ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009

ஏந்திசைச் செப்பலோசை வெண்பா

பெயரைப் பார்த்து மருள வேண்டா!

வெண்பாவிற்கு உரிய ஒசை செப்பலோசை.

இது தெரிந்ததே.

இறுதிச்சீர் தவிர்த்த ஏனைய சீர்கள் மூவசைச் சீர்களாக அமைந்த
வெண்பா ஏந்திசைச் செப்பலோசை உடைய வெண்பா ஆகும்.

(வெண்பாவின் மூவசைச்சீர் காய்ச்சீர் என்பது தெரியும் தானே!)

ஈழத்தில் சிங்களவர் எந்தமிழ மக்களையே

போழ்கின்ற புன்செயலின் கேடடக்கி - வாழ்வளிக்க

எண்ணாநம் நாடாள்வோர் ஏதேதோ கூறுகின்றார்

கண்ணாகக் கொள்ளவில்லை காண்.

-சந்தப்பாமணி புலவர் அரங்க.நடராசன்.

இன்னிசை வெண்பாவாகவோ நேரிசை வெண்பாவாகவோ ஏந்திசைச் செப்பலோசையில் ஒரு வெண்பா எழுதலாமே!

36 கருத்துகள்:

  1. தமிழ நம்பி அய்யா அவர்களுக்கென் வணக்கங்கள்!

    குருதி கொதிக்கும் செய்தி ஒன்றை அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அதனைப் பின் வரும் பாவின் உள்ளீடால் உணந்துகொள்ளலாம். இதோ பாக்கள்:-



    அழவரை யான அழகுப் பெயரை
    அலவரை யாக்கிமிக ஆர்க்கும் –புலைஞன்
    கலைஞன் மகனெனினும் காலன் இணையாங்
    கொலைஞன் மகனெனக் கூறு!



    மாற்றுகிறார் தன்பெயரை மானமென்ப தில்லாதார்
    போற்றுகிறார் அங்கவரைப் போய்ப்பலரும்; -சாற்றுகிறார்
    தானன்றோ தீந்தமிழை தற்காத்துத் தாங்குவதாய்;
    வானென்றோ போவார் மடித்து?



    இறுதிச்சொல் நிறையாக அமைந்து ஏந்திசைச் செப்பலோசையைத் தராது போய்விட்டதே!!!!
    இதோ! ஏந்திசைச்செப்பலோசைக் காண வெண்பா...



    ஆங்கிலத்தை ஆரியத்தை ஆங்குப்பல் லோரினத்தைத்
    தாங்குகிறார் ஆள்பவர்கள் தந்திறத்தால் –ஈங்கொருநாள்
    பூஞ்சாறாய்த் தேன்தமிழும் பூத்திடுமோ? இங்குளநாம்
    பூஞ்சைகளாய் வாழுகின்ற போழ்து!

    பதிலளிநீக்கு
  2. பூஞ்சாறு, தேன் இரண்டும் ஒன்றல்லவா!! ஆதலால் சிறு மாற்றம்......

    ஆங்கிலத்தை ஆரியத்தை ஆங்குப்பல் லோரினத்தைத்
    தாங்குகிறார் ஆள்பவர்கள் தந்திறத்தால் –ஈங்கொருநாள்
    பூஞ்சாறாய் ஒண்டமிழும் பூத்திடுமோ? இங்குளநாம்
    பூஞ்சைகளாய் வாழுகின்ற போழ்து!

    பதிலளிநீக்கு
  3. கீழ்வரும் வெண்பா ஏந்திசைச் செப்பலோசைக்கானது அல்ல. மேலுள்ள பாக்கள் தீட்டும்போது நான்கொண்டிருந்த வெப்பத்தைத் தணிக்கும் முகமாக வரையப்பட்டது.



    அழகுத் தமிழே!என் அம்மா!என் நாவு
    முழங்கு மொழியே! முழவே! -புழங்கியாழ்
    தன்னோடும் பூத்தாய் தணலோடும் பூத்தொளிர்ந்தாய்
    என்னோடும் பூப்பாய் இனி!

