ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009

நேரிசை ஆசிரியப்பா எழுதுவோம்


பா வகைகளில் மிக எளிதாக எழுதப்படுவது ஆசிரியப்பாவே.

சுருக்கமாக, ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் :

ஆசிரியப்பா குறைந்த அளவு மூன்றடி பெற்று வரும். அதிகமாக ஆயிரம் அடிகள் வரை வரலாம் அதற்கு மேல் வரினும் இழுக்கன்று என்று கூறுவர்.

ஈரசைச் சீர்களும் மூவசைச்சீர்களில் காய்ச்சீர்களும் பெற்று வரும்.

இவற்றில், பொதுவாகக் காய்ச்சீர் அருகி (குறைவாக) வரும்.

கனிச்சீர் வரவே வராது.

பொதுவாக நான்கு சீர் கொண்ட அடியும், அடிதோறும் முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை அமைந்தும் வரும்.

அடி எதுகை பெற்று வரும்; இரண்டடிக்கு ஒருமுறை எதுகை மாறவேண்டும் என்பது கட்டாயம் இல்லை; இரண்டு முதல் எத்தனை அடிகளிலும் ஒரே எதுகை வரலாம்.

(ஒன்று மூன்றாம் சீர்களில் எதுகை பெற்று வருதலும் உண்டு)

ஏகாரத்தால் முடிவது சிறப்பு. (ஓ, ஈ, ஆய், என், ஐ என்றும் முடியலாம்)


நேரிசை ஆசிரியப்பாவின் சிறப்பு இலக்கணம்:

ஈற்றயலடி என்றழைக்கப்படும் ஈற்றடிக்கு முன் அடி மூன்று சீர் பெற்று வரும்.
ஏனைய அடிகள் நான்கு சீர் பெற்று வரும்.

இனி, ஒரு நேரிசை ஆசிரியப்பாவைப் பார்ப்போம்:

சிந்தா மணியும் சிலம்பும் சாத்தனார் ----------------- நாற்சீரடி

ந்தமே கலையும் மிழ்த்தாய் ------------------முச்சீரடி (ஈற்றயலடி)

ந்தமார் மேனிக் ணிகலம் ஆமே. ------நாற்சீரடி(ஏகாரத்தால் முடிந்துள்ளது)


பச்சை வண்ணம் - மோனையைக் காட்டுதற்கு
சிவப்பு வண்ணம் - எதுகையைக்காட்டுதற்கு
கருப்பு - ஏகாரம் காட்ட

இன்னொரு பாடல் :

ன்றே போதும் என்றே இராமையால்

நூறு கோடியாய் ஏறி இருக்கிறோம்


ப்பைக் குறைத்தோம் மருத்துவ வலிமையால்

பிப்பைக் குறைக்க விருப்பம் கொளாமையால்

சென்றது சிறப்புறு வளமை

ந்தன பஞ்சமும் றுமையும் இன்றே. - புதுவை அரங்க. நடராசனார்


சிவப்பு வண்ணம் அடி எதுகையைக்காட்டுகிறது.
பச்சை மோனையைக் காட்டுகிறது.

இயன்றவரை மோனை எதுகை அமைத்து எழுதுதல் சிறப்பு

எளிதாக நேரிசை ஆசிரியப்பா எல்லாரும் எழுதலாம்.

ஐயங்கள் எழுந்தால் உடனே கேட்டு எழுதுங்கள்.

இனி, எழுதுவோம்.

73 கருத்துகள்:

 1. “ஆங்கிலக் கல்வி அறிவை வளர்க்கும்
  தீந்தமிழ் அறிவைச் சிதைத்து முடிக்கும்”
  என்னுங் கருத்தை இயம்பித் திரிந்தே
  அன்னை தமிழ்விடுத் தடுத்தவை கற்றும்
  ஈனத் தமிழா இதுகேள்
  மானமும் அறிவும் மணித்தமி ழாமே!


  குறையிருப்பின் குறிப்பிடுக...

  பதிலளிநீக்கு
 2. ஆறரை கோடி அருந்தமிழ் மாந்தர்
  சீருற வாழ்ந்தும் சிங்கள ராலுயிர்
  மாயும் ஈழவர் வாழ்வு வளமுறப்
  போயுத வாமல் பொய்யும் புரட்டும்
  நாக்கூ சாமல் நவிலும் அரசியற்
  பேய்க்கூட் டத்தின் பிதற்றலை நம்பி
  விடியல் பிறக்கும் விரைவிலென்(று)
  அடித்துக் கூறல் அறிவுடைமை யாமோ!

  பதிலளிநீக்கு
 3. பின்வரும் பா, பாவலரேறு பெருஞ்சித்திரனாருடையது:-

  சாதிக் குப்பையைச் சாம்ப லாக்கு;
  பாதியை அறிவுப் பயிருக் குரமிடு!
  மீதியை ஒற்றுமை மேன்மைக் குரமிடு!
  இனமும் ஒன்றுதான்; மக்களும் ஒருவரே!
  உலகம் எல்லாம் ஒருகுலம் என்னும்
  உயர்ந்த கொள்கைக் குரமிட்டு வளர்க்க!
  பொதுமை உலகம் புதுக்கிடும்
  புதுமை நினைவொடு புறப்ப டிளைஞனே!

  பாவலரேறு பெருஞ்சித்திரனார்

  பதிலளிநீக்கு
 4. இரண்டு பாக்களும் அருமை!

  மொழிக்கென ஒன்று, இனத்திற்கென ஒன்று!

  பாவலரேறுவின் பாட்டை எடுத்துக் காட்டியது சிறப்பு.

  பதிலளிநீக்கு
 5. நாளை செய்வோம் நல்லது என்றே
  நாளைக் கடத்திடல் நன்றோ,காலம்
  வருமுன் காலன் வரலாம்
  தருவீர் அணைத்தும் தயங்காது இன்றே.

  இது சரியா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வித்தாய் விளைந்திருக்கு வீதியில் பூத்திருக்கு
   குத்து விளக்காய் குலமகளாய் காத்திருக்கு
   முத்தான ஆசைகள் மூடிவைத்து வீற்றிருக்கு
   அத்தானை அன்பால் அழை .
   சித்திரையே வருக சிறப்ப்பு தருகவே

   நீக்கு
 6. அகரம் அமுதா அவர்களே
  இரண்டு பாக்களும் அருமை

  பதிலளிநீக்கு
 7. //////உமா கூறியது...
  நாளை செய்வோம் நல்லது என்றே
  நாளைக் கடத்திடல் நன்றோ,காலம்
  வருமுன் காலன் வரலாம்
  தருவீர் அணைத்தும் தயங்காது இன்றே.

  இது சரியா?////

  முதல் அவலற்பாப்போல் தெரியவில்லை. மிக அழகாகவும் நேர்த்தியாகவும் உள்ளது. வாழ்க.


  /////திகழ் கூறியது...
  அகரம் அமுதா அவர்களே
  இரண்டு பாக்களும் அருமை/////

  இப்படிச் சொல்வதால் உங்களை விட்டுவிடுவேன் எனக்கருதாதீர். பாவெழுதிக்கொண்டு வாரும்.

  பதிலளிநீக்கு
 8. நாளை செய்வோம் நல்லது என்றே
  நாளைக் கடத்திடல் நன்றோ,காலம்
  வருமுன் காலன் வரலாம்
  தருவீர் அனைத்தும் தயங்காதுஇன்றே!
  ***************
  முதன்முதலில் எழுதும் ஆசிரியப்பா சிறப்பாக வந்துள்ளது. உமா, உங்களுக்குப் பாராட்டும் நன்றியும்!

  இதற்குமுன் ஆசிரியம் எழுதியிருக்கிறீர்களா?

  பதிலளிநீக்கு
 9. திரு. அமுதா. மிக்க நன்றி. கொஞ்சம் பிடிப்பட்டாற்போலுள்ளது. நன்றி.

  பதிலளிநீக்கு
 10. திரு.தமிழநம்பி அய்யா அவர்களுக்கு.
  மிக்க நன்றி ஐயா. உங்களிடமிருந்துதான் முதன் முதலில் ஆசிரியா பா இலக்கணமறிகிறேன். இதுதான் என் முதல் பா. [உண்மையில் வெண்பா இலக்கணத்திலிருந்து வெளிவரயியலாமல் சற்று திணறித்தான் போனேன்.] நன்றாக அமைந்துள்ளது என்றால் மிக்க மகிழ்ச்சி. நன்றிகள் பல.

  தங்களின் பார்வைக்காக இன்னுமொன்று.

  நிலவும் வானில் தேயும் மற்றந்த
  மலரும் தினமும் வாடும் தீஞ்சுவை
  அமிழ்தாம் சிறிதே ஈடாகும்
  தமிழ்தாம் மழலையர் சிந்தும் சிரிப்பே.

  [வானின் நிலவு தேயக்கூடியது,அதனல் ஈடல்ல. மலரும் சிறிது நேரத்தில் வாடும் அதனால் அதுவும் ஈடல்ல.மானிடரறியாத வானோரின் அமிழ்து என்பது வேண்டுமானால் சிறிது ஈடாகலாம். ஆனால் என்றும் மிக மிக இனிமையான தமிழே மழலையர் சிந்தும் சிரிப்பிற்கு ஈடாகும். சரியாகவந்துள்ளதா என் தயைகூர்ந்து சொல்லவும்.]

