ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009

ஆசிரியப்பாவும் அதன் இனமும்! (2)

3.நிலைமண்டில ஆசிரியப்பா

எல்லா அடிகளும் அளவடியாக வரும். அதாவது எல்லா அடிகளும் நான்குசீர்களைக் கொண்டிருக்கும்.

வள்ளுவன் மொழிந்த வாய்மொழிப் படியாம்
உள்ளுவ வுள்ளி உவர்ப்ப உவர்த்துக்
கற்றறிந் தாங்கு முற்றுற நின்றே
யாமுறு மின்பம் யாவரு முறவே
நன்கினி துரைத்துப் பொன்கனி போல
இருநிலம் புகழ இனிதுவாழ் குவமே!


4.அடிமறி மண்டில ஆசிரியப்பா

இப்பாவில் வரும் எந்த அடியை முதலில் வைத்துப் பொருள்கொண்டாலும் பொருள் மாறுபடாதிருப்பது. அதாவது ஒவ்வொரு அடியிலும் பொருள் முற்றுப்பெற்றுவிடுவது.

தாய்மொழி வளர்த்தல் தமிழர்தங் கடனே!
வாய்மொழி புரத்தல் மற்றவர் கடனே!
காய்மொழி தவிர்த்தல் கற்றவர் கடனே!
ஆய்மொழி யுரைத்தல் அறிஞர்தங் கடனே!குறிப்பு:-

அடிகளை முன்னும் பின்னும் மறித்து (மாற்றி) ப் பொருள் கொள்ளுமாறு நிற்றலால் இப்பா அடிமறி மண்டில ஆசிரியப்பாவாகும்.

இனி நாம் பயிற்சிப் பாக்கள் எழுதுவதற்கான பாடங்களை, பாவலர் தமிழநம்பி அவர்கள் பற்பல விளக்கங்களோடு வழங்க வருமாறு வேண்டுகிறேன்.

அகரம் அமுதா

2 கருத்துகள்:

 1. ///இனி நாம் பயிற்சிப் பாக்கள் எழுதுவதற்கான பாடங்களை, பாவலர் தமிழநம்பி அவர்கள் பற்பல விளக்கங்களோடு வழங்க வருமாறு வேண்டுகிறேன்///

  வந்திருக்கிறேன்.
  வாருங்கள்; உங்கள் நேரிசை ஆசிரியப்பாவைத் தாருங்கள்! என்று அனைவரையும் அன்போடு அழைக்கின்றேன்.

  பதிலளிநீக்கு
 2. கன்னம் சுருங்கிய போழ்தும் அன்புறு
  கன்னல் மொழியாள் மீதெய் தியகாதல்
  கடுகள வேனும் குறைந்தது இல்லை
  மாறாய் பெருகிற் றுமாயும்
  நிலைதனி லும்கண் ணிலவள் முகமே

  பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com