புதன், 31 மார்ச், 2010

இரண்டாம் தலைப்பு : தமிழர் நிலை!

இத் தலைப்பில் ஐவர் எழுதியுள்ளனர்.

1. திரு. அண்ணாமலை
எழுதியவை :

ஆறும் மா"ச்சீர்.

கடாரம் கொண்டான் ஒருவன்
...கலிங்கம் வென்றான் ஒருவன்
படாது பகையை விரட்டிப்
....பாரில் எங்குஞ் சென்றான்
விடாது தொழில்கள் செய்து
....விளக்காய்த் தமிழை வளர்த்தான்
தொடாது தொல்லை நீக்கி
....தோல்வி எனுஞ்சொல் போக்கி

இமயம் வரையில் சென்று
....எட்டுத் திக்கும் பரந்து
சமயம் தமிழாய்க் கொண்டு
....சாதி மதங்கள் துறந்து
கமலம் போலே மணந்த
....காலம் இனிமேல் வருமா?
இமையில் நனையும் கண்ணீர்
....இனிவி ழிப்பும் வருமா?


2. திருவமை உமா எழுதியவை :

விளம் மா தேமா
விளம் மா தேமா

பாங்குடன் படித்த லின்றிப்
பணத்தினைக் கொடுக்கும் என்றே
ஏங்கிடு நெஞ்சத் தோடு
இங்கிவர் தமிழை விட்டே
ஆங்கில வழியில் கற்று
அடுத்தவர் போலே வாழ
பூங்குயில் குரலை விட்டுப்
போலியைத் தேடி நின்றார்!

பேச்சிலே தமிழை விட்டார்!
பெயரிலும் தமிழைக் காணோம்!
கூச்சமே யின்றி நாளும்
குறைசொலித் திரிவார் வெட்கம்!
வீச்சதும் அதிகம் அம்மா
வேற்றுவர் மொழியின் மோகம்!
ஏச்சிலும் இவர்கள் பேச்சில்
எம்தமிழ்ச் சொல்லைக் காணோம்!

இன்னும் சில...

விளம் மா தேமா
விளம் மா தேமா

சிந்தையில் தமிழைத் தேக்கிச்
சிறந்திடக் கூடா தென்றே
நந்தமிழ் மக்கள் நெஞ்சில்
நயமிலாச் சொல்லைச் சேர்த்தார்!
வந்தவர் பின்னால் போகும்
மந்தையில் ஒருவர் ஆனோம்!
அந்நியர் அகன்ற பின்னும்
அறிவினில் தெளிவைக் காணோம்!

அகன்றிடாக் குன்றே போலே
ஆங்கொரு நிலையாய் நிற்கத்
தகவிலார் வாழ்வை மாற்றித்
தமிழினைத் தேயச் செய்தார்
இகழ்ந்தவர் தமிழைத் தாழ்த்த
இனிமையைக் கொள்வார் வானில்
பகலினை முகில்ம றைக்கும்
பட்டென விலகும் நில்லா!


3. திரு. அவனடிமை
எழுதியவை :

(மா+மா+காய்)(தேமா/புளிமா + தேமா/புளிமா + தேமாங்காய்/புளிமாங்காய்/கூவிளங்காய்/கருவிளங்காய்)

பாக்கள் புனைந்து படித்திட்டால்
.........பாழும் வயிறு நிரம்பிடுமா?
தேக்கம் மிகுந்த நம்நாட்டில்
.........தேடுஞ் செல்வம் தென்படுமா?
ஊக்கம் உணவும் உறைவிடமும்
.........உருவாக் கிடுமோர் உறுதொழிலும்
ஆக்கம் அளிக்கும் அயல்நாட்டிற்
.........கறிவுத் தமிழர் புலம்பெயர்ந்தார்!

