புதன், 31 மார்ச், 2010

முதல் தலைப்பு : தமிழ்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!
மிகவும் சிறப்பாகப் பலரும் மண்டிலப் பாக்கள் எழுதியிருக்கின்றீர்கள்.
மிக்க மகிழ்ச்சி.
புதிய அன்பரும் கலந்து கொண்டு நன்கு எழுதியிருக்கிறார்.
நம் அகரம் அமுதாவும் தம் மகிழ்ச்சியைத் தெரிவித்திருக்கின்றார்.
ஒவ்வொரு தலைப்பிலும் எழுதப்பட்ட மண்டிலங்களைத் தொகுத்தளித்திருக்கின்றேன்.
சில மண்டிலங்களில் சிறு திருத்தம் இருக்கும். எழுதியவர்களுக்கு எளிதில் தெரியும்.

மொத்தத்தில், அனைவரும் நன்றாக எழுதப் பழகியிருப்பது தெரிகிறது.
இங்கு எழுதப்பட்ட பாடல்கள் நூலாக வெளியிடக்கூடிய தகைமை சான்றன என்பதில் ஐயமில்லை.

முதலில், தமிழ் என்ற தலைப்பில் எழுதப்பட்ட மண்டிலங்களைத் தொகுத்துக் கீழே தந்துள்ளேன்.

1.திரு.அகரம் அமுதா எழுதியவை :
விளம் + மா + தேமா = என்ற வாய்ப்பாட்டில் அமைந்த பாடல்!

கிழவியே! கிளியே! நாளும்
கிடந்துநான் கொஞ்ச நாணும்
அழகியே! அமுதே! தேனே!
அன்னையென் முலைப்பா லுண்ணும்
குழவியே! குருத்தே! ஆடும்
கொடியிடை மாதே! உன்னைத்
தழுவியே இன்பம் கொள்ளும்
தலைவனென் இன்னல் கேளாய்!

உண்டிலேன்; உன்னை எண்ணி
உறக்கமும் கண்க ளோடு
கொண்டிலேன்; கண்ணு றக்கம்
கொள்ளினும் கனவோ டின்பம்
கண்டிலேன்; கருத்தி லாடும்
கற்பனைச் செய்யுள் ஒன்றும்
விண்டிலேன்; மூச்சுக் காற்றை
விழுங்கவும் ஒல்லா துள்ளேன்!

திரையிலும், திசைகள் தோறும்,
தெருவிலும், காணும் சின்னத்
திரையிலும், நாளே டோடும்,
திறமறிந் திருவர் பேசும்
உரையிலும், வீட்டி னுள்ளும்,
உன்றனைத் தேடித் தேடி
இரவிலும் பகலி னோடும்
ஏங்கினேன் எங்குச் சென்றாய்?


2.திரு. திகழ் எழுதியவை :
தமிழ் ‍- (இயற்சீர் ஆசிரிய மண்டிலம்)

உயிராய் உடலாய் என்னுள்
...உருவம் கொண்டாய் தமிழே!
செயலாய் சொல்லாய் இருந்து
...என்னை ஆளும் தமிழே!
தாயாய் இறையாய் இருந்து
...என்னைக் காப்பாய் தமிழே!
சேயாய் மகளாய் மீண்டும்
...பிறக்க வேண்டும் தமிழே!

கனவாய் நினைவாய் காணும்
...பொருளாய் எல்லாம் நீயே!
வானாய் மண்ணாய் வணங்கும்
...இறையாய் எல்லாம் நீயே!
பொன்னாய் மணியாய் கிடைக்கும்
...புகழாய் எல்லாம் நீயே!
உன்னை யன்றி வேறு
...யாரு மில்லை தமிழே!

எழுத்து வ‌டிவ‌ம் வேண்டு
...மென்று சொல்லிக் கொண்டு
க‌ழுத்தில் க‌த்தி கொண்டு
...அலையும் கூட்ட‌ம் பெருமை
ப‌ழைமை மிக்க‌ த‌மிழைச்
...சிதைக்கு மிந்த‌ நோக்க‌ம்
செழுமை போக்கச் செய்யும்
...சிறுமை சேர்க்கும் அ‌ன்றோ?

திகழ்,
பூசை செய்ய‌ப் பார்த்தால்
...எங்கே சென்றாய் தாயே
இசையாய்க் கேட்க‌ நுழைந்தால்
...காண‌ வில்லை உன்னை
த‌சையைக் காட்டும் ப‌ட‌த்தில்
...சிதைந்து போனாய் நீயோ
ஓசை யின்றி எங்கே
...ஒளிந்து கொண்டாய் த‌மிழே
-இந்த மண்டிலப்பாவில் நெடிற் கீழ் எதுகையும், குறிற்கீழ் எதுகையும் கலந்து வருகின்றன (பூசை, இசை, தசை, ஓசை)
இவற்றை எல்லா அடிகளிலும் நெடிற்கீழ் எதுகையாகவோ, குறிற்கீழ் எதுகையாகவோ மாற்றிவிடுங்கள்.

3. திரு.அண்ணாமலை எழுதியவை :

விளம் + மா + தேமா, விளம் + மா + தேமா

உறுபகை அழிதல் வேண்டின்
....ஊழ்வினை கழிதல் வேண்டின்
அறுமுகன் அருளும் வேண்டின்
....ஆனவை அருகில் வேண்டின்
வரும்பிணி யாவும் போயே
....வாழ்க்கையுஞ் செழிக்க வேண்டின்
கரும்புகை படிந்த நெஞ்சில்
....களங்கமில் ஒளியும் வேண்டின்..

