ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

எண்சீர் மண்டிலம்! 1

ஓரடியில் எட்டு சீர்களைக் கொண்டது எண்சீர் மண்டிலமாகும். முதல் மற்றும் ஐந்தாம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும். முதல் அறையடி முறையே காய் + + காய் + மா + தேமா என அமையவேண்டும். இவ்வாறே அடுத்த அறையடியும், மற்ற அடிகளும் அமைதல் வேண்டும்.

கண்ணன்பால் மிகவன்பால் வேலைக் காரி
கையிற்பால் செம்போடு தெருவில் சென்றாள்
திண்ணன்பால் வாங்கென்றான் கரிய னும்பால்
தீங்கற்ற பாலேயென் பால்வாங் கென்றான்
திண்ணன்பால் கரியன்பால் வெறுப்பால் பெண்பால்
சீயென்பாள் நில்லாதீர் போவீர் அப்பால்
கண்ணன்பால் தான்கொண்ட களிப்பால் அன்னார்
கலப்பாலே இனிப்பதென்று கசப்பால் சொன்னாள்!

---பாரதி தாசன்.

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
வாகாரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே!

---உலக நாதன்

ஒருநான்கும் ஈரரையும் ஒன்றே கேளாய்!
உண்மையாய் ஐயரையும் அரையும் கேட்டேன்
இருநான்கும் மூன்றுடனே ஒன்றும் சொல்வாய்
இம்மொழியைக் கேட்டபடி ஈந்தா யாயின்
பெருநான்கும் அறுநான்கும் பெறுவாய் பெண்ணே!
சரிநான்கும் பத்துமொரு பதினைந் தாலே
சகிக்கமுடி யாதினியென் சகியே! மானே!

---விவேக சிந்தாமணி.

இம்முறையிற் பாப்புனைய வேண்டுகிறேன்.

அகரம் அமுதா

23 கருத்துகள்:

 1. பொருட்பாலை அடைவதுநம் உழைப்பால் நல்ல‌
  பிள்ளைகளை ஆக்குவது வளர்ப்பால் ஆசை
  நெருப்பாலே அழியுமய்யா அறப்பால் எல்லாம்
  நடக்குமடா நம்பிக்கை நினைப்பால் பூமி
  விரும்புவதே உயிர்வளர்க்கும் தாய்ப்பால் துன்பம்
  வருமய்யா சேருகின்ற கொழுப்பால் எல்லாம்
  கருத்தினிலே கொண்டிட்டு வாழ்ந்தால் வாழ்க்கைக்
  கடலினிலே வாலிபமும் இனிக்கு மப்பா.

  பதிலளிநீக்கு
 2. திகழ்
  அருமை, வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. கடலாடும் செந்தூரின் முருகா உந்தன்
  கனிவருளை தினம்வேண்டி குவியும் கைகள்
  மடங்காநீர் ஊற்றைப்போல் கருணைக் காட்டி
  மயக்கந்தீர்த் தடியாரை காக்கும் கண்கள்
  உடனாடும் வடிவேலும் மயிலும் காண
  ஒருமித்தே உனைநாடும் உள்ளங் கோடி
  கடனான இவ்வாழ்வைக் கழித்தே நானும்
  கடைந்தேற காப்புந்தன் கழலே யன்றோ!

  பதிலளிநீக்கு
 4. திகழ் சொன்னது…

  பொருட்பாலை அடைவதுநம் உழைப்பால் நல்ல‌
  பிள்ளைகளை ஆக்குவது வளர்ப்பால் ஆசை
  நெருப்பாலே அழியுமய்யா அறப்பால் எல்லாம்
  நடக்குமடா நம்பிக்கை நினைப்பால் பூமி
  விரும்புவதே உயிர்வளர்க்கும் தாய்ப்பால் துன்பம்
  வருமய்யா சேருகின்ற கொழுப்பால் எல்லாம்
  கருத்தினிலே கொண்டிட்டு வாழ்ந்தால் வாழ்க்கைக்
  கடலினிலே வாலிபமும் இனிக்கு மப்பா.