  பதிலளிநீக்கு
 11. /வந்தன பஞ்சமும் வறுமையும் இன்றே./ என்று முடியும் தமிழநம்பி அய்யா அவர்களின் காட்டுக் கவிதை பிரமாதம்.

  அகரம் அமுதா அவர்களின் கவிதைகளோ வழக்கம்போல் சிறப்பு.
  அதற்கு முத்தாய்ப்பாக பெருஞ்சித்திரனாருடைய பா வேறு.

  ஆஹா. படிக்க படிக்க இனிக்கிறதய்யா உங்கள் வெண்பா தளம்.

  சாதி மட்டுமில்லை, இனம், மொழி, நாடு, கலாச்சாரம் என்று வரையறைகள் கடந்து மனிதன், நேயத்தை மக்கள், மிருகங்கள், இயற்கை அன்னை என எல்லாரிடமும் காட்டும் நாளே பொன்னாள்.

  /நாளை செய்வோம் நல்லது என்றே
  நாளைக் கடத்திடல் நன்றோ,காலம்
  வருமுன் காலன் வரலாம்
  தருவீர் அனைத்தும் தயங்காதுஇன்றே!/

  ஆஹா! ஆஹா! எதுகை, மோனை, பாவிலக்கணம், நடை, ஓசை நயம், சொல்லாட்சி, கருத்துச் செறிவு இப்படி எல்லாமும் ஒன்று திரண்ட ஒரு நற்பா வடித்தீரே! மிக சிறப்பு உமா. நன்றி. வாழ்க!

  இதோ ஒரு நேரிசை ஆசிரியப்பா:
  உங்களையும் பாராட்டின மாதிரி ஆகும், என் அப்பன் முருகனைப் பாடின மாதிரியும் ஆகும், தமிழநம்பி, அமுதா ஆசான்மார்களுக்கு ஒரு பாவைச் சமர்ப்பித்ததாகவும் ஆகும் ... :-)

  எதுகை, மோனை, எதுகைப் படினும்
  அதுவே பாவாய் அழகாய் அரும்பும்
  நடையோ நடனம் புரிந்தே நாவின்
  அடிவரை இனிக்கும் அடிகள், எவர்கண்
  உமையாள் உணர்ந்தாள் தமிழை?
  நமையாள் குமரன் நயந்தளித் தானோ?

  பதிலளிநீக்கு
 12. அகரம் அமுதா அவர்கள் போட்ட ஆசிரியப்பா அஸ்திவாரத்தில் அழகாக நேரிசை சுவரெழுப்பி உமா போன்றவர்கள் நல்ல நல்ல பா-வர்ணங்களை பூசுவதற்கு வழிவகுத்த தமிழநம்பி அய்யாவைப் பாடவேண்டாமா ? இதோ:

  /ஒன்றே போதும் என்றே இராமையால்
  நூறு கோடியாய் ஏறி இருக்கிறோம்
  இறப்பைக் குறைத்தோம் மருத்துவ வலிமையால்
  பிறப்பைக் குறைக்க விருப்பம் கொளாமையால்
  சென்றது சிறப்புறு வளமை
  வந்தன பஞ்சமும் வறுமையும் இன்றே.
  /

  நெறியிற் பிழறி நிதமும் பெருகும்
  நெரிசல் மிகுந்திடுந் நாட்டின் நிலையால்
  நேர்ந்திடும் பல்லிடர் நெஞ்சில் நினைந்து
  நேர்நிறை யிலக்கணம் நயம்படச் சேர்த்து
  நேரங் கடந்ததோர் நற்றமிழ்ப் பாட்டினை
  நேரங் கடத்தாமல் நேயமோ டளித்து
  நேரிசை ஆசிரி யப்பா
  நேரிடும் நேர்த்தி நவின்றனர் நன்றே!


  நேரிசை ஆசிரி யப்பா நேரிடும் நேர்த்தி - நேரிசை ஆசிரியப்பாவை எதிர்கொளும் திறனை, லாவகத்தை

  நவின்றனர் நன்றே! - சொல்லிக்கொடுத்தார் நன்றாக

  பதிலளிநீக்கு
 13. அதானே பார்த்தேன். எங்கே அவனடியார் இன்னும் அகவலோடு வரவில்லையே என்று. காலம் தாழ்த்தி வந்தாலும் கனித்தமிழ் அகவலோடுதான் வந்திருக்கிறார். வாழ்க.

  பதிலளிநீக்கு
 14. உடலின் பசிக்காய் உறவை வளர்த்துக்
  குடலிற் கருவைக் குவித்து வளர்த்துப்
  பத்துத் திங்கள் பாரம் தாங்கிப்
  பெற்றபின் ஈன்றது பெண்மக வெனிலோ
  அள்ளிப் பாலை அளியாது
  கள்ளிப் பாலை கருதிக் கொடுப்பரே!

  பதிலளிநீக்கு
 15. அய்யா தமிழநம்பி அவர்களுக்கு!

  கள்ளிப் பாலை கருதிக் கொடுப்பரே! -- "கள்ளிப் பாலைக் கருதிக் கொடுப்பரே" ---- இவற்றுள் எது சரி. ஒற்றுமிகுமா மிகாதா? இரண்டாம் வேற்றுமை விரியில் ஒற்றுமிகும் எனத்தெரியும். ஆயினும் இவ்விடத்தில் மனம் தியங்குகிறது.

  பதிலளிநீக்கு
 16. அய்யா அவர்களிடம் மேலும் ஒருவினா!

  இப்பாடத்தில் வழங்கப்பட்டுள்ள பாக்கள் மிகப் பொருண்மையுடன் அழகோவியமாக விளங்குகிறது. தங்களுடையதா? தங்களுடையதெனில் பாடலுக்கடியில் பெயரைக் குறிப்பிட்டெழுதவும். மற்றவர்களது பாக்களையும் அப்படியே செய்க. நற்பாக்களை மனனம் செய்யும் எனக்குப் பாடலாசிரியரின் பெயரும் தெரிந்திருந்தால் தான் பிற இடங்களிற் பயன்படுத்த உறுதுணையாக இருக்கும். நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 17. நிலவும் வானில் தேயும் மற்றந்த
  மலரும் தினமும் வாடும் தீஞ்சுவை
  அமிழ்தாம் சிறிதே ஈடாகும்
  தமிழ்தாம் மழலையர் சிந்தும் சிரிப்பே.
  *********

  உமா,
  மேலே உள்ள உங்கள் ஆசிரியம் சரிதான்.
  ஆசிரியப்பாவில் எதுகை மோனையில் மிகவும் கவனம் செலுத்துங்கள். அவை பாடலுக்கு நயங்கூட்டும்.

  கழக(சங்க)இலக்கிய ஆசிரியப்பாகளில் எதுகை மோனை இல்லாத இடங்களில் சொல்லாட்சிச் சிறப்பும் கருத்துச் செறிவும் பிறவும் மதிப்பூட்டுகின்றன.

  நாமும் கருத்துச் செறிவோடு எழுத முடியுமென்றாலும், நமக்கு எதுகை மோனை அமைப்பு எப்போதும் துணையாயிருக்கும்.

  வெண்பாவில் நான்கடிக்குள் சொல்லவேண்டுமென்ற இருக்கம் இருந்துகொண்டிருக்கும்.

  ஆனால், அகவலில் மிக இயல்பாக இன்னும் இரண்டடி கூடினாலும் எதுகை மோனைத் தொடையழகோடு எழுதலாம்.
  எழுத எழுத உங்களுக்கே இது இயல்பாகவே தெரியும்.
  சிறந்த பாவலர்களின் ஆசிரியப்பாக்களை வாய்விட்டுப் படித்தால், ஆசிரியப்பாக்கள் எளிதாக எழுதிவிடலாம்.

  உங்கள் பாடலுக்கு மேலும் அழகூட்ட- சிறப்பு சேர்க்கவே - இதனைச் சொன்னேன்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 18. எதுகை, மோனை, எதுகைப் படினும்
  அதுவே பாவாய் அழகாய் அரும்பும்
  நடையோ நடனம் புரிந்தே நாவின்
  அடிவரை இனிக்கும் அடிகள், எவர்கண்
  உமையாள் உணர்ந்தாள் தமிழை?
  நமையாள் குமரன் நயந்தளித் தானோ?
  *******************
  அவனடிமை ஐயா,
  மிக அருமையான அகவற் பா!
  பாராட்டு.

  ஐயா,
  எடுத்துக்காட்டுப் பாடல்கள் நான் எழுதியவை அல்ல.
  மூன்றடிப்பாடல் இலக்கணச்சுடர் திருமுருகனாரின் நூலில் கண்டது.
  இயற்றியவர் யாரென்று தெரியவில்லை.

  இரண்டாவது பாடல் அரங்க.நடராசன் ஐயா எழுதியது. பெயரைப்போட மறந்து விட்டேன். இப்போது போட்டுவிட்டேன்.

