வெள்ளி, 19 மார்ச், 2010

அறுசீர் மண்டிலம் எழுதுவோம்!

அன்பார்ந்த வலையுலக நட்புள்ளங்களுக்கு,

அகரம் அமுதா அவர்களின் அறிவிப்பின்படி கீழ்க்காணும் நான்கு தலைப்புகளில் அறுசீர் மண்டிலப் பாக்கள் எழுதுமாறு கேட்டுக்கொள் கின்றேன்.

1. தமிழ்

2. தமிழர் நிலை

3. இயற்கையின் இனிமை

4. இறைவழிபாடு

ஒவ்வொரு தலைப்பிலும் இரண்டு அல்லது மூன்று மண்டிலப் பாக்கள் இருக்க வேண்டும்.

குறைந்தது ஒரு தலைப்பிலேனும் எழுதுங்கள். ஒன்றிற்கு மேற்பட்ட தலைப்புகளில் எழுதுவது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.

ஒரு தலைப்பில் எழுதப்படும் மண்டிலங்கள் இரண்டானாலும் மூன்றானாலும் அவை ஒரே வகையினவாக இருக்க வேண்டும்.

ஒருதலைப்பில் எழுதப் பயன்படுத்திய அறுசீர் மண்டில வகையை இன்னொரு தலைப்பில் எழுதப் பயன்படுத்த வேண்டா.

மற்ற விளக்கங்கள் அ.அ. அவர்களின் அறிவிப்பில் உள்ளவாறே.

29-3-2010க்குள் எழுதிவிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

எழுதத் தொடங்குக.

51 கருத்துகள்:

 1. விளம் + மா + தேமா === என்ற வாய்ப்பாட்டில் அமைந்த பாடல்!

  தமிழ்!

  கிழவியே! கிளியே! நாளும்
  கிடந்துநான் கொஞ்ச நாணும்
  அழகியே! அமுதே! தேனே!
  அன்னையென் முலைப்பா லுண்ணும்
  குழவியே! குருத்தே! ஆடும்
  கொடியிடை மாதே! உன்னைத்
  தழுவியே இன்பம் கொள்ளும்
  தலைவனென் இன்னல் கேளாய்!

  உண்டிலேன்; உன்னை எண்ணி
  உறக்கமும் கண்க ளோடு
  கொண்டிலேன்; கண்ணு றக்கம்
  கொள்ளினும் கனவோ டின்பம்
  கண்டிலேன்; கருத்தி லாடும்
  கற்பனைச் செய்யுள் ஒன்றும்
  விண்டிலேன்; மூச்சுக் காற்றை
  விழுங்கவும் ஒன்னா துள்ளேன்!

  திரையிலும், திசைகள் தோறும்,
  தெருவிலும், காணும் சின்னத்
  திரையிலும், நாளே டோடும்,
  திறமறிந் திருவர் பேசும்
  உரையிலும், வீட்டு னுள்ளும்,
  உன்றனைத் தேடித் தேடி
  இரவிலும் பகலி னோடும்
  ஏங்கினேன் எங்குச் சென்றாய்?

  பதிலளிநீக்கு
 2. தமிழ் ‍- (இயற்சீர் ஆசிரிய மண்டிலம்)

  உயிராய் உடலாய் என்னுள்
  ...உருவம் கொண்டாய் தமிழே!
  செயலாய் சொல்லாய் இருந்து
  ...என்னை ஆளும் தமிழே!
  தாயாய் இறையாய் இருந்து
  ...என்னைக் காப்பாய் தமிழே!
  சேயாய் மகளாய் மீண்டும்
  ...பிறக்க வேண்டும் தமிழே!

  கனவாய் நினைவாய் காணும்
  ...பொருளாய் எல்லாம் நீயே!
  வானாய் மண்ணாய் வணங்கும்
  ...இறையாய் எல்லாம் நீயே!
  பொன்னாய் மணியாய் கிடைக்கும்
  ...புகழாய் எல்லாம் நீயே!
  உன்னை யன்றி வேறு
  ...யாரு மில்லை தமிழே!

  பதிலளிநீக்கு
 3. பூசை செய்ய‌ப் பார்த்தால்
  ...எங்கே சென்றாய் தாயே
  இசையாய்க் கேட்க‌ நுழைந்தால்
  ...காண‌ வில்லை உன்னை
  த‌சையைக் காட்டும் ப‌ட‌த்தில்
  ...சிதைந்து போனாய் நீயோ
  ஓசை யின்றி எங்கே
  ...ஒளிந்து கொண்டாய் த‌மிழே

  எழுத்து வ‌டிவ‌ம் வேண்டு
  ...மென்று சொல்லிக் கொண்டு
  க‌ழுத்தில் க‌த்தி கொண்டு
  ...அலைது கூட்ட‌ம் பெருமை
  ப‌ழைமை மிக்க‌ த‌மிழைச்
  ...சிதைக்கு மிந்த‌ நோக்க‌ம்
  செழுமை யாக்க‌ உண்டு
  ...வ‌ழிக‌ள் செய்வோம் ந‌ன்றே

  பதிலளிநீக்கு
 4. /உண்டிலேன்; உன்னை எண்ணி
  உறக்கமும் கண்க ளோடு
  கொண்டிலேன்; கண்ணு றக்கம்
  கொள்ளினும் கனவோ டின்பம்
  கண்டிலேன்; கருத்தி லாடும்
  கற்பனைச் செய்யுள் ஒன்றும்
  விண்டிலேன்; மூச்சுக் காற்றை
  விழுங்கவும் ஒன்னா துள்ளேன்!/

  குறிப்பாக‌
  வ‌ரிக‌ளும் ,வார்த்தைக‌ளும் ,க‌ருத்துக‌ளும்
  மிக‌வும் அருமை அமுதா அவ‌ர்க‌ளே

  இதைப் ப‌டிக்கையில்
  த‌மிழைப் ப‌ருகிய‌ ஓர் எண்ண‌ம்

  வாழ்த்துக‌ள்

  பதிலளிநீக்கு
 5. திகழ் அவர்களின் பாக்கள் அருமை. அருமை. முதல்பா தமிழ் என்ற தலைப்பிலானது. இரண்டாம் பாவும் அத்தலைப்பின்கீழ் எழுதப்பட்ட பாடல்தானா? தலைப்பிடவில்லையே!

