செவ்வாய், 2 மார்ச், 2010

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்- 5

அடுத்த வகை மண்டிலம் 'குறிலீற்று மாக் கூவிள முவ்விளங் காய்' வகையாகும்.

இம்மண்டிலப் பாவில் -

1. ஓர் அடியில் ஆறு சீர்கள் வரவேண்டும்.

2. நான்கு அடிகளும் ஓர் எதுகை பெற்றிருக்க வேண்டும்.

3.முதல் சீர், ஐந்தாம் சீரில் மோனை அமைவது சிறப்பு.

4. ஓர் அடியை நான்கு சீர், இரண்டு சீராக மடித்தெழுதுவது மரபு.

5. நான்கு அடிகளும் அளவொத்து வரும்.
முதற் சீர் குறில் ஈற்று மாச்சீராக வரும்.
இரண்டாம் சீர் கூவிளச் சீராக அமையும்.
மூன்று நான்கு ஐந்தாம் சீர்கள் விளச்சீர்களாக வரும்.
கடைசிச் சீர் மாங்காய்ச் சீராக வரும்.

6. தளை பற்றிக் கருத்துச் செலுத்துதல் வேண்டா.

7. ஈற்றெழுத்து எதுவும் வரலாம்.

தயங்கவோ தளரவோ வேண்டா.

ஓர் எடுத்துக்ககாட்டுப் பாடலைப் புரிந்து கொண்டால், எளிதில் எழுதலாம்.

வாட கைக்கென வீடுகொ டுத்திடல்
..........வழக்கெனக் கண்டுள்ளோம்
வாட கைக்கென ஊர்திகள் விட்டதில்
.........வாழ்ந்திடும் வழக்குண்டு
வாட கைக்கென நூலகம் வைப்பதும்
..........வந்தது சிலநாளாய்
வாட கைக்கிளம் பெண்டிரை விட்டுயிர்
..........வாழ்வதும் வாழ்வாமோ?

இப் பாடலில், முதற்சீராக வாட என்ற சொல்லே நான்கடிகளிலும் வந்துள்ளது. இப்படியும் வரலாம்; ஓரடியில் வாட என்றும் மற்ற அடிகளில் முதற்சீராகக்
கூட, பாட, ஓட, தேட, நாட என வெவ்வேறு சொற்கள் அமைத்தும் பாடலாம்.

'வாட' என்பதில் '' குறில்; ஆகவே, வாட என்பது குறில் ஈற்று மாச்சீர்.

அடுத்து வந்த கைக்கென கூவிளம்.

வீடுகொ, டுத்திடல், வழக்கென - மூன்றும் விளச்சீர்கள்

கண்டுள்ளோம் - மாங்காய்ச்சீர்.

நான்கடிகளும் இவ்வாறே அமைந்துள்ளன.

இப்பாடலை எழுதியவர் புதுவைப் பாவலர் அரங்க.நடராசன் ஐயா அவர்கள்.


இன்னொரு பாடல் :

மாறி நின்றெனைக் கெடக்கிடந் தனையையென்
..........மதியிலி மடநெஞ்சே
தேறு கின்றிலம் இனியுனைச் சிக்கெனச்
..........சிவனவன் திரள்தோள்மேல்
நீறு நின்றது கண்டனை யாயினும்
..........நெக்கிலை இக்காயம்
கீறு கின்றிலை கெடுவதுன் பரிசிது
.........கேட்கவுங் கில்லேனே. - ( திருவாசகம் -37)

தயங்காது எழுதத் தொடங்குக. எளிமையாகவும் அழகாகவும் எழுதுக.

53 கருத்துகள்:

 1. பாட லின்பொருள் பகுத்தறி யாதொரு
  .......பச்சிளம் பருவத்தில்
  பாட கன்.என பெயர்பெறப் பெற்றவர்
  .......பகட்டினில் பிழைவாரே
  சீட னின்திறன் சீர்திருத் தம்பெறச்
  .......சிந்தனை செய்யாமல்
  மேடை யேற்றிடும் ஆர்வமோ டவர்குரு
  .......மெட்டையே மறப்பாரே.

  பதிலளிநீக்கு
 2. அவனடியாரின் பாடல் நகைச்சுவை மிக்கதாக உள்ளது. வாழ்த்துக்கள் அய்யா!

  ++++பாட கன்.என பெயர்பெறப் பெற்றவர்
  .......பகட்டினில் பிழைவாரே +++++

  பாட கன்.எனப் பெயர்பெற பெற்றவர்
  .......பகட்டினில் பிழைவாரே


  பாட க+ன்+னென =ஒற்றுமிகச்செய்து எழுதுவதும் ஒரு விதியாகும் அல்லவா?

