புதன், 5 ஆகஸ்ட், 2009

இன்னிசை வெண்பா!



இந்த முறை ஓர் எளிதான வெண்பா எழுதலாம்.

இது நான்கடிப் பாடல்.

இரண்டாமடியில் தனிச்சொல் வராது.

நான்கடிகளும் ஓர் எதுகை ( இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது) பெற்றும் வரலாம்; முதல் இரண்டடிகள் ஓர் எதுகையுடனும், பின் இரண்டடிகள் வேறு எதுகையுடனும் வரலாம்.

வெண்டளை பெற்றிருக்க வேண்டும்.
( நினைவுக்கு : காய் முன் நேர், மா முன் நிரை, விளம் மின் நேர்)

இறுதிச் சீர், நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாடுகளுள் ஒன்றால் முடிந்திருக்க வேண்டும்.

இவ்வாறு அமைந்த பாடலை இன்னிசை வெண்பா என்பர்.


எல்லாம் இழந்துவிட் டேதிலியாய் நிற்பவர்க்கு

நல்லோர் கொடையாக நல்கும் பொருள்களை

வல்லாண்மை யாக மறுத்துத் திருப்புகின்ற

பொல்லானே மண்மேடாய்ப் போ.


இந்தப்பாடல் புதுச்சேரிப் புலவர் அரங்க.நடராசனார் எழுதியது.
இப்பாடலில் நான்கடிகளும் ஓர் எதுகை ( 'ல்' ) அமைந்துள்ளது.

இப்போது, நீங்களும் உங்களுக்கு விருப்பமான கருத்தமைந்த ஓர் இன்னிசை வெண்பா எழுதலாமே!


தமிழநம்பி

46 கருத்துகள்:

  1. இனிய இடுகைகளை இன்றுமுதல் ஈய
    நனிவிரைந்து வந்தார் தமிழநம்பி "வாழ்க!"வென்போம்;
    நன்றாத் தமிழ்செய்யும் நம்பி அவர்துணையாற்
    பொன்றாத் தமிழ்செய்வோம் பூத்து!

    நம்பி அவர்நவிலும் நற்கருத்தை நாமேற்றுத்
    தும்பி எனத்தாவித் தூநறையாய் -அம்பண்ணாள்
    பொற்றமிழ்ப் பூத்திடும் பொய்கையாம் இவ்வலையில்
    நற்றமிழ் நாட்டுவோம் நாம்!

    பதிலளிநீக்கு
  2. வருக! வருக! தமிழ்நம்பி அவர்களே.உங்கள் வரவால் மிக ம்கிழ்ச்சி அடைகிறோம்.ஒரே ஒரு வேண்டுகோள். நாஙகளெல்லாம் நடைபபயிலும் சிறார்.மெதுவாக அழைத்துச் செல்ல வேண்டுகிறோம்.

    அன்புடன் உமா.

    பதிலளிநீக்கு
  3. நன்றி அ.அ.!


    நன்றி உமா அவர்களே!

    நீங்கள் கூறியதைப் புரிந்து கொண்டிருக்கிறேன்.

    அவ்வாறே நடையிடுவோம்.

    பதிலளிநீக்கு
  4. வலையிலிருக்கிறீர்களா?

    எனது இன்னிசை வெண்பா


    காதல்:

    என்னை உனதாக்கிக் கொல்லுமது;என்விழியில்
    உன்னை விருந்தாக்கிக் கொள்ளுமது:என்னெதிர்நீ
    மண்ணில் வரைகோடுங் காட்டுமது உன்னிரு
    கண்ணில் வழியு மது.

    பதிலளிநீக்கு
  5. மிக அருமை!
    சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்!
    'அது'வும் 'மது'வும் தரும் மயக்கம்
    சிறப்பு!
    பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்துக்கள் உமா அவர்களே! இதோ உங்களுக்கான எனது வாழ்த்துப்பா:-

    மதுவாய்ப் பிறந்து வளர்ந்தஉம் பாவு
    மதுவாய்ப் பிறங்க மயக்குற்றேன்; பாயு
    மதுவாய்ப் பொழிலோடை அன்ன மொழியு
    மதுவாய்ப் பிறக்கின்ற தாம்!


