வியாழன், 3 ஜூலை, 2008

பாடம்13 பஃறொடை மற்றும் கலிவெண்பா!


பஃறொடை வெண்பா:-

பஃறொடை வெண்பாவிலும் நேரிசை இன்னிசை என இருவகையுண்டு. பல தொடைகளாலும் ஆனமையால் பல்தொடை எனும்பேர் பெற்றுப் புணர்ச்சியின் காரணமாய் பஃறொடை வெண்பாவானது. இது நான்கடிகளுக்கு மிகுந்தும் பன்னிரண்டடிகளுக்கு மிகாமலும் வரும். பன்னிரண்டடிகளுக்கு மிகுமாயின் அது கலிவெண்பாவாகிவிடும்.

நேரிசைப் பஃறொடை வெண்பா:-

அளவடி வெண்பாவில் நாம்கண்டது போன்றுதான் எதுகையமைப்பு. ஒவ்வொரு இரண்டடிகளுக்கும் ஒரு தனிச்சீர் பெற்று வரும்.

காட்டு:-

ஆய்ந்தறிந்து கல்லதான் கல்வியும் ஆறறிவில்
தோய்ந்தறிந்து சொல்லாதான் சொற்பெருக்கும் -தீந்தமிழின்
சொல்லிருக்க வன்கடுஞ்சொற் சொல்வதூஉம் தன்மனையால்
இல்லிருக்க வேறில் இரப்பதூஉம் -நெல்லிருக்கக்
கற்கறித்து மண்டின்று காய்த்துக் களத்தடித்த
புற்கறித்து வாழ்வதனைப் போன்று!

நன்கு நோக்கவும். இரண்டடிகளுக்கு ஒருமுறை தனிச்சீர் பெற்றுவந்தமையால் இது நேரிசைப் பஃறொடை வெண்பா.

இன்னிசைப் பஃறொடை வெண்பா:-

இன்னிசைப் பஃறொடை பலவாறாய் வரும்.

1-அடியெதுகை பெறாமல் வரும்.
2-தனியெதுகை பெறாமல் வரும்.
3-எல்லா அடிகளிலும் தனிச்சீர் பெற்றுவரும்.
4-சிலஅடிகளில் தனிச்சீர் பெற்றம் பெறாமலும் வரும்.
5-சில அடிகளில் அடியெதுகை பெற்றும் பெறாமலும் வரும்.

இப்படிப் பலவாறாய்க் கூறலாம். ஆக இரண்டிரண்டு அடிகளுக்கோர் தனிச்சீர் பெறா பஃறொடை இன்னிசைப் பஃறொடையாகும்.

காட்டு:-

வையகம் எல்லாம் கழனியாம் -வையகத்துச்
செய்யகமே நாற்றிசையின் தேயங்கள் -செய்யகத்து
வான்கரும்பே தொண்டை வளநாடு –வான்கரும்பின்
சாறேயந் நாட்டுத் தலையூர்கள் -சாறற்ற
கட்டியே கச்சிப் புறமெல்லாம் -கட்டியுள்
தானேற்ற மான சக்கரை –மாமணியே
ஆனேற்றான் கச்சி யகம்!

அடிதோறும் எதுகை பெற்று இன்னிசையானமைகாண்க.

கலிவெண்பா:-

கலிவெண்பாவிலும் நேரிசைக் கலிவெண்பா இன்னிசைக் கலிவெண்பா என இருவகையுண்டு. பஃறொடை மிக்கது கலிவெண்பா ஆகும். அதாவது பன்னிரண்டடிகளுக்கு மிக்கது. பன்னிரண்டடிகளுக்கு மேல் எத்தனை அடிகாறும் வேண்டுமானாலும் செல்லலாம். வரையறை என்பதில்லை.

நேரிசைக் கலிவெண்பா:-

மற்ற நேரிசைவெண்பாக்களுக்குப் பார்த்த விதியே இதற்கும் பொருந்தும். இரண்டிரண்டு அடிகளுக்கோர் தனியெதுகை பெற்றுவரும்.

