வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

தூங்கிசைச் செப்பலோசை வெண்பா

வெண்பாவிற்கு உரியது செப்பலோசை.

வெண்பாவில் மூன்றசைச்சீர் அதாவது காய்ச்சீர் மட்டும் இடம்பெற்றால், அது
ஏந்திசைச் செப்பலோசை வெண்பா. (எப்போதும் போல் ஈற்றுச்சீர் ஓரசைச்சீர்)

ஏந்திசைச் செப்பலோசையில் வெண்பா எழுதினோம்.

அடுத்து, தூங்கிசைச் செப்பலோசை கொண்ட வெண்பா அறிவோம்.

இது, நான்கடிப் பாடல்.

இதில் ஈரசைச்சீர்கள் மட்டுமே இடம்பெறும்.

இயற்சீர் வெண்டளை பெற்று வரும். (மா முன் நிரை, விளம் முன் நேர்)

வழக்கம் போல் நான்காம் அடியின் மூன்றாம் சீர் (இறுதிச்சீர்) ஓரசைச்சீராக இருக்கும்.

எங்கள் இனத்தினர் ஈழத் தமிழரைப்

பொங்கும் சினத்தினால் பூண்டற - எங்கும்

இற்றிடச் செய்யும் இராசபக் சேயுயிர்

வற்றிடும் நன்னாள் வரும்.

- புதுவை சந்தப்பாமணி அரங்க.நடராசனார்

தூங்கிசைச் செப்பலோசை அமைய, விருப்பமான கருத்தை வெளிப்படுத்தும் வெண்பா எழுதுவோம்.

33 கருத்துகள்:

 1. தூங்கிசைச் செப்பலோசைக்கான வெண்பா:-

  கனிவாய் மெதுவாய்க் கனிவாய்; உணவாய்
  உனையே தருவாய் உயிரே! -இனிநம்
  இருவாய் ஒருவாய் எனவாக் கிடுவாய்
  வருவாய் வரம்தரு வாய்!

  பதிலளிநீக்கு
 2. அகரம் அமுதா அவர்களே: எங்கேயோ படித்த நினைவு. வேறு தளத்தில் பதிவு செய்திருக்கிறீர்களோ?
  எப்படியிருந்தாலும், கவிஞரின் உள்ளக் கிடக்கையை நன்றாக வெளிப்படுத்துகிறது.

  பதிலளிநீக்கு
 3. அவனடியார் அவர்களே! முன்பே எழுதியதுதான். உள்ளக் கிடங்கையெல்லாம் கிடையாது. சும்மா....

  பதிலளிநீக்கு
 4. 'கனிவாய் குழந்தாய் கனிவாய்' எனநீ
  கனிவாய் உரைத்தாய் குகனே - முனிவாய்
  பரிவாய் பகர்ந்தாய் 'பரத்தினை யோர்வாய்'
  புரியா துழன்றிடு வேன்.


  'கனிவாய் குழந்தாய் கனிவாய்' - 'கனிபோன்ற வாயையுடைய குழந்தை போல அறியாத பருவத்தில் உள்ளவனே (மனிதனே): பக்குவப்படுவாய்'
  முனிவாய் - முனிவர்கள் வழியாக (மறைகளிலும், நன்னூல் சாஸ்திரங்களிலும், புராணங்களிலும்)
  'பரத்தினை யோர்வாய்': கடவுளை நினைப்பாய்

  பதிலளிநீக்கு
 5. /உள்ளக் கிடங்கையெல்லாம் கிடையாது. சும்மா..../

  'சும்மா... ' ?
  ஒரு கிளுகிளுப்பு..?

  :-)

  பதிலளிநீக்கு
 6. பாட்டு அருமை. வாழ்க அவனடியாரே!

  ///'சும்மா... ' ?
  ஒரு கிளுகிளுப்பு..?////

  சும்மா..... லக.. லக.. லக.. லக.. லக..

  பதிலளிநீக்கு
 7. அ.அ.ஐயா,
  அவனடிமை அய்யா,

  இருவரின் தூங்கிசைச் செப்பலோசைப் பாடல்களும் சிறப்பே.

  பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 8. கண்ணில் தெரியும் கறுப்பு, சடுதியில்
  விண்ணிலே பட்டாய் விரிப்பு, இருளிலே
  வெண்ணிலா வானின் வனப்பு;மலர்களே
  மண்ணின் வசந்த வெடிப்பு.