  அடுத்து,

  நெறியிற் பிழறி நிதமும் பெருகும்
  நெரிசல் மிகுந்திடுந் நாட்டின் நிலையால்
  நேர்ந்திடும் பல்லிடர் நெஞ்சில் நினைந்து
  நேர்நிறை யிலக்கணம் நயம்படச் சேர்த்து
  நேரங் கடந்ததோர் நற்றமிழ்ப் பாட்டினை
  நேரங் கடத்தாமல் நேயமோ டளித்து
  நேரிசை ஆசிரி யப்பா
  நேரிடும் நேர்த்தி நவின்றனர் நன்றே
  ****************
  பாடல் நன்றாகவே உள்ளது.
  'பிழறி' எனபதைப் 'பிறழ்ந்து' என்று மாற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

  பதிலளிநீக்கு
 19. உடலின் பசிக்காய் உறவை வளர்த்துக்
  குடலிற் கருவைக் குவித்து வளர்த்துப்
  பத்துத் திங்கள் பாரம் தாங்கிப்
  பெற்றபின் ஈன்றது பெண்மக வெனிலோ
  அள்ளிப் பாலை அளியாது
  கள்ளிப் பாலை கருதிக் கொடுப்பரே!
  ***********************
  அருமையான பாடல்!
  கருத்தாழமும் சொல்லழகும் கலந்து சிறப்பற அமைந்தது.
  பாராட்டு ஐயா!

  'கள்ளிப் பாலைக் கருதிக் கொடுப்பரே!' என்றிருக்க வேண்டும் என்றே கருதுகிறேன். பிறகு இலக்கண விளக்கத்துடன் உறுதி செய்கின்றேன்.
  நன்றி.

  எடுத்துக்காட்டுப் பாடல் எழுதியோர் பற்றி அவனடிமை ஐயாவுக்கு எழுதிய பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
  பெயர் குறிப்பிட மறந்ததற்கு வருந்துகிறேன்.நினைவூட்டி உதவியமைக்கு நெஞ்சார்ந்த நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 20. திகழ்மிளிர் ஐயாவுக்கு,

  வணக்கம்.
  நீங்கள் நிறைய வெணபா எழுதியிருக்கிறீர்கள்.
  அகவற் பா, வெண்பாவை விட எளிது.
  அகரம் அமுதாவும் நானும் உங்களுக்கு உதவுவோம்.

  நான் வந்தபின் நீங்கள் எழுதாமல் இருப்பது எனக்குள் நெருடலாக உள்ளது.
  ஒரு ஆசிரியம் எழுதுங்கள்.
  எந்த செய்தியையும் உரைநடை போல எழுதலாம் என்று உங்களுக்கே புரியும்.
  அன்பன்,
  த.ந.

  பதிலளிநீக்கு
 21. தமிழநம்பி அய்யா அவர்களின் விளக்கங்களுக்கு நன்றிகலந்த வணக்கங்கள். திகழ் விரைவில் பாவெழுத வருவார் என நம்புகிறேன்.

  பதிலளிநீக்கு
 22. புதுச்சேரியினின்றும் வெளிவரும் ‘நற்றமிழ்’ மாதிகையின் நிறுவுநரும் தமிழாசிரியராகப் பணியாற்றியவரும் தளராத தமிழ்மொழிப் போராளியும் புதுச்சேரி பேருந்து நிலையத்தில் பெருமிதமான திருவள்ளுவர் சிலையை நிறுவியவருள் முகன்மையருமான காலஞ்சென்ற இறைவிழியன் ஐயாவுக்குப் புதுச்சேரி அரசு ‘தமிழ்மாமணி’ பட்டமளித்தபோது அவரைப் பாராட்டி எழுதிய அகவற் பா.
  பாடலைச் சுருக்கியும் நீளமாகத்தான் இருக்கிறது. பொறுமையோடு படிக்கக் கோருகிறேன்! மன்னிக்க!
  ---------------------------------

  இவரியார் என்குவீர் ஆயின் இவரே
  உவரிசூழ் உலகினில் எவரினும் தெருள்நிறை
  ஒருதனிப் பொதுமறை அருளிய பெருமகற்கு
  ஒருபெரும் படிமம் ஊர்நடு நிறுவிடத்
  தொடக்கி ஆற்றிய தூயநல் வினையினர்!
  அடங்கல் என்பதூஉம் முடங்கலும் அறிந்திடார்!
  தீந்தமிழ் பிரெஞ்சும் தேர்ந்தநல் ஏந்தல்!
  பாந்தமும் தமிழுடன் பயிற்றிய ஆசான்!
  தளர்விலா உணர்வினர்! தமிழ்ப்போ ராளியார்!
  கிளர்ந்தெழச் செயுநராய் மிளிரந்திடு மறவர்!
  கல்வியைத் தமிழ்வழி நல்கிடக் கேட்ட
  வல்லுளம் ஒருநூ(று) உண்ணா நோன்பில்
  நம்பியங்(கு) அமர்ந்தோர்! கும்பொடு தில்லியில்
  செம்மொழி தமிழ்க்கெனப் பம்மிய செம்மலார்!
  இன்னபற் சிறப்பின் இறைவிழி இவர்க்கே
  இன்செயர்க் கரசு இன்னே இணங்கித்
  தகுதமிழ் மாமணி பட்டந் தந்தது
  மிகுமகிழ் வளிசெயல்! அகங்குளிர் வளிப்பது!
  தோய்தமிழ் நெஞ்சர்! பாய்புலி உணர்வினர்;
  நோயில ராகித் திகழ்கதில் அம்ம!
  யானே, ஓரிறை எனவும் உன்னான்
  ஊனுள மெலாமுமே நனிநெகிழ்ந் துருகிட
  விழைகுவன் விரும்பி வேணத்
  தழைத்திடு நெடுநலம் தகையவர் பெறற்கே!

  பதிலளிநீக்கு
 23. இன்செயற் கரசு - என்று திருத்திப் படிக்கவும். தட்டச்சும் போது தவறினேன்!
  பொறுத்தாற்றுக!

  பதிலளிநீக்கு
 24. தமிழநம்பி அய்யா: மிக சிறப்பான ஆசிரியப்பா பாடல்.
  /யானே, ஓரிறை எனவும் உன்னான்/ - என்றால் ? புரியவில்லை.

  /நான் வந்தபின் நீங்கள் எழுதாமல் இருப்பது எனக்குள் நெருடலாக உள்ளது./

  எனக்கும் ('நான் மாணவனாக வந்தபின் முன்பே இத்தளத்தில் ஆர்வத்துடன் கலந்துகொண்ட, மறுமொழி இட்ட பலரும் இப்போது வரவில்லையோ' என்ற) இதே வகை நெருடல் இருக்கிறது.

  திகழ், சவுக்கடி, பாத்தென்றல், வசந்த் முதலானோர், மற்றும் பழைய பதிவுகளில் மறுமொழி இட்டோர் பலரும் வந்து, பாக்களை இட்டு சிறப்பிப்பார்கள் என்று விழைகிறேன்.

  பதிலளிநீக்கு
 25. ஐயா அவனடியார் அவர்களே, உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. அழகாக பாராட்டையே பாவாக்கி எனக்கு ஆசிரியப்பா எளிதாக புரியும் படி செய்துவிட்டீர். இதையெல்லாம் படிக்கும் போதே ஆசிரியப்பா கைகூடுகிறது. பாராட்டுக்கு நன்றியும், பாவிற்கு பணிவுகலந்த வாழ்த்துக்களும்.
  அன்புடன் உமா.

  பதிலளிநீக்கு
 26. ஐயா தமிழநம்பி அவர்களே,தங்கள் அறிவுரையை கருத்தில் கொள்கிறேன். தங்கள் வழிகாட்டலோடு எதுகை மோனையுடன் எழுத பழகுகிறேன். தங்களின் மேலான அறிவுரைக்கு மிக்க நன்றி.

  மற்றொரு ஆசிரியப்பா

  எடுமின் வாளை இடுமின் முழக்கம்
  கடுங்கதிர் வெய்யோன் காரிருள் தன்னை
  கெடுத்திடல் கண்டோம், பொறுத்திடல் வேண்டா
  சிற்றெரும்பும் யானையைக் கொல்லும், சினத்தொடு
  கற்றவர் வாரீர் கல்லாமை இருளைக்
  கொல்வோம்,அழிப்போம், கல்வி
  கல்லாதார் இல்லாத காலம் கனியவே.

  [கதிரானது இருளை விலக்குதலை நாமறிவோம் அதுபோல் கல்லாமையிருளை கற்றவரே வாருங்கள் நாமெல்லாருமாய் அழிப்போம். கல்லாமை இருள் யானையைப் போன்று பெரிதாய் நம் முன் நின்றாலும், நாம் அதன்முன் சிற்றெரும்பாய் தெரிந்தாலும் எரும்பும் யானையைக்கொல்லக்கூடியது என்பதால் வாருங்கள் நம்மைச்சுற்றியுள்ள இருளை கல்வி எனும் கருவியினால்கொல்வோம். கல்லாதார் இல்லாத காலத்தை உருவாக்குவோம்.]

  பதிலளிநீக்கு
 27. ஐயா இன்னுமொரு வேண்டுகோள் தாங்கள் எழுதும் பாக்களை இடுக்கையாகவே இட்டால் அதை எடுத்துக்காட்டாக படிக்க எங்களுக்கு உதவியாய் இருக்கும். பின்னூட்டங்களில் படிப்பது சற்றே கடினமாயுள்ளது.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 28. தமிழநம்பி அய்யா:

  /பாடல் நன்றாகவே உள்ளது./

  நன்றி. ஏகாரம் ஏதோ இடறுகிறதோ என்று நினைக்கவைக்கிறது.

