புதன், 12 ஆகஸ்ட், 2009

சொற்பொருள் பின்வரு நிலை அணி


3.சொற்பொருள் பின்வரு நிலை அணி:-

பாவுள் கையாளப்படும் ஒருசொல் பலமுறை வந்து ஒரே பொருளைத் தருமாயின் அப்பா, சொற்பொருள் பின்வரு நிலையணியாகும்.

காட்டு:-

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூவும் மழை!


மேலுள்ள பாவில் “துப்பு” எனுஞ்சொல் உணவு எனும் ஒரே பொருளைத் தந்து நின்றமையான் அப்பா, சொற்பொருள் பின்வரு நிலையணி ஆயிற்று.

காட்டு:-

சொல்லுக சொல்லைப் பிரிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து!


மேலுள்ள பாடலை உற்று நோக்குக. சொல் என்ற சொல் பலமுறை வரினும் பொருள் மாறுபடாது ஒரே பொருளைத் தருங்கரணியத்தால் அப்பா “சொற்பொருள் பின்வரு நிலையணி” ஆயிற்று.
மேலுள்ள நிழற்படத்திற்குத் தக்க வெண்பா வரைய அனைவரையும் அழைக்கிறேன்...
அகரம் அமுதா

30 கருத்துகள்:

 1. வன்முறையே நம்.முறையென் றோதிடுமிந் நீசர்கள்
  பன்முறையெம் தாய்நாட்டைத் தாக்கிடினும் ~ பன்னிருநல்
  பாட்டாம் திருமுறையில் அப்துல் கலாமவரைக்
  கூட்டி உயர்வுருமெம் நாடு.

  பதிலளிநீக்கு
 2. படத்திற்குப் பாட்டு:

  மனநோயோ மாந்த மனமிலையோ மற்றுன்
  மனக்காழ்ப்போ? அன்றி மதமோ? - மனத்தண்மை
  கொஞ்சமும் இன்றியே கொன்றதுமேன்
  பல்லுயிரைப்
  பிஞ்சில் மனங்கெட்டாய் பேய்!

  இந்த வெண்பாவில் மனம் என்ற சொல் ஒரே பொருளில் 5 முறை வந்துள்ளது. இது சொற்பொருள் பின்வரு நிலை அணியா?

  பதிலளிநீக்கு
 3. ////அவனடிமை கூறியது...

  வன்முறையே நம்.முறையென் றோதிடுமிந் நீசர்கள்
  பன்முறையெம் தாய்நாட்டைத் தாக்கிடினும் ~ பன்னிருநல்
  பாட்டாம் திருமுறையில் அப்துல் கலாமவரைக்
  கூட்டி உயர்வுருமெம் நாடு./////


  வாழ்க அவனடியார் அவர்களே! வெண்பா உணர்ச்சியின் வெளிப்பாடாக வந்திருக்கிறது. "என்நாடு எனச்சொல்லாது எம் நாடு" என்னும் உணர்வு என்னைத் தங்கள் வயப்படுத்துகிறது. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. ////// சிக்கிமுக்கி கூறியது...
  படத்திற்குப் பாட்டு:

  மனநோயோ மாந்த மனமிலையோ மற்றுன்
  மனக்காழ்ப்போ? அன்றி மதமோ? - மனத்தண்மை
  கொஞ்சமும் இன்றியே கொன்றதுமேன்
  பல்லுயிரைப்
  பிஞ்சில் மனங்கெட்டாய் பேய்!

  இந்த வெண்பாவில் மனம் என்ற சொல் ஒரே பொருளில் 5 முறை வந்துள்ளது. இது சொற்பொருள் பின்வரு நிலை அணியா?/////

  நீண்ட இடைவேளைக்குப் பின் வந்திருக்கும் சிக்கிமுக்கியாருக்கென் வணக்கங்களும் வாழ்த்துக்களும். வெண்பா அருமையாக வந்திருக்கிறது. தாங்கள் செய்திருக்கும் வெண்பா சொற்பொருட்பின்வரு நிலையணியே! வாழ்க.

  பதிலளிநீக்கு
 5. சிக்கிமுக்கி அவர்களே:

  நம் எல்லோரின் மனக்கொதிப்பையும் நன்றாக கொடுத்துள்ளீர்கள். நன்றி:

  சிக்கிமுக் கியிட்ட வெண்பா வலைதன்னில்
  சிக்கியே சீர்படு வோமே.

