வெள்ளி, 2 ஏப்ரல், 2010

நான்காம் தலைப்பு : இறை வழிபாடு!

இந்தத் தலைப்பிலும் ஐவர் அழகுற எழுதியுள்ளனர்.

1. திரு. இரா. வசந்த குமார்
எழுதிய மண்டிலம்.

(காய் + காய் + காய் + காய் +
மா + தேமா)

நீலமேகம் நின்தேகம்; நில்லாத்தேன் நாதமொலி
நனைந்த மஞ்சு;
ஏலமணம் நின்சொல்லில்; ஏந்தியநல் மதுச்சரமுன்
ஏங்கும் கோபி;
மீளவழி இல்லைநீயென் மென்மனத்தைக் குழலிசைத்து
மீட்டி விட்டாய்;
மாலன்நீ மதுசூதன் மலர்ப்பாதம் பணிந்தேன்பார்
மங்கை ஏற்பாய்.

2. திருவமை. உமா
எழுதியவை :

மா மா காய்
மா மா காய்

கங்கை முடிமேல் அமர்ந்திருக்க
கண்டம் நீலம் ஆனவனே
மங்கை உமையாள் ஒருபாகம்
மாலன் தங்கை மீனாட்சி
செங்கை தன்னில் திரிசூலம்
சிவந்த நெற்றிக் கண்ணோடும்
எங்கும் உடலில் வெந்நீறு;
எழிலாய்க் காட்சி அளிப்பவனே!

மங்கை ஆசை மண்ணாசை
மயக்கும் பொன்னின் மேலாசை
தங்காப் புகழைத் தான்தேடித்
தாவும் மனத்தை நானடக்கி
எங்கும் நிறைந்த நின்னருளை
எண்ணம் தன்னில் நிறைத்திருக்கக்
கங்கா தரனே! கைலாசா!
கடையன் எனக்கே அருள்வாயே!

கண்ணன் என் குழந்தை - தாலாட்டு

மா மா மா
மா மா மா

வெண்ணெய் உண்ட வாயும்
விண்ணை அளந்தக் காலும்
குன்றைப் பிடித்தக் கையும்
கொஞ்சம் வலிக்கும் என்றே
அன்னை என்றன் மடியில்
அணைத்தேன் கண்ணை மூடி
கண்ணா நீயும் தூங்கு
கருணைக் கடலே தூங்கு!

கன்னம் சிவந்த சிறுவர்
கனவில் காணத் தூங்கு
மண்ணில் மாந்தம் வாழ
மழையைத் தந்தே தூங்கு
கண்ணை மூடிக் கொண்டால்
காணும் இருளைப் போல
எண்ணம் கொண்டோர் நெஞ்சை
எரித்தே நீயும் தூங்கு.

கண்ணா அருள்வாயா?

குறிலீற்று மா + விளம் + மா
விளம் + விளம் + மா

கண்டு களித்திட வேண்டும்
கார்முகில் வண்ணனை நேராய்
அன்று அவன்குழல் இசையில்
அழகிய ஆய்ச்சியர் மயங்கக்
கன்றை மறந்தது ஆவும்
காலமும் நின்றது, மண்ணை
உண்ட வாயினில் உலகம்
உருண்டிடக் கண்டனள் அன்னை!

பண்டு பூமியில் நேர்மைப்

பாதையாம் கீதையைத் தந்தாய்

குன்றைக் குடையெனப் பிடித்துக்

கோபியர் குலத்தைநீ காத்தாய்

நன்று நினைப்பவர் நாடும்

நன்னிலை ஏய்திடச் செய்தாய்

என்று என்னுளே கருவாய்

என்மனம் குளிர்ந்திட அருள்வாய்?


(குறிலீற்றுமா கூவிளம் விளம் விளம்
விளம் மாங்காய்)

பாடி உன்புகழ் பரப்பிடும் வகையினைப்
பாவிநான் அறிந்தில்லேன்
தேடி நின்னருள் பெற்றிடக் கோவிலைச்
சேர்ந்திடல் செய்தில்லேன்
கோடிக் குன்றினைச் சுற்றியே யானுனைக்
கும்பிடும் வழியில்லேன்
நாடி நாமமே நெஞ்சினில் நினைப்பதே
நானறி நெறியாமே!