நீக்கம் நெடுநாள் நெடுந்தொலைவு
.........நிலத்தை விட்டுப் பிரிந்தவரின்
நோக்கம் இன்றி நாட்பொழுதில்
.........நுண்மைத் தமிழும் மலிவாகித்
தாக்கம் வேற்று மொழியினத்தால்
.........தனதின் னொலியில் தான்மருவ
நாக்கில் நரம்பின் றித்துவைப்பார்
.........நையப் புடைப்பார் தமிழ்ப்பாரில்!

வீக்கம் பணத்தில் மட்டுமிலை
.........வீணே எழுதும் சொற்களிரலும்!
வாக்கில் வரம்பை நாம்வைத்தால்
.........வாதா டுவதை விட்டுவிட்டுத்
தாக்கா தவரைத் தன்மையுடன்
.........தக்க முறையில் திருத்திடவே
றாக்கா தென்றும் மொழிச்சுவையை
.........அன்பாய் அளித்தால் தமிழுயரும்!

4. திரு.சிக்கிமுக்கி
எழுதியவை :

(விளம் + மா + தேமா)

அன்பெலாம் வறண்ட நெஞ்சம்
அழுக்கெலாம் திரண்ட எண்ணம்
முன்பெலாம் இருந்த மேன்மை
முழுவதும் மறந்த உள்ளம்
தன்னலம் முன்னே நிற்கும்
தமிழினம் அழிவ தற்கும்
முன்துணை நின்ற கீழ்மை
முழுயிழி வதனின் சின்னம்!

ஆற்றுநீர் உரிமை எல்லாம்
அடியுடன் பறிகொ டுத்தும்
ஏற்றமாய்த் தன்கு டும்பம்
இருந்திடும் எண்ணம் ஒன்றே
ஊற்றமாய்த் தங்கும் ஈழ
உடன்பிறப் பழிவ தற்கும்
ஆற்றலாய்த் துணையும் போனான்
ஆமவன் தமிழன் இன்றே!

5. திரு. திகழ்
எழுதிய மண்டிலம் :

மா+மா+மா+மா+
மா+காய்

ஆறு பாய்ந்து செழித்த நிலம்
...அனைத்தும் போயிற்று!
வீறு கொண்டு எழுந்து பெற்ற‌
...வெற்றி போயிற்று!
சிறப்பு மிக்க அருமை பெருமை
...சிதறிப் போயிற்று!
உறங்கிக் கிடந்தால் உயர்வு என்றும்
...உண்டோ தமிழர்க்கு?

மிக்க மகிழ்ச்சி!
அறுசீர் மண்டில வகைகளைப் பயன்படுத்தி எழுதும் பயிற்சி நன்கு பலருக்கும் கைவரப் பெற்றிருக்கிறது.
இனி, இலக்கியங்களைப் படித்தும், அணி வகைகளைப் பயன்படுத்தி எழுதப் பழகியும் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ளலாம்!

4 கருத்துகள்:

 1. தங்களின் தொகுப்பிற்கும்,
  திருத்தங்களுக்கும் நன்றிகள் ஐயா!
  வாழ்க தமிழ்!

  பதிலளிநீக்கு
 2. நன்றி அண்ணாமலை ஐயா.

  தொடர்ந்து எழுதிப்பழகுங்கள்.

  பண்டைத்தமிழ் இலக்கியங்களை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் படித்தீர்களானால், தமிழை அழகுறவும் பொருத்தமாகவும் எழுத மேல்மேலும் ஆற்றல் பெறலாம்.

  பாரதி, பாவேந்தர், பெருஞ்சித்திரனார் போன்றோரின் பாடல்களையும் படிப்பது, எளிமையாகவும் சிறப்பாகவும் எழுத உதவும்.

  பதிலளிநீக்கு
 3. //பாரதி, பாவேந்தர், பெருஞ்சித்திரனார் போன்றோரின் பாடல்களையும் படிப்பது, எளிமையாகவும் சிறப்பாகவும் எழுத உதவும்//

  நன்றி அய்யா. கண்டிப்பாக படிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. கண்டிப்பாக ஐயா!
  நன்றிகள்! தமிழறிஞர்கள் அனைவருக்கும்!

  பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com