புதன், 14 ஏப்ரல், 2010

எண்சீர் மண்டிலம்!

அவனடியார் சொன்னது…

////”நண்பர்களே: எப்போதும் காதல், காமம், தமிழ், தமிழரினம், புரட்சி, அறிவுரை, இயற்கை என இவைகளை மட்டுமே பாடிக் கொண்டிருந்தால் போதுமா? வேறு எவ்வளவோ சுவையான, சிந்தனைக்குரிய செய்திகள், நிகழ்வுகள் உள்ளனவே!” ////

அவனடியாரின் இச்சொல் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. எண்ணிப்பார்ப்போமானால் சிறிது காலங்களாக அவர் உரைத்துள்ளதுபோல் குறிப்பிட்ட சில தலைப்புகளிலேயே பாவியற்றி வருகின்றோம் என்பது உண்மையே! கவிஞன் என்பவன் தான் வாழும் காலத்தோடு ஒன்றி அவன் வாழ்ந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளையும், அக்காலத்திற் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றியும் பாடுதல் இன்றியமையாத ஒன்றாகும். அதன் அடிப்படையை மனதில் வைத்துக்கொண்டுதான் தமிழநம்பி அவர்கள் நான்கு தலைப்புகள் வழங்கிய போது, இறை சார்ந்த தலைப்பொன்றை வழங்க வேண்டினேன். காரணம் இன்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் நித்யானந்தாவின் அந்தரங்க கூத்துகளின் வெளிப்பாடும் ஒர் காரணமாகும். இருப்பினும் தாங்கள் யாரும் இதுபோன்ற நிகழ்வுகளைச் சிந்தித்து பாவடிக்க முன்வரவில்லை. நான் கருதியிருந்தேன். ஆயினும் அப்பொழுது எனக்கு மிகுந்த பணிகள் இருந்தமையால் அத்தலைப்பிற்கு என்னால் பாவியற்ற முடியவில்லை.

சென்ற பாடத்தில் நாம் கற்ற எண்சீர் மண்டில வகையில் இப்பொழுது நித்யானந்தா சார்ந்த பாவை இயற்றி அளிக்க அனைவரையும் வேண்டுகிறேன்.

காய் + காய் + மா + தேமா
காய் + காய் + மா + தேமா - என்ற வரையறையிலான எண்சீர் மண்டிலத்தில் பாவியற்ற வேண்டுகின்றேன்.

அகரம் அமுதா

8 கருத்துகள்:

 1. //இருப்பினும் தாங்கள் யாரும் இதுபோன்ற நிகழ்வுகளைச் சிந்தித்து பாவடிக்க முன்வரவில்லை. //

  அப்படியா ? தமிழநம்பி ஆசான் இறைவழிபாடு தலைப்பின் கீழ் தொகுத்தளித்த பாக்களை பார்த்துவிட்டுத்தான் சொல்கிறீர்களா ?

  பதிலளிநீக்கு
 2. //அவன் வாழ்ந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளையும், அக்காலத்திற் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றியும் பாடுதல் இன்றியமையாத ஒன்றாகும்.//

  எத்தனையோ தலைப்புகள், நிகழ்வுகள் உள்ளனவே.
  * நாட்டின்/உலகத்தின் பொருளாதார நெருக்கடி
  * தனிமனிதன் வேலையற்ற நிலை
  * கணிணி மென்பொருள் துறையால் சமுதாயத்தில் ஏற்படும் பொருளாதார பிரிவும் (division), மேம்பாடும் (growth)
  * பொதுவான பொருளாதார சீர்குலைவு
  * கோடிக்கணக்கான மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் படும் கொடுமை
  * தினக்கூலிகளின் திண்டாட்டம்
  * பலவிதங்களிலும் அச்சத்தை/கொடூரத்தைக் காட்டும் இயற்கையின் பலவிதமான சீற்றம்
  * துன்பங்களுக்கு இடையிலும் நல்லிதயங்களின் எண்ணங்கள்/செயல்கள்
  * கிரிக்கெட்/மற்றும் விளையாட்டு கள நிகழ்வுகள்
  * மக்களின் ஆன்மிக வளர்ச்சி/தளர்ச்சி
  * தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வளர்ச்சி/வீழ்ச்சி (தொடர்-நிகழ்ச்சிகளின் தரம்/தரக்குறைவு; கொல்லிவுட் கலாச்சாரம்...)
  * தேவையில்லாத / வெளிநாட்டுலிருந்து இறக்குமதியாகும் நாகரீகப் பற்று / கலாச்சார அழிவு

  இப்படி எண்ணற்ற தலைப்புக்கள்/செய்திகள்/நிகழ்வுகள் இருக்கும்போது,

  நண்பனே:

  சத்தியம், சிந்தனையைச் சீண்டும்பாப் பாடிடையில்
  நித்தியா னந்தா வுடன்.


  என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 3. சிவனேஎன் றிருந்திருந்தேன் சிலநாள் காட்டில்
  ...சிவன்நீயே எனக்கூறி காலில் வீழ்ந்து
  புவனமேநீ தானென்று அடித்துக் கூறி
  ...பொலபொலவென் றென்பேச்சில் பாவி வீழ்ந்தீர்..
  அவன்போட்ட பிச்சையென்று இச்சை தன்னை
  ...அனுபவித்தேன் என்தப்பா உங்கள் தப்பா?
  தவக்கோலம் பூண்டாலே அவர்கள் தன்னை
  ...தெய்வமென்ப தென்தப்பா உங்கள் தப்பா?

