திங்கள், 14 ஜூலை, 2008

பாடம்14 ஓசை!

இவ்வார ஈற்றடியைக் காண்பதற்குமுன் வெண்பாவின் ஓசை வகைகளைக் காண்போம்.

வெண்பா செப்பலோசையை அடிப்படையாகக் கொண்டது என்பது யாவரும் அறிந்த ஒன்றே. அச்செப்பலோசையின் உட்பிரிவாக "ஏந்திசைச் செப்பலோசை", "தூங்கிசைச் செப்பலோசை", "ஒழுகிசைச் செப்பலோசை" என மூன்று வகையுள்ளது.

1-ஏந்திசைச் செப்பலோசை:-

முழுக்க முழுக்க வெண்சீர் வெண்டளையான் இயன்ற வெண்பா ஏந்திசைச் செப்பலோசையாகும். (ஈற்றுசீர் கணக்கில் கொள்ளக்கூடாது ஆதலால் ஈற்றுச்சீரொழிய ஏனைய 14-சீர்களும் வெண்சீர் வெண்டளை கொள்ளுமாயின் அவ்வெண்பாவின் ஓசையை ஏந்திசைச் செப்பலோசை என் நம் பழம்புலவர்கள் வகைபிரித்துள்ளனர்)

பட்டுப்போல் பூவிழிகள் பார்த்திருந்தேன் பாவையவள்
சட்டென்றே தன்விழிகள் சாய்த்திருந்தாள் -எட்டிநின்றே
என்னெழிலை உள்வாங்கிப் புன்னகைப்பாள் யானவளைக்
கண்கொண்டுக் காணாதக் கால்! -அகரம்.அமுதா

செத்துவிடப் போகின்றாய் சேர்ந்தவர்கள் உன்னுடலை
மொய்த்துவிடப் போகின்றாய் மொய்த்தாலும் சற்றழுவார்
சுட்டுவிடப் போகின்றார் சூழ்நிலைக்குத் தக்கனவாய்
நட்டமென்ன வாழ்ந்துவிடு நன்கு! -புரட்சி தாசன்

குறிப்பு!

வெண்பாவைப் பொருத்தவரை இன்னிசையை வழங்கக் கூடிய சீர் காய்ச்சீரே ஆகும் என்பது பழம் புலவர்களின் கூற்று. வெண்பாவின் சில இடங்களில் ஓசை நன்கமையப் பெறுவதற்காக அளபெடையைக் கையாள்வர். தளை தட்டாவிடத்து அளபெடுத்தலால் அவ்வளபெடையை இன்னிசையளபெடை என்பர். கவனிக்க:-

கெடுப்பதூவும் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூவும் எல்லாம் மழை! திருக்குறள்

கெடுப்பதும் எனக்கொள்கினும் தளைதட்டாதாயினும் செய்யுளின் ஓசை நன்கமையப்பெற வேண்டும் என்பதற்காக உயிர் அளபெடுத்து வந்தது.

2-தூங்கிசைச் செப்பலோசை:-

இயற்சீர் வெண்டளை மட்டும் பயின்றுவரும் வெண்பா (மாமுன் நிரை விளமுன் நேர்) தூங்கிசைச் செப்பலோசை எனப்படும்.

பூட்டிய வீட்டில் புகையிலைக் குஞ்சிகள்
ஓட்டை வழியே உதிர்ந்தன -ஈட்டும்
குரலின் மொழியில் இருமல் முழக்கம்
விரலின் இடையில் விரல்! -பாடலாசிரியர் கபிலன்

கனிவாய் மெதுவாய்க் கனிவாய்; உணவாய்
உனையே தருவாய் உயிரே! -இனிநம்
இருவாய் ஒருவாய் எனவாக் கிடுவாய்
வருவாய் வரம்தரு வாய்! -அகரம். அமுதா

குறிப்பு:-

இம்முறை சற்றே கடினமானது என்பதால் இம்முறையைப் பலரும் கையாள்வதில்லை. (புதிதாய் வெண்பா எழுதுபவர்கள் யாரும் இம்முறையைக் கையாள வேண்டாம். பொருட்சிதைவு ஏற்படும் வாய்ப்புள்ளது.)