  திகழ் அவர்களின் பால் கவிதை அருமை. அருமை. பாவேந்தரின் சொல்விளையாட்டைத் தங்களின் பாவில் கண்டு இன்புற்றேன் வாழ்க. சிறு திருத்தம்  பொருட்பாலை அடைவதுநம் உழைப்பால்; நல்ல‌
  பிள்ளைகளை ஆக்குவது வளர்ப்பால்; ஆசை
  நெருப்பாலே அழியுமய்யா அறப்பால்; எல்லாம்
  நடக்குமடா நம்பிக்கை நினைப்பால்; பூமி
  விரும்புவதே உயிர்வளர்க்கும் தாய்ப்பால் துன்பம்
  மிகுமய்யா சேருகின்ற கொழுப்பால் எல்லாம்
  கருத்தினிலே கொண்டிட்டு வாழ்ந்தால் வாழ்க்கைக்
  கடலினிலே வாலிபமும் இனிக்கு மப்பா.

  பதிலளிநீக்கு
 5. உமா சொன்னது…

  கடலாடும் செந்தூரின் முருகா உந்தன்
  கனிவருளை தினம்வேண்டிக் குவியும் கைகள்
  மடங்காநீர் ஊற்றைப்போல் கருணை காட்டி
  மயக்கந்தீர்த் தடியாரைக் காக்கும் கண்கள்
  உடனாடும் வடிவேலும் மயிலும் காண
  ஒருமித்தே உனைநாடும் உள்ளங் கோடி
  கடனான இவ்வாழ்வைக் கழித்தே நானும்
  கடைந்தேற காப்புந்தன் கழலே யன்றோ!


  உமா அவர்கள் அழகியதோர் பக்திப்பண் இயற்றி அளித்துள்ளார். வாழ்க அவர். வளர்க அவரின் கவியாற்றல்.

  பதிலளிநீக்கு
 6. திரு.திகழ் மற்றும் திருவமை.உமா அவர்களின் பாடல்கள் தமிழோடும், அழகோடும் கொஞ்சி விளையாடும் நேரத்தில் இதோ இந்த எளியவனின் சிறுமுயற்சியும்,

  நல்லோர்க்கு மட்டுமிங்கே துன்பம் ஏனோ..
  நாள்தோறும் வல்வினைகள் கொள்தல் ஏனோ..
  வல்லோர்கள் எந்நாளும் வலுத்தல் ஏனோ..
  வல்லூற்றால் குருவிகளும் சாதல் ஏனோ..
  வலிமைகொள்ப வன்மட்டும் வாழ்தல் என்றால்
  வாழவைக்கும் சாமியெல்லாம் உண்டோ இங்கே..
  கலிமுற்றிப் போனதுவே காலம் வற்றி
  கல்தோன்றா மூத்தகுடி கரைதல் காணீர்.!

  நன்றி!

  பதிலளிநீக்கு
 7. அமுதா அவர்களே,

  எனக்கு ஒரு சந்தேகம். எந்த வாக்கியம் சரி?
  1. கமலா தன் பெற்றோரின் அறிவுரை கேட்டாள்
  2. கமலா தன் பெற்றோரிடம் அறிவுரை கேட்டாள்

  பதிலளிநீக்கு
 8. ஆஃகா! ஆஃகா! என்னப்பன் கழலின் பெருமையை இறைவழிபாட்டில் பாடிய உமா அவர்களே, உங்களுக்கு எல்லா மங்களங்களும் உண்டாகட்டும்.

