வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

பொருள்பின்வரு நிலையணி!

இற்றைப் பாடத்தைப் பார்க்கும் முன்னம் சிற்சில செய்திகளைப் பகிர்ந்துகொள்ளலாம் எனக்கருதுகிறேன்.

முதலாவதாக:- கவிஞர். தமிழநம்பி அவர்கள்!

முதலில் அவருக்கெனது வாழ்த்துக்களை வெண்பாவில் வழங்கிவிடுகிறேன்:

பல்லாண்டு நீர்வாழப் பண்பார்ந்த பைந்தமிழிற்
சொல்லாண்டு பாடுகிறேன் தூயவரே! –இல்லாண்டு;
செய்யும் தொழிலாண்டு; சேரும் புகழாண்டு;
வையத்துள் வாழ்வாங்கு வாழ்க!


“ஏன்டா! இந்த ஒரு வெண்பாவை வைச்சிக்கிட்டு இன்னும் எத்தனை பேரைத்தார் வாழ்த்துவே? –என உமா அவர்கள் உரைப்பது கேட்கிறது. ஆகையால புதுசா, சுடச்சுட ஒரு வெண்பா:-

வளமை, பெருவாழ்வு, வன்னந் துளங்கும்
இளமை, குறைபடா இன்பம் –அளவின்றி
மன்னும் புகழும் மதியும் மிகப்படைத்(து)
இன்றுபோல் என்றும் இரும்!


வெண்பா எழுதலாம் வாங்க! வலையின் பெருமைக்குறிய ஆசிரியராக நம்மோடு கைகோர்த்திருக்கிறார் தமிழநம்பி அவர்கள். அவரது வரவு நம் வலையின் எதிர்காலத்தை நல்வழிநடத்த வழிவகுப்பதாவும், நம்மைப் புதிய, அரிய வகையில் எண்ணிக் கவிவடிக்கும் தூண்டிகோலாகும். அவரை நாம் எப்படிப் பயன்படுத்திக்கொள்கிறோம் என்பதைப்பொருத்தே நம் அடுத்தகட்ட வளர்ச்சி அடங்கியுள்ளது. நமக்கெழும் ஐயங்களை அவ்வப்பொழுது அவர்வழியாக அறிந்துகொண்டு அவரின் கவியறிவை நாமும் அடைவோமாக.

இரண்டாவதாக:-

புதிய அழகுடன் நடைபோடும் நம் வலையில் நாம் மட்டுமே எழுதி வருகிறோம். புதியவர்களை ஈர்க்கும் கமுக்கத்தை (மர்மம்) நாம் அறிந்திருக்க வில்லையோ என்ற ஐயம் எழுகிறது. நம் வலையைப் பலரின் பார்வைக்கும் விரிவுபடுத்துவது இன்றியமையாததாகிறது. யாம்பெற்ற இன்பம் இவ்வையமும் பெறவேண்டும் அல்லவா? திகழ், உமா, வசந்த் –போன்றவர்கள் (பிரபலமான பதிவர்கள்) ஏதேனும் வழிமுறையிருப்பின் உரைக்கவும்.

மூன்றாவதாக:-

திகழ் அவர்களின் வெண்பாவனம் வலையைப் பார்வையிட நேர்ந்தது. நல்லபல வெண்பாக்களைத் தொகுத்து வழங்கும் அரிய பணியைச்செய்து வருகிறார். ஒவ்வொரு வெண்பாவையும் படிக்கும்போது வியப்பே மேலிடுகிறது. நம் வலையின் பெண்பாற்கவிஞர் உமா அவர்களின் எண்ணிறந்த வெண்பாக்கள் அவ்வலையில் இடம்பெற்றிருப்பது நமக்கெல்லாம் பெருமைக்குரிய செய்தியாகும். வாழ்க அவர் பணி!

நான்காவதாக:-

வெண்பா எழுதலாம் வாங்க வலையை மென்மேலும் மெருகேற்றுவது நம் ஒவ்வொருவரது கடமையுமாகும். பாடத்தில் உள்ளடக்கத்தில், ஈற்றடிகளில், மாற்றங்கள் நடைபெற வெண்டிக் கருதுவீராயின் தயங்காது உரைப்பீராக. இணையத்தில் வெண்பாப் பாடம் நடத்தும் வெகுசில வலைகளில் நம் வலையும் ஒன்று அதைத்தொய்வின்றிக் கொண்டுசெல்ல நாம் நம்மைப் புதுப்பித்துக்கொள்வதுடம் மற்றவரையும் கவர்ந்திழுக்க வேண்டும். அதற்கான வழிமுறைகள் அறிவீராயின் அவனடிமை போன்ற பட்டறிவு படைத்தோர் உரைக்கத் தவறவேண்டாம். நன்றிகள். இனி பாடத்திற்குச் செல்வோம்.


2.பொருள்பின்வரு நிலையணி:-

ஒரு பாவுள் ஒரே பொருளைத் தாங்கிப் பல சொற்கள் கையாளப் படின் அப்பா, பொருள் பின்வரு நிலையணியாம்.

காட்டு:-

அவிழ்ந்தன தோன்றி அலர்ந்தன காயா
நெகிழ்ந்தன நேர்முகை முல்லை –முகிழ்ந்திதழ்
விட்டன கொன்றை விரிந்த கருவினை
கொண்டன காந்தல் குலை!