    பதிலளிநீக்கு
  4. ஏந்திசைச் செப்பலோசை;

    சொந்தமான மண்வெடித்து சோறுதண்ணி இல்லாமல்
    பந்தமெல்லாம் வாடினது போதுமய்யா -வந்திங்கே
    ஆறெல்லாம் நீரோட மாமழையாய் பெய்திடய்யா
    ஊறெல்லாம் காத்திருக்கே வா.

    மாமழை வேண்டி மண்ணேறுழவன் சொல்லேர் பூட்டினதாய்.

    வாவென்று நானழைத்த மாமழையும் வந்திங்கே
    சோவென்று கொட்டுதய்யா பேய்மழையாய் - போவென்று
    நான்சொல்ல போயிடுமோ பெய்திங்கே பாழ்குளமாய்
    என்வயலை ஆக்கிடுதே பார்.

    நேரிசை சரிதானே.

    பதிலளிநீக்கு
  5. கட்டிக் கரும்பே!கேள் வேண்டாம் பிடிவாதம்
    எட்டியந்த மின்சாரக் கம்பியிலுன் கூட்டைச்சேர்....................

    இதில் கூட்டைச்சேர் என்பதை தனிச்சொல்லாக கருதலாமா? உங்கூட்டை என்பதால் தனிச்சொல் இல்லை என்பதா?
    தனிச்சொல் சற்று விளக்கவும்.

    பதிலளிநீக்கு
  6. அ.அ. ஐயா,
    உங்களுக்குப் பிறகு விடை எழுது வேன். பொறுத்திடுக.

    பதிலளிநீக்கு
  7. உமா அவர்களின் வெண்பாக்கள் ...கட்டிக் கரும்பே!கேள் வேண்டும் இனுங்கொஞ்சம்
    வட்டில் உணவெணக்கு வேண்டாமே!-பிட்டுத்திண்
    பேனேஉன் வெண்பாக்கள் பேரமுதுஆம் ஆம்ஆம்என்
    பேனேபொன் மானே பெரிது!


    ////உமா கூறியது...
    கட்டிக் கரும்பே!கேள் வேண்டாம் பிடிவாதம்
    எட்டியந்த மின்சாரக் கம்பியிலுன் கூட்டைச்சேர்....................

    இதில் கூட்டைச்சேர் என்பதை தனிச்சொல்லாக கருதலாமா? உங்கூட்டை என்பதால் தனிச்சொல் இல்லை என்பதா?
    தனிச்சொல் சற்று விளக்கவும்./////

    கூட்டைச்சேர் என்பது தனிச்சொல்லே! ஐயம் வேண்டாம்.

    உன்கூட்டை எனும்போது தனிச்சொல் ஆகாது.

    குறிப்பு:-

    தனிச்சொல்லைக் குறிக்க ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பிறகே நான் - (சிறு கோடு) இடுகிறோம்.

    தமிழ் எதுத்துமுறையில் ஒருங்குக் குறிகள் கிடையா. தனிச்சொல் என்பதை எப்படி நம் முன்னோர் பகுத்தார்கள் என்றால் இரண்டாம் அடியின் இறுதிச்சீர் என்ற நிலையிலேயே பகுத்தார்கள். தனிச்சொல்லை நாம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டிச் சிறு கோடிடுகிறோம் அவ்வளவே.

    பண்டை மரபுப்படி 1,5,8,9,13 ஆம் சீர்கள் ஓரெதுகை அல்லது ஈரெடுகை என்ற அடிப்படையிலேயே நேரிசை இன்னிசை எனப்பகுத்தார்கள்.

    ஒரு நாலடி நேரிசை வெண்பா, முதற்சொல் தொடங்கி இடையில் எங்கும் தடைப்படாதலும் கூறவந்த கருத்தை ஈறுதிச்சீரிலும் முடிக்கலாம், இடையிடையில் தடைபட்டு (அதாவது கூறவந்த கருத்து முடித்து அடித்து அடுத்த கருத்து கொடங்குதல்) அடுத்த கருத்தில் தொடங்கிமுடிக்கவும் படலாம்.

    திரிகடுகம் காண்க. ஒவ்வொரு வெண்பாவுள்ளும் மூன்று கருத்துக்கள் அடங்கியிருக்கும்.

