திங்கள், 30 ஜூன், 2008

பாடம்12 அளவியல் வெண்பா!

நான்கடிகளைக் கொண்டது அளவியல் வெண்பாவாகும். மூவடி முக்கால் அளவியல் வெண்பா என்கிறது தொல்காப்பியம்.

சிந்தியல் வெண்பா முதற்கொண்டு பின்வரும் அனைத்துவெண்பா வகைகளும் நேரிசை இன்னிசை என இருவகைப்படும்.

நேரிசை அளவியல் வெண்பா:-

நாலடி வெண்பாவில் முதல் இரண்டடிகளின் எதுகை பெற்ற தனிச்சீரை இரண்டாமடியின் ஈற்றில் (அதாவது 8ம் சீரில்) பெற்று வருவது நேரிசை வெண்பாவாகும். (ஆக நேரிசைக்கு இவ்வோர் விதியைத் தவிர வேறு விதிகள் கிடையாது.ஆதலால் இவ்விதியை மீறும் ஏனைய வடிவங்கள் இன்னிசையாக் கொள்ளப்படும்)

காட்டு:-

கோடிக் கவிஞருள் கோமகளே! நீயென்னைத்
தேடிக் களைப்புறவுஞ் செய்வேனோ? -நாடியெனைக்
கோத்தள்ளிக் கொஞ்சக் குறிப்பொன் றுரைப்பதெனில்
பாத்தென்றல் மாணாக்கன் பார்! -அகரம்.அமுதா

இவ்வெண்பாவைக் கவனித்தீரா? கோடி தேடி என்னும் அடியெதுகைக்குத் தனியெதுகை நாடி என வந்தமையால் இது நேரிசை வெண்பா.

(1,5,8ம் சீர்களில் எதுகையெடுத்து வந்தால் மட்டும் பொதாது. 9மற்றும் 13ம் சீர்களிலும் எதுகையமைய வேண்டும். 1,5,8 ம் சீர்களில் வந்த எதுகையே 9மற்றும்13ம் சீர்களில் வரவேண்டும் என்பதில்லை. வேறெதுகையும் பெற்றும் வரலாம். எதுகை பெற்று வரவேண்டும் என்பதே விதி.)

(1,5,8ல் எதுகை பெற்று 9மற்றும் 13ல் எதுகைபெற வில்லையெனில் அது இன்னிசைவெண்பாவெனக் கொள்ளப்படும்.)

இன்னிசை அளவியல் வெண்பா!

இன்னிசை வெண்பாக்கள் பலவகைப்படும்.

1-நாலடியிலும் ஒரேயெதுகையைப் பெற்று வருதல் (தனிச்சொல் மட்டும் இரா)
2-பல எதுகைகளைப் பெற்று வருதல்
3-அடிதோறும் தனிச்சீர் பெற்று வருதல்
4-இரண்டாமடியிலும் மூன்றாமடியிலும் தனிச்சீர் பெற்று வருதல்
5-மூன்றாம் அடியில் தனிச்சீர் பெற்று வருதல்

போன்றவை இன்னிசை வெண்பாக்களாகும்.

காட்டு:-

இன்னாமை வேண்டின் இரவெழுக -இந்நிலத்து
மன்னுதல் வேண்டின் இசைநடுக -தன்னொடு
செல்லவது வேண்டின் அறஞ்செய்க -வெல்வது
வேண்டின் வெகுளி விடல். -நான்மணிக்கடிகை.

இது அடிதோறும் தனிச்சீர் பெற்றமையால் இன்னிசையானது.

கள்வமென் பார்க்குத் துயிலில்லை காதலிமாட்
டுள்ளம்வைப் பார்க்குந் துயிலில்லை ஒண்பொருள்
செய்வமென் பார்க்குந் துயிலில்லை அப்பொருள்
காப்பவர்க்கும் இல்லை துயில்! -நான்மணிக்கடிகை.

பல எதுகை பெற்று வந்தமையால் இன்னிசையானது.

மேலும் பல இன்னிசை அளவியல் வெண்பாக்களை அறிய இவ்விடம் கிளிக் செய்க!