  பதிலளிநீக்கு
 3. வாடி நின்றிடும் மனத்தினுள் வருந்திடும்
  மாணவச் செல்வங்காள்!
  பாட நூல்களைப் படிப்பதால் நெஞ்சினில்
  பதித்திடப் பழகுங்கள்!
  நாடித் தேர்வினை நன்குநீர் எழுதிட
  நல்மதிப் பெண்சேரும்
  தேடி வேலையும் கைவரும்; வாழ்த்திட
  சேர்ந்துவ ரும்ஊரும்!

  பதிலளிநீக்கு
 4. காது காதெனக் கத்தியே அழைப்பினும்
  கண்டுகொள் வாரோகேக்
  காது காதெனில் கத்துவோர் கத்தினும்
  கண்டுகொள் லாதார்கேக்
  காத காதுபோல் கடமையைச் செய்திடாக்
  கயமையர் மிகுந்தாரே
  தீது தீந்தமிழ்ச் செய்யுளுள் பிறமொழிச்
  சேர்க்கையில் திளைப்பாரே!

  +++ தீந்தமிழ்ச் செய்யுளில் பிறமொழிச் சேர்க்கையில் திளைப்பாரே அது தீதாகும் எனக்கொண்டுகூட்டிப் பொருள் கொள்க+++

  பதிலளிநீக்கு
 5. *****************
  பாட லின்பொருள் பகுத்தறி யாதொரு
  .......பச்சிளம் பருவத்தில்
  பாட கன்எனப் பெயர்பெறப் பெற்றவர்
  .......பகட்டினில் பிழைப்பாரே
  சீட னின்திறன் சீர்திருத் தம்பெறச்
  .......சிந்தனை செய்யாமல்
  மேடை யேற்றிடும் ஆர்வமோ டவர்குரு
  .......மெட்டையே மறப்பாரே.
  ******************
  சரியாக எழுதியிருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 6. *************
  வாடி நின்றிடும் மனத்தினுள் வருந்திடும்
  மாணவச் செல்வங்காள்!
  பாட நூல்களைப் படித்தவை நெஞ்சினில்
  பதித்திடப் பழகுங்கள்!
  நாடித் தேர்வினை நன்குநீர் எழுதிட
  நல்மதிப் பெண்சேரும்
  தேடி வேலையும் கைவரும்; வாழ்த்திடச்
  சேர்ந்துவ ரும்ஊரும்!

  ********************
  காது காதெனக் கத்தியே அழைப்பினும்
  கண்டுகொள் வாரோகேட்
  காது காதெனில் கத்துவோர் கத்தினும்
  கண்டுகொள் லாதார்கேட்
  காத காதுபோல் கடமையைச் செய்திடாக்
  கயமையர் மிகுந்தாரே!
  தீது தீந்தமிழ்ச் செய்யுளுள் பிறமொழிச்
  சேர்க்கையில் திளைப்பாரே!
  **********************
  இரண்டு மண்டிலங்களும் நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 7. காதற் தலைவன் கண்ணாற் பேசும்
  கிளிமொழி யாளாலே..
  ஊதற் காற்றாய் உடலில் வெப்பம்
  உறுத்தும் மூச்சாலே..
  சாதற் பொழுதின் சமயந் தன்னில்
  சடுதிவி ளையாடி..
  நோதற் களைந்து நாளும் பொழுதும்
  நலம்பெற் றிருப்பீரே..!!

  துணிந்து எழுதடா அண்ணாமலை.,
  திருத்துவதற்கு புலவர் குழாமே இருக்கும்
  போது உனக்கென்ன கவலை..!!

  பதிலளிநீக்கு
 8. காலைச் செங்கதிர் கடலினைத் தழலென
  காட்டிடும் வகையன்ன
  மாலைப் போதினில் வெண்மதி வானிலே
  மயக்கிடு மேயென்னை
  சோலைப் பூவெலாம் வாசனைத் தூவிடும்
  சூடிய உன்மீது
  காளை என்மனம் கலந்திட எண்ணிடும்
  காரிகை தன்னோடு.

  பதிலளிநீக்கு
 9. வீட்டு வேலைகள் திறம்பட செய்திட
  வேண்டுமாம் பெண்னென்றும்
  பாட்டு பாடிட பாத்திரம் தேய்த்திட
  பழகிடு நீயென்று
  பூட்டி வைத்தனர் பொய்விலங் கொடித்துநான்
  புயலென திறந்தன்னை
  காட்டி விண்ணையே வென்றிட அவர்தலை
  கவிழ்ந்திட நின்றாரே!

  பதிலளிநீக்கு
 10. என்று தாய்தமிழ் தன்னிலே திறம்பட
  எழுதிடச் செய்வோமோ
  என்று எந்தமிழ் மக்களின் மொழியிலே
  செந்தமிழ் கேட்போமோ
  என்று எம்மவர் தமிழினில் படித்திட
  எண்ணமேக் கொள்வாரோ
  நன்று இன்றென நற்றமிழ் தன்னையே
  நயத்தொடு கற்போமே!