  பதிலளிநீக்கு
 9. திகழ் பா திகைப்பாக இல்லாமல் இனிப்பாக இருக்கிறது, ஆனால் இதையும்விட சிறப்பாக பல கருத்துகளை அவரால் எழுத முடியும் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 10. ஏழுச்சீர் எட்டுச்சீர் எழுதக் கேட்டு
  .....ஏற்றஞ்சொல் லாக்கத்தை எமக்குத் தந்த
  ஏழுமி ரண்டுலகின் நாய கனாம்
  .....ஈசனும் சக்தியும் ஈன்ற மைந்தன்
  ஏழும லைமருக னருளைக் கொண்டு
  .....எளிதாக அனைவரையும் ஈர்க்கும் வண்ணம்
  ஏழுமொன் றிசையில்நற் றமிழைச் சேர்க்கும்
  .....எங்களீ ராசான்மா ரென்றும் வாழி !

  பதிலளிநீக்கு
 11. திரு.அமுதா அவர்களுக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கு மட்டுமல்ல, பா கற்பித்ததற்க்கும் என் நன்றி.

  திரு அவனடிமையார் அவர்களுக்கு மிக்க நன்றி. இப்புத்தாண்டில் தங்களின் ஆசி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.நன்றி.

  பதிலளிநீக்கு
 12. ஏழுச்சீர் எட்டுச்சீர் எழுதக் கேட்டு
  ஏற்றஞ்சொல் லாக்கத்தை எமக்குத் தந்த
  ........எங்களீ ராசான்மா ரென்றும் வாழி !
  அற்புதம்.
  எங்களின் நன்றியும்

  பதிலளிநீக்கு
 13. //வல்லூற்றால் குருவிகளும் சாதல் ஏனோ..//

  அருமை அண்ணாமலை அவர்களே, நலிந்தோரின் நிலைகுறித்து நீங்கள் நல்கிய பாவால் கண்களில் நீர்.

  எண்ணா நிலையீழர்க் கேனிந்தத் துன்பமைய்யா
  அண்ணா மலையானே சொல்.

  பதிலளிநீக்கு
 14. ‘பெயரில்லா’ அவர்களே:
  என்ன என்ன என்ன ? பெற்றோர்களிடம்.. அறிவுரை.... கேக்கறாங்களாமா...?
  நீங்க எந்தக் காலத்துல இருக்கீங்க?


  ‘கமலா தன் பெற்றோருக்கு அறிவுரை சொன்னாள்’-னு போட்டுப் பாருங்க, சரியா இருக்கும்.

  சும்மா... சும்மா.. கலாய்க்கீறேஞ் சாமி!

  பதிலளிநீக்கு
 15. /.....எங்களீ ராசான்மா ரென்றும் வாழி !/

  கடைசி அரையடி முதற்சீரை விளம்-நீக்க:

  .....எங்கள்ளீ ராசான்மா ரென்றும் வாழி !

  என்று திருத்தி படித்துக் கொள்ள வேண்டுகிறேன். தட்டச்சில் ’ள்’ விட்டுப்போனது. நன்றி.

  பதிலளிநீக்கு
 16. பெயரில்லா சொன்னது...

  அமுதா அவர்களே,

  எனக்கு ஒரு சந்தேகம். எந்த வாக்கியம் சரி?

  1.கமலா தன் பெற்றோரின் அறிவுரை கேட்டாள்.
  2.கமலா தன் பெற்றோரிடம் அறிவுரை கேட்டாள்.  பெயரில்லாதவரே! முதலில் தங்களின் பெயரைக் குறிப்பிட வேண்டுகிறேன். இருப்பினும் தங்கள் ஐயம் தீர்க்க வேண்டியது என் கடமை.


  கமலா தன் பெற்றோரிடம் அறிவுரை கேட்டாள். என்பதே சரி.

  பதிலளிநீக்கு
 17. அண்ணாமலை சொன்னது...


  நல்லோர்க்கு மட்டுமிங்கே துன்பம் ஏனோ..
  நாள்தோறும் வல்வினைகள் கொள்தல் ஏனோ..
  வல்லோர்கள் எந்நாளும் வலுத்தல் ஏனோ..
  வல்லூற்றால் குருவிகளும் சாதல் ஏனோ..
  வலிமைகொள்ப வன்மட்டும் வாழ்தல் என்றால்
  வாழவைக்கும் சாமியெல்லாம் உண்டோ இங்கே..
  கலிமுற்றிப் போனதுவே காலம் வற்றி
  கல்தோன்றா மூத்தகுடி கரைதல் காணீர்.!


