திங்கள், 7 ஜூலை, 2008

ஈற்றடிக்கு வெண்பா எழுது!

அன்பன்என் பேரமுதா! ஆர்ப்பதெல்லாம் சீர்மரபே!
இன்னுமிரு பத்தெட்டை எட்டவில்லை; -மன்னும்
குணத்தமிழர் மாமரபு குன்றா துமக்கு
வணக்கங்கள் வைக்கின்றேன் வந்து!

என்னைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கே சுட்டவும்!

நாம், இவ்வெண்பாப் பகுதியைத் தொடங்கி நடத்திவருவதன் நோக்கம் வெண்பா பயில இயற்ற வேண்டும் என்னும் விருப்பமிருந்தும் இலக்கணம் அறியாக் காரணத்தால் தங்கள் கனவு நிறைவேறாதிருக்கும் வலைப்பதிவர்களுக்கு வெண்பா பயிலவும் இயற்றவும் இலகுதமிழில் வேற்றுமொழி கலவா வெல்தமிழில் பயிற்றுவிப்பதே.

மரபை அறியும் மனமுடை யோர்க்காய்க்
குறையில்வெண் பாவைக் குறிப்பாய் -அறியத்
தருவ(து) அவாஎன் றனுக்கு!

விரித்தேன் வலையை விழும்மீன்என் றல்ல;
விரும்பித் தமிழை விரைந்தே -பருகும்
வலைப்பதி வாளர்க்காய் வந்து!

நம் "வெண்பா எழுதலாம் வாங்க!" வலைக்கு வந்துசெல்லும் அன்பர்களுக்கும் இனி வரவிருக்கும் அன்பர்களுக்கும் ஓர் நற்செய்தி! சற்றேறக் குறைய நம் வெண்பாப் பாடம் முடிவடையும் நிலையில் உள்ளது.

வெண்பாவின் இலக்கணத்தைக் கற்றுக்கொண்ட நாம் இனிவரும் பாடங்களில் வெண்பாவின் நுணுக்கங்கள் பலவற்றையும் பார்க்கவிருக்கிறோம்.

அவற்றைப் பாடமாகத் தருவதில் எப்பயனும் இல்லை. பாடமாகக் கொடுக்கப்படினும் அவ்வளவு எளிதில் மனதில் பதியாதாதலால் ஒவ்வொரு நுண்ணிய உட்பிரிவையும் விளக்கும் பாடத்துடன் அதுசார்ந்த ஈற்றடியையும் அப்பாடத்துடன் இணைக்கலாம் எனக்கருதுகிறேன்.

நான் அளிக்கும் நுட்பங்களை அவ்வீற்றடி கொண்டு நீங்கள் வெண்பாவாக்கும் போழ்து எளிதில் மனதில் பதிவதாயிருக்கும் எனக்கருதுகிறேன். இதற்கத் தங்களின் பேராதரவை எதிர்பார்க்கிறேன்.

"வெண்பா எழுதலாம் வாங்க" எனும்என்றன்
பண்பாய நல்வலையில் பங்கேற்க -நண்ப!உமை
அன்போ டழைத்தேன்; அழைப்புத் தனைஏற்றே
என்னீற் றடிக்குவெண்பா ஈ!

ஈற்றடிக்கு வெண்பா இயற்றும் விளையாட்டை
ஏற்று நடாத்துகிறேன் என்வலையில் -பாற்றொடுக்க
வாரீர் அலைகடலாய் வந்தேஉம் ஆதரவைத்
தாரீர் எனஅழைத்தேன் தாழ்ந்து!

வெண்பா எழுதத் துவங்கும் புதிதில் எதையெழுதுவது? எப்படி எழுதுவது? அப்படியே எழுதத்துவங்கினும் வெண்பா எழுத அதிகநேரம் பிடிப்பதோடு பொருட்சிதைவும் ஏற்படும் வாய்ப்புள்ளது. இதுபோன்ற குழப்பங்களைத் தவிற்கவும் புதுப்புதுக் கருத்துக்களைக் கையாள எற்றவகையிலும் தங்களுக்கு எளிமைபடுத்தவே நாம் இப்பகுதியைத் துவங்கியிருக்கிறோம்.இதனையே அழைப்பாக ஏற்று அனைவரும் வாரீர். ஆதரவு தாரீர்.

பாவிற் சிறந்தவெண் பாவின் தளையறிந்தே
தாவின்றித் தீட்டத் தலைப்படுவோம் -கூவி
வருகவென் றார்ப்பரித்தேன்; வந்தா தரிப்பீர்;
வருந்தகையார் எல்லாரும் வந்து!

