திங்கள், 5 ஏப்ரல், 2010

எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்

அறுசிர் மண்டிலம் பற்றி நம் ஆசிரியர் தமிழ நம்பி அவர்கள் அழகுறவும், தெளிவுறவும் நமக்குப் பயிற்றுவித்தார். நாமும் சிறந்த பயிற்சி பெற்று அழகுற பற்பல பாக்கள் புனைந்து நம் ஆற்றலை வெளிப்படுத்தினோம். மேலும் கொடுக்கப்பட்ட தலைப்புகளுக்கும் பாக்கள் தீட்டி அவரவர் தம் ஆற்றலை வெளிப்படுத்தினோம்.

அந்த வகையில் வசந்த், அவனடியார், உமா, சிக்கிமுக்கி, திகழ், அண்ணாமலையார், அப்பாதுரையார் ஆகிய அனைவருக்கும் எனது உளங்கனிந்த நன்றிகளையும், வணக்கங்களையும் காணிக்கையாக்குகின்றேன். ஒவ்வொருவரும் தங்களின் பாத்திறத்தால் என் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்துவிட்டீர்கள் என்றால் அது மிகையாகாது. தங்கள் அனைவரையும் வாழ்க என வாழ்த்தி,

எழுசீர் மண்டிலம் பற்றி இப்பகுதியில் அறியவிருக்கிறோம்.

எழுசீர் மண்டிலம் என்பது ஏழு சீர்களைக் கொண்டிருக்கும் என்பதை அனைவரும் அறிவீர்கள். அவற்றின் வரைமுறைகளைக் காண்போம்.

1. அனைத்து சீர்களும் இயற்சீர்களாக வரவேண்டும்.
2. ஒன்றாம், மூன்றாம், ஐந்தாம், ஆறாம் சீர்கள் ---விளச்சீர்களாக வரவேண்டும். (கருவிளம், கூவிளம்)
3. இரண்டாம், நான்காம், ஏழாம் சீர்கள் மாச்சீர்களாக வரவேண்டும். (தேமா, புளிமா)
4. ஒன்றாம், ஐந்தாம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும்.
5. நான்கடிகளும் ஓரெதுகை பெறவேண்டும்.


விளம் + மா + விளம் + மா
விளம் + விளம் + மா =இதுவே நாம் எளிமையாகப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பாடு.

காட்டு-

­வையகம் முழுதும் ஆண்டுவந் தனரே

வண்டமிழ் பேசிடும் மக்கள்

பையகம் நஞ்சைப் பதுக்கிடும் பாம்பாய்ப்

பண்பினில் சூழ்ச்சியை வைத்துப்

பொய்யகம் படைத்த ஆரியர் வரவால்

புகழ்நிலம் அற்றனர் இன்றோ

கையக நிலமும் காடையர் பரிக்கக்

கவினழிந் திடர்பல உற்றார்!


நாவலந் திவு நம்மவர் வாழ்ந்த

நன்னிலம் ‘இந்தியா’ ஆச்சு

தீவெனத் திகழும் இலங்கைநன் னாடும்

சிங்கள தேயமாய்ப் போச்சு

பாவளங் கொழித்த பசுந்தமிழ் ஆட்சி

பாரினில் எங்கனும் இல்லை

நாவலம் படைத்த நற்றமிழ் மக்கள்

நலிவகல் நாளு(ம்)வந் திடுமோ?


இம்முறையில் பாக்கள் புனைந்து வருக என அனைவரையும் அழைக்கிறேன்.


அகரம் அமுதா


51 கருத்துகள்:

 1. எடுத்துக்காட்டுப் பா மிக அருமை. எழுசீர் மண்டிலம் நாங்களும் முயற்சிக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 2. அருமையான பாக்கள் அமுதா அவர்களே

  பதிலளிநீக்கு
 3. எனக்குப் பிடித்த எழுசீர் விருத்தங்கள்


  1.திருவாசகத்திற்கு உருகாதவர் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பர்

  அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
  அன்பினில் விளைந்தவா ரமுதே
  பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
  புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
  செம்மையே ஆய சிவபதம் அளித்த
  செல்வமே சிவபெரு மானே
  இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
  எங்கெழுந் தருளுவ தினியே

  .........................

  2.பாரதியாரின் வ‌ரிக‌ள்


  அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி
  அகத்திலே அன்பினோர் வெள்ளம்,
  பொறிகளின் மீது தனியர சாணை
  பொழுதெலாம் நினதுபே ரருளின்
  நெறியிலே நாட்டம், கருமயோ கத்தில்
  நிலைத்திடல் என்றிவை அருளாய்!
  குறிகுணம் ஏதும் இல்லதாய் அனைத்தாய்க்
  குலவிடு தனிப்பரம் பொருளே

  பதிலளிநீக்கு
 4. மகிழ்ச்சி

  மந்திர மல்ல மாயமு மல்ல‌
  மனத்திலி ருக்கிற தம்மா
  தந்திர மல்ல தாயமு மல்ல‌
  திறவுகோல் நம்மிட மம்மா
  விந்தையு மல்ல வித்தையு மல்ல‌
  விதைப்பவ ரிங்குநா மம்மா
  அந்தியு மல்ல ஆதியு மல்ல‌
  அன்பிலே இருக்கிற தம்மா

  பதிலளிநீக்கு
 5. யார் இவர்கள் ?