  /'பிழறி' எனபதைப் 'பிறழ்ந்து' என்று மாற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன்/

  திருத்திக் கொள்கிறேன்.

  இந்த நாளில், பொருள் எதிர்பார்ப்பு இல்லாமல், விலையில்லாத் தமிழை பொறுமையாக ஆர்வத்தோடு, கற்பிக்கிறீர்களே. உங்களுக்கும், அகரம் அமுதாவுக்கும் மிக்க நன்றி. சிதம்பரத்தில் எழுபதில் இராமசாமிச் செட்டியார் உயர்நிலைப்பள்ளியில் தமிழ் பயிற்றுவித்து வித்திட்ட திருநாவுக்கரசு அய்யாவுக்கும் மனமார்ந்த நன்றியை மானசீகமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

  நிற்க. உங்கள் தளத்தில் பழைய பதிவுகளைப் படித்தேன். 'சொல்வது' என்கிற வினைச்சொல்லின் பொருள் தரும் பற்பல தமிழ்ச்சொற்களை தந்த பதிவும், விழுப்புரம் நகரில் உங்கள் தபால் நிலைய தலைமை அலுவலரைக் குறித்த பதிவும், 'அரசி' என்று துணைவியாரை (ஆசை கலந்த மரியாதை?யுடன்) குறிப்பிட்டு எழுதிய உங்கள் எதிர் வீட்டு திடீர் சோகத்தைக் குறித்த பதிவும், உங்கள் தமிழ் ஆர்வத்தையும், புலமையையும், உரைநடைத் திறனையும் மட்டுமல்ல, மென்மையான, இரக்கமுள்ள உங்கள் இதயத்தையும் காட்டின. மிக்க சிறப்பு.

  பதிலளிநீக்கு
 29. அப்படி ஒன்றுமில்லை
  நேரமின்மையால் தான் எழுத இயலவில்லை.
  இப்பொழுது ஒரு முக்கிய பணி ஒன்று உள்ளது.
  அது முடிந்த பின்
  கண்டிப்பாக எழுதுகின்றேன்.

  நான் தங்களை விட அகவையில் இளையவன் தான்.
  தங்கள் திகழ் என்று அழைத்தாலே போதும்.
  தங்களின் மின்மடல் கண்டு மகிழ்ச்சியாக உள்ளது. எழுத வேண்டும் ஆவல் உள்ளது.
  கண்டிப்பாக எழுதுவேன்.

  அன்புடன்
  திகழ்

  பதிலளிநீக்கு
 30. காரணம் காண்போர் காரியம் காண்பதில்லை
  மரண மென்று மருண்டால் மனிதா
  தோரணம் தோளில் வருவதில்லை
  ஆரண மென்றால் யாருமில்லை அவனிலே

  பதிலளிநீக்கு
 31. /
  நாளை செய்வோம் நல்லது என்றே
  நாளைக் கடத்திடல் நன்றோ,காலம்
  வருமுன் காலன் வரலாம்
  தருவீர் அனைத்தும் தயங்காதுஇன்றே!
  /

  எளிமையாக அனைவரும் புரியும் வண்ணம் அழகாக அற்புதமாக உள்ளது.அகராதியைத் தேடி அலைய வேண்டியதில்லை.

  மொத்தத்தில் ஒவ்வொரு வரிகளும் வார்த்தைகளும் முத்துகள்

  வாழ்த்துகள்

  அன்புடன்
  திகழ்

  பதிலளிநீக்கு
 32. /நெறியிற் பிழறி நிதமும் பெருகும்
  நெரிசல் மிகுந்திடுந் நாட்டின் நிலையால்
  நேர்ந்திடும் பல்லிடர் நெஞ்சில் நினைந்து
  நேர்நிறை யிலக்கணம் நயம்படச் சேர்த்து
  நேரங் கடந்ததோர் நற்றமிழ்ப் பாட்டினை
  நேரங் கடத்தாமல் நேயமோ டளித்து
  நேரிசை ஆசிரி யப்பா
  நேரிடும் நேர்த்தி நவின்றனர் நன்றே!/

  அருமை

  அவனடிமை அவர்களே

  பதிலளிநீக்கு
 33. /
  உடலின் பசிக்காய் உறவை வளர்த்துக்
  குடலிற் கருவைக் குவித்து வளர்த்துப்
  பத்துத் திங்கள் பாரம் தாங்கிப்
  பெற்றபின் ஈன்றது பெண்மக வெனிலோ
  அள்ளிப் பாலை அளியாது
  கள்ளிப் பாலை கருதிக் கொடுப்பரே!
  /

  இயல்பு இனிமை அத்தனையும்
  அகரம் அமுதா அவர்களே

  வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 34. தமிழநம்பி அய்யா அவர்களின் பாவில் தமிழின்பம் எய்தினேன். வாழ்க. தங்களின் பற்பல பாக்களையும் பாடங்களின் வழியாகவும் படித்து மகிழத்தாருங்கள். நன்றிகள்.


  அவனடியாருக்கு.....

  மனக்குறை வேண்டாம் அனைவரும் வருவர். அழகிய பாக்களைத் தருவர்.


  உமா அவருகளுக்கு.....

  கல்வி பற்றிய தங்களின் ஆசிரியப்பா அழகின் மணிமுடி. இனிவரும் காலங்களில் தங்களோடு போட்டிப்போட்டு எழுதுவதற்கென்றே ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனக்கு எனத்தோன்றுகிறது. வாழ்க.


  திகழ் அவர்களுக்கு....


  தங்களின் ஆசிரியப்பா சற்றே ஓசை தவறுவதாகத் தெரிகிறது. எனினும் அதுபற்றிய திருத்தங்களையும் கருத்துக்களையும் அய்யா தமிழநம்பி அவர்கள் வழங்குவார்.

  தங்கள் வருக்கையும் வளமான பாக்களும் நம்வலைக்கு உரமாகும். ஆதலால் வருக. பாமழை பொழிக.

  பதிலளிநீக்கு
 35. /திகழ் அவர்களுக்கு....


  தங்களின் ஆசிரியப்பா சற்றே ஓசை தவறுவதாகத் தெரிகிறது. எனினும் அதுபற்றிய திருத்தங்களையும் கருத்துக்களையும் அய்யா தமிழநம்பி அவர்கள் வழங்குவார்.

  தங்கள் வருக்கையும் வளமான பாக்களும் நம்வலைக்கு உரமாகும். ஆதலால் வருக. பாமழை பொழிக./

  பாடங்களைப் படிக்காமல் எழுதியது

  கண்டிப்பாக திருத்திக் கொள்கின்றேன்.

  அன்புடன்
  திகழ்

  பதிலளிநீக்கு
 36. /காரணம் காண்போர் காரியம் காண்பதில்லை
  மரண மென்று மருண்டால் மனிதா
  தோரணம் தோளில் வருவதில்லை
  ஆரண மென்றால் யாருமில்லை அவனிலே/

  திகழ் ஐயா: புரியவில்லை!

  பதிலளிநீக்கு
 37. //.............கல்லாமை இருளைக்
  கொல்வோம்,அழிப்போம், கல்வி
  கல்லாதார் இல்லாத காலம் கனியவே.//

  கருங்கும் இருட்டாம் கல்லாமை போக்க
  விரிகதிர் போல வெளிச்சமே கல்வி
  சரியாய் உரைத்தார் உமாஆ
  சிரியப்பா என்னும் தீக்குச்சி தன்னை.


  உரைத்தார் - சொன்னார் என்றும், தீக்குச்சியை உரசினார் (to rub in friction) என்றும் கொள்ளலாம்.

  'உமாஆ' என்பதை சரியான ஒரு சீராக கொள்ளமுடியுமா ? தமிழநம்பி, அகரம் அமுதா அவர்களே ?

  பதிலளிநீக்கு
 38. வாசனை (மணம், fragrance) உள்ள மரச் சருகுகளை வித்தாக வைத்து, சிறுதீ பெருந்தீயாக மாறி காடுகளையும், வீடுகளையும் விரைவாக அழிக்கும் கோரம் கலிபோர்னியா மாநிலத்தில் வருடா வருடம் நிகழ்வது. அதற்கு தீயணைக்கும் வீரர்கள் (நிலத்திலும், விமானத்திலிருந்தும்) ஏராளமான தண்ணீர், தீ-தடுப்பு இராசயனக் கலவைகள் அடிப்பது மட்டும் இல்லாமல், பின்தீ (backfire) என்கிற ஒரு முறையை உபயோகித்து ஒரு சிறு தீயை அவர்களே உண்டாக்கி பெருந்தீ வரும் வழியில் உலர்ந்த செடிகளையும், சருகுகளையும் கொளுத்திவிடுவர். பின்னர் எரிவதற்கு ஒன்றுமில்லாமல் பெருந்தீ நின்று அடங்கிவிடும்.