நஞ்சு ஈதென நன்றென தீதென
யாதுமே அறியேனே
தஞ்சம் நீயெனக் கின்னருள் தந்தருள்
தாளினைப் பற்றிட்டேன்
குஞ்சுத் தாயினை அண்டியே வாழுமாம்
குன்றுறை குமரேசா
நெஞ்சில் உன்னையே நிறுத்திநான் வாழ்ந்திட
நீயெனக் கருள்வாயே!


3. திரு. அவனடிமை
எழுதியவை :

குறுலீற்று மா+விளம்+மா+
விளம்+விளம்+மா

ஆன்ம உலகினுக் கரசர்
.......ஆண்டவ னெனப்பல ருரைப்பர்
உன்னுள் உருக்குலை யாதோர்
.......உணர்வினைக் காட்டுவே னென்பார்
உந்தன் உடல்பிணி யைத்தன்
.......உருக்கிடும் இசையினால் நீக்கி
உன்னுள் மூச்சிலே உயிரின்
.......உண்மையை உணர்ந்திடு வென்பார்!

ஏங்கும் சீடரும் மடமும்
.......ஏய்த்திடக் கூட்டுற வாகும்
பொன்னும் பெயருடன் பகட்டும்
.......பூவைய ரைப்புலன் புணர
கன்னம் தடவிடும் கணிகை
.......கனிவுடன் பணிவிடை புரிவாள்
இன்னும் பலயில வசமாய்
.......ஈர்த்திடும் இச்சையிற் திளைப்பார்!

அங்கி அறிவிழந் தோமென்
.......றரண்டுநா மழுதிட வேண்டா
இங்கிவ் வினவொளி மறைக்க
.......ஈசலா னந்தருக் காகா
தெங்கும் எப்பொரு ளுள்ளும்
.......எரிந்திடும் ஒளியினைக் காட்டும்
குன்றின் மேல்விளக் குலகின்
.......குறைகளும் அவன்திரு வருளே!

மா + மா + காய்
மா + மா + காய்

ஆன்மீ கத்தில் அரசாள
....ஆண்ட வன்போல் அவர்வந்தே
உன்னுள் உறையும் உருக்குலையா
....உணர்வே நானென் றுரைத்திடுவார்
எண்சாண் உடலிற் பிணிகளையும்
....இல்லா தாக்க இசைதொடுத்து
உன்மூச் சினைச்சீ ராக்கிடென
....உனக்கே உரைப்பார் அறிவுரையாய்!

ஏங்கும் சீடர் கூட்டணியும்
....ஏய்க்கும கூட்டம் பின்வரவும்
பொன்னும் பெயரும் பகட்டுடுப்பும்
....பெண்மை அழகும் புலன்புணர
கன்னம் தடவும் கணிகையுடன்
....கற்பாய்ப் பணிவன் போடிருப்பார்
இன்னும் இதுபோல் இலவசசிற்
....றின்பம் பலசேர்த் தனுபவிப்பார்

அங்கி அறிவோ டிழந்தோமென்
....றரண்டு நாமும் அழவேண்டாம்
கங்குல் இனப்பே ரொளியின்முன்
....கலையும் ஈசற் கூட்டமிது
என்றும் எங்கும் எவரிடமும்
....எரியும் ஒளியே எமதிறைவன்
குன்றின் மேலே விளக்கவந்தான்
....குறையும் அவன்பே ரருளன்றோ!

(காய்+காய்+காய்+காய்+
மா+தேமா)

நான்வேறு நீவேறு என்றில்லை பகுத்தறிவாய்
நாடில் ஒன்றே
நான்வேறு பிறர்வேறாய்த் தெரிகிறதே என்றுரைப்பார்
ஞாலந் தன்னில்
நான்நீயாய் அவரதுவாய்த் தோன்றுவதும் ஒருபொருளே
நாம்காண் தோற்றம்
மாங்காயும் தளிர்பூவும் இலைகிளையென் றெல்லாமும்
மரமே யன்றோ!