  பதிலளிநீக்கு
 6. நன்றி அமுதா அவர்களே

  எழுதிய பாக்கள் எல்லாம் தமிழ் என்னும் தலைப்பில் எழுதியவையே.

  ம‌ற்ற‌ த‌லைப்பிற்கும் கண்டிப்பாக பாக்க‌ள் எழுதுகின்றேன்.


  த‌மிழ்,த‌மிழ‌ர் நிலை என்னும் த‌லைப்பைப் பார்க்கையில்
  ஈரோடு தமிழன்பன் அவர்களின் வரிகள் தான் நினைவிற்கு வருகிறது.

  தமிழைக்
  காப்பாற்றக் கட்சிகள்
  அமைத்தோம்,பிற‌கு
  க‌ட்சிக‌ளைக் காப்பாற்ற‌த்
  த‌மிழை இழ‌ந்தோம்.

  த‌மிழ‌னைக் காப்பாற்ற‌
  அர‌சுக‌ள் அமைத்தோம், அத‌ன்பின்
  அர‌சுக‌ளைக் காப்பாற்ற‌த்
  த‌மிழ‌னை இழ‌ந்தோம்

  ஈனமான‌ ம‌னித‌ர்க‌ளைப் பார்க்கையில்
  ஈர‌ம‌ற்ற‌ ம‌னித‌ர்களால் ஆன‌ ஈழ‌த்து நினைவுக‌ளே க‌ண்முன்னே காட்சியாய்.

  க‌ன‌வுத் தேச‌மாய்ப் போன‌து
  ...இத்த‌னை த‌மிழ‌னும் இருந்தும்
  உற‌வு வேச‌மாய் ஆன‌து
  ... அரிய‌ணை ஆட்சியில் இருந்தும்
  அழிவுப் பொருட்க‌ளாய் ஆயின‌ர்
  ... ஆயிர‌ம் ஆயிர‌ம் ம‌க்க‌ளும்
  நினைவுச் சின்ன‌மாய்ப் போன‌து
  ...நெஞ்சினில் வேத‌னை ம‌ட்டும்

  பதிலளிநீக்கு
 7. திரு.அகரம் அமுதா, திகழ் அவர்களின் பாக்கள் நெஞ்சை அள்ளிக்கொண்டிருக்கும்போது...
  இதோ நானும்..
  விளம் + மா + தேமா, விளம் + மா + தேமா என்ற
  வடிவில் முயன்ற அ.சீ.ம.2-ஆம் வகைப்பாடல்

  தமிழ் !

  உறுபகை அழிதல் வேண்டின்
  ....ஊழ்வினை கழிதல் வேண்டின்
  அறுமுகன் அருளும் வேண்டின்
  ....ஆனவை அருகில் வேண்டின்
  வரும்பிணி யாவும் போயே
  ....வாழ்க்கையுஞ் செழிக்க வேண்டின்
  கரும்புகை படிந்த நெஞ்சில்
  ....கற்பகத் தருக்கள் வேண்டின்..

  மனதினில் தமிழை என்றும்
  ....மலையென வணங்கிப் போற்றி
  வனப்பினில் உயர்ந்த தேனை
  ....வாய்தனில் உரைத்து வாழ்வில்
  தினம்புரி செயல்கள் யாவுந்
  ....தீந்தமி ழாலே கூறி
  அனல்மிகு தொல்லை போக்கி
  ....அருளுடை வாழ்வை வாழ்வீர்.!

  பதிலளிநீக்கு
 8. அ.சீ.ம. - 7வகை. ஆறும் மா"ச்சீர்

  தமிழர் நிலை!

  கடாரம் கொண்டான் ஒருவன்
  ....கலிங்கம் வென்றான் ஒருவன்
  படாது பகையை விரட்டி
  ....பாரில் எங்குஞ் சென்றான்..
  விடாது தொழில்கள் செய்து
  ....விளக்காய்த் தமிழை வளர்த்தான்
  தொடாது தொல்லை நீக்கி
  ....தோல்வி எனுஞ்சொல் போக்கி

  இமயம் வரையில் சென்று
  ....எட்டுத் திக்கும் பறந்து
  சமயம் தமிழாய்க் கொண்டு
  ....சாதி மதங்கள் துறந்து
  கமலம் போலே மணத்த
  ....காலம் இனிமேல் வருமா.?
  இமையில் நனையும் கண்ணீர்
  ....இனியா தேனும் விடுமோ.?

  நன்றி !

  பதிலளிநீக்கு
 9. தமிழர் நிலை
  ____________
  விளம் மா தேமா
  விளம் மா தேமா

  பாங்குடன் படித்த லின்றி
  பணத்தினைக் கொடுக்கும் என்றே
  ஏங்கிடு நெஞ்சத் தோடு
  இங்கவர் தமிழை விட்டே
  ஆங்கில வழியில் கல்வி
  அடுத்தவர் போலே வாழ
  பூங்குயில் குரலை விட்டு
  பொன்னிறம் தேடி நின்றார்.

  பேச்சிலே தமிழை விட்டார்
  பெயரிலும் தமிழைக் காணோம்
  கூச்சமே யின்றி நாளும்
  குறைச்சொலித் திரிவார் வெக்கம்
  ஆச்சரி யமன்றோ அம்மா
  அந்நிய மொழியின் மோகம்
  போச்சுதே தமிழர் பேச்சில்
  பொருளுடைச் சொல்லும் தேய்ந்து.

  பதிலளிநீக்கு
 10. இயற்கை
  -------
  மா மா மா மா மா காய்


  மயிலும் தோகை விரித்து ஆடும்
  வானில் கார்மேகம்
  குயிலும் சேர்ந்து கூவி அழைக்கும்
  குரலில் தேனூறும்
  ஒயிலாய் நடந்தே மழையைத் தருமே
  உலகில் கார்காலம்
  வெயிலும் வந்து வேனிற் தோன்ற
  விரைந்து தானேகும்...

  சொட்ட நனைந்த நகரும் சற்றே
  சுடரால் சூடாகும்
  நட்ட மரத்தின் நிழலில் நிற்க
  நாடும் உயிரெல்லாம்
  விட்டு விடுவர் சிறுவர்க் கெல்லாம்
  விடுமுறை இந்நாளில்
  பட்டப் பகல்போல் இரவும் சுடுமே
  பாரீர் வேனிற்தான்.

