வியாழன், 1 ஏப்ரல், 2010

மூன்றாம் தலைப்பு : இயற்கையின் இனிமை!

இத் தலைப்பிலும் ஐவர் மண்டிலங்கள் எழுதியுள்ளனர்.

1. திருவமை. உமா எழுதியவை :

(மா மா மா மா மா காய்)

மயிலும் தோகை விரித்து ஆடும்
வானில் கார்மேகம்
குயிலும் சேர்ந்து கூவி அழைக்கும்
குரலில் தேனூறும்
ஒயிலாய் நடந்தே மழையைத் தருமே
உலகில் கார்காலம்
வெயிலும் வந்து வேனிற் தோன்ற
விரைந்து தானேகும்!

சொட்ட நனைந்தே நகரும் சற்றே
சுடரால் சூடாகும்
நட்ட மரத்தின் நிழலில் நிற்க
நாடும் உயிரெல்லாம்
வெட்ட வெளிதான் சிறுவர் விருப்பம்
வீட்டில் இருப்பாரோ
பட்டப் பகல்போல் இரவும் சுடுமே
பாரீர் வேனில்தான்.

(‘வேனில்தான்’ அல்லது ‘வேனிற்றான்’ என்று எழுதுவதே சரி; ‘வேனிற் தான்’ – என்று வராது.)


காற்று

இயற் சீராலானது வெண்தளை ஏற்றது.

மெல்ல விசிறிடுங் காற்று
மீட்டும் உயிரினைத் தொட்டுச்
சொல்ல வருமொரு சொல்லும்
சோலை மலர்களின் வாசம்!
நெல்லினைச் சோறாய்ச் சமைக்க
நெருப்பினைத் தந்திடுங் காற்றே
செல்லும் துளையைக் கடந்து
செவியில் இசையாய் நுழைந்தே!

சில்லென வீசிடுந் தென்றல்
சீறிப் புயலென வீசப்
புல்லென வீழும் மரமும்
பொங்கும் கடலும் பெரிதாய்க்
கொல்லவும் கூடுமிக் காற்று
கூறையைப் பிய்த்திடும் வேறாய்
மெல்லென வீசிடப் பெண்ணே
மீறிடும் போதினில் பேயாம்!

2.திரு. இரா.வசந்தகுமார் எழுதியவை :

(விளம் - மா - தேமா & காய் - மா - தேமா)

தடவிடக் குளிரும் தென்றல்
தழுவிடச் சிலிர்க்கும் மங்கை
படர்ந்திட மணக்கும் பாகல்
பழுத்திடச் சிவக்கும் கொய்யா
தடங்களில் பதியும் தாரை
தணிந்திட புகையும் சாம்பல்
கடந்திடக் கனக்கும் காட்சி
கனிந்திடக் கழலும் ஞானம்

மலர்ந்திடச் சிரிக்கும் பூக்கள்
மறைந்திடச் சிவக்கும் மாலை
உலர்ந்திட இனிக்கும் இச்சை
உகுத்திட மயக்கும் ஓசை
தளர்த்திடத் தடுக்கும் கைகள்
தயங்கிட நடுங்கும் மேனி
வளர்ந்திட குறுகும் தூரம்
வழங்கிடக் குறையும் பாரம்

வெண்ணொலித்த மின்னல் கோடு
வேகவைத்த கன்னல் சாறு
மண்ணொளித்த கடலை வாசம்
மழையிறக்கும் வானின் அம்பு
தண்ணென்று தாவும் ஆறு
தமிழிலொரு குயிலாய்க் கூறு
விண்கீழ்மேல் தனிமை இல்லை
வியப்பேன்நான் இனிமை கொள்ளை.


3. திரு.திகழ்
எழுதியவை :

( விளம்+மா+தேமா)

தழுவிடும் தென்றல் துள்ளிக்
...குதித்திடும் வண்ண மீன்கள்
அழகுமான் குளிக்கத் தூண்டும்
...அருவிகள் மின்னும் விண்மீன்
எழில்தரும் பச்சைப் புற்கள்
...மணம்தரும் வண்ணப் பூக்கள்,
மழைதரும் மேகம் இன்னும்
...எத்த‌னை ய‌ம்மா சொல்ல!‌

எத்த‌னை கோடி இன்ப‌ம்...
காண‌க்க‌ண் கோடி வேண்டும்
பித்த‌னாய் நானும் ஆனேன்
...இய‌ற்கையின் அழ‌கைக் க‌ண்டு
ச‌த்த‌மாய்ச் சொல்ல‌ வேண்டும்...
இறைவ‌னின் புக‌ழை என்றும்
சுத்த‌மாய் வைத்துக் கொள்வோம்...
சுற்றிடும் உலகைக் கொஞ்ச‌ம்!