    மதுவாய்ப் பிறந்து -மதுவைப்போன்ற இதழ்நீர் சுரக்கின்ற வாயிலிருந்து பிறந்து...

    வளர்ந்தஉம் பாவு
    மதுவாய்ப் பிறங்க மயக்குற்றேன் -அத்தகைய வாய்வழி சொல்லாகப் பிறந்த உமது பாவும் மதுபோல விளங்க விழிகளால் அதை உண்டு மயக்குற்றேன்...

    பாயு
    மதுவாய்ப் பொழிலோடை அன்ன - (பாயும் அதுவாய்) இயற்கையான ஓடையானது தானாக ஓடும் அதுபோல...

    மொழியு
    மதுவாய்ப் பிறக்கின்ற தாம் -உம்மிடமிருந்து பிறக்கின்ற சொற்களும் (அவ்வோடையைப்போல) இயல்பாகப் பிறக்கின்றது.

    பதிலளிநீக்கு
  7. அய்யா! தமிழ நம்பி அவர்களுக்கு! தங்கள் வேண்டுகோளின் படி இன்னிசை முயன்றுபார்த்தேன். ஏனோ தெரியவில்லை, என்னிசை இன்னிசையாக மறுக்கிறது.

    ஆகையால் இன்று நேரிசை, நாளை இன்னிசை.

    (புலவர் அரங்க. நடவரசனாரின் இன்னிசை வெண்பா ஈகையைப் பற்றிப் பாடுவதால் நானும் ஈகையைப் பற்றிய பாடலாகவே வழங்குகிறேன்.)


    உற்றக்கால் அன்றி உறாக்காலும் ஈவரே!
    முற்றும் வழங்கும் முனைப்புடையார் –உற்றளவும்
    தந்துதவும் ஆறு; தணவீசுங் கோடையிலும்
    வந்துதவும் ஊற்றின் வழி!

    பொன்னையே ஈந்தபின்னும் போதா தெனநினைத்துத்
    தன்னையே ஈவர் தகவுடையார் –முன்னம்
    கருங்காயும் ஈயும் கதலி இலையும்
    தருங்காயின் தன்னைத் தரும்!

    (இலையும் +தரும் +காயின்)

    பதிலளிநீக்கு
  8. இன்னிசை வெண்பா எழுதுகென சொன்னவுடன்
    இன்னவகை நன்றாய் இயற்றியுளார் மெய்யாய்
    உளமீர்க்கும் பாடல் உமாவெழுதி யுள்ளார்
    இளம்பா வலரா இவர்?

    பதிலளிநீக்கு
  9. தமிழ்நம்பி அவர்களே வருக வருக
    தங்களின் தமிழ்ப்பாக்கள் படிக்க ஆவலுடன் உள்ளேன்

    அன்புடன்
    திகழ்

    பதிலளிநீக்கு
  10. /காதல்:

    என்னை உனதாக்கிக் கொல்லுமது;என்விழியில்
    உன்னை விருந்தாக்கிக் கொள்ளுமது:என்னெதிர்நீ
    மண்ணில் வரைகோடுங் காட்டுமது உன்னிரு
    கண்ணில் வழியு மது./

    உமா அவர்களே
    அதுவும் மதுவும் அற்புதம்

    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  11. /
    மதுவாய்ப் பிறந்து வளர்ந்தஉம் பாவு
    மதுவாய்ப் பிறங்க மயக்குற்றேன்; பாயு
    மதுவாய்ப் பொழிலோடை அன்ன மொழியு
    மதுவாய்ப் பிறக்கின்ற தாம்!/

    அருமை அகரம் அமுதா அவர்களே
    விளக்கமும் அற்புதம்

    பதிலளிநீக்கு
  12. அ.அ.,

    இன்னிசை வாழ்த்தில் எழுதிப்பின் ஓர்கருத்தைச்
    சொன்னாய் அறிந்தேன் சுவையான நேரிசையில்!
    இன்றிரண்டு வெண்பாவில் ஈகைச் சிறப்புரைத்தாய்
    என்றும்போல் பாடி இனிது.