  பதிலளிநீக்கு
 11. தாக மோமிகு; தவித்திடும் நாவிடம்
  தண்ணிய நீரைக்கேட்
  டாக வேண்டிய மொழியென மிரட்டியே
  தமிழினைச் சொன்னால்செத்
  தாக வேண்டிய நிலைவரும். பொருந்திய
  தக்கநல் அயல்சொல்முத்
  தாக எழுதிட, முறைத்திடும் சிலரினைத்
  தவிர்த்திடும் விரையும்நாள்.

  +++ தீந்தமிழ்ச் செய்யுளில் பிறமொழிச் சேர்க்கையில் திகைப்பாரே அது மூடாகும் எனக்கொண்டுகூட்டிப் பொருள் கொள்க+++

  பதிலளிநீக்கு
 12. கண்டு கேட்டிட வேண்டுமே செல்வமே
  கண்ணிலும் காதாலும்
  விண்டு நீயுமே உணவினை சுவைத்திட
  வேண்டுமுன் வாயாலே
  மூன்றும் முக்கியம் நம்முடை சுவாசமோ
  மூக்கினால் தானன்றோ
  நன்று நம்முயிர் வாழுமிவ் உடலினை
  நாமுணர் மெய்யென்போம்.

  பதிலளிநீக்கு
 13. அன்பு உமா...

  கலக்கல்... அழகாகிக் கொண்டே வருகின்றன தங்கள் பாக்கள். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 14. அன்பு அண்ணாமலை...

  தாங்கள் புலவர் குழாமை நம்புவதை விட, இத்தளத்தின் முதல் பதிவில் இருந்து படித்துக் கொண்டே வந்தால், இன்னும் சிறப்பாகத் தங்களால் மரபுப் பாடல்கள் எழுத முடியும் என்று உறுதி அளிக்கிறேன்.

  நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 15. பதிவிட்ட ஒரே நாளில் இத்தனைப் பாக்களா? பெரிய அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது நம்வலைதளம். புதியவரான அண்ணாமலையாரின் பா வியக்க வைக்கிறது.

  உமா அவர்களின் வெவ்வேறு கோணத்திலான பாக்கள் அருமை. அருமை.

  தமிழ நம்பியாரின் திருத்தங்கள் அருமை. அருமை.

  வசந்தின் பாவும் அருமை அருமை. வாழ்க வாழ்க.

  பதிலளிநீக்கு
 16. தமிழநம்பியாரின் திருத்தத்தில் மேலுமோர் திருத்தம்.

  ++++வாடி நின்றிடும் மனத்தினுள் வருந்திடும்
  மாணவச் செல்வங்காள்!
  பாட நூல்களில் படித்தவை நெஞ்சினில்
  பதித்திடப் பழகுங்கள்!
  நாடித் தேர்வினை நன்குநீர் எழுதிட
  நல்மதிப் பெண்சேரும்
  தேடி வேலையும் கைவரும்; வாழ்த்திடச்
  சேர்ந்துவ ரும்ஊரும்++++

  பதிலளிநீக்கு
 17. பார தியினை மகாகவி என்றுரைப்
  ...........பாரவர் பாராட்டைப்
  பார மேயெனக் கண்டவன் தமிழினில்
  ...........பண்ணினி தென்றாலும்
  பார தம்தரும் பழந்திரு மறைகளை
  ...........பல்மொழிப் பெயர்த்தானே
  பார சீகமும் சுந்தரத் தெலுங்கையும்
  ...........பாடெனப் புகழ்ந்தானே.

  பதிலளிநீக்கு
 18. பார தியினை மகாகவி* என்றுரைப்
  ...........பாரவர் பாராட்டைப்
  பார மேயெனக் கண்டவன் தமிழினில்
  ...........பண்ணினி தென்றாலும்
  பார தம்தரும் பழந்திரு மறைசில
  ...........பன்மொழிப் பெயர்ப்பாளன்
  பார சீகமும் சுந்தரத்* தெலுங்கையும்
  ...........பாடெனப் புகழ்ந்தானே.


  'மகாகவி’ , ‘சுந்தரம்’ இரண்டும் வடமொழிச் சொற்கள்

  பதிலளிநீக்கு
 19. பாடி பாரதி பாவினில் சொன்னதைப்
  பழகிடல் தவறில்லை
  கோடி மக்களும் அடிமையாய் இருந்தது
  குறையவன் வாழ்நாளில்
  ஏடி பாரடி சுதந்திர நாட்டினில்
  இந்தமிழ் இயலாதோ?
  கூடி நாமதன் குறைகளைக் களைந்திட
  கூடுமே எந்நாளும்...