4. திரு.அப்பாதுரை எழுதியவை :

விண்ணக மின்னல் போலே
வீசிளந் தென்றல் போலே
கண்களில் நிற்கும் பெண்ணே
காதல்செய் வோமா என்றேன்
மண்ணுக்குள் ஆண்கள் மேலே
மங்கையெற் காசை யில்லை
பெண்ணுக்குள் காதல் தேடும்
பெண்ணிவ ளறிவீ ரென்றாள்!

தங்கத்தை வைரம் சேரும்
தாமரையை வண்டே நாடும்
இங்கிவையி யற்கை அஃதே
இனிமையு மாகு மென்றேன்
கடலுக்குள் கங்கை கூடிக்
கலப்பதி யற்கை யாயின்
மங்கையரை மங்கை நாடி
மகிழ்வதுமி யற்கை யென்றாள்!


அன்பார்ந்த அப்பாதுரை அவர்களுக்கு,
இயற்கையோ டியைந்த வாழ்க்கையே இனிமை தருவது; இயற்கை யிகந்த வாழ்க்கை இன்னல் தருவதே!
பண்டைத் தமிழர் இயற்கையோ டியைந்த வாழ்க்கையையே தேர்ந்தனர்; வாழ்ந்தனர்.
பிறரிடமிருந்து நாம் ஏற்பது நல்லவையாக மட்டுமே இருக்கட்டுமே! இன்னல் தருவதாக இருக்க வேண்டாவே!
வள்ளுவர் அறியாத பாலறிவா? முப்பால் உணர்த்தாத காமத்துப் பாலா?
எண்ணிப் பார்த்து ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
அவனடிமை ஐயாவின்,


பாலியல் பொல்லாங்கே அப்பா துரைப்பாவின்
பாலியல் பாவிற்றுப் பார்.

- என்ற கவலை ஞாயமானதே.

5. திரு. அண்ணாமலை எழுதியவை :

குறிலீற்றுமா + விளம் + மா+விளம் + விளம் + மா

அன்ன மென்நடை காணோம்
....அச்சிறு பொட்டினைக் காணோம்.
சின்னக் கொடியிடை காணோம்.
....சேலைகள் எங்குமே காணோம்.
வன்னக் குழல்சடை தரிக்கும்
....வான்கரு மேகமுங் காணோம்
தின்னத் தின்னவே தெவிட்டாத்
....தீஞ்சுவைத் தமிழையுங் காணோம்!

மின்னும் பலவுடை பூட்டி
....மேலுடல் கீழுடல் காட்டி
நன்னும் தமிழ்உடை, செய்கை
....நடத்தையும் பேச்சையுந் தொலைத்தே
மன்னும் தமிழ்க்குடி அழித்தே
....மேலைநாட் டினரெனத் துடிப்பீர்
நன்றென் ஒருசொலைக் கேளீர்.
....நாடுக பண்புறு வாழ்வே!

முன்பந் நாட்களி லுரைத்த
....முன்னவர் மூடரு மல்லர்.
பின்ன வரிவரில் யாரும்
....பெரிதொரு அறிஞரு மல்லர்.
தென்ன வர்குடி நாளும்
....தழைத்திடத் தாங்கியே நிற்பீர்
அன்ன வர்வழி நடந்து
....அறத்தினைக் காத்திடப் புகுவீர்!

அருமையான பாடல்களை இயற்றிய பாவலர்க்கு நன்றி.
சில பாடல்கள் மோனை அமையா துள்ளன.
மோனை பற்றி மீண்டும் ஒருமுறை படித்து, மோனை அமைத்துப் பாடல் எழுதப் பயிலல் சிறப்பு.
நன்றி.


5 கருத்துகள்:

  1. தமிழநம்பி அவர்களே: சிறப்பாக தொகுத்து, திருத்தங்களையும் அளித்துள்ளீர்கள். வீட்டு/அலுவலகப் பணியினிடையில் இதற்கும் நேரம் ஒதுக்கியது உங்கள் நல்ல உள்ளத்தின் வெளிப்பாடு. மிக்க நன்றி.

    வருத்தம் வருத்தா வகையில் திருத்தி
    கருத்துஞ் சிலவுரைத் தீர்.


    இதற்கும் நன்றி.

    இலக்கணப் பிழை திருத்தங்களுடன், செய்யுட்களில் செறிவான நடை கொண்டு வருவது எப்படி, தமிழ்ச் சொற்களின் உபயோகம் போன்ற வேறு நுண்மையான விடயங்களைப் பற்றியும் பயில்விக்க எண்ணம் உள்ளதா ?