குறிப்பு:-

1,5,8ம் சீர்களில் ஓரெதுகையும் 9மற்றும்13ல் ஓரெதுகையும் பெற்றோ அல்லது 1,5,8,9மற்றும்13ம் சீர்கள் ஒரே எதுகையான் அமைந்தோ வருவது நேரிசையாகும். இவ்விதிக்கு மாறுபட்ட யாவும் இன்னிசை வெண்பா வகை என்றே அறுதியிட்டுச் சொல்லிவிடலாம். ஆகையால் நேரிசை வெண்பாவிற்கான விதியை நன்கு தெரிந்து நினைவில் கொள்க.

ஒன்றைந்தோ டெட்டாம்சீர் உற்ற எதுகையெடுத்
தொன்பதாம் சீரும் பதின்மூன்றும் -நன்கெதுகை
கொண்டுவரின் நேரிசையாம்; கொள்ளாக்கால் மற்றவை
இன்னிசை என்றே இயம்பு! -அகரம்.அமுதா

நேரிசையென் பாரிதையே நேரிழையே! ஈற்றினில்
ஓரசையோ நாள்பிறப்போ ஓடிவரும் -ஓரடியில்
மோனை வரவேண்டும் மூன்றிரண்டில் நல்லெதுகை
தானமையச் சாற்றுதல்வேண் டும்! -பாரதிதாசன்

ஒன்றைந்தெட் டாகியசீர் ஒத்த எதுகையாய்
நின்றபதி மூன்றொன்பா னேரொத்து -நன்றியலு
நீடுசீர் மூவைந்தா நேரிசைவெண் பாவென்பர்
நாடுசீர் நாப்புலவர் நன்கு! -வீரசோழியம்

அகரம்.அமுதா

12 கருத்துகள்:

  1. நன்றி அமுதா. இந்த இலக்கணம் இது வரை புரிபடாமலே இருந்து வந்தது. விரிவான விளக்கத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. //
    1,5,8ம் சீர்களில் ஓரெதுகையும் 9மற்றும்13ல் ஓரெதுகையும் பெற்றோ அல்லது 1,5,8,9மற்றும்13ம் சீர்கள் ஒரே எதுகையான் அமைந்தோ வருவது நேரிசையாகும்.
    //
    1,5,8,9மற்றும்13ம் சீர்கள் ஒரே எதுகையான் அமைந்தும், அதற்கு மேலும், இதர சீர்கள் எதுகை பெற்றால், இன்னிசையா, நேரிசையா?

    ஒரு எதுகையாவது வர வேண்டுமல்லவா, இன்னிசையாக?

    இன்னாமை/இந்நிலம் : எதுகையா?
    அப்படியென்றால்,
    //இன்னாமை வேண்டின் இரவெழுக -இந்நிலத்து
    மன்னுதல் வேண்டின் இசைநடுக -தன்னொடு
    செல்லவது வேண்டின் அறஞ்செய்க -வெல்வது
    வேண்டின் வெகுளி விடல்.//
    இந்த இன்னிசைப்பாவில் - 'வேண்டின்' என்பதற்கு பதிலாக 'நில்வது' என்று வந்திருந்தால் அது நேரிசையாகிவிடும் அல்லவா?

    //நேரிசையென் பாரிதையே நேரிழையே! ஈற்றினில்
    ஓரசையோ நாள்பிறப்போ ஓடிவரும் -ஓரடியில்
    மோனை வரவேண்டும் மூன்றிரண்டில் நல்லெதுகை
    தானமையச் சாற்றுதல்வேண் டும்! //

    நேரிசையென் பாரிதையே - ஈற்றின் இறுதியில்
    ஓரசையோ நாள்பிறப்போ ஓடிவரும் -ஓரடியில்
    மோனை வரவேண்டும் மூன்றிரண்டில் நல்லெதுகை
    தானமையச் சாற்றுதல்வேண் டும்!
    -இப்படி மாற்றினால் நேரிசை சரியா?