நன்மையிதே இன்னலறும் ஒன்றென்ற இவ்வெண்ணம்
நலமே நல்கும்
உன்செயலை என்செயலை உன்கணிப்பு எப்போதும்
ஒன்றாய்க் காணும்
நன்நெஞ்சில் பிறர்குற்றம் பழிவாங்கும் வெறுப்புணர்வு
நாணித் தோடும்
ஒன்றதுவும் உன்னுணர்வே உலகுடலாய் நீயுயிராய்
ஒளிர்வா யன்பே!

4. திரு. திகழ்
எழுதியவை :

மா+மா+காய்
மா+மா+காய்

உன்னுள் என்னுள் இருக்கின்ற‌
...இறையைப் புறத்தே தேடுகின்றோம்
பொன்னால் க‌ல்லால் உருவான‌
...சிலையை வ‌ண‌ங்க‌ச் செல்கின்றோம்
அன்பாய்ப் ப‌ண்பாய் இருக்கின்ற
...இறையை உண‌ர‌ ம‌றுக்கின்றோம்
உன்னைத் தேடி ப‌டைத்த‌வ‌னும்
...வ‌ருவான் அன்பைப் பொழிந்தாலே!

காவி உடுத்த சாமிக்கு
...எதற்குக் காசு பணமெல்லாம்
கூவி அழைத்து விற்பாரே
...கூறு போட்டு ஆண்டவனைப்
பாவி யாக்க பார்ப்பாரே
...பார்த்து நடந்து கொள்ளுங்கள்
ஆவி அடங்கும் முன்னாலே
...ஆசை செய்யும் ஆட்டமடா!

5. திரு. அண்ணாமலை
எழுதியவை :

மா+ மா+ காய்
+மா+மா+காய்

உருவம் இன்றி உலகினிலே
....ஒத்து நடக்கும் செயல்களிலே
அருவம் போலே அமைவான்காண்
....அவனே தெய்வம் எனக்கொண்டான்
ஓரேர் உழவன் போலேயாம்
....ஒருவழி நெறியிற் செல்கையிலே
பாரேர் பிடித்து உழுதிடுவோன்
....பதராம் எமையுங் காப்பானே!

திருமால் அல்லா ஏசுவொடு
....திருப்பு கழ்பை பிள்குரானும்
அருகாய் வரட்டும் அனைவருமே
....அன்பால் எல்லாம் ஓர்கடவுள்
இரும்பால் ஆனது அல்லமனம்
....இருக்கும் அனைத்தும் நம்மதமாம்
உருவாக் கியவன் மனிதன்தான்
....உயர்வைப் பெறுதல் நம்மால்தான்!

அருமையாக மண்டிலங்கள் எழுதிய அனைவருக்கும் பாராட்டும் வாழ்த்தும் நன்றியும் உரித்தாக்குகின்றோம்.

அடுத்து, எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம் எழுதப் பயில்வோம்.

-------------------------------------------------------------------------------------------

23 கருத்துகள்:

 1. அன்புள்ள ஐயா...

  நன்றிகள். அது 'நினைந்த மஞ்சு' அல்ல; 'நனைந்த மஞ்சு'. ;)

  பதிலளிநீக்கு
 2. தமிழநம்பி ஆசிரியருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி. தமிழ்ப்படுத்தித் திருத்திய பாக்கள் நன்றாக இருக்கின்றன.
  பாவலர் எல்லோருக்கும் மிக்க நன்றி. நன்றாக மற்றொருமுறை படித்ததில், தமிழ்ச்செறிவு எல்லோர் பாடலிலுமே மிளிருவது தெரிகிறது. வசந்த் ஐயாவின் கண்ணன், உமா அவர்களின் ஈசன், தாலாட்டு, கண்ணன், முருகன் பாடல்கள், திகழ் அவர்களின் எச்சரிக்கை, அண்ணாமலையாரின் மதங்களின் ஒற்றுமை எல்லாமே தூய தமிழ் வெளிப்பாடாக படிக்குந்தோறும் இன்பஞ் சேர்ப்பதாக வந்துள்ளன.