  நம்முன் மெதுவாக தோன்றும் கருமை ,கரிய பட்டு விரித்ததைப் போல் சட்டென்று பரவ அவ்விருளில் வெண்ணிலா தோன்றுவது வானின் அழகு. அதுபோல் பசுமை போர்த்திய வசந்த காலத்தில் பலவண்ண ம்லர்கள் மலர்வது மண்ணின் அழகு.[இயற்கையின் இரு நிகழ்வுகள் அழகால் ஒன்றையொன்று ஒப்புமை படுத்தப்பட்டன]
  சொல்ல வந்த கருத்து சரியாக சொல்லப்பட்டதா என தெரியவில்லை.]

  பதிலளிநீக்கு
 9. துணிவாய் எழுவாய்த் துயரைத் துடைப்பாய்
  பணிவாய் தணிவாய் பகையை அழிப்பாய்
  புணர்வாய் இணைவாய்ப் புகழைப் படைப்பாய்
  உணர்வாய் உயிர்பிழைப் பாய்.

  பதிலளிநீக்கு
 10. அகரம் அமுதா & அவனடிமை அவர்களே
  இருவரின் வரிகளும் அருமை
  வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 11. திகழ் அவர்களே! இத்துணை விரைவு கூடாதய்யா! அதற்குள் பாய்போடலாமா?

  தூங்கிசைச் செப்பலோசையுடன் கூடிய சொற்பொருட்பின்வருநிலையணி வெண்பா அருமை. அருமை. அருமை. வாழ்க.

  பதிலளிநீக்கு
 12. /////உமா கூறியது...
  கண்ணில் தெரியும் கறுப்பு, சடுதியில்
  விண்ணிலே பட்டாய் விரிப்பு, இருளிலே
  வெண்ணிலா வானின் வனப்பு;மலர்களே
  மண்ணின் வசந்த வெடிப்பு./////

  இழைபுத்தொடை அமையப் பாடியுள்ளீர்கள். வாழ்க. வெண்பாவில் இழைபுத்தொடை அமையப் பாடும் முறை அரிது. இயல்பாகச் செய்திருக்கிறீர்கள். வாழ்க.

  பதிலளிநீக்கு
 13. /////உமா கூறியது...
  கண்ணில் தெரியும் கறுப்பு, சடுதியில்
  விண்ணிலே பட்டாய் விரிப்பு, இருளிலே
  வெண்ணிலா வானின் வனப்பு;மலர்களே
  மண்ணின் வசந்த வெடிப்பு./////

  இழைபுத்தொடை அமையப் பாடியுள்ளீர்கள். வாழ்க. வெண்பாவில் இழைபுத்தொடை அமையப் பாடும் முறை அரிது. இயல்பாகச் செய்திருக்கிறீர்கள். வாழ்க.

  பதிலளிநீக்கு
 14. /////உமா கூறியது...
  கண்ணில் தெரியும் கறுப்பு, சடுதியில்
  விண்ணிலே பட்டாய் விரிப்பு, இருளிலே
  வெண்ணிலா வானின் வனப்பு;மலர்களே
  மண்ணின் வசந்த வெடிப்பு./////

  இழைபுத்தொடை அமையப் பாடியுள்ளீர்கள். வாழ்க. வெண்பாவில் இழைபுத்தொடை அமையப் பாடும் முறை அரிது. இயல்பாகச் செய்திருக்கிறீர்கள். வாழ்க.

  பதிலளிநீக்கு
 15. உமா,

  அ.அ. குறிப்பிட்டவாறு அழகாக இயைபுத் தொடை அமைத்து எழுதியுள்ளீர்கள்.

  பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 16. திகழ்மிளிர்,

  உங்கள் தூங்கிசைச் செப்பலோசை வெண்பா,

  துணிவாய் எழுவாய்த் துயரைத் துடைப்பாய்
  பணிவாய் தணிவாய் பகையை அழிப்பாய்
  புணர்வாய் இணைவாய்ப் புகழைப் படைப்பாய்
  உணர்வாய் உயிர்பிழைப் பாய்.

  அருமை.