  பதிலளிநீக்கு
 11. மன்னிக்கவும் சிறு திருத்தம்

  சொட்ட நனைந்த நகரும் சற்றே
  சுடரால் சூடாகும்
  நட்ட மரத்தின் நிழலில் நிற்க
  நாடும் உயிரெல்லாம்
  வெட்ட வெளிதான் சிறுவர் ரெல்லாம்
  வீட்டில் இருப்பாரோ
  பட்டப் பகல்போல் இரவும் சுடுமே
  பாரீர் வேனிற்தான்.

  பதிலளிநீக்கு
 12. (மா + மா + காய்)

  தமிழே வாழி!

  அன்னை மொழியே! அறமுணர்த்தும்
  அறிவே, உணர்வே அரும்பண்பே!
  முன்னைப் பழமைப் பெருமையுறை
  முதல்தாய் மொழியே, செந்தமிழே!
  பின்னைத் தமிழர் பேதைமையால்
  பெருமை குலைந்த பேரழகே!
  உன்னை ஆய்ந்தே அயல்நாட்டார்
  உரைத்தார் செம்மொழி நீயென்றே!

  ஒப்பில் கழக இலக்கியமும்
  உலகிற் சிறந்த முப்பாலும்
  துப்பில் திகட்டா பாவியங்கள்
  சுவையாய் ஐந்தும் சுமந்தவளே!
  தப்புத் திருத்தித் தருங்கம்பன்
  தகைசால் பாவும் பொருங்கதையும்
  செப்பஞ் சிறக்கத் தேர்ந்தணியும்
  திருவாந் தமிழே வாழியவே!

  பதிலளிநீக்கு
 13. இரண்டாம் மண்டிலம் மூன்றாம் வரி ஆறாம்சீர்,
  'பெருங்கதையும்' எனத் திருத்திப் படிக்க வேண்டுகிறேன்.

  தட்டச்சுப் பிழை. பொறுத்திடுக. நன்றி.

  பதிலளிநீக்கு
 14. /பேச்சிலே தமிழை விட்டார்
  பெயரிலும் தமிழைக் காணோம்
  கூச்சமே யின்றி நாளும்
  குறைச்சொலித் திரிவார் வெக்கம்
  ஆச்சரி யமன்றோ அம்மா
  அந்நிய மொழியின் மோகம்/

  அருமை உமா அவர்களே

  பதிலளிநீக்கு
 15. /அன்னை மொழியே! அறமுணர்த்தும்
  அறிவே, உணர்வே அரும்பண்பே!
  முன்னைப் பழமைப் பெருமையுறை
  முதல்தாய் மொழியே, செந்தமிழே!
  பின்னைத் தமிழர் பேதைமையால்
  பெருமை குலைந்த பேரழகே!
  உன்னை ஆய்ந்தே அயல்நாட்டார்
  உரைத்தார் செம்மொழி நீயென்றே!
  /
  அருமை சிக்கிமுக்கி அவர்களே

  பதிலளிநீக்கு
 16. /இமயம் வரையில் சென்று
  ....எட்டுத் திக்கும் பறந்து
  சமயம் தமிழாய்க் கொண்டு
  ....சாதி மதங்கள் துறந்து
  கமலம் போலே மணத்த
  ....காலம் இனிமேல் வருமா.?/

  நன்று அண்ணாமலை அவர்களே

  வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 17. தமிழ். (மா - மா - காய்.)

  தோழி எனக்கு வளைநகருந்
  தோளி னிலெனைச் சாய்த்துக்கொள்.
  ஆழி அளவில் மகிழ்வோதீ
  அதுவுங் குளிரும் துயரோவுந்
  தாழி நிறைத்த கவிகொஞ்சம்
  தாவி எடுத்து அமைதியுற,
  வாழி என்றும் வான்புகழ
  வசந்தப் பெண்ணாய்த் தமிழ்நண்பி!

  ***

  இயற்கையின் இனிமை (விளம் - மா - தேமா & காய் - மா - தேமா)

  தடவிடக் குளிரும் தென்றல்
  தழுவிடச் சிலிர்க்கும் மங்கை
  படர்ந்திட மணக்கும் பாகல்
  பழுத்திடச் சிவக்கும் கொய்யா
  தடங்களில் பதியும் தாரை
  தணிந்திட புகையும் சாம்பல்
  கடந்திடக் கனக்கும் காட்சி
  கனிந்திடக் கழலும் ஞானம்

  மலர்ந்திடச் சிரிக்கும் பூக்கள்
  மறைந்திடச் சிவக்கும் மாலை
  உலர்ந்திட இனிக்கும் இச்சை
  உகுத்திட மயக்கும் ஓசை
  தளர்த்திடத் தடுக்கும் கைகள்
  தயங்கிட நடுங்கும் மேனி
  வளர்ந்திட குறுகும் தூரம்
  வழங்கிடக் குறையும் பாரம்

  வெண்ணொலித்த மின்னல் கோடு
  வேகவைத்த கன்னல் சாறு
  மண்ணொளித்த கடலை வாசம்
  மழையிறக்கும் வானின் அம்பு
  தண்ணென்று தாவும் ஆறு
  தமிழிலொரு குயிலாய்க் கூறு
  விண்கீழ்மேல் தனிமை இல்லை
  வியப்பேன்நான் இனிமை கொள்ளை.

  ***

  இறைவழிபாடு. (காய் + காய் + காய் + காய் + மா + தேமா)

  நீலமேகம் நின்தேகம்; நில்லாத்தேன் நாதமொலி
  நனைந்த மஞ்சு;
  ஏலமணம் நின்சொல்லில்; ஏந்தியநல் மதுச்சரமுன்
  ஏங்கும் கோபி;
  மீளவழி இல்லைநீயென் மென்மனத்தைக் குழலிசைத்து
  மீட்டி விட்டாய்;
  மாலன்நீ மதுசூதன் மலர்ப்பாதம் பணிந்தேன்பார்
  மங்கை ஏற்பாய்.

  பதிலளிநீக்கு
 18. அம்மம்மா! எவ்வளவு கோணம். எத்துணை கற்பனை. அனைவருக்கும் நன்றி. சொற்சுவையும், பொருட்சுவையும் ஒன்றுக்கு ஒன்று மிஞ்சுகின்றன என்றால் மிகையாகாது. ஆசிரியர்களுக்கு நல்ல காணிக்கைதான். உளங்கனிந்த வாழ்த்துகள்.
  என் முயற்சி அடுத்த பதிவில்.

  பதிலளிநீக்கு
 19. அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம் -1.