  பதிலளிநீக்கு
 6. அவனடியாரின் வாழ்த்துப்பா அருமை. வாழ்க

  பதிலளிநீக்கு
 7. படத்திற்கான வெண்பா.

  [சிக்கி முக்கியார் மிக அழகாக எழதிவிட்டிருக்கிறார். கேள்வியாகவே நானும் அமைத்துவிட்டிருக்கிறேன்.ஆனாலும் சரியாக அமைந்ததாக தெரியவில்லை என்றாலும் தங்கள் பார்வைக்கு]

  சகோதரா சொல்!ஏன்? வறுமை விரட்ட
  அகோர பசியால்நீ ஆவிபுசித் தாயோ?
  நிலமோ நடுங்கியேகொல் லுந்தயங் காமல்
  பலருயிர் போக்கினையே ஏன்?

  மதமா மயக்கிய துன்னை? களிறே
  மதமா பிடித்த துனை;நல் இளந்தளிருன்
  பிஞ்சு மனதை கெடுத்து உனையேகொல்
  நஞ்சாய் நசுக்கிய தார்?


  வாழ்வில் வசந்தத்தின் வாசல் திறக்குமுன்னே
  வாழ்வழி்க்க வந்தாயே!வீழ்ந்தோரின் வாழ்வினுக்கு
  தக்கபதில் சொல்லிடவே சண்டாளா! சாவுனக்கு
  இக்கண மேவரட்டும் சா.

  இவ் வாரம் எவ்வளவு முயன்றும் பா சரியாக வரவில்லை.

  பதிலளிநீக்கு
 8. ///உமா கூறியது...

  இவ் வாரம் எவ்வளவு முயன்றும் பா சரியாக வரவில்லை./////

  பாடல்கள் மிகச்சிறப்பாகவே வந்திருக்கிறது. வாழ்க.

  இறுதிப்பாடல் உணர்ச்சிப் பிழம்பாக உள்ளது. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 9. பகைவருக் கென்றும் அருளையே வேண்டும்
  தகைமையை யீந்தத் தமிழன் - முகத்தின்
  புகைப்படம் இட்டவர் இன்னருட்ச் சொல்லை
  திகைக்காமற்க் கொள்ளடி சக்தி!

  பதிலளிநீக்கு
 10. பகைவருக் கென்றும் அருளையே வேண்டும்
  தகைமையை யீந்த தமிழன் - முகத்தின்
  புகைப்படம் இட்டவர் இன்னருட் சொல்லைத்
  திகைக்காமற் கொள்ளடி சக்தி!
  ****

  பாடல் நன்றாக உள்ளது. பின்னிரண்டடிகளின் பொருள் விளக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

  பதிலளிநீக்கு
 11. அவனடிமை ஐயா,

  பகைவருக் கென்றும் அருளையே வேண்டும்
  தகைமையை யீந்த தமிழன் - முகத்தின்
  புகைப்படம் இட்டவர் இன்னருட் சொல்லைத்
  திகைக்காமற் கொள்ளடி சக்தி!

  பாடலின் இறுதி அடியை,

  "திகைக்காமற் கொள்ளடிசக் தி!"

  - என்று ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஓரசைச் சீராகக் காட்டி எழுதுதல் நல்லது.

  பதிலளிநீக்கு
 12. தமிழநம்பி அய்யா: திருத்ததிற்கு நன்றி.

  //பின்னிரண்டடிகளின் பொருள் விளக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.//

  /சண்டாளா! சாவுனக்கு
  இக்கண மேவரட்டும் சா./ என்ற உமா அவர்களின் வரிகளை கண்டனம் செய்ய எழுதியது..

  பதிலளிநீக்கு
 13. திரு.அவனடிமையார் அவர்களே. என்னைத்தான் சொல்கிறீர் என்றுணர்ந்தேன் ஆயினும்
  // இன்னருட் சொல்லைத்
  திகைக்காமற் கொள்ளடி சக்தி!//
  பொருள் சரியாக புரிபடவில்லை. திகைக்காமற் என்றால்? இன்னருட் சொல் என்றிருக்கிறீரே, கண்டனமாகப் பொருள் கொள்ளாமல் விழித்தேன் தயை செய்து விளக்கவும்.