நாம் வெவ்வேறாயினும் ஒருவர் முகம் ஒருவர் அறிந்ததில்லை எனினும் நாம் ஒருமுகமாய்ச் செயல் படுவதால் நம் எழுத்துக்களில் நாளடைவில் சொற்சுவையும் பொருட்சுவையும் அமையப்பெருதலைக் கண்கூடாகக் காணலாம். நம் சொல்லாட்சியில் பாவுள் பொருளாட்சி செய்தலைக் காண்போம். நாம் என்பதே நன்மை.

நானென் றுரைத்தோர் நளிவுற்றுச் சீரயிந்துப்
போன திசையறியோம் பொய்யில்லை; -நானற்ற
நாமன்றோ நன்மை நவில்!

ஊற்றெடுக்கும் கற்பனையை ஒண்டமிழின் பாவகையுள்
ஏற்றமுறும் வெண்பாவில் ஏற்றிவைப்போம் -ஆற்றலுறும்
ஈற்றடியை யானளிப்பேன் ஈற்றடிக் கேற்றபடி
சாற்றிடுவீர் அன்பனெனைச் சார்ந்து!

இசைமிகு இன்றமிழில் ஏறார் நடைசெய்
வசையில்வெண் பாக்கள் வடித்து -நசையறு
நாற்றிசைக்கும் நம்புகழை நாமெடுத்துச் செல்வோம்என்
ஈற்றடிக்கு வெண்பா எழுது!

ஈற்றடியை வழங்குவதற்குமுன் வெண்பாவில் இடம்பெற வேண்டிய அடிப்படைத் தகுதிகளைச் சுருக்கமாகக் குறிப்பிடுதல் நலம் எனக்கருதுகிறேன்.

1-ஓரடிக்குள் மோனை நன்கமையப் பெறுதல்.
(பொழிப்புமோனை அமைத்தல் நன்று. அது முடியாத போது இணைமோனையோ ஒரூஉ மோனையோ அமைக்கலாம்) மேலும் மோனையைப் பற்றித் தெரிந்து கொள்ள இங்கே சுட்டவும்.

2-அடிதோறும் எதுகை அமைத்தல்.
(1,5,8-ம் சீர்களில் ஒத்த எதுகையும் 9மற்றும் 13-ம் சீர்களில் ஒத்த எதுகையும் அமைதல் வேண்டும்) எதுகையைப் பற்றி அறிய இங்கு சுட்டவும்.

3-அளவியல் வெண்பாவிற்கு மொத்தம் 15சீர்கள் வரும். ஒவ்வொரு சீரையும் தனித்தனிச் சொற்களைக் கொண்டு நிறப்புதல் வேண்டும்.

4-நேரிசை வெண்பா எனில் கட்டாயம் எதுகை எடுத்த தனிச்சீர் அமையப்பெறுதல் வேண்டும்.

5-இன்னிசை வெண்பா எனில் தனிச்சீர் ஒழிய அடிதோறும் எதுகை யமைத்தல் வேண்டும். (பெருவாரியாகத் தற்காலத்தில் இன்னிசை வெண்பாவில் இம்முறையையே கையாள்கிறார்கள்.)

மேற்கூறிய வெண்பாவிற்கான விதிமுறைகளை மனதில் ஏற்றிக்கொண்டு நம் வெண்பா எழுதலாம் வாங்க எனும் ஆடுதளத்தில் புகுந்து விளையாடிக் கலக்குவீர்களாக!

விளையாட்டைத் துவங்குமுன் தங்கள் அனைவரின் சார்பாகவும் தமிழ்வணக்கமும், கணபதி வணக்கமும் செய்துவடுகிறேன்.

சொற்சிலம்பம் ஆடத் துணிந்தோம்; புடம்பொட்டப்
பொற்சிலை போன்றவளே பூத்துவா! -மற்சிலம்பம்
ஆடிப் பகைவளர்க்கும் ஆசை எமக்கில்லை
பாடித் தமிழ்வளர்ப்போம் பார்!


கால்குலேட்டர் கைபோன் கணினிகடி காரமிவை
நாலும் உனக்களித்து நான்மகிழ்வேன்! -கோலக்
கணபதியே! வெண்பாக் கலக்க(ல்)விளை யாட்டில்
பிணக்கின்றிக் காப்பாய் பெரிது!


சரி. கணபதியையும் வணங்கியாகி விட்டது. இப்பொழுது வெண்பா விளையாட்டைத் துவங்குவோமா?

