வெள்ளி, 23 ஏப்ரல், 2010

எண்சீர் மண்டிலம்! 3

அடிதோறும் எட்டுச்சீர்களைக் கொண்டிருக்க வேண்டும்.

முதல் அரையடி சீரமைப்பு முறையே = குறிலீற்றுமா + கூவிளம் + விளம் + மா –என்று அமைந்திருக்க வேண்டும். அடுத்த அரையடியும் அவ்வாரே அமைந்திருக்க வேண்டும்.

குறிலீற்றுமா என்பது, குறில் ஒற்று ஈற்றுமாவாகவும் வரலாம்.

இவ்வாறான நான்கடிகள் ஓரெதுகை பெற்றுவர வேண்டும்.

1,5 ஆம் சீர்களில் மோனை அமைதல் வேண்டும்.

ஒழிந்து போனது பரிசெனும் சீட்டு
ஒழிந்து போனது பஞ்சையர் துயரம்
பிழிந்து ழைப்பினால் பெறும்பொருள் எல்லாம்
பிடுங்கி வாழ்ந்தனர் பரிசெனும் சீட்டால்
கழிந்த நாட்களில் கள்வரைப் போலக்
கவர்ந்த செல்வமோ கணக்கில வாகும்
விழுந்த ஏழையர் வாழ்வெலாம் உயர
விதித்த ஓர்தடைக் கொப்புயர் வுண்டொ?

--- புலவர் அரங்க. நடராசன்

அகரம் அமுதா

25 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. என்னை ஈர்த்தது இழுத்தது தமிழ்
    எழுதும் போதெலாம் சேர்த்தது செழும்
    தன்னைத் தேனடைத் தன்னுடைப் பாவைத்
    தங்கம் மேலுறைச் சொற்களை; தோழி
    உன்னை ஆர்வமாய்க் கொண்சிறு கதைகள்
    உள்ளுள் வாழ்ந்தது உருபல கொடுத்து
    சென்னை மாநகர் வெள்ளிநாள் பொழுதில்
    செம்மை நூலென வெளிவரும், வாரீர்...!!!!

    http://kaalapayani.blogspot.com/2010/04/blog-post_21.html

    நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்.

    பதிலளிநீக்கு
  3. இராவ சிறுகதைகள் நூல்வெளி யீட்டில்
    இராது இனிப்புப்பஞ் சம்!


    வாழ்த்துகள் வந்துக் குவிந்திடும் வண்டமி
    ழாழ்ந்தகள் ளூறிடு மே!

    பதிலளிநீக்கு
  4. வேண்டாம் மதுவாம்..!

    கனவில் வந்திடும் மதுவினைக் கொஞ்சம்
    ....கலந்து இன்புறக் களித்திட நாளும்
    மனனம் செய்திடும் மனதினை ஒருநாள்
    ....மறந்து மண்ணினில் வாழ்ந்திடும் வரத்தை
    நினைந்து உன்னைநான் நித்தமும் கேட்பேன்
    ....நிகழ்த்து அற்புதம் நிறுத்திடு இதனை
    புனைந்து வைப்பவர் யாரென அறியேன்
    ....புத்தி நற்பெற புத்திரர்க் கருள்வாய்!

    தொலைக்க சென்றிடும் துயரெலாம் பறக்கும்
    ....தொகையும் நன்றென வீட்டினை அடையும்
    அலைக்க ழித்திடும் விதியினைக் கடந்து
    ....அளவில் லாதொரு இன்பமும் சேரும்
    கலைக்க வேண்டுமே மதுவெனும் பேயை
    ....குடும்பம் இன்முகம் அழகுறக் காணும்
    நிலைத்து நின்றிடும் நம்திரு யாவும்
    ....நீரை நீக்கிட முனைந்திடும் பொழுதே!

    பதிலளிநீக்கு
  5. வெண்பா எழுதலாம் வாங்க வலை இன்று தான் பார்த்தேன். ரொம்ப கடினமான பாடம். சிறந்த ஆசிரியர் நீங்கள். நல்ல முயற்சி. தொடருட்டும் உங்கள் தொண்டு! வலைச்சரத்திற்கு நீங்கள் எழுதும் பின்னோட்டம் ஜப்பானிய மொழியில் வருகிறது. தயவு செஇது சற்று கவனிக்கவும். நன்றி!

    பதிலளிநீக்கு
  6. [மன்னிக்கவும் சில நாட்களாய் பா எழுத இயலா நிலை. எண்சீர் மண்டிலமும் கொஞ்சம் பயமுறுத்துகிறது. என் சிறு முயற்சி.]

    காட்டுப் பாதையை கடுங்குளிர் இரவில்
    கடந்து போவதைப் போல்மிகுத் துன்பம்
    வாட்டும் இப்புவி வாழ்வினில் உழன்று
    வாடி நின்றிடும் எளியனுக் குவழி
    காட்டு, செங்கதிர் இருளினை விலக்க
    காட்சி யாகிடும் உன்னருள் ஜோதி
    ஆட்சி செய்திடும் மனவிருள் நீக்கி
    ஆண்டி யாய்மலை மீதருள் முருகா!