மேலுள்ள பா, “அவிழ்தல், அலர்தல், நெகிழ்தல், முகிழ்தல், விரிதல்” ஆகிய வெவ்வேறு சொற்களைக் கொண்டிருப்பினும், “மலர்தல்” என்கிற ஒரே பொருளைத் தாங்கியமையான் பொருள் பின்வரு நிலையணியாகும்.

இக்கிழமைக்கு வெண்பாவின் முதற்சொல் வழங்கப்படும்.

இக்கிழமைக்கான வெண்பாவின் முதற்சொல்:- மன்றல்! (மணம்)


அகரம் அமுதா

34 கருத்துகள்:

 1. முதலில் தங்களின் பாக்களுக்கு வாழ்த்துகள்

  நம் வலை வளர்ந்து வருவது மட்டுமல்ல‌
  பலரின் பார்வையிலும் பட்டுள்ளது என்பது உண்மை.

  தேமா,
  புளிமாவைப் பற்றிய மருமம்(பயம்) தான்
  புதியவர்களை பாக்களைப் புனைய வராத‌ மறுமமாக‌ (இரகசியம்) இருக்கும் என்று நினைக்கின்றேன்.

  பதிலளிநீக்கு
 2. பாக்களைத் தொகுத்து வைக்க நினைத்தேன்.
  அதன் விளைவே "வெண்பா" வனம்.
  தங்களின் இடுகையின் வாயிலாக‌
  பலரின் பார்வைக்குக் கொண்டு வந்துள்ளீர்கள்.

  நன்றி அகரம் அமுதா அவர்களே

  பதிலளிநீக்கு
 3. /நம் வலையின் பெண்பாற்கவிஞர் உமா அவர்களின் எண்ணிறந்த வெண்பாக்கள் அவ்வலையில் இடம்பெற்றிருப்பது நமக்கெல்லாம் பெருமைக்குரிய செய்தியாகும்./

  உமா அவர்களுக்கு இந்த நேரத்தில்
  நன்றி நவில்கின்றேன்.

  பதிலளிநீக்கு
 4. திகழ், நானல்லவோ நன்றி சொல்ல வேண்டும். உங்கள் உயர்ந்த உள்ளத்திற்கு நெஞ்சார்ந்த நன்றி. வலையை இன்னும் பார்க்கவில்லை. உடனே பார்க்கிறேன்.
  அன்புடன் உமா.

  பதிலளிநீக்கு
 5. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 6. திகழ் அவர்களின் கருத்துரை என்னை நெகிழச்செய்கின்றன. வெண்பாவிற்கான நம்வலை பலரது பார்வையிலும் பட்டிருக்கிறது, அதுபோல் நன்மதிப்பையும் பெற்றிருக்கிறது என்பதில் ஐயமில்லை. அதனால்தான் நம்வலையில் வந்து தாங்களும் வெண்பா எழுத அச்சுகிறார்கள் என நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 7. புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
  புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
  நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
  பல தள செய்திகள்...
  ஓட்டுப்பட்டை வேண்டாம்...
  எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
  முழுவதும் தமிழில் படிக்க....  தமிழ்செய்திகளை வாசிக்க

  தமிழ்செய்திகளை இணைக்க

  ஆங்கில செய்திகளை வாசிக்க

  வலைப்பூ தரவரிசை

  பதிலளிநீக்கு
 8. ஒரு காரியம் தீயதோ, நல்லதோ, தம் நண்பர் அதை செய்வதற்கு முன், அதன் தராதரத்தைப் பற்றி இங்கிதத்துடன் அறிவுரை கூறும் நண்பர் நமக்கு அருகிலேயே [எப்போதும் திறந்த கதவுடன் (அதாவது, மனத்துடன்)] இருந்தால், வாழ்க்கையில் வெற்றி நிச்சயம். அப்படித்தானே மூக்கு இருக்கிறது வாய்க்கு:

  மன்றல் மணத்திலே நல்லுணவைக் காட்டிடும்
  நன்றல்ல வென்றாலும் உண்ணா துரைத்திடும்
  வென்றே உயர்ந்திடுவார் தம்வாய்க்கு நாசிபோல்
  நண்பர் அருகிலுள் ளார்
  .

  பதிலளிநீக்கு
 9. அவனடிமை அவர்களுக்கு! தங்கள் உவமை கண்டு வியந்தேன். புதிய உவமை. பாடலும் தேனாய் இனிக்கிறது. தங்கள் பாவாற்றல் வியப்படையச்செய்கிறது. வாய்த்துக்கள்.