    தனிச்சொல்லைக் குறிக்க இடப்படும் - (சிறுகோடு) முகைப்படுத்தப் பட்ட ஒன்று. நமக்குத் தேவையானது கோடல்ல.. எதுகையே கணக்கிற்கொள்ளப்படும்.

    பதிலளிநீக்கு
  8. உமா,
    நீங்கள் எழுதிய ஏந்திசைச் செப்பலோசை வெண்பா,

    "சொந்தமான மண்வெடித்துச் சோறுதண்ணி இல்லாமல்

    பந்தமெல்லாம் வாடினது போதுமய்யா - வந்திங்கே

    ஆறெல்லாம் நீரோட மாமழையாய்ப் பெய்திடய்யா

    ஊரெல்லாம் காத்திருக்கே வா".

    - சரியாக உள்ளது. பாராட்டுகள்.

    இரண்டாவது வெண்பாவைப் பிறகு பார்ப்போம்.
    நீங்கள் எழுப்பிய ஐயத்தை இப்போது பார்ப்போம்.

    கட்டிக் கரும்பே!கேள் வேண்டாம் பிடிவாதம்
    எட்டியந்த மின்சாரக் கம்பியிலுன் -கூட்டைச்சேர்....................

    இப்பாடலின் முதலடியிலும் இரண்டாம் அடியிலும் குறில் கீழ் எதுகை உள்ளது.

    கட்டி
    எட்டியந்த

    தனிச்சொல்லிலும் குறில் கீழ் எதுகையே வரவேண்டும்.

    கூட்டைச்சேர் - என்பதில் முதல் எழுத்து நெடிலாக உள்ளதைக் கவனிக்க.
    இது நெடில் கீழ் எதுகையாகும்.

    முதலடியின் முதற் சீர், இரண்டாமடியின் முதற் சீர்,
    தனிச்சொல் மூன்றிலும் குறில் கீழ் அல்லது நெடில் கீழ் எதுகையாக அமைக்கவும்.

    மூன்று இடங்களிலும் (மூன்றும் குறில் கீழ் இல்லையேல் மூன்றும் நெடில் கீழ் என்று) ஒரே வகை எதுகை அமைத்து எழுதவும்

    அந்த மூன்று இடங்களிலும் நெடில் கூழ் எதுகையும் குறில் கீழ் எதுகையும் கலந்து வருதல் இல்லை.

    இனி, உங்கள் இரண்டாம் பாடலைப் பார்ப்போம்.

    வாவென்று நானழைத்த மாமழையும் வந்திங்கேச்
    சோவென்று கொட்டுதய்யா பேய்மழையாய்! - போவென்று
    நான்சொல்லப் போயிடுமோ பெய்திங்கே பாழ்குளமாய்
    என்வயலை ஆக்கிடுதே பார்.

    பாடல் சரியாகவே உள்ளது.
    செப்பமான தாக்க ஒரு திருத்தம் செய்யலாம்.

    முன்பு கூறியவாறு முதலடி, இரண்டாமடி தனிச்சீர் மூன்றிலும் நெடில் கீழ் எதுகை மிகவும் சரியாக உள்ளது.

    இனி,
    மூன்றாம் அடியிலும் நான்காம் அடியிலும் உள்ள எதுகைகள்:

    நான்சொல்ல - நேடில் கீழ் எதுகை
    என்வயலை - குறில் கீழ் எதுகை

    இந்த இரண்டடிகளிலும் நெடில் கீழ் அல்லது குறில் கீழ் வருவதாக அமைத்திடுக.

    இவ்விரண்டடிகளில் ஒன்று நெடில் கீழும் இன்னொன்று குறில் கீழுமாக வரவேண்டாம்.

    பின்னிரண்டடிகளை,

    நான்சொல்லப் போய்விடுமோ? நாளெல்லாம் பெய்திங்கே
    ஏன்கெடுதல் செய்கிறதோ எண்ணு.
    - என்று எழுதலாம் அல்லது உங்களுக்குத்தோன்றும் வகையில் இன்னும் சிறப்பாகவும் எழுதலாம்.

    பதிலளிநீக்கு
  9. உமா அவர்களுக்கு!

