடியேனுக்கு
  படிக்க மட்டும் தான் தெரியும்.
  படைக்கத் தெரியாது.
  ஆனாலும் முயற்சிக்கிறேன்.
  நன்றியுடன்,
  தியாகராஜன்.

  பதிலளிநீக்கு
 2. முயற்சி திருவினையாக்கும். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. அணுசக்தி ஒப்பந்தம் பற்றி அப்புறம் முயற்சிக்கிறேன், முதலில் ஒவ்வொரு அணுவிலும் நிறையும் இறையாற்றல் பற்றி:

  அணுவிலும் யாவிலும் ஆழ்ந்து அகண்டிடும்

  நுண்ணிய அறிவே சிவமெனும் எண்ணமதில்

  தன்னை உணர்ந்திடும் தன்னறி வாம்-அவ்

  வணுவாற்றல் வேண்டும் அறி.

  பதிலளிநீக்கு
 4. பலகல் நிலத்தைப் பறித்தாரே சீனர்;
  சிலகல்லை மீட்டுச் சிரிக்க! -உலகில்
  இனிநம்மைக் காக்க இறையாண்மைப் பூக்க
  அணுவாற்றல் வேண்டும் அறி!

  இருளில் கிடந்திழியும் இந்திய மண்ணின்
  பொருளைப் பெருக்கிப் புதுக்கும் -அருளைப்
  பணிவுந் தருமெனினும் பாரார் மதிக்க
  அணுவாற்றல் வேண்டும் அறி!

  பாத்தென்றல் முருகடியான்

  பதிலளிநீக்கு
 5. மின்சாரத் தேவைக்காய் மேற்கின் அடிவீழ்தல்
  தன்மானப் போக்கா? தகுமோதான்? -நன்காய்ந்(து)
  உணர்ந்தேயிவ் வொப்பம் உதவா தெனத்தேர்ந்(து)
  அணுவாற்றல் வேண்டாம் அகற்று!

  நம்பி அவருறவை நாமேற்றுப் பின்னாளில்
  வெம்பி விழுவதுவும் வேண்டாமே! -தெம்பால்
  திணவெடுத்தத் தோளர்தம் தீயுறவுக் கஞ்சி
  அணுவாற்றல் வேண்டாம் அகற்று!

  அகரம்.அமுதா

  பதிலளிநீக்கு
 6. அஞ்சி அவதியுற வேண்டா, அவனியில்

  விஞ்சி வல்லரசாய் திகழ்ந்திட தஞ்சமிலா

  தன்னிறைவு தந்திடும் ஒப்பந்த மிதனில்

  அணுவாற்றல் வேண்டும் அறி.

  பதிலளிநீக்கு
 7. ஆ, தளைகள் தட்டுவதால், மீள் முயற்சி:

  அஞ்சி அவதியுற வேண்டா அவனியில்

  விஞ்சி வல்லரசாய் மிஞ்சிட தஞ்சமிலா

  தன்னிறைவு தந்திடும் ஒப்பம் இதனில்

  அணுவாற்றால் வேண்டும் அறி.

  பதிலளிநீக்கு
 8. உயிர்நாடி யானதிந்த மின்சக்தி கொண்டு

  பயிர்கட்டி ஓங்கி வளமெங்கும் உயர்ந்திட

  நுண்ணணுவை ஆனைகட்டிப் போரடித்து ஆட்சிசெய்ய

  அணுவாற்றால் வேண்டும் அறி.

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் ஜீவா! என் வெண்பாவிற்கு எதிர்வெண்பா பாடி வியக்கச்செய்துள்ளீர். தளை நிறைய இடங்களில் தட்டுகிறதே!

  அஞ்சி அவதியுற வேண்டா அவனியில்
  விஞ்சி+ வல்லரசாய் மிஞ்சிட தஞ்சமிலா
  தன்னிறைவு தந்திடும் ஒப்பம் இதனில்
  அணுவாற்றால் வேண்டும் அறி.

  உயிர்நாடி யானதிந்த மின்சக்தி கொண்டு
  பயிர்கட்டி ஓங்கி வளமெங்கும்+ உயர்ந்திட
  நுண்ணணுவை ஆனைகட்டிப் போரடித்து ஆட்சிசெய்ய
  அணுவாற்றால் வேண்டும் அறி.

  விஞ்சி+ வல்லரசாய் = மாமுன் நிரைவர வேண்டும்

  வளமெங்கும்+ உயர்ந்திட = காய்முன் நேர்வரவேண்டும்.

  கவனம் தேவை. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 10. வல்லரசை வாழ்த்தும் வழக்கம் வளர்வதனால்
  நல்லரசை ஏய்க்கும் நடைமுறையால் -உள்ளார்
  அணுவாளக் கற்றவரென் றாவதனால் யார்க்கும்
  அணுவாற்றல் வேண்டும் அறி!