  வகை: ஆசிரியப்பா
  இனம்: ஆசிரிய மண்டிலம் (மா+மா+காய்)
  (தேமா/புளிமா + தேமா/புளிமா + தேமாங்காய்/புளிமாங்காய்/கூவிளங்காய்/கருவிளங்காய்)

  தலைப்பு: தமிழ், தமிழரினம், தமிழர் குணம், தமிழுயர்வு

  பாக்கள் புனைந்து படித்திட்டால்
  .........பாழும் வயிறு நிரம்பிடுமா?
  தேக்கம் மிகுநம் நாட்டினிலே
  .........திரவி யந்தான் தென்படுமா?
  ஊக்கம் உணவும் உறைவிடமும்
  .........உருவாக் கிடுமோர் உறுதொழிலும்
  ஆக்கம் அளிக்கும் அயல்நாட்டிற்
  .........கறிவுத் தமிழர் புலம்பெயர்ந்தார்

  நீக்கம் நெடுநாள் நெடுந்தொலைவு
  .........நிலத்தை விட்டுப் பிரிந்தவரின்
  நோக்கம் இன்றி நாட்பொழுதில்
  .........நுண்மைத் தமிழும் மலிவாகி
  தாக்கம் வேற்று மொழியினத்தால்
  .........தனதின் னொலியில் தான்மருவ
  நாக்கில் நரம்பின் றித்துவைப்பார்
  .........நைந்து புடைப்பார் தமிழ்ப்பாரில்

  வீக்கம் பணத்தில் மட்டுமில்லை
  .........விரையம் செய்யும் வார்த்தையிலும்
  வாக்கில் வரம்பை நாம்வைத்தால்
  .........வாதா டுவதை விட்டுவிட்டு
  தாக்கா தவரை தன்மையுடன்
  .........தக்க முறையில் திருத்திடவே
  றாக்கா தென்றும் மொழிச்சுவையை
  .........அன்பாய் அளித்தால் தமிழுயரும்.

  பதிலளிநீக்கு
 20. (விளம் + மா + தேமா)

  தமிழன் இன்றே!

  அன்பெலாம் வறண்ட நெஞ்சம்
  அழுக்கெலாம் திரண்ட எண்ணம்
  முன்பெலாம் இருந்த மேன்மை
  முழுவதும் மறந்த உள்ளம்
  தன்னலம் முன்னே நிற்கும்
  தமிழின அழிவ தற்கும்
  முன்துணை நின்ற கீழ்மை
  முழுமையாய் இழிவின் சின்னம்!

  ஆற்றுநீர் உரிமை எல்லாம்
  அடியுடன் பறிகொ டுத்தும்
  ஏற்றமாய்த் தன்கு டும்பம்
  இருந்திடும் எண்ணம் ஒன்றே
  ஊற்றமாய்த் தங்கும் ஈழ
  உடன்பிறப் பழிவ தற்கும்
  ஆற்றலாய்த் துணையும் போனான்
  ஆமவன் தமிழன் இன்றே!

  பதிலளிநீக்கு
 21. இறைவழிபாடு
  *************
  மா மா காய்
  மா மா காய்

  கங்கை முடிமேல் அமர்ந்திருக்க
  கண்டம் நீலம் ஆனவனே
  மங்கை உமையாள் ஒருபாகம்
  மாலன் தங்கை மீனாட்சி
  செங்கை தன்னில் திரிசூலம்
  சிவந்த நெற்றிக் கண்ணோடும்
  அங்கம் எல்லாம் வெந்நீறு
  அணிந்து காட்சி அளிப்பவனே!

  மங்கை ஆசை மண்ணாசை
  மயக்கும் பொன்னின் மேலாசை
  தங்கா புகழைத் தாந்தேடி
  தாவும் மனத்தை நானடக்கி
  எங்கும் நிறைந்த நின்னருளை
  எண்ணம் தன்னில் நிறைத்திருக்க
  கங்கா தரனே! கைலாசா!
  கடையன் எனக்கே அருள்வாயே!

  பதிலளிநீக்கு
 22. இயற்கையின் இனிமை ( விளம்+மா+தேமா)

  தழுவிடும் தென்றல்,துள்ளிக்
  ...குதித்திடும் வண்ண மீன்கள்,
  அழகுமான்,குளிக்கத் தூண்டும்
  ...அருவிகள்,மின்னும் விண்மீன்,
  எழில்தரும் பச்சை புற்கள்,
  ...மணம்தரும் வண்ணப் பூக்கள்,
  மழைதரும் மேகம் இன்னும்
  ...எத்த‌னை ய‌ம்மா சொல்ல‌

  எத்த‌னை கோடி இன்ப‌ம்
  ...காண‌க‌ண் கோடி வேண்டும்
  பித்த‌னாய் நானும் ஆனேன்
  ...இய‌ற்கையின் அழ‌கைக் க‌ண்டு
  ச‌த்த‌மாய்ச் சொல்ல‌ வேண்டும்
  ...இறைவ‌னின் புக‌ழை என்றும்
  சுத்த‌மாய் வைத்துக் கொள்வோம்
  ...சுற்றிடும் உலகைக் கொஞ்ச‌ம்

  பதிலளிநீக்கு
 23. /வீக்கம் பணத்தில் மட்டுமில்லை
  .........விரையம் செய்யும் வார்த்தையிலும்
  வாக்கில் வரம்பை நாம்வைத்தால்
  .........வாதா டுவதை விட்டுவிட்டு
  தாக்கா தவரை தன்மையுடன்
  .........தக்க முறையில் திருத்திடவே
  றாக்கா தென்றும் மொழிச்சுவையை
  .........அன்பாய் அளித்தால் தமிழுயரும்.