    ஒன்றைக் கவனிக்கத்தவறிவிட்டேன்.

    கட்டிப் கரும்பே....
    எட்டியிந்த...
    கூட்டைச்சேர்....

    கூட்டைச்சேர் தனிச்சொல் ஆகா. ஏன்எனில் இரண்டாமெழுத்து (ட்) எதுகையாகிச் சரியாக அமைந்திருப்பினும் மோனையாகிய முதலெழுத்து ஒன்றவில்லை. அதாவது குறிலுக்குக் குறிலும் நெடிலுக்கு நெடிலுமே அடிகளின் முதற்சீரில் மோனையாக அமையவேண்டும். இக்கட்டுப்பாடு பொழுப்பு,ஒரூவு மோனைகளுக்கப் பொருந்தா.

    ஆக, கூட்டைச்சேர் எனுஞ்சொல் "குட்டைச்சேர்" என வந்தால்மட்டுமே தனிச்சொல்லுக்கான மதிப்பைப் பெரும்.

    முன்பே கவனிக்காமல் மறுமொழி இட்டமைக்கு வருந்துகிறேன். வாழ்க.

    பதிலளிநீக்கு
  10. அ.அ. ஐயா,

    ஒன்றுக்கு நாலாக எழுதுவது உங்களுக்கே உரிய வழக்கம். ஆனால்,
    இந்தப் பெயர் மாற்றச் செய்தி என்னவென்று எனக்கு விளங்க வில்லை.

    இன்னொன்று-

    கருத்துரை எழுதும் சாளரம் அகலம் குறைவாக உள்ளதால் ஏந்து(வசதி)க் குறைவ்வாக உள்ளது.

    இந்தச் சாளரத்தை இன்னும் கொஞ்சம் அகலமாக இருக்குமாறு செய்ய இயலாதா?

    பதிலளிநீக்கு
  11. திரு.தமிழ் நம்பி அவர்களுக்கு,
    மிக்க நன்றி. உங்களின் அற்புதமான விளக்கம் படித்து மிக்க பயனுற்றேன். தங்களின் வழிகாட்டலோடு நேரிசையை சரியாக வடிக்க கற்கிறேன்.

    இன்னும் ஒரு சந்தேகம்
    ஆறெல்லாம்
    ஊரெல்லாம் றெ,ரெ - இவை கணக்கில் எடுத்துக்கொள்ளலாமா?

    பதிலளிநீக்கு
  12. ////தமிழநம்பி கூறியது...

    இந்தப் பெயர் மாற்றச் செய்தி என்னவென்று எனக்கு விளங்க வில்லை./////

    தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் அருமை மகன் மத்திய அமைச்சர் "அழகிரி", வடவர்காளால் அவர்பெயரை நன்றாகப் பலுக்க இயலவில்லை என்பதால் "அலகிரி" எனப் பாராளுமன்றத்தில் தனது மேசையின்மீதுள்ள பெயர்ப்பலகையில் மாற்றி எழுதிவைத்துள்ளாராம். சிங்கைத் தமிழ்முரசில் செய்திபடித்தேன். அதைத்தான் வெண்பாவில் எழுதினேன். கிரி -வடசொல் என்பதால் "வரை" என மாற்றி எழுதினேன். அவ்வளவே!

    ////இந்தச் சாளரத்தை இன்னும் கொஞ்சம் அகலமாக இருக்குமாறு செய்ய இயலாதா?/////


    முயன்றுபார்க்கிறேன் அய்யா!

    பதிலளிநீக்கு
  13. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  14. அ.அ. ஐயாவுக்கு,

    அழகரி, 'அலகிரி'யான செய்தி தமிழகத்துச் செய்தித் தாள்களில் இதுவரை வரக்காணோம்! அதனால்தான் புரியாதிருந்தது.

    சிங்கைத் 'தமிழ்முரசு' சுறுசுறுப்பாகவும் உணர்வோடும் இருப்பதாகத் தெரிகிறதே!

    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  15. உமா,

    தட்டச்சுப் பிழை ஏற்பட்டதால் நான் உங்களுக்கு விடையாக எழுதிய கருத்துரையை நீக்கிவிட்டேன்.