  சிறு ஐயம்:-

  மன்றல் என்றாலும் மணம் என்றே பொருள். அப்படியிருக்க "மன்றல் மணத்தை" எனவந்து மணம் என்ற சொல் இருமுறை வரலாமா? (வெவ்வேறு பொருளைத் தராதவிடத்து அப்படி வருவது ஏற்புடையதல்ல என்பதென் கருத்து) இரண்டாம் சொல்லை நீக்கிவிட்டு வேறுசொல்லைப் பயன்படுத்த வழியுள்ளதா என ஆராயவும். நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 10. /ஒரு காரியம் தீயதோ, நல்லதோ, தம் நண்பர் அதை செய்வதற்கு முன், அதன் தராதரத்தைப் பற்றி இங்கிதத்துடன் அறிவுரை கூறும் நண்பர் நமக்கு அருகிலேயே [எப்போதும் திறந்த கதவுடன் (அதாவது, மனத்துடன்)] இருந்தால், வாழ்க்கையில் வெற்றி நிச்சயம். அப்படித்தானே மூக்கு இருக்கிறது வாய்க்கு:/

  அற்புதமான உவமை
  அவனடிமை அவர்களே

  பதிலளிநீக்கு
 11. //மன்றல் என்றாலும் மணம் என்றே பொருள். அப்படியிருக்க "மன்றல் மணத்தை" எனவந்து மணம் என்ற சொல் இருமுறை வரலாமா? //

  பொருள் தெரியாததால் கணினி அகராதியில் பார்த்தபோது 'மன்றல்' என்றால் fragrance என்று இட்டிருந்தார்கள். நீங்கள் 'மணம்' என்று கொடுத்திருந்தீர்கள். சரி வேறு இலக்கியங்களில், கவிதைகளில் உபயோகித்திருக்கிறார்களா என்று பார்த்ததில், 'மன்றல் மணம்' என்று உபயோகித்திருப்பது தெரிந்தது.

  சரி, இதையெல்லாம் தள்ளுங்கள். தளத்தாசான் சொல்லிவிட்டால் மாற்றித்தான் ஆகவேண்டும்; பிடியுங்கள் (ஒரே ஒரு எழுத்தை மாற்றிய) பா:

  மன்றல் கணத்திலே நல்லுணவைக் காட்டிடும்
  நன்றல்ல வென்றாலும் உண்ணா துரைத்திடும்
  வென்றே உயர்ந்திடுவார் தம்வாய்க்கு நாசிபோல்
  நண்பர் அருகிலுள் ளார்
  .

  நன்றி.

  பதிலளிநீக்கு
 12. ////அவனடிமை கூறியது...

  பொருள் தெரியாததால் கணினி அகராதியில் பார்த்தபோது 'மன்றல்' என்றால் fragrance என்று இட்டிருந்தார்கள். நீங்கள் 'மணம்' என்று கொடுத்திருந்தீர்கள். சரி வேறு இலக்கியங்களில், கவிதைகளில் உபயோகித்திருக்கிறார்களா என்று பார்த்ததில், 'மன்றல் மணம்' என்று உபயோகித்திருப்பது தெரிந்தது. //////


  தங்கள் மறுமொழியைப் பார்த்தபின் அகரமுதலியை ஆராய்ந்தேன்.

  மன்றல் என்ற சொல்லுக்கு, " திருமணம், மணம்,புணர்ச்சி, நெடுந்தெரு, பாலைப்பண்வகை" என்றெல்லாம் பொருள் விரிகிறது. இன்னும் பல பொருள்கள் இருக்கலாம். ஆக, தங்களது முந்தைய "மன்றல் மணத்தை" ஏற்கிறேன்.

  பதிலளிநீக்கு
 13. மணம்வீசும் பூக்களைப் பாருங்கள் மாலையில்
  மண்ணில் மரித்தாலும் கண்ணில் கவலையைக்
  காட்டுவ தில்லை மனிதா இதைப்புரிந்தால்
  மாட்டுமே வாழ்க்கைவிருந் து.

  பதிலளிநீக்கு
 14. மன்றல் கமழும் மலர்மாலைச் சூடியே
  மன்றல் மணக்க மடக்கொடி வந்துற்றாள்
  மன்றல்; விரைந்தே மணமகன் தானுமுற்றான்
  மன்றல் மகிழ நினைத்து.

  மன்றல் கமழும் - மணம் வீசும்
  மன்றல் மணக்க - தான் நடந்துவரும் தெருவெல்லாம் மணம்வீச
  மடக்கொடி வந்துற்றள் மன்றல் - கொடிபோல் இடையையுடைய மணப்பெண் திருமணக்கூடம் வந்துசேர்ந்தாள்
  மன்றல் மகிழ நினைத்து. - அவளைக் கூடிமகிழ்வதை எண்ணியவாறே மணமகன்தானும் விரைந்து வந்தான்.

  பதிலளிநீக்கு
 15. ////உமா கூறியது...

  மன்றல் கமழும் மலர்மாலைச் சூடியே
  மன்றல் மணக்க மடக்கொடி வந்துற்றாள்
  மன்றல்; விரைந்தே மணமகன் தானுமுற்றான்
  மன்றல் மகிழ நினைத்து.////

  அப்படிப்போடு.....! அழகான வெண்பா! மிகச்சிறந்த சொல்லாளுமை. வாழ்த்துக்கள் தோழி!

  பதிலளிநீக்கு
 16. /////திகழ்மிளிர் கூறியது...