  பதிலளிநீக்கு
 17. நன்றி அகரம் அமுதா, தமிழ்நம்பி அவர்களே

  /கண்ணில் தெரியும் கறுப்பு, சடுதியில்
  விண்ணிலே பட்டாய் விரிப்பு, இருளிலே
  வெண்ணிலா வானின் வனப்பு;மலர்களே
  மண்ணின் வசந்த வெடிப்பு./

  உமா அவர்களே அருமை

  அதிலும்
  ண்ணி,ப்பு ,ல வரிசையும் ஒழுங்கும் அற்புதம்

  வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 18. மாந்தர் தம் வாழ்வில் நல்லது செய்யவேண்டு மென்றே எண்ணுகின்றனர்.

  எது நல்லது, எது கெட்டது என்பதும் அவர்களுக்குத் தெரிந்தே இருக்கிறது.

  ஏன் உலகில் கெட்டதும் நடக்கிறது?

  அதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டுமல்லவா?

  கீழே உள்ள என் தூங்கிசைச் செப்பலோசைப் பா அதைத்தான் கூறுகிறது.

  நல்லதும் கெட்டதும் நாமறிந் துள்ளதே!
  நல்லது செய்யவே நாடுவம்! -
  அல்லது
  நம்மையும் மீறியே நாம்செய நேர்வதை
  எம்முறை நீக்குவ தெண்ணு.


  இனி, 'நற்றமிழ்' இதழில் வந்த ஒரு தூங்கிசைச் செப்பலோசைப் பாடலைப் பார்ப்போம்.
  கடுமையான உணர்வில், திடாரிக்கோ என்பார் எழுதியுள்ள பாடல்.
  உணர்வு வெளிப்பாடு அமைந்துள்ள நிலை அறிதற்காக!

  எல்லா வகையிலும் ஈழத் தமிழரின்
  பொல்லா நிலைக்குப் பொறுப்பு நீ! - நல்லார்
  உமிழ்கிறார்! தூ!தூ! உனக்குப் பதவி
  அமிழா திருக்கும் அமர்.

  பதிலளிநீக்கு
 19. /நல்லதும் கெட்டதும் நாமறிந் துள்ளதே!
  நல்லது செய்யவே நாடுவம்! -அல்லது
  நம்மையும் மீறியே நாம்செய நேர்வதை
  எம்முறை நீக்குவ தெண்ணு./

  அருமையான கருத்து

  பதிலளிநீக்கு
 20. திரு. தமிழநம்பி,திரு.அகரம் அமுதா, மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 21. காதல் காதல் காதல் என்று வலைஞர்கள் பலர் தேனுண்ட நரி போல அரை மயக்கத்தில் பிதற்றும் இவ்வலையில், (பொறுப்பில்லாக் காமத்தில்/உடலீர்ப்பீல் விளைந்த) காதலால் பெற்றோரும், உறவும் (முதுகில் பாய்ந்த கத்தியை எடுக்கவும் முடியாமல், வலியை பொறுக்கவும் முடியாமல்) படும் வேதனையை ஒரு மாற்றுக்கருத்தாக வெளியிட விழைந்தேன், விளைவு:

  விறகொடு விறகொன் றுரசப் பொறிகள்
  பிறந்திடும் காட்டழ லாகும் - உறவை
  வதைக்கும் இதழோ டிதழுரசும் காதல்
  சிதைந்திடும் வீடழ லாகி.


  'வீடழலாகி' என்பதை 'வீடு தீப்பற்றி எரியும்' என்றும் 'வீடு அழுகையில் மூழ்கும்' என்றும் கொள்ளலாமோ ?

  பதிலளிநீக்கு
 22. அவனடிமை ஐயா,

  விறகொடு விறகொன் றுரசப் பொறிகள்
  பிறந்திடும் காட்டழ லாகும் - உறவை
  வதைக்கும் இதழோ டிதழுரசும் காதல்
  சிதைந்திடும் வீடழ லாகி.

  பாட்டும் உங்கள் விளக்கமும் சிறப்பு.

  பதிலளிநீக்கு
 23. அவனடிமை ஐயா,

  விறகொடு விறகொன் றுரசப் பொறிகள்
  பிறந்திடும் காட்டழ லாகும் - உறவை
  வதைக்கும் இதழோ டிதழுரசும் காதல்
  சிதைந்திடும் வீடழ லாகி.