  /அருமை அவனடிமை அவர்களே

  பதிலளிநீக்கு
 24. /மலர்ந்திடச் சிரிக்கும் பூக்கள்
  மறைந்திடச் சிவக்கும் மாலை
  உலர்ந்திட இனிக்கும் இச்சை
  உகுத்திட மயக்கும் ஓசை
  தளர்த்திடத் தடுக்கும் கைகள்
  தயங்கிட நடுங்கும் மேனி
  வளர்ந்திட குறுகும் தூரம்
  வழங்கிடக் குறையும் பாரம்

  வெண்ணொலித்த மின்னல் கோடு
  வேகவைத்த கன்னல் சாறு
  மண்ணொளித்த கடலை வாசம்
  மழையிறக்கும் வானின் அம்பு
  தண்ணென்று தாவும் ஆறு
  தமிழிலொரு குயிலாய்க் கூறு
  விண்கீழ்மேல் தனிமை இல்லை
  வியப்பேன்நான் இனிமை கொள்ளை.
  /

  நன்றாக இருக்கிறது வசந்த அவர்களே

  பதிலளிநீக்கு
 25. தமிழ்
  *********

  குற்லீற்று மா+ விள+ மா
  விள +விள+ மா
  ************************

  பாகு வெல்லமும் தேனும்
  பருகிடு கனியதன் சாறும்
  போகு மிடமெலாம் வாசம்
  புன்னகை வீசிடுந் தென்றல்
  ஓடும் ஊரெலாம் ஆறு
  ஓங்கிடச் செய்திடு வளனும்
  தேடும் இன்பமும் தருமே
  தீந்தமிழ்த் தந்திடும் ஒருசொல்

  சொல்லச் சுவைத்திடும் நாவும்
  சோர்வினை விலக்கிடும் வானின்
  வில்லைப் போல்பல வண்ணம்
  வியத்தகு தமிழினில் உண்டே
  கல்லைச் செதுக்கிய சிலைதான்
  கற்றவர் சிந்தையில் தமிழே
  இல்லை இந்தமிழ்ச் சொல்லுக்
  இருநில மீதினில் ஈடே!

  பதிலளிநீக்கு
 26. அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்- 6

  குறுலீற்று மா+விளம்+மா+
  விளம்+விளம்+மா

  இறைவழிபாடு

  ஆன்ம உலகினுக் கரசர்
  .......ஆண்டவ னெனபல ருரைப்பர்
  உன்னுள் உருக்குலை யாதோர்
  .......உணர்வினைக் காட்டுவே னென்பார்
  உந்தன் உடல்பிணி யைத்தன்
  .......உருக்கிடும் இசையினால் நீக்கி
  உன்னுள் மூச்சிலே உயிரின்
  .......உண்மையை உணர்ந்திடு வென்பார்

  ஏங்கும் சீடரும் மடமும்
  .......ஏய்த்திடக் கூட்டுற வாகும்
  பொன்னும் பெயருடன் பகட்டும்
  .......பெண்ணழ கைப்புலன் புணர
  கன்னம் தடவிடும் கணிகை
  .......கனிவுடன் பணிவிடை புரிவாள்
  இன்னும் பலயில வசமாய்
  .......ஈர்த்திடும் இச்சையிற் திளைப்பார்

  அங்கி அறிவிழந் தோமென்
  .......றரண்டுநா மழுதிட வேண்டாம்
  இங்கிவ் வினவொளி மறைக்க
  .......ஈசலா னந்தருக் காகா
  தெங்கும் எப்பொரு ளுள்ளும்
  .......எரிந்திடும் ஒளியினைக் காட்டும்
  குன்றின் மேல்விளக் குலகின்
  .......குறைகளும் அவன்திரு வருளே!

  குறிப்பு:
  அங்கி அறிவு - உடை (மானம்), அறிவு
  அங்கி அறிவு - நெருப்பு போன்ற ஒளிமிகுந்த அறிவு (அங்கி-நெருப்பு)

  இனவொளி - தமிழினத்தினரின் ஒளி (அ) சூரியன் (இனன்) ஒளி
  (என்றும் உள்ள இனவொளியை ஈசல் மறைக்கலாகுமா?)

  பதிலளிநீக்கு
 27. மேலும் சில பாக்கள்

  இறைவழிபாடு
  --------------

  கண்ணா அருள்வாயா

  குறிலீற்று மா + விளம் + மா
  விளம் + விளம் + மா

  கண்டு களித்திட வேண்டும்
  கார்முகில் வண்ணனை நேராய்
  அன்று அவங்குழல் இசையில்
  அழகிய ஆய்ச்சியர் மயங்க
  கன்றை மறந்தது பசுவும்
  காலம் நின்றது, மண்ணை
  உண்ட வாயினில் உலகம்
  உருண்டிடக் கண்டனள் அன்னை

  பண்டு பூமியில் நேர்மை
  பாதையாம் கீதையைத் தந்தாய்
  குன்றைக் குடையெனப் பிடித்து
  கோபியர் குலத்தைநீ காத்தாய்
  நன்று நினைப்பவர் நாடும்
  நன்னிலை ஏய்திடச் செய்தாய்
  என்று என்னுளே கருவாய்
  என்மனம் குளிர்ந்திட அருள்வாய்

  பதிலளிநீக்கு
 28. கண்ணன் என் குழந்தை - தாலாட்டு
  ********************************
  இறைவழிபாடு
  ************
  மா மா மா
  மா மா மா
  **********
  வெண்ணெய் உண்ட வாயும்
  விண்ணை அளந்தக் காலும்
  குன்றைப் பிடித்தக் கையும்
  கொஞ்சம் வலிக்கும் என்றே
  அன்னை எந்தன் மடியில்
  அணைத்தேன் கண்ணை மூடி
  கண்ணா நீயும் தூங்கு
  கருணைக் கடலே தூங்கு

  கண்ணம் சிவந்த சிறுவர்
  கனவில் காணத் தூங்கு
  மண்ணில் மனிதம் வாழ
  மழையைத் தந்தே தூங்கு
  கண்ணை மூடிக் கொண்டால்
  காணும் இருளைப் போல
  எண்ணம் கொண்டோர் நெஞ்சை
  எரித்தே நீயும் தூங்கு.

  [கண்ணம் சிவந்த சிறுவர்
  கனவில் காணத் தூங்கு//
  குழந்தைகள் தூங்கும் போது சிரித்தால் கண்ணன் அவர்களுடன் விளையாடுவதாய் சொல்வர். இங்கு கண்ணன் அல்லவா தூங்குகிறான்- எத்தனையோ கபடர்களை அழித்து விட்டல்லவாத்தூங்குகிறான். அவன் கனவில் ஒருவேளை கள்ளமில்லா சிறுவர் தோன்றுவரோ? களிக்கட்டும் அவனைத்தூங்க விடுவோம்.]

  பதிலளிநீக்கு
 29. ஆசான்களே !