  மணம்வீசும் பூக்களைப் பாருங்கள் மாலையில்
  மண்ணில் மரித்தாலும் கண்ணில் கவலையைக்
  காட்டுவ தில்லை மனிதா இதைப்புரிந்தால்
  மாட்டுமே வாழ்க்கைவிருந் து.////

  வாழ்க! திகழ்! வெண்பா அருமை... அருமை... மாந்த வாழ்வில் இன்றைக்கு மகிழ்ச்சியென்பது இன்றியமையாத ஒன்று. அதைப் பெறும் வழியை அழகாக உரைத்துள்ளீர்கள். மீண்டும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 17. //திகழ்மிளிர் கூறியது...
  மணம்வீசும் பூக்களைப் பாருங்கள் மாலையில்
  மண்ணில் மரித்தாலும் கண்ணில் கவலையைக்
  காட்டுவ தில்லை மனிதா இதைப்புரிந்தால்
  மாட்டுமே வாழ்க்கைவிருந் து
  //

  விருந்தும் மருந்தும் உடையதே வாழ்க்கை
  நறுக்கென் றியம்பினார் நண்பர் - வருந்தா(து)
  திகழ்மிளிர்ந் தேயென்றும் மன்றல் மணக்க
  புகழோ(டு) உடல்விடு வார்
  .

  பதிலளிநீக்கு
 18. //உமா கூறியது...
  மன்றல் கமழும் மலர்மாலைச் சூடியே
  மன்றல் மணக்க மடக்கொடி வந்துற்றாள்
  மன்றல்; விரைந்தே மணமகன் தானுமுற்றான்
  மன்றல் மகிழ நினைத்து
  //

  நினைத்தே நெகிழும் பிரிவின் துயரம்
  கணத்தில் மறந்தாடிக்* களிப்பில் - கணவனுள்
  பொங்கியெழும் காதலை சல்லாப மாக்கி
  சிருங்காரப்+ பாப்புனைந் தீர்
  .

  *ஆடி மாதத்தில், மனைவியின் பிரிவை தாங்காத கணவனின் உள்ளத்தை இத்தளத்தின் வேறு ஒரு இடுகையின் மறுமொழியில் படம் பிடித்து காட்டி ஒரு வெண்பா புனைந்தவர் கவிஞர் உமா அவர்கள் என்பதை நினைவு கூர்ந்தேன்..

  + 'சிருங்காரம்' வடமொழிச் சொல் என்று நினைப்பவருக்கு ஒரு மாற்றுப் பா:

  நினைத்தே நெகிழும் பிரிவின் துயரம்
  கணத்தில் மறந்தாடிக்* களிப்பில் - கணவனுள்
  பொங்கியெழும் காதலை சல்லாப மாக்கியே
  சிங்காரப் பாப்புனைந் தீர்
  .

  பதிலளிநீக்கு
 19. அவனடிமையார்க்கு......

  ஆக்குகிறீர் பற்பலவாய் அன்பொழுகும் வெண்பாக்கள்
  தேக்குகிறீர் சொற்றோருஞ் செந்தமிழை; -தாக்குகிறீர்
  அன்பீர்க்கால் எங்கள் அனைவர் உளங்களையும்
  நன்பாக்கள் என்னும்வில் கொண்டு!  ////+ 'சிருங்காரம்' வடமொழிச் சொல் என்று நினைப்பவருக்கு ஒரு மாற்றுப் பா://///


  தாங்களே உரைக்கப் புகுந்தமையால் நான் தொடர்வதில் தப்பில்லை எனக்கருதுகிறேன்.

  அய்யா!

  சிங்காரமும் தமிழில்லை. வடசொல்லே. மேலும் சல்லாபமும் தமிழில்லை.

  இருப்பினும் தாழ்வொன்றுமில்லை. அறியாமல் நிகழும் பிழைகளைப் பெருது படுத்தவேண்டாம். நாளடைவில் எல்லாம் சரியாகிவிடும். வாழ்த்துக்கள்,,

  பதிலளிநீக்கு
 20. 'சிங்காரச் சென்னை' என்ற பதத்தை 'தமிழ் காப்போம்' என்று சொல்லித் திரியும் அரசியல்வாதிகள் எப்படி அனுமதித்தார்கள் தெரியவில்லை...

  வேற்றுமொழி சொற்களை காட்டியதற்கு நன்றி. உமா அவர்களை பாராட்ட சிறு பாதை இடவந்து, அது நெடுந்தெரு ஆகிவிட்டது.

  கடைசி முயற்சி:
  நினைத்தே நெகிழும் பிரிவின் துயரம்
  கணத்தில் மறந்தாடிக்* களிப்பில் - கணவனுள்
  தென்றலென வீசிடும் காதல் கவிதையை
  மன்றல் மணமாக்கி னீர்


  'மன்றல்'-ஐ : 'புணர்ச்சி' என்று பொருள் கொள்ளலாம்

  அதேபோல், திகழ்மிளிர் பாவுக்குள்ள மறுமொழி வெண்பாவையும் மாற்ற விரும்புகிறேன்:

  விருந்தும் மருந்தும் உடையதே வாழ்க்கை
  நறுக்கென் றியம்பினார் நண்பர் - வருந்தா(து)
  திகழ்மிளிர்ந் தேமனிதர் மன்றல் மணக்க
  புகழோ(டு) உடல்விடு வார்.


  முன்பு எழுதியதை தவறாக பொருள் கொள்ளக் கூடும்.

  பதிலளிநீக்கு
 21. திரு. அவனடியார் அவர்களுக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 22. ////அவனடிமை கூறியது...