  இதையே உருவகமாக வைத்து...,

  நாம் பிறக்கும்போதே கொண்டுவருகிற அக வாசனை (tendencies) என்கிற கீழ்மை குணங்களை வித்தாக இட்டு, ஆசை என்னும் அனலை வளர்த்து நம் ஆன்ம வீட்டை (இருப்பை) எப்படி இழக்கிறோம்; பின்னர் (முருகன் என்னும்) தீயணைப்போர் எப்படி 'தண்ணருள்' என்கிற தண்ணீரால் தீய ஆசை என்னும் தீயினை குளிர்வித்து அகற்றி, ஞானம் என்னும் பின்தீயை ஏற்றுவித்து நம் வாசனை வித்துக்களை கொளுத்தி நம்மை 'வீட்டில்' (தன்னகம்) சேர்ப்பிக்கிறார்..

  என்பதைப் பாடுகிறது இந்தப் (நிலைமண்டில) ஆசிரியப்பா:

  வினையெனும் வாசனைக் காடே வித்தாய்
  அனலெனும் ஆசைக்(கு) எரிபொரு ளாகி
  சிந்திக்க சற்றும் சமயம் இலாது
  வந்தீயில் வீட்டின் இருப்பை இழப்பார்
  தண்ணருள் நீரால் தீயாசை தேய்ந்து
  அன்பொடு ஞானப் பின்தீ ஏற்றிட
  முன்வினை வாதனை முற்றும் அழிப்பார்
  தன்னகங் கண்டோர் தீயணைத் தாரே.


  பாவின் பொருளை (உருவகத்தை) சற்றே மறைமுகமாகவும், சொற்களின் இரட்டை பொருள்களை வைத்தும் தர முயன்றதால், வேற்று மொழி சொற்களைத் தவிர்க்க முடியவில்லை...

  பதிலளிநீக்கு
 39. அவனடிமை ஐயா,
  வணக்கமும் நன்றியும்.

  இறைவிழியனார் தமிழ்மாமணி பட்டம் பெறுகின்ற போதே புற்றுநோய்த் தாக்கத்திற்கு ஆளாகியிருந்தார்.

  அவர் நலமடைய வேண்டுமென்ற விழைவைத் தெரிவிக்க விரும்பி,
  இறைவனைப் பற்றியே கருதாத நான், ஊன் உள்ளம் எல்லாம் நனி நெகிழ்ந்து உருகி அவர் உடல்நலம் தேறவேண்டுமென்று விழைவதாக
  எழுதினேன்.

  அடுத்து,

  திகழ் வந்துவிட்டார்.

  சவுக்கடியை எனக்குத் தெரியும். அவர் கடும் பணிச்சுமை தாங்கி இருப்பதால் இன்னும் கொஞ்ச காலத்திற்கு வருவது அரிது.
  பிறகு வருவார்.

  மற்றவர்களும் வருவார்கள் என்று எதிர்பார்ப்போம்.

  என் வலைப்பதிவில் பதிவுகளைப் படித்துக் கருத்துரைத்த உங்கள் நல்லுள்ளத்திற்கு நெஞ்சார்ந்த நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 40. எடுமின் வாளை இடுமின் முழக்கம்
  கடுங்கதிர் வெய்யோன் காரிருள்தன்னை
  கெடுத்திடல் கண்டோம், பொறுத்திடல் வேண்டா
  சிற்றெரும்பும் யானையைக் கொல்லும், சினத்தொடு
  கற்றவர் வாரீர் கல்லாமை இருளைக்
  கொல்வோம்,அழிப்போம், கல்வி
  கல்லாதார் இல்லாத காலம் கனியவே.
  **********************
  அருமையான பாடல் உமா!

  'சிற்றெரும்பும் யானையைக் கொல்லும், சினத்தொடு' - இதை,

  'சிற்றெரும்பும் யானையைச் சினத்தொடு கொல்லும்' - என்று சொல்லை மாற்றிப் போட்டீர்களானால்,
  மோனையோடு மிளிரும்!
  'கொல்வோம்...' என்ற இடத்தில் 'இல்லாது அழிப்போம் என்றும்' என்று போட்டால் நன்றாயிருக்கும் என்று
  கருதுகிறேன்.

  உங்கள பாடல் சிறப்பாக வந்திருக்கிறது.
  சில "முடிப்பு இழைப்பு" கருத்தைத்தான் சொன்னேன்.

  நான் சொன்னவை திருத்தங்கள் அல்ல.

  பாராட்டுக்குரிய பாடல்.

  http://thamizhanambi.blogspot.com/search?updated-min=2007-01-01T00%3A00%3A00-08%3A00&updated-max=2008-01-01T00%3A00%3A00-08%3A00&max-results=5

  - இந்த முகவரியில்(ஒரு தமிழ்ச்செல்வன்...) ஒரு நேரிசை அகவல் உள்ளது. படித்து, உங்களுக்குத் தோன்றும் கருத்தை அல்லது ஐயத்தைத் தயங்காது வெளிப்படுத்த வேண்டுகின்றேன்.
  (தட்டச்ச, சோம்பல்!)
  நன்றி.

  பதிலளிநீக்கு
 41. திகழ்மிளிர்,

  ***நேரமின்மையால் தான் எழுத இயலவில்லை.
  இப்பொழுது ஒரு முக்கிய பணி ஒன்று உள்ளது.
  அது முடிந்த பின்
  கண்டிப்பாக எழுதுகின்றேன்.

  நான் தங்களை விட அகவையில் இளையவன் தான்.
  தாங்கள் திகழ் என்று அழைத்தாலே போதும்.
  தங்களின் மின்மடல் கண்டு மகிழ்ச்சியாக உள்ளது. எழுத வேண்டும் ஆவல் உள்ளது.
  கண்டிப்பாக எழுதுவேன். ***

  உங்களின் அன்பார்ந்த விடையைப் படித்து நெகிழ்ந்தேன்.

  நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள்.
  *********
  ஆசிரியம் எழுதும் முன் என்ன சொல்லப் போகிறோம் எனபதை முடிவு செய்து கொண்டு-

  இரண்டு சீர்களில் எழுதினால் ஆசிரியம் சிறப்பாய் அமையும்.

  இரண்டி அடிகளுக்கு ஒரு எதுகை.
  ஒவ்வொரு அடியிலும் இயன்றவரை முதல் மூன்றாம் சீரில் மோனை; மற்றசீர்களில் வந்தாலும் சிறப்பே.

  இவ்வளவுதான்.

  ஒருமுறை அமைதியாக அமர்ந்து எழுதினீர்களானால் தெளிவாகிவிடும்.

  நன்றி திகழ்!

  பதிலளிநீக்கு
 42. /திகழ் அவர்களுக்கு....


  தங்களின் ஆசிரியப்பா சற்றே ஓசை தவறுவதாகத் தெரிகிறது. எனினும் அதுபற்றிய திருத்தங்களையும் கருத்துக்களையும் அய்யா தமிழநம்பி அவர்கள் வழங்குவார்.
  /

  விள‌க்க‌மாக‌ கூறினால்
  ப‌ய‌ன் உள்ள‌தாக‌ இருக்கும்

  அன்புட‌ன்

  திக‌ழ்

  பதிலளிநீக்கு
 43. ஆசிரிய‌ப்பாவிற்கு
  நேரொன்றிய ஆசிரியத்தளை ,நிரையொன்றிய ஆசிரியத்தளை

  இவ்விர‌ண்டு த‌ளைக‌ள் ம‌ட்டும் தான் வ‌ருமா ?

  இயற்சீர் வெண்டளை,வெண்சீர் வெண்டளை,கலித்தளைக‌ளும் வ‌ருமா

  த‌வ‌றைச் சுட்டிக் காட்டினால் அடுத்து எழுத‌வும் செம்மை ப‌டுத்திக் கொள்ள‌வும் ஏதுவாக‌ அமையும்

  நான் எழுதிய வ‌ரிக‌ளைக் கொண்டே விள‌க்க‌ம் அளித்தால் ந‌ன்றாக‌
  இருக்கும்

  அன்புட‌ன்
  திக‌ழ்

  பதிலளிநீக்கு
 44. திரு.அவனடிமையார் அவர்களே உங்கள் பாக்கள் அருமை. நீங்கள் பாராட்டும் விதமே தனி. தாங்கள் என்பாடலைப்பார்த்து என்ன பின்னூட்டமிடுகிறீர்கள் என ஆவலாய் எதிபார்க்கும் படி செய்துவிட்டீர்கள். மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 45. அவனடியாரின் இரு பாக்களும் அருமை. இரண்டாம் பாப்பற்றிச் சொல்லும் அறிவும் பட்டறிவும் எனக்கில்லை. வாழ்க அவனடியாரே!  திகழ் அவர்களுக்கு....

  தங்கள் மறுமொழிக்கு மேலே அழகாக தமிழநம்பி அய்யா தங்கள் வினைவிற்கான விடையை முன்பே வழங்கியிருக்கிறார். காண்க.


  ///இயற்சீர் வெண்டளை,வெண்சீர் வெண்டளை,கலித்தளைக‌ளும் வ‌ருமா////

  நீங்கள் குறிப்பிடும் மூன்று தளைகளும் வரும். அதில் இயற்சீர் வெண்டளை முற்றாக வரும். வெண்சீர்வெண்டளையும், கலித்தளையும் மிக அருகி வரவேண்டும். அவற்றை நிறைய பயன்படுத்தினால் ஓசை மாறும்.