  மேலே பதித்த இறைவழிபாடு ஆசிரிய மண்டிலங்களை முதலில் மா+மா+காய் என்ற வகையில் தான் எழுதினேன். ஆனால் ஒரு வகையில் ஒரு முறைக்கு மேல் தேர்வுக்கு எழுதவேண்டாம் என்ற நிபந்தனை நினைவு வர *குறுலீற்று மா+விளம்+மா+
  விளம்+விளம்+மா* வாக மாற்றி பதித்தேன்.

  இங்கே அதே இறைவழிபாடு தலைப்பில் ’போலிகளும் அவனருளாலேயே வருகின்றனர், மறைந்தும் விடுவர்’ என்று முதலில் எழுதியபடி தருகிறேன்:

  ****************
  மா + மா + காய்
  மா + மா + காய்

  இறைவழிபாடு

  ஆன்மீ கத்தில் அரசாள
  ....ஆண்ட வன்போல் அவதரிப்பார்
  உன்னுள் உறையும் உருக்குலையா
  ....உணர்வே நானென் றுரைத்திடுவார்
  எண்சாண் உடலிற் பிணிகளையும்
  ....இல்லா தாக்க இசைத்தொடுத்து
  உன்மூச் சினைச்சீ ராக்கிடென
  ....உனக்கே உபதே சம்செய்வார்

  ஏங்கும் சீடர் கூட்டணியும்
  ....ஏய்க்கும் பரிவா ரம்வருவர்
  பொன்னும் பெயரும் பகட்டுடுப்பும்
  ....பெண்மை அழகும் புலன்புணர
  கன்னம் தடவும் கணிகையுடன்
  ....கற்பாய்ப் பணிவன் போடிருப்பார்
  இன்னும் இதுபோல் இலவசசிற்
  ....றின்பம் பலசேர்த் தனுபவிப்பார்

  அங்கி அறிவோ டிழந்தோமென்
  ....றரண்டு நாமும் அழவேண்டாம்
  கங்குல் இனப்பே ரொளியின்முன்
  ....கலையும் ஈசற் கூட்டமிது
  என்றும் எங்கும் எவரிடமும்
  ....எரியும் ஒளியே எமதிறைவன்
  குன்றின் மேலே விளக்கவந்தான்*
  ....குறையும் அவன்பே ரருளன்றோ!
  ****************

  *குன்றின் மேலே விளக்கவந்தான் - என்பதை குன்றின் மேலே விளக்கு அவன் தான் என்றும்
  குன்றின் மேலே விளக்க வந்தான் என்றும் கொள்ளலாம். இரண்டுமே மலைமாமுனிவரை குறிக்கும்.

  பதிலளிநீக்கு
 30. ஆகா!ஒவ்வொருவரும் தமிழுடன்
  ஒன்றுகலந்துவிட்டார்கள். என்றும்
  தமிழுக்கு இல்லை அழிவு..!

  பதிலளிநீக்கு
 31. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 32. விண்ணக மின்னல் போலே
  வீசிளந் தென்றல் போலே
  கண்களில் நிற்கும் பெண்ணே
  காதல்செய் வோமா என்றேன்..
  மண்ணுக்குள் ஆண்கள் மேலே
  மங்கையெனக் காசை யில்லை
  பெண்ணுக்குள் காதல் தேடும்
  பெண்ணிவ ளறிவீ ரென்றாள்!

  தங்கத்தை வைரம் சேரும்
  தாமரையை வண்டே நாடும்
  இங்கிவையி யற்கை அஃதே
  இனிமையு மாகு மென்றேன்..
  கடலுக்குள் கங்கை கூடிக்
  கலப்பதி யற்கை யாயின்
  மங்கையரை மங்கை நாடி
  மகிழ்வதுமி யற்கை யென்றாள்!

  பதிலளிநீக்கு
 33. அப்பாதுரை அவர்களே: நல்வரவு!
  கருத்தாளுமையும், நடையும், உவமைச் செறிவும் அருமை. கருத்து எனக்கு உடன்பாடு இல்லைதான். அந்தத் தாக்கத்தில் சில குறள் மறுமொழிகள்:

  /..மி யற்கை யென்றாள்/

  பாலியல் பொல்லாங்கு அப்பா துரைப்பாவின்
  பாலியல் பாயிற்று பார்.

  /விண்ணக - கூவிளம்; மண்ணுக்குள் - தேமாங்காய்/

  அப்பா துரையிவரின் இப்பா வினச்சேர்க்கை
  தப்பா சிரியப்பா வோ?

  /கடலுக்குள் கங்கை கூடிக்
  கலப்பதி யற்கை யாயின்/

  --> இயற்கையில் மகிழ்ச்சிக்கு வேண்டுமானால் பலவழிகள் இருக்கலாம், இனவிருத்திக்கு ஒன்றே வழி என்பதில் கருத்து வேற்றுமை இருக்கமுடியுமா ?

  நட்புக்கு பால்வேறு பாடில்லை சேருறவி
  லுட்புகுந் திட்டே கரு.

  பதிலளிநீக்கு
 34. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 35. ஆகா! ஆகா!
  முப்பா லுக்கப்பால் போம் முனைவருக்
  கப்பா துரையின் முடி. :-)

  முதற்சீர்கள் விளச்சீர்களாகவும், மாங்காய்ச் சீர்களாகவும் வரலாமென்று நினைத்தேனே? தவறா?

  அப்பா துரையின்வரி ஒப்பா ததென்றாலும்
  துப்பா யதெனவே காண்(?)

  பதிலளிநீக்கு
 36. இறை வ‌ழிபாடு
  ...................
  மா+மா+காய்
  மா+மா+காய்
  ..................

  உன்னுள் என்னுள் இருக்கின்ற‌
  ...இறையைப் புறத்தே தேடுகின்றோம்
  பொன்னால் க‌ல்லால் உருவான‌
  ...சிலையை வ‌ண‌ங்க‌ச் செல்கின்றோம்
  அன்பாய்ப் ப‌ண்பாய் இருக்கின்ற
  ...இறையை உண‌ர‌ ம‌றுக்கின்றோம்
  உன்னைத் தேடி ப‌டைத்த‌வ‌னும்
  ...வ‌ருவான் அன்பைப் பொழிந்தாலே

  காவி தரித்த சாமிக்கு
  ...எதற்கு காசு பணமெல்லாம்
  கூவி அழைத்து விற்பாரே
  ...கூறுப் போட்டு ஆண்டவனை
  பாவி யாக்க பார்ப்பாரே
  ...பார்த்து நடந்து கொள்ளுங்கள்
  ஆவி அடங்கும் முன்னாலே
  ...ஆசை செய்யும் ஆட்டமடா

  பதிலளிநீக்கு
 37. தமிழர் நிலை
  .................