    உங்கள் ஐயத்திற்கு விடை:

    றெ, ரெ - வரலாம்.

    என் பெயரின் மூன்றாம் எழுத்து மெய்யெழுத்து அன்று.
    புரிகிறதா?

    பதிலளிநீக்கு
  16. மிக்க நன்றி. பெயரைத் தவறாக எழுதியமைக்கு வருந்துகிறேன். மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  17. //////தமிழநம்பி கூறியது...
    அ.அ. ஐயாவுக்கு,

    அழகரி, 'அலகிரி'யான செய்தி தமிழகத்துச் செய்தித் தாள்களில் இதுவரை வரக்காணோம்! அதனால்தான் புரியாதிருந்தது.

    சிங்கைத் 'தமிழ்முரசு' சுறுசுறுப்பாகவும் உணர்வோடும் இருப்பதாகத் தெரிகிறதே!

    நன்றி ஐயா./////


    சுறுசுறுப்பாகவும் உணர்வோடும் இருக்கிறதோ இல்லையோ! தி.மு.க சார்பான ஏடு என்பதுமட்டும் உண்மை. சிங்கையில் உள்ள அரசு நாளிகைகள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அவ்வளவாக வெளிக்காட்டிக்கொள்வதில்லை. அவ்வளவே! தமிழவேள் கோ. சாரங்கபாணியார் இருந்த காலத்தில் தி.மு.க வின் கொள்கைகளைத் தாங்கிவந்தது குறிப்பிடத்தக்கது.

    ஒரு கேள்வி. தமிழகத்தில் திராவிடர் கழகங்களைத் தூக்கிவீசிவிட்டுத் தமிழர்கழகங்கள் தோன்ற வழியே இல்லையா?

    பதிலளிநீக்கு
  18. *** தமிழகத்தில் திராவிடர் கழகங்களைத் தூக்கிவீசிவிட்டுத் தமிழர்கழகங்கள் தோன்ற வழியே இல்லையா?***

    எதிர்காலத்தில் தோன்றக்கூடும்!

    என் பங்கிற்கொரு ஏந்திசைச் செப்பலோசை வெண்பா:

    எத்தனையோ துன்பங்கள் எவ்வளவில் தாக்கிடினும்
    அத்தனைக்கும் ஊடேயும் ஆங்கொருவர் - இத்தரையில்
    உற்றதொரு துன்பென்னால் ஓரளவு தீருமென்றால்
    சற்றும்பின் வாங்குவனோ சாற்று.

    பதிலளிநீக்கு
  19. உமா அவர்களுக்கு,
    மன்னிப்பா! அஃதொன்றும் மாபெரும் பிழையன்று.
    பெயரைச் சரியாகத் தெரிவிக்கவே மெய்யெழுத்தில்லை என்று குறிப்பிட்டேன்.
    தொடர்ந்து வெண்பாவில் கருத்துச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  20. அந்த வெண்பாவை இன்னும் பொருத்தமாக இப்படியும் எழுதலாம்.

    எத்தனையோ துன்பங்கள் எவ்வளவில் தாக்கிடினும்
    அத்தனைக்கும் ஊடேயும் ஆங்கொருவர் - இத்தரையில்
    உற்றதொரு துன்புன்னால் ஓரளவு தீருமென்றால்
    சற்றும்பின் வாங்குவையோ சாற்று.

    பதிலளிநீக்கு
  21. தமிழநம்பி அவர்களின் வெண்பா ஆற்றல் மெய்சிலிர்க்க வைக்கிறது. வாழ்க.

    பதிலளிநீக்கு
  22. //எத்தனையோ துன்பங்கள் எவ்வளவில் தாக்கிடினும்
    அத்தனைக்கும் ஊடேயும் ஆங்கொருவர் - இத்தரையில்
    உற்றதொரு துன்புன்னால் ஓரளவு தீருமென்றால்
    சற்றும்பின் வாங்குவையோ சாற்று.//

    தமிழநம்பி அவர்களே:

    வெண்பா அருமையாக உள்ளது. 'பிறர்' என்று மக்கள் பரவலாக கருதுபவரில் எவராவது ஒருவர் துன்பம் அடைந்தாலும், 'தானே' துன்பமுற்றது போல் ஓரிருவரேனும் கண்ணீர் விட்டு ஓடி வருவர் என்பது உறுதி.