  'சிங்காரச் சென்னை' என்ற பதத்தை 'தமிழ் காப்போம்' என்று சொல்லித் திரியும் அரசியல்வாதிகள் எப்படி அனுமதித்தார்கள் தெரியவில்லை.../////

  நீங்கள் கருதிக் குறிப்பிடும் அவ்வரசியல் ஆளர்களே தமிழைக் கொன்றொழிக்கும் பெருநோயாவர். ஆக அவர்களைக் கணக்கில் கொள்ள வேண்டாம். உண்மைத் தமிழின உணர்வும், மொழிப்பற்றும் உடைய அறிஞர்பெருமக்கள் எதிர்ப்பைக் காட்டிக் கொண்டுதான் வருகிறார்கள்.  பாக்களைப் படித்து மகிழ்ந்தேன். வாழ்த்துக்கள் அவனடியார் அவர்களே!

  மேலுமோர் கருத்து. என்னளவில் தான் தனித்தமிழாளனே தவிர மற்றவரிடம் திணிக்க முற்படுபவன் அல்ல. ஆக, மற்றவர் ஓரிரு வேற்றுச்சொல் கலந்து எழுதுவதில் எனக்கு எந்த மனத்துயரும் கிடையாது.

  எனக்காகத் தவிர்க்க வேண்டாம். உங்களுக்கும் தனித்தமிழுணர்வு மேலோங்கி இருக்குமாயின் தனித்தமிழில் எழுதுக.

  பதிலளிநீக்கு
 23. முழுமையாக தமிழில் எழுத ஆசைதான். ஆனால், வரையரைக்குட்பட்ட சொல்லறிவால் (limited vocabulary) சரியான சொற்கள் கிடைப்பது கடினமாக இருக்கிறது. பலமுறை சில பொருள்களுக்கும், வேற்று மொழி வார்த்தைகளுக்கும் தமிழ் சொல் உள்ளதோ என்ற ஐயமும் எழுகிறது.

  ஆனால் தமிழ்ச் சொல்வளம் (vocabulary?) முன்னைக்கு இப்போது நல்ல மேம்பாடு (improvement) அடைந்துள்ளது என நினைக்கிறேன்.

  இது குறித்து ஒரு கேள்வி: பண்டை இலக்கியங்களில், 'அகநானூறு', 'புறநானூறு' இரண்டும் பிரசித்தி. இதில் 'அகம்' என்பது வடமொழிச் சொல் அல்லவா ? இதற்கு தமிழ்ச் சொல் உள்ளதா ? இல்லை இதையே தமிழாக எடுத்துக் கொள்ளலாமா ? பண்டைய இலக்கியங்களில், வடமொழிச் சொற்களை சுலபமாக, சாதாரணமாக உபயோகித்தார்களோ என்று கூட தோன்றுகிறது.

  மொழி, உணர்வை வெளிப்படுத்தும் ஒரு கருவியே அல்லவா ? அதனால், ஆழமான பற்று இருந்தும் கூட, அவர்களுக்கு அதீதமான மொழியைக் காக்க வேண்டும் என்கிற வெறி (possessiveness என்று சொல்ல விரும்புகிறேன், அதற்கு தமிழ்ச்சொல் தெரியவில்லை) இல்லை என்று தான் நினைக்கிறேன்.

  வள்ளுவரும் 'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு' என்ற குறளிலேயே
  அகரம்
  ஆதி
  பகவன்
  உலகு (லோகம்)
  என்ற சம்ஸ்கிருத வேர் உள்ள தமிழ் வாக்குகளை உபயோகித்துள்ளாரே..

  எனக்கு இரண்டு மொழியும் நன்றாகத் தெரியாததால், தமிழ் தாய் மொழியாதலால், தமிழ் வடமொழியைக் காட்டிலும் சிறிது கூடுதல் அறிவேன் என்பதால் நான் தமிழ் விரும்பி, வடமொழி எதிரி அல்ல என்று சொல்லி நிறுத்திக் கொள்கிறேன்.

  நன்றி

  பதிலளிநீக்கு
 24. நினைத்தே நெகிழும் பிரிவின் துயரம்
  கணத்தில் மறந்தாடிக்* களிப்பில் - கணவனுள்
  தென்றலென வீசிடும் காதல் கவிதையை
  மன்றல் மணமாக்கி னீர்

  மிக்க நன்றி அய்யா. என் இரு பாக்களையும் கண்ணுற்று தாங்கள் கூறிய பாராட்டு என்னை மகிழ்ச்சியில் திளைக்க செய்கிறது.
  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 25. அவனடியார் அவர்களுக்கு! இத்தளம் தனித்தமிழில் எழுதக் கட்டாயப்படுத்தும் தளம் அல்ல. இத்தளத்தை வழிநடத்தும் நான், தமிழ்நம்பி இராசகுரு போன்றோரே தனித்தமிழ் விரும்பிகள். எங்கள் தனித்தமிழ்க்கொள்கைகளை ஒருநாளும் இவ்வலையின் வழி வலியுறுத்த மாட்டோம். இது கருத்தில்கொள்ள வெண்டுகிறேன்.


  ===== ====== =======


  அகம் என்கிற சொல்பற்றி எனக்கு முழுமையாகத் தெரியவில்லை. தமிழ நம்பி அய்யாவுடன் கலந்துரையாவிட்டுச் சொல்கிறேன்.