உமக்கான ஈற்றடி:- "வெண்பா விரித்தேன் விரைந்து!" -கலக்குங்க-

அகரம்.அமுதா

53 கருத்துகள்:

 1. ஈற்றடி தந்து, வெண்பா எழுதும் போட்டிக்கு compliment ஆக
  வினாயகனுக்கு கால்குலேட்டர் கணினி கைபோன் கடிகாரம் தருவீர்களா ?
  அப்படியா !
  இதுபற்றி வினாயகப் பெருமானிடம் நான் கேட்ட போது லேட்டஸ்ட் ஜபான் மேக்
  ஹெச். டி. 353 மாடல், டி.வி, கணினி, GPS (Global Positioning Satellite )
  கொண்ட கைஃபோன் தான் அவருக்கு வேண்டுமாம். தனித்தனியாக கால்குலேட்டர்,
  கணினி, கடிகாரம் எல்லாம் கி.மு. வாம். உங்களிடம் சொல்லச் சொன்னார்.
  அப்போதுதான் உலகத்தின் எல்லா திசைகளிலிருந்தும் வரும் வெண்பாக்களை
  உடனுக்குடன் real time assessment செய்து நீதி வழங்க முடியுமாம்.

  சுப்பு ரத்தினம்.
  தஞ்சை.

  பதிலளிநீக்கு
 2. ஆணி நிறைய இருக்கு பொறுங்கநான்
  வெண்பா விரிப்பேன் விரைந்து

  பதிலளிநீக்கு
 3. //////ஈற்றடி தந்து, வெண்பா எழுதும் போட்டிக்கு compliment ஆக
  வினாயகனுக்கு கால்குலேட்டர் கணினி கைபோன் கடிகாரம் தருவீர்களா ?
  அப்படியா !
  இதுபற்றி வினாயகப் பெருமானிடம் நான் கேட்ட போது லேட்டஸ்ட் ஜபான் மேக்
  ஹெச். டி. 353 மாடல், டி.வி, கணினி, GPS (Global Positioning Satellite )
  கொண்ட கைஃபோன் தான் அவருக்கு வேண்டுமாம்./////

  ஜப்பான் மேக்கெல்லாம் முடியாதுங்களே! ஏதோ நம்ம தகுதிக்கு சைனா மேக் வாங்கிக் காணிக்கையா செலுத்தலாம். நீங்க எனக்காக வினாயகரிடம் ரெக்கமண்ட் பண்ணுங்களேன்.

  ////ஆணி நிறைய இருக்கு பொறுங்கநான்
  வெண்பா விரிப்பேன் விரைந்து////

  வாங்க முகவை மைந்தன் அவர்களே! நம்ம ஈற்றடிக்கு வெண்பா பாடிய முதல் ஆள் நீங்கதான். உங்களுக்கென் மனமார்ந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன். அதென்ன ஆணி நிறைய இருக்கு?

  பதிலளிநீக்கு
 4. சிந்தனையில் பந்தலிட்டு சந்தகவி நான்படைக்க
  வந்துவிளை யாடுவா வென்றழைத்தாய் - செந்தமிழில்
  ஒண்பாக்கள் செய்பவனே உன்தளத்தில் ஈற்றடிக்கு
  வெண்பா விரித்தேன் விரைந்து.
  - இராஜகுரு

  பதிலளிநீக்கு
 5. வாருங்கள் ராஜகுரு! மிக அருமையான வெண்பாவை வழங்கியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

  என்தளத்தில் வந்துதித்(து) ஈற்றடிக்கு வெண்பாவை
  நன்கமைத்துத் தந்தயென் நண்பனே! -உன்வருகை
  என்வானுக் கோர்வெள்ளி என்பதனைச் சொல்லிடவே
  வெண்பா விரித்தேன் விரைந்து!

  பதிலளிநீக்கு
 6. இப்போதுதான் பார்த்தேன் மேடம், மாலை அலுவல் முடித்தபின் வந்து முயற்சிக்கிறேன்!

  பதிலளிநீக்கு
 7. அரை மணி நேரத்தில் முடித்தேன்!:

  காலைப் பிடிக்க கணபதி கண்ணசைக்க
  காலை தொடங்கிய ஆட்டத்தில் மாலையே
  நண்பர் அமுதா இடுகையில் பின்னூட்ட
  வெண்பா விரித்தேன் விரைந்து!

  பதிலளிநீக்கு
 8. ஜீவா! வெண்பா அருமை. அரைமணி நேரத்திற் குள்ளாகவே எழுதியமைக்கென் பாராட்டுக்கள்.