3-ஒழுகிசைச் செப்பலோசை:-

இயற்சீர் வெண்டளை மற்றும் வெண்சீர் வெண்டளை ஆகிய இரு வெண்டளைகளும் கலந்துவரின் அவ்வெண்பாவின் ஓசை ஒழுகிசைச் செப்பலோசை ஆகும்.

காதல் புரிகின்ற காதலரோ(டு) ஒப்பிடுங்கால்
காதல் கவிதைகளே காசினியில் ஏராளம்
ஆதலினால் அஃதை அகற்றிக் குமுகாயப்
பேதமையைப் பாசெய் பெரிது! -அகரம்.அமுதா

நண்பர்களே! வெண்பாவில் பயின்றுவரும் செப்பலோசையின் உட்பிரிவுகளைக் கண்டோம். இம்மூன்றுவகைகளிலும் பயிற்சி மேற்கொண்டு பாடல் இயற்றிப் பார்க்கவும்.

இக்கிழமைக்கான ஈற்றடி:- "கண்ணுற்றே நன்நெறியைக் காண்!"

ஏந்திசைச் செப்பலோசை அமையுமாறு அனைவரையும் பாடஅழைக்கிறேன்.

அகரம். அமுதா

27 கருத்துகள்:

  1. தமிழுக்கு சேவையாற்றும் தங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துகள் அகரம் அமுதா.
    பாசமுடன் தியாகராஜன்.

    பதிலளிநீக்கு
  2. வாருங்கள் தியாகராஜன் அவர்களே! வெண்பா விளையாட்டிலும் பங்கேற்கத் தங்களை அன்போடு அழைக்கிறேன். நன்றி

    பதிலளிநீக்கு
  3. துப்புரவை ஏற்(று)இவரும் துன்புறுதல் ஊர்கண்டார்
    அப்புறமும் அத்துன்பம் ஆய்ந்தொழிக்க துப்பின்றேல்
    உண்பதற்கே பிண்டம்போல் உண்டானார் எப்பொழுது
    கண்ணுற்று நன்னெறியைக் காண்?

    பதிலளிநீக்கு
  4. உயர்திரு முகவை மைந்தன் அவர்களே! துப்புரவுத் தொழிலாளர்களைப் பற்றி வெண்பா செய்து கலக்கியிருக்கிறீர்கள். வாழ்த்துகள். உங்களைப் பின்பற்றி இதோ நானும் ஒரு வெண்பா செய்தளிக்கிறேன்:-

    மாந்தர் மனஅழுக்கைத் துப்புரவே செய்தகற்றி
    ஆந்தனையும் ஒப்புரவை ஆங்கமைப்போம்; -மாந்தரிலே
    உண்டிக்காய்ச் செய்யும் உயர்தொழிலால் தாழ்வுயர்வில்;
    கண்ணுற்றே நன்நெறியைக் காண்!

    பதிலளிநீக்கு
  5. முன் செய்தளித்த வெண்பாவில் சிறிதே மாற்றம் செய்யத் தோன்றிற்று. மாற்றத்துடன் வெண்பா பின்வருமாறு:-

    மாந்தர் மனத்துன்கண் மாசைப் புறமகற்றி
    ஆந்தனையும் ஒப்புரவை ஆங்கமைப்போம்; -சாந்தனையும்
    உண்டிக்காய்ச் செய்தொழிலில் தாழ்வே(து) உயர்வேது?
    கண்ணுற்றே நன்நெறியைக் காண்!

    பதிலளிநீக்கு
  6. ///துப்புரவை ஏற்(று)இவரும் துன்புறுதல் ஊர்கண்டார்
    அப்புறமும் அத்துன்பம் ஆய்ந்தொழிக்க துப்பின்றேல்
    உண்பதற்கே பிண்டம்போல் உண்டானார் எப்பொழுது
    கண்ணுற்று நன்னெறியைக் காண்?////

    வாவ்!!!

    பதிலளிநீக்கு
  7. வாங்க! மோகன் கந்தசாமி! வருகைக்கும் பின்னூட்டிற்கும் நன்றி கலந்து வாழ்த்துகள்.

    "வாவ்" என்பது வெண்பா ஆகாதுங்களே! ஒரு வெண்பா கட்டிஇருக்கலாமில்லே!