    பதிலளிநீக்கு
  13. //////தமிழநம்பி கூறியது...
    அ.அ.,

    இன்னிசை வாழ்த்தில் எழுதிப்பின் ஓர்கருத்தைச்
    சொன்னாய் அறிந்தேன் சுவையான நேரிசையில்!
    இன்றிரண்டு வெண்பாவில் ஈகைச் சிறப்புரைத்தாய்
    என்றும்போல் பாடி இனிது.////


    மிக்க நன்றிகள் அய்யா!

    பதிலளிநீக்கு
  14. //////தமிழநம்பி கூறியது...
    அ.அ.,

    இன்னிசை வாழ்த்தில் எழுதிப்பின் ஓர்கருத்தைச்
    சொன்னாய் அறிந்தேன் சுவையான நேரிசையில்!
    இன்றிரண்டு வெண்பாவில் ஈகைச் சிறப்புரைத்தாய்
    என்றும்போல் பாடி இனிது.////


    மிக்க நன்றிகள் அய்யா!

    பதிலளிநீக்கு
  15. நிம்மதி தேடி நிதமும் அலைக்கின்றோம்
    அம்மதி உள்ளே இருப்பதைப் பாராமல்
    எம்மதியும் இங்கே கிடைக்கும் அதற்குநீ
    சம்மதித்தால் மட்டும்போ தும்.

    பதிலளிநீக்கு
  16. கலக்குகிறீர்கள் திகழ்! விளக்கத்தையும் சேர்த்துக் கொடுத்திருந்தால் அனைவரும் படித்துப் புரிந்துகொள்ள முடியுமல்லவா!!!!!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  17. //
    நிம்மதி தேடி நிதமும் அலைக்கின்றோம்
    அம்மதி உள்ளே இருப்பதைப் பாராமல்
    எம்மதியும் இங்கே கிடைக்கும் அதற்குநீ
    சம்மதித்தால் மட்டும்போ தும்.
    //

    திகழ் அவர்களே:
    அகமதி தன்னை நிறைமதி யாக்கும்
    வெகுமதி நும்மிசைப் பா
    .

    பதிலளிநீக்கு
  18. புகைவண்டிப்பயணம்:

    தொட்டிலாய் ஆட்டம்; மிகச்சூடாய் காப்பிடீ;
    பெட்டிபெட்டி யாயிணைந்த வண்டிப் பயணத்தில்
    கூட்டமாய் மக்கள்கொண் டாடும் குழந்தைகள்;
    வாட்டமாய் விட்டுப் பிரிந்து.

    காப்பிடீ: கொஞ்சம் மன்னித்துவிடலாமே. இன்னிசை சரிதானே.

    பதிலளிநீக்கு
  19. /////தொட்டிலாய் ஆட்டம்; மிகச்சூடாய் காப்பிடீ;
    பெட்டிபெட்டி யாயிணைந்த வண்டிப் பயணத்தில்
    கூட்டமாய் மக்கள்கொண் டாடும் குழந்தைகள்;
    வாட்டமாய் விட்டுப் பிரிந்து.

    காப்பிடீ: கொஞ்சம் மன்னித்துவிடலாமே. இன்னிசை சரிதானே.//////




    மன்னிப்பெல்லாம் எதற்கு உமா அவர்களே! சற்றே மாற்றிவிட்டால் போகிறது.....



    தொட்டிலாய் ஆட்டமிகச் சூடாய்க் குழம்பிவடை;
    பெட்டிபல கோர்த்ததொடர் வண்டிப் பயணத்தில்
    கூட்டமாய் மக்கள்கொண் டாடும் குழந்தைகள்;
    வாட்டமாய் விட்டுப் பிரிந்து.


    குறிப்பு:-
    ஆட்டமிக -ஆட்டம் மிக
    பெட்டிபெட்டி -பெட்டிப்பெட்டி (அடுக்குத்தொடர்) ஓற்றுமிகும், ஆதலால் சற்றே மாற்றிவிட்டேன்.


    மேலும்....

