செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

அகவற்பா அல்லது ஆசிரியப்பா ஓர் அறிமுகம்!

அகவற்பாவின் ஓசை அகவலோசையாகும். சுருங்கச்சொல்வதென்றால் கூட்டத்தின் மத்தியினின்று உரையாற்றுவது போன்றது. இவ்வகவற் பாவிற்கு மற்றொரு பெயரும் உண்டு. ஆசிரியப்பா என்பதே அதன் மற்றொரு பெயர். நான்கு பாவகைகளுள் முதலில் தோன்றிய பா, ஆசிரிய (அ) அகவற்பாவாகும். ஆசிரியப்பாவின் தோன்றலுக்குப் பிறகே மற்ற பாக்கள் தோற்றங்கண்டன.

அகவற்பா என்றோர் பெயரிருக்க எதற்காக ஆசிரியப்பா என்ற மற்றொரு பெயர் தோன்றிற்று? எனது எண்ணத்தில் தோன்றிய கருத்து இது:-

மனிதன் முதலில் தோன்றினானா? மதம்முதலில் தோன்றியதா? என்றால், மனிதன்தான் முதலில் தோன்றினான் என்பதைப்போல, இலக்கியம் முதலில் தோன்றியதா? இலக்கணம் முதலில் தோன்றியதா? என்றால், இலக்கியமே முதலில் தோன்றியிருக்க முடியும். இலக்கியத்திற்காகவே இலக்கணம் வகுக்கப்பட்டது. இலக்கணம் தோன்றுதற்குமுன் மனிதன் தன் எண்ணங்களை எழுத்துக்களில் சொல்லக்கருதியபோது, அக்கருத்திற்கேற்றாற்போல் வரிவடிவமமைத்துச் சொல்லியிருக்கக்கூடும். பின்னாளில் கூறியவற்றுள் எவை எழுமையான வடிவம் எனக்கருதினானோ, அதனை முதன்மைப்படுத்தி இலக்கணம் கற்பித்துக்கொண்டிருக்க வேண்டும். இலக்கணம் கற்பித்துக்கொண்டபின், முன்பே (இலக்கணம் கற்பிக்கப்படாததற்கு முன்பு) வரையப்பட்ட இலக்கணம் தப்பிய பாக்களை மீண்டும் குற்றம் (ஆசு) நீக்கி இலக்கணத்திற்கு உட்பட்ட எழுதமுற்பட்டிருக்கலாம்.

இலக்கணம் கற்பிப்பதற்கு முன்பு எழுதப்பட்ட இலக்கண ஆசுடைய பாக்களை ஒழுங்குபடுத்தவேண்டிப் பின்னாளில் இலக்கண ஆசு இரியப் பாடியிருக்கலாம். அதாவது இலக்கணம் கற்பிக்கப்படுவதற்குமுன்பு எழுதப்பட்ட இலக்கணமற்ற பாக்களை (அல்லது அப்பாக்களின் உள்ளீடுகளை (கருத்துக்களை)) குற்றங்களை நீக்கி இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதமுயன்றிருக்கலாம். அதன்பயனாக, பெயர்க்காரணமாக ஆசிரியப்பா என்ற பெயர் தோன்றியிருக்க வாய்ப்புள்ளது.

நால்வகைப் பாக்களுள் முன்தோன்றிய பா இது என்பதால் இதன் இலக்கணம் அத்துணைக் கடினமில்லை. மிகமிக எளிது. ஆனால் பாநயத்தோடு எழுதுதல் சற்றே கடினமானதும்கூட. ஆசிரியப்பாவில் கனிச்சீர் ஒழிய எனைய எட்டுச்சீர்களும் வரும்.
அவையாவன:- தேமா, புளிமா, கருவிளம், கூவிளம், தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய்.