  பகைவனுக்கருள்வாய் நன்நெஞ்சே என்ற நம் பாரதியின் சொல் மறந்து, [மனம் சரியாக ஒன்றாத போது எழுதிய //சண்டாளா! சாவுனக்கு
  இக்கண மேவரட்டும் சா.// இவ்வரிகளை மாற்ற முயற்சிக்கிறேன். சகோதரா என்றழைத்து சா என்றது மிக்கத்தவறே. மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு
 14. /திகைக்காமற் என்றால்? இன்னருட் சொல் என்றிருக்கிறீரே, கண்டனமாகப் பொருள் கொள்ளாமல் விழித்தேன்/

  அகரம் ஆசானே / தமிழநம்பி தமிழ்ப்புலவரே:

  அசையோ டழகாய் அளப்பற்(ற) அறிவை
  திசையெட்டும் துய்க்கத் தமிழ்ப்பாவில் தந்தீர்
  வசைபாடிப் போற்றிடும் வஞ்சப்பு கழ்ச்சி;
  இசைபாடிச் சாடும் அணிப்பெயர் யாதோ?

  [வஞ்சப் புகழ்ச்சி அணிக்கு நேர்மாறாக போற்றுவதுபோல் சாடும் அணி ஏதாவது இருக்கிறதா?]

  பதிலளிநீக்கு
 15. அவனடியார்க்கு....

  காணப் பொருளொன்றும் கண்ணுற் றுணருங்கால்
  பேணுபொருள் வேறாப் பிறங்கிவரக் -காணுவதாய்
  உள்ளொன்று வைத்துப் புறமொன் றுணர்த்துவதை
  நல்வஞ்சம் என்பேன் நயந்து!

  அஞ்சுவ தஞ்சிமற் றஞ்சாத வஞ்சாது
  நெஞ்சிலெழும் செம்பொருளை நேர்நிறுத்திச் செய்கவியுள்
  மிஞ்சும் இகழுமித மிஞ்சும் புகழ்மொழியும்
  வஞ்சப் புகழுள் வரும்!

  பதிலளிநீக்கு
 16. அகரம் அமுதாவே! அனப! வருக!
  புகலவோர் செய்தி!புதுவர் 'மனோ'வே
  மிகவும் பரிவுடன் மின்மடலில் கேட்டார்
  அகரத்தார் எங்கென்(று) அறி.

  பதிலளிநீக்கு
 17. நன்றி அமுதா அவர்களே. உங்கள் கவிதைகளில் நடை மட்டுமல்ல, மலினப்படுத்தாத, கலப்படம் இல்லாத தமிழ்ச் சொற்களின் வீச்சும் அசத்துகிறது.

  //வாழ்வில் வசந்தத்தின் வாசல் திறக்குமுன்னே
  வாழ்வழி்க்க வந்தாயே!வீழ்ந்தோரின் வாழ்வினுக்கு
  தக்கபதில் சொல்லிடவே சண்டாளா! சாவுனக்கு
  இக்கண மேவரட்டும் சா.//
  என்று கோபத்தில் எழுதிய உமா / இன்னருட் சொல்லைத்
  திகைக்காமற் கொள்ளடி சக்தி!/ என்ற என் மறுமொழியை //"கண்டனமாகப் பொருள் கொள்ளாமல் விழித்தேன் தயை செய்து விளக்கவும்"// என்றார்.
  அதற்கு மறுமொழியை வெண்பாக்களிலேயே முயற்சிக்கிறேன்:

  நெஞ்சினில் வஞ்சனை இல்லாமற்ப் போயினும்
  அஞ்சியே ஆத்திரம் கொண்டவர் - பஞ்சை
  நெருப்பினில் வைத்ததுபோற்த் தீந்தமிழ்ப் பாவில்
  வெறுப்பை உமிழ்ந்தார் உமா!


  ஆத்திரம் கொண்டே அருளை இழந்தும்நம்
  'சாத்திரம் சொல்லும் கருணையை - மாத்திரம்
  பத்திரம், பார்த்துப் புனை'
  யென் றறைந்திட
  குத்திரப் பாப்புனைந் தேன்!


  அறைந்திட - சொல்லிட
  குத்திரம் - sarcasm, ஏளனச் சொல்.

  உமா அவர்களே: உங்கள் மனத்தைப் புண்படுத்தும் எண்ணம் இல்லை. என்றாலும், உங்கள் தளத்திலும், பாக்களிலும் வெளிப்படும் மென்மையான மனவோட்டத்திற்கு நேர்மாறாக நீங்கள் ஒரு பா தந்தபோது அதைக் கண்டனம் செய்யாமல் இருக்க மனம் ஒப்பவில்லை. அதில் பிறவிக் குணமான sarcasmமும் சேர்ந்துவிட்டது, மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு
 18. //வாழ்வில் வசந்தத்தின் வாசல் திறக்குமுன்னே
  வாழ்வழி்க்க வந்தாயே!வீழ்ந்தோரின் வாழ்வினுக்கு
  தக்கபதில் சொல்லிடவே சண்டாளா! சாவுனக்கு
  இக்கண மேவரட்டும் சா.//

  வரிகளைச் சற்றே மாற்றி.