  கண்ணிருந் துமிங்கே குருடராய்ப் போன‌
  கதையினைக் கேட்டவ ருண்டோ ?
  மண்ணிருந் துமிங்கே மகிழ்ச்சியைத் தொலைத்த‌
  மனிதரைப் பார்த்தவ ருண்டோ ?
  விண்ணிருந் துமிங்கே வான்மழை இழந்த‌
  விதியினைச் செய்தவ ருண்டோ ?
  இணையிருந் துமிங்கே இல்ல‌ற‌ம் தொலைத்த‌
  இருத‌ய‌ ம‌ற்ற‌வ‌ர் நாங்க‌ள் !!!

  பதிலளிநீக்கு
 6. வருக உமா அவர்களே! பாக்கள் புனைந்து தருக!

  பதிலளிநீக்கு
 7. திகழ் அவர்களின் திருவாசகர் மற்றும் பாரதியாரின் காட்டுப் பாக்கள் அனைத்தும் அருமை. கீழிரண்டுப் பாக்கள் அருமை அருமை. வாழ்க திகழ் அவர்களே!

  மகிழ்ச்சி என்ற தலைப்பிலான பா என்னை நனிஈர்த்தது. இரண்டாம் பாடலின் நான்காம் அடியின் முதற்சீர் எதுகை அமையவில்லை. கவனிக்கவும். நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 8. யார் இவர்கள் ?

  கண்ணிருந் துமிங்கே குருடராய்ப் போன‌
  கதையினைக் கேட்டவ ருண்டோ ?
  மண்ணிருந் துமிங்கே மகிழ்ச்சியைத் தொலைத்த‌
  மனிதரைப் பார்த்தவ ருண்டோ ?
  விண்ணிருந் துமிங்கே வான்மழை இழந்த‌
  விதியினைச் செய்தவ ருண்டோ ?
  பெண்ணிருந் துமிங்கே போற்றிட‌ ம‌ற‌ந்த‌
  ப‌ண்பி(ல்)லா பாவிக‌ள் நாங்க‌ள் !!!  அமுதா அவ‌ர்க‌ளே மிக்க‌ ந‌ன்றி
  பாக்க‌ளைப் ப‌டித்துப் பாராட்டிய‌த‌ற்கு


  பொருட்பிழையோ அல்ல‌து எழுத்துப்பிழையோ இருப்பின் செப்ப‌னிட‌ வேண்டுகிறேன்.

  அன்புட‌ன்
  திக‌ழ்

  பதிலளிநீக்கு
 9. யார் இவர்கள் ?

  கண்ணிருந் துமிங்கே குருடராய்ப் போன‌
  கதையினைக் கேட்டவ ருண்டோ ?
  மண்ணிருந் துமிங்கே மகிழ்ச்சியைத் தொலைத்த‌
  மனிதரைப் பார்த்தவ ருண்டோ ?
  விண்ணிருந் துமிங்கே வான்மழை இழந்த‌
  விதியினைச் செய்தவ ருண்டோ ?
  பெண்ணிருந் துமிங்கே போற்றிட மறந்த‌
  பண்பி(ல்)லா பாவிகள் நாங்கள் !!!  நன்றி அமுதா அவர்களே

  பொருட்பிழையோ அல்லது எழுத்துப்பிழையோ இருப்பின், செப்பனிட வேண்டுகிறேன்

  அன்புடன்
  திகழ்

  பதிலளிநீக்கு
 10. சிறுசிறு துளிகள். சில்லென காற்று.
  சின்னதாய் ஒருகுளம். மங்கை.
  குறுகுறுப் பூட்டும் குதூகலப் புற்கள்.
  குடையடிக் கீழமர்ந் தநாம்.
  துறுதுறு கைகள் தடவிட, நரம்புத்
  துடித்திடும் கிடாருடை மேனி
  "பொறுபொறு" என்றாய். பூக்களை உதறிப்
  பொழிந்திட, நனைத்தது மழைநீர்.

  பதிலளிநீக்கு
 11. //வையகம் முழுதும் ஆண்டுவந் தனரே
  வண்டமிழ் பேசிடும் மக்கள்....

  பொய்யகம் படைத்த ஆரியர் வரவால்
  புகழ்நிலம் அற்றனர் இன்றோ//

  சரித்திரம் முழுதும் ஆழ்ந்துநன் றாய்ந்து
  ...சரியென தேர்ந்திடும் செய்தி
  விரித்ததை விவரித் திடுவத னுண்மை
  ...விழிப்புடன் திருந்திட உதவும்
  வெறுப்புடன் உணர்ச்சி வசப்படு மக்கள்
  ...வேதனைக் குட்படு வாரே
  பொறுத்தவர் உலகை வழிநடத் திடுவார்
  ...பெருமகிழ்ச் சியுமவர் பெறுவார்.