  மா+மா+மா+மா+மா+காய்

  .....................

  ஆறு பாய்ந்து செழித்த பூமி
  ...யெல்லாம் போயிற்று
  வீறு கொண்டு எழுந்து வென்ற‌
  ...காலம் போயிற்று
  சிறப்பு மிக்க அருமை பெருமை
  ...யெல்லாம் போயிற்று
  உறங்கி கிடந்தால் உயர்வு என்று
  ...மில்லை தமிழருக்கு

  பதிலளிநீக்கு
 38. மா+ மா+ காய் +
  மா+மா+காய்


  இறைவழிபாடு.

  உருவம் அன்றி உலகினிலே.
  ....ஒத்து நடக்கும் செயல்களிலே
  அருவம் போலே அமைவான்காண்
  ....அவனே தெய்வம் எனக்கொண்டான்
  ஓரேர் உழவன் போலேநாம்
  ....வழிமேல் வாழ்விற் செல்கையிலே.
  பாரேர் பிடித்து உழுதிடுவோன்
  ....பதராம் நமையுங் காப்பானே..

  திருமால் அல்லா யேசுவொடு
  ....திருப்பு கழ்பை பிள்குரானும்
  அருகாய் வரட்டும் அனைவருமே
  ....அன்பால் எல்லாம் ஓர்கடவுள்
  இரும்பால் ஆனது அல்லமனம்
  ....இருக்கும் அனைத்தும் நம்மதமாம்
  உருவாக் கியவன் மனிதன்தான்
  ....உயர்வைப் பெறுதல் நம்மால்தான்!


  நன்றி !

  பதிலளிநீக்கு
 39. குறிலீற்றுமா + விளம் + மா+
  விளம் + விளம் + மா

  இயற்கையின் இனிமை!

  அன்ன மெனநடை காணோம்.
  ....அச்சிறு பொட்டினைக் காணோம்.
  சின்னக் கொடியிடை காணோம்.
  ....சேலைகள் எங்குமே காணோம்.
  வன்னக் குழல்சடை தரிக்கும்
  ....வான்கரு மேகமுங் காணோம்..
  தின்னத் தின்னவே தெவிட்டா
  ....தீஞ்சுவைத் தமிழையுங் காணோம்

  மின்னும் பலவுடை பூட்டி
  ....மேலுடல் கீழுடல் காட்டி
  நன்னும் தமிழ்உடை, செய்கை
  ....நடத்தையும் பேச்சையுந் தொலைத்தே
  மன்னும் தமிழ்க்குடி அழித்தே
  ....மேலைநாட் டினரெனத் துடிப்பீர்
  நன்றென் ஒருசொலைக் கேளீர்.
  ....நாளுமித் தமிழமு தியற்கை..!!

  முன்பந் நாட்களி லுரைத்த
  ....முன்னவர் மூடரு மல்லர்.
  பின்ன வரிவரில் யாரும்
  ....பெரிதொரு வீரரு மல்லர்.
  தென்ன வர்குடி நாளும்
  ....தழைத்திடத் தாங்கியே நிற்பீர்..
  அன்ன வர்வழி நடந்து
  ....அறத்தினைக் காத்திடப் புகுவீர்..

  நன்றி !

  பதிலளிநீக்கு
 40. //முப்பா லுக்கப்பால்// - தளை தட்டுகிறதே ஐயா
  //அப்பா துரையின்வரி // - கனிச்சீர் ஆகாதே ஐயா

  குறளை யிலக்கணம் குன்றாமற் கூறும்
  திறனைப் பெறப்பா துரை.

  அறிவுரை என்று எண்ணவேண்டாம். அதற்குரிய தகுதி எனக்கில்லை.

  திறனைப் பெற(ப்பெற), ’பா-துரை’ (பாவுக்கு தலைவன்) ஆகிவிடுவீர்கள் என்று வாழ்த்துகிறேன்.


  //அப்பா துரையின்வரி ஒப்பா ததென்றாலும்
  துப்பா யதெனவே காண்(?)//

  எப்படி ஐயா காண்பது?; இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது:

  துப்பணங்கை துப்பாக்கி துய்ப்போமென் றேங்குபவர்
  துப்பில்லா தார்முகத்தில் துப்பு.

  துப்பு - பவளம், தூய்மையான
  துப்பு - நுகர்பொருள் (object of enjoyment)
  துப்பில்லாதார் - ஆய்வறிவில்லாதார்
  துப்பு - உமிழ்தல் (to spit)

  பதிலளிநீக்கு
 41. துப்பு = உண்மை
  (துப்பு துலக்கு = உண்மை அறி/வெளிக்கொணர்)

  தாராளமாக அறிவுரை கூறுங்கள்; பெரும் தகுதி/தேவை எனக்கிருக்கிறதே?

  பதிலளிநீக்கு
 42. இன்னும் சில


  தமிழர் நிலை
  விளம் மா தேமா
  விளம் மா தேமா

  சிந்தையில் தமிழைத் தேக்கி
  சிறந்திடக் கூடா தென்றே
  நந்தமிழ் மக்கள் நெஞ்சில்
  நயமிலாச் சொல்லைச் சேர்த்தார்
  வந்தவர் பின்னால் போகும்
  மந்தையில் ஒருவர் ஆனோம்
  அந்நியர் அகன்ற பின்னும்
  அறிவினில் தெளிவைக் காணோம்

  அகலிகைப் போலே தானும்
  ஆங்கொரு கல்லாய் நிற்க
  தகவிலார் வாழ்வை மாற்றி
  தமிழினைத் தேயச் செய்தார்
  இகழ்ந்தவர் தமிழைப் ஏச
  இனிமையேக் கொள்வார் வானில்
  பகலினை மறைக்கும் மேகம்
  பட்டென விலகும் நில்லா!

  பதிலளிநீக்கு
 43. இறைவழிபாடு

  குறிலீற்று மா கூவிளம் விளம் விளம்
  விளம் மாங்காய்

  பாடி உன்புகழ் பரப்பிடும் வகையினை
  பாவிநான் அறிந்தில்லேன்
  தேடி நின்னருள் பெற்றிடக் கோவிலை
  சேர்ந்திடல் செய்தில்லேன்
  கோடிக் குன்றினைச் சுற்றியே யானுனைக்
  கும்பிடும் வழியில்லேன்
  நாடி நாமமே நெஞ்சினில் நினைப்பதே
  நானறி நெறியாமே!