  ////காரணம் காண்போர் காரியம் காண்பதில்லை
  மரண மென்று மருண்டால் மனிதா
  தோரணம் தோளில் வருவதில்லை
  ஆரண மென்றால் யாருமில்லை அவனிலே/////

  இறுதிச்சொல் "அவனிலே" எனக்குறிப்பிட்டிருக்கிறீர்கள். தட்டச்சுப்பிழையோ? அவனியிலே - என்றிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

  காரணம் காண்போர் காரியம் காண்கிலர்
  மரண மென்று மருண்டால் மனிதா!
  தோரணம் தோளில் வருவதிலை
  ஆரண மென்றால் யாருமிலை புவியிலே!

  ஓரளவிற்கு மாற்றியிருக்கிறேன். இதில் முதலடியின் முதற்சொல்லின் மோனை நெடிலாகும். ஆனால் இரண்டாமடியின் முதற்சொல் மோனை குறில். நெடிலுக்கு நெடிலும் குறிலுக்குக் குறிலும் அமைய வேண்டும்.

  பதிலளிநீக்கு
 46. திகழ். மிக்க நன்றி. உங்களின் பாக்களையும் ஆவலோடு எதிர்பார்கிறோம். ஒவ்வொருவரின் பாவையும் படித்து நீங்கள் பாராட்டுவது இன்பமானதும் பாராட்டவேண்டியதுமாகும். வாழ்ததுகள் நன்றி.

  பதிலளிநீக்கு
 47. திரு.அமுதா. உங்களிடமிருந்து பயின்றவள் நான். உங்களிடமிருந்து இப்படி பாராட்டைப் பெருவது சொல்லிலடங்கா மகிழ்ச்சி. உங்கள் பாக்களை பாராட்டுமளவிற்கு தகுதி எனக்கு வரவில்லை என்றாலும் வயதின் காரணியமாய் வாழ்த்துகின்றேன். வாழ்த்துக்கள்.

  நாளை மறுதினம் ஆசிரியர்தினம். காலத்தாற் அழியாத கவித்திறமையை எனக்களித்த என் ஆசான் உங்களுக்கு என் பணிவான வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

  இன்னுமொரு விண்ணப்பம் இன்னும் சில நாட்கள் என்னால் வலைப்பக்கம் வரயியலாது. என் மகனுக்கு semester exam ஆரம்பித்துவிட்டது. முடிந்தவரையி்ல் பாடங்களை படிப்பேன். பாவெழுதகாலம் கிடைப்பது அரிது. சில நாட்கள் கடந்ததும் கண்டிப்பாகவருவேன். அதுவரைமன்னிக்கவும் .

  பதிலளிநீக்கு
 48. உமா அவர்களுக்கு... கடமை முதலில். அன்பு மகனின் கல்விப்பணிகளை முழுமையுற கவனித்துக் கொள்ளுங்கள். மேலும் ஆசிரியர் நாள் வாழ்த்து வழங்கியுள்ளீர்கள் . நன்றி நன்றி.

  ///உங்கள் பாக்களை பாராட்டுமளவிற்கு தகுதி எனக்கு வரவில்லை///

  இதைத்தான் வள்ளுவன் "அடக்கம் அமரருள் உய்க்கும்" என்கிறானோ? தங்களின் அச்சொல் தங்களின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. எனக்கு அத்தனை பெரிய பாவாற்றலெல்லாம் இல்லை. இருப்பினும் நன்றிநன்றி நன்றி. வாழ்க.

  பதிலளிநீக்கு
 49. அவனடியார்க்கு....

  ////வினையெனும் வாசனைக் காடே வித்தாய்
  அனலெனும் ஆசைக்(கு) எரிபொரு ளாகி
  சிந்திக்க சற்றும் சமயம் இலாது
  வந்தீயில் வீட்டின் இருப்பை இழப்பார்
  தண்ணருள் நீரால் தீயாசை தேய்ந்து
  அன்பொடு ஞானப் பின்தீ ஏற்றிட
  முன்வினை வாதனை முற்றும் அழிப்பார்
  தன்னகங் கண்டோர் தீயணைத் தாரே.////

  இருமூன்று முறை படித்தபின்பே நுட்பமான பொருளை உணரமுடிந்தது. வியக்கிறேன்.

  ////அன்பொடு ஞானப் பின்தீ ஏற்றிட/// - இவ்வரி விளங்கவில்லை.

  தீயாசை தேய்ந்து -என்பதைக் காட்டிலும் "தீயாசை தீய்ந்து" என வரலாம் எனக்கருதுகிறேன்.

  பதிலளிநீக்கு
 50. திரு.தமிழநம்பி அவர்களுக்கு வணக்கம்.
  தாங்கள் மிக எளிமையாக அருமையாக புரியும் படியாக பாடங்களை எழுதுவதும். ஒவ்வொரு பாவினுக்கும் பொறுமையாக பதிலளிப்பதும் வியக்கவைக்கிறது. மிக்க நன்றி.

  அருமையாக பாவெழுத கற்றுக் கொடுத்தும் மிக அழகாக எங்களை அடுத்தகட்டத்திற்கு அழைத்துச் சென்றும், எந்த எதிபார்ப்புமில்லாமல் தங்களின் பொன்னான நேரத்தை எங்களுக்காக அளித்தும் உதவும் எங்கள் மதிப்பிற்குரிய ஆசான் தங்களுக்கும் என் இனிய பணிவான ஆசிரியர் தின வாழ்த்துகளும்,வணக்கங்களும்.

  சில நாட்கள் விடுமுறையளிக்கத் தங்களையும் பணிவுடன் வேண்டுகிறேன். மிக விரைவில் கண்டிப்பாகத் திரும்ப வருவேன். மிக்கநன்றி.

  பதிலளிநீக்கு
 51. {தீயாசை தேய்ந்து -என்பதைக் காட்டிலும் "தீயாசை தீய்ந்து" என வரலாம் எனக்கருதுகிறேன்.}

  அமுதா அவர்களே: ஆமாம். மிகப் பொருத்தமான மாற்றம். மாற்றிக்கொள்கிறேன்.

  {////அன்பொடு ஞானப் பின்தீ ஏற்றிட/// - இவ்வரி விளங்கவில்லை.}

  சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், ஆசை என்னும் பெருந்தீ, நம்மை புறப் பொருள்களின் மேலேயே நாட்டங் கொள்ள வைக்கும். நம்முடனேயே உள்ள நம் உள்ளியல்பு (வாசனை) வித்தாய் இவ்வாசைத் தீயை நன்றாக கொழுந்து விட்டு விடாமல் எரிய வைக்கும்.

  இவ்வாசைத் தீயின் நடைமுறை வெளிப்பாடுதான் 'வாழ்க்கை' என்று நாம் அழைக்கும் இந்த கூத்து.

  இதில் மறுபடியும் மறுபடியும் எரிபட்டு அலுக்கிற மனிதன் எப்போதேனும் 'இதிலிருந்து தப்பிக்க வழியே இல்லையா?'
  'நான் இந்தத் தீயில் அடிபட்டு சாகிறேனே, எனக்கு விடுதலையே இல்லையா' என்றெல்லாம் யோசிக்கிறான்.
  மதங்களின் பின்னால் போகிறான். மதவாத குறுகிய நோக்குப் பிரச்சாரங்களில் எரிபடுகிறான்.
  கடவுள் இல்லை என்கிறான். அதுவும் நிரந்தர சுகத்தை தரவில்லை என்று அறிகிறான். ஆனால் எப்போதும், 'நான்' , 'என் சுகம்' என்றே அலைகிறான்.

  கடைசியாக, இப்பிறவியிலோ, இல்லை மறுபிறவி என்று இருந்தால் அப்போதோ, ஒருவழியாக, 'நான் யார்?'
  'என் உண்மைத் தத்துவம் என்ன', 'ஏன் இப்படி சுகத்திற்கு அலைகிறேன்', 'சுகம் என்பது என்ன?', 'எங்கிருந்து கிடைக்கிறது?'
  'ஐந்து அல்லது ஆறு அடி உயரம் உள்ள, இன்ன பெயருள்ள மனிதன் தான் நானா' ? என்று அடிப்படைக் கேள்விகளை அவனே எழுப்பி விடை காண விழைகிறான்.

  இப்படி இவன் எழுப்பும் ஞானத்தீ (அறிவு என்னும் சிறு-தீ) வாழ்க்கையெனும் ஆசைப் பெருந்தீயில் அடிபட்ட பின்னரே எழுவதால் பின்-தீ என்றேன்.

  இந்த ஞானத் தீ அவன் உள்ளே மனவாழத்தில் உள்ள வாசனை வித்துக்களை (பெண்/ஆண், பொருள், மண் இவற்றை நாடி அவற்றிலிருந்து சுகம் பெறவேண்டும் என்ற அடக்கவொணா இச்சைகளை) வேரோடு எரித்து, அவனை புறநாட்டத்திலிருந்து மாற்றி தன்னாட்டத்தில் நிலைநிறுத்தும்.

  இங்கே நிறுத்திக் கொள்கிறேன்.

  இதற்கு மேலே போனால் என்னை இந்த தளத்திலிருக்கும் அன்பர்கள் வெளியேற்ற அன்புடன் கோருவார்கள். :-)

  ஒரு விஷயம்: இந்த விளக்கங்களெல்லாம் என்னுடவையல்ல. கிளிக்கு புரியுமா அது பேசும் வார்த்தை?