இன்னிசைக் கலிவெண்பா:-

நேரிசை வெண்பாவின் விதியாகிய இரண்டடிக்கோர் தனியெதுகை எடுத்தலை மீறிவிடின் அது இன்னிசைக் கலிவெண்பாவாகிவிடும்.

அகரம்.அமுதா

10 கருத்துகள்:

 1. தங்களை போன்றவர்களை தான் வெகு நாட்களாக தேடிக்கொண்டிருக்கிறேன்.
  உணமையிலேயே கவிதை என்றால் என்ன என்பதை பலரும் மறந்து கொண்டிருக்கும் இக்காலத்தில், பலருக்கும் வெண்பா எழுதப் பயிற்சி தரும் உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது.
  உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. வாருங்கள் ராஜா! ஜீவா! நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

  பதிலளிநீக்கு
 3. தங்களின் மறுமொழி கண்டதில் மிக்க மகிழ்ச்சி. தங்களின் வலைப்பதிவைத் தொடர்ந்து படித்து வருகின்றேன். தங்கள் வலைப்பதிவில் கவிதை இலக்கணம் பற்றிய இடுகைகளுக்குத் தொடுப்புகள் கொடுக்க எண்ணியுள்ளேன். தங்களின் இசைவை எதிர்பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. தங்கள் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன். எனது வலைப்பதிவில் கவிதை இலக்கணம் பற்றிய இடுகைகளுக்குத் தங்களின் வலையில் தொடுப்புகள் கொடுப்பதென்பது எனக்குப் பெருமையாயிருக்கிறது. நான் இலக்கணப்பாடம் எடுப்பதே நாலுபேர் நன்மை பெறவேண்டும் என்பதற்காகத் தான். எல்லோருமே என்வலைக்கு வந்து படிப்பதென்பது முடியாத காரியம். தங்களின் வலையில் தொடுப்புக் கொடுப்பதால் உங்கள் வலைக்கு வருபவரும் அத்தொடுப்பின் மூலமாக என்வலைக்குவந்து பயனடையும் வாய்ப்புள்ளது. ஆகவே தங்களின் கோரிக்கையை வழிமொழிகிறேன் மிக்க நன்றி அய்யா!

  பதிலளிநீக்கு
 5. இன்றைக்குத்தான் வகுப்பில் இணைந்திருக்கிறேன்... :)

  பதிலளிநீக்கு
 6. வாருங்கள் புனிதா! நம் வெண்பாப் பாடத்தில் நீங்களும் கலந்து கலக்கவிருப்பது பற்றி பெருமகிழ்ச்சியடைகிறேன் நன்றி

  பதிலளிநீக்கு
 7. மாசிலா கண்ணப்பன்2 ஜூன், 2023 அன்று 7:17 PM

  அகரம் அமுதாவாம் அக்கையார் அவர்கள்
  சிகரக் குமுதம் மிலிர - நகரம்
  கண்டிரா செங்கவிதைக் கிலக்கணங் கூறும்
  பெண்டிராம் இவரைப் போற்று.

  பதிலளிநீக்கு
 8. மாசிலா கண்ணப்பன்2 ஜூன், 2023 அன்று 7:21 PM

  அகரம் அமுதாவாம் அக்கையார் அவர்கள்
  சிகரக் குமுதம் மிலிர்வாய் - நகரம்
  கண்டிரா செங்கவிதைக் கிலக்கணங் கூறும்
  பெண்டிராம் இவரைப் போற்று.

  பதிலளிநீக்கு
 9. மாசிலா கண்ணப்பன்2 ஜூன், 2023 அன்று 7:23 PM

  அகரம் அமுதாவாம் அக்கையார் அவர்கள்
  சிகரக் குமுத மிலிர்வாய் - நகரம்
  கண்டிரா செங்கவிதைக் கிலக்கணங் கூறும்
  பெண்டிராம் இவரைப் போற்று.

  பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com