  பதிலளிநீக்கு
 12. /சிறுசிறு துளிகள். சில்லென காற்று.
  சின்னதாய் ஒருகுளம். மங்கை.
  குறுகுறுப் பூட்டும் குதூகலப் புற்கள்.
  குடையடிக் கீழமர்ந் தநாம்.
  /

  அருமை வசந்து அவர்களே

  பதிலளிநீக்கு
 13. /வெறுப்புடன் உணர்ச்சி வசப்படு மக்கள்
  ...வேதனைக் குட்படு வாரே
  பொறுத்தவர் உலகை வழிநடத் திடுவார்
  ...பெருமகிழ்ச் சியுமவர் பெறுவார்./

  உண்மைதான்

  பதிலளிநீக்கு
 14. வல்லவர் கோடி வையகத் திலுண்டு
  வளர்த்திடு திறமையை நாளும்
  நல்லதைச் செய்தால் நன்மைகள் கோடி
  நடந்திடும் நம்பிடு தோழா
  அல்லதை ஒழிக்க‌ அகிலமும் செழிக்க‌
  அன்பினைப் பொழிந்திடு நாளும்
  கல்வியைக் கொண்டு கண்களைத் திறந்து
  களைகளை அழிந்திடு நண்பா

  பதிலளிநீக்கு
 15. //அந்தியு மல்ல ஆதியு மல்ல‌
  அன்பிலே இருக்கிற தம்மா//

  புகழுரை இல்லை: பிறமொழி யில்லா
  திகழ்தரும் பாவெல்லாந் தேன்.

  தலைப்பினை உள்வைத்துச் சொல்லாமல் சொல்வார்
  மலைப்போம் மகிழ்ச்சி யென.

  //கண்ணிருந் துமிங்கே குருடராய்ப் போன‌
  கதையினைக் கேட்டவ ருண்டோ ?//

  வாய்ப்பிருந் தும்முலகின் நோய்ப்பிடித் தும்மிருக
  மாய்ப்பறந் தோமின்பந் தேடி.

  //கல்வியைக் கொண்டு கண்களைத் திறந்து
  களைகளை அழிந்திடு நண்பா//

  செல்வாக்கும் சில்லறையும் தேடிடும் சந்ததிக்கு
  நல்வாக்கு நல்குந் திகழ்.

  பதிலளிநீக்கு
 16. பொன்நிற மேனி பூந்தளிர் தேகம்

  பார்த்ததும் பிடித்திடும் அவளை

  சின்ன‌மும் ம‌ற‌க்கும் சித்த‌மும் க‌ல‌ங்கும்

  சிற்ப‌மாய் நினைத்திட‌ வைக்கும்

  அன்ன‌மும் ந‌டையில் அவ‌ளிட‌ம் அஞ்சும்

  ஆடையும் அவ‌ளிட‌ம் கெஞ்சும்

  ம‌ன‌த்திலே இன்னு மாயிர‌ம் தோன்றும்

  ம‌னைவியாய் அடைந்திட‌ வேண்டும்

  பதிலளிநீக்கு
 17. /பாவெல்லாந் தேன்./
  /மலைப்போம் மகிழ்ச்சி யென/
  /சந்ததிக்கு நல்வாக்கு/

  அய்யா த‌ங்க‌ளின் பாக்க‌ளைப் ப‌டிக்கையில் பைந்த‌மிழும் ப‌வ‌னி வ‌ருவ‌தைக் க‌ண்டேண்.

  அடியேன் சிறுவ‌ன்
  அய்யா த‌ங்க‌ளை வாழ்த்த‌ என்னிட‌ம் வார்த்தைக‌ள் இல்லை.

  த‌மிழைக் க‌ற்றுக் கொண்டிருக்கும் மாண‌வ‌ன் ம‌ட்டும‌ல்ல, த‌மிழை வாசிக்கும் நேசிக்கும் சுவாசிக்கும் அன்ப‌ன்

  அன்புட‌ன்
  திக‌ழ்

  பதிலளிநீக்கு
 18. காதலே கவலை போக்கிடும் மருந்தாம்

  கமகமக் கும்சுவை விருந்தாம்

  காதலே மக்கள் வணங்கிடும் இறையாம்

  கைதியாக் கிடும்மனச் சிறையாம்

  காதலே உள்ளம் பேசிடும் மொழியாம்

  கடவுளை அடைந்திடும் வழியாம்

  காதலிப் போமே ஒவ்வொரு கணமும்

  காதலால் இணைந்துநா மிருப்போம்

  பதிலளிநீக்கு
 19. வாய்ப்பிருந் தும்முலகின் நோய்ப்பிடித் தும்மிருக
  மாய்ப்பறந் தோமின்பந் தேடி


  எவ்வளவு எளிமையாகச் சொல்லி வீட்டீர்கள்

  வாழ்த்துகளும் நன்றிகளும் அய்யா

  பதிலளிநீக்கு
 20. திகழ்,
  பாக்கள் அருமை. வாழ்த்துக்கள்.

  //ம‌ன‌த்திலே இன்னு மாயிர‌ம் தோன்றும்
  ம‌னைவியாய் அடைந்திட‌ வேண்டும்//

  அப்படியா? சீக்கிரம் அடைய [?] வாழ்த்துக்கள்.

  உண்மையில் எழுசீர் மண்டிலம் கொஞ்சம் பயமுறுத்தியது. இங்கிருக்கும் பாக்கள் எனக்கு விளக்கமாய் அமைந்தன.நன்றி நானும் எழுதுகிறேன்.

