செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

சொல்பின்வரு நிலையணி!

1.சொல்பின்வரு நிலையணி:-

ஒருமுறை வந்தசொல் பலமுறை வந்து வேறுவேறான பொருளைத் தந்து நிற்குமாயின் அப்பா, சொல்பின்வரு நிலையணி வகையாகும்.

காட்டு:-

பூக்காடு நேர்தமிழைப் போற்றிப்பாத் தென்ற(ல்)செய்
பாக்காடு தான்காடு மற்றெல்லாம் –சாக்காடு
சீக்காடு முட்காடு தீக்காடு முக்காடு
நோக்காடு மற்றறைவேக் காடு!
–அகரம் அமுதா-

மேலுள்ள எனது பாடலில் உள்ள காடு எனுஞ்சொல் முதல் இரண்டடிகளின் முதற்சீரில் வருங்கால் ஒரே பொருளைத் தந்து நிற்பினும், தனிச்சொற்குப் பின் வருங் “காடு” எனுஞ்சொல் (சாக்காடு –இறப்பு, சீக்காடு –நோயுடைய ஆடு, முக்காடு –தலையில் போர்த்துந் துணி, நோக்காடு –நோய், அறைவேக்காடு –வேகாநிலை) ஓரீரசைகளைச் சேர்த்துக்கொண்டமையால் வெவ்வேறு பொருளைத் தந்து நிற்கிறது. ஆதலால் அப்பா, சொல்பின்வரு நிலையாணியாம்.

இக்கிழமைக்கு ஈற்றடி கிடையாது. மேல் வழங்கப்பட்டுள்ள சொல்பின்வரு நிலையணியைப் பயன்படுத்தி வெண்பா வடிக்க வேண்டுகிறேன்.

இக்கிழமைக்கான “சொற்பின்வரு நிலையணி”க்கான சொல்:- (உங்கள் விருப்பத்திற்கேற்ப ஒரு சொல்லைத் தேர்ந்து எழுதவும்)

அகரம் அமுதா

6 கருத்துகள்:

  1. இப்பொழுது நாள்தோறும் இரண்டு இடுகை இட்டு விடுகிறீர்கள்
    என்னால் தான் ஈடு கொடுத்து வெண்பா எழுத முடியாமல் போகிறது

    :))))))))))))))))))))))))))

    பதிலளிநீக்கு
  2. நம்மோடு தனித்தமிழ்ப் பாவலர் தமிழநம்பி அவர்களும் இணைந்துள்ளார் திகழ்! இனிப் பாடங்கள் சற்றுக் கடினமாகவும் ஆழமுடையதாகவும் இருக்கும். தொடர்து எழுத முயலுங்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. /தொடர்து எழுத முயலுங்கள். வாழ்த்துக்கள்.
    /
    கண்டிப்பாக‌

    /நம்மோடு தனித்தமிழ்ப் பாவலர் தமிழநம்பி அவர்களும் இணைந்துள்ளார் /

    அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

    அன்புடன்
    திகழ்

    பதிலளிநீக்கு
  4. நண்பர்கள் ஆர்வத்தில் சில பேரை பாடச் சொல்லப் போக 'ஏண்டா பாடச்சொன்னார், செத்தோம்' என்று ஆகிவிடும்; அதை நினைத்து எழுதியது:

    பாடுபா டென்பார் படும்பா டவரறியார்
    பாடுவே னென்றெழுந்தால் பிற்பாடு - பாடுவதைப்
    பாரதுகோட் பாடில்லா கூப்பாடு பண்பாடும்
    பாரவர்க்கு சாப்பாடு தான்.


    'பிற்பாடு பாடுவதைப் பாரதுகோட் பாடில்லா கூப்பாடு' என்பதை
    'பின்னர் பாடுவதை பார்; அது வழிமுறை இல்லாத கூச்சல்' எனவும்
    'பின்னர் பாடு (கஷ்டமாகிவிடும்);
    வதைப்பார் [(பாட்டால்) கொடுமைப்படுத்துவார்];
    அது வழிமுறை இல்லாத கூச்சல்
    ' எனவும் எடுத்துக்கொள்ளலாம்.

    'பண்பாடும் பாராவர்க்கு' - பாட்டுப் பாடும் கலைஞர்களின் உலகத்தில் உள்ளவர்க்கு

    'சாப்பாடு தான்' - 'பேசுவதற்கு (அவல்) உணவுதான்' என்றும் கொள்ளலாம்
    'சா + பாடு தான்' - 'செத்தவன் நிலைதான் ('செத்தான்')' என்றும் கொள்ளலாம்

    பதிலளிநீக்கு
  5. அட... அட... அட... வியப்பதைத்தவிர இப்பொழுது வேறொன்றும் சொல்லத்தோன்ற வில்லை அவனடிமை அவர்களே! பிரித்து மேய்ந்திருக்கிறீர்கள் வெண்பாவை. வாழ்த்துக்கள். இரட்டுற மொழிதல் அணி தங்களிடம் அடைக்கலம் புகுந்துவிட்டதென நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. /பாடுபா டென்பார் படும்பா டவரறியார்
    பாடுவே னென்றெழுந்தால் பிற்பாடு - பாடுவதைப்
    பாரதுகோட் பாடில்லா கூப்பாடு பண்பாடும்
    பாரவர்க்கு சாப்பாடு தான்./

    அருமை

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com