  நஞ்சு ஈதென நன்றெனத் தீதெனல்
  யாதுமே அறியேனே
  தஞ்சம் நீயெனக் கின்னருள் தந்தருள்
  தாளினைப் பற்றிட்டேன்
  குஞ்சுத் தாயினை அண்டியே வாழுமாம்
  குன்றிருக் குமரேசா
  நெஞ்சில் உன்னையே நிறுத்திநான் வாழ்ந்திட
  நீயெனக் கருள்வாயே!

  பதிலளிநீக்கு
 44. காற்று - இயற்கை

  மா/விள் மா/விள மா
  மா/விள் மா/விள மா
  இயற்சீராலானது வெண்தளை ஏற்றது.

  மெல்ல விசிறிடுங் காற்று
  மீட்டும் உயிரினைத் தொட்டு
  சொல்ல வருமொருச் சொல்லும்
  சோலை மலர்களின் வாசம்
  நெல்லினைச் சோறாய் சமைக்க
  நெருப்பினை தந்திடுங் காற்றே
  செல்லும் துளையைக் கடந்து
  செவியில் இசையாய் நுழைந்தே!

  சில்லென வீசிடுந் தென்றல்
  சீறிப் புயலென வீச
  புல்லென வீழும் மரமும்
  பொங்கும் கடலும் பெரிதாய்
  கொல்லவும் கூடுமேக் காற்று
  கூறையைப் பிய்த்திடும் வேறாய்
  மெல்லென வீசிட பெண்ணே
  மீறிடும் போதினில் பேயாம்!

  பதிலளிநீக்கு
 45. ’எல்லாம் ஒன்றே’ என்றொரு பண்டைய குறுநூலின் (ஆசிரியர்: வையை சுப்பிரமணியன்) தாக்கம்

  இறைவழிபாடு
  (காய்+காய்+காய்+காய்+மா+தேமா)

  நான்வேறு நீவேறு என்றில்லை பகுத்தறிவாய்
  எல்லாம் ஒன்றே
  நான்வேறு பிறர்வேறாய் தெரிகிறதே என்றுரைப்பார்
  ஞாலந் தன்னில்
  நான்நீயாய் அவரதுவாய் தோன்றுவது ஒருபொருளே
  நாநா ரூபம்
  மாங்காயும் தளிர்பூவும் இலைகிளையென் றெல்லாமும்
  மரமே யன்றோ

  நன்மையிதே இன்னலறும் ஒன்றென்ற இவ்வெண்ணம்
  நலமே நல்கும்
  உன்செயலை என்செயலை உன்கணிப்பு எப்போதும்
  ஒருபோல் காணும்
  நன்நெஞ்சில் பிறர்குற்றம் பழிவாங்கும் வெறுப்புணவு
  நாணித் தோடும்
  ஒன்றதுவும் உன்னுணர்வே உலகுடலாய் நீயுயிராய்
  ஒளிர்வா யன்பே!

  பதிலளிநீக்கு
 46. இரண்டாம் மண்டிலம் ஈற்றடிக்கு முன்னடியில் நான்காம் சீரை ‘வெறுப்புணர்வு’ என்று கொள்க. தட்டச்சுப் பிழை. நன்றி.

  பதிலளிநீக்கு
 47. ||தாராளமாக அறிவுரை கூறுங்கள்; பெரும் தகுதி/தேவை எனக்கிருக்கிறதே?

  'பெறும்' என்று நினைத்திருந்தேன்; எழுத்துப் பிழை. இங்கே பதிவாகியிருப்பவற்றைப் படிக்கும் பொழுது 'பெரும்' கூட மிகப்பொருத்தம் தான். ஓட்டப்பந்தயத்தில் ஒரு காலுடன் நுழைந்தவன் போல் உணர்கிறேன். திருத்தங்களுக்கு நன்றி, அவனடிமை. (இனி அவசரப்படாமல் எழுத வேண்டும் அப்பாதுரை - பட்டாலும் தெரியவில்லை இந்தப்பாவுக்கு)

  பதிலளிநீக்கு
 48. மேலும் சில பாக்கள்

  இறைவழிபாடு
  --------------

  கண்ணா அருள்வாயா

  குறிலீற்று மா + விளம் + மா
  விளம் + விளம் + மா

  கண்டு களித்திட வேண்டும்
  கார்முகில் வண்ணனை நேராய்
  அன்று அவங்குழல் இசையில்
  அழகிய ஆய்ச்சியர் மயங்க
  கன்றை மறந்தது பசுவும்
  காலமும் நின்றது, மண்ணை
  உண்ட வாயினில் உலகம்
  உருண்டிடக் கண்டனள் அன்னை
  [காலம் என்பதை காலமும் எனக் கொள்ளவும். தட்டச்சும் போது பிழை செய்துவிட்டேன். இப்பொழுதே கண்டேன். மன்னிக்கவும்,]

  பதிலளிநீக்கு
 49. //ஓட்டப்பந்தயத்தில் ஒரு காலுடன் நுழைந்தவன் போல் உணர்கிறேன்//

  தப்புத்தப் பாவுரைத் தோமென்று விட்டிடல்
  தப்பு;தப் பாதுரைப் பாய்.

  நுண்கலை யில்நடக்கத் தோன்றும் தடுமாற்றம்
  புண்படா தோட்டம் பழக.

  பண்பண்ணப் பந்தயம் இல்லை யெனினும்நாம்
  பண்படப்பா வாசிரிய ருண்டு.

  பதிலளிநீக்கு
 50. ஆசிரியரின் கருத்துக்காக ஆவலோடு காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 51. அன்னை மொழியே! அறமுணர்த்தும்
  அறிவே, உணர்வே அரும்பண்பே!
  முன்னைப் பழமைப் பெருமையுறை
  முதல்தாய் மொழியே, செந்தமிழே!
  பின்னைத் தமிழர் பேதைமையால்
  பெருமை குலைந்த பேரழகே!
  உன்னை ஆய்ந்தே அயல்நாட்டார்
  உரைத்தார் நீசெம் மொழியென்றே!

  இறுதி வரியில் முன்பின்னாக மாறியதைச் சரி செய்துள்ளேன்.
  நன்றி.

  பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com