  அனைவருக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 3. மூன்றாம் பாடல் முதல் அடியை மாற்றி அளித்துள்ளேன். ‘எல்லாம் ஒன்றே’ என்ற குறுநூலின் முதல் அதிகாரத்தை பாவுருப்படுத்தியதால் மூலத்தின் பெயரை விலக்க வேண்டாம் என்று தோன்றியது. நன்றி.
  ************
  ஈங்குண்மை ஒன்றுளது பலவுருவாய்ப் பகுத்தறிவாய்^
  எல்லாம் ஒன்றே
  நான்நீயாய் அவரதுவாய்த் தோன்றுவதும் ஒருபொருளே
  நாம்காண் தோற்றம்
  நான்வேறு பிறர்வேறாய்த் தெரிகிறதே என்றுரைப்பார்
  ஞாலந் தன்னில்
  மாங்காயும் தளிர்பூவும் இலைகிளையென் றெல்லாமும்
  மரமே யன்றோ!

  நன்மையிதே இன்னலறும் ஒன்றென்ற இவ்வெண்ணம்
  நலமே நல்கும்
  உன்செயலை என்செயலை உன்கணிப்பு எப்போதும்
  ஒன்றாய்க் காணும்
  நன்நெஞ்சில் பிறர்குற்றம் பழிவாங்கும் வெறுப்புணர்வு
  நாணித் தோடும்
  ஒன்றதுவும் உன்னுணர்வே உலகுடலாய் நீயுயிராய்
  ஒளிர்வா யன்பே!
  ************

  ^பகுத்தறிவாய் - ’ஒரு பொருளே பகுத்தறியும் அறிவாய் உள்ளது’ என்றும் ‘பகுத்து அறிந்து கொள்’ என்றும் இருவிதமாய் கொள்ளலாம்.

  பதிலளிநீக்கு
 4. அன்பர்களே: மூன்றாம் சீர் 'பலவுருவாய்ப்' என்பதை ‘பலவுருவில்’ என்று திருத்திப் படித்துக் கொள்ளவும். மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 5. இறைவழிபாடு
  --------------

  கண்ணா அருள்வாயா

  குறிலீற்று மா + விளம் + மா
  விளம் + விளம் + மா

  கண்டு களித்திட வேண்டும்
  கார்முகில் வண்ணனை நேராய்
  அன்று அவங்குழல் இசையில்
  அழகிய ஆய்ச்சியர் மயங்க
  கன்றை மறந்தது ஆவும்
  காலமும் நின்றது, மண்ணை
  உண்ட வாயினில் உலகம்
  உருண்டிடக் கண்டனள் அன்னை

  பண்டு பூமியில் நேர்மை
  பாதையாம் கீதையைத் தந்தாய்
  குன்றைக் குடையெனப் பிடித்து
  கோபியர் குலத்தைநீ காத்தாய்
  நன்று நினைப்பவர் நாடும்
  நன்னிலை ஏய்திடச் செய்தாய்
  என்று என்னுளே கருவாய்
  என்மனம் குளிர்ந்திட அருள்வாய்

  அய்யா
  இரண்டாம் பாடல் விடுபட்டுவிட்டது.அருள்கூர்ந்து இப்பாடலையும் திருத்திட வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 6. அய்யா,
  தாங்கள் இவ்வளவுப் பொறுமையாக அனைவரின் பாடல்களையும் திருத்தி, எழுத்துப் பிழைகளையெல்லாம் நீக்கிச் சிறப்பாக தந்துள்ளமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. [வல்லினம் மிகும்- மிகா இடங்கள் பாடத்தை கவனமாக படித்து மனத்தில் கொள்கிறேன்.]
  மீண்டும் நன்றி.