    பதிலளிநீக்கு
  3. வாங்க சத்யா! அடுத்த வாரத்திலிருந்து ஈற்றடி வெண்பா விளையாட்டு இருக்கிறது. அதில் வந்து கலந்துகொள்ளுவேண்டுகிறேன் நன்றி!

    பதிலளிநீக்கு
  4. /////1,5,8,9மற்றும்13ம் சீர்கள் ஒரே எதுகையான் அமைந்தும் அதற்கு மேலும் இதர சீர்கள் எதுகை பெற்றால் இன்னிசையா நேரிசையா?/////

    நல்ல வினா ஜீ!

    1,5,8,9,13 சீர்கள் எதுகை அமைந்தும் அதற்கு மேலும் அடிதோறும் எதுகையமையுமாயின் அது இன்னிசையே! காரணம் நேரிசைக்கான ஓசை தனிச்சீரில் சற்றே தடைப்பட்டு பின் தொடர்ந்து செல்லும்.

    அடிதோறும் எதுகையெடுத்து வரும் வெண்பாவை ஓசையோடு படித்துப்பார்த்தால் தெரியும். ஒவ்வொரு தனிச்சீருக்கு முன்பும் ஓசை தடைப்பட்டு தனிச்சீரிலிருந்து தொடங்கும்.

    நேரியைப் பொருத்தவரை இத்தடை இரண்டாமடியின் இறுதிச்சீரில்தான் வரவேண்டும் என்று நம் முன்னோர் வகுத்து வைத்துள்ளனர்.

    அடிதோறும் ஓசை தடைபடுவதை இன்னிசையுள் இட்டுவிட்டனர் அவ்வளவே.

    நீங்கள் நேரிசை வெண்பாவை ஓசையோடு படித்துப் பாருங்கள். அதன் மர்மம் விளங்கும். விளங்கவில்லையாயின் மீண்டும் பின்னூட்ட மிடுக. விளக்கக் காத்துள்ளேன்.

    /////ஒரு எதுகையாவது வர வேண்டுமல்லவா இன்னிசையாக?////

    இந்த வினா எனக்கு விளங்கவில்லை.

    /////இன்னாமை/இந்நிலம் : எதுகையா?/////

    எதுகையே! எப்படி என்கிறீரா? 'ஙஞண நமன'- அதாவது இடையின எதுகை.

    //////இந்த இன்னிசைப்பாவில் - 'வேண்டின்' என்பதற்கு பதிலாக 'நில்வது' என்று வந்திருந்தால் அது நேரிசையாகிவிடும் அல்லவா?//////

    'வேண்டில்' என்பதற்குப் பதிலாக 'நில்வது' என்று வருமாயின் நேரிசையாகக் கொள்ளலாம். நேரிசையாகக் கொள்ளுங்கால் இன்னாமை வேண்டின் இரவெழுக -இந்நிலத்து என்ற சொற்றொடரில் தனிச்சீரைப் பிரிக்கும் (-)கோட்டை எடுத்துவிடல் வேண்டும்.

    ஆனால் தனிச்சீர் அடிதோறும் எடுத்துவரும் வெண்பாவை இன்னிசையில் தான் வைக்க வேண்டும். காரணம் தமிழ்ப் பாக்கள் நால்வகையும் இசையின் இடிப்படையில் இலக்கணம் வரையப்பட்டது. ஒரு குறிப்பிட்ட இசையில் கட்டுப்படுவதை நேரிசையென்றும் அவ்விசைக்குக் கட்டுப்படாமல் மீறியவற்றை இன்னிசையென்றும் வரையறுத்துள்ளனர்.

    ஒருவேளை சுப்புரத்தினம் அய்யா போன்ற இசையறிவு படைத்தவர்கள் இன்னும் அழகான எளிமையான விளக்கங்களை இசையாதாரத்தோடு தரக்கூடும். சுப்பு அய்யா அவர்கள் ஒரு வேளை இப்பின்னூட்டத்தைப்பார்க்குங்கால் விரிவாய் விளக்கங்களை அளிப்பார் எனக்கருதுகிறேன்.