இருவகை வஞ்சித்தளைகள் அல்லாத ஏனைய ஐந்து தளைகளும் வரும். அவையாவன:-

1.மாமுன் +++ நேர் === நேரொன்றாசிரியத்தளை
2.விளமுன் +++ நிரை === நிரையொன்றாசிரியத்தளை

இவ்விரண்டையும் தொல்காப்பியன் கீழ்வருமாறு குறிப்பான்:-

மாமுன் நேரும் விளமுன் நிரையும்
வருவ தாசிரி யத்தளை யாமே!


3.மாமுன் +++ நிரை === இயற்சீர் வெண்டளை
விளமுன் +++ நேர் === இயற்சீர் வெண்டளை

4.காய்முன் +++ நேர் === வெண்சீர் வெண்டளை

5.காய்முன் +++ நிரை === கலித்தளை

நெடிலடியும், கழிநெடிலடியும் அல்லாத ஏனைய மூன்றடிகளே வரும். அதாவது ஓர் அடிக்கு:- இரண்டு அல்லது மூன்று அல்லது நான்கு சீர்களே வரும். அதற்குமேல் மிகா.

ஆசிரியப்பாவின் இறுதிச்சீரின் இறுதியசை:- (ஏ, ஓ, என், ஈ, ஆய், அய்) ஆகிய இவற்றிலொன்றைக் கொண்டு இறவேண்டும்.

தொடரும்...
அகரம் அமுதா

12 கருத்துகள்:

 1. திரு.அகரம் அமுதா, வணக்கம்.
  மிகச் சிறப்பாக ஆசிரியப்பாவினை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.மேலும் படிக்க ஆவலோடுள்ளோம்.
  உங்கள் கணிப் பொறி சீரானது மிக்க மகிழ்ச்சி. இனி பாடங்கள் இனிமையாய்த் தொடரும் என் நம்புகிறோம்.

  பதிலளிநீக்கு
 2. ஒரு சந்தேகம்.
  ஓரடிக்கு இரண்டு சீர்களென்றால் பா முழுதும் இருசீர் அடிகளாய் அமையவேணுமல்லவா.

  பதிலளிநீக்கு
 3. ஆம் உமா அவர்களே! இனிப்பாடம் இனிதே தொடரும்.

  /////ஒரு சந்தேகம்.
  ஓரடிக்கு இரண்டு சீர்களென்றால் பா முழுதும் இருசீர் அடிகளாய் அமையவேணுமல்லவா.////


  இல்லையில்லை. பாடலின் இடையிடையே ஒருசிலவரிகள் இரண்டு சீர்களையோ, மூன்றுசீர்களோ கொண்டு வரும். இப்பாவகையின் பெயர் இணைக்குறளாசிரியப்பாவாகும்.

  பொதுவாக ஆசிரியப்பா, முழுபாவும் குறளடியாகவோ, சிந்தடியாகவோ வராது. அப்படிவரின் அது ஆசிரியப்பா இல்லை. ஆனால் குறளடியோ, சிந்தடியோ இடையிடையே வரலாம். வரும். அவ்வகையை இணைக்குறளாசிரியப்பாவென்பர்.

  பதிலளிநீக்கு
 4. சரஸ்வதி துதி
  சிரித்த முகமும் செவ்வரி கண்களும்
  செந்தேன் இதழும் வெண்தா மரையும்
  வீணையும் ஓலையும் வெண்முத்து மாலையும்
  சூடிடும் தேவியை நாடிடு மனமே...
  ------------
  காரிருள் கூந்தல் அலையென ஆகும்
  இருவிண் மீன்கள் கண்ணென ஆகும்
  கோவைச் செவ்விதழ் தேனென இனிக்கும்
  தேவியின் தேகம் தண்ணொளி நிலவே...
  ...............
  நெஞ்சம் தாமரை நினைவுகள் பூமழைத்
  தூவிடும் நேரம் பாயிரம் ஆகும்
  வேணியைத் துதித்திட வேண்டும் வரங்கிடைக்கும்
  ஆனந்தம் தருமே அவள்திரு நாமம்...
  ...............
  செந்தமிழ் வளர்க்கும் இயலிசை இசைக்கும்
  அன்னையின் அருளே அறிவினை அளிக்கும்
  தேவரும் போற்றும் அவள்திருப் பாதம்
  துதித்துநீ மனமே துயர்களை வாயே.