  பாட்டின் இறுதிச் சீர் ஓரசைச் சீராக இருக்கவேண்டுமல்லவா?

  "சிதைத்தில் எரிக்கும் தெளி".

  -என்று ஈற்றடி இருக்கலாமா?
  சி-க்கு தெ மோனையும் ஆகும்.

  எண்ணிப் பார்த்து, ஈற்றுச்சீர் ஓரசைச் சீராக அமைத்திடுக.

  பதிலளிநீக்கு
 24. தமிழநம்பி அய்யா: திருத்ததிற்கு நன்றி. பாவில் முதல் இரண்டு சீர்களில் தளையும் தட்டுகிறது. அதுவுமல்லாமல் /இதழுரசும்/ என்று மூவசைச் சீரால் தூங்கிசையாகவும் இல்லை; திருத்தி எழுத முயற்சிக்கிறேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 25. மிக்க நன்றி திகழ்மிளிர்.

  பதிலளிநீக்கு
 26. /விறகொடு விறகொன் றுரசப் பொறிகள்
  பிறந்திடும் காட்டழ லாகும் - உறவை
  வதைக்கும் இதழோ டிதழுரசும் காதல்
  சிதைந்திடும் வீடழ லாகி.
  /
  //தமிழநம்பி அய்யா: திருத்ததிற்கு நன்றி. பாவில் முதல் இரண்டு சீர்களில் தளையும் தட்டுகிறது. அதுவுமல்லாமல் /இதழுரசும்/ என்று மூவசைச் சீரால் தூங்கிசையாகவும் இல்லை; திருத்தி எழுத முயற்சிக்கிறேன். நன்றி.//

  அப்பா.... தூங்கிசைப்பதிவாதலால், ஈற்றுச்சீர் தவிர எல்லாச் சீரும் ஈரசைச் சீராக இருக்கவேண்டும், முன்பே கூறவந்த பொருளும் அணுவளவும் மாறாதிருக்கவேண்டும். ம்ம்ம்....

  இதற்கு நடுவில் எதுகை, மோனையும் கூடினால் நலம்.
  சொல்லாட்சி தூய தமிழாகவும் இருந்தால் நலம்.

  இத்தனையும் மனதில் வைத்து, தடுமாறி, கடைசியில் ஒருவழியாக மனதிற் தோன்றிய பா இதோ:

  ஞெலிதீ படர ஞெமலழ லாகி
  பலிகொளக் காடழிந் தேகும் - குலவும்
  இதழ்களிற் தோன்றும் பொறியவர் இல்லங்
  கதறிட காய்க்குங் கனல்.


  ஞெலிதீ - (மரங்கள்) உரசி உண்டாகும் பொறி
  ஞெமல் - சருகு

  இதுவும் கண்மண் தெரியா காதலால் வரும் பின்விளைவையே பாடுகிறது.

  (எவன் சொன்னான்: "creativity is 95% prespiration & 5% inspiration" என்று ? கணக்கு தப்பு, 99% & 1% என்று இருந்திருக்கவேண்டும்)

  :-)

  பதிலளிநீக்கு
 27. அவனடியாரின் பா அருமை. அருமை.

  நீங்கள்...
  பாக்கள் தனித்தமிழில் செய்திடவேண்டும்.
  நான்...
  -அதை
  நோக்கித் தமிழ்ப்பசியும் ஆறிடவேண்டும்.

  வாழ்க.

  பதிலளிநீக்கு
 28. அவனடிமை ஐயா,
  அருமை!
  உங்கள் முயற்சி உழைப்பு சிறப்பான பாடலைத் தந்ததிருக்கிறது.
  நெஞ்சார்ந்த பாராட்டு.

  முயன்றால் முடியாததில்லை - என்பது பழமொழி.

  prespiration - அன்று.
  perspiration - ஐத்தான் கூறுகிறீர்கள் என்று கருதுகிறேன்.
  நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 29. தமிழநம்பி ஐயா, அமுதா அவர்களே, உமா அவர்களே: நன்றி.
  /perspiration - ஐத்தான் கூறுகிறீர்கள் என்று கருதுகிறேன்/ - ஆம் அய்யா, தட்டெழுதியதில் கோட்டை விட்டேன்.

  பதிலளிநீக்கு
 30. மிக அருமையான தளம். மிகவும் பயனுடையதாக இருந்தது.

  பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com