  மொழி கருவிதான் அதில் மாற்றுக் கருத்தில்லை. இக்கருவியை இந்தியாவின் ஆட்சிமொழிகளுள் ஒன்றாக ஆக்க இந்தியா ஏன் மறுக்கிறது. அப்படி ஏற்பதால் அவர்களுக்கு என்ன இழப்போ அதே இழப்புத்தான் தமிழில் பிறசொல் கலப்பதால் நிகழக்கூடியதும்.


  ////வள்ளுவரும் 'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு' என்ற குறளிலேயே
  அகரம்
  ஆதி
  பகவன்
  உலகு (லோகம்)
  என்ற சம்ஸ்கிருத வேர் உள்ள தமிழ் வாக்குகளை உபயோகித்துள்ளாரே..//////


  அழகிய வினா!!!!

  ஆதி என்பது முழுக்க முழுக்க தமிழ்ச்சொல் ஆகும். இதில் குழப்பம் வேண்டாம். பல தமிழ்ச்சொற்களைத் தனதுபோல் சமற்கிருதம் ஆக்கிக் கொண்டதால் எழும் ஐயங்களே இதுபோன்ற குழப்பங்கள்.

  திருக்குறளில் தமிழல்லாத சொற்களின் எண்ணிக்கை வெறும் 14 -மட்டுமே! இப் 14 -சொற்களையும் வள்ளுவன்தான் சேர்த்தானா என்பதில் ஐயம் நிலவுகிறது. இடைச்செருகளாக இருக்கலாம் என்ற கூற்று நிலவுகிறது.

  /////பண்டைய இலக்கியங்களில், வடமொழிச் சொற்களை சுலபமாக, சாதாரணமாக உபயோகித்தார்களோ என்று கூட தோன்றுகிறது. /////


  இருக்கலாம், ஆனால் மிக்குறைவு என்பது மட்டும் உண்மை. பிற்கால இலக்கியங்களே மணிப்பிரவாள நடை என்ற பெயரில் வட சொற்களை அதிகமாகப் பெற்றுக்கொண்டு தமிழை இருபாலும் அல்லாத அலிப்பாலாக்கிவிட்டது.  /////எனக்கு இரண்டு மொழியும் நன்றாகத் தெரியாததால், தமிழ் தாய் மொழியாதலால், தமிழ் வடமொழியைக் காட்டிலும் சிறிது கூடுதல் அறிவேன் என்பதால் நான் தமிழ் விரும்பி, வடமொழி எதிரி அல்ல என்று சொல்லி நிறுத்திக் கொள்கிறேன்.//////


  நாங்களும் வடமொழிக்கு எதிரிகள் அல்ல. தமிழை ஆழமாகக் காதலிக்கிறோம் அவ்வளவே. ஒருபெண்ணை மனமொன்றிக் காதலிப்பவன் அப்பெண்ணைத்தவிற வேறுபெண்ணை எப்படி ஏறெடுத்தும் பார்ப்பதில்லையோ! அப்பதித்தான் நாங்களும் பிறமொழிகளையும் ஏறெடுத்தும் பார்க்காமல் இருக்கிறோம்.

  பிற பெண்களை ஏறெடுத்தும் பார்க்காத இராமன் கற்புக்கரசன் என்றால் நாங்களும் அப்படியே! எங்கள் வழக்கு என்னவென்றால் வேற்றுமொழியைப் படிக்கக் கூடாது எழுதக் கூடாது என்பதல்ல. ஆயிரம் மொழிகளை வேண்டுமானாலும் கற்போம். எதிலும் தனித்தன்மை வேண்டும் என்பதே எங்கள் வழக்காடல்.

  ஆக, பலமொழி தெரிந்தவர்களை நாங்கள் போற்றுகிறோம். அவர்கள் ஆற்றல் கண்டு வியக்கிறோம். பேச்சில் பலமொழிச்சொற்களையும் பயன்படுத்திச் சீரழிக்கக் கூடாது என்பதே என்போன்றோரின் பார்வை.

  பதிலளிநீக்கு
 26. அவனடியார் அவர்களுக்கு! இத்தளம் தனித்தமிழில் எழுதக் கட்டாயப்படுத்தும் தளம் அல்ல. இத்தளத்தை வழிநடத்தும் நான், தமிழ்நம்பி இராசகுரு போன்றோரே தனித்தமிழ் விரும்பிகள். எங்கள் தனித்தமிழ்க்கொள்கைகளை ஒருநாளும் இவ்வலையின் வழி வலியுறுத்த மாட்டோம். இது கருத்தில்கொள்ள வெண்டுகிறேன்.


  ===== ====== =======


  அகம் என்கிற சொல்பற்றி எனக்கு முழுமையாகத் தெரியவில்லை. தமிழ நம்பி அய்யாவுடன் கலந்துரையாவிட்டுச் சொல்கிறேன்.

  மொழி கருவிதான் அதில் மாற்றுக் கருத்தில்லை. இக்கருவியை இந்தியாவின் ஆட்சிமொழிகளுள் ஒன்றாக ஆக்க இந்தியா ஏன் மறுக்கிறது. அப்படி ஏற்பதால் அவர்களுக்கு என்ன இழப்போ அதே இழப்புத்தான் தமிழில் பிறசொல் கலப்பதால் நிகழக்கூடியதும்.