  நாடி நம்கவி கட்டுரைப் படித்திடல்
  நாவினுக் கெளிதாமோ
  பாடி பாரதி பாவினைத் தந்தது
  பழகிடும் தமிழ்தானே
  தேடிப் போய்ப்பல மொழிகளைக் கற்றிடல்
  தீதென ஆகாதே
  வாடி நின்றிடும் வகையினில் தமிழினை
  வதைத்தலும் கூடாதே...

  கோடி யாயினும் கொடுத்திடக் கொள்ளுதல்
  குறையுடைச் செயலன்றோ
  வாடி நின்றிடும் நம்தமிழ் தன்னிலே
  வேர்ச்சொலும் பலவாகும்
  தேடி நாமதில் சொற்பலக் கண்டிட
  தேறிடுந் தமிழுந்தான்
  வாடி நாமினி நம்தமிழ் தழைத்திடும்
  வகையினை அறிவோமே!

  பதிலளிநீக்கு
 20. //ஏடி பாரடி சுதந்திர நாட்டினில்
  இந்தமிழ் இயலாதோ?//

  ஏடி பாரடி இன்றைய நாளினில்
  இந்தமிழ் இயலாதோ

  எனக் கொள்ளாவும்.

  பதிலளிநீக்கு
 21. திரு. வசந்த். வாழ்த்துக்கு மிக்க நன்றி.

  திரு. அ.அமுதா மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 22. அன்பார்ந்த அண்ணாமலை,
  உங்கள் ஈடுபாடு மகிழ்வளிக்கிறது.
  நாம் எழுதும் இந்த அறுசீர் மண்டில வகையில் ஆறு சீர்களும் -
  குறிலீற்றுமா + கூவிளம் + விளம் +விளம் +விளம் + மாங்காய் (தேமாங்காய் அல்லது புளிமாங்காய்)
  என்ற அமைப்பில் வர வேண்டும்.

  நீங்கள் எழுதியுள்ள பாடலின் முதல் அடியை மட்டும் இந்தச் சீர் அமைப்பில் கீழே உள்ளவாறு திருத்தி யிருக்கின்றேன்.
  *******************
  காதல் நாயகன் கண்ணுரை செய்திடும்
  கனிமொழி யாளாலே..
  ************************
  இதே போன்ற சீர் அமைப்போடு மற்ற மூன்று அடிகளையும் நீங்களே கருத்துத் தெளிவோடு எழுத முயலுங்கள்.
  பிழையாக இருக்கும் என்று தயங்க வேண்டா.
  திருத்திக் கொள்ளலாம்.
  எழுதுக. நன்றி.

  பதிலளிநீக்கு
 23. காலைச் செங்கதிர் கடலினைத் தழலென
  காட்டிடும் வகையன்ன
  மாலைப் போதினில் வெண்மதி வானிலே
  மயக்கிடு மேயென்னை
  சோலைப் பூவெலாம் வாசனைத் தூவிடும்
  சூடிய உன்மீது
  காளை என்மனம் கலந்திட எண்ணிடும்
  காரிகை தன்னோடு.
  ***
  அருமையான அறுசீர் மண்டிலம்.
  -----------
  வீட்டு வேலைகள் திறம்படச் செய்திட
  வேண்டுமாம் பெண்னென்றும்
  பாட்டுப் பாடிட பாத்திரம் தேய்த்திட
  பழகிடு நீயென்று
  பூட்டி வைத்தனர் பொய்விலங் கொடித்துநான்
  புயலென திறந்தன்னை
  காட்டி விண்ணையே வென்றிட அவர்தலை
  கவிழ்ந்திட நின்றாரே!
  *****
  அரிய உரிமை முழக்கம்!
  -------------
  என்று தாய்த்தமிழ் தன்னிலே திறம்பட
  எழுதிடச் செய்வோமோ
  என்று எந்தமிழ் மக்களின் மொழியிலே
  செந்தமிழ் கேட்போமோ
  என்று எம்மவர் தமிழினில் படித்திட
  எண்ணமேக் கொள்வாரோ
  நன்று இன்றென நற்றமிழ் தன்னையே
  நயத்தொடு கற்போமே!
  ****
  நல்ல விளக்கம்!
  ----------
  பாடி பாரதி பாவினில் சொன்னதைப்
  பழகிடல் தவறில்லை
  கோடி மக்களும் அடிமையாய் இருந்தது
  குறையவன் வாழ்நாளில்
  ஏடி பாரடி இன்றைய நாளினில்
  இன்தமிழ் இயலாதோ?
  கூடி நாமதன் குறைகளைக் களைந்திட
  கூடுமே எந்நாளும்...

  நாடி நம்கவி கட்டுரைப் படித்திடல்
  நாவினுக் கெளிதாமோ
  பாடி பாரதி பாவினைத் தந்தது
  பழகிடும் தமிழ்தானே
  தேடிப் போய்ப்பல மொழிகளைக் கற்றிடல்
  தீதென ஆகாதே
  வாடி நின்றிடும் வகையினில் தமிழினை
  வதைத்தலும் கூடாதே...