    முதல் மூன்றுவரிகள் உணர்த்தும் பொருளோடு நான்காம் வரி (ஈற்றடி) தொடர்பு அறுந்துபோனதுபோல் தோன்றுகிறது. ஆதலால் தங்கள் அனுமதியோடு மீண்டும் சிறு மாற்றம்.


    தொட்டிலாய் ஆட்டமிகச் சூடாய்க் குழம்பிவடை;
    பெட்டிபல கோர்த்ததொடர் வண்டிப் பயணத்தில்
    கூட்டமாய் மக்கள்;கொண் டாடும் குழந்தைகள்
    வாட்டமுறச் செல்லும் பிரிந்து.


    எனது பார்வையில் இப்படி இருக்கலாம் எனக்கருதுகிறேன். தவறாகக்கருத வேண்டாம்.

    கருத்து:-
    "சூடாகக் குழம்பி, வடை விற்கக்கூடிய, மக்கள் கூட்டமாகச் செல்லக்கூடிய தொடர்வண்டியை, வெளியில் (தண்டவாளத்தின் அருகில்) நின்று பார்க்கும் குழந்தைகள் வாட்டமுறப் பிரிந்து செல்லும் தொடர் வண்டி" -என்னும் பொருள் படுமாறு மாற்றியிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  20. உமா அவர்களே!
    உங்கள் இன்னிசை வெண்பா சரியே!

    இயன்றவரை அயற்சொற்களைக் கலவாமல் எழுதினால் பாட்டின் மதிப்புக் கூடும் என்று வலியுறுத்துவார் அண்மையில் காலஞ்சென்ற இலக்கணச்சுடர் புதுவை திருமுருகன் ஐயா.

    அ.அ.அவர்கள் கவனிக்க ஒரு செய்தி:

    காப்பிக் கொட்டையின் வடிவைக் கவனித்தால் மாட்டின் குளம்பு அமைப்பில் இருக்கும்.

    இலத்தீன் மொழியில் குளம்பைக் குறிக்கும் சொல்லினை அடிப்படையாகக் கொண்டுதான் தான் 'காபி' என்ற சொல் வந்தது என்று கூறிய பாவாணர் ஐயா, தமிழில் 'குளம்பி' என்று சொல்லலாம் என்று கூறினார்.

    எனவே, உமாவின் பாட்டின் முதலடி,
    அ.அ. எழுதியதற் கொப்ப,

    தொட்டிலாய் ஆட்டமிகச் சூடாய்க் குளம்பிவடை -என்றிருக்கலாம்!

    சரியான செய்தியைத் தெரிவிக்கவே இதைக்குறிப்பிடுகிறேன். பொறுத்தாற்றுக!

    பதிலளிநீக்கு
  21. திகழ்மிளிர்,

    முதலில் வரவேற்பிற்கு நெஞ்சார்ந்த நன்றி!

    உங்கள் இன்னிசை வெண்பாவைச் சரியாக அமைத்துள்ளீர்கள். எத்தனை மதி! நீங்கள் மதி மிக்கவர் என்று தெரிகிறது. பாராட்டுகள்!

    'அலைகின்றோம்' என்றே எழுதலாம்.

    பதிலளிநீக்கு
  22. அவனடிமை ஐயா,
    வணக்கம்.

    திகழின் பாடலைக் குறளால் பாராட்டி எழுதியமை, உங்கள் வெண்பாத் திறனை வெளிப் படுத்துகிறது.

    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  23. / தமிழநம்பி கூறியது...

    திகழ்மிளிர்,

    முதலில் வரவேற்பிற்கு நெஞ்சார்ந்த நன்றி!

    உங்கள் இன்னிசை வெண்பாவைச் சரியாக அமைத்துள்ளீர்கள். எத்தனை மதி! நீங்கள் மதி மிக்கவர் என்று தெரிகிறது. பாராட்டுகள்!