  அடிமை விலங்கை அணியாகச் சூடும்
  மடிமை மடிதூங்கும் மக்கள் -விடிய
  உணர்வாற்றல் ஓங்க உலகச் சமத்திற்(கு)
  அணுவாற்றல் வேண்டும் அறி!

  பாத்தென்றல் முருகடியான்

  பதிலளிநீக்கு
 11. வல்லார் வகுத்ததே வாய்க்கால் எனவானால்
  இல்லாரின் சொல்லோ எடுபடும்? -வல்லார்
  பிணக்கின் இலார்க்குப் பெருந்துயரே மிஞ்சும்;
  அணுவாற்றல் வேண்டாம் அகற்று!

  அகரம். அமுதா

  பதிலளிநீக்கு
 12. அடடா, தளை மீண்டும் தட்டி விட்டதே, சரி செய்துளேன்:

  அஞ்சி அவதியுற வேண்டா அவனியில்
  விஞ்சி அமைதியே மிஞ்சிட தஞ்சமிலா
  தன்னிறைவு தந்திடும் ஒப்பம் இதனில்
  அணுவாற்றால் வேண்டும் அறி.

  உயிர்நாடி யானதிந்த மின்சக்தி கொண்டு
  பயிர்கட்டி ஓங்கி வளமும் உயர்ந்திட
  நுண்ணணுவை ஆனைகட்டிப் போரடித்து ஆட்சிசெய்ய
  அணுவாற்றால் வேண்டும் அறி.

  பதிலளிநீக்கு
 13. மீண்டும் ஓரிடம் தளைதட்டுகிறது.

  உயிர்நாடி யானதிந்த மின்சக்தி கொண்டு
  பயிர்கட்டி ஓங்கி வளமும் உயர்ந்திட
  நுண்ணணுவை ஆனைகட்டிப் போரடித்து ஆட்சிசெய்ய+
  அணுவாற்றால் வேண்டும் அறி.

  ஆட்சிசெய்ய + அணுவாற்றல்

  "போரடித் தாள அணுவாற்றல்" - என்றால் தளைதட்டாதிருக்கும்.

  திருத்திய வெண்பா பின்வருமாறு:-

  உயிர்நாடி யானதிந்த மின்சக்தி கொண்டு
  பயிர்கட்டி ஓங்கி வளமும் உயர்ந்திட
  நுண்ணணுவை ஆனைகட்டிப் போரடித் தாள
  அணுவாற்றால் வேண்டும் அறி.

  வாழ்த்துகள் ஜீவா! இன்னும் தங்களுக்கு வெண்பா இயல்பாக வர நிறைய எழுதிஎழுதிப் பயிற்சி பெறவும். என்னாசான் பாத்தென்றாரின் வெண்பாக்களைப் பார்த்தீர்களா? இயல்பான ஓட்டமும் சொற்செருக்கும் மிளிர்ந்தாடுகிறதல்லவா? முயற்சிக்கவும்.உம்மாலும் முடியும்.

  மேற்கு கிழக்கென்று மேதினியை ரெண்டாக்கி
  மேற்கு கிழக்கையாள விட்டுவிட்டோம் -மேற்கை
  இனியும்நாம் நம்பும் இழிநிலை ஏனோ?
  அணுவாற்றல் வேண்டாம் அகற்று!

  அகரம்.அமுதா

  பதிலளிநீக்கு
 14. அடிமைத் தனமதை ஆர்த்திடின் நம்மின்
  குடிமையில் கூடும் குறைதான் - முடிவாய்
  இணக்கத்தைப் பேணிடும் இந்தியர் கூற்றாய்
  அணுவாற்றல் வேண்டாம் அகற்று!

  அடகு நிலையினில் ஆட்படுத்தி னாரா?
  இடறுகள் ஏனோ இயம்பு - மடமைப்
  பிணக்கினைப் போக்கிடு; பிற்காலம் நன்மை
  அணுவாற்றல் வேண்டும் அறி!

  பதிலளிநீக்கு
 15. இரு வெண்பாக்களையும் அதனதன் நிலையில் அழகாக வடித்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 16. இணையில் வளங்கள் இழக்கும் துயரும்
  துணையில் நிலையும் தொடுமுன்‍‍‍ - துணிவாய்
  அணுகும் முறையே அறிவின் முதி்ர்வு
  அணுவாற்றல் வேண்டும் அறி


  ஆர். கஸ்தூரிரங்கன்
  ஓசூர்

  பதிலளிநீக்கு
 17. அழகான வெண்பாவியற்றியிருக்கிறீர்கள் கஸ்தூரிரங்கன் அவர்களே! சப்பானில் ஏற்றபட்ட நிலை அறிந்தும் அணுவாற்றல் வேண்டும் என்பது வியப்பாக உள்ளது. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com