    முகவை மைந்தன்! உங்களுக்கு ரசிகர் வட்டம் கூடிக்கொண்டே போகிறது. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  8. இன்னமும் வலிக்கச் செய்கிறது அந்தக் கட்டுரை காட்டும் உண்மைகள்.

    பாராட்டுக்களுக்கு நன்றி. வாதங்களை வலுவாக எடுத்து வைப்பதில் வல்லவர், மோகன். இங்கே ஒற்றைச் சொல்லோடு நிறுத்திக் கொண்டார்.

    தொடர்ந்து முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. ஆம் முகவை அவர்களே! எனக்கும் மனதுவலிக்கத்தான் செய்கிறது. என்னால் முடிந்தவரை துப்புரவுத் தொழிலாளர்களின் நிலையை வெண்பாவாக்க முயல்கிறேன். இப்பொழுது நம் ஈற்றடிக்கு நண்பர்கள் வெண்பா எழுத வராமையால் என்பங்கிற்கு நான் ஒரு வெண்பா இட்டுவிடுகிறேன்.

    நாநனைக்கப் பாலில்லை நாமிளைக்க ஆவழங்கப்
    பூநனைந்த பொற்கொடியின் பூமார்பால் -ஞானப்பால்
    உண்டதிரு ஞானன் உரைமொழியாய் நா(ம்)மொழியக்
    கண்ணுற்றே நன்னெறியைக் காண்!

    பதிலளிநீக்கு
  10. பண்ணெடுத்துப் பலநெறியைச் சொன்னாலும் பலகாலும்
    நன்னெறியைச் சொல்லிடவே நாளெல்லாம் முயன்றாலும்
    இந்நாளில் வாழ்கின்ற இயல்பினிலே உழல்கின்ற நீ
    கண்ணுற்றே நன்னெறியைக் காண்!

    பதிலளிநீக்கு
  11. வருக வி எஸ் கே அவர்களே! வினவியவுடன் வெண்பா நன்கமைத்துத் தந்தீர். தொடர்ந்து தங்களின் நல்லாதரவை வழங்கவேண்டுகிறேன். தங்கள் அழகிய இன்னிசை வெண்பாவில் ஐந்திடங்களில் தளைதட்டுகின்றன. முடிந்தவரை தளைதட்டாமல் வெண்பா செய்ய முயலவும். திருத்திய வெண்பா பின்வருமாறு:-

    பண்ணெடுத்துப் பண்பாய்ப் பலநெறிகள் சொன்னாலும்;
    நன்நெறியைச் சொல்லிடவே நாளும் முயன்றாலும்;
    இந்நாளில் வாழும் இயல்பில் உழல்கிறநீ
    கண்ணுற்றே நன்நெறியைக் காண்!

    பதிலளிநீக்கு
  12. உயர்திரு நண்பர் சுரேஷ் பாபு அவர்கள் http://penathal.blogspot.com/ எனக்குத் தனிமடலில் ஈற்றடிக்கு வெண்பா எழுதி அனுப்பியிருந்தார். அவர் வருகைக்கும் வெண்பா முயற்சிக்கும் எம் மனமார்ந்த பாராட்டுகள். தொடர்ந்து அவர்களின் ஆதரவை எதிர்பார்க்கிறேன். இதோ அவர்அனுப்பிய சினிமாவைப் பற்றிய இன்னிசைப் பஃறொடை வெண்பா:-

    தன்னால் முடியாத தாராள நல்லுரைகள்
    பண்ணிலே சொல்லிப் பலகவலை நீக்கியே
    பெண்ணாய் இருக்க வரையறுக்கும் பேருண்மை
    உன்னைக் குறிவைத்தே ஊர்முழுதும் ஏமாற்றி
    மண்ணாளும் ஆசை மறைக்காமல் சொல்லிடுவார்
    விண்முட்டும் தட்டிகொண்ட வீரன் படைத்திட்ட
    இந்நாள் வெளியீட்டை இப்போதே சீட்டெடுத்துக்
    கண்ணுற்றே நன்னெறியைக் காண்! -சுரேஷ் பாபு

    தட்டி -cut out

    பதிலளிநீக்கு
  13. அன்பரே, நான் முறையாக இலக்கணம் பயின்றவன் அல்லன். ஏதோ எனக்குத் தெரிந்த சந்தத்தில் எழுதுகிறேன். அதனால், இந்தத் தளை தட்டுதல் இதெல்லாம் முறையாகத் தெரியது. எனவேதான் நீங்கள் முதலில் அழைத்தபோது தயங்கினேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  14. தயக்கம் வேண்டாம். முயன்றால் சிறுகச்சிறுகக் கற்றுக்கொள்ளலாம். நம் தளத்திலிருந்து வெளியில் சேல்லும் போது நல்வெண்பா கவியாகச்செல்லலாம். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் அகரம்.அமுதா.