  வாழ்வில் வசந்தத்தின் வாசல் திறக்குமுன்னே
  வாழ்வழிக்க வந்தாய்,வெறிச்செயலால் வீழ்தோரின்
  வாழ்நாள் விலையாயுன் வாழ்விழந்து நின்றுநிலைத்
  தாழ்ந்தாய் தகாதனச் செய்து.

  பதிலளிநீக்கு
 19. ///தமிழநம்பி கூறியது...


  அகரம் அமுதாவே! அனப! வருக!
  புகலவோர் செய்தி!புதுவர் 'மனோ'வே
  மிகவும் பரிவுடன் மின்மடலில் கேட்டார்
  அகரத்தார் எங்கென்(று) அறி./////

  அகரத்தார் எங்கென் றறியத் துடித்த
  அகவழகுத் தோழர் அறியப் -புகல்வேன்!
  கணியினி யின்பிணியாற் காணாமற் போனேன்;
  பணியினி மேல்தொடரும் பார்!

  குறிப்பு:-
  பணியினி மேற்றொடரும் பார் -என்பதற்கு, வெண்பா வலையில் இனி தடைபடாது எழுத்துப்பணி தொடரும் எனப்பொருள் கொள்க....

  பதிலளிநீக்கு
 20. ////அவனடிமை கூறியது...

  நெஞ்சினில் வஞ்சனை இல்லாமற்ப் போயினும்
  அஞ்சியே ஆத்திரம் கொண்டவர் - பஞ்சை
  நெருப்பினில் வைத்ததுபோற்த் தீந்தமிழ்ப் பாவில்
  வெறுப்பை உமிழ்ந்தார் உமா!/////

  அவனடியாருக்கு.....


  ////இல்லாமற்ப் போயினும்//// -இல்லாமல் போயினும் > எனும் இருசொற்கள் ஒரு தொடராகிப் புணருகிறபோது "இல்லாமல்ப் போயினும்" எனவாகும். அதுவே புணர்ச்சிவிதியின் இலக்கணப்படி "இல்லாமற் போயினும்" எனவாகும். ஆக "ற்" -க்குப் பக்கத்தில் "ப்" வரக்கூடா.

  ////வைத்ததுபோற்த் தீந்தமிழ்//////

  இவ்விடத்தும் அப்படியே. வைத்ததுபோல்த் தீந்தமிழ் என்று எழுதலாம். தப்பில்லை. ஆனால் "வைத்ததுபோற்த் தீந்தமிழ்" என்பது இலக்கணத்தவறாகும்.

  பதிலளிநீக்கு
 21. /////உமா கூறியது...


  //வாழ்வில் வசந்தத்தின் வாசல் திறக்குமுன்னே
  வாழ்வழி்க்க வந்தாயே!வீழ்ந்தோரின் வாழ்வினுக்கு
  தக்கபதில் சொல்லிடவே சண்டாளா! சாவுனக்கு
  இக்கண மேவரட்டும் சா.//

  வரிகளைச் சற்றே மாற்றி.

  வாழ்வில் வசந்தத்தின் வாசல் திறக்குமுன்னே
  வாழ்வழிக்க வந்தாய்,வெறிச்செயலால் வீழ்தோரின்
  வாழ்நாள் விலையாயுன் வாழ்விழந்து நின்றுநிலைத்
  தாழ்ந்தாய் தகாதனச் செய்து.//////


  உமா அவர்களே! முந்தைய "பா" பொன்னாகும். பிந்தையது நகையாகும். அதாவது பொன்னைப் புடம்போட்டிருக்கிறீர்கள். வாழ்க.

  பதிலளிநீக்கு
 22. "இல்லாமற்ப் போயினும்"

  "இல்லாமல்ப் போயினும்"

  - மேற்கண்ட இரண்டும் பிழையே.

  "இல்லாமற் போயினும்" - சரி.

  "இல்லாமல் போயினும்" -இது இக்கால வழக்கில் ஏற்றுக் கொள்ளப் பட்ட வடிவாக உள்ளது.