  பதிலளிநீக்கு
 52. அவனடியாருக்கு....

  மிக அழகிய விளக்கம் தந்து புரியவைத்து விட்டீர்கள். எனக்கேற்பட்ட ஐயமெல்லாம் "அதென்ன பின்தீ?" என்பதே. அழகாக அதுபற்றி விளக்கியுள்ளீர்கள். வாழ்க.

  பதிலளிநீக்கு
 53. அன்பு திகழ்,

  என்னுடைய பின்னூட்டம் தவறுதலாக மறைந்து விட்டது.

  நான் முன்பு கூறியவாறு, ஆசிரியப்பா எழுதும்போது ஈரசைச்சீரும் மூவசைச்சீரில் காய்ச்சீரும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

  தளை சரியாக அமையும்.

  கனிச்சீர் மட்டும் வரக்கூடாது.

  எழுத எளிதாகவே இருக்கும்.

  பதிலளிநீக்கு
 54. (சிறைச்)சாலையர்

  தாரினில் காலுறை தகிப்பைத் தடுக்கும்
  சாரலில் சிலிர்க்கும் சிரஞ்சணற் சாக்கில்

  சேறினில் கிடக்கை சணற்பாயே மெத்தை
  நாறிடும் நல்லதோர் நதியெனுங் கூவம்

  பேசிடும் மொழியோ பச்சைப் பசேலென
  வீசிடும் தென்றல், வலைச்சிறை வீட்டுப்

  பறவைக் கொசுவால் பிறந்திடும் நாதம்
  உறவைக் கருதி குருதி குடிக்க

  சுருதியைச் சேர்த்து சுரம்.தனைக் கூட்டும்
  விருந்திடும் செவிக்கு வாகன கீதம்

  அருந்திய அமுதில் அலுப்பை மறந்து
  உறங்கிடும் இவரை உடனே மறக்கும்

  புவியினில் ஆரிவர் போலே?
  கவின்மிகு சென்னையில் சாலை இடுவோரே!


  * 'பேசிடும் மொழியோ பச்சை' - வசை மொழி
  * 'வலைச்சிறை வீட்டுப் பறவைக் கொசுவால்' - (கொசு)வலையில், வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணி (பறவை) போல பறக்கும் கொசுவால்
  * 'உறவைக் கருதி குருதி குடிக்க' - இரத்த பந்தம் போல் உரிமை கொண்டாட
  * 'சுரம்.தனைக் கூட்டும்' - 'ஸ்வரம் கூட்டும்' என்றும், 'ஜுரத்தைக் உண்டாக்கும்' என்றும் கொள்ளலாம்
  * "வா'கன' கீதம்" - 'வண்டிகளின் கனமான (கொடூரமான) ஒலி' எனக் கொள்ளலாம்
  * 'அருந்திய அமுதில்' - 'உண்ட சோற்றில்' என்றும், 'அருந்திய மதுவில்' என்றும் கொள்ளலாம்
  * 'இவரை உடனே மறக்கும் புவியினில்' - சாலையிடுவோரை (அவருடைய அவலங்களை) நாம் நிதமும் பார்த்தாலும், பின்னர் நினைக்கிறோமா என்ன ?

  பதிலளிநீக்கு
 55. அருமை அவனடியாரே! வாழ்த்துக்கள். அழகிய விளக்கமும் தந்துள்ளது அருமை.

  பதிலளிநீக்கு
 56. அவனடிமை ஐயா,

  அ.அ. ஐயா கூறியவாறு உங்கள் அகவற்பா நன்றாக அமைந்திருக்கின்றது.
  விளக்கம் தேவைப்படாமலே புரிகிறது.

  பதிலளிநீக்கு
 57. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 58. திரு. தமிழநம்பி அவர்களின் வலையில் 'ஒரு தமிழ்ச்செல்வன் உயிர் பறித்தாலென்? ' என்ற அவரது பாவினுக்கு பின்னூட்டமாக எழுதிய பா.அவரது ஆணைக்கேற்ப இங்கே.

  [ அவரது முதல் வரியை, அவரைக் குறிக்கவே பயன் படுத்திக்கொண்டேன்.]

  அருந்தமிழ் வுணர்வுடை அன்புநெஞ் சத்தீர்!
  பெரும்படைக் கொண்டேப் பீழைச் செய்தனர்
  கடுங்கல் நெஞ்சினர், கற்றும் அறியார்
  கொடுஞ்செயல் புரிந்ததும் கும்மாள மிட்டனர்
  பகைவனுக் கருளும் பண்புடைக் கருத்தினைப்
  பகைவளர் பண்பினர் பாவம் அறியார்
  இருளும் ஒளியும் இயற்கையின் நிகழ்ச்சி
  மருளவே வேண்டா மனிதம் விழித்திடும்
  முன்புநம் மண்ணில் முன்னவர் அழிந்தனர்
  இன்றுநாம் விடுதலை இன்றியா வாழ்கிறோம்?
  கொன்றுநாம் அழித்தோம் களைகளை என்றால்
  நன்றுதாம் சுதந்திரம் நம்முடை நாட்டில்
  சிந்திய செந்நீர் சிங்கள மண்ணிலும்
  வந்திடும் ஓர்நாள் வெற்றியைச் சூடியே,
  அந்தியும் சாய்ந்திடும் ஆங்கே
  வந்திடும் தமிழர் வாழ்வினில் விடியலே!

  [கொடுஞ்செயல் புரிந்ததும் கும்மாள மிட்டனர் - பிரபாகரன் இறந்துவிட்டார் என்றச் செய்தியைக் கேட்டதும் சிங்களர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர் என்பது செய்தி.]

  பதிலளிநீக்கு
 59. [திரு.பாத்தென்ற்ல் முருகனடியார் அவர்களின் 'எண்ணம்மா எண்ணு' என்ற பாடலுக்கு பின்னூட்டமாக எழுதிய இப் பாடலுக்கும் கருத்துச்சொன்னால் மகிழ்வேன்.

  அய்யா வணக்கம்! அன்னைத் தமிழில்
  கொய்யா கனிதாம் குழந்தை கட்கெல்லாம்
  பாடி பாடிப் பாடம் சொன்னீர்,
  பாடி யாடிப் படித்திட் டாலே
  பாடம் யாவும் பதியும் மனதில்.
  பள்ளிக் குழந்தைகள் போடும் கணக்கு
  பாசத் தோடு பண்பைக் கொடுக்கும்,
  பொல்லாக் கணக்கும் புரிந்திடும் அவர்க்கு
  எல்லாக் கலையும் எளிதாய் கைவரும்
  பிள்ளைகள் எல்லாம் பிரியத் தோடு
  ஊட்டியே சோறு உண்பதுபோல்
  பாட்டிலே கணக்கைப் படித்திடு வாரே

  [ஊட்டினால் பிள்ளைகள் நன்றாய்ச் சாப்பிடுவர், அதுபோல் பாட்டில் கணக்கை அவர் விரும்பும் வண்ணம் கொடுத்தால் விரும்பி கற்பர்.]

  பதிலளிநீக்கு
 60. [திரு.பாத்தென்ற்ல் முருகனடியார் அவர்களின் 'எண்ணம்மா எண்ணு' என்ற பாடலுக்கு பின்னூட்டமாக எழுதிய இப் பாடலுக்கும் கருத்துச்சொன்னால் மகிழ்வேன்.

  அய்யா வணக்கம்! அன்னைத் தமிழில்
  கொய்யா கனிதாம் குழந்தை கட்கெல்லாம்
  பாடி பாடிப் பாடம் சொன்னீர்,
  பாடி யாடிப் படித்திட் டாலே
  பாடம் யாவும் பதியும் மனதில்.
  பள்ளிக் குழந்தைகள் போடும் கணக்கு
  பாசத் தோடு பண்பைக் கொடுக்கும்,
  பொல்லாக் கணக்கும் புரிந்திடும் அவர்க்கு
  எல்லாக் கலையும் எளிதாய் கைவரும்
  பிள்ளைகள் எல்லாம் பிரியத் தோடு
  ஊட்டியே சோறு உண்பதுபோல்
  பாட்டிலே கணக்கைப் படித்திடு வாரே

  [ஊட்டினால் பிள்ளைகள் நன்றாய்ச் சாப்பிடுவர், அதுபோல் பாட்டில் கணக்கை அவர் விரும்பும் வண்ணம் கொடுத்தால் விரும்பி கற்பர்.]