  பதிலளிநீக்கு
 7. திரு வசந்த குமார் அவர்களுக்குப் பாராட்டுகள்.
  //ஏலமணம் நின்சொல்லில் // தங்கள் சொல்லிலும் மணக்கக் காண்கிறோம்.

  பதிலளிநீக்கு
 8. திரு.அவனடிமையார்

  முற்காலத்தில் மிகச்சிறந்த பல பாக்களைத் தந்தவார் பெயர் தெரியாதால் அவர் பாக்களின் அடிகளைக்கொண்டே பலர் அழைக்கப்பட்டனர்.
  செம்புலப் பெயனீரார்,அணிலாடு முன்றிலார் போல.

  தங்கள் பெயரும் - அவனடிமையார் இவர்களை நினைவுருத்துகிறது. அதுமட்டுமில்லாமல் தங்கள் பாக்களும் சிறப்பிலும், செறிவிலும் ஒத்திருப்பதால் தங்களைப் பாராட்டாமலிருக்க முடியவில்லை. பணிவான பாராட்டுகள்.
  அப்பரும் சுந்தரரும் போல் எல்லாமுமானவனைப் பாடியுள்ளமை மிகச் சிறப்பு.

  பதிலளிநீக்கு
 9. திரு. திகழ் அவர்களுக்கு என் பாரட்டுகள். உலக நடப்பை பாவில் அமைத்துவிட்டீர்கள். நன்று.

  திரு அண்ணாமலையாருக்கு என் பணிவான பாராட்டுகள்
  //திருப்பு கழ்பை பிள்குரானும்// எல்லோரும் கீதை பைபிள் குர்ரான் என்றே கூறுவர். தாங்கள் திருப்புகழை சொன்னமை மிகப் பாராட்டுக்குரியது. நன்று.

  பதிலளிநீக்கு
 10. //அடுத்து, எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம் எழுதப் பயில்வோம்.//

  அய்யா எங்கள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இது கனவா இல்லை நினைவுதானா? உண்மையிலேயே நான் மரபு பாக்கள் எழுதுகிறேனா என என்னாலேயே நம்பமுடியவில்லை. வெண்பா, ஆசிரியப்பா,மண்டிலம் என ஒவ்வொரு படியாக உயரும் போதும் நானடையும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. அடுத்து எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம் பயில ஆவலோடு காத்திருக்கிறேன். தங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றுதான் தெரியவில்லை. மிக்க நன்றி.

  திரு.அமுதா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. தங்கள் வலையின் ஊக்கம் மட்டும் இல்லையென்றால் தமிழின் இனிமையை இவ்வளவு உணர்ந்திருக்கமுடியாது. இவ்வளவு எழுதியிருக்கவும் முடியாது. தங்களுக்கும் திரு.தமிழநம்பி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

  பதிலளிநீக்கு
 11. அகரம் தமிழினைத் தேடி
  ...அகிலம் முழுதும் அலைய
  திகழும் இருகண் பனித்துத்
  ...திகழும் இறைத்தமி ழோத
  இகழ்வாம் தமிழர் நிலைமை
  ...இழுக்கென் றனைவரும் பாட
  புகழ்மா லுறுமா தரசி
  ...புல்லாங் குழல்பா டிடுவார்.

  அண்ணா மலைநம் குலத்தோர்
  ...ஆட்சியின் வீச்சினைப் பாட
  அன்னைத் தமிழிவ ளாழம்
  ...அருள்சிக் கிமுக்கிக் குணவாம்
  பண்ணும் வசந்தரைச் சிலிர்க்கப்
  ...பண்ணும் மொழியவர் தோழி
  இன்பந் தருமினச் சேர்க்கை
  ...இயல்பப் பாதுரை யீந்தார்.

  வெண்பாத் தளத்திற் றிரளும்
  ...பண்பா ளரின்கள் ளனைய
  தண்தெள் ளமுதத் தமிழைத்
  ...தந்திடச் செய்யும் திறமை
  உண்டிங் கிருவா சிரியர்
  ...உளப்பா விலக்கண மெல்லாம்
  விண்டவை விளக்கிடும் வித்தை
  ...வேலவா நின்கைத் திறனே!