    //////நேரிசையென் பாரிதையே நேரிழையே! ஈற்றினில்
    ஓரசையோ நாள்பிறப்போ ஓடிவரும் -ஓரடியில்
    மோனை வரவேண்டும் மூன்றிரண்டில் நல்லெதுகை
    தானமையச் சாற்றுதல்வேண் டும்!

    நேரிசையென் பாரிதையே - ஈற்றின் இறுதியில்
    ஓரசையோ நாள்பிறப்போ ஓடிவரும் -ஓரடியில்
    மோனை வரவேண்டும் மூன்றிரண்டில் நல்லெதுகை
    தானமையச் சாற்றுதல்வேண் டும்!
    -இப்படி மாற்றினால் நேரிசை சரியா?//////

    பாரதி தாசனுடைய அப்பாடல் நேரிசையில்தான் பாடப்பட்டுள்ளது. அதை மாற்றவே தேவையில்லை.

    ஒருவேளை தாங்கள் நேரிசையென் பாரிதையே நேரிழையே என்பதில் "நேரி நேரி" என்று ஓரடியில் இரண்டிடத்தில் வந்தமையால் குழம்பிவிட்டீரோ? அது போழிப்பு மோனை போன்று பொழிப்பெதுகை அவ்வளவே. அதில் குழப்பம் வேண்டாம்.

    பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின்
    பத்தினியின் கால்வாங்கித் தேய்!

    இப்பாடலைக் கவனியுங்கள். முதலடியின் எல்லா சீர்களும் எதுகை பெற்றுவந்துள்ளதல்லவா? ஆகையால் இதை முற்றெதுகை என்பர்.

    பதிலளிநீக்கு
  5. //பாரதி தாசனுடைய அப்பாடல் நேரிசையில்தான் பாடப்பட்டுள்ளது. அதை மாற்றவே தேவையில்லை.//
    1,5,8,9மற்றும்13ம் சீர்களில் ஏனோ, 4ஆம் சீரையும் சேர்த்துக் கொண்டேன், அதனால் அந்தக் குழப்பம்!

    ///////ஒரு எதுகையாவது வர வேண்டுமல்லவா இன்னிசையாக?////

    இந்த வினா எனக்கு விளங்கவில்லை.//

    அதாவது, 1,5,8,9மற்றும்13ம் ஆகிய எல்லா இடங்களிலும் எதுகை வராமல், 1,5 அல்லது 8,9 அல்லது 8,13 அல்லது, 9,13 - இவற்றில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே எதுகை வந்தால் (குறைந்த பட்சம்) அது, இன்னிசையா?
    எதுகையே வராமல், மோனைகள் மட்டும் இருந்தால் அது இன்னிசையும் அல்லாத வெண்பாவா?
    விளக்கங்களுக்கு நன்றிகள் மேடம்.

    பதிலளிநீக்கு
  6. இத்தனைக் கேள்விகளுக்கும் ஒரே பதிலைச் சொல்வதென்றால் 1,5,8,9,13 ம் சீர்களின் எதுகையை மீறும் அனைத்துமே இன்னிசையே! விதிவிலக்கு முற்றுமோனை.

    இன்னிசை வெண்பாவிற்கு எதுகை வரவேண்டும் என்ற கட்டாயமில்லை. மோனையும் அமையவேண்டும் என்ற கட்டாயமில்லை. செந்தொடையாகப் பாடினால் போதும்.

    செந்தொடையாகப் பாடும்போது பொருட்சுவை குன்றினால் கத்துக்குட்டிபோலிருக்கிறது என்று பிறர் கிண்டல் செய்வார்கள் பரவாயில்லையா?