  பதிலளிநீக்கு
 61. அருந்தமிழ் வுணர்வுடை அன்புநெஞ் சத்தீர்!
  பெரும்படை கொண்டேப் பீழைச் செய்தனர்
  கடுங்கல் நெஞ்சினர், கற்றும் அறியார்
  கொடுஞ்செயல் புரிந்ததும் கும்மாள மிட்டனர்
  பகைவனுக் கருளும் பண்புடைக் கருத்தினைப்
  பகைவளர் பண்பினர் பாவம் அறியார்
  இருளும் ஒளியும் இயற்கையின் நிகழ்ச்சி
  மருளவே வேண்டா மனிதம் விழித்திடும்
  முன்புநம் மண்ணில் முன்னவர் அழிந்தனர்
  இன்றுநாம் விடுதலை இன்றியா வாழ்கிறோம்?
  கொன்றுநாம் அழித்தோம் களைகளை என்றால்
  நன்றுதாம் சுதந்திரம் நம்முடை நாட்டில்
  சிந்திய செந்நீர் சிங்கள மண்ணிலும்
  வந்திடும் ஓர்நாள் வெற்றியைச் சூடியே,
  அந்தியும் சாய்ந்திடும் ஆங்கே
  வந்திடும் தமிழர் வாழ்வினில் விடியலே!
  **********************************
  அருமையான பாடல்.
  உணர்வு மிக்க பாடல்.
  ________________________________

  அய்யா வணக்கம்! அன்னைத் தமிழில்
  கொய்யாக் கனிதாம் குழந்தைகட் கெல்லாம்
  பாடி பாடிப் பாடம் சொன்னீர்,
  பாடி யாடிப் படித்திட் டாலே
  பாடம் யாவும் பதியும் மனத்தில்.
  பள்ளிக் குழந்தைகள் போடும் கணக்கு
  பாசத் தோடு பண்பைக் கொடுக்கும்,
  பொல்லாக் கணக்கும் புரிந்திடும் அவர்க்கு
  எல்லாக் கலையும் எளிதாய்க் கைவரும்
  பிள்ளைகள் எல்லாம் பேரன் போடு
  ஊட்டிடுஞ் சோறுணல் ஒப்ப
  பாட்டிலே கணக்கைப் படித்திடு வாரே!
  *****************************
  உங்களுக்கு ஆசிரியப்பா எழுதல் மிகவும் தெளிவாகி விட்டது.
  பாராட்டுகிறேன்.
  நன்றாக எழுதுகிறீர்கள்.
  சிறு மாற்றம் செய்து காட்டியுள்ளேன்.
  கவனியுங்கள்.
  உங்கள் பாடலில் ஏதும் பிழையில்லை.
  மகிழ்ச்சி.

  பாத்தென்றல் ஐயா எழுதியதாக நீங்கள் குறிப்பிட்ட பாடலை நான் பார்க்கவில்லையே! எங்கே உள்ளது?

  இனி நீங்கள் எழுதும் பாடல்களில் அயற்சொல் நீக்கி எழுதுவதிலும்
  கவனம் செலுத்துவோம்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 62. இரண்டு பாவும் மிக நன்றாக இருக்கிறது உமா.

  /பாடம் யாவும் பதியும் மனத்தில்.
  பள்ளிக் குழந்தைகள் போடும் கணக்கு
  பாசத் தோடு பண்பைக் கொடுக்கும்,
  பொல்லாக் கணக்கும் புரிந்திடும் அவர்க்கு
  எல்லாக் கலையும் எளிதாய்க் கைவரும்/

  பள்ளித் தேர்வை எதிர்நோக்கும் மகன்; கணக்கு, கலை என்று எப்போதும் பாடங்களின் நினைவு. அதுதான் உமா அவர்களின் பாவெங்கும் பிள்ளைகளின் படிப்பைப் பற்றியதாக இருக்கிறதோ? இதே கருத்தோடு பாத்தென்றல் முருகனடியார் போல ஒரு பாவை சிந்தடிகள் மட்டும் வைத்து பிள்ளைகளுக்கு சொல்லுவது போல எழுத முயற்சித்தேன் (தாயான உமாவைக் கூறாமல் விடமுடியுமா?):

  பையா பாடம் படித்திடுவாய்
  பையப் பைய உயர்ந்திடுவாய்
  செய்யோன் முருகப் பாத்தென்றல்
  அய்யா அருளிய அருஞ்சுவை
  தொய்யாத் தமிழின் பாட்டுகளால்
  வையம் வழங்கும் வழக்குகளை
  நையப் புடைத்து நெறிபடுவாய்
  பொய்யா மொழியால் புகழ்பெறுவாய்
  மெய்யாம் சிவனின் இடப்பாகம்
  தாயாய்த் திகழும் உமையவளின்
  கையில் கணக்குப் படித்திட்டு
  மெய்யாய் மகிழ்ச்சி அடைவாயே!

  பதிலளிநீக்கு
 63. ஐயா. திரு.பாத்தென்றல் அவர்களின்'எண்ணம்மா எண்ணு' பாடல் கீழுள்ள முகவரியில் உள்ளது.
  http://pathenralmurugadiyan.blogspot.com/2009/09/blog-post.html

  பதிலளிநீக்கு
 64. உமா மற்றும் அவனடியார் ஆகிய இருவரது (பாத்தென்றலார்) பற்றிய பாடல்களும் அருமை. அருமை. அவரிடன் காண்பித்துக் கருத்தைக் கேட்டுப் பதிவுசெய்ய எண்ணியிருக்கிறேன். ஆயினும் நேரமின்மையால் அப்பணி தள்ளிப்போகிறது. இம்மாத இறுதிக்குள் (நான் தமிழகம் திரும்புவதற்கு முன்பு) அவரிடம் காட்டிக் கருத்தை அறிந்துரைக்கிறேன். நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 65. ஐயா வணக்கம்
  //சிறு மாற்றம் செய்து காட்டியுள்ளேன்.
  கவனியுங்கள்.//

  அறிந்தேன். மிக்க நன்றி.

  ஓற்றுப் பிழைகளைத் திருத்திக்கொள்கிறேன்.

  //பிள்ளைகள் எல்லாம் பேரன் போடு
  ஊட்டிடுஞ் சோறுணல் ஒப்ப //

  பிரியம் என்பது வேற்றுச் சொல்லோ?
  அதுதான் பேரன்பு என் மற்றிவிட்டீரோ என அறியவேண்டும்.

  பதிலளிநீக்கு
 66. அவனடியார் அவர்களுக்கு
  //பள்ளித் தேர்வை எதிர்நோக்கும் மகன்; கணக்கு, கலை என்று எப்போதும் பாடங்களின் நினைவு. அதுதான் உமா அவர்களின் பாவெங்கும் பிள்ளைகளின் படிப்பைப் பற்றியதாக இருக்கிறதோ//

  ஆஹா, நீங்கள் சொல்வதும் உண்மைதான். அவனது படிப்பு ஒருபுறம், என்னாலும் வெண்பா வலைக்கு வராமலிருக்க முடியவில்லை. சரியான நேரத்தில் பாத்தென்றலாரும் காணிதம் பற்றி எழுதிவிட்டார். ஆசிரியர் தினம் வேறு வந்துவிட்டது. எல்லாம் சேர்ந்து பாவெல்லாம் பாடமாகிவிட்டது.

  அய்யா உங்கள் பாடல் மிக அருமை.

  பதிலளிநீக்கு
 67. திரு.அமுதா, திரு தமிழநம்பி அவர்களுக்கு.
  //பையா பாடம் படித்திடுவாய்
  பையப் பைய உயர்ந்திடுவாய்
  செய்யோன் முருகப் பாத்தென்றல்
  அய்யா அருளிய அருஞ்சுவை
  தொய்யாத் தமிழின் பாட்டுகளால்
  வையம் வழங்கும் வழக்குகளை
  நையப் புடைத்து நெறிபடுவாய்
  பொய்யா மொழியால் புகழ்பெறுவாய்
  மெய்யாம் சிவனின் இடப்பாகம்
  தாயாய்த் திகழும் உமையவளின்
  கையில் கணக்குப் படித்திட்டு
  மெய்யாய் மகிழ்ச்சி அடைவாயே!//

  இப்படி சிந்தடிகளாய் வருவது எவ்வகையைச் சார்ந்தது.தயவுடன் விளக்கவும். நன்றி

  பதிலளிநீக்கு
 68. /////உமா கூறியது...

  பிரியம் என்பது வேற்றுச் சொல்லோ?
  அதுதான் பேரன்பு என் மற்றிவிட்டீரோ என அறியவேண்டும்./////


  பிரியம் வேற்றுமொழிச்சொல்லே! அதிலென்ன ஐயம்?


  ////இப்படி சிந்தடிகளாய் வருவது எவ்வகையைச் சார்ந்தது.தயவுடன் விளக்கவும். /////


  அறுசீர் விருத்தமே ஆகும்.

  பதிலளிநீக்கு
 69. உமா அவர்களுக்கு,

  அமுதா ஐயா கூறியதைப் பார்த்திருப்பீர்கள்.

  அறுசீர் மண்டிலம்(விருத்தம் = மண்டிலம்) என்று தெரியாமலே நீங்கள் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம் எழுதுகிறீர்கள் என்று கருதுகிறேன்.

  விரைவில், அடுத்தடுத்த வகுப்புகளில் நாம் அறுசீர் மண்டிலப் பாக்கள் எழுத இருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 70. //விரைவில், அடுத்தடுத்த வகுப்புகளில் நாம் அறுசீர் மண்டிலப் பாக்கள் எழுத இருக்கிறோம்.//

  அய்யா! மிக்க நன்றி காத்திருக்கிறோம்.

  ஆறு சீர்களைக் கொண்டு வருவது அறுசீர் மண்டிலம் எனத் தெரியும், ஆயின் தளைகளைப் பற்றித் தெரியாது. அப்பாடல்களை மண்டிலம் என அறியாமலேதான் எழுததினேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 71. பாவலரேறு பெருஞ்சித்திரனாரை தாங்கள் சந்தித்ததுண்டா?

  பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com