  ஐங்கரத்தான் கண்ணசைக்க ஆர்ப்பரித்தென் நல்வலையில்
  பைந்தமிழின் சொல்லெடுத்துப் பாவடித்தீர் -மெய்சிலிர்க்க
  நண்பா! உனைவாழ்த்தி நாலுவரி பாடத்தான்
  வெண்பா விரித்தேன் விரைந்து!

  பதிலளிநீக்கு
 9. முயற்சித்தேன் உம்போல்; முடியலை. ஆயின்
  தயங்கித் தருகிறேன் பாட்டு!


  வெண்பா எழுதலாம் வாங்க எனஅழைத்து
  வெண்பா வகுந்தீர் இணையத்தில் - கண்ணொற்றும்
  வெண்பாக்கள் தூண்ட இதோநானும் உம்மிடத்தில்
  வெண்பா விரித்தேன் விரைந்து

  வேலை இருக்கென்றால் 'ஆணி புடுங்கிடும்
  வேலையோ?' என்பதால் ஆணியை வேலையாய்க்
  கொண்டார் குறும்பர். ஒருதுணுக்காய் இவ்விடம்
  வெண்பா விரித்தேன் விரைந்து

  பதிலளிநீக்கு
 10. /////வெண்பா எழுதலாம் வாங்க எனஅழைத்து
  வெண்பா வகுந்தீர் இணையத்தில் - கண்ணொற்றும்
  வெண்பாக்கள் தூண்ட இதோநானும் உம்மிடத்தில்
  வெண்பா விரித்தேன் விரைந்து/////


  முகவை! வெண்பா நன்று

  "வெண்பா விரிக்க விரைந்திடுக" என்றவுடன்
  வெண்பா விரித்து விரைந்தேகிப் -பண்பாயவ்
  வெண்பாவைப் பின்னூட்டில் இட்டீர்; உமைவாழ்த்தி
  வெண்பா விரித்தேன் விரைந்து!

  பதிலளிநீக்கு
 11. அழைத்தாரே நண்பர் அகரம் அமுதன்
  இழையினில் வெண்பா விரிக்க - மழையென
  நண்பரின் ஞானமும் நானறிவேன் அன்புடன்
  வெண்பா விரிப்பேன் விரைந்து!

  (ஆறு நிமிட அவசரத்தில் தந்ததிது
  கூறு தவறேதும் கண்டு)

  பின்னர் வருவேன் பெருமளவு கண்டிட
  என்றும் தமிழே இனிது!

  பதிலளிநீக்கு
 12. இப்னு ஹம்துன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  தேன்சிந்தும் பூங்கவிதை தீட்டி எமக்களித்தீர்
  வான்சிந்தும் மாரியென வந்து!

  தங்களின் வெண்பாவில் தங்களின் அனுமதியோடு ஒரு சொல்லை மாற்றலாமா? மோனை அமையவேண்டி!

  அழைத்தாரே நண்பர் அகரம் அமுதன்
  இழையினில் வெண்பா இழைக்க - மழையென
  நண்பரின் ஞானமும் நானறிவேன் அன்புடன்
  வெண்பா விரிப்பேன் விரைந்து!

  அழைத்தக்கால் வந்து அமுதெனவே வெண்பா
  இழைத்திட்டார் என்நண்பர் இப்னு -மழைத்திடும்
  விண்முகிலின் மின்போல் மிளிருமவர் பாவென்றே
  வெண்பா விரித்தேன் விரைத்து!

  பதிலளிநீக்கு
 13. பாப்பூவில் வந்தென்னை பண்புடன் அன்புடன்
  கூப்பிட்ட நண்பர் குரலுக்கு - யாப்பினில்
  தண்பூச்செண்(டு) ஏந்தித் தமிழாலே வாழ்த்திட
  வெண்பா விரித்தேன் விரைந்து

  பதிலளிநீக்கு
 14. இன்றுதான் உங்கள் வெண்பா குறித்த வலைபூவைக் கண்டேன்

  மிக அருமையான வலைப்பதிவு
  உங்கள் இந்த சீரிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  வகுப்பறைக்கு மிக தாமதமாக வந்தாலும் என்னையும் உங்கள் வகுப்பறையில் சேர்த்து கொள்வீர்கள் என நம்புகிறேன்

  நான் தமிழில் மிகமிக சிற்றறிவுள்ளவன் , நிறைய சந்தேகங்கள் உண்டு , அதை தனி மடலில் அனுப்புகிறேன்

  நன்றி

  அன்புடன்

  அதிஷா

  பதிலளிநீக்கு
 15. வெண்பா எழுதலாம் வாங்கவென்று அமுதா

  பண்பாய் அழைக்கிறார் பாரீர் வலையயுலகில்

  சிரிப்பை எழுத்தாய் சிந்துமென் போன்றோரும்

  சிறப்பாய் எழுதிடலாம் வாரீர்!