  கோடி யாயினும் கொடுத்திடக் கொள்ளுதல்
  குறையுடைச் செயலன்றோ
  வாடி நின்றிடும் நம்தமிழ் தன்னிலே
  வேர்ச்சொலும் பலவாகும்
  தேடி நாமதில் சொற்பலக் கண்டிட
  தேறிடுந் தமிழுந்தான்
  வாடி நாமினி நம்தமிழ் தழைத்திடும்
  வகையினை அறிவோமே!
  ****
  சிறப்பான பாடல்கள் உமா.

  பாராட்டு. நன்றி.

  பதிலளிநீக்கு
 24. அன்பார்ந்த வசந்த குமார்,
  **********
  தாக மோமிகு; தவித்திடும் நாவிடம்
  தண்ணிய நீரைக்கேட்
  டாக வேண்டிய மொழியென மிரட்டியே
  தமிழினைச் சொன்னால்செத்
  தாக வேண்டிய நிலைவரும். பொருந்திய
  தக்கநல் அயல்சொல்முத்
  தாக எழுதிட, முறைத்திடும் சிலரினைத்
  தவிர்த்திடும் விரையும்நாள்.
  ***********
  பாடல் அமைப்பு சரியாக உள்ளது.
  பாராட்டு. நன்றி.

  பதிலளிநீக்கு
 25. அவனடிமை ஐயா,
  ***********
  பார திக்கொரு பட்டமாய் மகாகவி*
  ...........பாரவர் தந்தாலும்
  பார மேயெனக் கண்டவன் தமிழினில்
  ...........பண்ணினி தென்றாலும்
  பார தம்தரும் பழந்திரு மறைசில
  ...........பன்மொழி பெயர்ப்பாளன்
  பார சீகமும் சுந்தரத்* தெலுங்கையும்
  ...........பாடெனப் புகழ்ந்தானே.
  ***********
  நன்றாகப் பாடலை அமைத்திருக்கிறீர்கள்.

  முதல் அடி இரண்டாம் சீர் கூவிளம் வர மாற்றம் செய்திருக்கிறேன்.

  நீங்களே வேறு வகையிலும் மாற்றலாம்.

  பாராட்டு. நன்றி.

  பதிலளிநீக்கு
 26. இன்று தான் இடுகையைப் படிக்கின்றேன்.
  அதற்குள் இத்தனை பாக்களாக‌
  பார்க்கவே மலைப்பாய் இருக்கிறது.

  அனைவருக்கும் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 27. தூய நற்றமிழ் தொய்வுறச் சிதைக்கத்
  ....துணிந்தயற் சொற்றம்மை
  நேய மென்பதும் நேர்மையு மின்றியே
  .....நிரம்பவே திணிக்கின்றார்!
  நாய கந்தமிழ் நனியிழந் திழியவும்
  .....நந்தமிழ் இனந்தானும்
  ஓய இன்னுமோர் கேரளம் உருவுற
  .....உடன்துணை போவாரே!

  பதிலளிநீக்கு
 28. //பார திக்கொரு பட்டமாய் மகாகவி*
  ...........பாரவர் தந்தாலும்// - திருத்தம் மிக நன்றாக உள்ளது.

  இன்னுமொரு முயற்சி இதோ:

  பார திமகா கவிஞனென்* றுரைத்திடும்
  ...........பாரினர் பாராட்டைப்
  பார மேயெனக் கண்டவன் தமிழினில்
  ...........பண்ணினி தென்றாலும்
  பார தம்தரும் பழந்திரு மறைசில
  ...........பன்மொழிப் பெயர்ப்பாளன்
  பார சீகமும் சுந்தரத்* தெலுங்கையும்
  ...........பாடெனப் புகழ்ந்தானே.

  பதிலளிநீக்கு
 29. /////தேடிப் போய்ப்பல மொழிகளைக் கற்றிடல்
  தீதென ஆகாதே
  வாடி நின்றிடும் வகையினில் தமிழினை
  வதைத்தலும் கூடாதே../////

  அழகிய வரிகள். வாழ்த்துக்கள் உமா!

  பதிலளிநீக்கு
 30. கூழும் மொர்மிள காயுமே உணவெனக்
  குடிசையில் வாழ்வோரைச்
  சூழும் மிக்கதோர் மகிழ்ச்சியிற் களவிலை
  தூக்கமும் வந்தேகும்
  பாழும் செல்வமே பாரினில் மேலெனப்
  பார்த்திடும் பேர்கட்கு
  வாழும் நாட்களில் மகிழ்ச்சியும் அமைதியும்
  மனத்தினில் தங்காதே!