    'அலைகின்றோம்' என்றே எழுதலாம்./

    திருத்திக் கொள்கின்றேன் நண்பரே

    பதிலளிநீக்கு
  24. /தொட்டிலாய் ஆட்டமிகச் சூடாய்க் குழம்பிவடை;
    பெட்டிபல கோர்த்ததொடர் வண்டிப் பயணத்தில்
    கூட்டமாய் மக்கள்;கொண் டாடும் குழந்தைகள்
    வாட்டமுறச் செல்லும் பிரிந்து./

    அருமை உமா அவர்களே

    அகரம் அமுதா உங்களுக்கும் தான்

    பதிலளிநீக்கு
  25. /காப்பிக் கொட்டையின் வடிவைக் கவனித்தால் மாட்டின் குளம்பு அமைப்பில் இருக்கும்.

    இலத்தீன் மொழியில் குளம்பைக் குறிக்கும் சொல்லினை அடிப்படையாகக் கொண்டுதான் தான் 'காபி' என்ற சொல் வந்தது என்று கூறிய பாவாணர் ஐயா, தமிழில் 'குளம்பி' என்று சொல்லலாம் என்று கூறினார்./

    நம்பி அவர்களே
    தங்களின் கருத்துரையைப் படிக்கையில்
    இந்தக் கவிதை நினைவிற்கு வருகிறது.

    காபி என்பதா ..?
    காப்பி என்பதா…?
    காஃபி என்பதா ..?
    “குளம்பியே” விட்டேன்.. !

    பதிலளிநீக்கு
  26. /அவனடிமை கூறியது...

    அகமதி தன்னை நிறைமதி யாக்கும்
    வெகுமதி நும்மிசைப் பா./

    தங்களின் பாவால்
    என்னை அடிமைவிட்டீர்கள்

    பதிலளிநீக்கு
  27. அய்யா! தமிழநம்பி அவர்களுக்கு! குளம்பி என்ற சொல்லை நான் முன்பறியேன். இனிக் குளம்பி என்றே அழைப்பேன். நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  28. திகழ்! அக்கவிதையை நானும் இணையத்தில் எங்கோ படித்த நினைவு. யாரெழுதியது அக்கவிதை?

    பதிலளிநீக்கு
  29. அப்துல் கையூம் அவர்களின் வரிகள்
    என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  30. திரு.அமுதா மற்றும் திரு.தமிழ் நம்பி அவர்களே, சற்றே விளையாட்டாய் பிறச்சொற்களை கலந்துவிட்டேன். இனி கவனமாக இருக்கிறேன். ஆனாலும் முடிவில் பாவை மிக அற்புதமாக அமைத்துவிட்டீர்கள். மிக்க நன்றி.

    இன்னுமமொரு இன்னிசை வெண்பா. இது முன்பு [முதல் தேதி அன்று]
    கொடு்கப்பட்ட புகைப்படத்திற்கான பா. இன்னிசையானதால் இங்கு கொடுக்கறேன்.

    மானம் இழந்தெமது மண்னை மறந்திங்கு
    வானமே கூரையாய் வந்துற்றோ மெம்மை
    இரவில்கொல் லும்அரவம்,நண்பகலில் நிற்கும்
    மரமும் நிழலை மறுத்து.

    ஈழத் தமிழரின்னல் இன்னும் தீர்ந்தபாடில்லை. அவர்மானம் காக்கவும் உயிரைக்காக்கவும் எவரும் இல்லை.இயற்கையும் துணைவரவில்லை. மரம்கூட தன் இலைகளை உதிர்த்து நிழலின்றி காய்க்கிறது.

    பதிலளிநீக்கு
  31. தமிழநம்பி கூறியது...
    //அவனடிமை ஐயா,
    வணக்கம்.//

    பணிவான வணக்கங்கள். வருக, தமிழ் மழை பொழிக. நன்றி.

    தமிழில் கவியமுதாந் தேன்மாந்திப் பாடும்
    ஞிமிரே நம்தமிழ நம்பி
    .

    பதிலளிநீக்கு
  32. புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
    புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
    நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
    பல தள செய்திகள்...
    ஓட்டுப்பட்டை வேண்டாம்...
    எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
    முழுவதும் தமிழில் படிக்க....