  பதிலளிநீக்கு
 12. வசந்தகுமார்,

  திருத்தி விடுகிறேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 13. அவனடிமை ஐயா,

  அருமையான பாக்கள் எழுதியதோடு, மற்றவர்களுக்கும் ஊக்கம் அளித்தீர்கள்.

  நீங்கள் விரும்பியவாறு திருத்தங்கள் இடம்பெறும்.

  பதிலளிநீக்கு
 14. உமா,

  நன்றாக மண்டிலங்கள் எழுதுகிறீர்கள்.

  தொகுப்பில் 'கண்ணா அருள்வாயா?' விடுபட்டதற்கு வருந்துகிறேன்; சேர்த்துவிடுகிறேன்.

  பதிலளிநீக்கு
 15. புதிதாகச் சேர்ந்த அண்ணாமலையார், ஆர்வத்தோடும் ஈடுபாட்டோடும் நன்கு பாக்கள் எழுதியுள்ளார்; அவர் சுவைத்த பிறரின் பா-அடிகளையும் எடுத்துக் காட்டிப் பாராட்டியுள்ளார். மகிழ்ச்சி. நன்றி.

  அன்பார்ந்த திகழ்,

  பயிற்சியின் போது அதிகமாக எழுதாதபோதும், இப்போது நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

  நீங்கள், மற்றவர் எழுதியவற்றைத் தங்கு தடையின்றி மனமாரப் பாராட்டும் பாங்கு, உங்கள் உயர்வை வெளிப்படுத்துகிறது.

  நெஞ்சார்ந்த நன்றி திகழ்!

  அப்பாதுரை அவர்கள் அறிமுகமே மறக்க இயலாதது. தொடர்ந்து நம்மோடு பாக்கள் எழுதுவார் என்று எதிர்பார்க்கலாம். அப்பாதுரையார்க்கு அன்பார்ந்த நன்றி.

  சிறப்பாக எழுதும் சிக்கிமுக்கியார்க்கு நம் நன்றி.
  அவர் தொடர்ந்து நம்முடன் எழுத அவர்க்கு உள்ளமும் ஓய்வும் ஒத்துழைக்க வேண்டுமென்பது நம் விழைவு.

  பதிலளிநீக்கு
 16. அகரம் அமுதா அவர்கள் மிக மகிழ்வார்கள் என்பது வெளிப்படை.
  அவர் தொடங்கிய பணியின் விளைச்சல் குறைவாக இருந்தாலும் நிறைவைத்தரும் வகையில் இருப்பது
  மகிழ்வளிப்பதாக உள்ளது.
  அவர் தொடர்ந்து ஈடுபட வேண்டுமென்பது நம் விழைவு. நன்றி.

  பதிலளிநீக்கு
 17. மேலே உள்ள பாவில், மோனை, தளை குற்றம் நீங்க மூன்றாம் மண்டிலத்தில்
  //வெண்பாத் தளத்திற் றிரளும்// என்ற முதல் அரையடியை
  “பைந்தமிழ்ப் பாடம் பயிலும்” என்றும்
  ஈற்றடியில் முதற்சீர் //விண்டவை//க்கு பதிலாக ‘விண்டு’ எனவும் மாற்றிக் கொள்ள வேண்டுகிறேன்.

  இதோ திருத்திய பா:

  அகரம் தமிழினைத் தேடி
  ...அகிலம் முழுதும் அலைய
  திகழும் இருகண் பனித்துத்
  ...திகழும் இறைத்தமி ழோத
  இகழ்வாம் தமிழர் நிலைமை
  ...இழுக்கென் றனைவரும் பாட
  புகழ்மா லுறுமா தரசி
  ...புல்லாங் குழல்பா டிடுவார்.