    /துன்புன்னால்/ - துன்பவரால்
    /வாங்குவையோ/ - வாங்குவரோ

    என இருந்தால் 'ஆங்கொருவர்' என்ற சொல்லுக்கேற்ப முழுவதும் அம்மாமனிதரை பற்றியதான வெண்பாவாக வருமோ ?

    நீங்கள் 'சாற்று' என்று முடித்ததால், அதே சொல்லில் தொடங்கி, உங்கள் கருத்தை ஆமோதிப்பதுடன், பாராட்டையும் சேர்த்தே செப்பலோசை வெண்பாவாக்க முயற்சித்தேன்:

    சாற்றுவதில் சொற்சுவையும் செம்பொருளும் சேர்த்தளித்தீர்
    போற்றிடுமோர் செப்பலோசைப் பாவடித்தீர் - ஏற்புடனே
    நல்லியல்போ டோடிடுமே பல்லிடையே சிக்கியவோர்
    கல்பொருளை நாவிடுமோ நொந்து?

    பதிலளிநீக்கு
  23. என்றொருவர் துன்பென்னால் சற்றேனும் தீருமென்றால்
    அன்றெனது ஆவியையும் நானளிப்பேன் - இன்பவர்க்கு
    என்னாலுண் டென்றாலோ வந்துறுமே வானளவு
    துன்பென்றா லுந்தயங்கேன் யான்.

    //உன்னால் ஒருவருக்கொரு நன்மையுண்டாகும் என்றால் அதனால் வரும் தீமையை நீ ஏற்றுக் கொண்டு அவருக்கு அந்நன்மையைச் செய். என்பது சிறு வதில் என் தாய் தன் தோழிக்கு எழுதிய பிரிவுபச்சார வாசகம். எங்கள் மனதிலெல்லாம் ஆழமாக பதிந்துவிட்ட ஒன்று.திருதமிழநம்பி அவர்களின் பாவைப் படித்தும் மீணடும் நினைவுக்கு வரமகிழ்ந்ததோம் .நன்றி.
    அன்புடன் உமா.

    பதிலளிநீக்கு
  24. அவனடிமை அய்யா,

    உங்கள் வெண்பாவில் என்னைப் பாராட்டி இருக்கிறீர்கள். நன்றி ஐயா.

    **நல்லியல்போ டோடிடுமே பல்லிடையே சிக்கியவோர்
    கல்பொருளை நாவிடுமோ நொந்து?**

    இவ் வரிகளில் உவமை புரிகிறது. எதைக் குறித்துச் சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. அருள்கூர்ந்து விளக்கக் கேட்டுக் கொள்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  25. உமா,

    உங்கள் மாந்தநேயம் சான்ற பாடல் பாராட்டுக்குரியது.

    உங்கள் அன்னையாரின் அருள் உள்ளத்தை அறியச் செய்ததும், உங்கள் உணர்வுக்கான காரணமும் புரிந்தது.

    ஒரு சிறிய பரிந்துரை.

    சரியாக எழுதப்படும் வெண்பாவில் கொஞ்சம் இனிமை சேர்க்க ஒரு வழியைக் கூறலாம் என்று எண்ணுகின்றேன்.
    கடுமையானது ஏதும் இல்லை.

    வெண்பா மட்டுமன்று, எந்தப் பாவானாலும் ஒவ்வொரு அடியிலும் முதல் சீரின் முதல் எழுத்தும் மூன்றாம் சீரின் முதல் எழுத்தும் ஒன்றி வந்தால் பாடலுக்கு இனிமை சேரும். (மற்ற சீர்களிலும் ஒன்றி வந்தாலும் சிறப்பே!)

    குறைந்த அளவாக இயன்றவரை முதல்சீர் மூன்றாம் சீர் முதலெழுத்து ஒன்றி வருமாறு அமைக்க முயலலாம்.

    இந்தப் பகுதியில் அ.அ.ஐயா எழுதியுள்ள வெண்பாக்களிலும் நான் எழுதியுள்ள வெண்பாவிலும் பார்த்தால் உங்களுக்கே ஓரளவு புரியக்கூடும்.