  தேங்கு நீரிலே பாசியும் நாற்றமும்
  சேர்ந்திடும் நிலைபோலாம்
  தேங்கு செல்வமும் தேங்குமந் நீரெனத்
  தேருதல் உயர்வாகும்
  வீங்கு தொந்தியும் விரும்பிய செல்வமும்
  விளைத்தடும் எந்நாளும்
  தீங்கு நன்றிதை தேர்ந்தவர் வாழ்வினில்
  சேர்ந்திடும் மகிழ்வன்றே!

  பதிலளிநீக்கு
 31. அமுதா --
  //தீங்கு நன்றிதை தேர்ந்தவர் வாழ்வினில்
  சேர்ந்திடும் மகிழ்வன்றே!
  //
  உமா --
  //காளை என்மனம் கலந்திட எண்ணிடும்
  காரிகை தன்னோடு
  //
  சிக்கிமுக்கி --
  //நாய கந்தமிழ் நனியிழந் திழியவும்
  .....நந்தமிழ் இனந்தானும்
  //

  அமு தாய்ப்பல ஆசிரி யங்களில்
  ...........அறிவுரை அறைந்திட்டீர்
  தம தாவலை தலைவனின் தாபமாய்
  ...........தந்துமா தெரிவித்தார்
  தம தாத்துமா சிக்கிமுக் கித்தமிழ்த்
  ...........தாய்மொழி தானென்றார்
  இம யத்திணை இத்தளம் சுவையிலே
  ...........இலக்கணம் இயல்பாகும்.

  பதிலளிநீக்கு
 32. ** (பெரும்) பிழைகள் நீக்கிய இன்னொரு முயற்சி **

  அமுத ரேப்பல ஆசிரி யங்களில்
  ...........அறிவுரை அறைந்திட்டீர்
  தமது தாபமே தலைவனின் தவிப்பென
  ...........தந்துமா தெரிவித்தார்
  நமது தாய்மொழி சிக்கிமுக் கித்தினி
  ...........நைந்திடும் நிலையென்றார்
  இமயத் திற்கிணை இத்தள இலக்கிய
  ...........இலக்கணம் சுவையாமே.

  பதிலளிநீக்கு
 33. அவனடிமை ஐயா,

  //பார திமகா கவிஞனென்* றுரைத்திடும்
  ...........பாரினர் பாராட்டைப்//

  இரண்டாம் சீரைக் கூவிளமாக மாற்றுங்கள்.

  பதிலளிநீக்கு
 34. அன்பு அ.அ.,
  //கூழும் மோர்மிள காயுமே உணவெனக்
  குடிசையில் வாழ்வோரைச்
  சூழும் மிக்கதோர் மகிழ்ச்சியிற் களவிலை
  தூக்கமும் வந்தேகும்
  பாழும் செல்வமே பாரினில் மேலெனப்
  பார்த்திடும் பேர்கட்கு
  வாழும் நாட்களில் மகிழ்ச்சியும் அமைதியும்
  மனத்தினில் தங்காதே!//

  அருமை.
  //தேங்கு நீரிலே பாசியும் நாற்றமும்
  சேர்ந்திடும் நிலைபோலாம்
  தேங்கு செல்வமும் தேங்குமந் நீரெனத்
  தேருதல் உயர்வாகும்
  வீங்கு தொந்தியும் விரும்பிய செல்வமும்
  விளைத்திடும் எந்நாளும்
  தீங்கு நன்றிதை தேர்ந்தவர் வாழ்வினில்
  சேர்ந்திடும் மகிழ்வன்றே!//

  அறுசீர் மண்டிலம் எழுத நம் வலைத்தள அன்பர்களுக்கு மிகவும் பழக்கமாகி விட்டது.

  அனைவர்க்கும் பாராட்டு.

  பதிலளிநீக்கு
 35. அவனடிமை ஐயா,

  //** (பெரும்) பிழைகள் நீக்கிய இன்னொரு முயற்சி **

  எழுத எழுத பிழைகள் எளிதில் தெரியும்.
  பாடல் செப்பமும் சிறப்பும் பெறும்.
  நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 36. @@
  //பார திமகா கவிஞனென்* றுரைத்திடும்
  ...........பாரினர் பாராட்டைப்//
  இரண்டாம் சீரைக் கூவிளமாக மாற்றுங்கள்.
  @@

  நன்றி ஐயா; இதோ:

  பார திப்பெருங் கவிஞனென் றுரைத்திடும்
  ...........பாரினர் பாராட்டைப்
  பார மேயெனக் கண்டவன் தமிழ்மொழிப்
  ...........பண்ணினி தென்றாலும்
  பார தம்தரும் பழந்திரு மறைகளின்
  ...........பன்மொழிப் பெயர்ப்பாளன்
  பார சீகமும் சுந்தரத் தெலுங்கையும்
  ...........பாடெனப் புகழ்ந்தானே.