  பதிலளிநீக்கு
 16. எழுதத்தான் ஆவல் எனக்கு மிருந்தும்
  உழுத வயல்போல் உணர்வு - செழிப்புடன்
  கண்ணில் படுமிக் களைகள் விலக்கியே
  வெண்பா வடிப்போம் விரைந்து!


  அலுவல் பணிகள் அயராது தீர்த்து
  நிலுவையில் ஏதும் நிறுத்தா நிலையினில்
  அன்பை கடமை அதுபோல் உயர்வையும்
  வெண்பா வடிப்போம் விரைந்து!

  நித்தியச் சொல்லெடுத்து நீட்டுக சிந்தனை
  சித்தம் செலுத்தி செதுக்கிடு - அத்துடன்
  இன்பத் தமிழின் இலக்கணம் போற்றியே
  வெண்பா வடிப்போம் விரைந்து!

  பதிலளிநீக்கு
 17. உயர்திரு ஓகை அவர்களின் வெண்பா பாடும் திறமறிந்து வியக்கிறேன். சொன்னயமும் பொருள்நயமும் கொஞ்சி விளையாடுகிறது. வாழ்த்துக்கள் திரு ஓகையவர்களே!

  தோகைபோல் தூயொளியைத் தொன்தமிழின் பாவில்செய்(து)
  ஓகைநம் பின்னூட்டில் ஒர்ந்தளித்தார் -ஆகையினால்
  நண்பர் அவருக்கென் நன்றிகளைக் கூறிடவே
  வெண்பா விரித்தேன் விரைந்து!

  பதிலளிநீக்கு
 18. நண்பர் அதிஷா! தங்களாலும் முடியும். நன்கு வெண்பாத் தளைகளைக் கவனித்துக் கற்கவும். பின் பாருங்கள். என்னையெல்லாம் ஓரம் கட்டுவதுபோல் நண்பர்கள் ஓகை மற்றும் இப்னுஹம்துன் அளவிற்கு நீங்களும் எழுதுவீர்கள்.

  தோழர் ஹம்துன் அவர்களே. மழை போல் பொழிகிறீர். நீங்கள் வான் நான் நிலம்.

  கண்ணில் படுமக் களைகள் விளக்கியே
  வெண்பா விரிப்போம் விரைந்தென்றே -நண்பர்
  அழைத்தார் அழைப்பதனை ஆழ்மனத் தேற்று
  விழைந்தேன் வெண்பா விரித்து!

  பதிலளிநீக்கு
 19. திரு பரிசல் காரன் அவர்களே! சிறப்பான வெண்பா செய்து அளித்துள்ளீர்கள் பாராட்டுக்கள்.

  தங்களின் அனுமதியோடு சின்ன (பெரிய) மாற்றம் செய்துவிடுகிறேன். மன்னிப்பீரா என்னை?

  வெண்பா எழுதலாம் வாங்கவென் றேயமுதா
  பண்பாய் அழைக்கிறார் பாரீர் வலையில்
  சிரிப்பை எழுத்தாகச் சிந்துமென்போன் றோரும்
  சிறப்பாய் எழுதலாம்வா ரீர்!

  பரிசல்கா ரன்செய்த பாவதனைப் பார்த்தென்
  கருத்தெல்லாம் கன்ன(ல்)சுவை காணும் -திருத்தந்தான்
  வேண்டும் சிலஇடத்தில் வெண்பாத் தளைதட்டல்
  மீண்டு(ம்)நட வாதிருத்தல் மேல்!

  /////வாருங்கள் அதிஷா அவர்களே. தங்கள் வருகை எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து வந்து ஆதரவு தரவும் வெண்பா எழுதிக் கலக்கவும் வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி/////

  பதிலளிநீக்கு
 20. தோழர் ஹம்துன் அவர்களே! செதுக்கிடு -அத்துடன் என்ற இருசொற்களைப் புணர்ந்தால் செதுக்கி டத்துடன் என்றாகுமல்லவா? தளைதட்டுவதைக் கூர்ந்து கவனிப்பீராக!

  நித்தியச் சொல்லெடுத்து நீட்டுக சிந்தனை
  சித்தம் செலுத்தி செதுக்கி(டு) - அத்துடன்
  இன்பத் தமிழின் இலக்கணம் போற்றியே
  வெண்பா வடிப்போம் விரைந்து!