    தமிழ்செய்திகளை வாசிக்க

    தமிழ்செய்திகளை இணைக்க

    ஆங்கில செய்திகளை வாசிக்க

    வலைப்பூ தரவரிசை

    பதிலளிநீக்கு
  33. //////மானம் இழந்தெமது மண்னை மறந்திங்கு
    வானமே கூரையாய் வந்துற்றோ மெம்மை
    இரவில்கொல் லும்அரவம்,நண்பகலில் நிற்கும்
    மரமும் நிழலை மறுத்து.///////



    இக்கவிதை முன்பு வழங்கப்பட்ட புகைப்படத்திற்காக எழுதப்பட்டதல்லவா!? வாழ்த்துக்கள் மிக அருமை. உணர்வைச் சுடுகின்ற வரிகள்.

    பதிலளிநீக்கு
  34. உமா கூறியது...

    //////மானம் இழந்தெமது மண்னை மறந்திங்கு
    வானமே கூரையாய் வந்துற்றோ மெம்மை
    இரவில்கொல் லும்அரவம்,நண்பகலில் நிற்கும்
    மரமும் நிழலை மறுத்து.///////



    இக்கவிதை முன்பு வழங்கப்பட்ட புகைப்படத்திற்காக எழுதப்பட்டதல்லவா!? வாழ்த்துக்கள் மிக அருமை. உணர்வைச் சுடுகின்ற வரிகள்.

    குறிப்பு:-

    இப்பாடலைப் புகைப்படத்திற்கான அவ்விடுகையிலும் மறுமொழியிட வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  35. உமா, உணர்வு சான்ற (மிக்க) பாடல் எழுதியிருக்கிறார்.
    அருமை!
    உணர்வு மிக்க பாடல்கள் என்றும் நினைவில் நிலைக்கும்

    பதிலளிநீக்கு
  36. அவ்வனடிமை அய்யாவின் அன்புக்கு நன்றி
    உவந்தேன் மகிழ்ந்தேன் ஒருதிருத்தம் செய்க
    ஞிமிர்ஒலியென் றாகும் ஞிமிறே தேனீ
    தமிழ்ச்சொல் தருமிப் பொருள்.

    வேறொரு இடத்தில் எழுந்த ஐயத்திற்கான விளக்கம்:
    பாட்டில் ஒரே பொருள் உள்ள சொல் இரண்டு அடுத்தடுத்து வந்தால், அப்பொருளின் மிகுதியைக் குறிக்கும்!
    உவந்தேன் மகிழ்ந்தேன் = மிகுதியாக மகிழ்ந்தேன்

    பதிலளிநீக்கு
  37. அவனடிமை அய்யா,
    பொறுத்தாற்றுக!
    பாடலில் தட்டச்சுப் பிழையாக அவ்வனடிமை என்று வந்து விட்டது.
    திருத்திப் படிக்க வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  38. மிக்க நன்றி திரு.தமிழ்நம்பி அவர்களே. உங்கள் வாழ்த்து என்னை மிகவும் உற்சாகபடுத்தும்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  39. அனபார்ந்த வெண்பாப் பாவலர்க்கு,

    நான் அவனடிமை ஐயாவிற்கு எழுதிய பாடலில் யாப்புப் பிழை உள்ளது. அதைக் கண்டுபிடித்து அதை எப்படி திருத்தலாம் என்று முயற்சி செய்க. (அ.அ. தவிர மற்றையோர்)

    முதலில் கண்டு எழுதுகிறவர் பாராட்டுக்குரியோர் ஆவார்.

    பதிலளிநீக்கு
  40. //அவனடிமை அய்யாவின் அன்புக்கு நன்றி
    உவந்தேன் மகிழ்ந்தேன் ஒருதிருத்தம் செய்க
    ஞிமிர்ஒலியென் றாகும் ஞிமிறே தேனீ
    தமிழ்ச்சொல் தருமிப் பொருள்.
    //

    திருத்தத்திற்கு, விளக்கத்திற்கும் நன்றி தமிழநம்பி அவர்களே !