    ஆகையால் இன்று இன்னிசை வெண்பாக்கள் எழுதும் அனைவருமே அடியெதுகை செய்தே எழுதுகிறார்கள் (தனிச்சீரை மட்டும் விட்டுவிடுவது) ஆனால் மோனை கண்டிப்பாக அமைப்பார்கள். (பொழிப்பு மோனை அல்லது ஒரூஉ மோனை அல்லதுமுற்றுமோனை)

    தற்காலத்தில் நேரிசை வெண்பாக்கள் எழுதுவதையே அனைவரும் விரும்புகிறார்கள். கௌரவமாகவும் கருதுகிறார்கள். ஆகையால் 1,5,8,9,13ம் சீர்களில் எதுகை அமைப்பதில் கவனமாயிருங்கள். முடியவில்லையா 8ம் சீராகிய தனிச்சீர் எதுகையை மட்டும் விட்டுவிட்டு அடியெதுகையைப்பின் பற்றவும். இல்லையென்றால் இவர் புதிதாக வெண்பா பாடவந்துள்ளார் போல் இருக்கிறது என்று நினைத்துவிடுவார்கள். கவனம்.

    பதிலளிநீக்கு
  7. புதிதாக வெண்பா படிக்க வந்தவர் கேட்கிறார்:-)
    //வெட்டெனவை மெத்தெனவை வெல்லாவாம் வேழத்திற்
    பட்டுருவுங் கோல்பஞ்சிற் பாயாது -நெட்டிரும்புப்
    பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
    வேருக்கு நெக்கு விடும்//
    பாரைக்கு/வேருக்கு : ஐகாரம்/உகரம் இனம் மாறுவதால், எதுகை இல்லையா?

    பதிலளிநீக்கு
  8. பிழை ஏதும் உளதா:?

    இன்சொல் இயம்பிட வாராதே துன்பமும்;
    நன்சொல் எனவாக விளம்பு.

    பதிலளிநீக்கு
  9. ஜீவா! மோனைக்குத்தான் அஆஐஒள புணர்ந்த மோனையமைய வேண்டும். எதுகை அப்படியில்லை க-எதுகையாக வந்தால் அடுத்த அடியின் எதுகையாக க-வரிசையில் எதுவேண்டுமானாலும் எதுகையாக வரலாம். ஒரேஒரு கட்டுப் பாடுதான். அதாவது குறிலுக்குக் குறிலும், நெடிலுக்கு நெடிலும், அவ்வளவே.

    காட்டு:-

    க எதுகையாக வந்தால் அடுத்த அடியில் க கி கு கெ கை கொ இவை எதுகையாக அமையலாம்.

    கா எதுகையாகின் கீ கூ கே கோ இவை எதுகையாக அமையலாம்.

    பாடம் 7 தொடைச்சிறப்பை நன்றாக இன்னொரு முறை பார்க்கவும். எதுகை மோனை பற்றித் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன்

    பதிலளிநீக்கு
  10. குறள் அருமை. அது கூறும் பொருளும் அருமை. ஓரிடம் தளை தட்டுகிறது.

    நன்சொல் எனவாக விளம்பு!
    நேர்நேர் நிரைநேர்நேர் பிறப்பு!

    வாய்பாட்டைக் கவனித்தீரா? எனவாக -காய்ச்சீர் காய்முன்நேர் வாரவேண்டும் அதாவது ஈற்றடியின் ஈற்றுச் சீர் என்பதால் நாள் அல்லது காசு வாய்பாட்டில் முடியவேண்டும். இந்த ஓரிடம் மட்டுமே தளை தட்டுகிறது.

    தாங்கள் கூறவந்த பொருள் சிதையாமல் சற்றே தளைதட்டாமலும் பொழிப்புமோனை கெடாமலும் மாற்றிவிடலாமா?

    இன்சொல் இயம்பிட வாராதே துன்பமும்
    நன்சொல் தனையே நவில்!

    பதிலளிநீக்கு
  11. நல்லது மேடம். நான்தான் மறந்துவிட்டேன்!
    கடைசி சீரிலும் தளை தட்டாமல் இருக்க வேண்டுமா என்ற சந்தேகம் இருந்தது - இப்போது அது தீர்ந்தது, நன்றி!

    பதிலளிநீக்கு
  12. என் பக்கம் வந்து அழைத்ததற்கு நன்றீ! உடனேஎ ஒரு வெண்பா போட்டேன். அது வெண்பாவா என்று பார்க்கவும்! திருத்தவும் செய்தால் மகிழ்வேன்!

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com