    அப்படி ஒன்றி வருவது மோனை அமைதல் ஆகும்.

    முதல்சீரின் முதல் எழுத்து அ என்றால், மூன்றாம் சீரின் முதலெழுத்து ஐ அல்லது ஒள வருமாறு அமைக்க வேண்டும்.

    பிற எழுத்துக்களுக்கும் எதற்கு எது வரவேண்டுமென்ற ஒன்றி வருதல் முறை உள்ளது.

    அ.அ. ஐயா இதைப்பற்றி எழுதித் தெரிவித்திருப்பார் என்று எண்ணுகின்றேன்.

    தேவையானால் ஒரு சிறு பாடக்குறிப்பாக அதைப்பற்றி எழுதுவேன்.

    இது ஏதும் கடுமையான ஒன்று அன்று.
    இயல்பாகவே அமையக் கூடியதே.

    அ.அ. ஐயா என்ன கூறுகிறார் என்று தெரிந்து கொண்டு எளிதாக விளக்கிச் சொல்ல விழைகின்றேன்.

    பதிலளிநீக்கு
  26. //எத்தனையோ துன்பங்கள் எவ்வளவில் தாக்கிடினும்
    அத்தனைக்கும் ஊடேயும் ஆங்கொருவர் - இத்தரையில்
    உற்றதொரு துன்புன்னால் ஓரளவு தீருமென்றால்
    சற்றும்பின் வாங்குவையோ சாற்று.//

    உங்கள் பாவில் வந்த 'பிறர் துன்பம் தீர்ப்பதற்கு சட்டென்று முன்வரும்' ஒரு மனப்பான்மைக்கு நாவை காட்டாக சொன்னேன் தமிழநம்பி அவர்களே.

    'காண்பவர், காண்பவை எல்லாமே நான்' என்றும, 'பகைவனுக் கருள்வாய் நன்னெஞ்சே..' என்றும் பாரதி அன்று பாடியது போல உள்ளத்தில் (அறிவளவிலேனும்) 'எல்லோரும், எல்லாமும் ஒன்று, ஒரே உணர்வு' என்று உறுதியாகத் தெரிந்து கொண்டவர், நாக்கு பற்களின் இடையில் அகப்பட்ட அன்னியப் பொருளை வெளியேற்ற உடனே ஓடி வந்து, பிறகு தளராது உதவுவது போல உதவுவார்கள் என்று சொல்லவந்தேன்.

    வெண்பாவின் பாதி உங்களைப் பாராட்ட வேண்டியிருந்ததால் உவமானத்தைச் சொன்னவன் உவமேயத்தைச் சொல்ல முடியவில்லை.

    இந்த நாவையும், பற்களையும் குறித்து இன்னும் ஆழமாக சிந்தித்தால் நல்ல கருத்துக்களை காணலாம். ஆனால் மறுமொழியின் நீளம் கூடி விடும், படிப்பவர்களும் உறங்க வாய்ப்பிருக்கிறது [ :-) ] அமுதாவோ தளத்திற்கு விழிப்புடன் வருபவர் எண்ணிக்கையை கூட்ட வேண்டும் என்கிறார்.

    அதனால் இங்கேயே நிறுத்திவிடுகிறேன்.

    அருமையாகவும் எளிமையாகவும் பாவிலக்கணத்தை நடுநடுவே நுழைக்கிறீர்கள். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  27. திரு.தமிழநம்பி அவர்களுக்கு வணக்கம்.தங்களின் அறிவுரைக்கு மிக்க நனறி. கண்டிப்பாக இனி என் பாக்களில் மோனை அமைத்தும், நேரிசை சரியாக அமைத்ததும் எழுதுவதில் கவனம் செலுத்துகிறேன். எதுகை, மோனைப்பற்றிய பாடங்களை கவனத்துடன் படித்து அறிந்துக்கொ்ள்கிறேன்.
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  28. ////தமிழநம்பி கூறியது...