  பதிலளிநீக்கு
 21. வேனிற் காலம்

  வெள்ளையாய் வீசும் வெய்யிலின் தாக்கம்
  வியர்வையில் நனைந்திடும் மக்கள்
  சுள்ளெனக் குத்தும் சூரியக் கதிரால்
  சோர்வினில் துவண்டிடும் மாக்கள்
  முள்ளெனச் சொல்பே ராசையுங் கொண்ட
  முயன்றிடார் வாழ்வைப் போல
  மெல்லவே நகர்ந்து நோய்ப்பல தந்து
  மிரட்டியே விலகிடும் நாட்கள்.

  பதிலளிநீக்கு
 22. அவனடிமை சொன்னது…  சரித்திரம் முழுதும் ஆழ்ந்துநன் றாய்ந்து
  ...சரியென தேர்ந்திடும் செய்தி
  விரித்ததை விவரித் திடுவத னுண்மை
  ...விழிப்புடன் திருந்திட உதவும்
  வெறுப்புடன் உணர்ச்சி வசப்படு மக்கள்
  ...வேதனைக் குட்படு வாரே
  பொறுத்தவர் உலகை வழிநடத் திடுவார்
  ...பெருமகிழ்ச் சியுமவர் பெறுவார்.  தங்கள் கருத்தோடு உடன்படக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆயினும் முழுமையாக உடன்படுவதற்கில்லை. வரலாற்றெங்கனும் நோக்கின் இந்தியா முழுதும் முற்காலத்தில் தமிழர்களே இருந்தனர் என்பதும் கைபர்கோளன் கனவாய் வழியாக ஆடு, மாடு மேய்ப்பராக வந்தவர்களே ஆரியர்கள் என்பதும் வரலாறு. தமிழர்களாக முற்காலத்தில் விளங்கியவர்கள் தெலுங்கராகவும், கன்னடராகவும், மலையாளராகவும், துளுவராகவும் பிரிந்து சிதைவதற்கு ஆரிய வருகையே முழுமுதற் காரணம்.  நெஞ்சினில் மறத்தை நட்டுவ ளர்த்தும்
  நேர்மையின் வழிதனில் சென்ற
  மஞ்சினை ஒத்த வண்டமிழ் மக்கள்
  மானமே உயிரெனக் கொண்டு
  விஞ்சிய கல்வி மிகுப்புகழ் செல்வம்
  விளங்கிட பாரினில் முந்நாள்
  அஞ்சிய பேர்கட் கருள்மழை பொழிந்தே
  அழகுற வாழ்ந்தனர் நன்றாய்

  காய்ச்சிய இரும்பைக் கைதனில் எடுத்துக்
  கண்முனம் நேரெதிர் நன்று
  பாய்ச்சிட வரினும் பகையெனக் கருதாப்
  பாங்குடன் நெஞ்சினை நிமிர்த்தும்
  மாட்சிமை படைத்த தமிழரின் வாழ்வில்
  வளர்ச்சியைக் கண்டுபொ றுக்கா
  ஏச்சுடை பலர்தம் இரண்டகப் போக்கால்
  இடர்பல உற்றனர் கண்டீர்!

  செந்தமிழ் அழிப்பைத் திறம்பட புரிந்தால்
  சிதைகுவர் தமிழரென் றாங்கே
  வந்தவர் எண்ணி வடமொழி புகுத்தி
  வளர்தமிழ் சிதைத்தனர் நன்றாய்
  இந்தபே ரிடரால் கன்னடம் தெலுங்கோ(டு)
  இன்மலை யாளமும் தோன்ற
  முந்தைய தமிழர் கன்னடர் தெலுங்கர்
  முகிழ்மலை யாளரும் ஆனார்!

  எஞ்சிய தமிழர் இன்றமிழ் வளர்ப்பை
  இடையறா தியற்றிய தாலே
  நஞ்சினை முறிக்கும் மூலிகை அன்ன
  நறுந்தமிழ் வளர்ந்ததென் றாலும்
  அஞ்சிடும் வகையில் ஆங்கில வரவால்
  அருந்தமிழ் அழிவதும் நன்றோ?
  எஞ்சிய தமிழர் தமிங்கில ரானால்
  எப்படி வாழ்ந்திடும் தமிழும்?

  கனித்தமி ழோடு பலமொழிச் சொற்கள்
  கலந்துகி டப்பது கண்டு
  தனித்தமி ழாளர் தணிந்திடாப் பற்றால்
  தடுத்திட முனைந்தனர் அஃதை
  நனிமிக நெருங்கி ஏற்றிடல் வேண்டும்
  ஏற்றுந டப்பதி னாலே
  இனித்தமிழ் வாழும் தமிழரும் வாழ்வர்
  இவ்வுல கேற்றிடு மாறே!