    உங்களின் அழைப்புக்கு நன்றி.


    காண்பதெல்லாம் நல்லதுவோ காலம்தான் சொல்லிடுமோ
    வேண்டியோ பெற்றிடுவோம் வேதனை - வான்போற்றும்
    நன்னிலத்தில் காண்பதெலாம் கேடாம் நலம்பெறவே
    கண்ணுற்றே நன்னெறியைக் காண்!

    - வெண்பா மாதிரி இருந்தா எடுத்துக்கோங்க. திட்டாதீங்க


    சில பேர் குழுவாய் சேர்ந்து ஆரம்பித்த

    " இயன்ற வரையிலும் இனியத் தமிழில்" (http://payananggal.blogspot.com ) குழுவில் இணைய விருப்பமா ? பல பேர் இணைந்து இழுக்கும் தேராக்கிடலாம் இம்முயற்சியை.

    அதே போல தொல்காப்பியத்திற்கு உரையிட

    " கடுவெளி " ( http://kaduveli.blogspot.com ) வலைப்பூவிலும் இணைய விருப்பம் எனில் தெரிவிக்கவும்

    முன் கூட்டிய நன்றிக்களுடன்

    - ஜீவ்ஸ்

    பதிலளிநீக்கு
  16. வாங்க ஜீவ்ஸ்! அழகிய ஒழுகிசைச் செப்பலோசையுடன் கூடிய நேரிசை அளவியல் வெண்பாவை வழங்கியுள்ளீர்கள். தொடர்ந்து தங்களின் மேலான ஆதரவை எதிர்பார்க்கிறேன். வாழ்த்துகள்.

    குறளைப்பே சிக்களித்தல் கோளாகும்; பாரில்
    குறளைபே சாதிருத்தல் கோளாம்; -திரட்சொத்தாய்
    ஒண்டமிழ்க்கு வாய்த்திட்ட ஒப்பில் திருக்குறளைக்
    கண்ணுற்றே நன்நெறியைக் காண்!

    தங்களின் அழைப்புக்கு நன்றி. சிந்தித்துச் சொல்கிறேன்.
    அகரம்.அமுதா

    பதிலளிநீக்கு
  17. என்பிள்ளை என்குடும்பம் என்சுற்றம் என்றெண்ணி
    தன்னோடு சேர்ந்தவர்க்கு தான்சேர்க்கும் செல்வமெலாம்
    நல்வழியில் வந்ததெனில் நன்றீயும்; அஃதன்றிப்
    பொல்லாத செய்கைகளால் பொய்கூறி மற்றவர்க்குப்
    பொல்லாங்கு செய்தளித்துப் பெற்றதெனில் அத்தனையும்
    சொல்லாத ஓர்வழியில் சென்றழியும்; தான்தேடும்
    பொன்னான வாழ்வன்றிப் புண்ணான வாழ்வுகொண்டே
    எந்நாளும் துன்புறுவார் ஏதுமின்றிச் செத்தொழிவார்
    அவ்வாறு வாழ்ந்தவரை என்வாழ்வில் கண்டதனால்
    எவ்வாறு வாழ்வதென்று நானுரைத்தேன் இப்பாரில்
    மண்ணவனே உன்வாழ்க்கை உன்கையில் நன்கிதனைக்
    கண்ணுற்றே நன்நெறியை காண்.
    -இராஜகுரு

    பதிலளிநீக்கு
  18. நீதி வழுவா நெறிமுறையைத் தன்பாட்டில்
    ஆதிமுதல் அந்த(ம்)வரை ஆர்ப்பரித்துத் -தீதகற்றும்
    நன்நெறியை ஈண்டளித்தார் நண்பர் இராஜகுரு;
    கண்ணுற்றே நன்நெறியைக் காண்!