  ////வள்ளுவரும் 'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு' என்ற குறளிலேயே
  அகரம்
  ஆதி
  பகவன்
  உலகு (லோகம்)
  என்ற சம்ஸ்கிருத வேர் உள்ள தமிழ் வாக்குகளை உபயோகித்துள்ளாரே..//////


  அழகிய வினா!!!!

  ஆதி என்பது முழுக்க முழுக்க தமிழ்ச்சொல் ஆகும். இதில் குழப்பம் வேண்டாம். பல தமிழ்ச்சொற்களைத் தனதுபோல் சமற்கிருதம் ஆக்கிக் கொண்டதால் எழும் ஐயங்களே இதுபோன்ற குழப்பங்கள்.

  திருக்குறளில் தமிழல்லாத சொற்களின் எண்ணிக்கை வெறும் 14 -மட்டுமே! இப் 14 -சொற்களையும் வள்ளுவன்தான் சேர்த்தானா என்பதில் ஐயம் நிலவுகிறது. இடைச்செருகளாக இருக்கலாம் என்ற கூற்று நிலவுகிறது.

  /////பண்டைய இலக்கியங்களில், வடமொழிச் சொற்களை சுலபமாக, சாதாரணமாக உபயோகித்தார்களோ என்று கூட தோன்றுகிறது. /////


  இருக்கலாம், ஆனால் மிக்குறைவு என்பது மட்டும் உண்மை. பிற்கால இலக்கியங்களே மணிப்பிரவாள நடை என்ற பெயரில் வட சொற்களை அதிகமாகப் பெற்றுக்கொண்டு தமிழை இருபாலும் அல்லாத அலிப்பாலாக்கிவிட்டது.  /////எனக்கு இரண்டு மொழியும் நன்றாகத் தெரியாததால், தமிழ் தாய் மொழியாதலால், தமிழ் வடமொழியைக் காட்டிலும் சிறிது கூடுதல் அறிவேன் என்பதால் நான் தமிழ் விரும்பி, வடமொழி எதிரி அல்ல என்று சொல்லி நிறுத்திக் கொள்கிறேன்.//////


  நாங்களும் வடமொழிக்கு எதிரிகள் அல்ல. தமிழை ஆழமாகக் காதலிக்கிறோம் அவ்வளவே. ஒருபெண்ணை மனமொன்றிக் காதலிப்பவன் அப்பெண்ணைத்தவிற வேறுபெண்ணை எப்படி ஏறெடுத்தும் பார்ப்பதில்லையோ! அப்பதித்தான் நாங்களும் பிறமொழிகளையும் ஏறெடுத்தும் பார்க்காமல் இருக்கிறோம்.

  பிற பெண்களை ஏறெடுத்தும் பார்க்காத இராமன் கற்புக்கரசன் என்றால் நாங்களும் அப்படியே! எங்கள் வழக்கு என்னவென்றால் வேற்றுமொழியைப் படிக்கக் கூடாது எழுதக் கூடாது என்பதல்ல. ஆயிரம் மொழிகளை வேண்டுமானாலும் கற்போம். எதிலும் தனித்தன்மை வேண்டும் என்பதே எங்கள் வழக்காடல்.

  ஆக, பலமொழி தெரிந்தவர்களை நாங்கள் போற்றுகிறோம். அவர்கள் ஆற்றல் கண்டு வியக்கிறோம். பேச்சில் பலமொழிச்சொற்களையும் பயன்படுத்திச் சீரழிக்கக் கூடாது என்பதே என்போன்றோரின் பார்வை.

  பதிலளிநீக்கு
 27. சொற்பின்வரு நிலையணி
  ஒரு சொல் பல பொருளைத தருதல்.

  மன்றல் கமழும் மலர்மாலைச் சூடியே
  மன்றல் மணக்க மடக்கொடி வந்துற்றாள்
  மன்றல்; விரைந்தே மணமகன் தானுமுற்றான்
  மன்றல் மகிழ நினைத்து.
  --------------


  பொருள்பபின்வரு நிலையணி.

  விண்நோக்கும் வேறுபொருள் காணும் விழியிரண்டின்
  கண்மணிகள் தன்னைத்தான் பார்த்ததுண்டோ -மண்மீதில்
  என்நலந் தான்பெரி தென்னும் மடநெஞ்சே
  தன்நலஞ் சற்றே தவிர்.

  நேரிசையகவும் உள்ளது. சரிதானே.

  நோக்கும்,காணும்,பார்க்கும் என்பன ஒரே பொருளைத் தருவன.
  -------

  சொற்பொருள் பின்வருநிலையணி.ஒர் சொல் பல முறை வந்து ஒரே பொருளைத் தருதல்.

  புரிந்து கொண்டது சரிதானே?பாவோடு வருகிறேன்.

  பதிலளிநீக்கு
 28. உமா அவர்களுக்கு!

  அருமை. அருமை. இருபாக்களும் நெஞ்சைப் பிணிக்கின்றன. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 29. தமிழ்ச்சொல் அத்தனைக்கும் வேர் உண்டு
  தயது செய்து மீண்டும் ஒருமுறை இவை எல்லாம்
  தமிழ்ச்சொல் அல்ல என்ற விளம்ப வேண்டாம்.

  பகவன் என்பதின் விளக்கம்

  ------------
  /பகு > பகவு> பகவன்; அல்லது
  பகு > பகம் > பகம்+அன் = பக+அன் = பகவன்;
  பகு > பங்கு > பங்கன்;
  பகு > பாகு > பாகன்;
  பகு > பாகு > பங்கு > பாங்கன்.