  பதிலளிநீக்கு
 23. திகழ் மற்றும் வசந்த் இருவரின் பாக்களும் அருமை. அருமை. வசந்த் அவர்களின் பாவின் இரண்டாம் வரியின் இறுதிச்சீர் ஓரசைச்சீராக இருக்கிறதே! திருத்துமாறு வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 24. திகழ் சொன்னது…

  பொன்நிற மேனி பூந்தளிர் தேகம்

  பார்த்ததும் பிடித்திடும் அவளை

  சின்ன‌மும் ம‌ற‌க்கும் சித்த‌மும் க‌ல‌ங்கும்

  சிற்ப‌மாய் நினைத்திட‌ வைக்கும்

  அன்ன‌மும் ந‌டையில் அவ‌ளிட‌ம் அஞ்சும்

  ஆடையும் அவ‌ளிட‌ம் கெஞ்சும்

  ம‌ன‌த்திலே இன்னு மாயிர‌ம் தோன்றும்

  ம‌னைவியாய் அடைந்திட‌ வேண்டும்
  அழகு. வாழ்க திகழ் அவர்களே!

  {{{{{{அன்ன‌மும் ந‌டையில் அவ‌ளிட‌ம் அஞ்சும்

  ஆடையும் அவ‌ளிட‌ம் கெஞ்சும்}}}}}}}

  அன்னமும் நடையில் அவளிடம் அஞ்சும் -சரி.

  ஆடை ஏன் அவளிடம் கெஞ்ச வேண்டும்???? கட்டச்சொல்லி கெஞ்சுகிறதா? அல்லது கட்டவேண்தாமென்று கெஞ்சுகிறதா?

  சும்மா கிண்டலாகத்தான் கேட்டேன். தவறாகக் கருதவேண்டாம்.

  பதிலளிநீக்கு
 25. வாய்ப்பிருந் தும்முலகின் நோய்ப்பிடித் தும்மிருக
  மாய்ப்பறந் தோமின்பந் தேடி  அவனடியாரின் இப்பா மிகச்சிறந்த அறிவுரையாகவும், அழகோவியமாகவும் விளங்குகிறது. வாழ்க அய்யா!

  பதிலளிநீக்கு
 26. உமா சொன்னது…

  வேனிற் காலம்

  வெள்ளையாய் வீசும் வெய்யிலின் தாக்கம்
  வியர்வையில் நனைந்திடும் மக்கள்
  சுள்ளெனக் குத்தும் சூரியக் கதிரால்
  சோர்வினில் துவண்டிடும் மாக்கள்
  முள்ளெனச் சொல்பே ராசையுங் கொண்ட
  முயன்றிடார் வாழ்வைப் போல
  மெல்லவே நகர்ந்து நோய்ப்பல தந்து
  மிரட்டியே விலகிடும் நாட்கள்.


  {{{{{{{முள்ளெனச் சொல்பே ராசையுங் கொண்ட
  முயன்றிடார் வாழ்வைப் போல}}}}}}}  அழகிய உவமை. வாழ்த்துக்கள் உமா அவர்களே!

  பதிலளிநீக்கு
 27. //////வெள்ளையாய் வீசும் வெய்யிலின் தாக்கம்//////


  வெள்ளையாய் --- என்பதற்கு எப்படிப் பொருள் கொள்வது???

  கள்ளங்கவட மற்றதாய் எனப்பொருள் கொள்வதா????
  கலப்பற்றதாய் எனப்பொருள் கொள்வதா???
  ஒன்றுமற்றதாய் எனப்பொருள் கொள்வதா???
  வெள்ளை வெளேரென்று எனப்பொருள் கொள்வதா???

  உமா அவர்களே விளக்கம் தரவேண்டும்.

  பதிலளிநீக்கு
 28. பறையடி! எதையும் பகுத்தறி! எவர்க்கும்
  பயனிலாக் காரியம் சாய்த்து!
  உறைகிழி! வாளை உருவிடு! தீதை
  உகுத்துபின் செங்குளம் போர்த்து!
  கறைதுடை! காலம் கவிழ்த்திடு! கணக்கைக்
  கலைத்திடத் திறனுடல் வாய்த்து!
  கரைஉடை! கழுவைத் தகர்த்திடு! திமிறும்
  கரம்புஜம் இரும்பெனக் கோர்த்து!

  பதறிடு! ஒருசொல் பழியென ஒருவன்
  பகர்ந்திடக் கடலென வேர்த்து!
  கதறிடு! கவிதைப் பிழையெனக் கவிஞர்
  கருத்திடத் தமிழினைச் சேர்த்து!
  உதறிடு! உள்ளம் பகையெனப் பரிசை
  உலகினர் கொடுப்பினும் மறுத்து!
  சிதறிடு! சிற்றில் நிரப்பிடும் மழலைச்
  சிரிப்பினில் துயர்களை மறந்து!

  அணிந்திடு! அவரைக் கிழிசலாய்த் தீயர்
  அடங்கிடப் போரினில் வீழ்த்து!
  துணிந்திடு! வெட்டித் துடைபிள! வீறித்
  திசைநனைக் குருதியில் குளித்து!
  தணிந்திடு! அசுரம் வெடித்திடும் அதன்பின்
  தவறுயிர்ப் பறிப்பென உணர்ந்து!
  கனிந்திடு! காணும் யாவுமே காட்சி
  காண்பவர் நடிப்பவர், நிறைவு!

  நாங்களும் புரட்சியா எழுதுவோம்ல...!!!