  அண்ணாமலையாரின் எண்சீர் மண்டிலம் அருமை. இப்பாவின் மூலம் தங்களின் உள்ளக் கடங்கையை அறிய முடிகிறது. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 18. அவனடிமை சொன்னது…

  ஏழுச்சீர் எட்டுச்சீர் எழுதக் கேட்டு
  .....ஏற்றஞ்சொல் லாக்கத்தை எமக்குத் தந்த
  ஏழுமி ரண்டுலகின் நாய கனாம்
  .....ஈசனும் சக்தியும் ஈன்ற மைந்தன்
  ஏழும லைமருக னருளைக் கொண்டு
  .....எளிதாக அனைவரையும் ஈர்க்கும் வண்ணம்
  ஏழுமொன் றிசையில்நற் றமிழைச் சேர்க்கும்
  .....எங்களீ ராசான்மா ரென்றும் வாழி !


  அவனடியாரின் மண்டிலம் அருமை. அவரின் வாழ்த்தைப் பணிவன்போடு ஏற்கின்றேன். நன்றிகள் அய்யா!

  பதிலளிநீக்கு
 19. அவனடிமை சொன்னது…

  //////....எங்களீ ராசான்மா ரென்றும் வாழி !/

  கடைசி அரையடி முதற்சீரை விளம்-நீக்க:

  .....எங்கள்ளீ ராசான்மா ரென்றும் வாழி !

  என்று திருத்தி படித்துக் கொள்ள வேண்டுகிறேன். தட்டச்சில் ’ள்’ விட்டுப்போனது. நன்றி.////////  தேவையில்லை. அருகி சில இடங்களில் காய்ச்சீருக்குப் பதிலாக விளச்சீரும் வரலாம்!

  பதிலளிநீக்கு
 20. // பெயரில்லாதவரே! முதலில் தங்களின் பெயரைக் குறிப்பிட வேண்டுகிறேன். இருப்பினும் தங்கள் ஐயம் தீர்க்க வேண்டியது என் கடமை.

  கமலா தன் பெற்றோரிடம் அறிவுரை கேட்டாள். என்பதே சரி.//
  அமுதா அவர்களே,
  மிக்க நன்றி. பெயரில்லாத கேள்விக்கு மன்னிக்கவும்.
  என் பெயர் ஸ்ரீதரன். நான் சிங்கபூரில் இருக்கின்றேன்.
  என் மகள் முன்றாம் வகுப்பு தேர்வில் இந்த கேள்வி வந்தது. அவர்களுடைய ஆசிரியர், கமலா தன் பெற்றோரின் அறிவுரை கேட்டாள் தான் சரியான வாக்கியம் என்று சொல்கிறார்கள். விளக்கம் -இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து உள்ளது என்று சொல்கிரார். நீங்கள் விளக்க முடியுமா?

  பதிலளிநீக்கு
 21. திருவமை.உமா அவர்களின் பாவில் முருகன் விளையாடுகிறான்..
  திரு.திகழ் அவர்களின் பாவில் தமிழ் விளையாடுகிறது..
  திரு.அவனடிமை ஐயா மற்றும் திரு.அகரம் அமுதா
  அவர்கள் வடிக்கும் ஒவ்வொரு பாவும் பாடங்களே..
  திரு.வசந்த் அவர்களை இன்னும் காணோமே?
  பாத்தொடுக்கும் அனைவருக்கும் பணிவான நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 22. அருமை.

  அண்ணாமலையான் ஆச்சர்யப்படுத்தி உள்ளார்.

  பதிலளிநீக்கு
 23. எல்லாம் நமது ஆசிரியர்களின் கைங்கரியம் தான் ஸ்ரீராம் அவர்களே!
  தொடர்ந்து வருகை தருக!

  பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com