  பகம் என்ற சொல்லுக்கு இறைவனின் ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட அடைவுகள் (சிறப்பியல்புகள் ) என்ற பொருள் மட்டுமின்றி, வேறு பொருள்களுமுண்டு. மனித உறுப்பு, கொக்கு, குருவி என்ற பொருள்களும் கூறப்படும். ஆதலின், பகவு+ அன் எனப் பிரிப்பதே குழப்பமொன்றுமில்லாததாம். /

  /பகவன் என்பது பகுத்துக்காப்பவன் அல்லது எல்லாவுயிர்கட்கும் படியளப்பவன் (Dispenser) என்று பொருள்படும் தென் சொல். பகு - பகவு - பகவன்/

  /பகு > பகவு > பகவன் (அல்லது: பகம்+அன்= பக +அன் = பகவன்) பகு > பாகு > பாகன்; பகு > பங்கு> பங்கன். பகு > பாகு > பாங்கு > பாங்கன்/

  /பகு என்ற தமிழ் அடிச்சொல்லுக்கும் bhaj, ... பகவன் என்பதற்குப் பொண்பால் வடிவம் " பகவதி" என்று ... ஆதிபகவன் என்பதிலுள்ள பகவு+அன்/

  பதிலளிநீக்கு
 30. உலகு என்பதின் விளக்கம்

  ------------------

  /உலவுதல் (to go around) என்றும் தமிழில் சொல்லப் படும். உலத்தல் என்பதும் வட்டமாய் வருவது தான். உலவுதல் என்னும் வினை, உலா என்ற பெயர்ச்சொல்லையும் உருவாக்கும். கோயில்களுக்கு வெளியே உலவிச் சுற்றி வரும் திருமேனியை உலாத் திருமேனி (=உற்சவ மூர்த்தி; உலாத் திருமேனி போய், உற்சவ மூர்த்தியே இப்பொழுது ஊரெங்கும் புழங்குகிறது.) என்பார்கள். உலவு என்னும் பெயர்ச்சொல் உலகு என்றும் திரியும்./
  /தேவநேயப் பாவாணர் உல், சுல் என்று தொடங்கி 300க்கும் அதிகமான சொற்களை ஐயம் திரிபற காட்டியுள்ளார். உல், உலா, உலவு, உலகம் எல்லாம் 100% தமிழ். வடமொழி லோகம், திராவிடத்தில் இருந்து பெற்றது. உலகு என்றாலே சுழலுவது, உலாவருவது - பொருள் செறிந்த சொல்./

  /தேவநேயப் பாவாணர், ‘லோக என்னும் வடசொல் பார்க்கப் படுவது என்ற பொருளில்தான்
  வழங்கப்பட்டுள்ளது’ என்பார். உல்-உலக்கை (நெல்குற்றும் கழி) உல்-உலா, உலவு
  (காலார உலவுதல்) உல்-உருண்டை உல்-உலகம் சுழல்வது (உருண்டையானது) என்பது அவரின்
  விளக்கம். /

  பதிலளிநீக்கு
 31. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 32. மிக்க நன்றிகள் திகழ் அவர்களே! அவனடியாருக்கு விளக்கங்கள் வழங்கப் பொருத்தமான நூல்கள் என்னிடம் இல்லை. அழகாக விளக்கி இச்சிக்கலைத் தீர்த்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 33. மிக்க நன்றிகள் திகழ் அவர்களே! அவனடியாருக்கு விளக்கங்கள் வழங்கப் பொருத்தமான நூல்கள் என்னிடம் இல்லை. அழகாக விளக்கி இச்சிக்கலைத் தீர்த்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 34. திகழ்மிளிர் அவர்களே: விளக்கத்திற்கு நன்றி.

  நான் முன்பே சொன்னது போல இரண்டு மொழிகளிலுமே எனக்கு ஆழமான அறிவு இல்லை. ஆனால், நயத்திலும், இலக்கியங்களின், சாஸ்திரங்களின் ஆழமான கருத்துக்களிலும் செறிவு மிகுந்த இரண்டு மொழிகளிலுமே பற்று உண்டு. இரண்டு கண்களுக்கு இடையே உயர்வு தாழ்வு என்னால் பார்க்கமுடியவில்லை.

  அதனால் இந்த வழக்கு எனக்கு தேவையில்லாத ஒன்று என்று எனக்கே நினைவுபடுத்திக்கொள்ள, வடக்கையும் (கார்த்திகேயன், தேவானையின் கணவன்) தெற்கையும் (முருகன், வள்ளியின் மணாளன்) இணைத்த, உயர்சாதி, கீழ்சாதி, குலம், படித்தவர், படிக்காதவர் என்று வேற்றுமைகளை பாராத, இரு மொழிகளுக்கும் உரிமையாளனாகிய கந்தக் கடவுளை வணங்கி சமர்ப்பிக்கிறேன்:

  நாள்தோறும் கேட்டு நவில்வது நல்வாக்கா?
  தாள்போடு வேண்டாத பேச்செதற்கு? - மால்மருகன்
  தெய்வானை வள்ளி மணாளனைத் தேடாத
  வாய்செவியும் வீணே யறி!

  பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com