  ***

  திருத்திய பதிப்பு ::

  சிறுசிறு துளிகள். சில்லென காற்று.
  சின்னதாய் ஒருகுளம். மங்கை.
  குறுகுறுப் பூட்டும் குதூகலப் புற்கள்.
  குடையடிக் கீழமர்ந் தேநான்,
  துறுதுறு கைகள் தடவிட, நரம்புத்
  துடித்திடும் கிடாருடை மேனி
  "பொறுபொறு" என்றாய். பூக்களை உதறிப்
  பொழிந்திட, நனைத்தது மழைநீர்.

  பதிலளிநீக்கு
 29. வசந்தரின் புரட்சிப்பா அருமை அருமை. திருத்திய பாவிம் அருமை. வாழ்க.

  //////கதறிடு! கவிதைப் பிழையெனக் கவிஞர்
  கருத்திடத் தமிழினைச் சேர்த்து!//////

  இவ்வரி விளங்கவில்லை. எதிர்மறையாக எனக்குப் பொருள் தோன்றுகிறது. தங்கள் கருத்தென்ன?

  பதிலளிநீக்கு
 30. //ஆடை ஏன் அவளிடம் கெஞ்ச வேண்டும்???? கட்டச்சொல்லி கெஞ்சுகிறதா? அல்லது கட்டவேண்தாமென்று கெஞ்சுகிறதா?

  கட்டச் சொல்லிக் கெஞ்சுகிறதா... இல்லை, கழட்டச் சொல்லிக் கொஞ்சுகிறதா என்று கேட்டிருப்பின் இன்னும் கில்கில்ப்பாக இருந்திருக்கும் என்று வேண்டி சொல்லிக் கொள்கிறேன். :)

  பதிலளிநீக்கு
 31. ||தந்திர மல்ல தாயமு மல்ல‌
  திறவுகோல் நம்மிட மம்மா ||

  எளிமையான விளக்கம், திகழ். சொல்லாடல் பிரமாதம்.

  பதிலளிநீக்கு
 32. /சொல்லாடல் பிரமாதம்/

  நன்றி அப்பாதுரை அவர்களே

  பதிலளிநீக்கு
 33. /அன்ன‌மும் ந‌டையில் அவ‌ளிட‌ம் அஞ்சும்

  ஆடையும் அவ‌ளிட‌ம் கெஞ்சும்
  /

  இதற்குத் தான் இந்த மாதிரியான பாக்களை எழுத‌க் கூடாது என்ப‌து


  போதும் அப்பா :))))))))))))))

  பதிலளிநீக்கு
 34. /பறையடி! எதையும் பகுத்தறி! எவர்க்கும்
  பயனிலாக் காரியம் சாய்த்து!/

  /பதறிடு! ஒருசொல் பழியென ஒருவன்
  பகர்ந்திடக் கடலென வேர்த்து!/

  அருமை வசந்து

  அனல் தெறிக்கிறது உங்களின் பாக்களைப் படிக்கும் பொழுது


  /நாங்களும் புரட்சியா எழுதுவோம்ல...!!!/

  காதல் என்றாலும் புரட்சி என்றாலும்

  உங்களுக்கு கைவந்த(எழுத்தில்) கலை ஆயிற்றே


  வாழ்த்துகள் நண்பரே

  பதிலளிநீக்கு
 35. /வெள்ளையாய் வீசும் வெய்யிலின் தாக்கம்
  வியர்வையில் நனைந்திடும் மக்கள்
  சுள்ளெனக் குத்தும் சூரியக் கதிரால்
  சோர்வினில் துவண்டிடும் மாக்கள்
  /

  அற்புதம் உமா அவர்களே

  கோர்வையாக வார்த்தைகள் வந்து விழுந்து உள்ளன.

  பதிலளிநீக்கு
 36. நன்றி அமுதா அவர்களே

  /கனித்தமி ழோடு பலமொழிச் சொற்கள்
  கலந்துகி டப்பது கண்டு
  தனித்தமி ழாளர் தணிந்திடாப் பற்றால்
  தடுத்திட முனைந்தனர் அஃதை
  நனிமிக நெருங்கி ஏற்றிடல் வேண்டும்
  ஏற்றுந டப்பதி னாலே
  இனித்தமிழ் வாழும் தமிழரும் வாழ்வர்
  இவ்வுல கேற்றிடு மாறே!
  /

  கண்டிப்பாக‌

  பதிலளிநீக்கு
 37. வெள்ளை வெளேரென்ற பொருளிலேயே எழுதினேன்.
  அந்தியின் மஞ்சள் வெயில் இனிமையானது.கோடையின் கொளுத்தும் வெயில் வெண்மையாய் தோன்றும் என்பதே காரணம். முயன்று குழப்பாமல் எழுதுகிறேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 38. வசந்திற்கும் திகழ் அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.
  அருமையான பாக்கள்.

  பதிலளிநீக்கு
 39. உமா சொன்னது...

  {{{{{{{முயன்று குழப்பாமல் எழுதுகிறேன்.}}}}}


  குழப்பமெல்லாம் ஒன்றுமில்லை. கோடை வெய்யிலை வெம்மை என்றோ வெக்கை என்றோ உரைப்பதே வழக்கமாக உள்ளது. ஆதலால்தான் அப்படிக் கேள்வியெழுப்பினேன்.