  மாற்றம் செய்தளிக்கத் தங்களையே அழைக்கிறேன். நன்றி

  பதிலளிநீக்கு
 21. நன்றி.. விரைவில் கற்றுக்கொண்டு கலக்குகிறேன்..

  பதிலளிநீக்கு
 22. அட, ஆமாம்!
  ஒரு 'க' விட்டுப்போச்சு!  நித்தியச் சொல்லெடுத்து நீட்டுக சிந்தனை
  சித்தம் செலுத்தி செதுக்கிடுக - அத்துடன்
  இன்பத் தமிழின் இலக்கணம் போற்றியே
  வெண்பா வடிப்போம் விரைந்து!

  பதிலளிநீக்கு
 23. தப்பித்துக் கொள்ள என்று எண்ண வேண்டாம், இது தான் உண்மை. அழைப்பிற்கு நன்றி கூறி எனது வெண்பா இதோ.

  அதிகம் கற்றதில்லை ஆர்வம் என்றுமுண்டு
  எதிலும் நேர்த்தி வேண்டும் எண்ணத்துடன்
  நன்றாய் இலக்கணம் அறிந்தபின் ஒருநாள்
  வெண்பா வடிக்கிறேன் வந்து !

  பிழைகள் பல இருக்கலாம். பொறுதருளுக.

  பதிலளிநீக்கு
 24. நண்பர் ஹம்துன்! நீங்கள் ஒரு "க" இட்டதால் அச்சீர் காய்ச்சிராகி அவ்வெண்பா கனியைப்போல் இனிக்கிறது. வாழ்த்துக்கள்.

  ===================================================

  சதங்கா! வணக்கம். அழகாய் வெண்பா? செய்துள்ளீர்கள். அவ்வை வாக்கு ஒன்றுண்டு:- சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம். ஆக முயன்றால் நிச்சயம் முடியும். முயலுங்கள். முயல் ஆமைக்கதையில் முயல் தோற்றதற்குக் காரணம் முயலாமை. முயலுங்கள் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 25. எதுகவிதை என்றறியா ஏதிலார்க்கும் போற்றிப்
  புதுக்கவிதை பாடு பவர்க்கும் - இதுகவிதை
  என்றுரைத்துப் பேர்மரபை ஏற்றவே ஒண்பாவாம்
  வெண்பா விரித்தேன் விரைந்து.
  - இராஜகுரு

  பதிலளிநீக்கு
 26. நன்று ராஜா! அழகிய வெண்பா அமைத்துத் தந்தீர். வாழ்த்துகள்.

  இதுகவிதை என்றும் இவன்கவிஞன் என்றும்
  பொதுமக்கள் போற்றப் புகழ்சேர் -மதுக்கவிதை
  ஒண்டமிழில் தீட்டி உலகிற் களித்திடவே
  வெண்பா விரிப்பாய் விரைந்து!

  பதிலளிநீக்கு
 27. எனக்கும் வெண்பா எழுத வேண்டும் என்று ஆசை. எங்கே எப்படி படிப்பது என தெரியாதலால் அப்படியே விட்டு வைத்திருந்தேன். உங்கள் தளத்தை பார்த்த போது மகிழ்ச்சியாக இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக படிக்கலாம் என்றிருக்கிறேன். இப்படியொரு தளம் அமைத்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 28. வாருங்கள் சதாசிவம் அவர்களே! நீங்கள் என் தளத்தில் வந்து வெண்பா எழுதக் கற்றுக்கொள்ள முனைந்ததற்கு நானல்லவா உங்களுக்கென் நன்றிகளைச் சொல்லவேண்டும்.

  பதிலளிநீக்கு
 29. விஞ்ஞானம் ஓர்பக்கம் வேகமாய் வந்தாலும்
  மெய்ஞானம் கொண்டாலும் மேதினியில்-அங்ஞானம்
  வாழ்வு தருமோ?நல் வாழ்க்கை வருமோ?
  உழவின்றி உய்யாது உலகு.

  பதிலளிநீக்கு
 30. அமுதா... உங்க பதிவைப் படிச்சுட்டு நானும் ஒரு வெண்பா எழுத முயற்சித்தேன்.