  பதிலளிநீக்கு
 37. **************
  பார திப்பெரும் பாவல னென்றிடும்
  ...........பாரினர் பாராட்டைப்
  பார மேயெனக் கண்டவன் தமிழ்மொழிப்
  ...........பண்ணினி தென்றாலும்
  பார தம்தரும் பழந்திரு மறைகளின்
  ...........பன்மொழிப் பெயர்ப்பாளன்
  பார சீகமும் சுந்தரத் தெலுங்கையும்
  ...........பாடெனப் புகழ்ந்தானே.
  *****************
  சரியாக எழுதியிருக்கிறீர்கள்!
  உங்கள் பாடலின் முதல் அடியில் நான் சிறிது மாற்றி யிருக்கிறேன்.
  உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

  பதிலளிநீக்கு
 38. சிக்கி முக்கியார்க்கு,

  நல்ல அறுசீர் மண்டிலம்.
  பாராட்டு. நன்றி.

  பதிலளிநீக்கு
 39. //பார திப்பெரும் பாவல னென்றிடும்// - தமிழநம்பி ஐயா: கலக்கிட்டீங்க. இதோ ’சுந்தரத்’தையும் மாற்றிவிட்டேன்:
  *********
  பார திப்பெரும் பாவல னென்றிடும்
  ...........பாரினர் பாராட்டைப்
  பார மேயெனக் கண்டவன் தமிழ்மொழிப்
  ...........பண்ணினி தென்றாலும்
  பார தம்தரும் பழந்திரு மறைகளின்
  ...........பன்மொழிப் பெயர்ப்பாளன்
  பார சீகமும் அழகியத் தெலுங்கையும்
  ...........பாடெனப் புகழ்ந்தானே.
  *********

  பதிலளிநீக்கு
 40. அண்ணாமலை ஐயா,

  நீங்கள் எப்படி எழுதியிருந்தாலும் பின்னூட்டத்தில் எழுதிக் காட்டுங்கள். திருத்திக் கொள்ளலாம்.

  முதலில் கொஞ்சம் தடுமாறும்.
  எல்லாருக்குமே அப்படித்தான்.

  தயக்கமின்றி எழுதிக் காட்டுங்கள்.

  பதிலளிநீக்கு
 41. அமுத ரேப்பல ஆசிரி யங்களில்
  ...........அறிவுரை அறைந்திட்டீர்
  தமது தாபமே தலைவனின் தவிப்பென
  ...........தந்துமா தெரிவித்தார்
  நமது தாய்மொழி சிக்கிமுக் கித்தினி
  ...........நைந்திடும் நிலையென்றார்
  இமயத் திற்கிணை இத்தள இலக்கிய
  ...........இலக்கணம் சுவையாமே.


  அவனடியாரின் பா நெஞ்சை அள்ளுகிறது. வாழ்த்துக்கள் அய்யா! உமா மற்றும் சிக்கி முக்கியாருக்கு மீண்டும் வாழ்த்துக்கள்.

  தமிழநம்பி அய்யா அவர்களின் கருத்துக்களுக்கு நன்றிகள்.

  அண்ணா மலையாரே முயற்சியைக் கைவிட வேண்டா. முனைப்போடு முயலுங்கள். வாழ்க.

  பதிலளிநீக்கு
 42. முன்க டம்புபல் லாயிரம் தீண்டியும்
  முடங்கிடா திந்நாளும்
  பொன்கு டம்நிறைக் கொங்கென திகழ்ந்திடும்
  பூந்தமிழ்த் தாயாளின்
  தன்க டன்புல வன்னெனைத் தன்மடித்
  தாங்கியே காத்தாளல்
  என்க டன்பணி செய்துகி டப்பதே
  இன்பதில் உறுவேனே!

  கடம்பு –தீங்கு;


  இப்பாடல் திருநாவுக்கரசரின் பாடலின் அடியொற்றி எழுதியது

  பதிலளிநீக்கு
 43. இதோ என்னுடைய பாக்களும்..
  பாத்தொடுக்கும் அனைவருக்கும் நன்றிகள்..!!

  காதல் - 1

  காதல் கொண்டிடக் கண்களின் மணிகளுங்
  கனவுக ளிறைத்திடுமே..
  காதல் கொண்டிடக் காதினில் அழகாய்க்
  கமலமு முளைத்திடுமே..
  காதல் கொண்டிடக் கடினமும் விளைந்து
  கருத்ததைக் குலைத்திடுமே..
  காதல் கொண்டிடக் கானகங் கிளைத்துக்
  கதவுகள் திறந்திடுமே..