  பதிலளிநீக்கு
 40. காற்றினைப் பிடித்துக் கைக்குளே அடைத்து
  காத்திடல் கூடுமோ? சிறிய
  ஊற்றது பெருகி ஆறென ஓடி
  உயிர்களுக் குறுதுணை யாகும்
  தோற்றிடத் தோல்வி திடமனத் தோடு
  துவண்டிடா துழைப்பவர் தம்மை
  போற்றிடும் உலகம் பொருளதும் சேரும்
  புகழுடன் வாழ்திடு வாரே!

  பதிலளிநீக்கு
 41. நாட்டிலே உள்ள நலங்களும் கோடி
  நாமதை நன்குணர்ந் திங்கே
  காட்டினை வளர்த்தே ஆற்றினை இணைத்து
  கற்றினை மாசற காத்தே
  வீட்டினில் துவங்கி வீதியில் எங்கும்
  விளக்கினில் சூரிய ஆற்றல்
  கூட்டிட வெப்பம் குறைந்திடும் புவியும்
  குளிர்ந்துயிர் வாழ்ந்திடும் இனிதாய்.

  பதிலளிநீக்கு
 42. {{
  /நாங்களும் புரட்சியா எழுதுவோம்ல...!!!/
  காதல் என்றாலும் புரட்சி என்றாலும் உங்களுக்கு கைவந்த(எழுத்தில்) கலை ஆயிற்றே
  }}

  ”நண்பர்களே: எப்போதும் காதல், காமம், தமிழ், தமிழரினம், புரட்சி, அறிவுரை, இயற்கை என இவைகளை மட்டுமே பாடிக் கொண்டிருந்தால் போதுமா? வேறு எவ்வளவோ சுவையான, சிந்தனைக்குரிய செய்திகள், நிகழ்வுகள் உள்ளனவே!” என்று கேட்க நினைத்தேன்.

  அதற்குள் வந்தது உமா அவர்களின் ”மாசற...”ப்பா பதிப்பு:

  //...காற்றினை மாசறக் காத்தே...//

  துவளாத முயற்சியின் அவசியத்தையும், மாசறுத்தலின் அவசியத்தையும் பாடும் பாக்கள் அருமை.. நன்றி உமா அவர்களே.


  மாசறுத் திடல்நம் கடனுரைத் தார்ந(ம்)மு
  மாசழக் கற்றதோர் பா.

  பதிலளிநீக்கு

 43. சடசட வென்று பொடிபடுங் கூரை
  சரிந்திடும் பலகுர லடியில்
  நடுநடுங் கிடவே நாதியற் றவரும்
  ...நமனிடம் போரிடும் வேளை
  சடுதியில் சூறை யாடுவோர் செயலைத்
  ...தடுத்திடா தேயருள் புரிவாய்
  கொடுத்திடு அவர்வாழ்ந் திடவது தேவை
  ...குன்றுறை குமரவே ளரசே!

  பதிலளிநீக்கு
 44. மிக்க நன்றி அவனடிமையாரவர்களே.

  பதிலளிநீக்கு
 45. அவனடிமை சொன்னது…


  சடசட வென்று பொடிபடுங் கூரை
  சரிந்திடும் பலகுர லடியில்
  நடுநடுங் கிடவே நாதியற் றவரும்
  ...நமனிடம் போரிடும் வேளை
  சடுதியில் சூறை யாடுவோர் செயலைத்
  ...தடுத்திடா தேயருள் புரிவாய்
  கொடுத்திடு அவர்வாழ்ந் திடவது தேவை
  ...குன்றுறை குமரவே ளரசே!  அவனடியாரின் எழுசீர் மண்டிலம் அருமை. நன்றிகள் அய்யா!

  பதிலளிநீக்கு
 46. ********************* 2010-04-15
  /அஞ்சிடும் வகையில் ஆங்கில வரவால்
  அருந்தமிழ் அழிவதும் நன்றோ?
  எஞ்சிய தமிழர் தமிங்கில ரானால்
  எப்படி வாழ்ந்திடும் தமிழும்?/

  அமுதா அவர்களை கொஞ்சம் சீண்டிவிட்டால் பாமழையாகக் கொட்டுகிறதே! :)

  ஆனால் அச்சம் ஏன் ஐயா ? தமிழுக்கு அழிவா ?
  ஒரு பக்கம் அமுதென்கிறோம் இன்னொரு பக்கம் அழிந்துவிடும் என்று அஞ்சுகிறோம். சுவைக்கு மட்டுமல்ல அமுது. தான் சாகாதிருப்பது மட்டுமல்ல, தன்னை உண்டவனை சாகாதிருக்க வைப்பதும் தான் அமுது அல்லவா.

  நான் தமிழை ’முழுமை’யின் முதல் வெளிப்பாடு என்றே கருதுகிறேன். முழுமைப் பொருளுக்கு சேதமும் இல்லை, சாய்வும் இல்லை.

  இதற்கு சான்று நீங்கள் தான். உங்களைப் போல் பலப்பல தூய தமிழ் உள்ளங்கள் தான். இன்றும் இருக்கிறார்கள். இனியும் வருவார்கள். நாம் தமிழ் அழிந்துவிடுமோ என்று கவலைப் படத் தேவையேயில்லை.