மனத்தினில் தமிழை என்றும்
....மலையென வணங்கிப் போற்றி
வனப்பினில் உயர்ந்த தேனை
....வாய்தனில் உரைத்து வாழ்வில்
தினம்புரி செயல்கள் யாவுந்
....தீந்தமி ழாலே கூறி
அனல்மிகு தொல்லை போக்கி
....அருளுடை வாழ்வை வாழ்வீர்.!

4. திரு.சிக்கிமுக்கி எழுதியவை :
(மா + மா + காய்)

அன்னை மொழியே! அறமுணர்த்தும்
அறிவே, உணர்வே அரும்பண்பே!
முன்னைப் பழமைப் பெருமையுறை
முதல்தாய் மொழியே, செந்தமிழே!
பின்னைத் தமிழர் பேதைமையால்
பெருமை குலைந்த பேரழகே!
உன்னை ஆய்ந்தே அயல்நாட்டார்
உரைத்தார் செம்மொழி நீயென்றே!

ஒப்பில் கழக இலக்கியமும்
உலகிற் சிறந்த முப்பாலும்
துப்பில் திகட்டா பாவியங்கள்
சுவையாய் ஐந்தும் சுமந்தவளே!
தப்புத் திருத்தித் தருங்கம்பன்
தகைசால் பாவும் பெருங்கதையும்
செப்பஞ் சிறக்கத் தேர்ந்தணியும்
திருவாந் தமிழே வாழியவே!


5.திரு. இரா. வசந்த குமார் எழுதிய மண்டிலம்:
(மா - மா - காய்.)

தோழி எனக்கு வளைநகருந்
தோளி னிலெனைச் சாய்த்துக்கொள்.
ஆழி அளவில் மகிழ்வோதீ
அதுவுங் குளிரும் துயரோவுந்
தாழி நிறைத்த கவிகொஞ்சம்
தாவி எடுத்து அமைதியுற,
வாழி என்றும் வான்புகழ
வசந்தப் பெண்ணாய்த் தமிழ்நண்பி!


6. திருவமை.உமா எழுதியவை :
குற்லீற்று மா+ விளம்+ மா
விளம் +விளம்+ மா

பாகு வெல்லமும் தேனும்
பருகிடு கனியதன் சாறும்
போகு மிடமெலாம் வாசம்
புன்னகை வீசிடுந் தென்றல்
ஓடும் ஊரெலாம் ஆறு
ஓங்கிடச் செய்திடு வளனும்
தேடும் இன்பமும் தருமே
தீந்தமிழ் தந்திடும் ஒருசொல்

சொல்லச் சுவைத்திடும் நாவும்
சோர்வினை விலக்கிடும் வானின்
வில்லைப் போல்பல வண்ணம்
வியத்தகு தமிழினில் உண்டே
கல்லைச் செதுக்கிய சிலைதான்
கற்றவர் சிந்தையில் தமிழே!
இல்லை இருந்தமிழ்ச் சொல்லுக்
கிருநில மீதினில் ஈடே!

அவனடிமை ஐயாவின் பாடல் இரண்டாம் தலைப்பில் வருகின்றது.


6 கருத்துகள்:

 1. அய்யா,
  மிக்க நன்றி. மிக அருமையாக தொகுத்து தந்துள்ளமை மற்றவரின் பாக்களை எளிதில் படிக்க உதவுகிறது. ஒரே தலைப்பின் கீழ் படிக்கையில் நிறைவாகவும் உள்ளது. நன்றி.

  பதிலளிநீக்கு
 2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 3. உண்மைதான்; பாக்களைத் தொகுத்துப் பார்க்கும் போது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 4. அனைவரது பாக்களையும் அழகாகத் தொகுத்தளித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் அய்யா!

  பதிலளிநீக்கு
 5. திரு.அமுதா, திரு திகழ், திரு சிக்கி முக்கியார்,திரு.அண்ணாமலை,திரு.வசந்தகுமார்
  அனைவருக்கும் பாராட்டுகள்.

  ஆசிரியருக்கும் திரு.அமுதா அவர்களுக்கும் எப்படி நன்றி சொல்வதென்றேத் தெரியவில்லை.
  இவ்வளவு பேரை இவ்வளவு அழகாக பாஎழுத வைத்தது வியப்புக்குரியதும் பாராட்டக்குரியதும் எங்களின் மிகுந்த நன்றிக்குரியதும் ஆகும்.
  மிக்க நன்றி அய்யா.

  பதிலளிநீக்கு
 6. அனைவருக்கும் பாராட்டுகள்

  நன்றி அய்யா

  /-இந்த மண்டிலப்பாவில் நெடிற் கீழ் எதுகையும், குறிற்கீழ் எதுகையும் கலந்து வருகின்றன (பூசை, இசை, தசை, ஓசை)
  இவற்றை எல்லா அடிகளிலும் நெடிற்கீழ் எதுகையாகவோ, குறிற்கீழ் எதுகையாகவோ மாற்றிவிடுங்கள்.

  /

  பிழைகளைத் திருத்திக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com