  காதல் - 2

  காதல் கொண்டிடக் கவலைக ளொழிந்து
  கதவுகள் திறந்திடுமே..
  காதல் கொண்டிடக் கதிரவ னொளிபோல்
  கண்களு மொளிபெறுமே..
  காதல் கொண்டிடக் கருத்தினி லினிதாய்க்
  கவிகளு முளைத்திடுமே..
  காதல் கொண்டிடக் கலகமு மறைந்து
  கனவுகள் மெய்ப்படுமே..!!

  பதிலளிநீக்கு
 44. அருமையான பாக்கள் அண்ணாமலையாரே! பாவும் பொருளும் அருமை. இரு பாக்களிலும் ஒவ்வோரடியின் ஈற்றுச்சீரும் தேமாங்காய் அல்லது புளிமாங்காய் ஆக வரவேண்டும். தங்களின் பாக்களில் கருவிளங்காய் அல்லது கூவிளங்காயாக வந்திருக்கிறது. ஆயினும் முயற்சியைக் கைவிடாதீர். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 45. /தேங்கு நீரிலே பாசியும் நாற்றமும்
  சேர்ந்திடும் நிலைபோலாம்
  தேங்கு செல்வமும் தேங்குமந் நீரெனத்
  தேருதல் உயர்வாகும்
  வீங்கு தொந்தியும் விரும்பிய செல்வமும்
  விளைத்திடும் எந்நாளும்
  தீங்கு நன்றிதை தேர்ந்தவர் வாழ்வினில்
  சேர்ந்திடும் மகிழ்வன்றே!///

  அருமை
  அகரம் அமுதா அவர்களே

  பதிலளிநீக்கு
 46. ஆகா... விட்டேனே..கோட்டை..
  கவனக்குறைவாக இதனை கவனிக்காமல் விட்டுவிட்டேன்..
  திரு.அகரம் அமுதா அவர்களுக்கு நன்றிகள்..
  அடுத்த முறை இந்தத் தவறு நிகழாதவாறு பார்த்துக் கொள்வேன்..
  பாவலர்கள் அனைவருக்கும்
  நன்றிகள்..

  பதிலளிநீக்கு
 47. **********
  காதல் - 1

  காதல் கொண்டிடக் கண்களின் மணிகளுங்
  கனவுக ளிறைத்தல்காண்!
  காதல் கொண்டிடக் காண்பவை அழகுடன்
  காட்சியாய்த் தெரியுங்காண்!
  காதல் கொண்டிடக் கடினமும் எளிதெனக்
  கருத்தினில் தோன்றுங்காண்!
  காதல் கொண்டிடக் கனவுகள் கிளைத்திடக்
  கதவுகள் திறக்குங்காண்!

  காதல் - 2

  காதல் கொண்டிடக் கவலைக ளொழிந்து
  கதவுகள் திறக்காதோ!
  காதல் கொண்டிடக் கதிரவ னொளியென
  கண்களு மொளிராதோ!
  காதல் கொண்டிடக் கருத்தினி லினிதெனக்
  கவிகளும் முளைக்காதோ!
  காதல் கொண்டிடக் கலகமும் தீர்ந்துபின்
  கனவுகள் இனிக்காதோ!
  ********************
  நல்ல முயற்சி அண்ணாமலை அவர்களே!

  சிறு திருத்தங்கள் செய்திருக்கிறேன்.
  அவற்றைக் கவனியுங்கள். அடுத்த முறை நீங்களே இன்னும் சிறப்பாக எழுத முடியும்.

  பாராட்டு. நன்றி.

  பதிலளிநீக்கு
 48. திகழ்,

  உங்கள் வருகைக்கு நன்றி.

  நேரமிருக்குமானால், நீங்களும் எழுதுங்கள் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

  பதிலளிநீக்கு
 49. வேலை முசுவில் இருப்ப‌தால் முன்பு போல் எழுத‌ முடிய‌ வில்லை,இருந்த‌ போதும் எழுத‌ முய‌ல்கின்றேன்.

  ந‌ன்றி அய்யா

  பதிலளிநீக்கு
 50. /காதல் கொண்டிடக் கவலைக ளொழிந்து
  கதவுகள் திறக்காதோ!
  காதல் கொண்டிடக் கதிரவ னொளியென
  கண்களு மொளிராதோ!
  காதல் கொண்டிடக் கருத்தினி லினிதெனக்
  கவிகளும் முளைக்காதோ!
  காதல் கொண்டிடக் கலகமும் தீர்ந்துபின்
  கனவுகள் இனிக்காதோ!/

  அருமை அண்ணாமலை அவர்களே

  குறிப்பாக இந்தப் பாவின் கருத்தும் வரிகளும் என்னை மிகவும் கவர்ந்தது.

  வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 51. நன்றி! திகழ் அவர்களே..
  அருமையாகத் திருத்தியிருக்கின்றீர்கள்
  தமிழநம்பி ஐயா அவர்களே..!!
  நன்றிகள்..!!

  பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com