    பதிலளிநீக்கு
  7. அண்ணாமலை அவர்களின் ’வேண்டாம் மதுவாம்..!’ பாவுக்கு பாராட்டு. அருமையான கருத்து.

    //புனைந்து வைப்பவர் யாரென அறியேன்
    ....புத்தி நற்பெற புத்திரர்க் கருள்வாய்!// - இந்த அடி புரியவில்லை.

    பாவலர்கள் யாரையுமே (வசந்த் ஐயாவைத்தவிர) காணோமே என்று நினைத்தேன்.. உங்கள் படைப்பும் உமா அவர்களின் படைப்பும் வந்துவிட்டது.

    ஆசான்களையும் காணோம். என்னவாயிற்று ?

    நன்றி

    பதிலளிநீக்கு
  8. வெண்பா எழுதி நாளாகிறது. அண்ணாமலையாரின் கருத்துக்கு இதோ ஒன்று:

    எண்ணா யிரங்கேடு ஏழைக் கிதுசிறை
    நண்ணா திருப்பதே நன்றென்றும் ~ எண்ணாமற்
    சின்னாபின் னம்மழிவு பெண்டாட்டிப் பிள்ளை’கள்
    கண்ணா வுனக்கேன் மது ?

    பதிலளிநீக்கு
  9. //எண்சீர் மண்டிலமும் கொஞ்சம் பயமுறுத்துகிறது. என் சிறு முயற்சி.// என்று முன்னறிவிப்பு . ஆனால் பாடியதோ மனவிருள் நீக்க சிறந்த இறைவழிபாட்டுப் பா பழனியாண்டவன் மீது. அருமை உமா அவர்களே.

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வண்ணத் தில்வெடிச் சரமழை வானில்
    .....வருகைத் திட்டமே வருத்திடு முவகை
    மின்னும் நாயகன் எலியிவன் மிக்கி
    .....மிடுக்கில் மிஞ்சிடு மிவள்பெயர் மின்னி
    கன்னந் தீண்டிடுங் காற்றுடல் உரசும்
    .....காந்தச் சக்கரம் உளரயில்ப் பயணம்
    திண்ணம் இன்புற எனக்கிணை இல்லை
    .....டிஸ்னி என்றெனை உலகினர் உரைப்பர் !

    பதிலளிநீக்கு
  11. திரு.வசந்த் அவர்களின் அழகான பாவிலான அழைப்பை கண்டு மிக மிக மகிழ்ந்தேன். வெண்பா வலையினருக்கு மிகச் சிறப்பான தனி அழைப்பு. அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

    உடல் நலமின்றியிருந்ததால் வரயியலாமல் போனதற்கு மன்னிக்கவும்.இருந்தாலும் புத்தகத்தை வாங்கிப் படித்து கருத்து தெரிவிக்கிறேன். அவருக்கு என் வாழ்த்து.

    வாழ்க நின்பணி வண்டமிழ் காக்கும்
    வளர்க உன்புகழ் வையகம் தன்னில்
    சூழ்க நல்லவர் நின்னுடன் என்றும்
    சொல்லில் நல்லறம் காத்துநீ வாழ்க
    ஆழ்ந்த கல்வியும் நேர்மையும் நிறைந்து
    அழகு செந்தமிழ் சிறுகதை வரைந்து
    நீள்க நற்றமிழ் புகழுல கெல்லாம்
    நீயும் நிந்திறன் செழித்திட வாழ்க.

    பதிலளிநீக்கு
  12. 'டிஸ்னி' மிக்கி -பாவில். ஆஹா மிக அருமை.
    அவனடியார் அவர்களுக்கென் பாராட்டும் நன்றியும்.

    பதிலளிநீக்கு
  13. அண்ணாமலை அவர்களுக்கென் பாராட்டுக்கள். பா அருமை.

    பதிலளிநீக்கு
  14. அன்பு ஆசான்மார்களே:

    ஒரு ஐயம் ->

    இவ்வகை எண்சீர் ஆசிரியத்தில் இரண்டாம், ஆறாம் சீர்களின் ‘கூவிளம்’ விதியால் அச்சீர்களின் முதல் ஓசை நெடிலாகவே இருக்க வேண்டுமா இல்லை குறிலாகவும் இருக்கலாமா ?

    காட்டுச் செய்யுளில் உள்ள இச்சீர்கள்
    ’போனது’, ’போனது’,
    ‘ழைப்பினால்’, ’வாழ்ந்தனர்’,
    ‘நாட்களில்’, ’செல்வமோ’,
    ’ஏழையர்’, ‘ஓர்தடை’
    என்று உள்ளன

    இவற்றில் ‘ழைப்பினால்’ ’செல்வமோ’ இவை மட்டும் ‘ழை’, ‘செல்’ என்று குறிலுடன் தொடங்குகின்றன, மற்றவையெல்லாம் ‘போ’, ’வா’, ’ஏ’ போன்று நெடிலாக தொடங்குகின்றன.

    கூவிளத்தில், குறில் தொடக்கம் வருவது சரியா ?

    விதியை சரியாக பின்பற்றத்தான் கேட்கிறேனே தவிர காட்டுச் செய்யுளை குறை கூற வரவில்லை.