  ’நம் வாழ்நாளில் முடிந்தவரை தமிழென்னும் அமுதக் கடலில் முங்கி முழுமையின் ஒரு பகுதியையேனும் அனுபவிப்போமே என்ற துடிப்பு மட்டும்தான் வேண்டுமே தவிர நம்மால் தமிழ் காப்பாற்றப் படவேண்டும் என்ற நினைப்பே எனக்கு வரக்கூடாது’ என்பது தான் என்னுடைய வழிபாடு.

  உங்கள் தொண்டு, தமிழநம்பி அனைய வேறு பல தமிழ் அறிஞர்களின் தொண்டு - ’தொண்டு செய்கிறோம்’ என்ற நினைக்கவே நேரம் இல்லாமல் பலகாலம் தொடரட்டும். அதற்கு அற்புத மகாகவி பாரதி, பாவேந்தர் பாரதிதாசன் போன்ற தமிழ்ப் பேரொளிகள் எல்லோரும் வழிகாட்டட்டும். நல்வாழ்த்துகள்.

  மிக்க நன்றி ஐயா.

  தமிழினை அமுதென் றவரொரு போதும்
  .....தற்பெரு மைவிரும் பாதார்
  அமுதினுக் கென்றும் அழிவிலை அன்றோ
  .....அவரிதை அறிந்திடு வாரே
  தமிழரின் தனித்தன் மைப்பெரும் பணிவே
  .....தம்புகழ் பாடிடு வாரோ
  ஞமலியர் குரைத்தால் கல்லெறி வாரோ
  .....நாட்பட நலிந்திடு வாரோ

  பதிலளிநீக்கு
 47. திரு அவனடிமையாரவர்களுக்கு,

  //சடுதியில் சூறை யாடுவோர் செயலைத்
  ...தடுத்திடா தேயருள் புரிவாய்
  கொடுத்திடு அவர்வாழ்ந் திடவது தேவை//

  அற்புதம். பகைவனுக்கும் அருளும் நெஞ்சல்லவா இப்படி விழையும். மிக்க நன்று. உண்மையும்.

  உண்ர்ச்சிப் பிழம்பாக உள்ளது தங்கள் தமிழமுதக் கருத்துகள். கருத்தை படித்தப்பின் பாவை படிக்க வார்த்தையில் வடிக்க இயலாத பெருமிதம் நெஞ்சில் நிறைகிறது.

  பதிலளிநீக்கு
 48. நன்றி உமா. உங்கள் மின்னடையாளப் புகைப்படத்தில் உள்ளவரை விடவா பாடிவிட முடியும் ?
  ***
  பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே
  பகைவனுக்கருள்வாய்..
  *** என்று தொடங்கும் பாவை முழுமையாகப் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

  நேரம் கிடைத்தபோது இந்தப் பதிவை படியுங்கள்:
  http://kabeeran.blogspot.com/2009/02/blog-post_22.html - நம் நாட்டின் மகான்கள் சாதாரணப்பட்டவர்கள் இல்லை என்பது நன்றாக விளங்கும்.

  நமக்கு இவ்வாழ்வில் உள்ள (நமக்குள் நிகழும்) சறுக்கல்கள் பலப் பல. அதனிடையில் சிறிதேனும் இவர்களை நினைவில் கொண்டு இவர் வழி சிந்திக்கவேண்டாமா ?

  இதனால்தான் கவியுள்ளம் படைத்தவரின் கடமையை நினைவூட்ட அகரத்தார் இப்படி விண்ணப்பித்தாரோ ?:
  //கவிஞன் என்பவன் தான் வாழும் காலத்தோடு ஒன்றி அவன் வாழ்ந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளையும், அக்காலத்திற் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றியும் பாடுதல் இன்றியமையாத ஒன்றாகும்.//

  பதிலளிநீக்கு
 49. அய்யா மிக்க நன்றி. தாங்கள் குறிப்பிட்டுள்ள கபிரன்பன் அவர்களின் தளம் மிக அருமை. [என்ன வென்றுத்தெரியவில்லை என்னால் முதல் பக்கத்தைக்கடந்து உள் நுழைய முடியவில்லை. என் கணினியிலும் சில தவறுகள் இருப்பதால் மீண்டும் முயல்கிறேன். ] தொடர்ந்து படிக்கிறேன். அறிமுகத்திற்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 50. அவனடிமை சொன்னது…

  ’நம் வாழ்நாளில் முடிந்தவரை தமிழென்னும் அமுதக் கடலில் முங்கி முழுமையின் ஒரு பகுதியையேனும் அனுபவிப்போமே என்ற துடிப்பு மட்டும்தான் வேண்டுமே தவிர நம்மால் தமிழ் காப்பாற்றப் படவேண்டும் என்ற நினைப்பே எனக்கு வரக்கூடாது’ என்பது தான் என்னுடைய வழிபாடு.

  அவனடியாரின் இக்கருத்துக்களோடு உடன்படுகின்றேன். சில நேரங்களில் உணர்ச்சி மிகுதியால் என்ன செய்கின்றோம் என்பது தெரியாமல் செய்துவிடுகின்றேன்.

  அக்கருத்தையொட்டிய தங்களின் பா அருமை. வாழ்க. வளர்க.

  பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com