    //பாடலில் யாப்புப் பிழை உள்ளது.//

    அவனடிமை அய்யாவின் அன்புக்கு நன்றி
    உவந்தேன் மகிழ்ந்தேன் ஒருதிருத்தம் செய்க
    ஞிமிர்ஒலியென் றாகும் ஞிமிறிசைக்கும் தேனீ
    தமிழ்ச்சொல் தருமிப் பொருள்.


    'ஞிமிறிசைக்கும்' சரியான பிரயோகமா என்று தெரியவில்லை.

    'ஞிமிறு' + 'இசைக்கும்' = 'ஞிமிறிசைக்கும்' ஆகுமா ?

    'ஞிமிர்' (= ஒலி) என்பதைப்போல 'ஞிமிற்' இல்லையே , 'ஞிமிறு' அல்லவா ?

    நன்றி உரைப்பதையும், தவறை திருத்துவதையும் ஒரே வெண்பாவில் பாடி, வரவேற்பு குறளின் பொருளை மெய்ப்பித்துவிட்டீர்கள்.

    அமுதும் அன்பும் கலந்தது போல்தமிழ
    நம்பி நமையடைந் தார்
    .

    என்று இவ்வெண்பா தளத்தில் உள்ளவர்கள் எல்லோரும் நினைப்பார்கள் என்பது நிச்சயம்.

    பதிலளிநீக்கு
  41. // பாடலில் யாப்புப் பிழை உள்ளது. அதைக் கண்டுபிடித்து அதை எப்படி திருத்தலாம் என்று முயற்சி செய்க. (அ.அ. தவிர மற்றையோர்)

    முதலில் கண்டு எழுதுகிறவர் பாராட்டுக்குரியோர் ஆவார்.//


    அவனடிமை அய்யாவின் அன்புக்கு நன்றி
    உவந்தேன் மகிழ்ந்தேன் ஒருதிருத்தம் செய்க
    ஞிமிர்ஒலியென் றாகும் ஞிமிறே தேனீ
    தமிழ்ச்சொல் தருமிப் பொருள்.//

    தமிழில் கவியமுதாந் தேன்மாந்திப் பாடும்
    ஞிமிரே நம்தமிழ நம்பி.

    ஞிமி/றே- நிரை நேர் புளிமா மாமுன் நிரை வரவேண்டும்
    தேனீ - அலரி,பிரசம்,சரகம், துவிரம் என்பன ஞிம்ற் அல்லது தேனீயைக்குறிப்பன.

    ..............ஞிமிறே அலரி [சரகம்]
    தமிழ்ச்சொல் தருமிப் பொருள்.


    எனக் கொள்ளலாமா?

    பதிலளிநீக்கு
  42. ஐயா,

    ஞிமிர் = ஒலி
    ஞிமிறு = தேனீ

    இதைக் குறிப்பிடும் பாடலின் மூன்றாம் அடி,

    ஞிமிர்ஒலியென் றாகும் ஞிமிறுதான் தேனீ -என்றிருந்தால் பொருள் விளக்கத்தோடு யாப்பும் சரியாக இருக்கும்.

    பிழையைச் சரியாகக் கண்டுபிடித்து விட்டீர்கள்!
    பாராட்டுகள்!


    "அமுதும் அன்பும் கலந்தது போல்தமிழ
    நம்பி நமையடைந் தார்."

    நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  43. ஞிமிர்=ஒலி
    ஞிமறு =தேனீ

    அறிந்தோம். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  44. கலக்குகிறீர்கள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  45. இன்னிசை வெண்பா என்று
    இணையத்தில் தேடிநின்றேன்
    என்விழி கண்டதிங்கே
    இணையிலா பாக்களெல்லாம்
    நன்றெனப் படித்தேன் எல்லாம்
    நாவினிக்க வைத்துவிட்டீர்
    இன்றுமுதல் நானும்
    இவ்வலையின் வாசகனே...!

    நட்புகள் அனைவருக்கும் வணக்கம்
    நானும் வெண்பா கற்றுக்கொள்ள வரலாமா.....?

    பதிலளிநீக்கு

உணர்ந்ததைச் சொல்லுங்கள்!
தனிமடல் தொடர்புக்கு... agaramamuthan@gmail.com