    பதிலளிநீக்கு
  19. எப்படியும் வாழ்ந்திடனும் என்பதில்லை வாழ்க்கையடா
    அப்படியும் வாழுமவர் ஆழ்மனதில் - இப்படியும்
    என்வாழ்வு கொண்டேனே என்றெண்ணி பின்சாவர்
    கண்ணுற்றே நன்னெறியை காண்.

    பதிலளிநீக்கு
  20. ராஜா! அழகிய நேரிசை வெண்பா செய்தளித்துள்ளீர் வாழ்த்துகள்.

    ஆயிரமாய் நூல்தேடி அன்றாடம் கற்றாலும்
    ஆய்ந்தறியாக் கல்வியினால் ஆவதுண்டோ? -தோய்ந்தறிவும்
    நன்கமைய வேண்டின் நறும்பொருள் சேர்நூலைக்
    கண்ணுற்றே நன்நெறியைக் காண்!

    பதிலளிநீக்கு
  21. இப்படித்தான் வாழ்வதென எத்தனையோ போதனைகள்
    அப்படியும் மாந்தருக்கே அல்லற்காண் -செப்புவித்தை
    ஒன்றுமில்லை செய்கையுடன் ஒன்றாத எண்ணந்தான்
    கண்ணுற்றே நன்நெறியைக் காண்.

    பதிலளிநீக்கு
  22. அழவிய வெண்பா செய்து அளித்துள்ளீர்கள் வாழ்த்துகள் ஹம்துன்!

    தீய்க்குதென்பார் ஆளனிலார்; செக்க(ர்)வரப் பொய்மறைத்தே
    மாய்க்குதென்பார் ஆளனுளார்; மாய்ப்பதுவும் -தீய்ப்பதுவும்
    தண்ணுற்றே வானில் தவழும் தளிர்நிலவா?
    கண்ணுற்றே நன்னெறியைக் காண்!

    துன்பத்தைக் கண்டு துவளாதே! காலத்தால்
    இன்பத்தை நல்கி இடம்பெயரும்; -மண்பதையில்
    விண்ணற்ற கொப்புலங்கள் வெள்ளணையப் பொய்மறையும்;
    கண்ணுற்றே நன்னெறியைக் காண்!

    அகரம்.அமுதா

    பதிலளிநீக்கு
  23. நுண்ணறிவால் கற்றறியும் நூல்கொண்டு பட்டறிவும்
    கண்ணோட்டம் கொண்டுயர்வைக் கண்டறிந்து முன்னேறி
    எண்ணத்தைப் பாழாக்கும் எண்ணற்ற தீங்கிடையே
    கண்ணுற்றே நன்னெறியைக் காண்

    ஆர்.கஸ்தூரிரங்கன்
    ஓசூர்

    பதிலளிநீக்கு
  24. ஏந்திசைச் செப்பலோசை பொருந்திய பல விகற்ப இன்னிசை வெண்பா

    துன்பத்தில் தள்ளிநின்று இன்பமதைக் கண்டிடுவார்
    முன்புகழ்ந்து பின்னிகழ்ந்து துன்பமதைச் செய்திடுவார்
    எண்ணற்ற மாந்தரவர் புன்செயலில் தோய்ந்திடுவார்
    கண்ணுற்றே நன்னெறியைக் காண்

    ஒழுகிசைச் செப்பலோசை பொருந்திய பல விகற்ப இன்னிசை வெண்பா

    பிறர்காணும் துன்பத்தில் இன்பமதைக் காண்பார்
    புறம்பேசும் இன்பத்தில் நன்பொழுதைப் போக்குவார்
    எண்ணற்ற மாந்தரவர் புன்செயல்தான் செய்திடுவார்
    கண்ணுற்றே நன்னெறியைக் காண்

    உங்கள் ஈற்றடியிலே காய்ச்சீர்கள் வருவதால், தூங்கிசைச் செப்பலோசை வரும் வகையில் ஈற்றடியை மாற்றியமைத்த வெண்பா:

    பிறர் துன்புற இன்பம் பெறுவார்
    புறம் பேசியே நெஞ்சம் மகிழுவார்
    எண்ணில் அடங்கிடாப் புன்செயல் செய்குவார்
    கண்டும் விடுதல் அறிவு

    ராஜா
    சான் ஹோசே

    பதிலளிநீக்கு
  25. அருமை ராசா அவர்களே! வாழ்க வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com