  இப்ப சமீபத்துல மேடாஃப் கிட்ட பணம் போட்டு பல வங்கிகள் பணம் இழந்ததை ஒட்டிட் எழுதினேன். எப்பிடி இருக்குன்னு சொல்லுங்க. இது என் முதல் முயற்சி. கவிதைகள் இதுவரை எழுதியது கிடையாது. எடுத்ததுமே வெண்பாவுக்கு போயாச்சு. :))))

  இருக்கற பணமெல்லாம் மேடாஃப்ட்ட குடுத்து
  சறுக்கற சந்தைல மிச்சத்தப் போட்டு - கிறுக்குன
  காய்தமெல்லாம் பாண்டுன்னு வாங்கி வெச்சு
  தேஞ்சுதே சேத்த சொத்து.

  பதிலளிநீக்கு
 31. ஆஃகா! அருமை. வாழ்த்துகள். வெண்பாவிற்குரிய தளைகள் பொருந்தவில்லை என்றாலும் நகைச்சுவையாகச் சொல்லி கலக்கியிருக்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் முயன்றால் வெண்பா எளிதாகிவிடும். இலகுவான வெண்பாக்கள் எழுத எனது இவ்வலையில் பார்க்கவும்.

  http://taminglishpoem.blogspot.com/

  மேலே கொடுப்பப்பட்ட முகவரியில் உள்ள வெண்பாக்களைப் படித்தீர்களேயானால் எளிமையான வெண்பாக்கள் எழுதும் கமுக்கம் தெரிந்துவிடும். வாழ்க. தங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறேன். நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 32. ஆஹா... நான் எழுதுனதையும் கவிஞர் சபைல பாராட்டி, தளை தட்டுனாலும் முயற்சிக்கு ஊக்கமளித்தற்கு நன்றி. உங்களோட இந்த பதிவை படிச்சதுல சில நுணுக்கங்கள் விளங்கியிருக்கு. முயற்சி செய்யறேன்.

  பதிலளிநீக்கு
 33. கண்டிப்பாக. தங்களுக்கு வெண்பாவில் யாதொரு ஐயமென்றாலும் என்னிடம் கேட்கத் தயங்கவேண்டாம். தனிமடலிலோ அல்லது இடுகையின் பின்னூட்டங்களிலோ தங்களது ஐயங்களைக் கேட்கத் தயங்காதீர்கள். விளக்கக்கடமைப் பட்டிருக்கின்றேன்.

  பதிலளிநீக்கு
 34. அமுதா.. இந்த முயற்சியைப் பாருங்கள்.. சென்ற முறையை விட சிறிது முன்னேற்றம் இருக்கிறதா?

  பாரெங்குஞ் சுற்றிவர பாங்காய் பவனிவர
  யாரெங் கெதுவென் றுணர்ந்(து) - ஊரெங்கும்
  கண்பார்த்த காட்சியெலாம் கருத்துடனே விண்டுரைக்க
  வெண்பா விரித்தேன் விரைந்து !

  பதிலளிநீக்கு
 35. முதலில் என் வாழ்த்துகள் மகேஷ்! ஒரே ஒரு இடத்தில் தான் தளைதட்டுகிறது. மற்றபடி வெண்பா பொருட்செறிவுடன் அருமையாக அமைக்கப்பட்டுள்ளது. வாழ்க!

  திருத்திய வெண்பா கீழே! இரண்டாமடியின் மூன்றாம் சீர் தளைதட்டுகிறதல்லவா!  பாரெங்குஞ் சுற்றிவர பாங்காய் பவனிவர
  யாரெங் கெதுவென் றுணர்ந்தே - ஊரெங்கும்
  கண்பார்த்த காட்சியெலாம் கருத்துடனே விண்டுரைக்க
  வெண்பா விரித்தேன் விரைந்து !

  பதிலளிநீக்கு
 36. மிக்க நன்றி அமுதா.... சிறு திருத்தம் நன்றாக மாற்றியது. இது போன்ற நுணுக்கங்கள் எழுத எழுத சரியாகும் என நம்புகிறேன். அர்வத்தைத் தூண்டிய உங்களுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.