    இப்போது புழக்கத்தில் உள்ள தமிழ் சொற்களை (அது தூய தமிழாய் இருந்தாலும்) உபயோகிப்பது சிறப்பா? இல்லை ”சற்றே” பண்டைய (தாயிருந்தாலும், நன்றாக விளங்கிக் கொள்ளக்கூடிய) தூய தமிழ்சொற்களைப் பயன்படுத்துவது சிறப்பா ?

    எ/கா: சிக்கிமுக்கியாரின் படைப்புகளில் சொற்செறிவும், அதேபோல் உங்களின், அகரம் அமுதரின் பாக்களின், இதே தளத்தில் ஓரிரு வருடங்கள் முன்பு எழுதியவருடைய படைப்புகளின் சொற்செறிவும், நடைச்செறிவும் (என்னையும் சேர்த்து) பலரின் பாக்களில் இல்லை என்பது என் எண்ணம், இது சரியா ?

    நன்றி.

    பதிலளிநீக்கு
  2. கற்பனை கொள்கையாகுமா? ஆனாலும், சரி தவறென்று தீர்ப்பு சொல்ல நாம் யார்? இது தான் இயற்கையென்று தீர்ப்பளிக்க நமக்கென்ன தகுதி? எனக்குத் தோன்றியது வெறும் கற்பனை தான். நான் போதிக்கவில்லை.

    என் (பிழையான) பாடலையும் மற்ற படைப்புகளோடு சேர்த்ததே எனக்கு நிறைவைத் தருகிறது. நன்றி. நன்றி.

    பதிலளிநீக்கு
  3. ///செய்யுட்களில் செறிவான நடை கொண்டு வருவது எப்படி, தமிழ்ச் சொற்களின் உபயோகம் போன்ற வேறு நுண்மையான விடயங்களைப் பற்றியும் பயில்விக்க எண்ணம் உள்ளதா ? ///

    செய்யுளைச் சிறப்பாக எழுத பண்டைத் தமிழ் நூல்களையும், பாரதி, பாவேந்தர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் போன்றோரின் நூல்களையும் படித்துப் பழக வேண்டும்.
    சில நுணுக்கங்களைப் பின்னர் விளக்கும் எண்ணம் உள்ளது.

    தூயதமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி எழுதுதல் பாட்டிற்கு மதிப்பளிக்கும்.
    புதிய சொற்களா, பழைய சொற்களா என்பதைப் பாவலரே தீர்மானிக்க வேண்டும்.
    எதுவானாலும் தமிழ்ச் சொற்களாக இருத்தலே சிறப்பு.
    நடைச்சிறப்பு சொற்சிறப்பு யாப்பழகு அனைத்தும் அவரவர் ஈடுபாட்டையும் இலக்கிய இலக்கணப் பயிற்சியையும் பொறுத்துச் சிறப்பாக அமையும்.

    முயற்சியுடன் பயின்றால் யாராலும் நன்றாக எழுத முடியும்.

    பதிலளிநீக்கு
  4. அப்பாதுரை ஐயா,
    நீங்கள்,
    ///எனக்குத் தோன்றியது வெறும் கற்பனை தான். நான் போதிக்கவில்லை///
    - என்பதை முதலிலேயே குறிப்பிட்டு எழுதியிருந்தால், தெளிவாகியிருக்கும்.

    அதை விடுக.

    தொடர்ந்து எழுதுவதைப் படித்து, ஆக்கமான புதிய கற்பனையோடு பாக்கள் எழுதுக.

    அடுத்து வரப்போகும் எழுசீர் மண்டிலம் எழுத வருக!
    விளக்கத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. //காண‌க்க‌ண் கோடி வேண்டும்//

    ப‌டிக்க‌ ப‌டிக்க‌

    சான்றோர் வ‌ழ‌க்குக‌ளை அறிந்தால் இந்த‌ வ‌கையான‌ பிழைக‌ளைத் த‌விர்க்க‌ இய‌லும்

    ந‌ன்றி அய்யா

    இங்கே எந்த‌ வ‌கையான‌ புண‌ர்ச்சியால் வ‌லி மிகுந்த‌து என்ப‌தை அறிய‌ விரும்புகின்றேன் அய்யா.

    நான்காம் வேற்றுமை தொகை என்னும் கார‌ண‌த்தாலா ?

    பெய‌ரெச்ச‌த்திற்குப் பின் ஒற்று மிகாது என்ப‌து ச‌ரி தானே அய்யா

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com