  இவ்வாறே "போற் றீந்தமிழ்" என்பதே சரி.

  பதிலளிநீக்கு
 23. //உமா அவர்களே: உங்கள் மனத்தைப் புண்படுத்தும் எண்ணம் இல்லை. //
  திரு.அவனடிமையார் அவர்களே,கண்டிப்பாக மனம் புண்படவில்லை, மாறாக மகிழ்ந்தேன். அழகான பாக்களும் அழகிய விளக்கங்களுக்கும் வழிவகுத்ததே. அருமையான பாக்கள். அதுமட்டுமல்லாமல் யாரையும் புண்படுத்தக்கூடாது என்பதுவே என் எண்ணம் என்பதால் பாதை மறாமல் சற்று கவனமாகவே இருக்க இது ஒரு நல்ல பாடம். நன்றி.

  பதிலளிநீக்கு
 24. //உமா அவர்களே! முந்தைய "பா" பொன்னாகும். பிந்தையது நகையாகும். அதாவது பொன்னைப் புடம்போட்டிருக்கிறீர்கள். வாழ்க.// திரு. அமுதா அழகாக சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 25. தக்கதோர் திருத்தம் செய்து உடனே பதிப்பிட்ட உமா அவர்களுக்கு நன்றி. குற்றம் செய்தவனுக்கும் அவனுடைய உயிரும் வாழ்க்கையுமே பெரிது. அதை இழந்துவிடுமோம் என்று அறிந்தும் தகாத குற்றம் செய்யத் துணிவது பரிதாபம்.

  நன்றி உமா அவர்களே, உங்கள் கவித்திறனும், அருளுள்ளமும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  தூக்கிடும் குற்றம் தயவாய்த் துடைத்தருளில்
  மிக்கதோர் மாற்றங் கொடுத்தீர் - தக்கபடி
  ஆசரிந்து அத்தம் அணியிடைப் பெற்றுநம்
  ஆசிரியர் அன்புமடைந் தீர்


  'தூக்கிடும் குற்றம்' - 'சா!' என்று விதித்த (நல்லரசும், நீதித்துறையுமே தீர விசாரித்துக் கொடுக்கவேண்டிய, சாதாரண குடிமகன் விசாரணை இல்லாமல் வெறுப்பில், கோபத்தில் தரக்கூடாத) தண்டனையை
  ஆசரிந்து - ஆசு + அரிந்து - மாசை வேரோடு களைந்து
  அத்தம் அணியிடைப் பெற்று - தூய பொன்னை (களங்கத்தோடு கூடிய) நகையிலிருந்து பெற்று**
  நம் ஆசிரியர் அன்புமடைந் தீர் - ஆசிரியர் அகரம் அமுதாவின் பாராட்டையும் பெற்றீர்.

  ** "ஆசிரியர் கருத்திலிருந்து நேர்மாறாக இருப்பதால், இப்போது அகரம் அமுதாவின் கோபத்திற்கும் ஆளாவேனோ ?, ஆண்டவா...."

  பதிலளிநீக்கு
 26. அமுதா அவர்களே, தமிழநம்பி அவர்களே: திருத்தங்களுக்கு நன்றி. ஒற்று சேர்க்கையும், புணர்ச்சி விதிகளும், பாவியலிலும், வாழ்க்கையியலிலும் புரிந்து கொள்வது கஷ்டமாகத்தான் இருக்கிறது. :-)

  பதிலளிநீக்கு
 27. முன்பிட்ட மறுமொழியில் பா இரண்டாவது அடியில் தளை தட்டுகின்றதோ என்று ஐயம், இதோ திருத்தப்பட்டது:

  தூக்கிடும் குற்றம் தயவாய்த் துடைத்தருளில்
  மிக்கதோர் மாற்றங் கொடுத்திட - தக்கபடி
  ஆசரிந்து அத்தம் அணியிடை பெற்று.நம்
  ஆசிரியர் அன்புமடைந் தீர்.

  பதிலளிநீக்கு
 28. ////அவனடிமை கூறியது...

  ** "ஆசிரியர் கருத்திலிருந்து நேர்மாறாக இருப்பதால், இப்போது அகரம் அமுதாவின் கோபத்திற்கும் ஆளாவேனோ ?, ஆண்டவா...."////

  ஃஆ ஃஆ ஃஆ. அருமை நண்பர் அவனடியார்மீது எனக்கு வெகுளிவருமா என்ன?

  பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com