  பதிலளிநீக்கு
 37. நன்றிகள். முயற்சியைத் தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 38. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 39. அண்ணல் அகரம் அமுதா அழைத்ததால்நான்
  வெண்பா விரித்தேன் விரைந்து

  பதிலளிநீக்கு
 40. இப்படி யோர்திரியை இன்றுதான் பார்த்தேன்நான்
  எப்படி இக்தெனக் கெட்டவில்லை – அப்படியே
  அண்ண லகர மமுதா அழைத்ததினால்
  வெண்பா விரித்தேன் விரைந்து

  பதிலளிநீக்கு
 41. இப்படி யோர்திரியை இன்றுதான் பார்த்தேன்நான்
  எப்படி இக்தெனக் கெட்டவில்லை – அப்படியே
  அண்ண லகர மமுதா அழைத்ததினால்
  வெண்பா விரித்தேன் விரைந்து

  பதிலளிநீக்கு
 42. அருமை சுந்தர ராசன் தயாளன் அவர்களே. நிறைய எழுதுங்கள்

  அழைப்புக் கிணங்கி அருமைமிகு வெண்பா
  இழைத்தளித் திட்டீர் இனிதும் -விழைவிற்குப்
  பண்பாயோர் வாழ்த்து பகருதல் பண்பதனால்
  வெண்பா விரித்தேன் விரைந்து

  பதிலளிநீக்கு
 43. நன்றி பலசொல்லி நானும்மைப் வாழ்த்துவேன்
  இன்றுமு தல்நான் இயங்குவேன் – இன்னிசைதான்
  நண்பா விருப்பமே என்றாலும் நேரிசையில்
  வெண்பா விரித்தேன் விரைந்து

  பதிலளிநீக்கு
 44. இன்னிசையோ, இயல்பாய் இயற்றிடும் நேரிசையோ
  இன்பத்தோ டீண்டு இடுகையிட - என்போர்க்கு
  சுந்தர ராசன் தயாளன் சுகமளிக்க
  வெண்பா விரித்தார் விரைந்து.

  பதிலளிநீக்கு
 45. பல்வகை ஆய்வும் பயின்றுப் பகிர்ந்திடும்
  நல்வகை வாய்ப்பை நமக்கிங்கு - நல்கிடும்
  பண்பே பெரிதென்று பாராட்டி இங்கேயே
  வெண்பா விரித்தேன் விரைந்து

  ஆர்.கஸ்தூரிரங்கன்
  ஓசூர்

  பதிலளிநீக்கு
 46. அழகான வெண்பா விரித்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 47. தயாளன் பாவும் அவனடியாரின் பாவும் நெஞ்சை அள்ளுகின்றன. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 48. முதலில், உங்களின் மிகச்சிறந்த இலக்கணப் பணிக்கு என் வாழ்த்துகள். இதோ, உங்கள் ஈற்றடிக்கு சில வெண்பாக்கள்:

  வடித்தார் வலைப்பூவில் யாப் புரையை
  படித்தனர் பாப் புனையும் புலவரவர்
  நண்பா பிடி ஈற்றடி இஃதென்றார்
  வெண்பா விரித்தேன் விரைந்து

  போட்டியென்று வந்திட்டால் ஈட்டியதன் கூர்மையுடன்
  போட்டியிலோர் கைபார்த் திடவேத் துடித்திடுவேன்
  வெண்பா இலக்கணம் வேகமாய் கற்றுநான்
  வெண்பா விரித்தேன் விரைந்து

  ராஜா
  சான் ஹோசே

  பதிலளிநீக்கு
 49. ////////போட்டியென்று வந்திட்டால் ஈட்டியதன் கூர்மையுடன்
  போட்டியிலோர் கைபார்த் திடவேத் துடித்திடுவேன்
  வெண்பா இலக்கணம் வேகமாய் கற்றுநான்
  வெண்பா விரித்தேன் விரைந்து////////


  நண்பாஉன் வெண்பாவில் கண்டேன் விரைவதனால்
  வெண்பா விரித்தேன் விரைந்து

  பதிலளிநீக்கு
 50. அகரம் அமுதா தமிழின் மலையில்
  சிகரந்தான் நீதொட சக்தி - மகனருள்வான்
  நண்பா உனதுதமிழ்த் தொண்டு தொடரநான்
  வெண்பா விரித்தேன் விரைந்து

  -விவேக்பாரதி

  பதிலளிநீக்கு
 51. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 52. முனைவர் மணிகண்டன் ஆர்வத் தொகுப்பாய்
  முனைந்து பதிப்பித்த நேரிசை – வெண்பாவால்
  வெண்பா இலக்கணம் வாசித் தறிந்தபின்
  வெண்பா விரித்தேன் விரைந்து!

  தமிழறிஞர் சாம்ப சிவனார் விரும்பும்
  ’தமிழ்மா ருதம்’இதழ் கண்டு – அமிழ்தென
  இன்னிசை வெண்பா பலஇனிதாய்க் கற்றபின்
  வெண்பா விரித்தேன் விரைந்து!

  பதிலளிநீக்கு
 53. கண்ணியப்பன் அவர்களின் இரு வெண்பாக்களும் அருமை. அருமை. வாழ்க

  பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com