    அ.அ. ஐயா என்ன கூறுகிறார் என்று தெரிந்து கொண்டு எளிதாக விளக்கிச் சொல்ல விழைகின்றேன்.//////

    அய்யா! அடிப்படைப் பாடங்களில் மோனைபற்றிய பாடமுன் எதுகையைப் பற்றிய பாடமும் என் அறிவுக்கு எட்டியவரை நிறைவாக வழங்கியுள்ளேன். ஆயினும் குறையில்லை. தாங்களும் ஒருமுறை மோனை, எதுகையைப் பற்றிப் பாடம் வழங்கலாம். மறுநினைவு செய்வதாக அமையும். மீண்டும் மீண்டும் கற்பதால் தானே அறிவு கூர்மையடைகிறது. அதுபற்றிய பாடங்களைத் தொகுத்தளிக்கவும்.

    பதிலளிநீக்கு
  29. அவனடிமை அய்யாவிற்கு,

    விளக்கத்திற்கு நன்றி ஐயா.

    நாவையும் பற்களையும் குறித்து விடுகதை வழி கருத்துக்கள் கூறியுள்ளதைப் படித்த நினைவு வருகின்றது.
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  30. அ.அ.ஐயா,

    தொடை என்ற தலைப்பில் சிறப்பாகவே விளக்கியிருக்கிறீர்கள்.

    இதற்கு மேல் பாடம் தேவையில்லை.

    மோனைக்கு,

    அகரமோ டாகாரம் ஐகாரம் ஒளகான்
    இகரமோ டீகாரம் எஏ –உகரமோ
    டூகாரம் ஒஓ ஞநமவ தச்சகரம்
    தோகாய் கிளையெழுத்தாச் சொல்.

    என்ற நினைவிலிருத்தும் பாடலையும் தந்திருக்கிறீர்கள்.

    இவை போதும்.

    ஐயம் எழுங்கால் படித்துக் கொள்ளலாம்.
    நன்றி.

    (உங்கள் மடலுக்கு விடை எழுதியுள்ளேன். பார்த்துவிட்டீர்களா)

    பதிலளிநீக்கு
  31. /////தமிழநம்பி கூறியது...

    (உங்கள் மடலுக்கு விடை எழுதியுள்ளேன். பார்த்துவிட்டீர்களா)/////

    ஆம். கண்டேன் அய்யா! மிக்க மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
  32. //என்றொருவர் துன்பென்னால் சற்றேனும் தீருமென்றால்
    அன்றெனது ஆவியையும் நானளிப்பேன் - இன்பவர்க்கு
    என்னாலுண் டென்றாலோ வந்துறுமே வானளவு
    துன்பென்றா லுந்தயங்கேன் யான்.//

    எனது முந்தயப் பாடலை மோனை அமைய சிறிது மாற்றி,

    என்றொருவர் துன்பென்னால் எள்ளளவும் தீருமென்றால்
    அன்றெனது ஆவியையும் ஆர்த்தளிப்பேன்-இன்பவர்க்கு
    என்னாலுண் டென்றாலோ எத்துனைதான் துன்பெனக்கு
    என்றாலும் ஏற்றிடுவேன் யான்.

    பதிலளிநீக்கு
  33. என்றொருவர் துன்பென்னால் எள்ளளவும் தீருமென்றால்
    அன்றெனது ஆவியையும் ஆர்த்தளிப்பேன்-இன்பவர்க்கு
    என்னாலுண் டென்றாலோ எத்துனைதான் துன்பெனக்கு
    என்றாலும் ஏற்றிடுவேன் யான்.

    அருமை! மிக அருமை!
    உங்களுக்கு, மோனை அமைத்தால் சிறப்பாக பாடல் அமையுமென்பது மிகவும் தெளிவாகி விட்டது.
    அருமையான பாடல்.

    பதிலளிநீக்கு
  34. மிக்க நன்றி ஐயா. தங்களின் வழிகாட்டலோடு மேலும் சிறக்க வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  35. உமா அவர்களே /என்றொருவர் துன்பென்னால்.../ கவிதை வெகு ஜோர். மென்மேலும் கவிதை மழை பொழிய வாழ்த்துக்கள்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  36. அவனடிமையார் ஐயா, மிக்க நன்றி. உங்கள் வாழ்த்துக்களோடு தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com