  ஓரறையில் மாதுடனே கூடிக் கொண்ட
  ...ஒருவருக்கும் தெரியாமல் நடந்த சேதி..
  சேருமிடம் தமிழகத்தின் சந்து பொந்து
  ...சேர்த்ததுவோ தமிழ்மானம் காக்கும் தொண்டு..
  பாராத மனிதர்கள் எந்தன் லீலை
  ...பற்றியேவாய் பேசிடட்டும் அன்றி பார்த்த
  வீரரனை வருமேஎன் விவேக புத்ரர்
  ...விளையாட்டாய்க் கூடஇதைப் பேச வேண்டாம்!

  நன்றி!
  குடும்பமாகப் பார்க்கின்ற செய்தியில் சிறிதுகூட வெட்டாமல் இக்காட்சிகளை
  ஒளிபரப்பியதில் எனக்கு சிறிது வருத்தமுண்டு!
  தவறு கூறியிருந்தால் திருத்த வேணும்!

  பதிலளிநீக்கு
 4. அன்பு அனைவர்க்கும்...

  //கவிஞன் என்பவன் தான் வாழும் காலத்தோடு ஒன்றி அவன் வாழ்ந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளையும், அக்காலத்திற் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றியும் பாடுதல் இன்றியமையாத ஒன்றாகும்.

  இப்படி எங்கே சொல்லி இருக்கின்றது?

  ஒரு படைப்பாளி அவன் மனதை எது சஞ்சலப்படுத்துகின்றதோ, எது அவனை படைக்கத் தூண்டுகிறதோ அதைப் படைப்பதில் மட்டுமே அவனது முழு ஆற்றலும் வெளிப்படும். அப்போது மட்டுமே அவனையும் அறியாமல் கலையின் கரங்களில் தன்னை ஒப்படைக்க முடியும் என்பது என் கருத்து.

  பதிலளிநீக்கு
 5. ஆன்ம உலகினுக் கரசர்
  ஆண்டவ னெனப்பல ருரைப்பர்
  ...................
  குன்றின் மேல்விளக் குலகின்
  குறைகளும் அவன்திரு வருளே!

  திரு அவனடிமையாரின் பாடலல்லவா இது.

  அதுமட்டுமல்ல நித்தியானந்தாவிற்கு தொலைக்காட்சி அளித்த விளம்பரம் போதாதா? கண்டனம் என்றப் பெயரில் அவர்களின் விளம்பரத்திற்காக நேர்மையே இன்றி கண்டதையுங்காண்பித்து தொலை காட்சிகள் செய்த கொடூரம் போதாதா?. இப் புற்றீசல்களுக்கு பாவில் இடமளித்து மரியாதைத்தரவேண்டுமா? இப்படிப்பட்டவர்கள் எக்காலத்திலும் இருந்திருக்கிறார்கள். நித்தியானந்தாவைப் போன்றோரிடம் ஏமாறாதீர்கள் என்றோ அல்லது இவர் போன்றோரால் மதத்திற்கு கடவுள் நம்பிக்கைக்கு ஊறு என்பது போன்றோ எந்நிலையிலும் நித்தியானந்தா பற்றி எழுத நான் விரும்பவில்லை. மன்னிக்கவும்.

  அவனடிமையாரின் கருத்துக்களுடன் நானும் உடன்படுகிறேன். இன்றய நிலைப்பற்றி எழுத அவரது பட்டியலையே நாம் முயற்சி செய்யலாமே.

  பதிலளிநீக்கு
 6. சொற்கூட்டந் தருமசைவில் சந்தங் கேட்பார்
  ...சுற்றுமுற்றுஞ் சூழொலியில் சுருதி சேர்ப்பார்
  கற்கூட்டந் தனில்கலையின் வடிவம் வார்ப்பார்
  ...கைப்பிடிமண் ணைக்கொண்டு சிற்பஞ் செய்வார்
  வற்றாநல் காய்கனியில் கறியைக் காண்பார்
  ...வடைமுதலாம் உணவினையே பருப்பில் பார்ப்பார்
  பெற்றவரோ பிள்ளைக்குள் கலாமைக் காண்பார்
  ...பெரும்படைப்பில் இவரெல்லாம் கடவுள் அன்றோ !

  பதிலளிநீக்கு
 7. ஒரு கட்டுரையை எழுதுவதற்கு வாசித்துக் கொண்டிருக்கும் பொழுது கிடைத்த அப்பர் அவர்களின் வரிகள்.இந்த‌ இடுகைக்கும், எண்சீர் ம‌ண்டில‌த்திற்கும் பொருத்த‌மான‌ வ‌ரிக‌ள்

  திருக்கோயி லில்லாத திருவி லூரும்
  திருவெண்ணீ றணியாத திருவி லூரும்
  பருக்கோடிப் பத்திமையாற் பாடா வூரும்
  பாங்கினோடு பலதளிக ளில்லா வூரும்
  விருப்போடு வெண்சங்கம் ஊதா வூரும்
  விதானமும் வெண்கொடியு மில்லா வூரும்
  அருப்போடு மலர்பறித்திட்டுண்ணா வூரும்
  அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே.

  பதிலளிநீக்கு
 8. செவ்வகமா நாற்கரமா தெரிய வில்லை
  சிவப்பாஇல் லைகருப்பா தெரிய வில்லை
  தவறாஇல் லைசரியா தெரிய வில்லை
  தட்டையாஇல் லைகூம்பா தெரிய வில்லை
  சுவராஇல் லைகுளமா தெரிய வில்லை
  சுடராஇல் லைஇருளா தெரிய வில்லை
  இவற்றையெல்லாம் இல்லாமல் செய்வோம் கண்ணே
  இருவிழியைத் தந்திருளைப் போக்கு பெண்ணே

  பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com