    அரங்கனாரின் காட்டுச் செய்யுள் அருமையிலும் அருமை.

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  15. நல்லப் புத்தகம் நல்லதோர் நண்பன்
    நல்ல நண்பனோ நயமிகுச் சிலையாய்
    கல்லை செய்திடுஞ் சிற்பியை ஒப்பான்
    கலையும் கல்வியும் காணிடின் சிறந்த
    சொல்லின் நற்சிலை புத்தக மாகும்
    சொல்லும் ஓர்கதை கற்சிலை தானும்
    கல்லின் ஓசையில் பேசிடும் கண்கள்
    கருத்தின் கூர்மையைக் காட்டிடும் சொற்கள்.

    பதிலளிநீக்கு
  16. //
    அண்ணாமலை அவர்களின்

    புனைந்து வைப்பவர் யாரென அறியேன்
    ....புத்தி நற்பெற புத்திரர்க் கருள்வாய்!// - இந்த அடி புரியவில்லை.

    //

    அவனடிமை ஐயா..
    புத்தியில் மதுவென்னும் எண்ணத்தைப் புதைத்து வைப்பவர் யாரென்று அறியவில்லை..ஆதலால்
    நல்புத்திபெற புத்திரர்களுக்கு அருள வேண்டுமென,
    வேண்டுவது போல எழுதினேன் ஐயா..!!

    (இதற்கு "பா"வே தேவலை என்று நினைக்கிறீர்களா !!)
    தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றிகள்!
    தவறு ஏதாகிலும் இருந்தாலும் அதைக் குறிப்பிட வரவேற்கிறேன்!
    அடுத்தமுறை திருத்திக்கொள்வேன்!!

    மிக்க நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  17. திருவமை. உமா அவர்களின்
    வாழ்த்திற்கு மிக்க நன்றிகள்!

    அவனடிமை ஐயா அவர்களின்
    பாடலிலும்,
    தங்களின் பாடலிலும் சொட்டுகிறது கவித்தேன்!

    நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  18. வசந்த குமார் அவர்களின் நூல் வெளியீட்டிற்கென் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

    பதிலளிநீக்கு
  19. அண்ணாமலையாரின் 'வேண்டாம் மது' என்ற தலைப்பிலான கவிதை நெஞ்சை அள்ளுவதாக உள்ளது. வாழ்த்துக்கள் அய்யா!

    பதிலளிநீக்கு
  20. சாந்தி லச்சுமணன் அவர்களின் வருகைக்கு நன்றிகள். தொடர்ந்து வருக.

    பதிலளிநீக்கு
  21. தோழி உமா அவர்களின் இறைவழிபாட்டுப் பா சிறப்பா அமைந்துள்ளது வாழ்க.

    பதிலளிநீக்கு
  22. அவனடியாரின் மதுபற்றிய பாராட்டு வெண்பா அருமை. அருமை. மேலும் டிஸ்னி வேர்ல்ட் பற்றிய அவரின் பா சுவைக்கும் படியாக உள்ளது. உலகையே சிரிக்க வைக்கும் அரிய பணிசெய்யும் டிஸ்னி பற்றிப் பாவியற்றியிருப்பதைப் பாராட்டுகின்றேன்.

    பதிலளிநீக்கு
  23. வசந்த் பற்றிய உமாஅவர்களின் வாழ்த்துப்பா அருமை. அருமை. வாழ்த்துவதற்கு ஓர் உள்ளம் வேண்டும். அதிலும் பாவிலேயே வாழ்த்துவதென்றால் உயர்ந்த உள்ளம் வேண்டும். அது உமா அவர்களுக்கும் அவனடியார் அவர்களுக்கும் அமைந்துள்ளதெண்ணி வியக்கின்றேன். பாராட்டுகின்றேன்.

    பதிலளிநீக்கு
  24. உமா அவர்களின் ஐயம் சரியே!

    கூவிளம் என்பது நெடில் தொடக்கமாகவும் அமையலாம், குறிலொற்று தொடக்கமாகவும் அமையலாம்.

    காதலி, மாதவி, பூம்பனி, மாங்கனி;
    கண்மணி, கத்தரி, மத்தகம், வெண்பனி - இவை அனைத்தும் கூவிளமே!

    ////பிழிந்து ழைப்பினால் பெறும்பொருள் எல்லாம்/////


    இவ்வரியிலுள்ள இரண்டாம் சீரின் முதற்சீரைக் குறிலெனக் கொள்ளக் கூடாது. சொல்லின் முதலில் ஐகாரம் வரின் நெடிலாகக் கொள்வதே விதி. ஆக 'ழைப்பினால்' என்பதை நெடிலொற்று தொடக்கம் எனக் கொள்ள வேண்டும். அதே ஐகாரம் சொல்லின் இடையிலும் கடையிலும் வரின் குறிலாகக் கருதப்படும்.

    பதிலளிநீக்கு
  25. உமா அவர்களின் புத்தகப் பா யாவரும் மடித்து மனதில் நிறுத்தவேண்டிய பா. வாழ்க அவர்.

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com