  அண்ணா மலைநம் குலத்தோர்
  ...ஆட்சியின் வீச்சினைப் பாட
  அன்னைத் தமிழிவ ளாழம்
  ...அருள்சிக் கிமுக்கிக் குணவாம்
  பண்ணும் வசந்தரைச் சிலிர்க்கப்
  ...பண்ணும் மொழியவர் தோழி
  இன்பந் தருமினச் சேர்க்கை
  ...இயல்பப் பாதுரை யீந்தார்.

  பைந்தமிழ்ப் பாடம் பயிலும்
  ...பண்பா ளரின்கள் ளனைய
  தண்தெள் ளமுதத் தமிழைத்
  ...தந்திடச் செய்யும் திறமை
  உண்டிங் கிருவா சிரியர்
  ...உளப்பா விலக்கண மெல்லாம்
  விண்டு விளக்கிடும் வித்தை
  ...வேலவா நின்கைத் திறனே!

  பதிலளிநீக்கு
 18. ஆஹா இதுவல்லவா திரு.அவனடிமையாரின் சிறப்பு. அருமை அய்யா தங்கள் பா.

  பதிலளிநீக்கு
 19. மிகவும் அருமையான தொகுப்பு அய்யா

  உங்களுக்குத் தான் நன்றி நவில வேண்டும்.

  பதிலளிநீக்கு
 20. அவனடிமை அய்யா அவர்களே

  அனைவரையும் பாராட்டு மழையில் நனைத்து விட்டீர்கள்

  நன்றி அய்யா

  பதிலளிநீக்கு
 21. நம் வெண்பா எழுதலாம் வாங்க வலையைக் காணக்கண் கோடி வேண்டும். எத்தனை எத்தனை வகையான பாக்கள்!!! நம்மோடு புதிதாக இணைந்திருக்கும் அண்ணாமலையார் மற்றும் அப்பாதுரையார் ஆகியோரின் பாக்கள் நம்மை வியக்க வைக்கிறது. அவர்கள் வாழ்க.


  உமா, மற்றும் அவனடியாரின் பாக்கள் அவர்களின் தமிழாற்றலையும், கற்பனை வளத்தையும் பறைசாற்றுகின்றன. அவனடியார் தொட்டதற்கெல்லாம் பாத்தீட்டுவது அவரின் பாவியற்றும் ஆற்றலையும் விரைவையும் காட்டுகிறது. அவர்கள் இருவரும் வாழ்க.

  வசந்த் மற்றும் திகழ் இருவரும் பாப்புனையும் தன்மையே வியப்பளிக்கிறது. எளிமையான சொற்களைக் கொண்டும் நல்ல கற்பனை வளத்தோடு அவர்கள் பாவியற்றி நம் வலைக்குப் பெருமை சேர்ப்பதெண்ணி மகிழ்கிறேன். அவர்கள் வாழ்க.

  சிக்கிமுக்கியாரின் தமிழ்ப்பற்றும், தமிழாற்றலும் என்னை வியக்கவைப்பதோடு, அவரின் பாக்களை இரண்டு மூன்று முறைக்கும் மேல் படிக்கத் தூண்டுகிறது. அவர் வாழ்க. வாழ்க.

  இங்குக் குறிப்பிட்டிருக்கும் அத்தனை பேரையும் (என்னையும்) ஒருங்கிணைத்து, பல வகையான பாக்களையும் பயிற்றுவித்துத் தன் பொன்னான நேரத்தை நமக்காக ஒதுக்கும் தமிழநம்பி அய்யா அவர்களின் தாள்களில் என் கோடான கோடி நன்றிகளைக் காணிக்கையாக்குகின்றேன்.

  பதிலளிநீக்கு
 22. மிகைப்படுத் தாதொரு நன்றியைச் சொல்வோம்
  தகவர் தமிழநம் பி.

  பதிலளிநீக்கு
 23. ஒவ்வொரு தலைப்பிலும் அருமையான சொல் வீச்சுடன் எழுதியிருக்கிறார்கள். நானும் ஒட்டிக்கொண்டு தொகுப்பை ரசித்தேன். நன்றி.

  பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com