  இது நான் எழுத துவங்கியப் புதிதில் எழுதியது. எதுகை , மோனை எதுவும் இருக்காது. எனினும் அளவடிகளாய் நான்கு அடிகளுடன் கனிச்சீர் அமையாமல் ஏ காரத்துடன் முடிந்துள்ளது. ஆசிரியப்பா எனக் கொள்ளலாமா?[ சும்மா ஒர் ஆர்வம் தான்]

  பதிலளிநீக்கு
 5. பாடல்கள் ஒவ்வொன்றும் அருமை உமா அவர்களே!

  எனது சிற்றறிவிற்கு இசைப்பாக்கள் (சந்தப்பா) என்றே தோன்றுகிறது.. தமிழநம்பி அய்யா என்ன கூறுவார் என்பது தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 6. அமுதா அவர்களே: உங்களுடைய பாக்களையோ, இல்லை வேறு இலக்கியப் பாக்களையோ காட்டுகளாகக் கொடுத்தால் பயில எளிதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
  /மாமுன் +++ நிரை/ சரி, /மாமுன் +++ நேர்/ ஓசையில் எப்படி இருக்கும் என்று புரிபடவில்லை; அதேபோல் /காய்முன் +++ நிரை/ யும் காட்டிருந்தால் விளங்கும்....

  மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 7. //////அவனடிமை கூறியது...

  /மாமுன் +++ நிரை/ சரி, /மாமுன் +++ நேர்/ ஓசையில் எப்படி இருக்கும் என்று புரிபடவில்லை; அதேபோல் /காய்முன் +++ நிரை/ யும் காட்டிருந்தால் விளங்கும்....//////


  கண்டிப்பாக. இது அறிமுகப்பாடம் தானே! அதனால் காட்டுக்கள் வழங்கவில்லை. அடுத்தடுத்த பாடங்களில் விளக்கங்கள் இருக்கும்.

  பதிலளிநீக்கு
 8. உமா அவர்களே: கலைவாணி பாட்டு சிறப்பாக இருக்கிறது. (கவி புனைய) தொடங்கும்போதே உங்களுக்கு நல்ல கற்பனை வளம், சொல்லாள்தல் இருந்திருக்கிறது என்று தெரிகிறது.

  அமுதா அவர்களே:
  விளக்கங்களுக்கு நன்றி.
  முன்பே "சொற்பொருள் பின்வரு நிலை அணி (படத்திற்கு பா)" இடுகையின் மறுமொழியில் நான் உங்களிடம் வஞ்சப் புகழ்ச்சி அணியைப் பற்றி கேட்க எழுதிய பா, ஆசிரியப்பா என நினைக்கிறேன். சரிதானே? அந்த பா இதோ:
  /அசையோ டழகாய் அளப்பற்(ற) அறிவை
  திசையெட்டும் துய்க்கத் தமிழ்ப்பாவில் தந்தீர்
  வசைபாடிப் போற்றிடும் வஞ்சப்பு கழ்ச்சி;
  இசைபாடிச் சாடும் அணிப்பெயர் யாதோ?/

  பதிலளிநீக்கு
 9. ஆம் அவனடியாரே! அகவற்பாவேதான்.

  பதிலளிநீக்கு
 10. மாமுண் நேரும் விளமுன் நிரையும் என்பது தொல்காப்பியத்தில் கிடையாது.

  தொல்காப்பிய சூத்திரத்தை கீழே காண்க,
  சீரியல் மருங்கின் ஓரசை யொப்பின்
  ஆசிரியத் தளையென் றறியல் வேண்டும்

  பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com